Advertisement

அத்தியாயம் இருபத்தி இரண்டு :
அந்த ஸ்கார்ப்பியோவில் கண்ணன் வண்டியோட்ட பக்கம் சுந்தரி தான் அமர்ந்திருந்தாள்.  
பின்னே சந்திரனும், அவரின் தம்பி சண்முகமும், இன்னும் ஒருவரும் அமர்ந்திருக்க, அவர்களின் இடத்தில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தான் மாந்தோப்பு, மிகப் பெரியது இருபது ஏக்கர், பின்னே பத்து ஏக்கர் மஞ்சள், பின்ன முப்பது ஏக்கர் நெல் விளையும் பூமி என இருந்தது. பெரிய சொத்து தான். அதனால் தான் சந்திரனுக்கு இத்தனை ஆர்வம்.     
இவர்கள் போய் இறங்கவும், “பையனை கூட்டிட்டு வர்றேன்னு சொன்னீங்க, வரலையா?” என்றார் அந்த நடுவில் நின்ற மீடியேட்டர். பின்னே இவர்கள் வெண்மையில் பளீரிட, கண்ணனை யாரோ டிரைவர் என்று நினைத்துக் கொண்டான். அவன் மட்டுமில்லை அங்கே இன்னும் ஆறேழு பேர் இருந்தனர்.   
சுந்தரி இன்னும் இறங்கவில்லை. “நான் சொல்லும் போது இறங்கு” என்று விட்டனர்.
அவர் அப்படி கேட்கவும் சந்திரன் மகனை முறைக்க, அவர்களின் பேச்சு சுந்தரிக்கும் கேட்டது.
“அவர் பையன் நான் தாங்க, வேலையா இருந்தேன். அப்படியே வந்துட்டேன்” என்று கண்ணன் சொல்லிக் கொண்டே அவனின் வேஷ்டியை மடித்து கட்டி இரு கையையும் இணைத்து நெட்டி முறித்து சொல்ல,  
கணவனின் தோரணையில் சுந்தரியின் மனம் அதன் சுணக்கங்களையும் மீறி அவனை ரசித்து பார்த்தது.
அவனின் பாவனையே “எவன்டா என்னை கேள்வி கேட்கறது” என்று இருக்க,
“ஓஹ், அப்படிங்களா சரிங்க சரிங்க” என்ற அந்த மீடியேட்டரின் உடல் மொழியில் ஒரு பணிவு வர, “போகலாங்களா” என்றான் இடத்தை சுற்றிப் பார்க்க,
“இருங்க என் வீட்டம்மா உள்ள இருக்காங்க” என்றவன் “சுந்தரி” என அவளை அழைக்க,
இப்போது இந்த உடையில் இறங்க சுந்தரிக்கு பெரும் தயக்கம் வந்து அமர்ந்து கொண்டது. அதுவும் கிளம்பிய பிறகு கண்ணன் சொன்ன “பக்கி மாதிரி வர்றா?” என்றது காதில் ஒலிக்க அவளுக்கு இறங்கவே மனதில்லை.
“இறங்கு சுந்தரி” என்று அருகில் வந்து கதவை திறக்க, வேறு வழியில்லாமல் இறங்கினாள்.
சுந்தரி தயக்கத்தோடு நிற்க அவர்கள் எல்லோருக்கும் சுந்தரியை தெரிந்திருந்தது, கண்ணனை தான் தெரியவில்லை, என்ன இருந்தாலும் சுந்தரிக்கு பெரிய சொத்து தானே அங்கே, அவளின் நர்சரியும் பூந்தோட்டமும் பிரசித்தம்.
“அட, நம்ம பெரிய காட்டுக்காரங்க, இவங்க உங்களுக்கு…” என அந்த மீடியேட்டர் இழுக்க,
“யோவ், என் மருமகய்யா” என்று சந்திரன் சொல்ல,  
அப்போது தான் அவர்களுக்கு அது ஞாபகத்தில் வந்தது, “அட, சரி, சரி, அது ஞாபகத்துல வரலை” என்றனர் உடனே.
அங்கிருந்த ஒருவன் மெதுவாக முணுமுணுத்தான் “அதானே பார்த்தேன் இவர் கிட்ட இது வாங்கற அளவு ஏது பணம்ன்னு, அந்த பொண்ணுக்கு பெரிய சொத்து, அது மருமகன்னா ரெண்டு பணமும் சேருதுள்ள வாங்குவானுங்க, முடிச்சு விடு, முடிச்சு விடு, கமிஷன் பார்க்கலாம்” என்றான் அவனின் கூட்டாளி காதினுள்.
யாரும் சுந்தரிய யார் என்றும் கேட்கவில்லை, அவளின் உடை கொண்டும் கீழே பார்க்கவில்லை, அவளின் சொத்துக்களை கொண்டு மரியாதை தானாய் வந்தது.
இன்னும் ஒரு வார்த்தை கண்ணன் அவளிடம் சொல்லியிருக்கவில்லை, இது தான் விடயம் என்று. சந்திரன் பேசிய பேச்சிலேயே ஏதோ சொத்து வாங்குவது தொடர்பாக என்று புரிந்திருந்தால் சுந்தரி.
இறங்கும் வரை இருந்த தயக்கம் இறங்கி கணவனுடன் நின்று அங்கிருந்தவர்களை பார்த்ததும் சுந்தரிக்கு மறைந்திருந்தது. எங்கேயோ எப்போதோ பார்த்த முகங்கள் தான்.
எதுவும் பேசாமல் அமைதியாய் நிற்க, “சுத்தி பார்க்கலாங்களா?” என்றார். இடையிடையில் பைக் போகும் பாதை இருக்க, அங்கிருந்தவரின் பைக்கை வாங்கி மனைவியை ஏற்றிக் கொண்டான்.
பின் அவர்கள் ஒரு பைக்கில், சந்திரனும் அவரின் தம்பியும் ஏற்கனவே அதை பார்த்திருந்தனர்.
பைக்கில் போகும் போது சொல்லிக் கொண்டே சென்றான். “அப்பா இதை வாங்கலாம்னு சொல்றாங்க, நமக்கு இருக்குறது பார்க்கவே சரியா இருக்குன்னு சொன்னேன். இல்லை சலீசா வருது வாங்கி போடுவோம்னு சொல்றாங்க”
“என்ன பண்ணலாம் நேத்து இதை தான் பேசணும்னு நினைச்சேன், ஆனா வேற தான் தேவையில்லாம நிறைய பேச வேண்டியதாயிடிச்சு” என்றான்.
அந்த பேச்சுக்கள் “ப்ச்” நினைக்கவே இருவருக்கும் பிடிக்கவில்லை, சுந்தரிக்கு இத்தனை பேர் இருக்க என்ன கோபம் காண்பிக்க முடியும் , சகஜமாய் பேச முயன்றாள்.
“மாமா வாங்கணும்னு நினைச்சா வாங்கட்டுமே, இதுல நான் சொல்ல என்ன இருக்கு?” என்றாள், பேச்சு பேச்சாய் இருந்தாலும் கண்கள் தோப்பை சுற்றி வலம் வந்தது.
அதன் சாதக பாதகங்களை ஆராய்ந்தது, சில மரம் காய்க்க ஆரம்பிக்க, அதை பார்த்தவள் “நிறுத்துங்க” என்று அவன் நிறுத்தியதும், அது கீழாக தான் காய்த்து இருக்க, ஒரு எம்பு எம்பி அதனை பறித்தவள், அந்த மாங்காயை துடைத்து கடித்து ருசி பார்த்தாள்.  
“என்னடா பண்ணினா இவ?” என்று தான் “ஆங்” என்று பார்த்தான்.   
சுந்தரியின் உயிர்ப்பு அந்த நிலங்களில் அந்த வளமையில் தானே. அவளின் காய்ச்சல் அவளின் கணவனின் பேச்சுக்கள் எல்லாம் எங்கோ தூரம் போனது,
அவள் கையில் இருந்ததை பறித்து கடித்தவன், அதன் புளிப்பில் முகம் சுளிக்க, “இன்னும் கொஞ்சம் பழுத்தா நல்லா இருக்கும்” என்று சொன்னாள்.
அவளின் பேச்சினை கேட்டுக் கொண்டே “அப்பா வாங்க சொல்றது உன்னை உன் பேர்ல” என்றான்.
“நமக்கா?” என்று அச்சர்யமாய் கேட்டவள் குழம்பி போனாள், நான் இதெல்லாம் யோசிக்கலை, நெல் விளையற பூமி, நமக்கு இது புதுசு”  என்று தயங்கி பேசி,
“நீங்க என்ன நினைக்கறீங்க?” என்றாள்.
“எனக்கும் தெரியலை, அப்பா தான் கட்டாயப் படுத்தறார்” என்றான்.
“அவ்வளவு பணம் நம்ம கிட்ட அவ்வளவு இருக்கா?”
“இவனுங்க விலை சொன்னா தான் நாம இருக்கான்னு பார்க்கணும்” என்றான்.
“பின்னே ஆயா கிட்ட கேட்கணும், அவங்களை கூட்டிட்டு வந்து காமிக்கணும், தண்ணி பாசனம் பார்க்கணும் எத்தனை கிணறு இருக்கு தெரியலை, நெல்லு பூமி வேற எப்படி தண்ணி வரும்னு கேட்கணும்”  என்றாள்.
இப்படியாக யோசிப்போம் என்ற முடிவிற்கு கணவனும் மனைவியும் வர,
வந்து அதை சொல்லவும் செய்தனர்.
“தண்ணி பிரச்சனையில்லை வீரபாண்டி எரி ல தண்ணீர் வரும், அதுல தண்ணீர் வத்தாது” என்றனர்.
“விலை சொல்லுங்க, பத்திரம் காபி குடுங்க, பார்த்துட்டு சொல்றோம்” என்றான் கண்ணன்.
மகன் சரி என்று சொல்லுவான் என்று நினைத்திருந்த சந்திரன் முகத்தினில் ஏமாற்றம். அவர்கள் ஏக்கர் இன்ன விலை என்று சொல்ல,
கண்ணனுக்கு அதன் விவரங்கள் பிடிபடவில்லை. அவன் இங்கே வந்து சில மாதங்கள் தானே, அதிலும் இந்த விஷயங்கள் அவனுக்கு புதிது. ஆனால் அவன் சற்றும் தயங்கவில்லை, மனைவியின் முகம் பார்த்தான் “என்ன இந்த விலை சரியா?” என்று.
அவனுக்கு நன்கு தெரியும் சுந்தரி புத்திசாலி, அவளுக்கு இந்த விஷயங்கள் எல்லாம் அத்து படி என்று. அதையும் விட இங்கே வந்த நாளாய் அவர்களின் நிலத்தில் சுந்தரி சொல்லும் வேலைகள், அவள் பார்த்திருந்த வேலைகள், இப்படி தானே செய்கிறான். அதனால் சற்றும் கூச்சமின்றி அவளின் முகத்தை தான் என்ன சொல்வது என்று பார்த்தான்.
இங்கே நான் ஆண் நீ பெண் என்ற பாகுபாடும் பார்க்கவில்லை, நான் கணவன் நீ மனைவி என்ற நோக்கும் இல்லை.   
“விலை அதிகமா இருக்குற மாதிரி இருக்கு” என்று கணவனின் காதை கடித்தாள் சுந்தரி.
“இல்லைம்மா” என்ற சந்திரன், “பாரு அந்த ஊர்ல கூட இந்த விலைக்கு போச்சு” என்றார்,
“அது எத்தனை ஏக்கர் மாமா?” என்றாள் உடனே.
“பத்து” என்றார் அவர்.
“அது சின்ன தோப்பு, அந்த விலைக்கு அது தகையும், இது கிட்ட தட்ட அறுபது ஏக்கர், இது இவ்வளவு கட்டாது. இவ்வளவு பணம் போட்டு ஒரே சொத்தா யாரும் வாங்கறது சிரமம், அப்புறம் இவங்க பிரிச்சு பிரிச்சு தான் விக்கணும், நாளாகும்” என்றாள் பளிச்சென்று.
அங்கிருந்தவர்களின் காதுகளில் இது விழ, “என்ன இந்த சிறு பெண் இவ்வளவு விவரமாய் பேசுகிறது” என்று தான் பார்த்தனர்.
“இந்த விலைக்கு ரெண்டு பார்ட்டி இருக்காங்க” என்றான் அந்த மீடியேட்டர்.
சந்திரன் “அச்சோ கை விட்டு போயிடுமோ” என்று பார்க்க, கண்ணன் சுந்தரியின் முகம் பார்த்தான்.
“இவ்வளவு அவசரமா நமக்கு இதை வாங்கணும்னு கிடையாது, வேற ஆளுங்க வந்தா குடுத்துடச் சொல்லுங்க” என்று நொடியில் முதலாளியாய் மாறி சுந்தரி கண்ணனிடம் சொல்ல,
அதனை கேட்டிருந்தவர்கள் “வீட்ல இருக்குறவங்களுக்கு என்ன தெரியும்?” என்றனர் வினயமாய்.
“எங்க வீட்ல காடு தோப்பு எல்லாம் பார்த்துக்கறது அவங்க தான். நான் சும்மா வெளி வேலை தான், கூட அவங்க சொல்ற வேலை செய்வேன், சொல்லப் போனா என்னை விட அவங்களுக்கு தான் தெரியும், இப்போ தான் அவங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டு இருக்கேன், அவங்க முடிவு தான்” என்று சுந்தரியை காட்டினான்.
மருமகள் மருமகள் என்று தலையில் தூக்கி வைத்த சந்திரன் கூட என்ன அவளை பேச விட்டு பார்க்கிறான் என்று தான் தோன்றியது.
சுந்தரி அந்த ஆட்களை பார்த்த பார்வையில், “எங்களுடன் இப்படி நீ வியாபாரம் செய்ய முடியாது” என்ற நிமிர்வு இருந்தது, வெறும் இருபது வயதேயான பெண், கல்லூரி சென்றிருந்தாள் இரண்டாவது வருடத்தில் தான் இருந்திருப்பாள். இந்த பக்குவம் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.
பணம் மட்டுமல்ல அவளிடம் உழைப்பும் இருக்கிறதே, அந்த திமிர் அனேகம் தானே அவளுக்கு.      
“இல்லையில்லை அவங்க எல்லாம் வெளி ஆளுங்க, நீங்க நம்ம ஆளுங்க, உங்களுக்கு சொத்து பெருகும்” என்று அவர்கள் தணிந்து வந்தனர்.
“ஒரு ரெண்டு நாள் குடுங்க நல்ல பதிலா சொல்றோம், வாங்கறதுன்னு முடிவாச்சுன்னா உடன் கிரையம், நிலத்துக்காரங்க கல்யாணத்துக்கு வரும் போது முடிச்சிக்கலாம்” என்று கண்ணன் ஸ்திரமாய் சொல்ல, அவர்களுக்கு வேறு வழியில்லை சரி என்றனர்.
என்ன பேச விட்டு பார்க்கிறான் என்று தோன்றிய போதும், மகன் சுந்தரியின் முகம் பார்த்து நடப்பது அப்படி ஒரு நிறைவு சந்திரனுக்கு. அவர்கள் அடித்துக் கொள்வது அவர்களுக்கு தானே தெரியும்.

Advertisement