Advertisement

அத்தியாயம் 9

 

கைத்தலம் பற்ற

கனவு காணவில்லை

 

கைகோர்க்கும் விரல்களுக்கும்

இது முதல் ஸ்பரிசம்

 

உன் பாதச் சுவடை

பின்பற்றும் என் பாதத்திற்கும்

இது புது அனுபவம்

 

இறுக்கிப் பிடித்த

விரல்களுக்கிடையே 

இடையே இறுகிப் போகுமா

மனம் இல்லை

விலகிப்போகுமா மனம்…,

 

வாழ்க்கை என்ன வைத்திருக்கிறது

என்று தெரியாமல்தான்

கடைசி வரை

துணை வருவாய் என்று

அக்கினி சாட்சியாய்

கரம் பற்றிருக்கிறேன்.,

 

        அக்னி சாட்சியாய் வேத விற்பன்னர்கள் மந்திரம் ஓத அவனருகில் அமர்ந்த போது ஏனோ இதயம் துடிக்கும் ஓசை வெளியே கேட்குமோ என்னும் அளவிற்கு அவளது இதயத்துடிப்பு இருந்தது.

     அந்தப் படபடப்பு  புதியது அவன் அருகில் அமரும் அந்த தருணம் அவளுக்கு ஒரு வித படபடப்பை தந்தது..ஏனோ குனிந்த தலை அவள் நிமிர வில்லை., சூர்யாவும் கலையும் அவள் அருகில் தான் இருந்தார்கள்… கலை தான் அருகில் வந்து அவளது பயத்தை புரிந்தவளாக ஒன்னும் இல்லை., என்று சொல்லி கைபிடித்து ஆறுதல் அளித்தாள்.

     பெரியவர்கள் சொல்ல சொல்ல செய்யப்பட்ட ஒவ்வொரு சம்பிரதாயத்திலும்சடங்கிலும் அவனது அருகாமை அவளுக்கு படபடப்பை அள்ளி அள்ளி பரிசளித்தது.

       சற்று நேரத்திற்கெல்லாம் கூடியிருந்த பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கப்பட்ட மாங்கல்யம் அவன் கைக்கு வந்தபோது அவளறியாமல் நிமிர்ந்து பார்த்தாள். கெட்டி மேளம் முழங்க பெரியவர்களும் உறவுகளும் சுற்றத்தாரும் அட்சதை தூவ அவள் கழுத்தில் மூன்று முடிச்சு அவனே போட்டான்.  கடைசிவரை கை விடமாட்டேன் இவள் என்  சரி பாதியாய்  என் வாழ்க்கையில் அடி எடுத்து வைக்கிறாள் என்பதை அக்னிசாட்சியாக ஏற்றுக்கொண்டு, அவள் கைப்பற்றி வலம் வந்து  காலில் மெட்டி போடும் போதும்அவள் கை பிடிக்கும் போதும் அவளுடைய நடுக்கத்தை உணர்ந்து தான் இருந்தான்.

         பெரியவர்கள் சொல்படி அவளுக்கு நெற்றியில் திலகம் இடும் போது அவள் தோளை  சுற்றி கையை போட்டுஅவள் நெற்றியில் குங்குமம் வைக்கும் போது தான் அவள் முகத்தை அருகே பார்த்தான்.

           அப்போது நிஜமாகவே தோன்றியது, ஏற்கனவே அழகானவள் இன்னும் கல்யாணத்திற்கான உடையிலும்அலங்காரத்திலும், இன்னும் தேவதையாகவே ஜொலித்தாள். அந்நேரம் இனியா மணமேடைக்கு நேர் எதிர் போல இருந்த வரிசையில்தான் அமர்ந்திருந்தாள். அதை அவன் மந்திரம் சொல்லும் போதே கவனித்திருந்தான்., அதனால் சடங்கு சம்பிரதாயங்கள் செய்யும்போது இனியாவை அவன் நிமிர்ந்து பார்க்கவில்லை..,

       ஏனென்றால் அவள் முகத்தில் தெரியும் சில பாவங்களை அவனால் இப்போது புரிந்துகொள்ள முடிந்தது. இதை இப்படியே விடுவது சரி கிடையாது என்பதை இந்த திருமணம் பேசி முடித்த பிறகுதான் சில விஷயங்களில் உணர்ந்துகொள்ள தொடங்கியிருந்தான்…

        சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்தபின்னர் மணமக்களை ஆசிர்வதிக்க வந்திருந்த சொந்தபந்தங்கள் ஒவ்வொருவராக வந்து ஆசிர்வாதம் செய்தனர். அப்போது பெண் வீட்டு புறமிருந்து பேசிய அந்தப் பெரிய மனிதர் வந்திருந்தார்… அவரும் வந்து மதிக்கும் கேட்குமாறு பேசினார்.

        மணமக்களை பக்கத்தில் இருந்தவர்களுக்கும் கேட்கும்படி தான் இருந்தது அவரது பேச்சு., “சரிப்பா சொன்னபடி உங்க வீட்ல எல்லாம் அப்படியே கல்யாணம் முடிஞ்சுருச்சு., இனியா பிள்ளைக்கு இஷ்டமில்லையாம், இந்த கல்யாணத்துல” என்று கேட்கும்போது சுற்றி இருந்தவர்களுக்கு சற்று பயமாகத்தான் இருந்தது…

        ஏதாவது பிரச்சினை வந்து விடுமோ திருமணத்தன்று என்றுஏனென்றால் திருமணம் என்றால் எப்பொழுதும் யாராவது சொந்தம் என்ற பெயரில் பிரச்சினையை உருவாக்குபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.., இதை எப்படி எடுத்துக் கொள்வது என்று யோசிக்கும் போதே சூர்யா பேசத் தொடங்கும் முன்னே முகிலன் பேசத்தொடங்கினான்.

       “என்ன தாத்தா நீங்க…, இது கூட தெரியாதா உங்களுக்கு., எனக்கு புடிச்சா போதாதா., இனியா க்கு எதுக்கு பிடிக்கணும்., இனியா க்கு அவ மாப்பிள்ளையை தான் பிடிக்கணும்., என் பொண்டாட்டிய பிடிக்கனும் என்று அவசியமே இல்லையே”., என்று கேட்டான்.

       தாத்தாவும் மேற்கொண்டு பேச தொடங்கினார். “உன் தங்கச்சிக்கு பிடிக்கலைன்னா நாத்தனார் பிரச்சனை வந்துற கூடாதே” என்றார்.

          “எந்த வீட்டில் தான் நாத்தனார் மாமியார் பிரச்சனை எல்லாம் இல்லாம இருக்கு., நீங்களும் தான் ஒரு ரெண்டு பொண்ணு கட்டி கொடுத்து இருக்கீங்க., உங்க வீட்டுல கல்யாணம் எல்லாருடைய சம்மதத்தோடு தான் நடந்துச்சு., உங்க வீட்டில என்ன உங்க மக என் நாத்தனார் பிரச்சனை இல்லாம இருக்கா., இல்ல மாமியார் பிரச்சனை இல்லாம இருக்கா” …, என்று அவருடைய குடும்ப கதை தெரிந்தவனாக கேட்க…,

        பெரியவர் அதற்கு மேல் பேச முடியாமல் “அது சரிதான் என்றபடி சமாளித்துவிட்டு எப்படியோ நல்லா இருந்தா சரி தான்” என்ற பேச்சோடு இறங்கி சென்றார்.

      அப்போது தான் அவனுக்கு தோன்றியது, இன்னும் இனியா வின் நடவடிக்கை கொண்டு எத்தனை பேருக்கு பதில் சொல்ல வேண்டியது வருமோ..என்று ஏனென்றால் வந்திருந்த சொந்த பந்தங்கள் மட்டுமன்றி மதியின் சொந்தங்களுக்கும் தெரியும்.அவளது முக திருப்பல்கள்  இருந்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை..,

     பெண்வீட்டு உறவினர்களின் பக்கம் பேச்சு வேறு மாதிரி இருந்தது..,  “மாப்பிள்ளைக்கு பிடித்தால் போதாதா., அவ என்ன இங்கேயா இருக்கப் போறா…, ஏதோ நல்லது கெட்டதுக்கு இந்த ஊருக்கு வந்து போகப்போறா., மற்றபடி எந்த ஊர்ல வேலை பார்க்கிறாறோ அந்த ஊர்ல தானே இருக்க போறா., அப்புறம் எதுக்கு அந்த பொண்ணுக்கு பிடிக்கல ன்னு பேச்சு”..அவங்கவங்க நல்லா இருந்தா சரிதான் என்ற பேச்சு பரவ அதே பேச்சு இவர்கள் வீட்டு பக்கமும் வரத் தொடங்கியது.

       இனியாவிற்கும் மேற்கொண்டு எதுவும் பேச முடியவில்லை.

      அதேசமயம்  இனியவை பெண் எடுத்த அத்தை வீட்டு புறம் இருந்து வந்த சொந்தத்தில் உள்ள அத்தை ஒருவர் “ஏம்பா இனிய மூஞ்சி திருப்பிட்டு இருக்காளே.என்று கேட்டார்.

         “அத்த., அவ மூஞ்சி திருப்பி இருந்தா இருந்துட்டு போறா., அவளுக்கு சில விஷயங்கள கோபம்., அதெல்லாம் பாத்தா முடியுமா, ஆமா நீங்க என்ன இப்படி பேசுறீங்க, சொல்லி அனுப்பனாளா., நீங்க இப்ப வரைக்கும் கோபம் வந்தா எல்லார்ட்டையும் தான் மூஞ்சி காட்டுவீங்க., நாங்க இதுவரைக்கும் ஏதாவது உங்க கிட்ட கேட்டோமா என்ன”…என்று கேட்டுவிட்டான்.

         அவரோ., “ஏம்பா உம் பொண்டாட்டி முன்னாடி நான் வீட்டுல கோபப்படுற கதைய சொல்லனுமா என்ன” என்று சிரித்தபடியே சொல்லி விட்டு.,  “நல்லாதான் இருக்கீங்க ரெண்டு பேரும்., “ஆனா ரெண்டு பேரும் எப்பவும் சண்டை போடுவீங்களாமே” என்று கேட்டார்.

        “சின்ன பிள்ளை ல சண்டை போட்டா., இப்பவும் சண்டை போடனும் என்று கட்டாயமா அத்த”என்று கேட்டான்.

        அது மட்டும் இல்லாமல், “ஏன் அத்த நீங்க கூட அடிக்கடி மாமா கூட சண்டை போட்டுட்டு சித்தப்பா வீட்டுக்கு பெட்டிய தூக்கிட்டு போறீங்களாம், அதுவும் மூன்னு பிள்ள பொறந்த பிறகு கூட ன்னு பாட்டி சொன்னாங்க”, என்று சொன்னான்.

        யப்பாடி… நான் தெரியா தனமா கேட்டுட்டேன் பா.., ஆளவிடு என்றார்.

       அவள் தோளில் கைபோட்டு தன்னோடு சேர்த்து பிடித்துக் கொண்டான்.,அதை பார்த்த அத்தை தான் வெட்கம் வந்து சிரித்துக் கொண்டே கிளம்பி விட்டார்.

     போகும் போது., “மருமவனே., உன் பொண்டாட்டி க்காக நல்ல பேசுற”.. என்றார்.

     அப்போது தான் மதி  நல்லா சமாளிக்கிறார் பா., என்று    நினைத்து கொண்டாள்…

      அவள் தோளில் கையை போட்டு பிடித்து இருந்தவன், அப்படியே தோளில் கையை வைத்திருக்கவும் மெதுவாக நகர்ந்து  கொண்டு “கையை எடுங்க” என்று சொல்லும் போது.,

      “தோள் மேல தானே கை போட்டு இருக்கேன்…, ஏதோ இடுப்புல கைப்போட்ட மாதிரி., ஏன் இப்படி டென்ஷன் ஆகுற”., என்றான்.

         அவளோ ஆச்சரியமாக அவனை பார்க்கவும்.

       பேசுவது போல அருகில் குனிந்து., “இப்பதிக்கு பேச மட்டும் தானே முடியும்., நீ உன்னோட ஒர்க் எல்லாம் முடிச்சுட்டு என்னோட வர்ற வரைக்கும் இப்படித்தான்., சும்மா தான் எல்லாம்., இவ்வளவு டென்ஷனாகாத கொஞ்சம் ரிலாக்ஸா இரு”., என்றான்.

    ம்ம்ம்… என்ற சத்தம் மட்டுமே வந்தது.

        “இது தான் நம்மளோட வாழ்க்கை நீயும் நானும் எந்த சூழ்நிலையும் விலக முடியாது, விலகவும் கூடாது, வாழ்க்கையில் ஜெயிக்க ஜெயிக்கிறோமா., இல்ல தோற்று போறோமா ங்கிறது, இரண்டாவது விஷயம், ஆனால் ஜெயிக்க முயற்சி பண்ணுவோம். முயற்சி நம்ம கையில தான் இருக்கு” என்று சொல்லவும்., முதல் முறையாக அவனை நிமிர்ந்து பார்த்து நேருக்கு நேராக கண்ணை பார்க்க., அவள் பார்த்த உடன் லேசாக யாரும் கவனிக்கா வண்ணம்  ஒற்றை கண்சிமிட்டினான். முகம் சிவக்க குனிந்துகொண்டாள்.

Advertisement