அவனும் சிரித்துக்கொண்டே ஆமாம் “முன்னாடி எல்லாம் அவ்வளவு வாய் அடிப்பஇப்ப என்ன என்னை பாத்து பேசவே மாட்டேங்குற.நிமிர்ந்து பார்க்கவே தயங்குறஎன்னை பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியுதா” என்று கேட்டான்.

         அவள் மறுப்பாக தலையாட்டி விட்டு அமைதியாக அடுத்து வந்தவர்களிடம் பேசிக்கொண்டு நின்றாள்.

      இப்போதைக்கு  பதில் வராது என்று நினைத்துக்கொண்டே அமைதியாக இருந்தான். இதையெல்லாம் கீழிருந்து கவனித்துக் கொண்டிருந்தவள் மனதில் இருந்த எண்ணங்களோ., போட்ட திட்டங்களோ வெளியில் தெரியவில்லை.

       அருகிலிருந்த சூர்யாவிற்கு முகிலன் அவன் வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை வந்தது. அதேநேரம் இனியாவை கவனித்துக்கொண்டிருந்த கலையோ, இவ பார்க்கிற பார்வையே சரியில்லையே என்ற எண்ணம் வந்தது., அதை சூரியாவிடம் காட்டிக் கொடுத்தாள்.

     அதன் பிறகு உள்ள சம்பிரதாயங்கள் படி மதி வீட்டிற்கும், முகிலன் வீட்டிற்கும், சென்று வந்தனர். பின்பு மாலை நேரம் மதியை முகிலன் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

           முகிலன் அறையில் மதியின் உடமைகளை வைத்துவிட்டு, மதியின் வீட்டினர் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது மதியை அழைத்து அவர்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள்  அறிவுரை வழங்க தொடங்கினர்.

         ” பொண்ணா பொறந்தவ எல்லா இடத்திலேயும் பொறுமையா இருக்கணும், நல்லதோ கெட்டதோ புருஷன் வீட்டில் உள்ளத பொறந்த வீட்டில் சொல்லக்கூடாது. பெத்தவங்க வீட்டில் உள்ளத புருஷன் வீட்டில் சொல்லக்கூடாது.ரெண்டு குடும்பத்தையும் கை தாங்கிக் கொண்டு போறவ தான் பொண்ணு.., ரெண்டு வீட்டுக்கு இடையிலையும் உன்னால ஒரு பிரச்சனை வந்துச்சு இருக்க கூடாது.., நீ  விட்டுக்கொடுத்து போகனும் என்று சொல்லிக் கொடுத்தனர். மதி அம்மா அனைவரும் பேசிக் கொண்டிருக்கும் போது அமைதியாகத் தான் இருந்தார்.

          அனைவரும் போன பின்பு அவர் கிளம்பும் முன் மதியை தனியே அழைத்து “இனியாவின் குணம் உனக்கு நன்றாக தெரியும் இருந்தாலும்., எதையும் கண்டு கொள்ளாதே மற்றவர்கள் அனைவரும் உன்னை பார்த்து பார்த்து கவனிக்கும் போது ஒரு சிறு விஷயத்தை  நீ பெரிதாக ஆகக்கூடாது., எனவே எதையும் கண்டு கொள்ளாமல் செல்ல கற்றுக்கொள்., என் பொண்ணு நான் நல்லபடியாக வளர்த்து இருக்கேன்னு நம்புறேன், எந்த சூழ்நிலையிலும்  என் பொண்ணு எல்லா விஷயத்தையும் சரியா இருப்பா ன்னு நம்புறேன்., இப்போ உள்ள பிள்ளைகளுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை புரிஞ்சு நடந்துக்கோ அவ்வளவு தான் சொல்லுவேன்”…என்றார்.

           தெரிந்த இடம் என்பதால் யாரும் அவளுக்கு துணையாக இருக்கவில்லை. அன்று சடங்கு  என்ற பேச்சு மட்டும் ஓடிக் கொண்டிருந்தது.,

                இவள் பின்னாலேயே சுற்றிக் கொண்டிருந்தாள் அம்மு., அவளை  தூக்கிக்கொண்டு “அக்கா ப்ளீஸ் இதெல்லாம் வேண்டாம் சொல்லுங்களேன்” என்று சொல்லவும்.,

   கலையோ “அதெல்லாம் ஒன்னும் இல்ல.இப்பதான் ரெண்டு பேரும் பேசி பழகுறீங்க, ரெண்டு பேரும் இதுவரைக்கும் ஒரு தடவை கூட நல்ல பேசிக்க முடியலை இல்ல.., கல்யாணம் மேடையிலேயே ரெண்டு பேரும் ஏனோ தானோன்னு பேசின மாதிரி இருந்துச்சு..முதல்ல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க வேண்டாமா” என்று சொன்னாள்.

        அவளுக்கும் மதியம் மண மேடையில் வைத்து அவன் சொன்னது ஞாபகம் வந்தது வேலையெல்லாம் முடிச்சுட்டு வா என்று சொன்னது., ஏதாவது கேட்டா எப்படி பதில் சொல்ல இதுவரைக்கும் ஏடாகூடமா பேசி தான் பழக்கம், எதிர்த்து பேசி தான் பழக்கம், எப்படி அமைதியா பேசமுடியும் என்று எண்ணிக் கொண்டே கலையோடு இருந்தாள்.

          அதே சமயம் சூர்யாவிடம் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த முகிலனுக்கு அது போன்ற அறிவுரையே கிடைத்தது.. “இதுவரைக்கு எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் சண்டை தான் போட்டு இருக்கீங்க., இனி அப்படி இருக்காதீங்க ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுத்து போகணும், கண்டிப்பா மதி அட்ஜஸ்ட் பண்ணிக்குவா., அதுக்காக  நீ ரொம்ப வம்பு பண்ற மாதிரி பேசி வச்சிராத பழக்க தோஷத்தில்., என்ன உனக்கு அவள பார்த்தா அப்படித்தான் பேச வரும் ன்னு., எனக்கும் தெரியும்” என்று சொன்னான்.

                முகிலன் சிரித்துக்கொண்டே “அப்படியெல்லாம் இல்லை, இனி அப்படி பேச மாட்டேன்”என்று சொல்லிக் கொண்டிருந்தான்.,

             “சரிடா இவ்வளவு நாள் எப்படியோ இனிமேல் உனக்குன்னு ஒரு குடும்பம் ஆயிடுச்சு., இனிமேல் நீ தான் பத்திரமா பாத்துக்கணும்., எல்லாத்துக்கும் பொறுப்பு நீ தான்” என்று சொல்லவும்,

         “கண்டிப்பா இருப்பேன்” என்று பேசிக் கொண்டிருந்தான்.

           அதே நேரம்   அனைவரும் அன்று இரவு உணவு எடுத்துக் கொண்டிருக்கும் போதே இனியா விற்கு உடல்நலம் சரியில்லை என்று வசந்தியிடம் வந்து நின்றாள்….

    சரியா போய்டும் என்று சொல்லி வீட்டில் இருந்த பெரியவர்கள் கைமருந்து போல் ஏதோ கொடுக்க அவள் குடித்து விட்டதாக சொல்லிவிட்டாள்.

          அதன்பிறகும் சற்று நேரம் கழித்து வயிறு சரியில்லை, எனக்கு வயிற்றுப்போக்கு உள்ளது என்று சொல்லிக் கொண்டு வந்து நின்ற அவள் சோர்ந்து தெரியவும் டாக்டரிடம் போகலாம் என்று சூர்யா அழைக்க, அதேநேரம் முகிலனும் கிளம்பினான்.

          “நீ வேண்டாம், இப்ப எதுக்கு” என்று சொன்னதற்கு., “அதெல்லாம் பிறகு பாத்துக்கலாம், நானும் டாக்டரிடம் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டே கிளம்பி சென்றான்.

         ஏனெனில் அவள் சற்று நேரத்தில் எல்லாம் சோர்வாக ஆகியிருந்தாள். அப்போது தான் அந்த பாட்டி மருந்து கொடுத்தவர் சொன்னார். “அவள் கை மருந்து வைத்துக் கொடுத்ததை குடிக்கவில்லை.அடுப்படியில் கொண்டு போய் டம்ளரை மூடி வைத்திருக்கிறாள் என்று சொல்லி சத்தம் போட்டு.டாக்டர் பாத்துட்டு வாங்க”என்று சொல்லி அனுப்பி வைத்தார்.. அவர்கள் மருத்துவரிடம் சென்றபோது அவள் இன்னும் சோர்வாகவும் டாக்டர் நீர்சத்து குறைந்து விட்டது என்று ட்ரிப் ஏற்ற.அங்கேயே அனைவரும் இருந்துவிட்டனர்.

            வசந்தி வீட்டிற்குப் போன் செய்து சொல்லிவிட்டார்., “வருவதற்கு சற்று நேரமாகும் இரண்டு பாட்டில் ஏற்ற வேண்டும் என்று சொன்னார்கள். ஆனால் அவளுக்கு இன்னும் வயிற்றுப்போக்கு  நின்றபாடில்லை., எனவே சரியான பிறகு வீட்டிற்கு வருகிறோம்” என்று சொன்னார்.

     இனியாவின் குழந்தையை இனியாவின் கணவர் வீட்டிற்கு கூட்டிக்கொண்டு போய் விட்டார்கள். இனியாவின் கணவரும் அங்கே தான் இருந்தார்.

      அதே நேரம் மதியும், கலையும்  வீட்டில் இருக்க, வீட்டில்  தூரத்து ஊரிலிருந்து வந்த நெருங்கிய சொந்தங்கள் மட்டும் ஒருசிலர் அவர்கள் வீட்டில் தங்கியிருந்தனர்.

      இரவு மணி பத்தை தாண்டியும் அவர்கள் வராததால், கலை போன் செய்யும்போது “இன்னும் ட்ரிப் ஏறிக் கொண்டிருப்பதாகவும், வருவதற்கு எப்படியும் தாமதமாகும் என்றும், அது மட்டுமல்லாமல் ஏற்கனவே இனியா ஏதாவது குறை சொல்ல வாய்ப்பு கிடைக்காதா என்று பார்ப்பாள்இன்று அவளுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதற்கு மதி வீட்டிற்கு வந்த நேரம் தான், தனக்கு இப்படி உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் இருக்கிறேன் என்று புலம்பிக் கொண்டிருக்கிறாள், அதனால் நாளை காலை வந்து அவள் எது பேசினாலும் மதியை கண்டு கொள்ளாமலிருக்க சொல்.., இவள் இப்படி எல்லாம் பேசுவாள் என்று எதிர் பார்க்கவில்லை” என்று  சூர்யா சொல்லிக் கொண்டிருந்தான்.

           பதிலுக்கு இங்கிருந்து கலையோ “டாக்டர் என்ன சொன்னாங்க”என்று கேட்கவும்.,

  ” ஏதோ ஃபுட் பாய்சன் என்று சொல்றாங்க., அதனால கொஞ்சம் பார்த்துட்டு தான் வீட்டுக்கு வரனும்” என்று சொல்லவும்.

சரி நீங்க பாத்துக்கோங்க…, நான் இங்க பார்த்துக்கிறேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்…

      மதியிடம் எப்படி சொல்வது என்று தயங்கியவள். பின்பு மதியே “சொல்லுங்க பரவால்ல என்ன இனியா ஏதாவது சொன்னாங்களா” என்று கேட்கவும்.,

       ஆமாம் என்று சொல்லிவிட்டு சூர்யா சொன்ன அனைத்தையும் சொல்லும் போது., ” தெரியும் கண்டிப்பாக இப்படித்தான் பேச்சு வரும் என்று தெரிந்தது தானே” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

      அதே சமயம்  கலையோ நீ போய் தூங்கு என்று சொல்லி மதியை  சென்று தூங்க சொன்னாள்.

       மதியோ சரி “நான் பார்த்துக் கொள்கிறேன்., நீங்க எப்போ தூங்குவீங்க” என்று கேட்கவும்.,

      “கொஞ்சம் வேலை இருக்கிறது முடித்து விட்டு வருகிறேன்” என்று சொன்னாள்.,

        ” நான் ஏதும் உதவி செய்யவா” என்று கேட்டாள்.,

       ” நான் பார்த்துக் கொள்கிறேன்., நீ போய் தூங்கு என்றவள், முகிலன் ரூமுக்கு போய் தூங்குறீயா என்றதற்கு., இல்ல வேண்டாம்” என்றவளை அவர்கள் அறையிலேயே தங்க வைத்துவிட்டு அதன் பிறகு ஹாலில் வந்து அமர்ந்து யோசித்து கொண்டே இருந்தாள்.