Advertisement

அத்தியாயம் 5
மறுநாள் ரங்கா தெளிச்சியாக கூடத்தில் அமர்ந்து இருக்க ஆஷுதோஷ், ராஜின் இறுதி யாத்திரைக்கு உண்டான சடங்கு  சம்பிரதாயங்களுக்கு செய்திருந்த ஏற்பாடுகளை அவனிடம் தெரிவித்து விட்டு, தான் அலுவலகம் புறப்படுவதாக தெரிவித்தான். 
“என்ன அவசரம் ஆஷு?, எப்படியிருந்தாலும் நிறைய பேர் வந்திருக்க மாட்டாங்க..”
“இல்ல சார் எல்லாரும் வந்திருப்பாங்க. நேத்தே குரூப் மெசேஜ்-ல சர்குலர் அனுப்பிட்டேன்”, என்றான் ஆஷு.
இந்த பதிலில் திகைத்த ரங்கா, “எனக்கு எதுவும் வரலயே..”, என்றான். 
“ஸார், டாப் மேனேஜ்மேண்ட் சேர்ந்தவங்களுக்கு ராஜ் சார்தான் மெசேஜ் அனுப்புவார். நா மிடில் & ப்ரொடக்ஷன் டிபார்ட்மென்ட்-க்கு மட்டும்தான் மெசேஜ் அனுப்புவேன்”, ஆஷு.
“ஓஹ் !”, என்று புருவம் உயர்த்திய ரங்கா, ‘சர்குலர் வரைக்கும் இவன் பாக்கறான்னா சுந்தர் என்ன பண்றான்?’,என்ற யோசனை ஓடியது.
“அப்ப நீங்க பாத்துப்பீங்கல்ல?”,என்று ஆஷு கேட்க..
ரங்காவுக்கு அவனது பொறுப்புணர்ச்சி பிடித்திருந்தது. ‘நானும் இப்படி இருந்தவன் தானே?’, “ம்ம்”, என்று தலையசைத்தான். “எதுக்கும் ஆபீஸ் கிளம்பும்போது சொல்லிட்டு போங்க”, என்றான் கூடுதலாக.
“யா ஓகே “,சொல்லி நகர்ந்து அவனது அறைக்கு சென்றான் ஆஷுதோஷ்.     .
ரங்காவோடு ஆஷுவினால்  ஓரளவு இணக்கமாக பழக முடியும். முதல் காரணம் இருவருக்குள்ளும் ஆறேழு மாத வித்தியாசமே. மற்றுமொரு காரணம், இருவருமே ஐஐடி யில் படித்தவர்கள்.
ஐஐடி மும்பை -யில் ரங்கா தனது பட்டப்படிப்பை முடித்திருந்தான். ஆஷுவுக்கு கிடைத்தது ஆந்திரா மாணவர்களுக்கு என்று பட்டா போடாத குறையாக திகழும் சென்னை ஐஐடி யில். 
இவனது அப்பா நீலகண்டன் நாகர்கோவிலை பூர்வீகமாக கொண்டிருந்தாலும், கடிமணம் புரிந்ததென்னவோ அச்சுச் தெலுகு அம்மாயி சாம்பவியை.
ஆஷுவின் தந்தை அனந்தபூரில் உள்ள  ஜவஹர்லால் நேரு தொழில்நுட்ப கல்லூரியில் பேராசிரியராக பணியில் இருந்ததால், ஆஷு பிறந்து வளர்ந்தது எல்லாம் அனந்தபூரில். எனவே இவன் நாஞ்சில் உளுந்தசோறு + குண்டூர் கோங்குரா சேர்ந்த கலவை. தமிழ், தெலுகு, ஹிந்தி, ஆங்கிலம் அறிந்து கொள்ள அந்த ஊரின் பாடத்திட்டமும், அப்பாவின் தமிழ்ப்பற்றும் முக்கிய காரணம். 
ஆந்திர மாணவர்கள் படிப்பதற்காகவே உருவாக்கப்பட்ட சென்னை ஐஐடி இவனது  ஜெஈஈ  மதிப்பெண்ணைக் கண்டு ‘வா வா, உனக்கு சீட் ரெடி’ என்று வாரி அணைத்துக் கொண்டது. சோ, நாஞ்சில் நாட்டு அனந்தபூர் அப்பாயி சென்னைப் பட்டணத்திற்கு ப்ரவேசமானான்.
இவனுக்குப் பின் பிறந்தவள் தங்கை நீலோத்பவி, பத்து வருடங்கள் இளையவள், தந்தை நீலகண்டன் பணிபுரியும் கல்லூரியில் CSE இளங்கலை இரண்டாம் ஆண்டு படிக்கிறாள்.  
ஆஷுதோஷ் சென்னையில் படிப்பை முடிக்கும்போதே, அவனது  பேராசிரியர் ஒருவர் செய்து வரும் ஆய்வில் பங்கு கொண்டான். ஆசிரியரின் தோழனான வரதராஜனின் அறிமுகம் அவனுக்கு அப்படித்தான் கிடைத்தது.
வாரம் ஒரு முறையோ அல்லது இரு வாரங்களுக்கிடையே நேரம்கிடைக்கும்போதோ, வரதராஜன் நண்பனை சந்திக்கவென வர, அங்கே இருந்த ஆஷுதோஷ்க்கும் மெல்ல ராஜின் தோழமை கிடைத்தது.
ராஜ், ஆஷு  இருவரும் அறிமுகமாகி ஆறு மாதங்கள் கடந்திருந்த நிலையில் அந்த பேராசிரியரின் ஆய்வு ஒரு முழுமைக்கு வந்துவிட, வார விடுமுறை நாளில் தனது ஆராய்ச்சிக்கு உதவி செய்த தனது மாணவர்களை அழைத்து  விருந்து வைத்தார். தனது நண்பனான வரதராஜனுக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.   
பேராசிரியரின் வீட்டுக்குச் சென்ற ஆஷுதோஷுக்கு, அடுத்து என்ன செய்வது என குழப்பம் மேலோங்கி இருந்தது. ஆஷுதோஷின் மதிப்பெண்களுக்கும் அவனது அறிவாற்றலுக்கும் நினைத்தால் போதும் உடனே வேலை கிடைத்துவிடும். 
அவனது விருப்பமென்னவோ புதிதாக தொழிற்சாலை துவங்கி பலதரப்பட்ட இயந்திரங்களைத் தயாரிப்பது கூடவே அதை புதிய தொழில் நுட்பத்தோடு இயைபு கொள்ளுமாறு உருவாக்குவது என்பது. 
ஆனால், அடுத்து உடனடியாக என்ன செய்வது என்பது புரியாமல் விருந்து முடிந்து வெளியேறுகையில், இவன் அருகில் வந்த வரதராஜன் திடீரென, “ஹே மேன்? அடுத்து என்ன பிளான் வச்சிருக்க?”, என்று ஆஷுவைக் கேட்க..
“நோ ஐடியா”, என்று உதடு பிதுக்கி கைகளை விரித்தான். 
“என் ஃபாக்டரி பாத்துருக்கியா மேன்?”, பிரதான வாசலைத் தாண்டிச்  சென்றபடி வரதராஜன் கேட்க..
அவரை பின் தொடர்ந்து சென்றவன், “இல்ல..” என்றுவிட்டு சற்றே தயங்கினான், “ஃபாக்டரின்னா …?”, என்று  இழுக்க.. காரணம் அவரது நிறுவனம் என்ன என்பது அது வரை அவனுக்குத் தெரியாது.
 பேராசியரின் நண்பன், ஏதோ ஒரு பிஸினெஸ்மேன், பழகுவதற்கு இனிமையானவர் என்ற முறையில் மட்டுமே இதுவரை அவரை அறிந்திருந்தான். 
விசித்திரமாக அவனைப் பார்த்த வரதராஜன், “ஓஹ். உனக்கு என்னைப் பத்தி தெரியாதா?”, என்று புன்னகைத்தவர், சற்றே தலை சாய்த்து, “ஹ்ம்ம். சொல்றது எதுக்கு? நேர்ல வந்து பாத்துக்கோ”, என்று மறுநாளே அவனை கோவைக்கு வரவழைத்தார்.  
விமான நிலையத்தில் தனக்காக காத்திருந்த உபர் காரில் ஏறிய ஆஷுதோஷ் ஓட்டுனரிடம், “லொகேஷன் தெரியுமில்ல?”, என்று கேட்டான். ஆஷுவுக்கு எங்கே போகிறோம் என்று தெரியாது, ஓட்டுனர் இன்ன இடத்திற்கு செல்கிறோம் என்று இடத்தையாவது பகிர்ந்தால், அங்கிருக்கும் நிறுவனங்களை  கூகுள் செய்து குத்துமதிப்பாக ராஜ் ஃபாக்டரி பற்றி தேடலாம் நினைத்திருந்தான். 
“லொகேஷன் ஷேர் பண்ணியிருக்காங்க ஸார்”, என்று ஓட்டுநர் பதில் தர, ‘எங்கே?’,என்று அவரிடம் கேட்க ஒரு அசட்டுத் தயக்கம். 
அதில் சில நிமிடங்கள் கழிய, சரி அங்கே போனதும் தெரிந்து கொள்வோம்  என்ற முடிவுக்கு வந்திருந்தான். அரைமணி நேர பயணத்திற்குப் பின் இவன் சென்ற வாகனம் நுழைந்த அந்த பிரதான வாயிலைப் பார்த்ததும் பேச்சிழந்து திகைத்து நின்றான் ஆஷுதோஷ்.  
பிரமாண்டமான பனிரெண்டு அடி உயரமுள்ள சுற்றுச்சுவரில் பொறிக்கப்பட்டிருந்த ‘REVA’ எழுத்துக்கள் மதிய வெயில் பட்டு தங்கமாய் ஜ்வலித்தது.  
 அது ரேவா குழும நிறுவனங்களின் தலைமையகம்.
REVA வைப் பற்றி அஷுதோஷ் முன்பே அறிந்திருந்தான். சுரங்கம் தோண்ட பயன்படுத்தப்படும் அனைத்து வகையான இயந்திரங்களையும் தயாரிக்கும் பெரிய நிறுவனம். 
ஆனால், அதன் நிறுவனர் எளிமையாக, சக நண்பனாக தன்னுடன் பழகும் வரதராஜன் என்பது அவனுக்கு அதிர்ச்சியோடு கூடிய இனிய செய்தி. 
ஆஷுதோஷ் காரிலிருந்து இறங்கியதும், டை கட்டி மிடுக்காக இருந்த ஒருவன் இவன் அருகே வந்து, “சார் வெயிட் பண்றாங்க,வாங்க”, என்று நின்றான். 
மனம் ஏனோ அவனோடு தன்னை ஒப்பிட்டுப் பார்த்தது  ‘இன்னும் கொஞ்சம் நல்லா டிரஸ் பண்ணியிருக்கலாமோ?, என்று நினைத்துக் கொண்டான். ஆனால், பதிலேதும் சொல்லாமல் தனது ஷோல்டர் பேக்-கை காரிலிருந்து எடுத்துக்கொண்டு அவன் பின்னே சென்றான். 
லிப்ட் அந்த கட்டிடத்தின் ஐந்தாம் தளத்தை அடைந்த போது, அதன் பிரம்மாண்டம் தெரிந்தது. ‘அட்லீஸ்ட் ஏர்போர்ட்-ல வேற ட்ரெஸ் மாத்தியிருக்கலாம்’, நொந்து கொண்டான். 
‘வரதராஜன் – சேர்மன்’, என பொறிக்கப்பட்டிருந்த அறையை, ஆஷுதோஷுக்கு கைகாட்டிவிட்டு சிப்பந்தி நகர்ந்து நின்றான். 
இவன் சட்டையை சரி செய்து கொண்டு கதவின் பிடியில் கைவைக்கும்  நேரம், உள்ளிருந்து கதவு திறந்து கொண்டது. ரேமண்ட் அணிந்து அலுவல் உடையில் மிடுக்காக நின்ற  வரதராஜன், “வெல்கம் யங் மேன்”, என்று மலர சிரித்தபடி  கை நீட்டினார்.
பக்கவாட்டில் நின்ற சிப்பந்தியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிவது,ஆஷு திரும்பி பார்க்காமலேயே தெரிந்தது. கைநீட்டி காத்திருக்கும் வரதராஜனின் கை பற்றி குலுக்கியவனுக்கு அவரை என்ன சொல்லி அழைப்பது என்ற குழப்பம் வந்தது. நேற்றுவரை சரியாக்கப்பட்ட ‘ராஜ்’ விளிப்பு, இப்போது..இவர் யாரென தெரிந்தபின்..? ம்ஹூம், சுத்தமாக திணறினான்.
“ஸார்.”, என்பதற்கு மேல் எந்த வார்த்தையும் வரவில்லை. 
“ஹே நீ என் பிரெண்டு மேன், எப்பவும் போல கால் மீ ராஜ்”, என்று ஆஷுதோஷின் தோளணைத்து உள்ளே கூட்டிச் சென்றார். 
சற்று நேரம் பொறுத்து அலுவல் நிமித்தம் வரதராஜனின் அறைக்கு வந்த சுந்தராஜன்,அங்கிருந்த ஆஷுதோஷை கேள்வியாகப் பார்க்க, “இவன் ஆஷுதோஷ். இனிமே  எங்கூடத்தான் இருப்பான்”, என்றார். 
பின் ஆஷுவிடம், “என் பெரிய பையன், கம்பெனி மேனேஜ்மேண்ட் இவனோடதுதான்”, என்று சுந்தர்ராஜனை அறிமுகம் செய்தார்.
இதைக் கேட்டதும் சுந்தரின் முகம் பெருமிதத்தில் ஜ்வலித்தது. தந்தையிடம், “ஸார், மிஸ்டர் ஆஷுதோஷ்க்கு அப்பாயிண்ட்மெண்ட்..?”, என்று இழுத்தான். 
“ஓஹ். யா ஆர்டர் போட்டுடு”,என்றார் வரதராஜன். 
சுந்தர், “என்ன டெசிக்னேஷன்-னு சொன்னீங்கன்னா..?”, என்று கேட்டான்.      
“டெசிக்னேஷன்..?”, சில நொடி யோசித்து, ”ம்ம். என்னோட பர்சனல் கன்சல்டன்ட்”, என்று சொல்லி ஆஷுவிடம்,”ஓகேவா மேன்?”,என்று அபிப்ராயம் கேட்டார்.
‘இவ்ளோ பெரிய ஆளுக்கு சஜஷன் சொல்ற அளவுக்கு எனக்கு என்ன அனுபவமிருக்கு?’, என்று சங்கோஜமானவன், “ஸார், பர்சனல் அசிஸ்டென்ட்-ன்னு இருக்கட்டும் ஸார்”,என்றான்.  
“ம்ம்?”, என்று ஆஷுவிடம் கேட்ட வரதராஜன், “ஓகே அப்டியே போட்டுடு சுந்தர், பை தெ வே, சாலரி விஷயம் நா ஃபில் பண்ணிக்கறேன், ஆர்டர் அனுப்பிடு”, என்று சேர்மனாக உத்தரவிட்டார்.
அந்த நல்ல நாளில் ராஜுடனான ஆஷுவின் பயணம் இனிதே  துவங்கியது. ‘எனக்கு என்ன வேலை சார்?”
“முதல்ல கம்ப்ளீட்டா பாக்டரிய சுத்திப் பாரு, நல்லா ஸ்டடி பண்ணு. எப்படி நம்மள ஸ்ட்ராங் பண்ணிக்கலாம்னு அனலைஸ் பண்ணு. வேலை? ம்ம். அப்பறம் பாக்கலாம். ஓகே?”, என்ற வரதராஜன், “யாராவது  இருக்கும்போது ஸார் மோர்ல்லாம் ஓகே ஆனா மத்த நேரத்துல ராஜ்-னு கூப்பிடு  போதும். நா இன்னும் சின்ன பையன்தான் மேன்’, என்றார்.
ஆஷு அதை ஒரு சிரிப்போடு ஆமோதித்தான். 
அவர் சொன்னபடி ‘ரேவா’ வந்த ஒரு வாரத்துக்குள் அதன் அடி முதல் நுனி வரை அலசி ஆராய்ந்து அதன் பலம், பலவீனம், அங்கு தயாராகும் இயந்திரங்கள், இதன் போட்டி நிறுவனங்கள் என்று அனைத்தையும் அறிந்து கொண்டான். 
அடுத்த மூன்று நாட்களில் ராஜிடம் சென்று, “ராஜ்.. ஹியர். இது என்னோட பார்வைல ரேவா வோட ப்ரோபைல். இதுல எந்த ஏரியால நாம கவனம் செலுத்தணும். எந்த டிபார்ட்மென்ட் எதுல ஸ்ட்ராங்-ன்னு லிஸ்ட் போட்டிருக்கேன் அதோட.. ,.  நம்ம போட்டி கம்பெனி ஆர்டர் எடுக்கறதுக்காக எந்தந்த மெஷினெல்லாம் சேர்த்து ஒரு பேக்கேஜா விக்கறாங்க-ங்கிற விபரமெல்லாம் இருக்கு. அதைத் தவிர, மெயின்டெனன்ஸ் கான்ட்ராக்ட்டும் பாக்கறாங்க”, என்று ஒரு கத்தைப் பேப்பர்கள் அடங்கிய பைலை நீட்டினான். 
எதிரே நின்று கொண்டிருந்தவனை உக்காரக்கூட சொல்லாமல் அந்த கோப்பினை வாங்கிப் பார்வையிட ஆரம்பித்த வரதராஜன், படித்து முடித்து நிமிர்ந்தபோது, ஆஷுதோஷைப் பார்த்து  சொன்ன வார்த்தை, “குட்”. பின்  ‘உட்கார்’ என்பதுபோல அடுத்த இருக்கையை காண்பித்தார். 
சில நிமிட யோசனைக்குப் பின், “மத்தவங்க பண்றா மாதிரி நாம மெஷின்ஸ்க்கு வாங்கற ஆர்டரோட, அதுக்குண்டான மெயின்டெனன்ஸ் காண்ட்ராக்ட் அதாவது ஏ எம் சி எடுக்கலாம்னு ரெகமண்ட் பண்ணியிருக்க இல்ல?”
“ம்ம்”
“அது வேண்டாம். ஏன்னா ரொம்ப தொல்லை பிடிச்ச வேலை அது. கவர்ன்மெண்ட் லேபர் ரூல்ஸ், யூனியன்ஸ் அது இதுன்னு மண்டை காயும். சோ அதை விடு. அடுத்த ஆப்ஷன், அவங்க தர்ற பேக்கேஜ், சரியா புரியரா மாதிரி சொல்லனும்னா, ப்ரெஷர் குக்கரோட சேல்ஸ் அதிகமாக்க அதோட கூட ஹாட்பாக் & கரண்டி செட் சேர்த்து ஒரு பேக்கஜா கொஞ்சம் விலைய குறைச்சு விக்கறா மாதிரிதானே உன்னோட ஐடியா?”
“யா.. “
“குட், இனிமே நாம அதுல கவனம் செலுத்தலாம்.”
“அதாவது குக்கர் மட்டுமில்லாம ஹாட்பேக் அண்ட் கரண்டி தயாரிக்க போறோம்னு சொல்லுங்க”,
“ஹ ஹா, ஹாட்பேக்கும் கரண்டியுமா?”, என்று சிரித்தவர், “எஸ் எஸ், ஒரு டைரக்டர்ஸ் மீட் அரேன்ஜ் பண்ணி பேசிடலாம்”
கிண்டலாக சிரித்து, “என்னான்னு ஸார்? கரண்டி தயாரிக்கப் போறோம்ன்னா?”,ஆஷு கேட்க..
“ஹே மேன் உன்னோட… ஹா ஹா, போ போ போயி எல்லாத்தையும் நம்ம மெயின் மெஷினுக்கு தேவையான மாதிரி டிசைன் பண்ணு” ,என்று சொன்னார். 
அன்றுதான் அவன் வரதராஜனை முதன்முறையாக ஒரு நிறுவனத்தின் சேர்மனாகப் பார்த்தான். ஐம்பது பக்கத்துக்கும் மேல் இருந்த அவன் தந்த அந்த கோப்பினை, வெறும்  அரைமணி நேரத்தில் படித்து அதன் சாரத்தை கிரஹித்து, அதற்கு ஏற்றாற்போல் முடிவெடுத்த அவரது செயல்திறன் அஷுதோஷை பிரமிக்க வைத்தது. 
உடனடியாக வரதராஜனுக்கு அடுத்த அறை ஆஷுக்கு ஒதுக்கப்பட்டது. தயாரிப்பு பிரிவு வரதராஜனின் கீழ் இருந்ததால், அடுத்தடுத்து வேலைகள் திட்டமிடப்பட்டு ஆஷுவின் மேற்பார்வையில் சீராக நடக்க ஆரம்பித்தது. 
அதன் பிறகு இவன் வெளியே செல்ல ராஜ் அனுமதிக்கவில்லை. நிறுவனத்தை விட்டும் அவரை விட்டும். எப்போதும் ஆஷு தன்னுடனே இருக்கும்படி பார்த்துக் கொண்டார். முக்கியமாக நிறுவனம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு முடிவும் இவனைக் கலந்து ஆலோசிக்காமல் வரதராஜன் செய்ததில்லை, என்பதும் அலுவலகம் புறப்பட்டுக் கொண்டிருந்த ஆஷுதோஷுக்கு நினைவில் வந்தது. 
பளபளவென பாலிஷ் செய்த காலனியை காலில் நுழைத்து, அதன் நூலைக் கட்டும்போது  நீண்ட பெருமூச்சொன்று அவனை அறியாது வெளிப்பட்டது. பின் ரங்கராஜனிடம் சொல்லிக்கொண்டு ஆஷுதோஷ் அலுவலகம் புறப்பட்டு சென்றான். 
)))))))))))))))))))
ஒரு மணி நேரம் கடந்திருந்த நிலையில், வரதராஜனின் வீட்டில் அவரது அஸ்திக்கு முன்பாக, குடும்பத்தினர் முன்னிலையில் அவரது வக்கீல் அன்னாரது உயிலின் விபரங்களைத் தொகுத்துக் கூறினார்.
அதைக் கேட்ட பூர்ணா, சுந்தர்ராஜன், ரங்கராஜன் மற்றும் மஹதி நால்வரும் குழப்பத்தில் இருந்தனர். அப்படி அவர்களை குழப்பத்தில் ஆழ்த்திய வரதராஜனின் உயில் விபரம் கீழ்வருமாறு:
எனது பெயரில் இருக்கும் அனைத்து அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட வேண்டும்:
இப்போது நான் வசிக்கும் வீடு ரங்கராஜனோ அல்லது மஹதியோ எடுத்துக்கொள்ளலாம். 
சுந்தர்ராஜன் இப்போது இருக்கும் பெசன்ட் நகர் வீடு அவனது உரிமையாகட்டும். 
நீலாங்கரை கடற்கரை வீடு என் மூத்த மகள் பூரணாவிற்க்கு.
நிலம், தோட்டம், இன்னபிற சொத்துக்கள் அனைத்திலும்  நால்வருக்கும் சம பங்கு உரிமை.
பேரன், பேத்திகளுக்கு எனது அன்பளிப்பு ஆளுக்கு இரண்டு கோடி ரூபாய் வைப்பு நிதி. என் வங்கி சேமிப்பில் இருந்து தரப்பட வேண்டும். 
வாட்ச்மேன் சோமு, சமையல்காரர் தாமு பிள்ளை, வீட்டு நிர்வாகம் செய்யும் வாணி மூவருக்கும் ஆளுக்கு தலா ஐந்து  லட்ச ரூபாய் எனது அன்பளிப்பாக தரப்படவேண்டும். 
இறுதியாக ரேவா குழுமத்தில் எனது பெயரில் இருக்கும் பங்குகளை என் இளைய மகள் மஹதிக்கு அளிக்கிறேன்.  
எனது நண்பனான ஆஷுதோஷ் ரேவாவின் தயாரிப்பு பிரிவுக்கு (ப்ரொடக்ஷன் டிபார்ட்மென்ட்) குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது நான் வகித்து வந்த தலைமைப் பொறுப்பை  ஏற்று நடத்த வேண்டும். அப்படி பணியில் அவர் தொடர இயலாத பட்சத்தில் வேறு ஒரு தகுதியான நபரை அவரே நிறுவனத்திற்கு முன்மொழிந்து தேவையான பயிற்சி அளித்த பிறகே நிறுவனத்தில் இருந்து விலக வேண்டும். தவிர அவரது இப்போதைய தயாரிப்புகளுக்கான காப்புரிமை அவரையே சேரும். 
எனது எந்த ஒரு அசையா சொத்தையோ, நிறுவன பங்குகளையோ குடும்ப நபர்களைத் தவிர மூன்றாம் மனிதருக்கோ, வேறொரு நிறுவனத்துக்கோ விற்கவோ, மாற்றிக் கொடுக்கவோ இயலாது. அப்படி யாரேனும் சொத்துக்களை விற்க முற்பட்டால், குடும்ப உறுப்பினர் அனைவரும் அதற்கு எழுத்து மூலம் ஒப்புதல் அளித்து அதை அங்கீகரிக்க வேண்டும். 
ஐஐடி ஆய்வுத்துறைக்கு எனது சேமிப்புக் கணக்கில் இருந்து பத்து கோடி நிதி அளிக்க வேண்டும். (இதற்கு என் பால்ய நண்பன் காமகோடியை கலந்து ஆலோசிக்கவும்)
இதை வரதராஜனின் வக்கீல் இரண்டு முறை விளக்கி சொல்லிய பின்னர் வரதராஜனின் வாரிசுகளின் மனநிலை…
பூர்ணா : ‘ஓ! அப்ப கம்பெனி ஷேர்ஸ் வெளியாளுங்களுக்கு விக்க முடியாதா? நீலாங்கரைல வீடு வச்சிட்டு சிங்கப்பூர்ல இருக்கற நான் என்ன பண்றது? ஹ்ம்ம் ஷேர் வீடு நில புலன்லாம் இந்த மூணு பேர்ல யார் நல்ல ரேட் குடுத்து வாங்கிப்பாங்க?’
சுந்தராஜன் : ‘செத்தும் கெடுத்தியே கிழவா?’, என்று வன்மமாக நினைத்தான்.
ரங்கராஜன் : ‘இந்த வீடு எனக்கெதுக்கு? நா என் சம்பாத்தியத்துல வாங்கின என்னோட பிளாட் போதுமே? வீடு மஹி  எடுத்துக்கட்டும்.’
மஹதி : ‘ஐயோ என் படிப்பை என்ன பண்றது? லண்டன் போகமுடியுமா? ஏன்ப்பா இப்படி?’

Advertisement