Advertisement

நீ என் காதல் புன்னகை -11(1)

அத்தியாயம் -11(1)

கோவமாக வீட்டிலிருந்து அவளது ஸ்கூட்டரில் புறப்பட்டவள் நேரே அவள் முன்னர் தங்கியிருந்த விடுதிக்கு செல்ல அங்கு அறையும் இருக்க அன்றே சேர்ந்து விட்டாள்.

தான் கோவமாக சொன்ன பிறகு கண்டிப்பாக வீட்டை விட்டு செல்ல மாட்டாள் என உதய் அத்தனை நம்பிக்கையோடிருக்க சற்று முன் தந்தை அவனுக்கு அழைத்து சொன்னதை அவனால் நம்பவே முடியவில்லை. அவரும் ஷியாமளாவும் அவள் தங்கியிருக்கும் விடுதிக்கு நேரில் சென்று அழைத்தும் வர மறுத்திருக்கிறாள் என்பது வேறு இன்னும் கோவத்தை அதிகப் படுத்தியது.

“உன் அம்மா மேலதான் தப்பு உதய். நீ இங்க வந்த பிறகு வர்றேன்னுதான் பூவை சொல்லுது. கமலாகிட்ட என்னால பேசி சமாளிக்க முடியாது. நீ நேர்ல வந்து சொல்லு, உன் அம்மா அப்போதான் வாய் பேசாம இருப்பா. மனசை போட்டு குழப்பிக்காம வேலையெல்லாம் நல்ல விதமா முடிச்சிட்டு வா” என சொல்லி வைத்து விட்டார் நாதன்.

ஆனாலும் பூவை வெளியேறியதை அவனால் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாமல் கோவத்தோடு அவளுக்கு அழைத்தான். அவள் எடுத்ததும், “ஒழுங்கு மரியாதையா வீட்டுக்கு போற. இல்லன்னா எப்பவும் நீ அங்க வர முடியாது” என இரைந்தான்.

“இதை உங்ககிட்டேர்ந்து நான் எதிர்பார்த்திருக்கணும். மரியாதை இல்லாத இடத்துல குறைந்த பட்சம் எனக்காக என்னால கூட பேச முடியாத ஒரு இடத்துல அடிமையா என்னாலேயும் இருக்க முடியாது” என்றவள் அவனுக்கு முன் அழைப்பை துண்டித்து வைத்தாள்.

பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் உதய்யிடமிருந்து அழைப்பு வர ஏற்றாள்.

“பேசிட்டிருக்கும் போது கட் பண்றது என்னடி பழக்கம்? இங்க வேலை வெட்டி இல்லாம உனக்கு கூப்பிடுறேன்னு நினைச்சியா?”

“நீங்க செய்றப்போ தப்பா தெரியாத விஷயம் நான் செய்றப்ப மட்டும்தான் உங்களுக்கு தப்பா தெரியுமா?”

“நானும் நீயும் ஒண்ணா?”

“ஓஹ் அது வேறவா? ஆமாமாம் நீங்க உயர்திரு உதயசரண் அவர்கள், சிங்கப்பூர் சீமான், நான் அந்த சீமானுக்கு கட்டுப்பட்ட பாவப்பட்ட பூவை, ஹ்ம்ம்… ஆஃப்டர் ஆல் பொண்ணு வேற… எப்படி நாம ரெண்டு பேரும் ஒண்ணாக முடியும்?” நக்கலாக கேட்டாள்.

உதய் சிரிக்கும் சத்தம் கேட்க, “போன் வச்சிட்டு நல்லா சிரிங்க, நான் வைக்கிறேன்” என்றாள்.

“போனை வச்ச கொன்னுடுவேன் டி உன்னை! நான்தான் கோவக்காரன் அவசரக்காரன் பாதியில போன் வைக்கிறேன். என் பொண்டாட்டி அப்படி இல்லையே ரொம்ப புத்திசாலி ஆச்சே… அவ எதுக்கு மேனர்ஸ் தெரியாம போன் கட் பண்றா? நீயும் நானும் ஒண்ணா அப்படிங்கிறதுக்கு அர்த்தம் புரியுதா?”

“அவசரக்காரன் கோவக்காரன் அப்படிங்கிறது நீங்க படிச்சு வாங்கின பட்டமா? எது வேணா செஞ்சிட்டு உங்க குறைகளை கேடயமா வச்சு தப்பிச்சுக்குவீங்களா?”

“அடியேய் பாய்ண்ட் பட்டம்மா! நான் அவ்ளோ சொல்லியும் எதுக்கு வீட்டை விட்டு வந்த நீ? குடும்பம்னு இருந்தா சண்டையெல்லாம் சகஜம்தான், அதுக்காக நீ செஞ்சது சரியா?” பூவையின் பேச்சில் கொஞ்சமாக நிதானித்திருந்தவன் தன்மையாகவே கேட்டான்.

“உங்கம்மா மட்டும்தான் சண்டை போட்டாங்க, என்னை போடக்கூடாதுன்னு நீங்க சொல்லிட்டீங்க. குடும்ப சண்டைன்னா ரெண்டு பக்கமும் பேச விடணும், அநியாயமா நீ எவ்ளோ வேணாலும் அடி நான் வாங்கிட்டு நிற்கிறேன்னு நிற்க முடியாது, அதான் வந்திட்டேன்”

“பூவை நீ இப்படி ஹாஸ்டல்ல தங்கியிருக்கிறது எனக்கு எவ்ளோ பெரிய அவமானம்னு உனக்கு புரியலையா? உன்னை வச்சு வாழத் தெரியாதவன்னு சொந்தக்காரங்க மத்தியில எனக்கு பேர் வாங்கி தர ஆசை படுறியா நீ?” எனக் கேட்டான்.

பூவை பதில் சொல்லாமல் இருக்க, “பதில் சொல்லுடி” என பல்லை கடித்தான்.

“நீங்க நினைக்கிற மாதிரி எந்த எண்ணமும் எனக்கு இல்ல. ரெண்டு நாள் இங்க இருக்கேன். அம்மா, ஜெயந்தனை சென்னைக்கு ஷிப்ட் பண்ண பேசி வச்சிருந்தோம்தானே? நீங்க வந்த பிறகு செய்ய நினைச்சத இப்ப உடனே செய்றேன். நானும் அவங்க கூட தங்கிக்கிறேன். யாரும் கேட்டா அண்ணாக்கு உடம்பு முடியாததால ஹெல்ப்க்கு இருக்கேன்னு சொல்லுங்க” என்றாள்.

“அப்போ நீ வீட்டுக்கு போக மாட்ட?”

“போறேன், இப்பவே உங்க அம்மா… மன்னிப்பு கூட கேட்க வேணாம்ங்க, பேசினது தப்பு, இனிமே இப்படி பேச மாட்டேன்னு மட்டுமாவது சொல்ல சொல்லுங்க. அப்புறம் வேணா போறேன்” என்றாள்.

“கண்டிப்பா சொல்ல சொல்றேன். ஆனா இப்ப போன்ல என்னால சொல்ல முடியாது, அது வேற மாதிரி போகும், ஏதாவது அவங்களுக்கு ஆச்சுன்னா நானும் இல்லாம கஷ்டமாகிடும். நான் வந்திடுறேன், வந்த பிறகு சொல்ல சொல்றேன்”

“அப்ப நீங்க வந்த பிறகே நானும் வர்றேன்” அத்தனை உறுதியாக பூவை கூற உதய்க்கு அவளது நியாயம் புரியவில்லை. மற்றவர்கள் சொன்னது போல வீட்டில் வாழாமல் வெளியில் சென்று விட்டாள் என்பதுதான் பூதாகரமாக தெரிந்தது.

“வீடு பார்த்து நீ போறது உடனே நடக்குமா? அட்லீஸ்ட் ஒரு வாரமாவது ஆகாதாடி? அது வரைக்குமாவது ஒழுங்கா வீட்ல இரு, இல்லன்னா உன் அம்மா வீட்டுக்காவது போய் தொலை. எப்பவும் போல இப்பவும் டென்ஷன் செய்யாத என்னை”

“முடியாதுங்க” பூவை உறுதியாக கூற,

“பூவை!” என கண்டனமாக அழைத்தான்.

“நீங்க என்ன சொன்னாலும் போக முடியாது” என்றாள்.

“நேர்ல வந்து பேசிக்கிறேன் டி உங்கிட்ட. எவனாவது ஏதாவது சொன்னான்னு கேள்வி பட்டேன்… அப்புறம்தான் இருக்கு உனக்கு. அங்க வந்து உன் திமிரை அடக்குறேன்” என உறுமினான்.

திரும்ப சூடாக பதில் கொடுக்க எண்ணி பூவை வாயை திறக்க அதற்குள்ளாக அழைப்பை துண்டித்திருந்தான் உதய்.

பூவையும் உதய்யும் பேசிக் கொண்டு நான்கு நாட்களாகி விட்டன. கணவனிடம் அவள் சொன்னது போலவே வீடு பார்க்க ஆரம்பித்திருந்தாள். ஆனால் அத்தனை எளிதாக கிடைக்கவில்லை. உதய்யின் நண்பன் சிவகுமார் வந்து நின்றான்.

“எனக்கு தெரிஞ்ச புரோக்கர் வீடு பார்த்திட்டு எங்க அப்பார்ட்மென்ட் வந்தார். விசாரிச்சா உனக்குத்தான் வீடு பார்க்கிறதா சொல்றார். என்ன பூவை இதெல்லாம்?” எனக் கேட்டான்.

“அம்மாவுக்கு ரொம்ப விவரம் தெரியாது ண்ணா. அண்ணனுக்கும் இன்னும் நல்லா நடக்க வர மாட்டேங்குது. பிசியோதேரபி செய்ய எல்லாம் அவங்களே கும்பகோணம் போயிட்டு வர ரொம்ப சிரம படுறாங்க. இங்க அழைச்சிட்டு வரணும்னு முன்னாடியே யோசிச்சு வச்சதுதான்” என மட்டும் சொன்னாள்.

“சரிம்மா, நான் இருக்க அப்பார்ட்மெண்ட்லேயே ஒரு வீடு காலியா இருக்கு, வந்து பாரு” என்றவன் அன்றே பூவையை அழைத்து சென்று காண்பித்தான். இரண்டு படுக்கையறைகள் கொண்ட வீடு, அவளது வங்கியிலிருந்தும் அதிக தூரமில்லாமல் இருக்க அவளுக்கு பிடித்திருந்தது.

“இதையே ஓகே பண்ணிடலாம் அண்ணா” என்றாள்.

“சரிம்மா, ஓனர் இங்க இல்லை, மும்பைல இருக்கார். நான் பேசிட்டு அவர் அக்கவுண்ட் நம்பர் அனுப்புறேன். அட்வான்ஸ் அனுப்பிடும்மா” என்றான் சிவா.

“சரிண்ணா, இவ்ளோ சீக்கிரம் கிடைக்கும்னு நினைக்கல. நீங்க இல்லன்னா கஷ்டமாகியிருக்கும், ரொம்ப தேங்க்ஸ் அண்ணா”

“சின்ன உதவிதானே பூவை. அது சரி… என்னடா பெர்சனல் விஷயம் கேட்கிறேன்னு நினைக்க கூடாது” என பீடிகை போட்டான்.

“சொல்லுங்க ண்ணா”

“உதய் கூட சண்டையாம்மா? ஏன் கேட்கிறேன்னா எது கேட்டாலும் கோவ படுறான்ம்மா என்கிட்ட”

“உங்க ஃப்ரெண்ட்க்கு கோவ படுறதுக்கு எதுவும் காரணம் வேணுமா என்ன? அங்க வேலை டென்ஷனா இருக்கும், அதை உங்ககிட்ட காட்டியிருப்பார்”

“உன்கிட்ட காட்டுறது இல்லையாம்மா?”

பூவை அமைதி காக்க, “பேசினாதானே காட்டன்னு கேட்குறியா ம்மா?”

“அவர் உங்ககிட்ட என்ன சொன்னார்?”

“எதுவும் சொல்லலை, நீ ஹாஸ்டல்ல தங்கியிருக்கிறது எனக்கா தெரிய வந்துச்சு. அவன்கிட்ட கேட்டதுக்கு ஒழுங்கா பதில் சொல்லலை. அவனை எனக்கு பத்து வருஷமா தெரியும், ஆரம்பத்துல எனக்கும் அவனுக்கும் ஒத்தே வரலை, ஆனா போக போக அவனை புரிஞ்சுக்கிட்டேன். பிடிவாதக்காரன், கோவக்காரன் அதையெல்லாம் தாண்டி ரொம்ப நல்லவன் மா. கூட இருக்கிற நாமளே அவனை புரிஞ்சுக்காம இருக்க கூடாது”

“என்ன அண்ணா உங்க ஃப்ரெண்ட்டை விட்டு கொடுக்காம பேசுறீங்களா?”

“கண்டிப்பா ம்மா, என் ஃப்ரெண்ட்ங்கிறதால மட்டுமில்லை, அவனும் அப்படி விட்டு கொடுக்காம பேசுற அளவுக்கு ஒர்த் தான். மேலோட்டமா பார்த்தா அவன் தப்பா கூட தெரியலாம், ஆனா கோவம் ஒண்ணை தவிர அவன்கிட்ட வேற குறை கிடையாது. ரெண்டு வாரத்துல உன்னால அவனை சரியா புரிஞ்சுக்க முடியுமான்னு தெரியல, அதிகமா பேசுறதா கூட நீ நினைச்சுக்க, ஆனா அவன் விஷயத்துல கொஞ்சம் பொறுமையா போ பூவை” என்றான்.

“எனக்கும் அவருக்கும் கொஞ்சம் மனஸ்தாபம்தான் அண்ணா, ஆனா பெருசா ஒண்ணுமில்ல. அவர் வந்ததும் வீட்டுக்கு போய்டுவேன். நீங்க உங்க ஃப்ரெண்ட்க்கும் மறக்காம அட்வைஸ் பண்ணுங்க” என்றாள் பூவை.

“அவனுக்கு அட்வைஸா… கேட்டுட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்”

“அப்படியும் சொல்றீங்க, இப்படியும் பேசுறீங்க”

“அவனுக்கா தோணினா ஒழிய யார் பேச்சையும் கேட்டுக்க மாட்டான். ஆனா எல்லாம் சரியாத்தான் செய்வான்” என அப்போதும் விட்டுக் கொடுக்காமல் சிவா கூற பூவை ஒரு சிரிப்போடு நிறுத்திக் கொண்டாள்.

“உதய் அம்மா பேசினது ரொம்ப அதிகம்தான், அதுக்காக வீட்டை விட்டு போகணுமா? உன் அம்மா அண்ணா இங்க குடி வச்சிட்டு உன் வீட்டுக்கு நீ போம்மா” என்றான்.

“அங்க நடத்தது உங்களுக்கு எப்படி ண்ணா தெரிய வந்தது?” என பூவை கேட்க அவன் விழித்தான்.

“இப்ப அதுவா முக்கியம்? உதய் சொன்னான் மா”

“இல்ல, அவர் எதுவும் சொல்லலைன்னு இப்பதானே நீங்க சொன்னீங்க, அப்படி அவரே சொல்லியிருந்தாலும் அவர் அம்மா பத்தி குறையா எதுவும் யார்கிட்டேயும் சொல்லவே மாட்டார். யார் மூலமா உங்களுக்கு தெரிஞ்சது?” விடாமல் கேட்டாள்.

“அவ்ளோ முக்கியம் இல்லம்மா அது”

“என் குடும்ப விஷயம் வெளில வருது, சொன்னது யாருன்னு தெரிஞ்சுக்க வேண்டியது எனக்கு ரொம்ப முக்கியம் அண்ணா”

சிவா அமைதி காக்க, “ஷியாமளா சொன்னாளா?” எனக் கேட்டாள் பூவை.

சிவா அதிர்ந்து பார்க்க, “அப்போ அவதான் இல்ல?” எனக் கேட்டாள்.

மௌனமாக தலையை மட்டும் சிவா ஆட்ட, “உங்க ஃப்ரெண்ட்க்கு இது தெரியுமா?” எனக் கேட்டாள்.

இன்னுமாக திகைத்து போனவன், “நான் எதுவும் சொல்லாம எப்படி எல்லாம் கண்டுபிடிக்குற நீ? என் மூஞ்சில எழுதி ஒட்டியிருக்கா?” எனக் கேட்டான்.

“ஷியாமி கூட ரொம்ப பேசினதில்லை, ஆனா ஒரு முறை உங்களை பத்தி ஏதோ சின்னதா பேச்சு வந்தப்பவே அவ கண்ணு மின்னிச்சு. ஒரு கெஸ்ஸிங்ல உங்ககிட்ட கேட்டா நீங்க முழிக்கிறீங்க. கண்டுபிடிக்க அவ்ளோ கஷ்டம் இல்ல ண்ணா” என்றாள்.

“நல்ல புத்திசாலி பொண்ணுதான், ஆனா அப்பப்ப தவறா சில முடிவுகளும் எடுப்ப அப்படித்தானே?”

“புத்திசாலியான்னு எல்லாம் எனக்கு தெரியாது ண்ணா, ஆனா அப்படியே இருந்தாலும் சுயமரியாதை இருக்க கூடாதுன்னு இல்ல. அங்க இருந்தா என்னால அவர் அம்மாவை பேசாம இருக்க முடியாது. சண்டையை தவிர்க்க வேற வழி தெரியல, இப்படி வந்தது எனக்கு தப்பாவே தெரியல”

“ஹ்ம்ம்… அவன் வர்ற வரைக்கும் வேற பிரச்சனை ஆகாம இருக்கணும்”

“அதுதான் என் கவலையும், உங்க விஷயம் அவருக்கு தெரியுமா தெரியாதா? எவ்ளோ நாளா நடக்குது இது?” காரியத்தில் கண்ணாக கேட்டாள்.

“இல்லம்மா அவனுக்கு இன்னும் தெரியாது. ஷியாமி ரெண்டு வருஷமாவே என்னை விரும்பறா. நான் இப்போதான் மூணு மாசம் முன்னாடிதான் சரின்னு சொன்னேன்” என்றான்.

Advertisement