அத்தியாயம் -11.2
இரயில் நிலையம் செல்லும் போது உம் எனதான் வந்தாள் வேதா.
அவளது தோளில் இடித்து, “ஹோய் என்ன?” எனக் கேட்டான்.
“நீங்க வரவே இல்லைனா எந்த பிரச்சனையும் இல்லை, அதென்ன வீட்டு வாசல் வரை வந்திட்டு உள்ள வராம போறது? அப்பாக்கும் அம்மாக்கும் முகம் சுண்டி போயிடுச்சு தெரியுமா? நீங்கதான் காரணம்” என குற்றம் சுமத்தினாள்.
“இதெல்லாம் என்ன ஃபார்மாலிட்டி? நான் இப்படிதான்னு நீதான் உன் பேரெண்ட்ஸ்க்கு புரிய வைக்கணும்” என்றவனிடம் என்ன பேசுவாள், போ என விட்டு விட்டாள்.
அவனும் அவளிடம் பேச முயலாமல் இருக்க, “நல்லாருக்கு சென்ட் ஆஃப் பண்ற லட்சணம்?” என முணு முணுத்தாள். அப்போதும் அவன் கண்டுகொள்ளவில்லை.
“ஸார் இப்படிலாம் முறுக்கிக்கிட்டா பொண்ணுங்களுக்கு பிடிக்காது” என சொல்லி பார்த்தும் விட்டாள். அவள் பக்கமே அவன் திரும்பவில்லை. மிகவும் எரிச்சலாகி விட்டாள்.
இரயில் நிலையம் வந்த பின் அவளுடைய லக்கேஜ் எடுத்தவன் கூடுதலாக இன்னொரு பேக் எடுக்க, “இது என்னோடது இல்லை” என்றாள்.
“தெரியும் தெரியும்” என சொல்லிக் கொண்டே எல்லாம் எடுத்து வைக்கவும் எங்கிருந்தோ டிரைவர் வந்தான். கார் சாவியை அவனிடம் கொடுத்து அனுப்பியவனை திகைப்போடு பார்த்திருந்தவள், “நீங்களும் வர்றதா சொல்ல போறீங்களா இப்போ?” எனக் கேட்டாள்.
தோள்களை குலுக்கி, “சொல்லக்கூடாதா?” எனக் கேட்டான்.
வாயில் கை வைத்து அப்பட்டமாக தன் அதிர்ச்சியை காண்பித்தாள்.
“என்னங்க இது? நான் நாளைக்கு ஃபுல்லா என் ஃபிரெண்ட்ஸோட இருப்பேன், அப்பறமும்… நான்தான் சொன்னேன்ல என் ஃபிரெண்ட் வீட்டுக்கு போறதா?”
“நாளைக்கு ப்ரோக்ராம் அப்படியே இருக்கட்டும், உன் க்ளோஸ் ஃபிரெண்ட்கிட்ட எக்ஸ்பிளைன் பண்ணு”
“என்னன்னு?”
“ம்ம்… புருஷனோட டேட்டிங் போறேன்னு சொல்லுடி”
“விஷ்வா! ஆர் யூ க்ரேஸி?”
“கொஞ்சம் அப்படித்தான்” கண்களை சிமிட்டி சொன்னான்.
“நிஜமாவா?” எனக் கேட்டவளின் கையை பிடித்துக்கொண்டவன், “ஏன் கனவு மாதிரி இருக்கா உனக்கு?” எனக் கேட்டு சிரித்தான்.
நடப்பதை உணர்ந்து ஏற்றுக் கொள்ள அவளுக்கு சில நிமிடங்கள் பிடித்தன. இரண்டாம் வகுப்பு பெட்டியில்தான் டிக்கெட் புக் செய்திருந்தாள். அந்த இரயிலில் டிக்கெட் கிடைக்காததால் வேறொரு இரயிலில் முதல் வகுப்பில் இருவருக்குமாக அவன் புக் செய்திருந்ததை சொன்னான்.
“கார்லேயே போயிருக்கலாம்ல?”
“நீதானே ட்ரெயின்தான் கம்ஃபர்டபிள்னு சொன்ன?” எனக் கேட்டவனது கன்னத்தை கிள்ளி கொஞ்ச வேண்டும் போலத்தான் அவளுக்கு இருந்தது.
அவர்கள் ஏற வேண்டிய இரயில் அவள் புக் செய்திருந்ததை விட முன்னேரமாகவே வந்து விட்டது. வீட்டுக்கு வராமல் தவிர்த்ததற்கான காரணம் இப்போதுதான் அவளுக்கு புரிந்தது. வந்திருந்தால் இரயிலை தவற விட்டிருக்க கூடும்.
முதல் வகுப்பு பெட்டியில் பயணிப்பது வேதாவுக்கு இதுதான் முதல் அனுபவம், அதுவும் விஷ்வாவுடன், மனம் கும்மாளம் போடுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
மாலையில் வீடு வந்த பிறகும் வேதா ஓய்வெடுத்திருக்கவே இல்லை, இரயில் ஏறியதும் உறங்கி விட வேண்டும் என எண்ணியிருந்தாள். இப்போது அப்படியெல்லாம் உறக்கம் வராது என அவளுக்கு தெரிந்து விட்டது. அவன் இப்படி திட்டம் போட்டு தன்னுடன் வருவான் என ஒரு சதவீதம் கூட அவள் எதிர் பார்த்திருக்கவில்லை.
அவள் மகிழ்ச்சியாக உணர்வதை அவளது முக பாவங்கள் மூலமாக தெரிந்து கொண்டவனும் அவளையேதான் பார்த்திருந்தான்.
டி டி ஆர் வந்து சென்றதும் எதிரில் அமர்ந்திருந்தவளின் பக்கத்தில் போய் அமர்ந்து கொண்டான், அதுவும் நெருக்கமாக.
“இப்படி நைட்ல நாம ஒன்னா இருக்க கூடாதுன்னுதானே ஆடியை காரணம் காட்டி உன்னை அழைச்சிட்டு போனாங்க. நான் நினைச்சத சாதிக்க எந்த ரூலையும் உடைப்பேன்னு சொல்லி வை” என்றான்.
அவனது கை வளைவில் கை நுழைத்து அவனது கையை தன்னோடு கட்டிக் கொண்டவள், “நமக்குள்ள எல்லாமே சரியா நடந்திருந்தா எவ்ளோ நல்லாருக்கும்ல?” எனக் கேட்டாள்.
“ம்ம்… நீ அந்த வீட்ல பிறக்காம போயிருந்தா எவ்ளோ நல்லாருந்திருக்கும்னு நானும்தான் நினைச்சேன்” என அவன் சொல்லவும், கோவமாக அவனது கையை விடுவித்தவள் எதிர் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள்.
“முடிஞ்சு போனது அவ்ளோதான், எதையும் நம்மளால மாத்த முடியாது. பின்னாடி திரும்பி பார்க்காம ஃப்ரெஷா ஸ்டார்ட் பண்ணலாமே?” என அவன் கேட்டும் முறுக்கிக் கொண்டு அவன் பக்கம் திரும்பாமல்தான் அமர்ந்திருந்தாள்.
அவனாக வந்து அவளின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டான். அவனது திடீர் செய்கையில் விழித்தாலும் அவனை விலக்கி விடாமல் மடி தாங்கிக் கொண்டாள்.
சற்று நேரம் கழித்து, “காயமெல்லாம் நல்லா ஆறிடுச்சாங்க?” என அக்கறையாக விசாரித்தாள்.
“பரவாயில்லை அதெல்லாம் உனக்கு நினைவிருக்கு!” என குறையாக சொன்னான்.
“நினைவில இல்லாம என்ன? எங்க காட்டுங்க” என சொல்லி அவனது டி ஷர்ட்டை அவள் விலக்க பார்க்க, கூச்சப் பட்டான்.
“ஹையோ ரொம்பத்தான்! மேலாடை இல்லாம என் முன்னாடி சுத்தினது யாரோ?” என கிண்டலாக கேட்டாள்.
“அப்போ இருந்த மூட் வேற, இப்ப வேற, எதுக்கும் எதுவா இருந்தாலும் சொல்லிட்டு செய்” என சொல்லிக் கொண்டே அவனே காயத்தை அவளுக்கு காண்பித்தான். ஆறிக் கொண்டுதான் வருகிறது என்பதை கண்டு திருப்தி அடைந்தாள்.
மாலையில் அவளை இறக்கி விட்டு, வீட்டுக்கு செல்லும் வழியில்தான் இவனுக்கு இந்த யோசனையே பிறந்ததாம். உடனே வினீத்திடம் சொல்லி டிக்கெட் போட சொல்லி விட்டான்.
விஷ்வா வேதாவுடன் செல்வது தாத்தாவுக்கு தெரியும், எதற்கடா இப்படி என முனகியவரிடம் பேசிப் பேசியே சம்மதம் வாங்கியிருந்தான். அவரையும் கூட்டுக் களவாணியாக்கி வேதாவின் வீட்டினருக்கு தெரிய விடாமல் செய்திருந்தான்.
எல்லாமே இப்போதுதான் அவளிடம் சொன்னான். அவள் சிரிப்போடு கேட்டுக் கொண்டிருக்க, “உலகத்துலேயே வைஃபோட வெளில போக இவ்ளோ கஷ்ட பட்ட புருஷன் நானாதான் இருப்பேன்” என பெருமூச்சு விட்டான்.
“ஆமாம் எல்லாத்தையும் காம்ப்ளிகேட் பண்ணிக்கிறதுதான் உங்களோட ஸ்பெஷாலிடியே. என்கிட்ட முன்னாடியே சொல்லியிருந்தா நாம சேர்ந்தே பிளான் பண்ணிருக்கலாம்” என்றாள்.
“சும்மா சொல்லாத, உன்கிட்ட சொன்னா ஒத்துக்கிட்டிருந்திருக்கவே மாட்ட. நானா செய்யவும் உனக்கும் சிலு சிலுன்னு இருக்குதானே?” என அவன் கேட்கவும் அவளும் மறுக்கவில்லை.
சற்று நேரம் அவன் மடியில் அவள் படுத்திருந்தாள். பின் அமர்ந்து கொண்டனர். நள்ளிரவு ஒரு மணி வரை பேசிக் கொண்டே இருந்தனர். அவனது தோளில் சாய்ந்திருந்த படியே உறங்கிப் போயிருந்தாள் வேதா.
மெதுவாக அவளை படுக்க வைத்து விட்டு அவனும் எதிர் இருக்கையில் படுத்துக் கொண்டான். அவளை பார்த்துக் கொண்டேதான் உறக்கத்திற்கு சென்றான்.
இரயில் சென்னை வந்தடைந்த போது அவள்தான் அவனை எழுப்பி விட்டாள். தோழியின் வீட்டுக்கு சென்றுதான் தயாராவதாக இருந்தது. அவன் விடவில்லை, தான் புக் செய்திருந்த விடுதிக்கே அழைத்துச் சென்று விட்டான்.
தனக்கு திருமணம் ஆகி விட்டதை தோழிக்கு தெரிவித்து, இப்போது அவளது வீட்டிற்கு வர இயலாது என்பதை புரிய வைத்து, அவளின் உரிமையான கோவத்தை சமாளித்து, அவளை சமாதானம் செய்து கைப்பேசியை வைத்த வேதாவுக்கு தொண்டை தண்ணீர் வற்றிப் போயிருந்தது.
“நல்ல ஃபிரெண்ட்றி உனக்கு!” என சலித்துக் கொண்டவனின் தோளிலேயே இரண்டு வைத்தாள்.
கிழக்கு கடற்கரை சாலையில் இருந்த ரெஸார்ட் ஒன்றில்தான் நண்பர்கள் கூட இருந்தனர். காலை உணவே அங்குதான். வேகமாக தயாரானாள் வேதா.
வெள்ளை நிற டாப், மெரூன் நிற ஸ்கர்ட் என தயாராகி நின்றவளை அளவெடுப்பது போல பார்த்தான். அவனது கண்களை தன் கை கொண்டு மறைத்தவள், “ரொம்ப மோசமா இருக்கு உங்க பார்வை. பழக ஆரம்பிக்கும் போது மெல்ல மெல்ல முன்னேறி கடைசியாதான் இந்த ஸ்டேஜ்க்கு வரணும். எடுத்த உடனே பேராசை படக்கூடாது” என்றாள்.
அவளது கையை விலக்கி விட்டவன், “பெருசா ஆசை பட்டாதானே சின்னதாவாவது ஏதாவது நடக்கும்?” எனக் கேட்டான்.
“ம்ம்… நடக்கும் நடக்கும், ஆசைதான்!” என்றவள் கேப் எடுத்துக் கொள்வதாக சொன்னாள்.
தனக்கும் வெளியில் வேலை இருப்பதாக சொன்னவன், “கார் வரும், நானே ட்ராப் பண்றேன். உனக்காக சென்னை வரை வந்தவனுக்கு இதை விட வேற என்ன வேலை?” எனக் கேட்டான்.
கார் ஏது? என அவள் கேட்டதற்கு, “நானும் சென்னைலதான் படிச்சேன் வேதா, எனக்கும் இங்க ஃபிரெண்ட்ஸ் இருக்காங்க” என்றான்.
“எதையும் இப்படி சுத்தி வளைச்சி சொல்றதுல அப்படியென்ன கிடைக்குமோ உங்களுக்கு?” என செல்லமாக சலித்துக் கொண்டாள்.
வெளிர் பச்சை நிற சட்டை, கருமை நிற பேண்ட் என தயாரானவனை அவளும் ரகசியமாக ரசிக்க, “நான் உன் கண்ணையெல்லாம் மூட மாட்டேன், தைரியமா பார்க்கலாம் என்னை” என நமுட்டு சிரிப்புடன் சொன்னான்.
“டைம் ஆகுதுங்க!” என்னதான் தீவிர தொனியில் சொல்ல முயன்றாலும் அவளுக்கு சிரிப்பு வரத்தான் செய்தது.
வெளியில் கிளம்புவதற்கு முன் அவளை இழுத்து இறுக அணைத்துக் கொண்டான்.
“விஷ்வா!” என அவள் கடிந்து கொள்ள, “மனசுல ஏற்படுற ஆசைகளை அப்பப்ப நிறைவேத்திக்காம போனா ஹார்ட் டிஸீஸ் வருமாம். என் ஹெல்த் மேல உனக்கு அக்கறை இல்லையா வேதா?” எனக் கேட்டான்.
“விஷ்வா…” என அவள் சிணுங்க, இரு கைகளையும் அவளை விட்டு விலக்கி உயர்த்தி பிடித்தவன், “விட்டாச்சு” என்றான்.
அவள் திரும்ப எத்தனிக்க, “உனக்கு ஏதாவது கொடுக்கணும்னு தோணினா கொடுக்கலாம்” என்றான்.
அதரங்களை மடித்துக் கொண்டு அவள் சிரிப்பை அடக்க, “நான் ரெடியா இருக்கேன்” என சொல்லி, கன்னத்தை அவளுக்கு வாகாக வைத்தான்.
அவனது கன்னத்தில் கை கொண்டு செல்லமாக இடித்தவள், “கேட்டு கேட்டு வாங்க கூடாதுங்க, நானா கொடுக்கிற மாதிரி நடந்துக்கணும்” என்றாள்.
“மூனு நாள் வேலையெல்லாம் தள்ளி வச்சிட்டு இங்க வந்து டேரா போட்ருக்கேனே, அதுக்காக ஒன்னே ஒன்னு?”
“ம்ஹூம்… இந்த உள்ளம் இன்னும் கேட்குதே!” என உதடுகளை பிதுக்கிக் கொண்டு சொன்னாள்.
“ம்ம்… உன்னோட அந்த சின்ன உள்ளம் அப்படி என்ன பெருசா எதிர் பார்க்குதுன்னு கண்டுபிடிச்சி அதை கொடுத்து, நான் ஆசை பட்டதை வாங்கிக்காம விட மாட்டேன்” என சவாலாக சொன்னான்.
“உங்க சாமர்த்தியத்தை பார்க்கிறேனே!” என அவளும் தோரணையாக சொன்னாள்.