அத்தியாயம் -10.2
புன்னகைத்தவள், “பெரியவங்க சொல்லும் போது அது படி நடந்துக்கலாமேங்க?” என்றாள்.
“நாம இப்பதான் பழக ஆரம்பிச்சிருக்கோம், அதுக்குள்ள போறியேன்னு கேட்டேன். உனக்கு விருப்பம்னா நான் என்ன சொல்ல?”
“அம்மா வீட்டுக்கு போக எல்லா பொண்ணுங்களுக்கும் ஆசை இருக்கும்தான். நம்மள ஜட்ஜ் பண்ண யாரும் இருக்க மாட்டாங்க, அடுத்து என்னன்னு பர பரன்னு இல்லாம ரிலாக்ஸா இருக்கலாம்”
“இங்கே யார் உன்னை ஜட்ஜ் பண்றா? பர பரன்னு என்ன வேலை செய்திட்டே இருக்கேனு எனக்கும் சொல்லு, தெரிஞ்சிக்கிறேன்”
“ப்ச் அது அம்மா வீடுன்னா அப்படித்தான் ஸ்பெஷல்!” என அவள் சொல்ல, தண்ணீர் பருகி விட்டு அமைதியாக சாப்பிடுவதை தொடர்ந்தான்.
“விஷ்வா என்னாச்சு? நான் உங்களை ஏதும் ஹர்ட் பண்ற மாதிரி சொல்லிட்டேனா?”
“ஹேய் அதெல்லாம் ஒன்னுமில்ல, அம்மாங்கிற வார்த்தை அலர்ஜி ஆகுது. நீ எவ்ளோ நாள் வேணா இருந்திட்டு வா” என சொல்லி கை கழுவ சென்று விட்டான்.
விஷ்வாவை பார்க்க வினீத் வந்தான். விஷ்வா ஏதோ சொல்ல, வெட்கப்பட்டு சிரித்தான். அவனது வயிற்றில் செல்லமாக குத்திய விஷ்வா அவனது காதில் ஏதோ சொல்ல வளைந்து நெளிந்து சிரித்தான்.
‘என்னவாக இருக்கும்?’ என்பது போல பார்த்திருந்தாள் வேதா. வினீத் ஏதோ கோப்புகளில் கையொப்பம் பெற்றுக் கொண்டு சென்று விட்டான்.
வேதாவிடம் வந்த விஷ்வா, “நான் வெயிட் பண்றேன், நீயும் கிளம்பி வா” என்றான்.
தாத்தா அவருடைய பங்குகளை எல்லாம் வேதாவின் பெயருக்கு மாற்றம் செய்கிறார் அல்லவா, அதற்கான நடைமுறைகள் சிலவற்றை செய்து முடிக்க அவளும் நேரில் வர வேண்டியதாக இருப்பதை சொன்னான்.
“ம்ம்… வர்றேன், அதென்ன உங்க பி ஏ கூட அப்படி சிரிச்சு பேசுறீங்க? உங்களுக்கு இப்படிலாம் பேச தெரியுமா என்ன?” எனக் கேட்டாள்.
“என்ன…” என குழப்பமாக கேட்டவன், “என்ன மீன் பண்ற வேதா?” என கிண்டலாக கேட்டான்.
“எப்ப பாரு முசுட்டு மூஞ்சியோட இருக்கிறவர் திடிர்னு சிரிச்சு சிரிச்சு பேசினா அதிசயமா இருக்கு, அதுவும் அவரு பாதி தூக்கத்துல உங்களை எழுப்பி விடுறதுக்கே பயப்படற ஆளு, அப்போ உங்கள்ட்டேருந்து எவ்ளோ வாங்கி கட்டியிருப்பார்? உங்க நடத்தை அவருக்கே ஷாக்கிங்கா இருந்திருக்கும்” என்றாள்.
“நான் கூட நம்ம ஆளுக்கு பொஸஸிவோன்னு நினைச்சேன்” என்றான்.
“ம்… இன்னும் அந்த ஸ்டேஜ்க்கு என்னை நீங்க கொண்டுக்கிட்டு போகலை” என அவனையே குறை சொன்னாள்.
“எங்க… அதுதான் ஆடி ஜாடினு சதி பண்றீங்களே”
“இல்லைனா மட்டும்!” என்றவள், “நான் கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லை. உங்க ஹேப்பி மூட்க்கு என்ன காரணம்?” எனக் கேட்டாள்.
“சொன்னா கோச்சுக்க கூடாது” என அவளை பார்த்துக் கொண்டே அவன் சொல்ல, சரி என்றாள்.
“வெட்க படவும் கூடாது” என அவன் சொல்லவும் நிமிர்ந்து அமர்ந்தவளுக்கு அப்படி என்னவாக இருக்கும் என ஒரே ஆர்வம்.
இருக்கையை அவளுக்கு நெருக்கமாக நகர்த்தி போட்டுக் கொண்டு அமர்ந்தவன், தன் கைப்பேசியை எடுத்து புகைப்படம் ஒன்றை காண்பித்தான்.
விஷ்வாவின் கழுத்து வளைவில் முகத்தை புதைத்தவாறு ஒரு பெண் படுத்திருக்க அவளை அணைத்து பிடித்துக்கொண்டு மலர்ந்த முகமாக இருந்தான் அவன். உற்று பார்க்கவும்தான் அந்தப் பெண் தான்தான் என்பது வேதாவுக்கு விளங்கியது.
கைப்பேசியை அவனிடமிருந்து வாங்கி திரையை பெரிதாக்கி கண்களையும் பெரிதாக்கி பார்த்தாள், அவளேதான். எப்போது இப்படி நடந்தது என அவளுக்கு சுத்தமாக நினைவில் இல்லை. உறக்கத்தில் இப்படி நடந்திருக்கலாம் என அவளாகவே முடிவுக்கு வந்தாள்.
புகைப்படத்தை அழிக்க போனாள், அதற்கு அனுமதிக்காமல் கைப்பேசியை கைப்பற்றிக் கொண்டவன், “இதுதான் டீசென்ட்டா ஃபோட்டோ எடுக்கிற மாதிரி இருந்தது. தூக்கத்துல நீ செஞ்ச மத்த அலும்புலாம் ரொம்ப மோசம்” என வேண்டுமென்றே சீண்டலாக சொன்னான். அப்படி எதுவும் நடக்கவில்லை. இது கூட அவனாக ஏற்படுத்திக் கொண்ட நெருக்கம்.
“என்ன விஷ்வா இது? தூக்கத்துல எப்படியோ புரண்டு வந்திருப்பேன். அதை போய்… ப்ளீஸ் டெலீட் பண்ணுங்க”
“என்ன இப்போ என்கிட்டதானே இருக்கு, இருக்கட்டுமே. உன் முகம் கூட தெரியலை இதுல” என சற்று கெஞ்சினார் போல கேட்கவும் கொஞ்சம் சங்கடத்துடனே அவளும் சரியென விட்டு விட்டாள்.
வினீத்துக்கு திருமணம் நிச்சயம் ஆகியிருக்கிறது. வீட்டினர் பார்த்து செய்யும் திருமணம்தான். முதல் நாள் விஷ்வா சொன்ன வேலையை மறந்து போயிருந்தான். இப்போது விஷ்வா கேட்கும் வரை கூட அவனுக்கு நினைவில் இல்லை. அதை வைத்துதான் கிண்டல் செய்திருந்தான் விஷ்வா.
அனைத்தையும் விஷ்வா சொல்ல, “அப்படி அவர் வெட்க படற அளவுக்கு என்ன சொன்னீங்க?” எனக் கேட்டாள்.
“அதெல்லாம் ஆம்பளைங்க டாக். உனக்கு தெரிஞ்சே ஆகணும்னு இருந்தா சொல்றேன். ஆனா ரெண்டு கண்டிஷன், பாதியிலேயே நிப்பாட்ட சொல்லக்கூடாது, எந்திரிச்சும் ஓடக் கூடாது” என குறும்பாக சொன்னான்.
கைகள் குவித்த வேதா, “எனக்கு தெரிஞ்சுக்கவே வேணாம்” என்றாள்.
அவன் அவளை பார்த்திருந்த விதத்தில் கண்களை தாழ்த்திக் கொண்டாள். சில நொடிகள் கழித்து நிமிர்ந்து பார்த்தவள் இன்னும் அவனது பார்வை மாறாமல் இருக்கவும், “விஷ்வா!” என கண்டிப்போடு அழைத்தாள்.
“ம்ம்… இப்படி உன்னை பார்த்திட்டே இருக்கலாம்தான், ஆனா அதுக்கான நேரம் இது இல்லை. ரெடியாகி வர்றியா?” என அவன் சொல்லவும் செல்ல கண்டனத்தோடு அவனை பார்த்துக் கொண்டே மாடியேறினாள்.
அலுவலகம் வந்த பின் விஷ்வாவிடம் தானாக ஒரு தோரணை வந்து ஒட்டிக் கொண்டது. அவனை பிரமிப்பாக பார்ப்பதை உணர்ந்து நெற்றியில் தட்டிக் கொண்டு சிரித்தாள்.
அவளை கவனித்திருந்தவன் சற்று நேரம் கழித்து அவளின் செயலுக்கான காரணத்தை கேட்டான்.
“இந்த மண்டைகனம் புடிச்ச ஆளுக்கும் மண்டைல சரக்கு இருக்குதேன்னு நினைச்சு சிரிச்சேன்” என சொல்லி அவனை கொஞ்சம் கடுப்பேற்றினாள்.
அரை நாளில் அவளுக்கான வேலைகள் முடிவடைந்து விட்டன. மதிய உணவு வீட்டிலிருந்து வந்தது. அவனோடு சேர்ந்தே சாப்பிட்டாள்.
தாத்தாவும் வந்து சேர்ந்தார். ஓரிரு மாதங்களில் அதிகாரப் பூர்வமாக எல்லாம் அவளின் பெயருக்கு மாறிவிடும் என்பதை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார்.
நீயும் பொறுப்புகளை பார்க்க வேண்டும், கொஞ்சம் கொஞ்சமாக வேலைகளை கற்றுக் கொள் என தாத்தா சொல்ல, வேதாவும் சரியென்றாள்.
அடுத்த நாள் கணவனுடன் அலுவலகம் வந்து பார்த்தாள். என்னவோ அவளுக்கு மனம் லயிக்கவே இல்லை. கண்டு கொண்டவன், “புதுசுல அப்படித்தான் இருக்கும், போக போக சரியாகிடும்” என்றான்.
“எப்படி உங்களோட வாழற மாதிரியா?” எனக் கேட்டு வைத்தாள்.
“சேச்ச… அவ்ளோ கஷ்டமா இருக்க போறதில்லை இங்க” என அவனும் தீவிர தொனியில் சொல்லி, “பொண்ணுங்க மனச கணிக்கிறத விட ஈஸியாதான் இருக்கும்” என்றான்.
“நீங்க ஏன் என் மனசை கணிக்கணும்? நான் என் மனசு எல்லாம் தெரிஞ்சும்தான்…” என அவள் சொல்லிக் கொண்டிருக்க, இரு கைகளையும் மேலே உயர்த்தி, போதுமே எனும் பார்வை பார்த்து அவளை அமைதி கொள்ளச் செய்தான்.
ஏதாவது வம்பாக பேசி ஒருவரையொருவர் வாரிக் கொண்டாலும் காயப்படுத்தும் உள்நோக்கம் இல்லாமல் நடந்து கொண்டனர். இருவரின் உறவு நிலையிலும் நல்ல முன்னேற்றம் என்றுதான் சொல்ல வேண்டும்.
வேதா அவளது பிறந்த வீட்டுக்கு செல்லும் நாள் வந்தது. சற்று நேரத்தில் ஆடி சீர் எடுத்துக் கொண்டு அவளின் பெற்றோர் வந்து விடுவார்கள். விஷ்வாவின் சித்தப்பா சித்தி முன்னரே வந்து விட்டனர்.
வேதா அதிகமாக எல்லாம் பேக் செய்து கொள்ள வில்லை. அம்மாவின் வீட்டிலேயே அவளின் ஆடைகளும் மற்ற பொருட்களும் இன்னும் இருக்கிறது. சின்ன டிராவல் பேக் மட்டும் எடுத்துக் கொண்டவள் துப்பட்டா எடுத்து போட்டுக் கொள்ள, அவளையே பார்த்த படி நின்றிருந்தான் விஷ்வா.
“என்ன விஷ்வா? கீழ போகலையா?” எனக் கேட்டாள்.
அவளருகில் வந்தவன் அவள் மாட்டியிருந்த பையை கழட்டி கீழே வைத்தான். அவளை கொஞ்சம் பரிதவிப்புடன் பார்த்தவன் தோள்களை உயர்த்தி உதடுகளை பிதுக்கினான்.
ஒன்றும் புரியாமல் “என்ன?” எனக் கேட்டாள்.
“இட்ஸ் ஸ்ட்ரேஞ் வேதா!”
“எது ஸ்ட்ரேஞ்?”
“உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாதுன்னு ஓடிப் போனேன், என் வசமிழந்து கோவத்துல உனக்கே தாலி கட்டினேன். தாத்தாக்காக இங்க அழைச்சிட்டு வந்தேன். சேர்ந்தா போல இருபது நாள் இருந்திருக்கோம். ஜஸ்ட் ட்வெண்டி டேஸ்!” என சொல்லி நிறுத்தினான்.
அவள் அவனையே பார்த்திருக்க, “இப்போ நீ கிளம்பறேங்கவும் ஏதாவது பண்ணி உன்னை போக விடாம செய்தா என்னன்னு தோணுது. நீ சொல்லு… உன்னை இங்கேயே இருக்க வைக்கவா?” எனக் கேட்டான்.
கைகளை கட்டிக் கொண்டு அவனை தீர்க்கமாக பார்த்தவள், “உங்களை என்ன செய்யலாம்னு கோவமா வருது!” என்றாள்.
“என்ன வேணா செய்யலாமே!” என இலகுவாக சொன்னான்.
“நமக்குள்ள இன்னும் எதுவோ சரியாகாத நிலைதான் விஷ்வா. இந்த ஒரு மாசம் நாம தள்ளி இருக்கிறது அதை சரி செய்யலாம் இல்லையா?” என அவள் கேட்க முகத்தை திருப்பினான்.
“இல்லைனாலும் நமக்குள்ள எல்லாத்தையும் ஃபிக்ஸ் பண்ண நீங்க மெனெக்கெடுங்க. வாய்ப்பா கைக்கு வந்த போது கோட்டை விட்டுட்டிங்க, இப்ப விட்டதை பிடிக்க இன்னொரு சான்ஸ், யூஸ் பண்ணிக்கோங்க” என சொல்லிக் கொண்டே பேகை எடுக்க குனிந்தாள்.
அவளை நிமிர்த்தி பிடித்தவன் தன்னோடு அணைத்துக் கொண்டான். முதலில் தடுமாறினாலும் அவனோடு இயைந்து நின்று, அவனது காயமிருந்த பகுதியை தடவி விட்டுக் கொண்டே, “போய்ட்டு வர்றேன் விஷ்வா, விடுங்க என்னை” என்றாள்.
ம் என சொல்லிக் கொண்டே அவளை விட்டவன், சிறு முறுவலுடன் “போடி!” என்றான்.
அவளுக்கு முன் அவனே அவளின் பேகை எடுத்துக் கொண்டு அவள் கையை பிடித்துக்கொண்டு அறையை விட்டு வந்தான்.
“ஹ்ம்ம்… நான் வீட்ல இல்லாத இந்த ஒரு மாசத்துல விஷ்வா இன்னும் எவ்ளோ மாறி போவாருன்னு தெரியலை, அதை தெரிஞ்சுக்க இங்க வரும்போது ஆவலா வருவேன்” என சொல்லிக் கொண்டே நடந்தாள் வேதா.