அத்தியாயம் -14.2
“என்ன கஷ்டம் உங்களுக்கு? அப்பப்ப கடவுளை வந்து பாருங்க, அப்பத்தான் ஒரு பாசிட்டிவிடி கிடைக்கும்”
“நீ உம்முன்னு இல்லாம சிரிச்ச முகமா இருந்தாலே எனக்கு எல்லாம் நல்லதா நடக்கும்” என அவன் சொல்ல, எல்லா பற்களையும் காட்டி “ஈஈ…” என்றாள்.
“ஹேய் வேதா… உன்னைத்தான் உன் அம்மா வீட்டுக்கு போகலாம்னு சொல்லிட்டேன், அப்புறம் எவ்ளோ நாள் இப்படி இருப்ப? காண்டாகுதுடி” என்றான்.
“நீங்க சொல்றதையெல்லாம் கேட்டுக்க முடியாது. எப்ப தோணுதோ அப்போதான் போவேன்”
“சரி தோன்றப்ப போ. அப்படியே என் கூட சமாதானம் ஆகு. இப்படி முறைச்சுகிட்டு நிக்கவா கட்டாய படுத்தி இங்க அழைச்சிட்டு வந்தேன்?”
“உங்க கோவத்து மேல உங்களுக்குத்தான் கண்ட்ரோல் இருக்கணும். என்ன வேணா செஞ்சிட்டு நான் அப்படித்தான்னா ஒரு நாள் இல்லை ஒரு நாள் வெறுத்து போய்…” என்றவள் கோவத்தில் சொல்ல இருந்ததை உணர்ந்து சுதாரித்து, “சாயந்தரம் நேரத்துக்கு வந்திடுங்க, நான் இன்னிக்கு ஃபேக்டரி வரலை” என சொல்லி அவனிடமிருந்து நழுவப் பார்த்தாள்.
“நில்லுடி!” என அடித் தொண்டையில் சீறினான் விஷ்வா.
“ஷ்ஷ்ஷ் விஷ்வா, கத்தாதீங்க. அது கோவத்துல ஏதோ சொல்ல போயிட்டேன், ஏதும் மீன் பண்ணி பேசல” என சமாதானமாக சொன்னாள்.
“நான் இப்படி ஆனதுக்கு காரணமே உன் அத்தைதான். அதிகமான கெடு பிடிகளோட அன்பு கிடைக்காம வளர்ந்தவன் வேற எப்படி இருப்பான்? பாஸ்கட் பால் பிளேயர்டி நான், ஒரு மேட்ச்க்கும் என்னை ச்சீர் பண்ண யாரும் வந்தது இல்லை. தாத்தாக்கு இங்க உள்ளதையெல்லாம் பார்க்கவே நேரம் சரியா இருக்கும், அவரோட பி ஏ வை அனுப்பி வைப்பார். என்ன உடம்புக்கு வந்தாலும் யாரும் கூட இருந்தது இல்லை. சாதாரண ஃபீவருக்கு கூட ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணி நர்ஸ்தான் கேர் பண்ணிப்பாங்க. ஒரு கட்டத்துல எவ்ளோ வெறுப்பாகிடுச்சு தெரியுமா?” எனக் கேட்டு இரு கைகளாலும் தலையை பிடித்துக்கொண்டான்.
“விஷ்வா ரிலாக்ஸ்! நான் எப்பவும் உங்களை விட்டு போக மாட்டேன், கோவத்துல அப்படி சொல்ல போயிட்டேன், விடுங்க” என்றாள்.
“கோவத்துல நீ என்ன சொல்லியிருந்தாலும் எனக்கு பிரச்சனை இல்லை, அதென்ன விட்டுட்டு போயிடுவேங்கிற வார்த்தை? உன்னை சொல்லி என்ன ஆக போவுது? உன் அத்தை வளர்ப்புதானே நீ? அப்ப அந்தம்மா புத்திதான் உனக்கும் இருக்கும். எனக்கு என் அப்பாக்கு துரோகம் பண்ணின அந்தம்மா நல்லாதான் வாழுது, ம்ம்… வாழும் வாழும்… எவ்ளோ நாள் இப்படின்னு பார்க்கிறேன்” என்றான்.
“வேணாம் விஷ்வா பெத்த அம்மாவை திட்டாதீங்க”
“என்னிக்காவது ஒரு நாள்… உன் அத்தைகிட்ட பெத்த புள்ளைய ஏன் நினைச்சி பார்க்கலைன்னு கேட்ருக்கியா?” என அவன் கேட்க, “அப்புறமா பேசலாம் விஷ்வா” என சொல்லி வாயில் பக்கம் நடந்தாள்.
வேகமாக கதவை பூட்டியவன், “பதில் சொல்லாம ஒரு அடி நகர கூடாது, சொல்லிட்டேன்” என்றான்.
அவள் படுக்கையில் போய் விழ, கையை வலிக்க பிடித்து எழுப்பி அமர வைத்தவன், “உன்னை நானும் விரும்புறேன்னு உனக்கு தெரியும். எனக்கு பிரச்சனை தர்றது உன் வீட்டு ஆளுங்கதான், அவங்க யாரும் நமக்கு இடைல வராத வரை நான் நல்லாத்தானே இருக்கேன் உன்கிட்ட? அவங்க உனக்கு வேணும், நானும் அவங்கள்ட்ட உறவாடணும், அவங்க என்ன பேசினாலும் அமைதியா இருக்கணும்னா எப்படி? உன் அத்தை, உன் அப்பா, உன் அண்ணன், உன் ஃபிரெண்ட் இப்படி எல்லாரும் எனக்கு செஞ்சதுக்கு முன்னாடி என் கோவம்லாம் ஒன்னுமே இல்லை. ஆனாலும் நீ அவங்கள விட்டு கொடுக்க மாட்ட, நான்தான் என்னை சரி பண்ணிக்கணும், என்ன?” எனக் கேட்டான்.
அவனது கையை விலக்கி விட்டவள், “உட்காருங்க இங்க” என்றாள். அவன் ஆக்ரோஷமாக இருக்க, எழுந்து அவனை அணைத்துக் கொண்டவள், “முதல்ல அமைதியா ஆகுங்க” என்றாள்.
அவன் அவளை விலக்கி விட பார்க்க, அவள் விடுவதாக இல்லை. அவனும் பலமாக அவளை விலக்காமல் ஒரு கட்டத்தில் அவளுக்கு கட்டுப்பட்டு நின்றான்.
இனி அவன் கட்டுக்குள் இருப்பான் என உணர்ந்து அவனிடமிருந்து விலகினாள்.
“போ எப்ப பாரு, மூட் கெடுத்துகிட்டு… ஈவ்னிங் கால் பண்ணு, வந்திடுறேன்” என சொல்லி வெளியேறுவதற்காக திரும்பினான்.
அவனை பிடித்து நிறுத்தியவள், “நான் என்ன செய்யணும்னு ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேங்க, செய்ய நினைக்கிறது சரியா தப்பான்னு கேள்வி ஓடிட்டே இருக்கும். மனசாட்சி பிரகாரம் நடக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்” என்றாள்.
“என்ன சொல்ல வர்ற?”
“உங்களுக்கு தெரியாத உண்மைகள் இருக்கு விஷ்வா, அதையெல்லாம் தெரிஞ்சுக்கிட்டுத்தான் உங்களோட வாழ வந்திருக்கேன். உங்களுக்கும் தெரிஞ்சா கண்டிப்பா உங்க அம்மாவை தப்பா நினைக்க மாட்டீங்க” என்றாள்.
விழிகள் இடுங்க அவன் அவளை பார்க்க, அவனை அழைத்துக் கொண்டு போய் இருக்கையில் அமர வைத்தாள்.
சிறு பிள்ளைத் தனமாக எதுவோ சொல்லப் போகிறாள் என்ற எண்ணத்தோடுதான் அமர்ந்திருந்தான் விஷ்வா.
******
சண்முகநாதன் சங்கரி தம்பதியினருக்கு செல்வபிரபு ஒரே மகன். லண்டனில் பட்டப் படிப்பை முடித்து விட்டு திரும்பியிருந்த மகனுக்கு காலத்தோடு திருமணம் செய்து வைக்க நினைத்தனர். இப்போது வேண்டவே வேண்டாம் என மறுத்து இரண்டு வருட காலத்தை ஓட்டி விட்டார் செல்வபிரபு.
திடீரென ஒரு நாள் மகனுக்கு திருமணம் செய்தே ஆக வேண்டுமென ஒற்றைக் காலில் நின்ற கணவரை கண்டு சங்கரிக்கு வியப்பாகத்தான் இருந்தது. மகனுக்கும் கணவருக்கும் இடையிலான உறவில் என்னவோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்து கொண்டவர் என்னவென கேட்டதற்கு இருவருமே ஒன்றுமில்லை என சொல்லி விட்டனர்.
அகல்யாவின் தந்தை ஜவுளிக்கடை நடத்திக் கொண்டிருந்தார், சண்முகநாதனுக்கும் அவர் பழக்கம்தான். கடையை விஸ்தரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்ட போது சண்முகம்தான் உதவியிருந்தார். அகல்யாவையும் அவர் பார்த்திருக்கிறார்.
வசதியான குடும்பமாக அல்லாமல் தான் சொன்னதை கேட்டு நடக்கும் குடும்பத்திலிருந்து அழகான அடக்கமான பெண் ஒருத்தியைத்தான் மகனுக்காக தேடிக் கொண்டிருந்தார் சண்முகம், அகல்யா தன் மகனுக்கு சரியாக இருப்பாள் என தோன்றவும் உடனே பெண் கேட்டு விட்டார்.
அகல்யாவுக்கு தூரத்து சொந்தம் குணசேகர், வேலை தேடி இங்கு வந்தவர். பார்வையால் மட்டுமே அன்பை பரிமாறிக் கொண்டிருந்தனர் இருவரும். சண்முகநாதன் பெண் கேட்டிருக்கா விட்டால் அகல்யாவின் தந்தையே இவர்களுக்கு மணம் முடித்து வைத்திருக்க கூடும்.
ஆனால் பல மடங்கு வசதி படைத்த வீட்டுக்கு மகள் மருமகளாகும் வாய்ப்பு எனவும் அகல்யாவின் தந்தை அதை தவற விட விரும்பவில்லை.
குணசேகரின் சகோதரிகளுக்கு இன்னும் மணமாகியிருக்கவில்லை. அவருக்கு நிறைய பொறுப்புகள் இருந்தன. ஆகவே இந்த பேச்சு வரவும் அகல்யாவுக்கு தன்னை விட செல்வபிரபு ஆயிரம் மடங்கு சிறப்பான இணை என கருதி அமைதியாக இருந்து விட்டார்.
ஆணே அமைதியாக இருக்கும் போது பெண்ணாக அகல்யா என்ன செய்வார்? அவருக்கும் தன் மீது ஈடுபாடு இருப்பதாக நான்தான் தவறாக நினைத்து விட்டேனோ என நினைத்து அவரும் தன் மனதை வெளியில் சொல்லவில்லை.
பெற்றோர் விருப்பத்தை மீற முடியாமல் செல்வபிரபுவை மணமுடித்தார் அகல்யா. திருமணம் நடப்பதற்கு முன்பே மனதளவில் புதிய வாழ்க்கைக்கு தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார்.
போக போகத்தான் பிரபுவும் காதல் தோல்வி கண்டவர் என்பது அவருக்கு தெரிந்தது. கணவனின் மனம் மாற அவர் காத்திருக்க தயாராகத்தான் இருந்தார். பிரபுவோ தன் பழைய காதலை மறக்காமல் எதிலேயும் நாட்டமே இல்லாமல் நடமாடினார்.
தன் அன்புக்காக ஏங்கி நிற்கும் அகல்யாவை கண்டு அவருக்கு குற்ற உணர்ச்சியானது. போதையில் தன்னிலை இழந்து மனைவியுடன் கூடிய போதுதான் அகல்யா கரு தரித்தார். அதன் பிறகாவது கணவர் தன்னை ஏற்றுக்கொள்வார் என நம்பியிருந்தார் அகல்யா. மாறாக விவாகரத்து கேட்டார். வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ள அகல்யா செய்த முயற்சிகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகி விட்டது.
பிரசவத்துக்கு பிறந்த வீட்டுக்கு சென்ற அகல்யா, தன் அம்மாவிடம் எல்லா உண்மையையும் சொல்லி விட்டார். அப்படியே சந்திரனுக்கும் தெரிய வந்தது.
மகளின் வாழ்க்கை இப்படியாகி விட்டதே என அகல்யாவின் பெற்றோரும் தங்கைக்காக சந்திரனும் வருத்த படாத நாளே இல்லை.
குணசேகரனுக்கும் தெரிய வந்த போது கதறி விட்டார். தங்கையின் காதல் விஷயம் தெரியவும் இனியாவது அகல்யாவின் வாழ்க்கையை சீர் செய்ய வேண்டும் முடிவெடுத்து விட்டார் சந்திரன்.
பிரபு கேட்ட விவாகரத்துக்கு தங்கையை சம்மதிக்க வைத்து விட்டார் சந்திரன். தான் விலகி சென்றால் பிரபுவும் அவருக்கு விரும்பிய வாழ்க்கையை வாழலாம் என நினைத்து அகல்யாவும் விலகி வந்து விட்டார்.
அகல்யாவை திருமணம் செய்து இரண்டு ஆண்டுகள் கூட சேர்ந்து வாழவில்லை செல்வபிரபு. விஷ்வா பிறந்த மூன்று மாதங்களில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
விவாகரத்து ஆன ஒரு மாதத்தில் அப்பாவுக்கு சொல்லாமல் வெளியூர் சென்று விட்டார் செல்வபிரபு. செய்து வைத்த திருமணத்தை முறித்துக் கொண்டானே என மகன் மீது சண்முகநாதனுக்கு நல்ல கோவம். என்னிடம் சொல்லாமல் எங்கே சென்றான் என மனைவியிடம் சத்தம் போட்டவர் மகன் எங்கே என தேடி அவனது இருப்பிடத்தையும் கண்டறிந்து விட்டார்.
வேலை விஷயமாக வெளியூர் செல்வதாக மனைவியிடம் பொய் சொல்லி விட்டு மகனின் இருப்பிடத்திற்கு சென்றார் சண்முகநாதன். பாலக்காடு அருகே உள்ள விடுதி ஒன்றில்தான் செல்வபிரபு தங்கியிருந்தார்.
மகனின் அறை எண்ணை அறிந்து கொண்டு சண்முகநாதன் செல்ல, அவர் கண்ட காட்சி அவரை ஸ்தம்பிக்க வைத்தது.
செல்வபிரபுவும் அவரது காதலரான ராஜேஷ்குமாரும் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டிருந்தனர்.
ஆமாம், அவரது காதல் ஒரு பெண்ணுடன் அல்ல, அவருடன் படித்த ஒரு ஆணுடன்!