Advertisement

 ” இல்ல மாமா லீவ் போட்டுட்டேன்” என்று சொல்லவும்., அவருக்கு சற்று ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியாக தான் இருந்தது., ஏனெனில் அவ்வளவு எளிதில் அலுவலகத்திற்கு விடுப்பு எடுப்பது அவளுக்குப் பிடிக்காத ஒரு விஷயம். வேறு வழியே இல்லை  என்று தெரிந்தால் மட்டுமே விடுப்பு எடுப்பாள். அப்படிப்பட்டவள் சொல்லாமல் விடுப்பு எடுத்து விட்டு வந்து.,  லீவு எடுத்திருக்கிறேன் என்று சொல்வது அவருக்கு சற்று ஆச்சரியமாகவே இருந்தது.

     ஏன் என்று கேட்டதற்கு..,  “நான் சென்னை போலாம்னு இருக்கேன் மாமா”., என்றாள்.

     “அதான் இன்னும் பத்து நாள் இருக்கே மா கல்யாணத்துக்கு.,  நம்ம எல்லாம்   மூணு நாள் கழிச்சு கிளம்பலாமே.,  ஒரு  ஏழு நாள் முன்னாடி இருக்கிற மாதிரி தானே பிளான் பண்ணி இருந்தோம்.,  அப்படியே போகலாமே,  என்று சொன்னார்.

                “இருக்கட்டுமே., மாமா, நாம போகலாம்” என்று வற்புறுத்தி சொன்னாள்.

                 வேறு வழி இன்றி அனைவரும் கிளம்பலாம் என்ற சூழ்நிலைக்கு வந்தனர். காரணம் அபூர்வாவின் பிடிவாதம் மட்டும் தான்., வீட்டில் பெரியவர்கள் அவர்களுக்குள் பேசிக் கொண்டது. “ஏன் அபூர்வா  இவ்வளவு அவசரமாக கிளம்ப வேண்டும் என்கிறாள்”,  என்பது மட்டும் தான்.

       “எத்தனை நாள் லீவு எடுத்திருக்க” என்று அபூர்வாவிடம் மாமா கேட்டார்.

     “பி. ஏ ட்ட  எழுதிக் கொடுத்து இருக்கேன் மாமா., அங்கே போய் அதுக்கப்புறம் தான் முடிவு பண்ணனும்”என்று சொன்னாள்.

            “ஏன்டா., மா மேரேஜ் முடிஞ்ச உடனே திரும்பி வந்துருவோம் தானே”., என்று அத்தை கேட்டார்.

           “இல்ல அத்தை., அங்கே போன பிறகு தான் சொல்ல முடியும்”.,

         “லீவே போட மாட்டீயே… இப்ப திடீர்ன்னு நிறைய லீவு ப்ளான் பண்ணுறீயே., அது தான் கேட்டேன்” என்றார்.

            “சும்மா தான் அத்தை., எனக்கு கொஞ்சநாள் ப்ரீயா இருக்கும்னு தோணுச்சு”., என்று சாதாரணமாகவே சொல்லிவிட்டாள்.

           ஆனால் பெரியவர்களின் மனதில் சின்ன உறுத்தல் இருந்தது. இது வரை விடுப்பு எடுக்க மாட்டேன் என்றவள் வேலைக்கு போவது தான் எனக்கு பிடிக்கும் என்று அடம்பிடிப்பவள்., இப்பொழுது விடுப்பு அதிகமாக எடுத்தது மட்டுமல்லாமல்.,  வேண்டுமென்றால் மீண்டும் எடுத்துக் கொள்வேன் என்று சொல்லும் அளவிற்கு என்ன நடந்தது என்று யோசனையோடு இருந்தனர்.

                       அதே நேரம் வேறு ஏதும் அலுவலகத்தில் பிரச்சினை இருக்குமோ,  என்ற எண்ணத்தோடு அவர்கள் கிளம்பிக் கொண்டிருந்த அந்த இடைப்பட்ட நேரத்தில் அபூர்வாவின் மாமா அலுவலகம் சார்ந்த இடங்களிலும் விசாரித்து விட்டார். ஏனெனில் ஒரு பெண் என்பவள் எவ்வளவு பெரிய பதவியில் இருந்தாலும்.,  இன்னும் நம் நாட்டில் பெண்ணடிமைத்தனம்  என்ற பெயரில் பெண்களுக்கு கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஏதாவது ஒருவகையில் தொந்தரவு செய்து நோகடிப்பது என்பது கூட ஒரு வகையான துன்புறுத்தல் தான் பெண்களுக்கு.., எனவே அது சம்பந்தமாக அலுவலகத்தில் பேசிவிட்டு அதன்பிறகே கிளம்ப தொடங்கினார் அபூர்வாவின் மாமா..,

       அவளுக்கு தேவையானவற்றை அவளே எடுத்து வைத்துக் கொண்டு கிளம்பினாள். ஆனால் கிளம்ப தொடங்கியதிலிருந்து அவளது முகம் முழுவதும் யோசனையை சுமந்து இருந்தது. அதிலேயே அவளின் அத்தைக்கும் மாமாவுக்கும் இவள் வேறு ஏதோ யோசித்துக் கொண்டே இருக்கிறாள் என்ற எண்ணம் ஆழமாக தோன்றியது. அதையே பாட்டியும் தாத்தாவும் ஏர்போர்ட்டில் வைத்து சொல்லிக் கொண்டிருக்க பெரியவர்கள் நால்வரும் அதை தான் பேசிக் கொண்டிருந்தனர்.

      அப்போது அபூர்வாவின் மாமா தான்   “பிரச்சனை இருக்காது ன்னு நம்புவோம்.  இப்ப ஏதாவது பண்ண முடியுமா ன்னு யோசிக்கிறா  அப்படின்னு எனக்கு தோணுது..,   ஆனாலும் இவை எதை யோசிக்கிற அப்படிங்கறது என்னால புரிஞ்சுக்க முடியல., அவளா வாய திறந்து சொன்னால் ஒழிய., யாருமே இவள புரிஞ்சுக்க முடியாது”. என்று சொன்னார். அது என்னவோ உண்மைதான் என்று பாட்டியும் அத்தையும் சேர்ந்து  ஒத்துக் கொண்டார்கள்….

         “என்னடா ஒன்னுமே பேச மாட்டேங்குற”., என்று தாத்தா தனது மகனைப் பார்த்து கேட்டார்.

          “அவ யோசிக்கிறது ல வித்தியாசம் தெரியுது பா., ஏதோ முடிவு எடுக்கப் போறா, முடிவு எடுத்துட்டு வந்து தான் சொல்லுவா, அவ என்ன முடிவு எடுத்தாலும் ஏத்துக்கிற மனசுக்கு எல்லாரும் தயாரா இருங்க”..,என்று சொன்னார்.

            அத்தையோ கண்கலங்க “ஏங்க சென்னையிலேயே, இருந்துப்பாளோ., நம்ம கூட திரும்பி வர மாட்டாளா”., என்று கேட்டார்.

      “இவ  என்ன முடிவு எடுக்கப் போறா ன்னு.,  எனக்கு தெரியல,  சென்னையில இருக்கிற மாதிரி இருந்தா,  அது ஒன்னும் பிரச்சனை இல்ல,  வேற விஷயம்  என்ன னா., இவ யோசிக்கிறது எனக்கு வித்தியாசமா தெரியுது” என்றார்,  அவளை வளர்த்த தகப்பனாக மாமா யோசித்தார்.

     ஏனெனில் அவள் எதை முடிவு செய்வதாக இருந்தாலும்., அவளின் குணம் தீர ஆலோசிப்பது பலரின் கோணங்களிலிருந்து அவள் எடுத்த முடிவு சரிதானா என்பதை ஆராய்ந்து நோக்கிவிட்டு அதன் பிறகே முடிவை வெளியில் சொல்வாள்.  அவள் வேலை விஷயத்திலும் சரி.,  வீட்டிலும் சரி எப்பொழுதும் அவளது பழக்கம் அது தான் என்பது அனைவருக்கும் தெரியும்.

         ஆதலால் அனைவரும் ‘எந்த முடிவு எடுத்தாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்’ என்று நினைத்துக் கொண்டனர். அவர்களின் யோசனை இவ்வாறு இருக்க அவளின் யோசனை வித்தியாசமாக இருந்தது.

          தம்பி மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணனாக கல்யாண் இருக்க., ‘தன் தம்பியை நிராகரித்து வார்த்தைகளால் நோகடித்த அவர்கள் குடும்பத்தை கண்டிப்பாக நோகடிக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு இருந்தான். ‘அதே மூஹீர்த்த நாள் என்னும் போது இன்னும் திருமணத்திற்கு பத்து நாள் இருக்கிறது.  நன்றாக மிரட்டிவிட்டு வரவேண்டும்’என்ற எண்ணத்தோடு தனக்கு கீழே இருக்கும் நாலைந்து அரசியல் சம்மந்தப்பட்ட கையாள்களை அழைத்துக் கொண்டான்.

        அரசியல் வேலைகளில் அவசரத்திற்கு வேலை செய்ய ஆட்கள் இருப்பார்கள்., பார்ப்பதற்கு அடியாட்கள் போன்ற தோற்றத்தோடு  இருப்பார்கள். அவர்களை தன்னோடு அழைத்துக் கொண்டான். மறுநாள் செல்ல வேண்டுமென்று விபரத்தையும் சொல்லி வைத்திருந்தான்.

       நரேன் அரசியலில் ஈடுபடாவிட்டாலும் நரேனின் குணம் அங்கு உள்ள ஆட்கள்  அனைவருக்கும் தெரியும். அவர்கள் குடும்பத்தினரிடம் நன்கு பழகுபவர்கள் என்பதால்., அனைவருக்குமே  ‘அவனின் இந்த விபத்து எல்லோருக்கும் சோகத்தை பரிசளித்து இருந்தது., இப்படி ஒரு நல்ல பையனுக்கு இப்படி ஒரு விபத்தா என்றே அனைவரும் யோசித்தனர்’.,

     நரேனை பொருத்தவரை எந்த அளவுக்கு பிசினஸில் புலி, சிங்கம் என்று பட்டம் வாங்கி இருந்தாலும்., யாரிடமும் முகம் சுளித்து பேசமாட்டான். அனைவரிடமும் அன்பாக பழக கூடியவன் அப்படிப்பட்டவன் இன்று மனதளவில் நொந்துபோய் இருப்பது அனைவருக்கும் வேதனையை  ஏற்படுத்த  கூடியதாக இருந்தது…

       ஏர்போர்ட்டில் இருந்து ப்ளைட் கிளம்பிய அந்த நொடிகளில் கூட வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாலே ஒழிய.,  அபூர்வா சாதாரணமாக இல்லை என்பதை வீட்டில் உள்ள அனைவருமே உணர்ந்தனர்.

      அபூர்வா விற்கோ தான் எடுத்த முடிவை வீட்டில் உள்ளவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம் ஒரு புறம் இருந்தாலும்.,  இதுதான் தன் முடிவு என்பதில் தெளிவாக இருந்தாள்..,  மற்றவற்றை அங்கு சென்ற பிறகு பேசிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் அவளுக்கு இருந்தது.

            அதை ‘யாரிடமும் சொல்ல அவள் தயாராக இல்லை, எதுவாக இருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசாமல் முடிவு செய்யமுடியாது’ என்ற எண்ணத்தோடு இங்கிருந்து கிளம்பி இருந்தாள்…

       கிட்டத்தட்ட இரண்டு மூன்று நாட்களாக யோசித்து எடுத்த முடிவு என்பதை விட., இது தான் தனது முடிவு என்ற பிடிவாத தோடு தான் இருந்தாள்.., ‘அதேநேரம் தான் எடுத்த முடிவிற்கு பதில் என்னவாக இருந்தாலும் அதற்கு தகுந்தார் போல் போராட வேண்டியது இருக்கும்’., என்ற நினைவும் அவளை கொஞ்சம் கொஞ்சமாக வதைத்துக் கொண்டிருந்தது.

              இதுவரை பிடிவாதம் பிடித்தாலும் பெரியவர்களை மதிக்காமல் நடந்ததில்லை, ஆனால் எங்கே இவ்விஷயத்தில் பெரியவர்களை மதிக்காமல் நடக்க வேண்டியது வந்து விடுமோ என்ற அச்சமும் அவளுள் எழுந்தது.

       விமானம் சென்னையில் தரை இறங்கப் போவதாக அறிவிப்பு வந்த அந்த நிமிடங்களில், அவள் அறியாமல் அவள் ஒரு பதட்டம் இருந்ததை அவளால் உணர முடிந்தது. முன் வைத்த காலைப் பின் வைக்க கூடாது என்று மனதிற்குள் தைரியம் கூறிக்கொண்டாலும், அவளறியாமல் அவளுக்குள் எழுந்த பதட்டம் அவள் முகத்தில் தெரிந்தது. அதை பார்த்த அன்புக்குரியவர்கள் ஆகிய அத்தைக்கும் மாமாவுக்கும் மனதில் துக்கம் அழுத்தினாலும்., தாத்தா பாட்டியிடம் கண் ஜாடையில் அவள் முக மாற்றத்தை காட்ட தவறவில்லை. அவர்களுக்கும் ‘மனதிற்குள் இந்த புள்ள மனசுக்குள்ள எதையோ போட்டு இருக்கே சொல்ல மாட்டேங்கிறா’  என்ற எண்ணம் இருந்தது.

       எதுவாக இருந்தாலும் அவள் பிடிவாதம் பிடிப்பது என்பது அனைவரும் அறிந்ததே.,  ஆனால் என்ன முடிவு என்று தெரியாமல் எப்படி அவளிடம் பேச முடியும் என்ற எண்ணமும் பெரியவர்களை அவளோடு பேச விடாமல் தடுத்தது…

      ஒரே முறை தான் வாழ்க்கை.,  வாழ்கின்ற வாழ்க்கையை நேர்மையாகவும்,  நியாயமாகவும், வாழ்ந்துவிட வேண்டும்.  யார் மனத்தையும் நோகடிக்காமல்., அன்பு ஒன்றே பிரதானம் என்று சொல்லி வாழ்க்கையை வாழ்ந்து முடித்திட வேண்டும்.

      நீ பிறரின் குணாதிசயங்களை கணிக்கத் துவங்கினால் அவர் பால் அன்பு செலுத்த நேரம் இருக்காது.

                                            – அன்னை தெரசா

Advertisement