நீயென் நாயகி -11.1
அத்தியாயம் -11. 1
வேதா தன் அம்மாவின் வீட்டிலிருந்த படியே தினமும் அலுவலகம் சென்று வருகிறாள்.
ஸ்டீல் ஃபேக்டரி கொஞ்சமும் அவளை ஈர்க்கவில்லை. பணி செய்யுமிடத்தில் விஷ்வா வேறு மாதிரிதான். பார்வையே தள்ளி நிறுத்தும், மனைவி என இவளிடம் கூட இளக்கமாக பார்க்க மாட்டான்.
திட்டுவது, கோவப் படுவது, எரிச்சல் படுவது என எதுவும் இல்லையென்றாலும் அணுக முடியாதவன் போல காட்சி தருவான். சும்மா சும்மா அவனிடம் போய் இது எப்படி அது எப்படி என கேட்கவே அவளுக்கும் சங்கடமானது.
அங்கிருக்கும் மேலாளர்கள் மற்ற சில நிர்வாக அலுவலர்கள் ஆகியோரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்றால் முழு நேரமும் அவர்கள் ஏதாவது வேலையாக இருக்கிறார்கள். வினீத்தை அவ்வப்போது பிடித்துக்கொள்வாள், அவனும் பாதியிலேயே ஸார் கூப்பிடுறாங்க என சொல்லி ஓடி விடுவான்.
‘போங்கடா!’ என அலற வேண்டும் போலிருந்தது அவளுக்கு.
காலையில் தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு முன்னேரமாக வந்து விடுவாள். நகரத்தின் வெளிப்பகுதி என்பதால் ஒரு மணி நேரம் பிரயாணிக்க வேண்டும். நாங்கள் கொண்டு போய் விட்டு அழைத்து வருகிறோம் என அப்பா அண்ணன் சொன்னதற்கு, தினமும் இதையே வேலையாக வைத்திருப்பீர்களா எனக் கேட்டு மறுத்து விட்டாள்.
என்னோடு வா என விஷ்வாவும் சொன்னான்தான், அவன் வந்த பிறகு அங்கே இன்னும் கடினத்தன்மை கூடி விடும், அவனுக்கும் முன்னால் சென்றால்தான் ஏதாவது கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும் என சொல்லி அவனது உதவியையும் வேண்டாம் என சொல்லி விட்டாள்.
வேலை கற்றுக் கொள்ள வேண்டுமென்றால் சிரம படத்தான் வேண்டும் என்பது விஷ்வாவின் எண்ணம். பின்னே அவனையே இங்கே பொறுப்பு எடுப்பதற்கு முன் எல்லா பகுதியிலும் வேலை செய்யுமாறு பணித்து விட்டார் தாத்தா. எல்லாம் கற்றுத் தேர்ந்த பிறகுதான் முதலாளி இருக்கையில் அமர வைக்க பட்டிருக்கிறான்.
தொழிலாளியின் கஷ்ட நஷ்டம் அவர்களின் நேக்கு போக்கு என எல்லாமே அவனுக்கு அத்துப்படி. பின்னாளில் அவனுக்கு அது உதவியாகவும் இருந்திருக்கிறது.
விஷ்வா அங்கேயே இருப்பதுமில்லை, நட்சத்திர விடுதி, மால் கட்டும் பணிகள் என எப்போது எங்கேயிருப்பான் என சொல்ல முடியாது. மாலையில் வீட்டுக்கு செல்லும் வேதா மன சோர்வின் காரணமாக தன்னை புதுப்பித்துக் கொள்ள அம்மாவுடன் வெளியில் செல்வது அப்பாவின் கடைக்கு செல்வது என இருப்பாள்.
ஆக மொத்தம் கணவன் மனைவி இருவருக்கும் நேரம் செலவு செய்ய வழியில்லாமல் போனது.
இரவில் கைப்பேசி உரையாடல் மட்டுமே. சாமர்த்தியமாக தொழில் சார்ந்த பேச்சுக்களை தவிர்த்து விடுவான் விஷ்வா, அது புரிந்து அவளும் தன் சிரமங்களை பகிர அந்த நேரத்தை உபயோகிக்க மாட்டாள்.
இப்படித்தான் ஐந்து நாட்கள் ஓடியது. இப்படியே போனால் சரி வராது என விஷ்வாவுக்கு உரைத்தது.
அடுத்த நாள் ஞாயிறு என்பதால் எங்கேயாவது வெளியில் போகலாம் என அழைப்பு விடுத்தான்.
“என்ன திடீர்னு கேட்குறீங்க?” என வியந்தாள் வேதா.
“ஏன் ஒன் மன்த் முன்னாடியே அப்ளிகேஷன் போடணுமா?”
“இந்த நக்கலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை. யு ஜி மேட்ஸ் கெட் டூ கேதர் இருக்கு நாளைக்கு, சென்னை போறேன், நாளைக்கு ப்ரோக்ராம் முடிச்சிட்டு டூ டேஸ் என் ஃபிரெண்ட் வீட்ல ஸ்டே பண்றேன்” என்றாள்.
“என்கிட்ட நீ சொல்லவே இல்லை”
“நேத்து நைட் பேசும் போது சொல்லணும்னு நினைச்சேன், நீங்கதான் வேற ஏதேதோ பேசி டைவெர்ட் பண்ணிட்டீங்க, டயர்ட்ல நானும் சொல்ல மறந்திட்டேன். இன்னிக்கு இங்க வந்தப்புறம் இப்போதான் நீங்க ஃபிரீயா இருக்கீங்க”
“ம்ம்… இதென்ன திடீர் பிளானா? முந்தாநாள் டைம் கிடைக்கலையா? இல்லை அதுக்கு முன்ன நாம பார்த்துக்கவே இல்லை பேசிக்கவே இல்லையா?”
“இதை இவ்ளோ பெரிய விஷயம் ஆக்க வேணாம்ங்க, நான் போறதாவே இல்லை, இன்னும் நம்ம மேரேஜ் விஷயம்லாம் யாருக்கும் தெரியாது, கல்யாணம் நின்னது மட்டும்தான் தெரியும். நேத்துதான் என் ஃபிரெண்ட் பேசி கன்வின்ஸ் பண்ணினா. நானும் நேத்துதான் போறதா முடிவு பண்ணினேன், போதுமா?”
அவன் சமாதானம் கொள்ள, “இவரு மட்டும் செய்ற எல்லாம் எனக்கு முன்அறிவிப்பு கொடுத்திட்டுத்தான் செய்ற மாதிரி…” என முணு முணுப்பாக அவனை குறை சொன்னாள்.
“அப்படியென்ன சொல்லாம செஞ்சேன்?”
“ம்ம்… சொல்லாமதான் தாலி கட்டினீங்க?”
“அப்போ நமக்குள்ள எந்த உறவும் இல்லை வேதா, அதுக்கப்புறம் நடக்கிறதுதான் பேச்சு” என புதிய விதிமுறை சொன்னான்.
“ம்ம்… ஓகே இதுல நான் விட்டு கொடுத்திடுறேன். நாம வெளில போறது நான் சென்னைலேருந்து ரிடர்ன் ஆனதும்” என சொல்லிக் கொண்டே வீட்டுக்கு புறப்பட தயாரானாள்.
இரவு ரயிலில் பயணிப்பதை கேட்டறிந்து கொண்டவன் கார் ஏற்பாடு செய்து தருவதாக சொன்னான். தொலை தூரப் பயணத்துக்கு இரயில்தான் வசதியாக இருக்கும் என சொல்லி விட்டாள்.
இரயில் நிலையத்தில் கொண்டு போய் விட நான் வருகிறேன் என்றான்.
“அப்பா இல்லைனா அண்ணா வருவாங்க, நீங்க சிரம பட வேணாம்”
“நான் வர்றது பிடிக்கலைனா நேரடியா சொல்லு, சிரமம்னு சொல்லி பாலிஷ்டா என்னை அவாய்ட் பண்ண வேணாம்”
பற்களை கடித்து ஆஆ என சின்னதாக அலறியவள், “நீங்க என்ன சொல்றீங்களோ அதுதான் நடக்கணும், அதுக்கு எப்படி பேசணுமோ பேசி காரியம் சாதிச்சுப்பீங்க” என்றாள்.
“எப்படி வேணா எடுத்துக்க. இப்ப நாம கார்ல போலாம், உன் ஸ்கூட்டிய டிரைவர் வீட்ல விட்ருவான்” என அதையும் முடிவு போல சொன்னான்.
தலையை இடவலமாக ஆட்டிக் கொண்டே கைப்பையை எடுத்துக் கொண்டு அவனுடன் நடந்தாள்.
மிதமான வேகத்தில்தான் காரை செலுத்தினான். நெடுஞ்சாலையில் தேநீர் கடை ஒன்று இருக்கும். எத்தனையோ முறை இதே வழியில் பயணித்திருக்கிறான், ஆனால் ஒரு முறை கூட அந்த கடைக்கு சென்றதில்லை.
இன்று போகலாமா என வேதாவிடம் கேட்டான்.
“ஓ போலாமே, இங்க வெஜ் பப்ஸ் நல்லாருக்கும்” என்றாள்.
“எத்தனை தடவ இங்க வந்திருக்க?” என சாதாரணமாக கேட்டான்.
“ஸ்கூட்டி எடுத்திட்டு வர ஆரம்பிச்சதிலேருந்து வர்றேன்” என்றாள்.
இத்தனை நாட்களாக இல்லாத கவலை இன்று அவளுடன் சேர்ந்து பயணிக்கும் போதுதான் அவனுக்கு வந்து சேர்ந்தது.
“இந்த ஏரியால நீ தனியா ஸ்கூட்டில வந்து போறது ஸேஃப் இல்லைனு நினைக்கிறேன் வேதா” என்றான்.
“அப்பா மாதிரியே பேசாதீங்க. பகல்லதானே வந்து போறேன். கிளம்பும் போதே அம்மாகிட்ட சொல்லிடுவேன், கரெக்ட் டைம் ரீச் ஆகலனா உடனே கால் பண்ணிடுவாங்க” என அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசுகி அழைத்து விட்டார்.
கணவனுடன் வெளியில் வந்திருப்பதாக உண்மையையே சொல்லி வைத்தாள்.
தேநீர் கடைக்காரர் வேதாவை பலமாக வரவேற்றார். விஷ்வாவுக்கும் சேர்த்து அவள்தான் ஆர்டர் செய்தாள். மசாலா அதிகமாக இருக்கவும் அவனுக்கு அந்த பப்ஸ் பிடிக்கவில்லை, வைத்து விட்டான்.
“ஏன் வேஸ்ட் பண்றீங்க? போண்டா சொல்லவா?” எனக் கேட்டவளை முறைத்து வைத்தான்.
“எந்த பொண்ணோடையும் முன்ன பின்ன டேட்டிங் போனது இல்லைனு நல்லா தெரியுது. இப்படி பழகினா எப்படி என் மனசுல இடம் பிடிப்பீங்களாம்?”
“உன் மனசுக்குள்ளதான் எப்பவோ சீட் போட்டுட்டேனே வேதா” என கண்களை சிமிட்டி சொன்னவன், “யாரோட நான் டேட் பண்ணிருக்கணும்? இன்எக்ஸ்பீரியன்ஸ்டு கேண்டிடேட் கிடைக்கிறது அவ்ளோ சாதாரணம் இல்லை, யூ ஆர் லக்கி” என்றான்.
“நீங்க சரியான செஃல்ப் டப்பா!”
“அப்புறம் ஆள் வச்சா என் அருமை பெருமையெல்லாம் உன்கிட்ட சொல்ல வைக்க முடியும்? நான் கலப்படம் இல்லாத ஃப்ரெஷ் பாய் ஃபிரெண்ட்”
“வயசு என்ன ஆகுது? இப்ப வரை கனவுல கூட எந்த பொண்ணையும் நினைச்சு பார்த்தது இல்லையா? யார்கிட்ட கதை அளக்குறீங்க?” என அவள் கேட்க, மறுத்து பேசாமல் வேறெங்கோ பார்வையை வைத்து தலை கோதிக் கொண்டே சிரித்தான்.
“அடப்பாவி! உவ்வேன்னு வாந்தி எடுத்த ஆளா நீங்க? எங்க… எங்க அந்த அக்மார்க் முத்திரை குத்தின கள்ளம் கபடமில்லாத பாய் ஃபிரெண்ட் மூஞ்சிய காட்டுங்க” என வம்பு செய்தாள்.
“ஹேய் நிஜமா வேதா, அப்படிலாம் இல்லை”
“அப்புறம் ஏன் இப்படி ஒரு கள்ள சிரிப்பு?”
“நான் வயசுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சுன்னு இப்பதான் என் உடம்பு எனக்கு தெரிய படுத்துது. அதுக்கு காரணமானவளே அதை கண்டுபிடிச்சி சொன்னா கொஞ்சம் வெட்கமாத்தான் வருது, என்ன செய்ய?” எனக் கேட்டு அவளை வெட்கப்பட வைத்தான்.
அவளை ரசனையாக பார்த்துக் கொண்டே, “உனக்கென்ன வயசாகுது? என்னை சொன்னியே… உன் கதை என்ன? நான்தான் உனக்குன்னு எப்பவோ முடிவு பண்ணிட்டதானே? அப்போ பயம் இல்லாம உன் கதையை கேட்கலாம், சொல்லு” என்றான்.
“எங்க இருக்கோம்னு யோசிச்சு பேசுங்க” என அவனை கடிந்தாலும் அவனது பேச்சுக்களை ரசிக்கவே செய்தாள்.
“ஓ அப்போ இருக்கு, ஆனா இந்த இடத்துல வச்சு சொல்ல மாட்ட, அப்படித்தானே?” எனக் கேட்டவனின் புறங்கையில் கிள்ளி அவனை அடக்கினாள்.
மீண்டும் காரில் பயணப் படுகையில் இருவரிடமும் ஒரு மந்தகாச புன்னகை ஒட்டிக் கொண்டே இருந்தது.
விஷ்வா சொன்னபடி ஸ்கூட்டியுடன் ஊர் எல்லையிலேயே நின்றிருந்தான் டிரைவர். வீடு வரை சென்றால் உள்ளே வரச் சொல்லி அழைப்பார்கள், இவன் செல்லவில்லை என்றால் வேதாவும் முகம் தூக்குவாள் என்றெல்லாம் கருதியே வேதாவை காரிலிருந்து ஸ்கூட்டிக்கு மாற்றி விட்டான்.
இரவு சரியான நேரத்துக்கு வேதாவின் வீட்டுக்கு வெளியில் காரோடு வந்து நின்றான்.
பயணம் செய்ய ஏற்றபடி கணுக்காலுக்கு சற்று மேலே ஏறியிருந்த மேக்ஸி அணிந்திருந்தாள் வேதா. சாம்பல் மற்றும் வெள்ளை நிறத்திலிருந்த அந்த உடை அவளுக்கு மிகவும் பொருத்தமாக இருந்தது.
சந்திரன், வாசுகி, ஆதி மூவரும் கூட வந்து விட்டனர், உள்ளே வந்தே ஆக வேண்டும் என விஷ்வாவை கட்டாயப் படுத்தினார்கள். இன்னொரு முறை என சொல்லி பிடிவாதமாக உள்ளே வரவே இல்லை அவன்.