அத்தியாயம் -9(2)

“நானெல்லாம் விஷ்வாமித்ரருக்கே டஃப் கொடுக்கிற டைப். பொண்ணுன்னா நாலடி இல்லை நாப்பதடி தள்ளி நின்னுதான் பேசுவேன். இதுல தாத்தா வேற யாரை வேணா லவ் பண்ணு, நான் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்னு எல்லாம் ஏத்தி விட்டார். ப்ச்… அதுலலாம் இன்ட்ரெஸ்ட் இல்லை” என்றான்.

“ரொம்பத்தான், முனிவராலேயே மேனகா முன்னாடி ஸ்டெடியா நிக்க முடியல, தெரியும்தானே?”

“தெரியாம என்ன… அவரை மேனகாவாலதானே மயக்க முடிஞ்சது? அப்போ அந்த நேரம் என்னை மயக்க ஆள் இல்லை, நான் என்ன பண்ண?”

“அப்போன்னா… இப்போ?” என கள்ளச் சிரிப்போடு கேட்டாள்.

அதரங்கள் மலர, “ம்ம்.. வந்திருக்கா ஒருத்தி, ஆனா ஆள் மயக்கி வேலைலாம் அவளுக்கு தெரியல, பாவம்” என்றான்.

“யார் பாவம்?”

“நாந்தான், இப்பவும் என்னை மயக்கற ஆளா கிடைக்கலையே” என அவன் சொல்ல, இருவருமே சிரித்து விட்டார்கள்.

விஷ்வாவுக்கு தலைவலி, காயம் கொடுத்த வலி எல்லாம் மறைந்து போயிருக்க, நன்றாக உணர்ந்தான்.

இருவரும் மரப் பெஞ்சில் அமர்ந்து கொண்டனர். வளர்பிறை நிலவொளியில் குளிர் காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே பேசியிருந்தனர்.

சில வருடங்களுக்கு முன்பாகவே அவளுக்கு அவனை மிகவும் பிடிக்கும். இவனை நேரில் காண, வீட்டினருக்கு தெரியாமல் ஒரு முறை முயன்று முடியாமல் போயிருக்கிறது.

விடுதியில் தங்கியிருந்த போது அவளது தோழி ஒருத்தி நல்ல கணவன் அமைய வேண்டுமென மார்கழி மாதம் விடியற்காலையிலேயே எழுந்து குளித்து பெருமாள் கோயிலுக்கு சென்று திருப்பாவை பாடி என பாவை நோன்பு விரதம் இருந்தாள்.

அவளுடன் சேர்ந்து வேதாவும் அப்படி விரதம் இருந்திருக்கிறாள். எல்லாம் இந்த விஷ்வா மணாளன் ஆக வேண்டுமென்றுதான். இதையெல்லாம் முன்னர் இவர்கள் கைப்பேசியில் பேசிக் கொள்ளும் போது சொல்லியிருக்கிறாள்.

அதையெல்லாம் இப்போது நினைவு படுத்திய விஷ்வா, “அதெப்படி என்னை பத்தி எதுவுமே தெரியாம என்னை கல்யாணம் பண்ணிக்க நினைச்ச?” எனக் கேட்டான்.

“அது அந்த வயசு அப்படி? போக போகத்தான் எவ்ளோ மடத் தனமா இருந்திருக்கோம்னு புரிஞ்சுது” என நொடிப்பாக சொன்னாள்.

வாய் விட்டு சிரித்தவன், “நீ இருந்த விரதத்துக்கு தக்க பலன் கிடைச்சுதா இல்லையா?” எனக் கேட்டான்.

“இதுக்கு பதில் இனிமேதான் தெரியும்”

“ஹேய் அதான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேனே” என அவன் சொல்ல, நீ செய்தது கல்யாணமா என்பது போல பார்த்தாள்.

“நம்ம ஊருல தாலி கட்டிட்டா கல்யாணம்னு சொல்லிடுறாங்களே, நானென்ன பண்ண?”

“ம்ம்… நீங்க நல்ல ஹஸ்பண்ட்டா இருந்தாதானே விரதத்துக்கு பலன் கிடைச்சதா ஆகும்?”

“ஏன் ஏன்… நான் நல்லவன் இல்லையா?”

“ரொம்ப நல்லவர்!” கிண்டலாக சொன்னாள்.

“வாழ்ந்து பார்த்திட்டு சொல்லு”

“வாழ்ந்து பார்த்திட்டு சொல்றேன்னுதான் நானும் சொன்னேன்” என்றவளுக்கு காலில் ஏதோ ஊறுவது போலிருக்க, உதறிக் கொண்டே என்னவென பார்த்தாள். நல்ல நீளமான பாம்பு. பயத்தில் அலறியவள் சட்டென அவனை அணைத்துக் கொண்டாள்.

பாம்பு பார்வையிலிருந்து மறைந்து விட்டது. அவளுக்குத்தான் பயம் தெளியவில்லை.

“அது போயிடுச்சு வேதா, ப்ளீஸ் தள்ளு” என அவன் சொல்லவும்தான் அவனது காயத்தை அழுத்திக் கொண்டிருப்பதை உணர்ந்து விலகினாள்.

அவன் மறுக்க மறுக்க காயத்தை ஆராய்ந்தாள். இரத்தக் கசிவெல்லாம் இல்லை. காயத்தை மெதுவாக தடவிக் கொடுத்தவள், “ஸாரிங்க” என்றாள்.

சித்தார்த் தன்னை தாக்கியது அவனுக்கு நினைவில் வர, அவனது முகம் இறுகிப் போனது.

அவனது கன்னம் பிடித்து தன்னைப் பார்க்க திருப்பியவள், “பாம்பு வந்துச்சு, பயந்து கத்தினேன், கொஞ்ச நேரம் அந்த பட படப்பு இருக்கும், அப்புறம் நார்மல் ஆகிட்டேன் தானே? மகிழ்ச்சி தரக் கூடிய விஷயங்களை பத்தி நினைச்சிட்டே இருக்கலாம் தப்பில்லை, நம்மள பாதிக்கிறதை தள்ளி வைக்கிறதுதானே புத்திசாலித்தனம்?” எனக் கேட்டாள்.

ஆம் என்பதாக தலையசைத்தவன் கன்னம் பிடித்திருந்த அவளின் கையை விலக்கி விட்டு, அவளின் இதழ்களுக்கு நேராக கன்னத்தை வைத்தான்.

அதிர்ந்து போய் முகத்தை பின்னுக்கு இழுத்தாள் வேதா.

“நினைச்சு பார்க்கிற அளவுக்கு ஹேப்பி மொமெண்ட்ஸ்லாம் அவ்வளவா இல்லை வேதா எனக்கு” என்றான்.

“எவ்ளோ ஆசை பட்ருக்க எம்மேல, அந்த ஆசைல ஒரு துளியளவு எனக்கு காட்ட கூடாதா?” என குழைவாக கேட்டான்.

தனக்கு தவறிழைத்த விஷ்வாவை ஒதுக்கி வைத்து விட்டு, அம்மாவுக்காக ஏங்கிய, அப்பாவை மிஸ் செய்த விஷ்வாவை மனதிற்குள் கொண்டு வந்தாள்.

தன் பக்கத்தில் அமர்ந்திருப்பவன் நியாயமாக கிடைக்க வேண்டிய அன்பு கிடைக்க பெறாமல், சூழ்ச்சியால் அநீதி இழைக்கப் பட்டவன் என்பதை நினைவு படுத்திக் கொண்டாள்.

தனக்காக இறங்கி வருவதும் தானே சரியென சொல்லியும் நெருங்காமல் தன் மனதை வெல்ல தள்ளியிருந்து கண்ணியம் காப்பதும் கூட இதோ இந்த முரட்டு ஆசாமிதான் என சொல்லிக் கொண்டாள்.

அவனிழைத்த தவறுகளுக்காக அவனை மன்னிக்க முடியா விட்டாலும், இந்த நொடி அவனை நெருங்குவது அத்தனை கடினமாக இல்லை.

சிறு விஷயங்களில் கூட அவனுக்கு நிராகரிப்பு வலியை தந்து விடக்கூடாது என முடிவு செய்தவள், மனமுவந்தே அவனது கன்னத்தில் முத்தமிட்டாள். கண்களை மூடி கன்னம் வழி அவளின் இதழ் ஸ்பரிசத்தை அனுபவித்தான். விலகிவளை அவன் நெருங்க, தலை குனிந்து அங்கேயே அமர்ந்திருந்தாள்.

அவளது நாடி பிடித்து முகத்தை நிமிர்த்தி நெற்றியில் முத்தமிட்டான். அந்த முத்தத்தை ஏற்றுக்கொள்வது போல அவனை பார்த்தாள்.

அவளது கன்னத்தை வருடிக் கொண்டே, “உனக்கு எப்பவுமே நான்தான் முக்கியமானவனா இருக்கணும் வேதா!” வேண்டுகோளா கட்டளையா என இனம் புரந்து கொள்ள முடியாத குரலில் சொன்னான்.

அவள் பதில் தராமல் அவனை பார்க்க, தன் வலப் பக்க மார்பில் அவளை சாய்த்துக் கொண்டவன், “ரொம்ப லேட்டா கேட்கிறேன், ஆனா உணர்ந்து கேட்கிறேன். ஸாரி வேதா” என்றான்.

சட்டென அவனிடமிருந்து விலகியவள், “எதெதுக்கெல்லாம் ஸாரிங்க? விட்டுட்டு போனதுக்கா, கட்டாயத் தாலி கட்டினதுக்கா, கூட வரவைக்க மிரட்டினதுக்கா, இன்னிக்கு காரை விட்டு இறங்க சொல்லிட்டு போனதுக்கா?” என சற்றே மனத் தாங்கலோடு கேட்டாள்.

மறுப்பாக தலையாட்டியவன் “நீ சொன்ன எதுக்காகவும் இல்லை” என்றான்.

“என்ன!” என அதிர்ந்தவள், “பின்ன எதுக்கு அந்த ஸாரி?” எனக் கேட்டாள்.

அவளது முடிக்கற்றைகளை மென்மையாக ஒதுக்கி விட்டுக் கொண்டே, “உன் காதலை புரிஞ்சுக்காம போனதுக்கு” என்றான்.

அவனது கையை தட்டி விட்டவள், “அப்போ நீங்க செஞ்ச மத்ததெல்லாம் சரியா?” எனக் கேட்டாள்.

தோள்களை குலுக்கினான்.

கோவமாக எழுந்தவள், “எனக்கு தூக்கம் வருது, நான் போறேன், உங்களுக்கு எப்ப வரணுமோ வாங்க” என சொல்லி இரண்டடி எடுத்து வைத்தாள்.

“பாம்பு வேதா!” என அவன் சத்தம் போட, துள்ளினாலும் சும்மா சொல்கிறானோ என கவனித்து பார்த்தாள். பாம்பேதான்.

அலறிக் கொண்டு அவனிடம் வந்தவள் மரப் பெஞ்சின் மீது ஏறி நின்று கொண்டாள்.

பாம்பு நகர்ந்ததும் அவளை தூக்கி தரையில் விட்டவன், “என்ன கோவம் உனக்கு? உனக்காக பொய்யெல்லாம் சொல்ல முடியாது, தப்புன்னு உணர்றதைதானே சொல்ல முடியும்? நீ பாதிக்க பட்டிருக்கலாம், உனக்கு நடந்தது அநியாயமா இருந்திருக்கலாம், ஆனா என் கோவத்துல நியாயம் இருக்கு. பாதிக்க பட்டது என் அப்பாவும் நானும்தான்” என்றான்.

“சரி வாங்க போலாம்” என்றாள்.

“அதென்ன உன் இஷ்டத்துக்கு விட்டுட்டு போற? மதியமும் அப்படித்தான் நான் கூப்பிட்டப்ப வரல, நீ பாட்டுக்கும் கார்லேருந்து இறங்குற” என்றான்.

“நீங்கதான் இறங்க சொன்னீங்க”

“நான் சொன்னதுக்கு அர்த்தம் அந்த அறிவு கெட்டவனை அடிச்சு நொறுக்க என்னை இறங்க விடுங்கிறது, எப்ப சான்ஸ் கிடைக்கும் விட்டுட்டு போலாம்னு இருப்பியா நீ?”

“ப்ச், என்ன பேசிட்டு இருக்கீங்க?”

“ஏன் புரியலையா உனக்கு? நமக்கு நடந்தது கல்யாணம், நான் உன் ஹஸ்பண்ட், அப்படித்தானே உனக்குள்ள பதிஞ்சிருக்கு? அதுக்கான மரியாதை உன்கிட்ட இருக்கா? நமக்கு குழந்தை வந்தா அதுக்கான முக்கியத்துவம் உனக்கு புரியுமா? இல்லை எல்லாத்தையும் விட்டுட்டு உன் அத்தை மாதிரி சுயநலமா யோசிப்பியா?”

“என்ன அர்த்தம் பண்றீங்க விஷ்வா?”

“ஒரு மண வாழ்க்கைதான் நமக்கு. நீ இல்லாம போனா கூட அப்படித்தான் எனக்கு, ஒரு வேளை நான் இல்லாம போனா கூட நமக்கு குழந்தை இல்லைனாதான் நீ வேற யோசிக்கணும், குழந்தை இருந்தா அதுதான் உனக்கு முதல்ல, புரிஞ்சுதா?” எனக் கேட்டான்.

“நீங்க புரிஞ்சுக்கோங்க விஷ்வா! உங்கம்மாவை குறை சொல்றதுக்கு முன்ன உங்களை பாருங்க, என்னை விட்டுட்டு போனது நீங்கதான். அதுக்காக வருத்தம் கூட இல்லை உங்கள்ட்ட. என்ன செய்தா அந்த நேரம் சமாளிக்கலாம்னு பார்த்து யோசிச்சு நான் தள்ளி போனா அதுக்கு ஏதேதோ பேசுறீங்க. யூ ஆர் சிக்!” என சொல்லி வேகமாக அங்கிருந்து சென்றாள்.

அறைக்கு வந்த பின்னும் வேதாவால் இயல்புக்கு திரும்ப முடியவில்லை. இவனை எந்த வகையில் சேர்ப்பது என நினைத்து ஆயாசப் பட்டாள்.

அங்கு வந்தவன் அறையின் வாயிலிலேயே நின்று, திறந்திருந்த கதவை தட்டி அவளின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்.

அவளும் அவனை பார்க்க, “ஆமாம் நான் உன்னை விட்டுட்டு போனேன், தப்பாவே இருக்கட்டும். லவ்வர்ஸ் பிரியறது விட கணவன் மனைவி பிரியறதுலதான் பாதிப்பு அதிகம். நான் சின்னதா உனக்கு செஞ்சதை எனக்கு நீ பெருசா திரும்ப செஞ்சிடாத. குட் நைட்!” என சொல்லி பக்கத்து அறைக்கு செல்ல நடந்தான்.

“உள்ள வாங்க விஷ்வா!” என கட்டளையாக சொன்னாள்.

அவன் தயக்கமாக பார்க்க, அவளே சென்று அவனது கை பிடித்து அழைத்து வந்து “இங்கேயே படுங்க” என்றாள்.

அவன் முறுக்கிக் கொண்டு திரும்ப, “லவ்வர்ஸா இருந்தாலும் ஹஸ்பண்ட் அண்ட் வைஃபா இருந்தாலும் யாரும் யாரையும் சகிச்சுக்கிட்டு வாழ முடியாது விஷ்வா. மனப் பூர்வமா ஊட்டி விட்டவளோட கைய நம்புனீங்கதானே? நம்ம உறவு மேலேயும் நம்பிக்கை வைங்க, நல்லதையே நினைங்க, இனி நீங்க தனி இல்லை, நீங்களும் நானுமா சேர்ந்து இருப்போம்” என்றாள்.

அவளை தோளோடு அணைத்து, “ம்ம்… தேங்க்ஸ்!” என சொல்லி படுத்துக் கொண்டான்.

மின் விளக்கை அணைத்து விட்டு அவளும் அவனருகில் படுத்துக் கொண்டாள்.

 விரைவாகவே உறங்கிப் போனவனின் அருகாமையையும் தொடுகையையும் முகம் மோதும் அவனது சுவாசக் காற்றையும் இயல்பாக ஏற்றுக் கொண்டு அவளும் உறங்கினாள்.