அத்தியாயம் -15.2
அகல்யா, குணா தம்பதிகளுக்கு சித்தார்த் பிறந்தான். அதற்குள் அம்மாவை மறந்து பாட்டியை முதன்மை பராமரிப்பாளராக ஏற்றுக் கொண்டு விட்டான் விஷ்வா.
‘இரண்டு குழந்தைகளை உன்னால் எப்படி பார்த்துக் கொள்ள முடியும்?’ என அகல்யாவின் வீட்டு பெரியவர்கள் கேட்க, ‘உனக்கு சித்தார்த் இருக்கிறான், விஷ்வா வடிவத்தில்தானே நாங்கள் எங்கள் மகனை பார்க்க முடியும்?’ என கண்ணீர் விட்டனர் பிரபுவின் பெற்றோர்.
விஷ்வாவை தன்னுடன் வைத்துக் கொள்ளும் வாய்ப்பை மொத்தமாக இழந்து விட்டதை உணர்ந்தார் அகல்யா.
பொருளாதார ரீதியாக சிக்கல்களை சந்திக்கும் கணவர், புகுந்த வீட்டு கடமைகள், தன்னை நம்பி உலகிற்கு வந்திருக்கும் இன்னொரு உயிர் என கவலை, பொறுப்பு, கடமைகளால் சூழப் பட்ட அகல்யாவால் முதல் மகனை விட்டு தள்ளி நிற்க வேண்டிய துரதிஷ்ட வசமான நிலையிலிருந்து விடுபட முடியவில்லை.
பாட்டியுடன் ஒட்டுதலாக வளர்ந்த விஷ்வாவுக்கு வயது கூடும் போது, அம்மாவை அந்நியமாக பார்த்து நிரகாரிக்கவும் ஆரம்பித்து விட்டான்.
விஷ்வாவின் நான்காவது பிறந்த நாளுக்கு அவனை காண குடும்பத்தோடு வந்திருந்தார் அகல்யா. அவர் வாங்கி வந்திருந்த ஆடையை போட விடாமல், அவரை உணவூட்ட விடாமல் என தன் கைக்குள்ளேயே பேரனை வைத்துக் கொண்டார் சங்கரி.
மனம் பொறுக்காத சந்திரன் கோவமாக ஏதோ சொல்லி விஷ்வாவை வாங்கி தன் தங்கையின் கையில் கொடுத்தார். அது சங்கரியின் மனதை ஆழமாக பாதித்து விட்டது. சந்திரன் மீது ஏற்கனவே மன வருத்தத்தில் இருந்தவருக்கு வெறுப்பும் வர அந்த நிகழ்வு முக்கிய காரணமாகி விட்டது.
அகல்யாவின் பெற்றோர் ஒவ்வொருவராக இறைவனடி சேர்ந்தனர்.
மகனை இழந்து விட்ட சண்முகநாதன் தொழில்களில் தன்னை மூழ்கடித்துக் கொள்ள, விஷ்வாவை அதிகம் கவனிக்கவில்லை. அவனுக்கு அவனுடைய பாட்டிதான் எல்லாமே.
சங்கரியும் தன் பேரனை உயிரையே ஊட்டி வளர்த்தார், கூடவே தன்னை விட்டு பேரன் பிரியக் கூடாது என்ற எண்ணம், மருமகள் நினைத்திருந்தால் மகனை இழுத்து பிடித்து வாழ வைத்திருக்கலாமே என அகல்யா மீதான கோவம், பேரனுக்கு தவறான போதனைகளையும் சேர்த்து ஊட்ட ஆரம்பித்து விட்டார்.
உன்னை பெற்றவள் அவளது முறைப் பையனை விரும்பினாள், வீட்டினரின் கட்டாயத்தால் உன் அப்பாவை மணந்து கொண்டாள், கணவனுடன் சேர்ந்து வாழ மனமில்லாமல் விவாகரத்து பெற்று சென்று விட்டாள், அந்த விரக்தியில் என் மகன் உயிரை விட்டு விட்டான், பிறகு உன்னை மட்டும் அவளிடம் எப்படி விடுவது என எங்களுடன் அழைத்து வந்து விட்டோம் எனதான் விஷ்வாவுக்கு விவரம் வந்த போது சொல்லியிருந்தார் சங்கரி.
அகல்யாவின் பெற்றோர் உயிரோடு இல்லாத காரணத்தால் அனைத்தையும் செய்தது அகல்யாவின் அண்ணன்தான் என சந்திரனையும் சேர்த்து துரோகியாக விஷ்வாவிடம் சித்தரித்து விட்டார்.
பாட்டி தவறியதும் இப்போதாவது மகனை என்னுடன் வைத்துக் கொள்கிறேன் என வந்து நின்றார் அகல்யா. பதின் பருவத்தில் நின்ற விஷ்வா அதற்கு சம்மதிக்கவே இல்லை. அவன் பேசிய பேச்சுக்களை வைத்துதான் மகனின் மனதில் தான் என்னவாக பதிந்து நிற்கிறோம் என அறிந்து துடித்துப் போனார் அகல்யா.
உன் அம்மா நல்லவள்தான், உன் அப்பாதான் ஏதோ பிடித்தம் இல்லாமல் இருந்திருக்கிறான், படித்த நேரத்தில் அவனுக்கு வேறு காதல் இருந்திருக்கலாமோ என்னவோ, ஆகவே அம்மாவை வெறுக்காதே என பேரனுக்கு எடுத்து சொன்னார்தான் தாத்தா. எதுவும் அவனிடம் எடுபடவில்லை.
சிறு வயதில் தான் நம்பும் ஒருவரால் சொல்லப் படும் விஷயங்களை குழந்தை நம்பத்தானே செய்யும்? வளர்ந்து பிறகும் கூட விஷ்வாவால் பாட்டி வாயிலாக தன் மனதில் பதிந்தவற்றை அலசி ஆராயவோ பாட்டியின் கூற்றுக்களை சந்தேகிக்கவோ முடியவே இல்லை.
அகல்யாவுக்கு என்ன… நல்ல வாழ்க்கை கிடைத்து விட்டது, என் பேரனுக்கு என்ன… நன்றாக வளர்த்து ஆளாக்கி, நான் வளர்த்த தொழில்கள் அனைத்தையும் கொடுத்து உயர்வான இடத்தில் நிறுத்தி விட்டேன். என் மகனை பற்றிய உண்மையை அவனது மகனிடம் சொல்லி எதற்காக அவனது பிம்பத்தை சிதைத்துக் காட்ட வேண்டும்? அப்பாவாக, தாத்தாவாக, மாமனாராக என் கடமைகளை சரியாகவே செய்திருக்கிறேன்.
விஷ்வாவிடம் உண்மையை சொல்லி அவனது அம்மாவுடன் இணைத்து வைக்க வேண்டும் என மனசாட்சி சொன்ன போதெல்லாம் மேற்கண்ட படி நினைத்துதான் தன்னை நியாய படுத்திக் கொண்டார் சண்முகநாதன்.
விஷ்வாவுக்கு சிறந்த துணையாக வேதா இருப்பாள் என்ற நம்பிக்கை சண்முகத்தின் மனதில் ஆழமாக வேர் விட்டிருக்கா விட்டால் வேதாவுக்கும் இந்த உண்மையை சொல்லியிருக்க மாட்டார்.
தனக்கு வயதாகி விட்டது, தனக்கு ஏதோ ஆக போகிறது, பேரனின் வாழ்க்கை சிக்கலில் உள்ளது, வேதாவை கன்வின்ஸ் செய்தே ஆக வேண்டும் என்ற நிலையில்தான் யாரிடமும் சொல்லாத உண்மையை அவளிடம் பகிர்ந்து கொண்டார்.
விஷ்வா பாவம் என வேதாவுக்கு காட்சி படுத்த, அவனது கோவத்தில் நியாயம் உள்ளது என சித்தரிக்க அதை தவிர அவருக்கு வேறு வழி இருந்திருக்கவில்லை.
அதனால்தான் விஷ்வாவின் பார்வையில் தன் அத்தையும் அப்பாவும் எப்படி என அவளால் யோசிக்க முடிந்தது. அவனை உண்மையாக நேசித்தவளுக்கு அந்த நேரம் அவனுடன் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது.
இதை வேதா ரகசியமாகவே வைத்திருப்பாள் என எதை வைத்து நம்பினாரோ தாத்தா, அவருக்குதான் வெளிச்சம். ஆனால் அன்றிலிருந்து வேதாவுக்குள் போராட்டம். தாத்தா சொல்லாமல் விட்டு தாயுக்கும் மகனுக்கும் அநியாயம் செய்தார், அதையே தானும் செய்கிறோமே என அவளுள் உறுத்தல்.
தாத்தாவின் நம்பிக்கையை உடைக்காமல் இருப்பதா? அல்லது அம்மாவையும் மகனையும் சேர்த்து வைத்து மிச்சமிருக்கும் காலத்திற்காவது அவர்களுக்கான நியாயத்தை செய்வதா? இவ்விரு கேள்விகளுக்கு இடையிலும் நின்று போராடிக் கொண்டிருந்தாள் வேதா.
விஷ்வாவுடன் வாழ்ந்த இந்த குறுகிய காலத்திலேயே இந்த உண்மை தெரியாத வரை விஷ்வா மாறப் போவதில்லை என்பதை விளங்கிக் கொண்டிருந்தாள். மனசாட்சி படி உண்மையை சொல்லி விட்டாள்.
தான் சொல்லப் போகும் விஷயம் விஷ்வாவுக்கு பெரிய அதிர்ச்சியை கொடுக்கும், அவனது மன நலனை பாதிக்கலாம் என்றெல்லாம் வேதாவுக்கு தெரியும். தெரிந்தேதான் இந்த முடிவை எடுத்தாள்.
நான் அவனுடன் இருந்து அனைத்தையும் சரி செய்வேன் என்ற நம்பிக்கை கொண்டு உண்மைகளை உடைத்து சொல்லியிருந்தாள்.
பொங்கி வந்த வெள்ள நீர் திடீரென உறை பனியாகி விட்டது போன்றதொரு நிலையில் இருந்தான் விஷ்வா.
“உங்க அம்மா எப்படியெல்லாம் வேதனை பட்ருப்பாங்கன்னு யோசிங்க” என வேதா சொல்ல, அவன் எந்த உணர்வையும் காண்பிக்காமல் அமர்ந்திருந்தான்.
“கணவன் மனைவியா நமக்குள்ள நம்மகிட்ட என்னென்ன எதிர் பார்ப்புகள் இருக்கு, அப்படித்தானே உங்க அம்மாவுக்கும் உங்கப்பாகிட்ட இருந்திருக்கும்? ரெண்டு வருஷம் உங்கப்பாவோட எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்ந்திருப்பாங்க? ஒரு சதவீதம் கூட உங்களை கைவிட அவங்க நினைக்கல, சுத்தி உள்ளவங்க எல்லாரும்… முக்கியமா உங்க தாத்தா பாட்டி ரெண்டு பேரும் நல்லா பிளே பண்ணி…” அவள் சொல்லிக் கொண்டிருக்க, ‘போதும்!’ என்பது போல கை காட்டி அவளை பேச விடாமல் செய்தான்.
தரையை நோக்கி வெறித்திருந்த அவனது பார்வையும் ஏறி இறங்கிய மார்புக் கூடும் உள்ளுக்குள்ளிருந்து புறப்பட்டு வந்த உணர்ச்சி பிழம்பை வெளிப் படுத்தாமல் இறுக்கிப் பிடித்ததில் இறுகிப் போயிருந்த அவனது உடலும் அதை தாள முடியாமல் துடித்துக் கொண்டிருந்த கன்னத்துச் சதைகளுமாக இருந்த விஷ்வாவை பார்க்க பார்க்க அவளுக்கு பயமானது.
எதை யோசிப்பது என விஷ்வாவின் மூளை குழம்பியிருந்தது. ஏதேதோ சம்பவங்கள் அவனுக்கு நினைவுக்கு வர, மின்சாரம் விட்டு விட்டு பாய்வது போல அவனை உலுக்க ஆரம்பித்தது.
தனக்காகவே வாழ்ந்த தாத்தா பாட்டியை கெட்டவர்களாக ஏற்றுக்கொள்ள மறுத்தது அவனது மனம். பாட்டியின் இழப்புக்கு பிறகு அன்புக்கும் அக்கறைக்கும் எத்தனை ஏங்கியிருப்பான்? எத்தனை முறை கண்களில் கெஞ்சுதலோடு அவனிடம் வந்து நின்று நிராகரிப்பை பரிசாக பெற்றுக் கொண்டு சென்றிருப்பார் அவனது அம்மா?
பல தொழில்களை திறம் பட நிர்வகிப்பவன்தான், இன்று இந்த நேரம் தன் உணர்வுகளை சமாளிக்க தெரியாமல், இதை எப்படி கடப்பது என புரியாமல், ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து வெளிவர முயலாமல் அதற்குள் மூழ்கிக் கொண்டிருந்தான்.
கணவனருகில் வேதா செல்ல, அவளை தன்னிடம் நெருங்க விடாமல் கை கொண்டு தடுத்து நிறுத்தினான்.
“விஷ்வா ரிலாக்ஸ், மனசுல உள்ளதை வாய் விட்டு பேசிடுங்க, இப்படி இருக்காதீங்க” என கெஞ்சலாக சொன்னாள் வேதா.
அவளை நிமிர்ந்து நோக்கிய விஷ்வாவின் கண்களில் நீர்ப் படலம் ஒன்று படரத் தயாராகியது. அதைத்தான் அவளும் எதிர் பார்த்தாள். சட்டென ஆவியாவது போல நீர் மறைந்து அவனது கண்கள் தெளிய, விருட் என எழுந்தவன் வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியேறி விட்டான்.
திகைத்த வேதா சுதாரித்துக் கொண்டு அவனை தேடிக் கொண்டு வெளியில் ஓடினாள்.
கீழே அவன் நடப்பது தெரிந்து வேகமாக மாடிப் படிகளில் இருந்து இறங்கிச் சென்றாள். வாயில் நோக்கி அவள் ஓட, அவனது தலை மறைந்து விட்டது. இந்த நேரம் அவனை தனியாக விட விரும்பாதவள் இன்னும் வேகமெடுத்து ஓடிச் சென்றாள்.
விஷ்வாவின் கார் நுழைவு வாயிலை கடந்து சென்றிருந்தது.
வேதாவுக்குள் திகில் பரவத் தொடங்கியது.