Advertisement

சுந்தரிக்கும் ஒரு விஷயம் நன்கு புரிந்தது, எல்லோர் முன்னும் கண்ணன் அவளுக்கு கொடுக்கும் மரியாதை, நேற்று மனதில் இருந்த அத்தனை குறைகளை கொட்டி இருந்தாலும், இப்போது இங்கே வரும் போதும் கடித்து குதறுவது போல பேசி இருந்தாலும், வெளியில் அதை சற்றும் காண்பிக்கவில்லை.
அதுவும் “அவங்க” போட்டு மரியாதையாய் பேசியது, சுந்தரியின் மனதை ஆகர்ஷித்தது. ஒரு பலம் கொடுத்தது. அவளின் யோசனைகள் வேகமாய் பயணிக்க, இப்போது மட்டுமில்லை எப்போதும் யார் முன்னமும் அவளை சற்றும் கீழிறக்கி நடத்தியதில்லை. விவாகரத்து ஆன போதும் கூட,  
ஏன் அவளின் உடைகளை கூட அவளிடம் தான் குறை கூறுகிறான்,  அவனின் அம்மாவிடமோ தங்கையிடமோ இல்லை யாரிடமும் “பாரு எப்படி ட்ரெஸ் பண்றா இவ?” என்று சொன்னதாக அவளுக்கு ஞாபகமில்லை.
உணவு கூட அவளிடம் தானே குறை, அவனின் அம்மாவிடம் சொல்லியிருப்பது போல தெரியவில்லை. தெரிந்தால் அவர் தினமும் உணவு அனுப்பி விடுவாரே.
ஆனாலும் அவன் பேச்சு வலித்தது! “கட்டாயத்தில் வந்து விட்டானோ? மகனுக்காக வந்து விட்டானோ? என்னை பிடிக்கவில்லையோ?” என்று வெகுவாக தோன்றியது.  
தொட்டில் பந்தம் வந்து விட்ட பிறகும் இன்னும் அவர்களுக்குள் கட்டில் பந்தம் வரவில்லை என்பது பெரிய உண்மை! இன்னும் அந்த உடலை சார்ந்த உணர்வு அவர்களுக்குள் பற்றப் படாத தீ!
கண்ணனின் இந்த அணுகுமுறை கூட “நான் அழகா இல்லையா? அவனுக்கு ஏத்த மாதிரி பதவிசா இல்லையா? அவனுக்கு என்னை பிடிக்கலையா, அதனால் தான் இன்னும் பக்கம் வரலையோ” என்று சமீபமாய் தோன்ற ஆரம்பித்து இருந்தது.
கண்ணன் வராததற்கு காரணம் அவளின் உதாசீனமான பேச்சு என்று சுந்தரி இன்னும் உணரவில்லை.  
அமைதியாய் அமர்ந்து வந்தாள், வீட்டிற்கு வந்ததுமே “படு, சாப்பிட என்னன்னு பார்க்கிறேன். நீ எதுவும் சமைக்க வேண்டாம், உடம்பு சுடுது, மாத்திரை போடு, குறையலைன்னா ஹாஸ்பிடல் போகலாம்” என்று வேகமாய் பேசினான்.
ஆம்! அவளை அவளே அப்போது தான் தொட்டு பார்த்தாள், உடல் சுட்டது.
“இவன் எப்போது என்னை தொட்டு பார்த்தான்” என்பது போல பார்க்க, அவளின் பார்வை புரிந்தாலும் பதில் எல்லாம் கொடுக்கவில்லை, “போடி” என்ற பார்வை பார்த்து சென்று விட்டான்.
ஆம்! யாரும் அறியாமல் அவ்வப்போது அவளின் கை பிடித்து, உடலின் சூட்டை பார்த்துக் கொண்டே தான் இருந்தான். அது அவளின் கவனத்தில் பதியவில்லை, அவள் தான் தோட்டம், நிலம் பார்ப்பதிலும், விலை சொல்லியதை யோசிப்பதிலும் இருந்தாலே!
அப்போதும் அவன் கை பிடித்தது, யாரின் கவனத்தையும் கவரவில்லை ஏன் சுந்தரியின் கவனத்தையே கவரவில்லை.
அவள் வண்டியில் இருந்து இறங்கிய போது, பைக்கில் ஏறிய போது, மாங்காயை அவளிடம் இருந்த பறித்த போது, இப்படி அவளின் உடல் சூட்டினை சரி பார்த்து, அது குறையவில்லை அதிகம் தான் ஆகியது என்று உணர்ந்து கொண்டான்.
உடலும் மனதும் சோர்வாக உணர, படுத்துக் கொண்டாள். கண்ணன் சிந்தாவை சென்று பார்த்து, “என்ன நடக்கிறது?” என்று கேட்டு அவளையே எல்லாம் பார்த்து கொள்ள சொல்லி வந்தான்.
பின் வந்தவன் அம்மாவிடம் கேட்டுக்கொண்டு, வேகமாய் அரிசி வறுத்து அதை மிக்ஸ்யில் போட்டு, பௌடராக்கி, சிறிது ஜீரகம் சேர்த்து கஞ்சி வைத்தான்.
அப்போதும் நல்ல உறக்கத்தில் சுந்தரி இருக்க, அவளை எழுப்பி, “இந்த கஞ்சி குடிச்சிட்டு ஒரு மாத்திரை போட்டுட்டு தூங்கு” என்று சொல்ல,
“என்ன கஞ்சியா?” என்று முகம் கோணினாள்.
“உன் சாப்பாடை விட இது நல்லா தான் இருக்கும்” என்று வாய் வரை வார்த்தை வந்ததை விழுங்கியவன், “எழுந்து குடி” என்றான் அதட்டலாக.
பின்னே அவனின் பேச்சுக்களினால் தான் காய்ச்சல் என்று அவனுக்கு நன்கு தெரியும். மீண்டும் மீண்டும் அவளை காயப்படுத்த இஷ்டமில்லை, இது தான் உன் வாழ்க்கை என்றால் அப்படியே இருந்து கொள் என்ற முடிவிற்கு வந்து விட்டான்.
என்னவோ சுந்தரி அவளின் பிடிவாதத்தை விடுவாள் என்று அவனிற்கு தோன்றவே இல்லை.
எழுந்து அதனை குடித்தவள், வேகமாய் நான்கு கிளாஸ்கள் உள்ளே தள்ளினாள். காய்ச்சல் வாயின் கசப்பிற்கு அது நன்றாக இருந்தது. உண்மையில் அவனுக்கும் சேர்த்து தான் வைத்திருந்தான். இப்போது அவனுக்கு கொஞ்சம் மட்டுமே மீதம்.   
“அடப் பாவி எனக்கு மிச்சம் வைக்காம எல்லாம் உள்ள தள்ளிட்டாலே” என்று பரிதாபமாய் பார்த்திருந்தான்.
அவள் உண்டு முடிக்கவும் மாத்திரை கொடுக்க, மீண்டும் படுத்துக் கொண்டாள், மனது சமன்பட்டிருக்க வயிறு நிறைந்திருக்க உறங்கியும் விட்டாள்.   
பின்பு இருந்த கொஞ்சம் கஞ்சியை மட்டும் குடித்தவனுக்கு வேறு எதுவும் செய்து சாப்பிட சோம்பலாய் இருக்க, அவனும் வெறும் தரையில் படுத்து விட்டான்.
சிறிது நேரம் கழித்து தண்ணீர் குடிக்க என்று வந்த சிந்தாமணி பார்த்தது இருவரும் உறங்குவதை, அவள் வந்தது தோட்டத்தின் வாயிலாக, இதற்கு முன் கேட்டும் திறந்து அப்படியே இருந்தது.   
“இதென்ன கதவை திறந்து போட்டுட்டு தூங்கறாங்க” என்று நினைத்தவள் அவர்கள் இருவரையும் விட்டு செல்ல மனதில்லாமல் படியில் அமர்ந்து கொண்டாள், யாரவாது விழிக்கும் வரை இருப்போம் என்று.
ஒரு மணி நேரத்தில் விழித்த சுந்தரி பார்த்தது உறங்கும் கணவனை தான்.
காய்ச்சல் இப்போது நன்கு விட்டிருந்தது, வாசலை பார்க்க சிந்தா அமர்ந்திருந்தாள்.
“என்ன சிந்தா இங்க உட்கார்ந்து இருக்க?” என்று எழுந்து வந்து படியில் அமர,
“நீங்க ரெண்டு பேரும் கதவை திறந்து போட்டுட்டு தூங்கறீங்க, எப்படி விட்டு போக?” என்று சொல்ல,
“அசதியில தூங்கிட்டோம் போல” என்று சுந்தரி சொல்ல, மனமும் லேசாக இருந்தது. காய்ச்சல் விட்டதினாலா இல்லை அந்த பேச்சு பேசினாலும் கணவன் தன்னை கவனித்துக் கொண்டதாலா ஏதோ ஒன்று. கண்ணனின் பேச்சுக்கள் ஒரு புறம் இருந்தாலும் அந்த நேரம் மனம் இலகுவாய் உணர அவளும் அமர்ந்து கொண்டாள்.   
“அசதியா? ம்ம்ம், ராத்திரி ரொம்ப வேலையோ?” என்று சிந்தா ரகசியமாய் கேட்க,
சிந்தாமணிக்கு அது ரகசியம், ஆனால் அது அவளின் வெண்கல குரலுக்கு இல்லை. படுத்திருந்த கண்ணனுக்கு கேட்டது.
ஆம்! பேச்சு குரல் கேட்கவுமே, விழிப்பு வந்து விட்டது. இவர்கள் பேசுவதை பார்த்தும் எழாமல் அப்படியே படுத்திருந்தான்.
“ம்ம், ரொம்ப ராத்திரி வேலை தான்!” என்று நக்கலாய் சுந்தரியின் குரலும் ஒலிக்க,
“அதுக்குன்னு பகல்ல கதவை தொறந்து போட்டுட்டா புருஷனும் பொஞ்சாதியும் உறங்குவீங்க” என்றாள் நக்கலாக.
“அடியேய் அவரு கீழ, நான் மேல, நீ என்ன கண்டியாம்?”
அப்போதுதான் அவர்களின் பேச்சின் சாராம்சமே கண்ணனுக்கு புரிந்தது. ராத்திரி வேலை என்று எதை பேசுகிறார்கள் என்று புரிந்தது. இவனுக்கு லஜ்ஜையில் முகம் லேசாய் சிவந்தது. நடந்தது பெரிய சண்டை, இங்கே பேசுவது என்ன?   
“என்னது? சுந்தரி இப்படி கூட பேசுவாளா?” என்று கேட்டிருந்தான்.
“ஏதோ காணப் போய் தானே யாரும் அதை காண வேண்டாம்னு காவலுக்கு நின்னேன்” என்று சிந்தா விடாமல் வம்பிழுக்க,
“உனக்கு கிறுக்காகிப் போச்சு புள்ள?” என்றாள் சன்ன சிரிப்போடு சுந்தரி.
“எனக்கு எங்க கிறுக்கு? உன் மாமனுக்கு தான் உன் மேல கிறுக்கு. பாரு அப்பா அம்மா எல்லாம் விட்டு, உன் ஊட்டோட வந்துட்டாருல்ல, நீ மேல சொகுசா படுக்க, தம்பி கட்டாந்தரையில உருளுது, அதுவும் கிழவி வேற இல்ல, ராத்திரி முழுக்க கட்டில்லையே ஓடி பிடிச்சு விளையாண்டீங்களோ? அது தான் அசதியோ” என்றாள் கிண்டலாய்.
சுந்தரி கலகலவென்று சிரித்துக் கொண்டே, “கட்டில்ல கட்டி பிடிச்சு தான் விளையாடுவாங்க, நீ என்ன புதுசா ஓடி பிடிச்சு விளையாட கேட்கற” என,
சிந்தாமணி இன்னும் சத்தமாய் சிரித்தாள்.
அவசரமாய் இருவரும் கண்ணனை திரும்பி பார்க்க அவன் கண் மூடி தான் சுந்தரியின் பேச்சை ரசித்திருந்தான்.
“அப்போ அபிக்கு தங்கச்சி ரெடின்னு சொல்லு”  
“ம்ம் ரெடி பண்ண ஆரம்பிச்சு இருக்கோம்” என்று இன்னும் நக்கலாய் பதில் சொல்ல,
“ரெடி பண்ண ஆரம்பிச்சதுக்கே இந்த அசதியா? அப்போ ரெடி பண்ணினா?”
“ரெண்டு நாள் தூங்குவோம், அதுவும் இப்படி தூங்க மாட்டோம், கட்டி பிடிச்சு தூங்குவோம்!” என்று சுந்தரி கண்ணடிக்க,  
“ஆத்தாடி ஆத்தா, வாயை பாரு வாயை, எனக்கு வெக்கம் வர வெச்சிடுவ போல இருக்கே” என சிந்தாமணி சொல்ல,
சிரிப்பு வரும் போல இருந்தது கண்ணனுக்கு.
“அப்போ இன்னும் வரலையா?” என்று நீட்டி முழக்கினால் சுந்தரி.
“வரலையே” என்று பாவம் போல சொல்ல,
“சரி, என் மாமன் எந்திரிக்கட்டும், கட்டி பிடிச்சு காட்டுறேன், வருதான்னு பார்க்கறேன்”  
“நீ உன் மாமனை கட்டி பிடிக்கணும்னா பிடிச்சிக்கோ, அதுக்கு நான் எதுக்கு சாக்கு, அதுவுமில்லாம நீ கட்டி பிடிச்சா எனக்கு ஏண்டி வெட்கம் வரணும்?”
“அவர் எழுந்துக்கட்டும் வருதா இல்லையான்னு பார்க்கலாம்” என்று விட்டேனா என்று சுந்தரியும் பேச,
“போடி, போடி” என்று எழுந்து வேக நடை போட்டாள் சிந்தா.
சுந்தரிக்கு அப்படி ஒரு பொங்கிய சிரிப்பு சிரிக்க, சுந்தரிக்கு இப்படி பேச வரும் என்பதே கண்ணனுக்கு அப்போது தான் தெரியும்.
இன்னும் சுந்தரியும் இலகுவான பக்கங்களை அவன் பார்க்கவே இல்லையே!  
பூப்பறிக்க வருபவர்கள் சில சமயம் பாடலை சத்தமாய் ஒலிக்க விட்டு வேலை செய்வர். அப்படி ஒரு பாடலும் ஒலிக்க,
அந்த நேரத்திற்கு அது சுந்தரிக்கு மிகவும் பொருத்தமாய் கண்ணனிற்கு தோன்றியது.  
“சித்திரச் செவ்வானம் சிரிக்க கண்டேன்,
என் முத்தான முத்தம்மா,
என் கண்ணான கண்ணம்மா”
இவ்வளவு பேசும் சுந்தரி அவனின் அருகில் இன்னும் படுக்க கூட இல்லை. இவ்வளவு பார்த்து பார்த்து செய்தாலும் கண்ணனும் இன்னும் அவளை உடலால் நெருங்கவேயில்லை.
கண்ணனுக்குள் ஒரு தடை இருக்க தான் செய்தது. அவர்களின் பிரச்சனையின் ஆரம்பமே அவர்களின் உடலுறவை பேசி தானே!
ஒரு வேளை அந்த தடையை மீறி இருந்தால், ஒரு நெருக்கம் வந்து சுந்தரியின் பிடிவாதம் குறையுமோ என்னவோ?
    

Advertisement