Advertisement

சோர்வாய் எழுந்து நிற்கவும் ஒரு துவாலை எடுத்து அவளின் தலையை முடிந்தவரை துவட்டினான். சுந்தரிக்கு எதுவும் ஓடவில்லை அவனின் பேச்சுக்களால். அவனை வேண்டாம் போ என்று மறுக்கும் நினைவு திறன் கூட இல்லை. அவனின் பேச்சு ஒரு சூறாவளியை தான் அவளுள் கிளப்பி இருந்தது. “இவனிற்கு என்னிடம் எதுவுமே பிடித்தம் இல்லையா நான் என்னுடைய இடம் என்னுடைய சமையல் எதுவும்?” மனது வலித்தது. ஆனாலும் நான் இப்படி தான் என்ற எண்ணம் மட்டும் இன்னும் இன்னும் வலுப்பெற்றது.      
“போ, போய் படு, அபி பக்கம் படுக்காதே, அவனுக்கு காய்ச்சல் ஒட்டிக்க போகுது” என்று சொன்னது தான், மீண்டும் அப்படி ஒரு அழுகை பொங்கியது.
“இனி நான் அபிக்கும் தேவையில்லையா? யாருக்குமே தேவையில்லையா?” என்று தோன்ற மீண்டும் அழ ஆரம்பித்தாள்.
“ஏய் என்ன தாண்டி உன் பிரச்சனை? சும்மா அழுது அழுது மனுஷனை டென்ஷன் பண்ற, போ போய் படு” என்று அதட்டினான்.
பேசாமல் சென்று படுத்துக் கொண்டாள். மனது கேளாமல் அவளுக்கு பால் விட்டு காய்ச்சல் மாத்திரை ஒன்றை கொண்டு வந்தவன், “எழுந்திரு பால் குடி” என்று அதட்டி அவள் குடித்ததும் மாத்திரை சாப்பிட வைத்து கதவை சாற்றி வந்து மகனின் பக்கம் படுத்துக் கொண்டான்.
நாலு மணிக்கு தண்ணீர் பாய்ச்ச எழுந்து விடுபவர்கள், அன்று ஐந்து மணிக்கு பூப்பறிக்க ஆட்கள் வந்த பிறகு தான் எழுந்தனர்.
அப்போதும் சுந்தரியின் முகம் காய்ச்சலின் அறிகுறி காண்பிக்க,
“நீ இரு, தூங்கு, நான் பார்த்துக்கறேன்” என்று சொல்லி கண்ணன் நகர,
“நீ சொன்னா நான் கேட்கணுமா?” என்று யோசித்தபடி அவளும் நடக்க எத்தனிக்க,
“இப்போ மட்டும் நான் சொன்னதை நீ கேட்கலை, என் பையனை தூக்கிட்டு வெளில போயிட்டே இருப்பேன். அப்புறம் காலம் முழுக்க நீ ஒத்தையில தான் உட்காரணும்” என்று அடிக்குரலில் சீறினான்.
அப்போதும் “என்ன பயம் காண்பிக்கிறாயா?” என்ற பார்வையை தான் சுந்தரி கொடுத்தாள்.
கண்ணனால் கோபத்தை அடக்கவே முடியவில்லை, கையை கட்டி நின்று கொண்டான். “நீ வெளியே சென்று பார், நான் சொன்னதை செய்வேன்” என்பது போல.
கண்ணனிற்கு மனது ஏகமாய் வலித்தது, “நேற்று அவ்வளவு பேசியும் இன்னும் பிடிவாதம், அப்பா என்ன பிறவியோ?” என்று தான் தோன்றியது. ஆனாலும் இனி பேசுவதில்லை என்று வாயை இறுக மூடிக் கொண்டான்.  
கண்ணனின் பேச்சிற்கு எல்லாம் நிற்கும் எண்ணம் சுந்தரிக்கு இல்லவே இல்லை. ஆனால் தலை சுற்றுவது போல இருக்க பேசாமல் அமர்ந்து கொண்டாள்.
ஆம்! காய்ச்சல் இன்னும் இருக்க சோர்வு இருந்தது, அவள் அமர்ந்த விதம் பார்த்ததுமே முடியாமல் தான் அமருகிறாள் என்று புரிய, வெளியே வந்தவன் சாருவிற்கு அழைத்தான், “சாரு அண்ணிக்கு முடியலை. இங்க வேலைக்கு ஆள் வந்துட்டாங்க எனக்கு பார்க்கணும், இங்க அவளை பார்க்க முடியலை, நீ வா” என்று சொல்ல,
அடுத்த பத்து நிமிடத்தில் சாரு வந்து விட்டாள்.
சுந்தரியிடம் அவளை விட்டு வெளியே கிளம்பிய கண்ணனுக்கு மனம் முழுவதும் யோசனை தான் எப்போது இவளின் பிடிவாதத்தை விடுவாள் என்று.
“என்ன அண்ணி காய்ச்சலா?” என்று கேட்டு அருகில் வந்து தொட்டு பார்க்க அழுகை வந்தது சுந்தரிக்கு.   
அவளின் கண்களில் நீரை பார்த்த சாரு “என்ன பண்ணுது அண்ணி” என்றாள் அனுசரணையாக.
என்ன சொல்வது என்று தெரியாமல் “தலை வலிக்குது” என,
சரியாக அந்த நேரம் பார்த்து அபி சிணுங்க, அபியை தூக்கிக் கொண்ட சாரு “இருங்க, காஃபி வைக்கிறேன், சூடா குடிங்க, கொஞ்சம் தலைவலி கம்மியாகும். அப்புறம் இருந்தா மாத்திரை போடலாம்” என்றாள் பரிவாய்.
“ம்ம்” என்று சிறுகுழந்தையாய் சுந்தரி தலையசைத்தாள். இது அவள் கணவனிடம் மட்டும் வருவேனா என்றது.  
அபியை இடுப்பில் வைத்துக் கொண்டே அவனை கொஞ்சிக் கொண்டே சாரு வேகமாய் அடுப்பில் பாலை வைத்து காஃபி கொண்டு வந்து கொடுத்தாள்.
சிணுங்கும் அபியிடம் “என் செல்லம்ல அத்தை இப்போ தருவேனாம், அம்மா முதல்ல சாப்பிடட்டும், அம்மாக்கு காய்ச்சல்” என்று சொல்ல,
மகன் அம்மாவிடம் போக அடம் பிடிக்க “டேய் அம்மாக்கு தலைவலி குறையட்டும், அம்மா தூங்கட்டும் நாம பால் குடிக்கலாம்” என்று சமாளித்து கொண்டு சென்று விட்டாள்.
கண்ணன் பேசியதே சுந்தரியின் எண்ணம் முழுவதும், ஒரு கட்டாயத்திற்காக தான் என்னுடன் இருக்கிறானா என்பது போல.
யோசித்து யோசித்து உறக்கம் வந்து விட மீண்டும் அவள் எழுந்தது சத்தமான பேச்சுக் குரலில் தான், கூடத்தில் வடிவுப் பாட்டியின் கட்டிலில் அவள் படுத்திருக்க, அங்கிருந்து அப்படியே இன்னொரு புறம் தான் சமையல் அறை.
சாரு சமைத்து இருந்தாள் போல, கண்ணன் கீழே அமர்ந்திருக்க, அவனுக்கு தட்டில் இட்லியை அப்போது தான் வைத்துக் கொண்டிருந்தாள். பக்கத்தில் அபி சமத்தாய் அப்பாவை போல அமர்ந்திருக்க, அண்ணனுக்கு வைத்தவள் அபிக்கும் ப்ளேட் வைத்து பிய்த்து பிய்த்து வைத்து அவனுக்கு சாம்பார் தொட்டு சாப்பிட சொல்லிக் கொடுப்பது போல அவளே தான் ஊட்டி விட்டுக் கொண்டிருந்தாள்.
நேற்று இரவு அவளின் சமையலை ஏகத்திற்கும் கண்ணன் பேசியதால் சுந்தரியின் கண்கள் முழுவதும் கணவன் உண்ணுவதில் தான் இருந்தது.
ஒரு ஆறு இட்லி வரை கணக்கு வைத்தாள் பின்பு விட்டு விட்டாள் இரண்டு வாய்க்கு ஒரு இட்லி உள்ளே போனது.
உண்மையில் சுந்தரி சமையலில் மூன்று இட்லிகலே உள்ளே போகும், உண்டு முடித்து நிமிர்ந்தவன் முகத்தில் அவ்வளவு திருப்தி, பின்பு இயல்பாய் சுந்தரியின் புறம் கண்கள் திரும்ப, அவள் பார்த்துக் கொண்டிருப்பது பார்த்து “சாரு அண்ணி முழிச்சிட்டா பாரு, என்ன வேணும்னு கேளு” என்றான்.
“ஏன் நீ கேட்க மாட்டியா? என்னையே சொல்ற, எதுவும் சண்டையா?” என்றாள் பளிச்சென்று சாரு.
“அதெல்லாம் ஒன்னுமில்லை. காலையில இருந்து நின்னது, இப்போ சாப்பிட்டது கொஞ்சம் களைப்பா இருக்கு, நீ போ, நான் அபியை பார்க்கறேன்” என்றான் சுவரில் சாய்ந்து கால் நீட்டி அமர்ந்து.
“அண்ணி முகம் கழுவிட்டு வாங்க இட்லி சாப்பிடுவீங்கலாம்” என்ற போது அனிச்சையாய் சாருவின் கைகள் சுந்தரியின் நெற்றியை தொட்டு பார்க்க, லேசாய் சுட,
“அண்ணா சுடுது” என்றாள்.
சரியாய் அவனின் அப்பா அப்போது அழைத்தவர், “டேய் தம்பி எப்போ போலாம்” என,
“பா அவளுக்கு உடம்பு சுடுது” என்றான்.
“நல்ல நாள் டா, தள்ள வேண்டாம், பிடிச்சா தான் மேற்கொண்டு எல்லாம். ஒரு ஒரு மணி நேரம் விடு, கார்ல தானே போறோம்” என்று சொல்ல,   
“சரி” என்றவன் சாருவிடம் “நீ கிளம்பு, அபியை நான் கொண்டு வந்து விடறேன், நான் அண்ணியை பார்த்துக்கறேன்” என்றவன்,
வெளியில் சென்று சிந்தாமணியை பார்த்து நர்சரியை பார்த்துக்கொள்ள  சொல்லி, உள்ளே வந்தவன் “நான் அபியை அம்மா கிட்ட விட்டுட்டு வர்றேன், நாம் இப்போ வெளில போகணும், நீ இப்போ எந்திரிக்காதே விழுந்து கிழுந்து வெக்க போற, நான் வந்துடறேன்” என்று சொல்லி சென்றவன், பத்தே நிமிடங்களில் வந்து விட்டான்.
எல்லாம் கவனித்து படுத்து இருந்தாள்.
“ம்ம் எழுந்திரு, பல்லு விளக்கு, சாப்பிடு, தெம்பா இருக்கியா குளி” என்று அவளுக்கு சொல்லி சொல்லி எல்லாம் செய்ய வைத்தான்.
இதற்கு ஒரு வார்த்தை கூட சுந்தரி பேசவில்லை, அவள் பேச வேண்டும் என்றும் அவன் எதிர்பார்க்கவில்லை.
“நாம வெளில போறோம் இப்போ அதுக்கு தகுந்த மாதிரி உடுத்து” என்று மட்டும் . சொன்னவன்,
அவள் எப்போதும் போல கிளம்பி நிற்கவும், ஒரு பார்வை பார்த்தவன் வேறு சொல்லவில்லை.  
நல்ல நாளிலேயே அவள் உடுத்தும் அழகே சொல்ல முடியாது. இப்போது உடல் வேறு சரியில்லை, அப்படி என்ன ஸ்ரத்தை எடுத்தா உடுத்துவாள். ஏதோ ஒன்று அவளிற்கு.  
சுந்தரியை பார்த்தவன் அவனும் உடை மாற்றவில்லை. அவன் அதே வேலை செய்யும் வேஷ்டி, பின் மங்கிய நிறத்திலான சட்டை என்று நின்றான்.
எப்போதும் வீட்டிற்குள்ளேயே பளிச்சென்று தான் இருப்பான்.
இப்போது வெளியே கிளம்பும் போது இப்படி நிற்க, சுந்தரி கேட்காத போதும் சொன்னான், “உன்னை என்னால மாத்த முடியும்னு தோணலை, அதான் உனக்கு மேட்சா நான் மாறிக்கறேன்” என்று சொல்லிச் செல்ல,
சுந்தரியிடம் எதற்குமே பதில் இல்லை.
அவனின் அப்பா வந்தவர் “என்னடா தம்பி இவ்வளவு கேவலமா உடுத்தியிருக்க” என்றார்.
பின்னே அவர் பளிச் வெள்ளை வேஷ்டி சட்டையில் இருந்தார், சுந்தரி எப்போதும் அப்படி தானே அதனால் அவருக்கு வித்தியாசம் தெரியவில்லை. ஆனால் மகனின் உடையை பார்த்ததும் அவர் தானாக அப்படி சொல்லி விட்டார்.
சுந்தரியின் கண்களில் மளுக்கென்று நீர் நிறைய யாரும் காணாமல் உள்ளே ஏதோ வேலை இருப்பது போல சென்று விட்டாள்.   
கண்ணன் அதனை பார்த்தாலும் “சீக்கிரம் கிளம்பு” என்று குரல் கொடுத்து “பா வாங்கப்பா” என்றும் சொல்ல, சுந்தரியும் தன்னை சமாளித்து உடனே வந்து விட்டாள்.
“டேய் கோடி ரூபாய்க்கு சொத்து வாங்கப் போறீங்கடா” என்றார்.
“வாங்க போறவளே பக்கி மாதிரி தான் வர்றா, எனக்கெதுக்கு வெள்ளையும் ஜொல்லையும், வீட்ல இருக்குற பொண்டாட்டியே மதிக்க மாட்டேங்கறா, வீட்டை விட்டு போன்னு விரட்டுறா, இனி வெளில என் உடுப்பை பார்த்து என்னை எவனும் மதிச்சா என்ன? இல்லை மிதிச்சா தான் என்ன?” என்ற முனுமுனுப்பு சுந்தரி அருகில் வரவும் அவளுக்கு மட்டும் கேட்குமாறு சொல்லி நடக்க,
சுந்தரிக்கு செய்யும் வகை தெரியவில்லை.  
   
       
        

Advertisement