Advertisement

அத்தியாயம் 8

மாய பிம்பங்கள்

மறைந்து போகுமா..,

இனிப்போ கசப்போ

உண்மை சொல்லும்

கண்ணாடியாக

வாழ்க்கை..,

நிஜ பிம்பங்களை

தேடும் நீயும் நானும்…

        திருமணத்திற்கு நாள் குறிப்பதற்கு எல்லாம் நடந்து கொண்டிருப்பதாக அவ்வப்போது கீதாவும் சூர்யாவும் போன் செய்து அவளுக்கு தகவல் தெரிவித்துக் கொண்டே இருப்பார்கள்… அவளுக்கு வசப்படும் நாட்கள் மற்றவற்றைக் கீதா விசாரிக்க அவளுக்கு தேவையானவை எவை என வீட்டினர் விசாரிக்க இப்படி ஆளுக்கு ஒரு புறம் விசாரித்துக் கொண்டு இருந்தாலும்., போன் செய்வான் என சொல்லிய அவன் மட்டும் ஒருமுறை கூட அவளிடம் பேசவில்லை.,  நேரம் கிடைக்கும்போது போனில் அழைக்கிறேன் என்று மெசேஜ் மட்டும் அவனிடமிருந்து வந்தது. இதுதான்  என்னுடைய போன் நம்பர் குறித்துக் கொள்., பர்சனல் நம்பர், ஆஃபீஸ் நம்பர், என இரண்டையும் அனுப்பியிருந்தான். பெரும்பாலும் பர்சனல் நம்பரில் அழைக்கவும், பர்சனல் நம்பர் கிடைக்காவிட்டால் மட்டும் ஆஃபீஸ் நம்பர் என்ற கட்டளை யோடு அவளுக்கு மெசேஜ் வந்திருந்தது.

           ஆனால் ஒருமுறை கூட அவனே அழைக்காமல் தான் எப்படி அழைப்பது என்று அவளும் மெசேஜ் கிடைத்தற்கான தகவலை மட்டும் அனுப்பினாள். பதிலுக்கு இவள் பேசவும் இல்லை, அவன் பேசவும் இல்லை, இருவரும் அந்த ஒருமுறை தகவல் தெரிவித்துக் கொண்டதோடு சரி அவ்வளவுதான்…

              திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னதாக வந்து சேர்வதாக வீட்டிற்கு தகவல் தெரிவித்தாள். அதன் பிறகு ஐந்து நாள் மட்டுமே அங்கு இருப்பதாகவும் பின்பு கிளம்பி அவள் வேலை பார்க்கும் இடத்திற்கு வந்து விடுவதாகவும் ஏற்கனவே எல்லாரிடமும் சொல்லி இருந்ததால் அதைப் பற்றிய பேச்சுக்கள் அவ்வளவாக இல்லை.

        அவன் அழைத்து பேசவில்லை என்பது   சூர்யாவிற்கும் தெரியும்., ஒருமுறை சூர்யா இதற்காக முகிலனிடம் அழைத்து பேசும்போது,

    “ஏன்டா., ஒரு போன் கூட பண்ண மாட்டியா போன் பண்ணி பேசுறேன்னு சொன்னேன்ல, போன் பண்ணி பேசி இருக்க வேண்டியதுதானே” என்று கேட்டான்…

       “இல்ல பேசுவதற்கு ஒரே யோசனையா இருக்கு., நான் பேசினேன் அப்படின்னா அவளோட பதில் என்னவாக இருக்குமோ அப்படிங்கிற பயம் ஒருபக்கம்., இன்னொரு பக்கம் கண்டிப்பா பேசணுமா அப்படிங்கற யோசனை இருக்கு…, ஒருவேளை அவ புடிக்கல அப்படி ன்னு, ஒரு வார்த்தை அவ வாயிலிருந்து கேட்டேனா., அதுக்கப்புறம் கண்டிப்பா என்னோட மைண்ட் செட் எப்படி மாறும் தெரியல…, அந்த பயத்தில் தான் அவளுக்கு கூப்பிடல” என்று சொன்னான்.

              இதுவும் கீதாவின் மூலம் மதிக்கு தெரியப்படுத்த -ப்பட்டது. அதனால் அவளும் கண்டு கொள்ளவில்லை, அவளுக்கும் அவனிடம் பேசுவதற்கு பயமே….

        திருமண பந்தத்தில் இணைய போகும் இருவருக்கும் ஏதோ மனதில்  ஒருவித நெருடல் இருந்து கொண்டே இருந்தது. அவனுக்கோ தங்கைக்காக அவளிடம் பேசிய தருணங்கள் மீண்டும் மீண்டும் நினைவில் வந்து சென்றது., ஒரு முறை கூட அவளிடம் சாதாரணமாக பேசியது கிடையாது.., என்ற எண்ணமே அவனுக்குள் என்னவோ ஒரு வித்தியாசமான மன உணர்வை அளித்துக்கொண்டிருந்தது…

     அவளுக்கோ அதே பயம் தான் இதுவரை அவன் ஒருமுறை கூட தன்னிடம் சாதாரணமாக பேசியது கிடையாது. திருமணத்திற்கு பிறகு எப்படி இருக்கும் என்ற பயம் இருந்தது., இந்த நெருடல் திருமணத்திற்கு பிறகு சரியாகுமா என்ற எண்ணமும் இருவரிடமும் இருந்து கொண்டேதான் இருந்தது..,

       திருமணத்திற்கு பத்திரிக்கை அடித்து அனைவருக்கும் கொடுக்க ஆரம்பித்த பிறகு தான் அவளிடம் பேச வேண்டும், என்ற முடிவோடு அன்று அழைத்தான்.

          அப்போதுதான் கேன்டீன் ல் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவளுக்கு,  போனில் அழைப்பு நம்பரை பார்த்த -வுடன் சிரிப்புதான் வந்தது. ஏன்னெனில் அவள் அவன் நம்பரை  செல்லப்பெயரோ அல்லது ஃப்யான்சி என்றோ பதியவில்லை. ஜீஃராபி  என்று பதிந்து வைத்திருந்தாள். வெளியே இருந்ததால் முகத்தை சாதாரணமாக வைத்துக்கொண்டாள்…

        எதற்கு இப்போது இந்த போன் என்று மனதில் தோன்றிய எண்ணத்தோடு எடுத்து காதில் வைத்து ஹலோ என்றாள்…,

         அந்தப்பக்கம்  எந்த சத்தமும் இல்லை என்றவுடன் மீண்டும் போனை எடுத்து கட் ஆகி விட்டதா என்று பார்த்து விட்டு மறுபடியும் காதில் வைத்து ஹலோ என்றாள்..,

            கேட்குது…  என்று அந்தபக்கம் ஒரு பெருமூச்சோடு ஒற்றை வார்த்தை பதில் வந்தது.,  பின்பு அவளிடம் பேசவேண்டும் நேரம் இருக்குமா என்று அவன் கேட்க அவளும் சரி என்றாள்…

            பின்பு நட்பு குழுவிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு மறுபடியும் கேன்டீன் க்குள் சென்று அமர்ந்து அவள் பேசத்தொடங்கினாள்…, சொல்லுங்க என்றாள்…

        கோபமா என்று கேட்டான்…

      இல்லை என்றால் ஒற்றை வார்த்தை பதிலாக வந்தது..,

       என்ன ஆச்சு..,  ஒரு வார்த்தை தான் பதில் வருது என்றான்.

       “கோபப்படுற அளவுக்கு இப்ப எதுவும் நடக்கல ன்னு நினைக்கிறேன்” என்று அவள் பதில் சொன்னாள்…,

          “இல்லை நான் பேசாம இருந்தேன் இல்ல, அதுக்கு கேட்கிறேன்” என்று சொன்னான்…

        “அப்படி எல்லாம் இல்லை” என்று மறுபடியும் ஒற்றை வார்த்தையில் பதில் கொடுத்தாள்.

          “நிஜமா கோபம் இல்லை யா” என்றான் மறுபடியும்.,

          “உங்க வேலைக்கு டைமிங் எல்லாம் கிடையாது ன்னு சூர்யா ண்ணா சொன்னாங்க” என்றாள்…

          “ம்ம்ம்… அது உண்மை தான்., ஆனா எனக்கு ஒரு கில்டி பீலிங்… உன் ட்ட ஒரு தடவை கூட சாதாரண மா பேசுனது இல்ல” …, என்றான்…

         “ம்ம்ம்… புரியுது” என்றாள்….

           “அவனோ சொல்லு என்று சொல்லவும்” …, “என்ன சொல்லணும்” என்றாள்.

            “கல்யாணத்துக்கு மனப்பூர்வமாக சம்மதிச்சியா., இல்ல உங்க அம்மா அப்பா சூர்யா, கீதா எங்க அம்மா அப்பா, தாத்தா ன்னு இத்தனை பேர் சொன்னதால சம்மதிச்சியா”., என்று அவன் மனதில் ஏற்கனவே நெருடிக் கொண்டிருந்த கேள்வியை கேட்டான்.,

அவளும் பதிலுக்கு “எப்படி சொல்றதுன்னு தெரியல..,  எங்க அப்பாட்ட நான் சொல்லி இருந்தது இதுதான்., நீங்க யாரைச் சொன்னாலும், நான் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொல்லி இருந்தேன். அது தான் இப்பவும் சொல்றேன்”..,என்றாள்..

        “உனக்கு புடிக்கல அப்படி தானே” என்று கேட்டான்…

        “நான் எப்ப அப்படி சொன்னேன்” என்றாள்.

       “நீயாவது என் போட்டோ பார்த்திருக்க நான் உன்ன ப்ளஸ் டூ ல பார்த்தது தான்…  அதுக்கப்புறம் இப்ப வரைக்கும் நான் பாக்கல தெரியுமா” என்றான்.

          இவளுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் அமைதியாக இருக்கவும்.., “என்ன பதிலே இல்லை” என்று கேட்டான்.

         “நானும் உங்களை இப்ப மெயில் ல வந்த போட்டோ ல தான் பார்த்தேன்”…. என்றாள்.

       “புடிச்சிருக்கா”…

       “இதுக்கு பதில் முன்னாடியே சொல்லிட்டேன்”… என்றாள்.

        “நீ தெளிவா சொல்லல”…என்றான்.

         “ம்ம்…  சொல்லிட்டேன்”, என்றாள்..

       “சத்தமே இல்லையே”…

      “உங்களுக்கு தெரிஞ்சிட்டே கேட்க கூடாது”.. என்றாள்.

       அவனோ., சின்ன சிரிப்போடு  “சரி வேற ஏதாவது என் ட்ட கேட்கனுமா”…,

       “எனக்கு உடனே வேலையை விட முடியாது” என்றாள் மெதுவான குரலில்…

    “தெரியும்., சூர்யா சொன்னான்”. என்றான்.

     “ஒன் வீக் தான் லீவு”…

      “நானும் தான்”. வேற எதுவும் கேட்கனுமா..,

     “இல்லை கேட்பதற்கு ஒன்னும் இல்லை” என்றாள்.

“சரி…, நான் இப்போ உன்கிட்ட ஒன்னு கேட்கணும். இதை நீ ரெக்வஸ்ட் அப்படின்னு நினைச்சாலும் ஓகே தான்..,  இல்ல ஆர்டர் அப்படின்னு எடுத்துக்கிட்டாலும் ஓகே தான்..,  நான் சொல்றதை நீ கண்டிப்பா எனக்காக செஞ்சுதான் ஆகணும்” என்று சொன்னான்.

         மனதிற்குள் தாளங்கள் தப்ப “சரி சொல்லுங்க” என்றாள்…

           சிறிது நேர அமைதிக்குப் பின் அவன் சொன்னான்.., என்ன தப்பா எடுத்துக்காத இதை சொல்லாமல் இருக்க முடியாது.., என்றவன் பேச்சுவார்த்தை எதையும் அவளிடம் மறைக்க வில்லை…  அனைத்தையும் சொல்லி முடித்தவன்.,

          “எனக்கும் புரியுது மதி, இந்த மாதிரி எந்த கல்யாணத்திலும் கன்டிஸன் போட்டு இருக்க மாட்டாங்க… பட் ப்ளீஸ் புரிஞ்சிக்குவ ன்னு நம்புறேன்” …,

         “ம்ம்ம்… புரியுது., நீங்க என்னமோ பண்ணிக்கோங்க., நான் யார் விஷயத்திலும் தலையிட மாட்டேன்… நீங்க நம்பலாம்”.. என்றாள்

Advertisement