Advertisement

அத்தியாயம் 4

மஹதி, ரங்கராஜன் இருவரும் உயில் விவகாரத்தை பேசியபடி சாப்பிட்டுக் கொண்டு இருக்கையில், சுந்தர்ராஜன் மஹதியின் அலைபேசிக்கு அழைப்பு விடுத்தான்.  

திரையைப் பார்த்து, “சுந்தரண்ணா தான் போன்-ல”

“ம்ம். பேசு”, ரங்கா.

“ஹலோ”, மஹதி. 

“…”

அலைபேசியில்,  “என் ரூம்ல இருங்கண்ணா, இப்ப வர்றேன்”, சொல்லிய மஹதி தட்டத்தில் இருந்த கடைசி கவளத்தை காலி செய்து விட்டு எழுந்தாள். 

“நீ வர்றியா ரங்கண்ணா?”

“சுந்தர் என்னை கூப்பிட்டா பாக்கலாம் மஹி”, என்று விட்டு ரங்கராஜனும் எழுந்து கொண்டான். அவன் கையில் கார் சாவி இருந்ததை மஹதி கவனித்தாள். 

“வெளிய போறியா?”

“ஆங்.. அது இங்க பக்கத்துல..”, என்று ரங்கா இழுக்க..

எங்கே போகிறான் என்பது புரிந்ததால், மஹதியின் முகம் கடினமானது. “நோ, நா இங்க இருக்கற வரைக்கும் நீ என் கூடவேதான் இருக்கனும். வா”, என்றாள் தங்கை.

“ப்ச். மஹி..”, என்று ரங்கா மறுக்க நினைக்க..

“நீ மட்டும் வரலைன்னா, நிஜமா என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது”, என்று மிரட்டினாள். 

அசட்டுச் சிரிப்பை உதிர்த்த ரங்கராஜன், சாவியை மீண்டும் பாக்கெட்டில் போட்டான். அவனது செய்கையைப் பார்த்துக்கொண்டிருந்த மஹதி, “வா”, என்ற ஒற்றைச் சொல்லோடு அவனுக்கு முன் நடக்க ஆரம்பித்தாள். 

இவர்கள் இருவரும் சென்றபோது சுந்தர்ராஜன் மஹதியின் அறையில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை கவனமின்றி புரட்டியபடி  இருந்தான். இவர்கள் வரும் அரவம் கேட்டதும் அவன் நிமிர்ந்து பார்க்க, மஹதி முறுவலித்து அண்ணனின் அருகே சென்றாள்.

“வா மஹி,வாடா”, என்று உடன்பிறந்தவர்களை வரவேற்றான் சுந்தர். மஹதியிடம் சற்றுநேரம் அவளது பிரயாணம் ,படிப்பு விபரங்களையெல்லாம் கேட்டவன், பிறகு அப்பாவின் பிரிவைப் பற்றி இரண்டொரு வார்த்தை பேசினான். அப்படியே வந்திருந்த உறவினர்களுக்கு பற்றி பேசிய பின் விஷயத்துக்கு வந்தான் சுந்தர்ராஜன்..

“மஹி,நீ என்ன பிளான்-ல இருக்க?”

“பிளான்-ன்னு பெரிசா ஒண்ணுமில்லண்ணா, இப்போதைக்கு என் தீசிஸ் முடிய இன்னும் மூணு மாசமாவது ஆகும். சோ,அதுவரைக்கும் லண்டன்தான். அடுத்து என்னன்னு இனிமே தான் யோசிக்கணும்”

“அது அப்பா இருந்திருந்தா சரியா இருந்திருக்கும், ஆனா, இப்போ அப்பா எடத்துல நீ ன்னு வில் எழுதி வச்சிருக்காரு அப்பா.தெரியுமா?”, என்று தம்பியைப் பார்த்துக்கொண்டே சுந்தர்ராஜன் கேட்டான்.

“ம்ம். இப்போ கொஞ்ச நேரம் முன்ன ரங்காண்ணா சொல்லித்தான் தெரியும். ஆனா ஏன் இப்படி எழுதியிருக்கார்?”, மஹதி.  

“அது தெரில, மாத்தி எழுதுங்கன்னு சொல்லி கேட்டுப் பாத்துட்டேன்.இன்பாக்ட் சண்டை கூட போட்டேன்.  அப்ப கூட அவரோட ஸ்டாண்ட்-டை அவர் மாத்திக்கல”, என்ற சுந்தர்ராஜன் தொடர்ந்து..

விரக்தியாக, “ஹ்ம். கிட்டத்தட்ட பத்து வருஷமா அவர் கூடவே இருந்து பிசினெஸ் கத்துட்டு இருக்கேன். ஆனா என்னை அவருக்கு அடுத்து தலைமைன்னு சொல்லாம, நம்ம தொழிலோட அரிச்சுவடி கூட தெரியாத உன்னை எதுக்கு ப்ரீஃபெர் பண்ணினாருனு தெரில”, என்றான் சுந்தர்ராஜன்.

மஹதிக்கு அண்ணனைப் பார்க்க கஷ்டமாக இருந்தது. “அண்ணா, இது எனக்கும் ஒரு ஷாக்கிங் நியூஸ். அப்பாவை நா ஏதாவது மேனிப்லேட் பண்ணி இருப்பேன்னு நீங்க நினைக்கிறீங்களா?”, அவள் மீது எந்த தவறும் இல்லை என்பதை சகோதரனுக்குப் புரியவைக்க முயன்றாள் 

இல்லையென்பதுபோல தலையசைத்து, “நீ பண்ண வாய்ப்பில்லனு எனக்குத் தெரியும் மஹி”, என்று தங்கைக்கு ஆறுதல் அளித்த சுந்தர், முகம் கடினமுற, “ஆனா இதை என்னால ஈஸியா எடுத்துக்கவும் முடியாது. நீ அதை புரிஞ்சிக்கணும்.”

“எஸ் அண்ணா புரியுது”, என்றாள். 

“எல்லாத்துக்கும் மேல, இவ்ளோ சீக்கிரம்.. இப்படி திடீர்னு அப்பா இறந்து போவாருன்னு நா நினைக்கவேயில்லை. இதுக்கு ஒரு சொல்யூஷன் சொல்லாம…? ஹ்ம்ம்.”, என்றான் சுந்தர். அவனுக்கு அப்பா இறந்தது ஒரு புறம் வருத்தம் என்றால், இப்படிப்பட்ட  நிலையில் என்னை வைத்து விட்டு போய்விட்டாரே என்ற ஆதங்கம் அதிகம் இருந்தது. 

“அண்ணா..  இட் ஹாப்பெண்ட்,  நாம என்ன பண்ண முடியும்?”

“அதான் மஹி, இதோ இன்னும் ஒன் வீக்ல நீ படிக்க போயிடுவ, இவன் எப்பவும் போல மார்க்கெட்டிங் பண்ண போயிடுவான். ஆனா நா மட்டும் அப்பா ஆபீஸ்ல.. ?”, என்று சொன்ன சுந்தருக்கு வார்த்தை வர மறுத்தது. 

ஆழமாக மூச்சிழுத்து தன்னை சரி செய்து கொண்ட சுந்தர், “விதியை நாம எதுவும் பண்ண முடியாது மஹி. சோ,அவர் இல்லாதத ஜீரணிச்சுத்தான் ஆகணும். முக்கியமா நா தினம் தினம் அவரில்லாத ஆபீஸ்-ல தான் இருந்தாகணும்”,என்ற சுந்தர்..

“ஹ்ம்ம். டைம் ஹீல்ஸ் ஆல் வூண்ட்ஸ் இல்லையா ? சோ அவர் இழப்பை  சரிசரின்னு எடுத்துக்க முடியும்னு வச்சிக்கோ. ஆனா, இப்ப வரைக்கும் எல்லாரோட பார்வைலயும் அவருக்கு அடுத்து நாந்தான் ஹெட். அது மாறக்கூடாது. வேற யாரும் அப்பா இடத்துக்கு வரக்கூடாது. அது நீயா இருந்தாலும்”, என்றான் சுந்தர் அழுத்தமாக.

சுந்தரின் முகம் அவன் எதையும் விளையாட்டுக்கோ அல்லது சாதாரணமாகவோ சொல்லவில்லை என்பது மஹதிக்கு எடுத்துச் சொன்னது. ‘ஆனால்.. அப்பாவின் உயில் படி.. அவருக்கு அடுத்து நான்தான் என்றால்..?’,  என மஹதி யோசிக்கும்போதே..,ரங்கராஜன், “அது எப்படிண்ணா? அப்பா உயில்..?”, என்று கேட்டான். 

“வெரி சிம்பிள். மஹி அப்பாவோட ஷேர்ஸ் எல்லாத்தையும் நமக்கு ட்ரான்ஸ்பெர் பண்ணிடட்டும்”, என்ற சுந்தர், தம்பியின் முகம் சுருங்குவதைக் கண்டு, “வெயிட். ரங்கா, நீயா எதையும் கெஸ் பண்ணாத. ஜஸ்ட் ஷேர்ஸ் மட்டும்தான் நமக்கு குடுக்க சொல்றேன், அதுல வர்ற பெனிபிட்ஸ் வேணும்னா மஹிக்கே கொடுத்துடலாம்”, என்று அவசரமாக ஒரு விளக்கம் வேறு குடுத்தான்.

அதாவது மஹதி தன்னிடமுள்ள நிறுவன பங்குகளை சகோதரர்களிடம் குடுத்துவிட்டு, பிரதிபலனாக அவர்கள் தரும் லாபத்தை வாங்கிக்கொள்ளட்டும் என்று ஆலோசனை வழங்கினான் சுந்தர்ராஜன்.

ரங்கராஜன், எங்கே தங்கை அவசரப்பட்டு இதற்கு சம்மதம் என்று சொல்லிவிடுவாளோ? என்ற ஒரு வித எச்சரிக்கை உணர்வோடு மஹதியைப் பார்த்தான். மஹதி சுந்தரண்ணாவின் கருத்தை ஆதரிக்கவும் செய்யாமல் மறுக்கவும் செய்யாமல் அமைதியாக இருந்தாள்.

“அண்ணா,நீங்க தப்பா எடுத்துக்கலைன்னா.. நா முடிவெடுக்கறதுக்கு கொஞ்சம் டைம் குடுங்க, அப்பா என்ன சொல்லியிருக்கார்ன்னு முழுசா என்னன்னு தெரியாம எதுவும் ப்ராமிஸ் பண்ண வேண்டாம்னு பாக்கறேன்”, என மஹதி சொல்ல, சுந்தரின் முகம் ஒருநொடி மாறி பின் இயல்பானது.

“அப்போ நாளைக்கு காலைல வக்கீல் வருவார், ஆக்சுவலா எனக்குமே வில்-லோட முழு விபரம் தெரியாது. ஆனா, ஒரு சில விஷயம் மட்டும் என் காதுக்கு வந்தது”

“காதுக்கு வர்றது வேற, எழுத்துல இருக்கறது வேறதான அண்ணா?”

“ஹ்ம்ம் கரெக்ட்தான். சரி அப்ப காலைல பாக்கலாம்”, என்று சுந்தர் எழப்போக..

“அண்ணான்னா, என்ன அதுக்குள்ள புறப்படறீங்க? எனக்கு இன்னும் சில விஷயம் தெரியனுமே?”

“ம்ம். சொல்லு..”

“அண்ணி..?”, என்று இழுத்த மஹதி.., “டிவோர்ஸ் வரைக்கும் போயிருக்கு எனக்கு தெரியவேயில்லை?”

“அவ ஏதாவது உங்கிட்டே சொன்னாளா?”

“இல்லண்ணா, அண்ணி பொதுவா அப்பா பத்திதான் பேசினாங்க. அப்பறம் பேசலாம்னு பாத்தா அவங்க கிளம்பிட்டதா சொன்னாங்க. சோ, நீங்கதான் சொல்லணும் ”

“உங்க அண்ணி பத்தி நா எதுவும் சொல்றதா இல்ல மஹி. நீ.. நீ சின்ன பொண்ணு”,என்று கத்தரித்தான் சுந்தர். 

‘என்னது நா சின்னப்பொண்ணா? இத்தன வருஷம் தனியா வெளிநாட்ல இருக்கேன், என் சம்பாத்யத்தை நா பாத்துக்கறேன்..’ என்று மனதுக்குள் எண்ணினாலும் மஹதி மேற்கொண்டு ஏதும் பேசவில்லை. 

இருக்கையில் இருந்து எழுந்த சுந்தர், “நாளைக்கு இந்த சடங்கெல்லாம் முடிச்சிட்டு ஆபீஸ் போகணும். ரங்கா ரெடியா இருப்பியா? இல்ல எங்கயாவது போகவேண்டிய வேலை இருக்கா?”, என்று தம்பியைப் பார்த்து கேட்டான். கடைசி கேள்வியில் எகத்தாளம் இருந்தது.

ரங்கா பதில் சொல்லும் முன், “அவன் எங்கேயும் போக மாட்டான். ஆபீஸ் வருவான். அதை நா பாத்துக்கறேன்”, மஹதி பதிலளித்தாள்.

வெளியேறி செல்லும்போதே, “இத்தனை வருஷம் அப்பா பாத்துகிட்டே அவன்   மாறல. சரி..  உன்னை ஏன் டிஸ்கரேஜ் பண்ணனும்?  நீயும் வேணா ட்ரை பண்ணு”, என்று கோணல் சிரிப்பை உதிர்த்த சுந்தர்ராஜன், அறை வாசலை அடைந்ததும், திரும்பி இவர்கள் இருவரையும் பார்த்து, “ஆனா, இவன் இல்லனாலும் ஒன்னும் ஆயிடாது. ஆபீஸ்-ல பெரிசா அவனுக்கு வேலை இருக்காது”, என்று அலட்சியமாக கூறிவிட்டு, இவர்களது நிறுவனமே இவன் தலையில் ஓடுவது போன்ற தோற்றத்தை விட்டுச் சென்றான் சுந்தர்.    

மஹதிக்கு சுந்தரண்ணாவின் கேலியும் பிடிக்கவில்லை, அவனது தான் என்ற அகம்பாவமும் பிடிக்கவில்லை. ஆனால் அவனை மட்டும் ஒரேடியாக குறை கூறவும் முடியவில்லை. எல்லாவற்றிக்கும் காரணம்.. அப்பா.. ‘..ப்ப்பா, வொய் யூ டிட் திஸ் டு மீ?’

)))))))))))

இங்கே மஹதியின் அறையில் இவ்வாறு நடக்க, அதே நேரத்தில் ஆஷுதோஷ் தனது அறையில் மனம் ஒரு நிலையிலில்லாமல் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தான். வரதராஜனின் நினைவு மதியம் முழுவதும் ஆக்ரமித்து இருந்ததில் பசி மறந்து கிடந்தவன்  தன்னையறியாத நிலையில் கண்கள் செருக எப்போதோ உறங்கிப்போனான். இதோ இப்போது அரைமணி நேரம் முன் தான் கண் விழித்தான். இரவு ஒன்பது மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. 

எப்போதும் போல எட்டரை மணிக்கு வேலையாள் இரவு உணவோடு வந்துவிட, உணவைக் கொறித்தான். கொறிக்கையில் ஆயிரம் எண்ணங்கள், ‘இன்னும் எத்தனை நாட்கள் இங்கே இந்த வீட்டில் இருப்பது?’, ‘அடுத்து ராஜ் இடத்திற்கு யார்?’ 

வரதராஜன் நேற்று படுக்கப் போகும் வரை இவனது புதிய இயந்திரத் தயாரிப்பு பற்றியும், அதன் முக்கியத்துவம் பற்றி சொல்லி, “என்ன வேணாலும் கேளு மேன். இது மட்டும் சக்ஸஸ் ஆச்சுன்னா நாமதான் வேர்ல்டு மார்க்கெட்ல டாப்”, என்று சொல்ல..

“அது இல்ல ராஜ். இன்வெஸ்ட்மென்ட் அதிகமோன்னு தோணுது. ஏற்கனவே ஒரு வருஷத்துக்கு மேல இந்த ப்ராடக்ட்-டை டிசைன் பண்றதுக்குன்னு ஓடிப்போச்சு. மெஷின் டெவெலப்மென்ட் க்கு கண்டிப்பா ஒரு வருஷம் இல்ல ரெண்டு வருஷமாவது ஆகும்”,என்றவன்.. “இம்போர்ட் பண்ணவேண்டிய பார்ட்ஸ் எல்லாத்துக்கும் ஆர்டர் பண்ணிட்டேன், ஆனா ராஜ் ஏன் பத்து மெஷினுக்கு தேவையானதை ஆர்டர் பண்ண சொன்னீங்கன்னு தெரில?” 

“நாம இந்த மெஷினை அறிமுகப்படுத்தும்போதே குறைஞ்சது பத்து மெஷினாவது நம்ம கைல ஸ்டாக் இருக்கனும் ஆஷு. உனக்கு இந்த மெஷினுக்கு உண்டான டிமாண்ட் தெரியாது”

“தெரியும் ராஜ், டிமாண்ட் இருக்குன்னு தெரியும். .ஆனா, இத தயாரிக்க ஆற டைம் அதிகமா இருக்கே?”  

“ஆகட்டுமே, வேர்ல்ட் லெவல்ல இப்படியொரு மெஷினை நாம மட்டும்தான பன்றோம்? அதுக்கான நேரம் எடுக்கத்தான் செய்யும்? யூ நோ ஒன் திங்? என்னோட ஃபர்ஸ்ட் மெஷினை தயாரிக்க எனக்கு மூணு வருஷம் ஆச்சு. பெரிய விஷயங்கள் எப்பவுமே நேரம் எடுக்கும். அதைப் பத்தி கவலைப்படாதே. குட் நைட் மேன்”, என்று விட்டு படுக்கப் போன ராஜ்.., இப்போது உயிரோடு இல்லை.

‘ஹ்ம்ம். ராஜ்.. உங்களுக்கு போயி இப்படி பசங்க? ஒருத்தன் என்னடான்னா உள்ளூர்ல இருந்திட்டு கண்ணாமூச்சி ஆடினான். இன்னொருத்தன் கண்ணுமண்ணு தெரியாம குடிச்சி பார்ட்டி-ல மயக்கமா கிடக்கிறான்’

“அதைவிட இந்த சுந்தர்ராஜன் எத்தனை தடவ ஆபீஸ்ல பாத்திருக்கேன்? இப்படி ஆளுன்னு தெரியலையே? அங்க உங்களுக்கு எவ்ளோ மரியாதை குடுத்து நடப்பான் இந்தாளு?”

‘பூர்ணா மேம் டிபிகல் ஹோம் மேக்கர், இந்த கடைசி பொண்ணுதான் கொஞ்சம் சென்ஸிபிலா இருக்கு. ஆனா லண்டன்வாசி. ஹ்ம்ம்’

‘இந்த நாலுபேர் கைல ராஜ்ஜோட தொழில் சாம்ராஜ்யம் என்ன ஆகப்போகுதோ?’, என்று கவலைப்பட்டான்.    

அடுத்ததாக ஆஷுதோஷுக்கு , ‘நாங்க இப்போ டெவலப் பண்ணிட்டு இருக்கற  ப்ராடக்ட் என்னாகும்?’ என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்தது. 

))))

Advertisement