Advertisement

அவளோ “பரவால்ல” என்று சொல்லி அவன் தோளில் சாய்ந்து கொள்ளும் போது அவன் சொன்னான்.. “இந்த வலியும் வேதனையும் என்னென்ன அவனுக்கும் தெரியனும் இல்ல., அதுக்கு தான் இன்னைக்கு அவனுக்கு ஸ்பெஷல் கவனிப்பு கொடுத்துட்டு வந்தேன்.., யாருக்கும் பாதிப்பு வராத அளவுக்கு.,அவன் வேலையை அவன் பாத்துட்டு போயிட்டானா பிரச்சினையே கிடையாது.., பணம் சம்பாதிக்கனும் என்கிற வெறி தான் இந்த மாதிரி பண்றது.., இது  எத்தனை பேர் வாழ்க்கையை வீணாக்கிடுது பார்த்தல்ல.., சத்தியமா சொல்றேன் உனக்கு நினைவு வர அந்த நிமிஷம் வரைக்கும் நான் உயிரைக் கையில புடிச்சிகிட்டு இருப்பாங்கன்னு சொல்லுவாங்க., இல்ல அதோட வலி என்னனு அன்னைக்கு புரிஞ்சுகிட்டேன்.., அப்போ தோணிச்சு அது எப்படி எட்டு வருஷத்துல இப்படி மாறுனேன் ன்னு.., ஆனாலும் சொல்றேன் நீ இல்லாத வாழ்க்கை ல எனக்கு எதுவுமே கிடையாது.., நீ.., நீ.., மட்டும் தான் என்னோட வாழ்க்கை.., நீ இருக்கிற வரைக்கும் கண்டிப்பா நான் இருப்பேன்.., அதேமாதிரி கண்டிப்பா நான் இருக்கிற வரைக்கும் தான் உன்னையும் இருக்க விடுவேன்.., அந்த வலியும் வேதனையும் என்னென்ன ன்னு அந்த நிமிஷம் புரிஞ்சுகிட்டேன்.., வாழ்க்கை துணை இல்லாமல் வாழ்வது என்பது இருப்பதிலேயே கொடுமையான விஷயம்.., சும்மாவா சொன்னாங்க வாழ்க்கைத்துணை இல்லைன்னா வாழ்க்கையில எல்லாமே முடிஞ்சு போச்சுன்னு…, வெளியே உள்ளவங்க என்ன வேண்டுமானாலும் நினைக்கலாம்.., இது ஆத்மார்த்தமான சொந்தம்.., அது யாருக்குமே புரியாது”.. என்று சொல்லி அவளை தன் தோளோடு சேர்த்து அணைத்து., அவள் தலையில் கன்னம் வைத்து சாய்ந்திருந்தான்…,

         இப்பொழுதெல்லாம் பள்ளிக்கு குழந்தைகளைவிட அழைத்துவர என முகிலனின் அலுவலக டிரைவரோடு முகிலன் சென்று வந்தான்.., அலுவலக மேலதிகாரிகளும் சரி., வீட்டில் உள்ளவர்களும் சரி., அவன் அறியாமல் கண்டிப்பாக அவனுக்குள் ஒரு படபடப்பு இருக்கும் என்ற காரணத்தினால்., அலுவலக டிரைவரின் உதவியோடு பள்ளிக்கு செல்வதும்., வெளியே செல்வதும்., என்று சென்று வந்து கொண்டிருந்தான்.,

    அன்று பள்ளி முடிந்து பிள்ளைகள் வர., இவளை அவன் ஹாலில் கை தாங்கலாக அழைத்து வந்து அமர வைத்து இருந்தான்.., அப்போது பிள்ளைகளுக்கு உடையெல்லாம் மாற்றிவிட்டு இவள் செய்யும் அனைத்து வேலைகளையும் முகிலன் செய்து வைத்திருந்தான்., பிள்ளைகள் இருவருக்கும் பாட்டிமார் சாப்பிடுவதற்கும்., குடிப்பதற்கும், கொடுக்க.,  ரிஷியோ சும்மா இருக்காமல் “அம்மா நீ எப்பம்மா சமைக்க ஆரம்பிப்ப” என்று கேட்டான்..,

     “ஏன்டா என்ன ஆச்சு” என்று இவள் கேட்டுக் கொண்டிருக்கும்போதே ரிஷி சொன்னான்…, “இந்த பாட்டி ரெண்டு பேருக்குமே ரெட் சட்னி ஒழுங்காவே வைக்க தெரியலம்மா…, எப்ப பாரு காரமாக வைக்கிறாங்க…, நீ வைக்கிற ரெட் சட்னி தான் நல்லா இருக்கும்., அதே மாதிரி நீ செய்ற மொறுமொறு தோசை தான் சூப்பரா இருக்கும்.”, என்று ரிஷி சொல்லிக் கொண்டிருக்கும் போதே குட்டிப் பெண்ணும் ரக்ஷியும் “ஆமாம்மா நீ செய்ற மொறு மொறு தோசை வேணும்., இன்னைக்கே”., என்று சொல்லி கேட்டாள்.

        “ஏன்டா இப்படி சொல்லுற., ரெண்டு பாட்டியும் நல்லா தான் சமைப்பாங்க தெரியுமா., சூப்பரா சமைப்பாங்க., அப்பாட்ட கேளு அப்பாக்கு அவங்க அம்மா சமையல் தான் ரொம்ப சூப்பர் னு சொல்வாங்க…, நான் கேட்ட எங்கம்மா சமையல் சூப்பர் சொல்லுவேன்., அப்ப ரெண்டு பாட்டியும் நல்லா தானே சமைக்கிறாங்க” என்று பிள்ளைகளை வைத்துக்கொண்டு தங்கள் அம்மாகளையும் வைத்துக் கொண்டு பேசினாள்.

         ரிஷியும் “நானும் அது தான் சொல்றேன்., உனக்கு உங்க அம்மா சமையல் பிடிக்கும்.., அப்பாக்கு அவங்க அம்மா சமையல் பிடிக்கும்.., எனக்கு எங்க அம்மா சமையல் பிடிக்கும்” என்று சொல்ல அனைவருக்கும் அனைவருக்கும் சிரிப்புதான் வந்தது.., அவனுடைய பேச்சு சாதுர்யத்தை நினைத்து…,

      “இப்ப என்னடா.., உனக்கு உங்க அம்மா சமையல் வேணும் அவ்வளவு தானே”., என்று முகிலனின் அம்மா கேட்டார்.

      மதியின் அம்மாவோ “ஏன்டா., நான் சமைக்கிறது நல்லா இல்லங்க.., உங்க அம்மாவுக்கு நான் தான் சமையல் சொல்லி கொடுத்தேன்” என்று சொன்னார்.,

    “நீங்க சொல்லி கொடுத்த சமையல் எல்லாம் எங்க அம்மா செய்து இருக்க மாட்டாங்க., அம்மா தனியா கத்திட்டு வந்து இருக்காங்க” என்று சொன்னான்.

      வீட்டில் “அனைவரும் ஆமா டா.., அவ மட்டும் தனியா கத்துகிட்டு வந்தா., இவன் தான் போய் கிளாஸ் அனுப்பிட்டு வந்தான்.., பேசுவதை பாரு” என்று சொன்னார்கள்.

         முகிலன் சும்மா இருப்பதற்கு பதிலாக “டேய் ரெண்டு பாட்டியும் சமைக்க வேண்டாம். அப்பா தான் அம்மா க்கு சமையல் சொல்லிக் கொடுத்தேன்” என்று சொல்ல.., “அப்பா சரிப்பா ரெட் சட்னி வைக்கலாம்” என்று அவனை அழைக்க…, முகிலனுக்கு “ரெட் சட்னி அப்படின்னா என்ன” என்று அவனிடம் கேட்க…, “அப்பா உங்களுக்கு ரெட் சட்னி னா என்னனு தெரியல., நீங்க ஏம்பா இப்படி பொய் சொல்றீங்க” என்று ரிஷி கேட்க நீண்ட நாளுக்கு பிறகு அந்த வீட்டில் சிரிப்பு சத்தம் சந்தோஷமாக கேட்டது…

       அன்று பிள்ளைகளுக்கு தோசை சுட்டு கொடுக்க கிச்சனுக்கு  அம்மாக்களின் உதவியுடன் சென்றாள்., கூடவே முகிலனும் சேர்ந்து வர இவள் தான் “வாக்கர் இருக்கு., அம்மா இருக்காங்க., அத்தை இருக்காங்க., நீங்க எதுக்கு போங்க” என்று சொன்னாள்..,

     “இல்ல நீ தோசை சுடு நான் பார்க்கட்டும்., நாளைக்கு நான் செஞ்சு கொடுக்கிறேன்” என்று சொன்னான்.

     சட்னி வைக்க அம்மா இரண்டு பேரும் சேர்த்து தயார் செய்ய.., இவள் சட்னியை கொஞ்சம் காரத்தை குறைத்துக் கொள்ளும்படி சொல்லி.., “நீங்கள் செய்யும் அதே முறை தான் கொஞ்சம் காரம் குறைக்க வேண்டும்., வெங்காயத்தை கொஞ்சம் கூட்டி போடுங்க., அதிலுள்ள டேஸ்ட் பிள்ளைகளுக்கு பிடிக்கும்” என்று சொல்லி…, அவள் செய்யும் முறைப்படி செய்ய சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.,

     கிச்சன் திண்டில் ஏறி உட்கார்ந்துகொண்டு அவள் செய்வதை அவன் பார்த்துக்கொண்டிருக்க.., பிள்ளைகள் இருவரும் ஹாலில் அமர்ந்து ஹோம் வொர்க் செய்து கொண்டிருந்தனர்.., சற்று நேரத்திற்கெல்லாம் பிள்ளைகளுக்கு அவள் தோசை வார்த்துத் தர.., இவன் எடுத்துக் கொண்டு போய் குழந்தைகளுக்கு கொடுத்து விட்டு வந்தான்..,

       பிறகு பிள்ளைகளுக்கு மட்டும் சுட்ட உடன் அவன் “போதும் நீ ரொம்ப நேரம் நின்னுட்ட வா” என்று அழைத்துக் கொண்டு சென்று ஹாலில் அமர வைத்து விட்டான்.., நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் அதிக நேரம் ஹாலில் அமர்ந்து இருந்தாள்., என்று தான் சொல்லவேண்டும்…,

      ஏனென்றால் மருத்துவமனை மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு வீட்டில் அந்த அறையைத் தவிர வேறு எங்கும் போனதில்லை., என்ற சூழ்நிலையில் இன்று அங்கேயே அமர்ந்து கொண்டு அவன் சொல்ல சொல்ல கேட்காமல் இன்னும் கொஞ்சநேரம் இருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டாள்.., ரிஷியோ சும்மா இருக்கலாமல்., “அம்மா இன்னைக்கு தான் புல்லா சாப்பிட்டு இருக்கேன்”.., என்று சொன்னான்.

       பாட்டி இருவரும் “டேய் உன்ன அடிச்சா கூட தப்பில்ல., பாத்து பாத்து செஞ்சு கொடுத்தா.., இன்னைக்கு தான் நல்லா சாப்டியா”.., என்று சொன்னார்கள்.

        வெட்கப்பட்டு கொண்டு வேகமாக வந்து அவள் மேல் சாய வந்தவனை., முகிலன் தூக்கிப் பிடித்துக் கொண்டான்…, “அம்மா மேல விழக்கூடாது” என்று சொன்னான்.

      “அம்மா கிட்ட இருக்கணும்” என்று சொல்லி அடம் பிடித்தான். ஏனெனில் அவன் பிள்ளைகளை இப்பொழுதெல்லாம் அவளருகில் கூட விடுவதில்லை. ஏனென்றால் ஆங்காங்கு இன்னும் காயங்கள் உலர்ந்து போகாமல் இருப்பதும்., அடிபட்ட இடத்தில் ரத்தக்கட்டு சரியாகி போகாமல் இருப்பதும்., என கொஞ்சம் இருக்கத்தான் செய்தது.., வலி எப்படி இருக்கும் என்பது அவள் சில நேரங்களில் அவள் அறியாமல் முகம் சுளிக்கும் போது அனைவரும் உணர்ந்து கொள்வார்கள். அதனால் இரவு எப்பொழுதும் அவள் பக்கத்தில் உறங்கும் பிள்ளைகளை., இப்பொழுது தன் பக்கத்தில் உறங்க வைத்துக் கொண்டு, அவளை தனக்கு மறுபுறமாக படுக்க வைத்துக் கொள்வான்..,

       அவளோ “கொஞ்ச நேரம் இருக்க விடுங்க” என்று சொல்லி அருகில் அமர்த்தி வைத்து தன் கையால் அவனை சேர்த்து பிடித்துக் கொண்டாள். ரிஷி அவள் மேல் சாய்ந்து அவள் இடம் கொஞ்சிக் கொண்டு இருப்பதை பார்த்தவுடன் ரக்க்ஷிக்கும் கோபம் வந்துவிட்டது.., “நானும் அம்மாகிட்ட” என்று சொல்ல., அவளையும் எடுத்து அவள் மடியில் மெதுவாக அமரவைத்து கொடுத்தான்., அவளும் அவள் கழுத்தை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க., பார்த்த மதியின் அம்மாவிற்கும்., முகிலனின் அம்மாவிற்கும்., தான் கண் கலங்கியது.,

       முகிலன் மூன்று பேரையும் பார்த்துக்கொண்டே இருந்தான்., சற்று நேரத்தில் அம்மா இருவரும் சாப்பிட செல்ல குழந்தைகளோடு பேசிக் கொண்டிருந்தவளிடம் அருகில் அவனும் நெருங்கி அமர்ந்து அவள் மேல் கையை போட்டு குழந்தைகளோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான்..,

தினமும் திருக்குறளாய்

உன்னை நினைத்து…

இருவரியில் நினைவுகளை

கிறுக்கிக் கொள்கிறேன்..,”

உண்மையில் மக்களுக்கு சந்தோஷம் என்பது எங்கே இருக்கிறது., என்று தெரியவில்லை. சந்தோஷம் என நினைத்து பணத்தின் பின்னும் மற்றவற்றின் பின்னும் ஓடும் மக்களுக்கு.., அவர்களுடைய மொத்த சந்தோஷமும் அவர்களது குடும்பத்தில் தான் இருக்கிறது, என்பதை அறியாமல் போனது தான் கொடுமையிலும் கொடுமையாக இருக்கிறது… நீங்கள் தேடும் அனைத்தும் உங்கள் குடும்பத்திற்கு உள்ளே கிடைக்கும் என்பது தான் உண்மை.., அது தெரியாத மனித மனங்கள் எதையோ தேடி எதன்பின்னோ ஓடிக் கொண்டிருப்பது போல…, வாழ்க்கையின் நிம்மதியும் சந்தோஷத்தையும் குடும்பத்திற்குள் வைத்து பூட்டிவிட்டு வெளியே தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்…,

    உங்கள் சந்தோஷமும்., நிம்மதியும்., உங்கள் வீட்டில் தான் இருக்கிறது…

Advertisement