நீயென் நாயகி -15

அத்தியாயம் – 15. 1

வேதா சொன்னதை கேட்டு உறைந்து போயிருந்தான் விஷ்வா.

செல்வபிரபு, ராஜேஷ்குமார் இருவருமே விடுதியில் உயிர் அற்றவர்களாகத்தான் மீட்கப் பட்டனர்.

ராஜேஷ்குமார் அரசியல் பின்புலம் வாய்ந்த குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தைக்கும் சண்முகத்தை போன்றே முன்னரே இந்தக் காதல் தெரியும். இருவருமே முன் நின்றுதான் இவர்களை கண்டித்து பிளாக் மெயில் செய்து ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளாத வண்ணம் பார்த்தும் கொண்டனர்.

அதனால்தான் மகனுக்கு பிடிவாதமாக அகல்யாவுடன் திருமணத்தை முடித்திருந்தார் சண்முகம்.

ராஜேஷ்குமார் அப்போது வரையிலுமே வேறு யாரையும் திருமணம் செய்து கொண்டிருக்கவில்லை. மகனின் மனம் மாறட்டும் என அவரின் தந்தையும் காத்திருந்தார். பிரபுவின் விவாகரத்து செய்தி கேள்வி பட்ட உடனே மீண்டும் பழைய உறவு புதுப்பித்துக் கொள்ளுமோ என்ற பயத்தில், தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மகனுக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்.

தங்கள் தந்தைகளை மீறிக் கொண்டு எங்கே சென்றாலும் வாழ முடியாது என அவர்களுக்கு தெரியும். அதனால்தான் அவர்களின் வாழ்க்கை இப்படி விபரீதத்தில் வந்து முடிந்தது.

இரு குடும்பங்களின் கவுரவம் அவர்களின் முன்னே நின்றது. மகனை இழந்த துக்கத்தை தாங்கிக் கொண்டு விரைந்து செயல்பட்டார் சண்முகநாதன். பண பலத்தோடு அரசியல் பலமும் வாய்ந்த ராஜேஷின் அப்பாவும் அவரோடு சேர்ந்து கொண்டு செயல் பட்டார்.

விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க பணத்தை தண்ணீராக செலவு செய்தனர். பணத்தால் கவுரவத்தை காக்க முடிந்ததே தவிர போன உயிரை திரும்ப கொண்டு வர முடியவில்லை.

மனைவியை பிரிந்த சோகம்தான் மகனின் இறப்புக்கு காரணம் என்றே ஊர் உலகத்திற்கு அறிவித்தார் சண்முகநாதன். ராஜேஷ் பற்றிய செய்தியும் வெளிவராமல் போனதால் இங்கு உள்ளவர்களுக்கு வேறு சந்தேகங்கள் எழவில்லை.

சங்கரிக்கே இந்த உண்மை எல்லாம் தெரியாது, அகல்யாவுக்கோ பெருத்த அதிர்ச்சி. தான் அவரை விட்டு வந்திருக்க கூடாதோ என குற்ற உணர்வில் கைக் குழந்தையை கூட கவனிக்காமல் பேதலித்து போனவர் போலாகி விட்டார்.

பிரபுவின் இறப்பு செய்தி தெரிந்ததுமே சந்திரன் அந்த வீட்டுக்கு வந்து விட்டார். பூத உடலோடு சண்முகம் வந்து சேர்வதற்குள் அங்கு எல்லா ஏற்பாடுகளையும் கவனித்தது அவர்தான்.

மகனின் இறுதி காரியங்களில் அகல்யாவை வைத்து எல்லா சடங்குங்களும் முறையாக செய்ய வேண்டும் என சொன்னார் சங்கரி. விவாகரத்து ஆகி விட்ட போது அதற்கு அவசியமில்லை, அவளது மன நிலையை அது பாதிக்கும், எந்த சடங்கு செய்யவும் கண்டிப்பாக என் தங்கையை விட மாட்டேன் என உறுதியாக சொல்லி விட்டார் சந்திரன்.

அங்கேதான் சங்கரிக்கு சந்திரன் மீது மனக் கசப்பு உண்டாக ஆரம்பித்தது.

பிரபுவின் முகத்தை பார்க்க கூட அகல்யா வரவில்லை. வரக்கூடாது என்றில்லை, வர முடியாத அளவுக்கு உடல் நலம் சீர்கெட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு இருந்தார்.

துக்க நிகழ்வில் பங்கெடுக்க விஷ்வாவை தூக்கிக் கொண்டு அகல்யாவின் பெற்றோர்தான் வந்தனர்.

மகளுக்கு உடல்நிலை முடியவில்லை, இதையெல்லாம் பார்த்தால் அவள் மன நலன் பாதிக்க பட்டு விடும், அவள் வாழ வேண்டியவள் என அகல்யாவின் பெற்றோர் சொன்னதை சண்முகம் ஏற்றுக்கொண்டு விட்டார். இதெல்லாம் சுத்த பொய் என நம்பிய சங்கரிக்கு மருமகள் மற்றும் அவளது வீட்டினர் மீது பெரும் கோவம்.

மகனின் இறுதி சடங்கை முடித்துக் கொண்டு மறு நாளே அகல்யாவை காண சென்றார் சண்முகம். ‘உன் மீது தவறில்லை, அவன் கோழையாகி போனான், நீ உடன் இருந்திருந்தாலும் இப்படித்தான் ஆகியிருக்கும், அவனது விதியில் இப்படித்தான் எழுத பட்டிருக்கிறது’ என சமாதானம் சொன்னார்.

ஒரு சிறு பெண்ணின் வாழ்க்கை தன்னால் குலைந்து போய் விட்டதே என்ற குற்ற உணர்வில் இருந்தவர், மகன் மறைந்த ஒரு மாத காலத்திலேயே அகல்யாவுக்கு இன்னொரு திருமணம் செய்வது குறித்த பேச்சை தொடங்கி விட்டார்.

சந்திரனும் தன் சொந்தத்திலேயே மாப்பிள்ளை இருப்பதாக சொன்னார். இனியாவது மருமகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்ற அக்கறையில், தன் சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்ப்பதாக சொன்னார் சண்முகம். பேரனையும் அவர் பார்க்க வேண்டுமே, அகல்யாவின் கணவன் தன் பக்கமாக இருந்தால் பேரன் தங்களுடன் இருப்பதில் பிரச்சனை இருக்காது என நினைத்தார்.

வேண்டாம் என சமாளித்து பார்த்தார் சந்திரன், பேரனை காரணம் காட்டி இதுதான் சரியாக வரும் என உறுதியாக நின்றார் சண்முகம்.

வேறு வழியின்றி அகல்யாவும் குணசேகரும் முன்பே விரும்பியதை அவரிடம் சொல்லி விட்டார் சந்திரன். அந்த உண்மை தெரியாது போயிருந்தால் சண்முகம் இன்னொரு முறையும் அகல்யாவுக்கு கெடுதல் செய்ய நேரிட்டிருக்கும்.

இதெல்லாம் இவர்கள் இடையிலான பேச்சுக்கள் மட்டுமே, அகல்யா இன்னொரு திருமணம் பற்றியெல்லாம் சிந்திக்கும் நிலையிலேயே இல்லை.

 சில மாதங்கள் போகட்டும், அகல்யாவிடம் நானே பேசி சம்மதத்தை வாங்குகிறேன் என உறுதி தந்தார் சண்முகம்.

மகனை பற்றிய முக்கியமான விஷயத்தை ரகசியம் போல காப்பவர், அகல்யா குணசேகரை விரும்பியதையும் மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்திருக்கலாம். தன் மனைவியும் அகல்யாவின் நல் வாழ்க்கையை விரும்புவாள் என்ற தவறான கணிப்பில் சங்கரியிடம் சொல்லி விட்டார்.

அதனால்தான் தன் மகனுடன் அகல்யா நன்றாக வாழவில்லை என முடிவு கட்டி விட்டார் சங்கரி.

இன்னொரு கல்யாணம் என்ற போது அத்தனை எளிதாக சம்மதித்திருக்கவில்லை அகல்யா. அவர் பிறந்த வீட்டோடு வந்து விட்டதால் நிச்சயக்கப் பட்டிருந்த சந்திரன் வாசுகி திருமணம் நடைபெறாமல் இருந்தது.

நீ மறுத்தால் வேறு யாரையும் திருமணமே செய்து கொள்ளாமல் தனியாகவே இருந்து விடுவேன் நான் என்றார் குணசேகர்.

வீட்டினரும் சண்முகமும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அகல்யாவிடம் மறுமணம் பற்றியே பேசினார்கள்.

நாட்கள் செல்ல செல்ல குணசேகரை மறுமணம் செய்து கொள்ள அகல்யாவை சம்மதிக்க வைத்து விட்டனர். அப்போது விஷ்வாவுக்கு ஒரு வயது.

மகன் இறந்து ஒரு வருடம் ஆவதற்குள் இன்னொரு கல்யாணம் வரை செல்கிறாளே என அப்போதும் சங்கரிக்கு அகல்யா மீது கட்டுக்கடங்காத கோவம். மகன் கொஞ்சம் வளரட்டுமே என அகல்யாவும் மறுமணத்துக்கு அவகாசம் கேட்டார்தான். குணசேகரின் வயதை, அவரின் பெற்றோரின் விருப்பத்தை காரணம் காண்பித்தார்கள்.

அப்போதும் மசியாத அகல்யாவிடம், “விஷ்வாவுக்கு இப்போ எந்த நினைவும் தெரியலை, குணாவை அப்பாவா நினைச்சு வளரணும்னா இப்பவே கல்யாணம் பண்ணிக்கிட்டாதானே?” என்ற கேள்வியை முன் வைத்தனர்.

அகல்யா குணசேகர் திருமணத்துக்கு சண்முகநாதன் மட்டும்தான் சென்றார், சங்கரி வரவில்லை.

ஒரு காலத்தில் காதலித்தவரை மணந்து கொண்டாலும் அவருடன் வாழ ஏதுவான மனநிலை இல்லாத அகல்யா குழந்தையுடனே எப்போதும் இருந்தார். நெருக்கடி கொடுத்து மணந்து கொண்டோம், வாழ்க்கையை தொடங்கவாவது அவளுக்கு நேரம் தர வேண்டும் என குணசேகரும் காத்திருந்தார்.

செல்வபிரபு உடனான இரண்டு வருட மண வாழ்க்கையில் அகல்யாவுக்கு மிஞ்சியது விரக்தி மட்டுமே, குணசேகரின் அன்பும் அரவணைப்பும் பொறுமையும் இயல்பாக அவரை கணவரை நோக்கி நகர்த்தியது. குணாவும் விஷ்வாவிடம் அன்பாகவே நடந்து கொண்டார்.

வாழ்க்கை நன்றாக செல்கிறதே என அகல்யா மகிழ்ச்சியடைந்திருந்த நேரம் சண்முகம் வந்து நின்றார்.

‘சங்கரி மிகவும் நலிந்து போய் விட்டாள், எனக்கும்தான் ஏன் வாழ்கிறோம் என்றே தெரியவில்லை. விஷ்வா எங்களுடன் சில நாட்கள் இருக்கட்டும்’ என மருமகளிடம் சொன்னார். அகல்யா சம்மதிக்கவே இல்லை. குணாவும் அது சரியாக வராது எனதான் சொன்னார். ஆனால் அவர்களின் பெற்றோர்கள் பிள்ளை அகல்யாவுடன் இருப்பதை காட்டிலும் அங்கே இருக்கட்டுமே எனதான் நினைத்தனர்.

சிறு குழந்தை மீது யாருக்கும் வெறுப்பு இல்லை, தாத்தா பாட்டியுடன்தானே இருக்க போகிறான், அவர்களுக்கும் யார் இருக்கிறார்கள், அத்தனை சொத்துக்களுக்கு ஒரே வாரிசாக வளரப் போகிறான், புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு இடையில் குழந்தை இருப்பதும் சரியாக வராதுதானே என பல காரணிகளை மனதில் வைத்துக் கொண்டு முடிவு செய்தனர்.

மகனை தன்னுடன் தக்க வைத்துக் கொள்ள தன்னால் முடிந்தளவு போராடினார் அகல்யா. யாரும் சண்டையிட்டிருந்தால் கூட மகனுடன் எங்கேயாவது வெளியேறியிருப்பார். பாசத்தை வைத்தே உணர்வு ரீதியாக அவருக்கு நெருக்கடி கொடுத்தனர்.

சங்கரி உடல்நிலை பாதிக்க பட்டு மருத்துவ மனையில் சேர்ந்தார், விஷ்வாதான் எங்களுக்கு மருந்து என சண்முகம் மீண்டும் வந்து நிற்கவும் மனமில்லா விட்டாலும் ‘கொஞ்ச நாட்களுக்குத்தானே…’ என மாமனாரின் கையில் மகனை தந்து விட்டார் அகல்யா.

இரண்டு வாரங்களுக்கு பின் மகனை திருப்பிக் கொடுங்கள் என கேட்ட போது சங்கரி மயக்கமே போட்டு விட்டார். வேறு வழியின்றி அகல்யாதான் மகனை அங்கே சென்று பார்த்து வந்தார்.

இதற்கிடையில் அகல்யா இரண்டாவதாக கருவுற்றார். கர்ப்ப காலம் மிகவும் படுத்தி எடுக்க ஆரம்பித்து விட்டது. அவ்வப்போது சந்திரன்தான் தங்கை மகனை அழைத்து வந்து காட்டுவார், ஆனால் விஷ்வா தங்கையுடன் இருந்தால் அகல்யாவின் வாழ்க்கைக்கு இடையூறாக அமையலாம் என கருதிய சந்திரனும் அவரது பெற்றோரும் தாயையும் சேயையும் சேர விடவில்லை.