Advertisement

         அவளின் யோசனைக்கு முக்கிய காரணம் வீட்டை சுத்தம் செய்து விட்டு படுப்பதற்காக வரும்போது வீட்டில் தங்கியிருந்தவர்களுக்கு தேவையானவற்றை எடுத்துக் கொடுத்து விட்டு வரும்போது இனியாவின் அறையில் விளக்கு எரிந்ததால் சென்று லைட்டை ஆஃப் பண்ண சென்ற போது அவளுக்கு கையில் கிடைத்த பொருள் தான்.அவளது இந்த யோசனைக்கு காரணம்.., இது எப்படி சூர்யாவிடம் முகிலனிடமும் தெரிவிப்பது என்ற யோசனையோடு இருந்தாள். செய்வதையெல்லாம் செய்துவிட்டு அடுத்தவர்கள் மேல் பழியைப் போடுவது எவ்வளவு சுலபமாக செய்கிறாள் இந்த இனியா என்ற எண்ணமே அவளது யோசனையை மீண்டும் அதிகப்படுத்தியது…

        வீட்டில் உள்ளவர்களை தவிர வேறு யாருக்கும் அவளுக்கு உடல்நலம் இல்லாமல் போனது தெரியாது., எனவே நடு இரவு தாண்டிய நேரத்தில் அவளை அருகில் உள்ள மருத்துவ மனையில் இருந்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்போது எழுந்து கதவை திறந்தது கலை தான் பின்பு யாரிடமும் எதுவும் சொல்லாமல் தூங்கி இருப்பவர்கள் யாரையும் எழுப்பாமல் அவரவர் அறைக்கு செல்லவும், அவர்கள் அறைக்குள் நுழைய போன சூர்யாவை கலை உள்ளே தடுத்து மதி தூங்கிக் கொண்டிருக்கிறாள் என்றாள்.

         ஏன் முகிலன் உடைய ரூமிற்கு போகவில்லையா என்று கேட்டதற்கு இல்ல நான் தான் அம்முவோட தூங்க சொன்னேன்.என்று சொல்லிவிட்டு அவனை பார்த்து நீங்களும் உங்க தம்பியும் ஹாலில் படுத்துக்கோங்க என்று சொன்னவுடன் அவன் எதற்கு சொல்கிறாள் என்று தெரியாமலே ஹாலில் இருவரும் படுத்து விட்டார்கள்.  கலை லைட் ஆப் செய்து விட்டு உள்ளே போகவும்., மதி தூங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தவள் இந்த பொண்ணு இவளால என்னெல்லாம் பெயர் வாங்க போது தெரியலையே.இவ என்ன பாடு படுத்த போறான்னு புரியலையே என்ற எண்ணத்தோடு அம்மு  அருகில் குழந்தையாக தூங்கும் அவளைப் பார்த்துவிட்டு லைட்டை ஆப் செய்து விட்டு இரவு விளக்கை மட்டும் போட்டு வைத்து விட்டு அம்முவிற்கு மற்றொரு புறமாக அவள் வந்து படுத்து விட்டாள்…

விடியல் இந்த வீட்டில் என்ன வைத்திருக்கிறது என்று தெரியாமல் தான் இரவு உறக்கத்தை தழுவினாள்., கலை

      காலை எழுந்தவுடன் மதி குளித்துவிட்டு வரவும்.அம்மு விளையாட தோட்டத்திற்கு செல்ல அம்முவோடு பின்புறம் சென்று விட்டாள். 

அனைவரும் எழுந்து அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருக்க.வீட்டிற்கு வந்த உறவினர்கள்  இனியா விடம் உடல்நிலையை விசாரித்துக் கொண்டிருக்க.,  “நல்லாத் தான் இருந்தேன் சாப்பாடு ஒத்துக்கல்ல ன்னு டாக்டர் சொல்றாங்க., எல்லாம் இவ வந்த நேரம் எப்பவும் சாப்பிடுற சாப்பாடு தான் எனக்கு ஒத்துக்காம போயிருச்சு”., என்று சொல்லவும் வீட்டிற்கு வந்த உறவினர் ஒருவர் அவளுக்கு சாதகமாகப் பேச தொடங்கினார். 

      “ஆமா அந்த பொண்ணு வீட்டுக்கு வந்த நேரம் வீட்டு பொண்ணு ஆஸ்பத்திரிக்கு அனுப்பியது” என்று சொல்லவும்

       அதுவரை அமைதியாக இருந்த கலைஅவரை உறவு முறை சொல்லி அழைத்து “எதுவுமே தெரியாம நாம பேசக்கூடாது அவளுக்கு ஃபுட் பாய்சன் டாக்டர் சொல்லி இருக்காங்க., அவ ஹெல்த் பொருத்தவரைக்கும் அப்படி இருக்கும் போது வீட்டுக்கு வந்த பொண்ணோட ராசி ன்னு  நீங்க எப்படி சொல்லலாம்., இதே மாதிரி தானே நாளைக்கு என்னையும் சொல்லுவீங்க., ஏதும் ஆச்சுன்னா” என்று சொன்னாள்.

         “அப்படி இல்லமா வீட்டுக்கு ஒரு பொண்ணு வர்ற நேரம் நல்ல நேரமாக இருந்தால் எல்லாம் நல்லபடியா நடக்கும்” என்று சொல்லவும்.., வேகமாக சென்று பின்புற கதவை சாத்தி வைத்தால் ஏனென்றால்பின்புறம் மதியும் அம்முவும் இருந்தார்கள்., அவர்களுக்கு கேட்கக்கூடாதுஎன்று கதவை சாத்திவிட்டு வந்தவள்.,

       “விஷயம் தெரியாம பேசாதீங்க” என்று சொல்லவும், இனியாவோ “அவங்க என்ன சொல்லிட்டாங்க உண்மைதானே சொன்னாங்க., இப்ப அவ வந்த நேரம்தான் எனக்கு ஹாஸ்பிடல் போக வேண்டியதாயிற்று, ட்ரிப் ஏற்ற வேண்டியதாயிடுச்சு., பாருங்க எனக்கு ஒரே நாள்ல எவ்வளவு உடம்பு முடியாம ஆன மாதிரி நானே டயர்டா ஃபீல் பண்றேன்”., என்று சொன்னாள்.

          கலை அவளை முறைத்து பார்த்தபடி இருந்தாள்., அதற்குள் சூர்யாவும்., பாலனும் “எதற்கு தேவையில்லாமல் காலையிலேயே பிரச்சினை” என்று பேச.,

       முகிலனும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க.,  “இதில் என்ன தப்பு இருக்கு நான் சொன்னதுல என்ன தப்பு இருக்கு” என்று இனியா ஓங்கி பேசவும் அவ்விடத்தில் வீட்டில் உள்ள அனைவரும் சேர்ந்தனர்.

         இவள் மறுபடியும் சென்று பின்புறம் பார்க்க அம்மு எப்போதும் போல் அங்கு உள்ள  பூவை பறிக்கவும்தோட்டத்தில் விளையாடவும் குருவி பார்க்கவும், என்று அவளது வேலையை பார்க்க..அவளோடு சேர்ந்து மதியும் அங்கே நிற்க மீண்டும் கதவை சாத்திவிட்டு வந்தவள்.

      “ஒரு உண்மையை சொல்றேன், இனியா நீ பண்ண தப்ப நான் சொல்லக் கூடாது யார்கிட்டயும், அப்படின்னு நினைச்சேன். ஆனா நீ தப்பு மேல தப்பு பண்ணிட்டே இருக்க., இப்ப நான் சொல்லத்தான் போறேன்.,   வீட்டுக்கு வந்த ஒரு பிள்ளையை நீங்க என்ன னாளும் சொல்லுவீங்களா.., அந்த பொண்ணு அமைதியா இருக்கு, அப்படி னா நீங்க என்ன னாலும் பேசுவீங்களா” என்கவும்.,

         இனியா பயத்தில் திரு திருவென முழித்துக் கொண்டு எழுந்து  தேவையில்லாமல் என்னை பற்றி நீங்க ஒன்னும் பேச வேண்டாம்., அவ உங்கள மாதிரி இந்த வீட்டுக்கு வந்த மருமகள் ன்னு அவளுக்கு சப்போர்ட் பண்றீங்களா.,”  என்று கத்த தொடங்கவும்.

       “சப்போர்ட் பண்ணல யார் தப்பு பண்ணியிருந்தாலும், நான் தப்பு தான் சொல்லுவேன்., உங்க பெரியண்ணா அப்படித்தான் இருக்காரு., உங்க சின்ன அண்ணன் எப்படி இருக்கார் என்று எனக்கு தெரியாது”.

       நான் ஜால்ரா தட்ட மாட்டேன் என்று சொல்லி விட்டு.அவள் அறையில் இருந்து நேற்று இரவு விளக்கை அணைக்க செல்லும் போது எடுத்த மாத்திரை ஸ்ரிப்பை காட்டினாள். அது வயிறு சுத்தப் படுத்தக்கூடிய  பேதி மாத்திரை, அதில் மூன்று மாத்திரை அவள் போட்டிருப்பது தெரிந்தது,

      அதில் மாத்திரையை எடுத்து இருந்தது தெரிந்தது.,அதை காட்டி “ஒரு மாத்திரை இரண்டு மாத்திரை இல்ல மூன்று மாத்திரை போட்டு இருக்க.., பின்ன வயிர கலக்க தான் செய்யும், ஆஸ்பத்திரி போய் ட்ரிப் போட தான் செய்யணும்.தேவையில்லாம அவளால் தான் எனக்கு இப்படி ஆயிட்டு, ஆஸ்பத்திரிக்கு போனேன் திரும்பத் திரும்பச் சொன்ன அதுக்கு அப்புறம் தான் இருக்கு உனக்கு” என்று சொன்னாள்.. 

      அதுவரை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த பாலன் இனியாவிடம் எதுவும் பேசாமல்., வசந்தியை அழைத்து “வசந்தி நாம பிள்ளை வளர்த்த லட்சணம் சரியில்லைன்னு நினைக்கிறேன்., ஏதோ பாவம் பண்ணிட்டோம் போல” என்று சொல்லவும்..,

       இனியா அப்பா என்று அதிர்ச்சியாக பேசத் தொடங்கும்  போது., அவர் ஒரே வார்த்தையில் “தயவு செய்து இனி என்னிடம் பேசாதே நீ இப்படி இருப்ப என்று உன்ன கொஞ்சம் கூட யோசிக்கல”என்று சொல்லிவிட்டு முன்னறைக்கு சென்றுவிட.,

     சூர்யாவும் “நீ திருந்தவே மாட்டியா”என்று கேட்டுவிட்டு அப்பாவின் பின்னேயே செல்ல..,

       முகிலன் அவளைப் பார்த்த பார்வையில் இனியா  தானாகவே தலையை குனிந்து கொண்டாள்.. அவள் எதுவும்  பதில் பேசும் முன் முகிலன் எழுந்து சூர்யாவும் அப்பாவும் சென்ற முன்னறைக்கு  சென்றுவிட்டான்.

     அவளும் டீபாயில் இருந்த மாத்திரை ஸ்ரிப்பை தூக்கி கோபத்தில் வீசி அடித்தாள். காலையில் இனியாவின் கணவன் அவர்கள் வீட்டுக்கு சென்று இருந்ததால் இங்கு நடந்த எதுவும் அவனுக்கு தெரியாது.

     அதன் பிறகு வீட்டில் இருந்த உறவினர்கள் அவரவர்களுக்கு தகுந்தாற்போல் இனியாவிற்கு அறிவுரை வழங்கினர்.

       இனியா தான் கோபித்துக் கொண்டு தன் வீட்டிற்கு செல்வதாக கிளம்ப தொடங்கவும்.வசந்தி சத்தம் போட்டார். “இன்னும் என் வீட்டு மானத்தை வாங்க நினைக்கிறியா, இப்ப போறதா இருந்தா நான் எல்லார்ட்டையும் உண்மையை சொல்லி விடுவேன்” என்று சொல்லவும் அமைதியாக அமர்ந்து கொண்டாள்.

 வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டே இருந்தாள். “போ போய் ரூம்ல இரு, ரெண்டு நாள் கழிச்சு உன் வீட்டுக்கு போ” என்று சொல்லி சத்தம் போட்டு அனுப்பி வைத்தார்…

     தன் மீது ஆயிரம் குறைகளை வைத்துக்கொண்டு மற்றவரின் மேல் குறை தேடும் உலகம் இது. வாழ்க்கையில் அன்பால் மட்டுமே அத்தனையும் தகர்க்க முடியும். தாங்க முடியும்.

 

 

Advertisement