நீயென் நாயகி -14

அத்தியாயம் -14. 1

விஷ்வா மட்டும்தான் வருவான் என நினைத்திருந்த சண்முகநாதன் வேதாவும் அவனுடன் வந்திருப்பதை கண்டு விட்டு ‘என்னடா இது?’ என விழித்தார்.

“ஹாய் தாத்தா!” என சொல்லி விட்டு அவர் பேசவெல்லாம் நேரம் தராமல் தனது அறைக்கு விரைந்து விட்டான் விஷ்வா.

சோர்ந்து போனவளாக தாத்தாவை பார்த்தாள் வேதா. அவள் மூலமாக நடந்ததை அறிந்து கொண்ட தாத்தா, “வாசுகி ஏன் அப்படி பேசிச்சு?” என அதிருப்தியாக கேட்டார்.

“என்ன தாத்தா நீங்க, உங்க பேரனை ஒன்னும் சொல்லாம அம்மா மேலத்தான் தப்புன்னு சொல்றீங்க? அப்பா வந்து என்னை கூட்டிட்டு போயிருந்தா பிரச்சனை இருந்திருக்காது, உங்க பேரன்தான் தான்தான் கொண்டு போய் விடுவேன்னு சொன்னார். வீட்டு வாசல் வரை வந்திட்டு உள்ள வரலைனா அம்மாக்கு கஷ்டமா இருக்காதா? ஏதோ ஆதங்கத்துல பேசிட்டாங்க, உடனே இப்படியா செய்வார்? அவர்கிட்ட என்னன்னு நீங்கதான் கேட்கணும் தாத்தா, அத விட்டுட்டு அம்மாவை குறை சொல்றீங்களே?” என்றாள் வேதா.

“வாசுகி சொன்னது பெரிய வார்த்தை இல்லையாமா?”

“இப்ப அதைத்தானே உங்க பேரனும் செய்ய நினைக்கிறார்?”

“சரி சரிம்மா, நீயும் கோவ படாத. அவன் ஃபேக்டரி போய்ட்டு வரட்டும், நிதானமா பேசலாம். இப்ப பேசினா கோவத்துல இன்னும் ஏதாவது எடக்கு மடக்கா செஞ்சு வைப்பான்” என்றார்.

அறைக்கு செல்லவே இல்லை வேதா, பிராயணக் களைப்பு இருந்தாலும் விஷ்வாவை தவிர்க்க தாத்தாவுடன் வெளியிலேயே அமர்ந்து விட்டாள்.

சற்று நேரத்தில் அங்கு வந்த வேலை செய்யும் பெண், வேதாவை விஷ்வா கூப்பிடுவதாக தகவல் சொன்னாள்.

“இப்ப ஏதும் சண்டை போட்றாதம்மா” என சொல்லியே வேதாவை அனுப்பி வைத்தார் தாத்தா.

குளித்து தயாராகி சாப்பிட அமர்ந்திருந்த விஷ்வா, “ரெஃப்ரஷ் கூட ஆகாம என்ன கதை பேசிட்டு இருக்க நீ? ரூம் போ, நல்லா ரெஸ்ட் எடு, மதியம் மேல வந்திடுறேன்” என்றான்.

அவனை அவள் முறைக்க, புருவங்களை உயர்த்தி என்னவென கேட்டான்.

அவள் ஏதும் பேசுவதற்குள் வினீத் ஏதோ கோப்புகளை தூக்கிக் கொண்டு வந்து விட்டான். மூன்று நாட்களாக விஷ்வா ஊரில் இல்லாத காரணத்தால் வேலைகள் நிறைய இருக்கலாம் என புரிந்து, இப்போது ஏதும் பேசாமல் மாடியேறி விட்டாள் வேதா.

குளித்து சாப்பிட்டு முடித்தவுடன் அப்பாவுக்கு அழைத்து பேசினாள். மகளின் நலம் விசாரித்து சாதாரணமாகவே பேசினார்.

 இரயில் நிலையத்தில் இவளை பார்த்திருந்ததை அகல்யா தன் அண்ணனிடம் சொல்லியிருந்தார். அப்படியே ‘விஷ்வா அவளை அழைக்க வந்தது போல தெரியவில்லை, அவனும் அவளுடன்தான் பயணம் செய்து வந்திருப்பான் போல’ என கூடுதல் தகவலையும் பகிர்ந்திருந்தார்.

விஷ்வாவும் தன்னுடன் வந்ததை அப்பாவிடம் ஒத்துக் கொண்டு விட்டாள் வேதா.

“ஆடி மாசம்னு தனியா இருக்கோம்ல ப்பா, என்னை சர்ப்ரைஸ் பண்றேன்னு இப்படி பண்ணினார், கொஞ்சம் நாங்க புரிஞ்சுக்க உதவியா இருக்கும்னு நானும்…” என்ன சொல்லவென தெரியாமல் தடுமாறினாள் வேதா.

சந்திரன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகள் மீது பற்று இருக்க போய்தானே இப்படியெல்லாம் செய்திருக்கிறான் என்று கூட நினைத்தார். விஷ்வா அவனது அம்மாவிடமிருந்து பிரிந்திருக்க தானும் ஒரு காரணம்தானே என்ற குற்ற உணர்ச்சி அவருக்குள்ளுமே இருக்கிறது. இருவரின் நலன் கருதி செய்த செயல்தான் அது, ஆனாலும் தாயை பிரிந்து வளர்ந்தது அந்தக் குழந்தைக்கு பாதிப்பு கொடுக்கும்தானே?

“உன் அம்மாகிட்ட இப்ப பேசாத, இன்னும் புலம்பிட்டு இருக்கா. நீ கொஞ்சம் இளகி பேசினா உடனே உன்னை இங்க வரவச்சுடுவா, இந்த நேரம் நீ அவன் கூட இருக்கிறதுதான் சரி, அதனால அவனை அனுசரிச்சு அங்கேயே இரு” என சந்திரன் அறிவுறுத்த, “அப்பா!” என அதிர்ந்தாள் வேதா.

“உன்னை நல்லா வச்சுக்கல, உனக்கு கஷ்டம் கொடுக்கிறான், உனக்கு அவனை பிடிக்கல இப்படி காரணம் இருந்தா அங்கேருந்து வரலாம்மா, உன் அம்மா பேசினது தப்பு, அவன் பாதிக்க பட்ட இடத்துல இருக்கான், நீயும் எதிர்த்துகிட்டு நின்னா இன்னும் மூர்க்கமா மாறுவானே தவிர வேற பலன் இருக்க போறதில்ல” என அவர் சொல்ல, அவளால் மறுக்க முடியவில்லை.

அப்பாவை நினைத்தும் கவலையாக இருந்தது. அவரிடத்தில் அவரின் செயலில் நியாயம் இருப்பதாகத்தான் பட்டது. உண்மை காரணம் அவருக்கும் தெரிந்தால் சரியாக செயல் பட்டதாகவே நினைப்பார்.

“இந்த தாத்தா இருக்கிறாரே…” என தனிமையில் மட்டுமே கோவ பட்டுக் கொண்டாள் வேதா.

‘நீ பேசியதில் வேதா கோவமாக இருக்கிறாள், அவளது வாழ்க்கையில் சிக்கல் உண்டாக்குகிறோம் என தெரியவில்லையா உனக்கு? அவளுடன் சில நாட்கள் பேசாமல் இரு’ என கணவர் கடுமையாக சொன்னதால் ரோஷம் கொண்ட வாசுகியும் மகளிடம் பேச முயலவே இல்லை.

அம்மாவை சமாளிக்க இயலாது என்பதால் வேதாவும் தற்போதைக்கு அம்மாவுடன் பேச வேண்டாம் என இருந்தாள்.

அழுக்கு துணிகளை பிரித்து எடுத்து, வாங்கி வந்தவற்றை எடுத்து வைத்து என அவளுக்கு நேரம் ஓடியது. மதிய உணவுக்கு பின் சற்று நேரம் படுத்திருந்தாள். பகல் உறக்கம் வழக்கம் இல்லை என்றாலும் பயணக் களைப்பின் காரணமாக கண்ணயர்ந்து போயிருந்தாள்.

மாலையில் விஷ்வாவின் அணைப்பை உணர்ந்து கொண்டேதான் கண் விழித்தாள். அவளது வயிற்றை சுற்றிப் பிடித்துக்கொண்டு முதுகில் தலை பதித்து படுத்திருந்தான். அவனது மூச்சின் வேகத்தை வைத்தே நல்ல உறக்கத்தில் இருக்கிறான் என புரிந்து கொண்டவள் மெதுவாக அவனது கையை தன்னிடமிருந்து பிரித்து விட்டாள்.

அவ்வளவுதான் விழித்துக் கொண்டான். சிவந்து போயிருந்த விழிகளோடு அவளை எரிச்சலாக பார்த்தவன் மீண்டும் அவளை இழுத்து அணைத்துக் கொண்டு உறங்க முற்பட்டான்.

“விஷ்வா… ரெஸ்ட் ரூம் போகணும்” என அவள் சொல்லிக் கொண்டே விலக, பட்டென அவளை விடுவித்து விட்டு திரும்பி படுத்துக் கொண்டான்.

ஓய்வறையிலிருந்து வந்தவள் அறையில் இயல்பாக நடமாடிக் கொண்டிருக்க, அவளை கவனித்துக் கொண்டேதான் இருந்தான். சிடு சிடுப்புக்கான அறிகுறிகள் ஏதும் அவளது முகத்தில் தென்படாமல் போகவும் நல்ல மன நிலையோடு எழுந்தமர்ந்தான்.

“டீ எடுத்திட்டு வரவா?” என உபசரிப்பாக கேட்டாள்.

கையை ஆட்டி மறுத்தவன், “உன் அம்மா அப்போலேருந்தே என்னை தப்பாவே நினைச்சிட்டு இருக்காங்க, அது உனக்கும் தெரியும். இன்னிக்கு காலைல அவங்க சொன்னது அர்த்தமே இல்லாத குற்றச்சாட்டு, அந்த நேர கோவம், அத்தோட மனசுல ஒரு ஓரத்துல உன்னை விட்டுட்டு இருக்கிறது பிடிக்காம இருந்திருக்கணும், அதான் உன்னை தட்டி தூக்கிட்டு வந்திட்டேன்” என விளக்கம் சொன்னான்.

கேட்டுக் கொண்டேன் என்பதாக பார்த்தவள், இருந்த பொருட்களை கையில் எடுத்து பார்த்து விட்டு மீண்டும் அதே இடத்தில் வைத்துக் கொண்டிருந்தாள்.

“ஹேய் கோவத்துல அழைச்சிட்டு வந்திட்டேன், உனக்கு விருப்ப படுறப்போ போ வா, எனக்கொன்னும் பிராப்லம் இல்லை, ஆனா உன் அம்மாகிட்ட பார்த்து பேசணும்னு சொல்லி வை” என்றவனை சுள் என பார்த்து விட்டு திரும்பிக் கொண்டாள்.

எழுந்து போய் அவளை பின்னாலிருந்து கட்டிக் கொண்டவன், “சில சமயம் என்னை மீறி நடத்துக்கிறேன், தப்புன்னு எனக்கே தெரியுது, என்ன செய்ய சொல்ற?” எனக் கேட்டான்.

அவள் அமைதி காக்க, “சரி, இப்பவே போறதுன்னாலும் போ, ஹ்ம்ம்… நானே கொண்டு போய் விடுறேன் வா” என்றான்.

“நான் இப்ப அம்மா வீட்டுக்கு போகல, விடுங்க” என்றாள்.

“விடுறதுக்கா வீட்டுக்கு சீக்கிரம் வந்தேன்? நாம தனியா இருக்க போறது நினைச்சு நேத்து நைட் எவ்ளோ ஃபீலிங்ஸ் தெரியுமா? ஆமாம் ஏன் உன் அம்மா வீட்டுக்கு போகலைனு சொல்ற?”

“போகல, விடுங்களேன்!”

“எதுக்கு இப்படி பேசுற, திருப்பி நான் பேசினா தாங்க மாட்ட” என கோவமாக சொல்லி விலகினான்.

“நீங்க செய்ற எல்லாத்தையும் ஏத்துகிட்டும் ரசிச்சுக்கிட்டும் இருப்பாங்களா?” என அவளும் கோவப் பட, வெளியேறி விட்டான்.

அடுத்து வந்த இரண்டு நாட்களும் இருவருக்குள்ளும் சரியான பேச்சுக்கள் இல்லை. அவனுக்கு முன்னரே தாத்தாவின் கார் டிரைவரோடு ஃபேக்டரி சென்று விடுகிறாள் வேதா. மாலையும் அப்படித்தான் அவனுடன் வருவதில்லை. அவனும் கண்டு கொள்ளவில்லை.

இருவருக்குள் மனத் தாங்கல் என தாத்தாவுக்கும் புரிகிறது, அனுபவஸ்தர் எதுவும் தெரியாதது போல இருந்து கொண்டார்.

உள்ளூர் அம்மன் கோயிலில் விளக்கு பூஜை நடக்கவிருந்தது. பாட்டி இருந்த வரை தவறாமல் கலந்து கொள்வார், அதன் பின்னரும் வழக்கம் விட்டுப் போகாமல் கலந்து கொள்ளும் விஷ்வாவின் சித்தி, இந்த முறை வேதாவை போகும் படி சொன்னார்.

காலையில் விஷ்வா கிளம்பும் போதே விஷயத்தை சொன்னவள், “நாம சேர்ந்துதான் கோயிலுக்கு போகணும், நீங்க ரொம்ப நேரம் இருக்க தேவையில்லை, வந்திடலாம், ஆறு மணிக்கு போறாப்ல வந்திடுங்க” என்றாள்.

வர வேண்டுமா என்பது போல தலையை கையால் கலைத்துக் கொண்டு அவளை பார்த்தான்.