நீயென் நாயகி – 9
அத்தியாயம் – 9
வீடு திரும்பி அறைக்கு வந்த உடனே, “யார் மேல உள்ள கோவத்துல காயத்தை இக்னோர் பண்றீங்க நீங்க, ஒழுங்கா ஹாஸ்பிடல் வாங்க” என்றாள் வேதா.
“ஹாஸ்பிடல் போனாதான் டாக்டரை பார்க்கணும்னு இல்லை, நான் இருக்கிற இடத்துக்கே வந்து டாக்டர் பார்த்திட்டு போயிட்டார். பெரிய இவளாட்டம் கார்லேருந்து இறங்கி போயிட்டு சாவகாசமா வந்து காயத்துக்கு அக்கறை பட வேணாம்” என்றான் விஷ்வா.
“ஹப்பா! திரும்பவும் முதல்லேருந்தா? ஆள விடுங்க” என சொல்லி கையெடுத்துக் கும்பிட்டாள் அவள்.
“இவளா பேசுவா, நாம ஏதும் சொன்னா ஆள விடாம்!” என சொல்லிக் கொண்டே ஆடை மாற்றிக் கொண்டான். காயத்துக்கு புதிதாக ட்ரெஸிங் செய்ய பட்டிருந்ததை கண்டவள் நிம்மதியடைந்தாள்.
“நான் ரொம்ப டயர்டா இருக்கேன், டின்னர் ரூமுக்கு அனுப்பி வை” என சொல்லி பக்கத்து அறைக்கு சென்று விட்டான்.
இரவு உணவின் போது தாத்தாவை பார்த்தாள். விருந்து பற்றி கேட்டார் தாத்தா. நடந்த களேபரங்கள் குறித்து ஏதும் சொல்லாமல் நல்ல படியாக முடிந்தது என மட்டும் சொன்னாள்.
விஷ்வா சாப்பிட வரவில்லையா என அவர் கேட்டதற்கு, சோர்வாக இருக்கிறார் என்றாள்.
“அப்படி என்ன வெட்டி முறிச்சிட்டான்? விருந்து சாப்பிட்டு டயர்ட் ஆகுறது இவனாதான் இருப்பான்” என்றவர், சில நொடிகள் கழித்து, “உடம்புக்கு வேற ஏதும் இல்லையே மா, எதுன்னா கூட சொல்ல மாட்டான், எல்லாம் பார்த்து பார்த்து நாமதான் கவனிக்கணும், அவன் பாட்டி அப்படி கெடுத்து வச்சிருக்கா அவனை” என கவலையாக சொன்னார்.
“நல்லாருக்கார் தாத்தா, நான் பாத்துக்கிறேன்” என புன்னகையுடன் சொல்லி அவரின் கவலையை போக்கினாள்.
வேலையாள் மூலமாக அல்லாமல் அவளே உணவு எடுத்துக் கொண்டு அவனிடம் சென்றாள். மருத்துவரிடம்தான் கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். உறக்கம் வரும் போல தெரியவில்லை, நல்ல தூக்க மருந்தாக கொடுத்து அனுப்புங்கள் என கேட்டுக் கொண்டிருந்தான்.
ஏற்கனவே எல்லாம் கொடுத்தாகி விட்டது என மருத்துவர் சொல்லியிருப்பார் போலும், “அப்போ வேலை செய்யாத மருந்து கொடுத்தீங்களா? வலியும் குறைஞ்ச பாடா இல்லை, ஏதாவது இன்ஜெக்ஷன் போட்டுவிட்டு போங்க” என்றான்.
இரவுக்கான மருந்தை எடுத்துக் கொள், கண்டிப்பாக உறக்கம் வரும் என சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார் மருத்துவர்.
சலிப்பாக கைப்பேசியை படுக்கையில் போட்டான் விஷ்வா.
“நைட் மெடிசன் எடுத்தா வலியும் குறையும், தூக்கமும் வரும், வாங்க சாப்பிடுங்க” என்றாள் வேதா.
அவன் அவளை மறுப்பாக பார்த்து விட்டு காயம் இருந்த இடத்தை தடவிக் கொண்டே அங்குமிங்கும் நடந்தான். மெல்ல அவனருகில் சென்றவள் அவனது கை பிடித்து அழைத்து வந்து அமர வைத்தாள்.
சித்தார்த் அடித்ததை விட, அவனை ஒன்றும் செய்யாமல் விட்டு வந்ததுதான் அவனை வெகுவாக பாதித்தது. அதையே யோசித்து யோசித்து தலைவலியும் சேர்ந்து கொள்ள, உணவு பரிமாற பட்டிருந்த தட்டை தள்ளி வைத்து நெற்றியை பிடித்துக்கொண்டான்.
“இதென்னங்க குழந்தை மாதிரி சாப்பாடு வேணாம்னு, ம்… ஒழுங்கா சாப்பிடுங்க” என லேசாக அதட்டினாள்.
“கண்ண மூடினா அந்த ராஸ்கல் வந்து நின்னு சிரிக்கிறான், அவன்லாம் எம்மேல கை வைப்பான், அவனை அப்படியே விட்டுட்டு வந்திருக்கேன் நான், எனக்கு சாப்பாடு ஒரு கேடு” என்றான்.
“கண்ண மூடி நினைச்சு பார்க்க எவ்வளவோ இருக்கும் போது, நீங்க ஏன் அவனை பத்தி நினைக்குறீங்க?” எனக் கேட்டுக் கொண்டே இட்லியை சட்னியில் தோய்த்து அவன் முன் நீட்டினாள்.
அவளது கண்களில் தெரிந்த கனிவில் அவனால் மறுக்க முடியவில்லை.
“தப்பு செய்றவங்கள அடிச்சுதான் தண்டிக்கணும்னு இல்லை, ஒன்னும் செய்யாம ஒதுங்கி இருந்து பாருங்க, அதனால நீங்க குறைஞ்சு போயிட மாட்டீங்க. ஃபேக்டரில ரொம்ப வேலையா? நீங்க வீட்டுக்குத்தான் வந்திருப்பீங்கன்னு நினைச்சேன்” என பேசிக் கொண்டே அவளே அவனுக்கு ஊட்டி விட்டாள்.
“அவசர வேலை அவசர வேலைனு அப்பாவும் பொண்ணும் அளந்து விட்டீங்க, நிஜமாவே அங்க அப்படி ஆகிப் போச்சு” என்றான்.
“இப்ப எல்லாம் சரியாகிடுச்சா?” என அவள் கேட்டதற்கு ஆம் என்பதாக தலையாட்டினான்.
அவன் அளவுக்கு மீறி சாப்பிட்டுக் கொண்டே இருக்க, “இவ்ளோ பசியை வச்சுக்கிட்டுத்தான் சாப்பிட மாட்டேன்னீங்களா?” எனக் கேட்டாள்.
அவள் கேட்ட பிறகுதான் வயிறு நிறைந்து விட்டதை உணர்ந்தவன், போதும் என்றான்.
“ஹையோ நான் சொன்னதாலையா? இந்த ஒரு இட்லி மட்டும் சாப்பிடுங்க”
“இல்லயில்லை, வயிறு ஃபுல், போதும்” என அவன் சொல்லவும் மிச்சமிருந்த இட்லியை அவளே சாப்பிட்டுக் கொண்டாள்.
“நீ இன்னும் சாப்பிடலையா?”
“சாப்பிட்டேன், வேஸ்ட் பண்ண வேணாம்னு இதையும் வாய்ல போட்டுக்கிட்டேன்” என்றவள் பாத்திரங்களை கீழே எடுத்து செல்ல, தொள தொளப்பாக ஒரு டி சர்ட்டை மாட்டிக் கொண்டு அவனும் அவளுடன் நடந்தான்.
என்னவென அவள் கேட்டதற்கு நடக்க போவதாக சொல்லி தோட்டம் சென்று விட்டான். பாத்திரங்களை சமையலறையில் வைத்தவள் மீண்டும் அறைக்கு சென்று அவனுக்கான மாத்திரைகளையும் தண்ணீர் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு தோட்டத்திற்கு வந்தாள்.
அவளை கண்டதும் அவனுக்கு இதமாக இருந்தது. அவள் உடைத்து கொடுத்த மாத்திரைகளை கஷ்டப்பட்டு விழுங்கினான்.
“என்ன ஏதுன்னு கேட்காம கண்ண மூடிட்டு முழுங்குறீங்க, எம்மேல அவ்ளோ நம்பிக்கையா?” என கிண்டலாக கேட்டாள்.
“சாப்பாடு கொடுத்த கை அப்படி தப்பா என்னத்த தந்திட போவுது?” எனக் கேட்டான்.
“ஹ்ஹ்ஹா பார்டா! தப்பு செய்றவங்க இருக்காங்கதான், அவங்கலாம் யாருக்கும் ஊட்டி விட்ருக்க மாட்டாங்களா என்ன?”
“மனசார ஊட்டி விட்டவங்களுக்கு தப்பு செஞ்சிருக்க மாட்டாங்க வேதா”
“நான் மனசார செய்தேன்னு தெரியுமா உங்களுக்கு?”
“அப்படி நீ செய்யலைனா ரெண்டு வாய் கூட என்னால சாப்பிட்டிருக்க முடியாது. என் பாட்டிக்கு அப்புறம் நீ ஊட்டி விட்டுத்தான் சாப்பிட்டிருக்கேன்” என கொஞ்சம் நெகிழ்வுடனே சொன்னான். அவன் சொன்ன விதத்தில் அவளுக்கும் என்னவோ போலானது.
வேதாவுக்கு அம்மா ஊட்டி விட்டு சாப்பிடவென்றால் மிகவும் பிடிக்கும். அவளுக்கு கல்லூரி படிப்பெல்லாம் சென்னையில்தான். விடுமுறைக்கு வந்து விட்டு சென்னைக்கு திரும்பும் அன்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டுதான் கிளம்புவாள்.
“ரயிலுக்கு நேரமாவுது இன்னும் சாப்பிடலையா நீ?” என கடிந்து கொண்டே உணவூட்டி விடுவார் வாசுகி. பசியே இல்லை என சொல்லி விட்டு அம்மாவின் கையில் மள மள என சாப்பிடுவாள். கடைசி வாய் அம்மா கொடுக்கும் போது முடிந்து விட்டதா என ஏக்கமாக பார்ப்பாள்.
வாயை துடைக்கும் முன்னரே அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு இன்னும் நாலைந்து வசவுகளை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டுதான் அப்பாவின் வண்டியில் ஏறுவாள்.
ஆதிரனுக்கு கூட இந்த வயதிலும் அம்மா ஊட்டி விட்டு பார்த்திருக்கிறாள். அத்தையின் வீடு சென்றால் அவரின் கையால் சாப்பிட அவளுக்கும் சித்துவுக்கும் போட்டியே நடக்கும்.
வேதா கல்லூரி படிக்கும் காலத்தில் அவள் யாரையும் காதலிக்கவில்லை, அதுதான் விஷ்வாவை மனதில் நினைக்க வைத்து விட்டார்களே. ஆனால் அவளை விரும்பியவர்கள் உண்டு, ஒன்றிரண்டு பிரச்சனைகள் ஆனதும் உண்டு. எல்லாம் அம்மாவிடம் வந்து சொல்லி விடுவாள். அப்பா உடனே சென்னைக்கு வந்து பிரச்சனையை தீர்த்து வைப்பார்.
ஆதி, சித்தார்த் இருவரும் செய்யாத சேட்டைகள் இல்லை, அவர்களின் அப்பாக்கள் வீட்டில் கண்டித்தாலும் வெளியில் மகன்களை விட்டுக் கொடுக்காமல் பார்த்துக் கொள்வார்கள்.
விஷ்வாவின் குழந்தை பருவத்திலும் சரி, பருவ வயதிலும் சரி அவனுக்கான ஏக்கங்கள் ஆழ் மனதில் இருக்கலாம் என நினைத்தவள், “உங்க ஸ்கூல் டேஸ் காலேஜ் டேஸ்லாம் எப்படி விஷ்வா, சொல்லுங்களேன்” என்றாள்.
விஷ்வா பள்ளிக்கல்வியில் இருந்த போதே அவனது பாட்டி தவறி விட்டார். அதன் பின் அவனை கொடைக்கானலில் உள்ள கட்டுப்பாடுகள் நிறைந்த ரெஸிடென்சியல் பள்ளியில் சேர்த்து விட்டார் தாத்தா.
“ஸ்கூல்ல சொல்லிக்கிற மாதிரி ஏதும் இல்லை, செம போர்” என்றான்.
மேற்படிப்புக்காக பேரனை வெளிநாட்டுக்கு எல்லாம் அனுப்பாமல் உள் நாட்டிலேயே படிக்க வைத்து புண்ணியம் கட்டிக் கொண்டார் தாத்தா. அடிதடி ரகளைக்கெல்லாம் குறைவில்லாமல் படித்திருக்கிறான். எதுவும் தாத்தாவின் காதுக்கு போகாது, அவன் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள சிறந்த நண்பர்கள் இருந்தார்களாம்.
“ஹையோ அங்கேயும் இந்த ரவுடிஸம்தானா?” என்றாள்.
“வேறென்ன எதிர் பார்த்த? பொண்ணுங்க, லவ் இதெல்லாம் எனக்கு அலர்ஜி, உவ்வே” என்றான்.
சட்டென திகைத்தவள் வாய் விட்டு சிரித்தாள்.