அன்று தீபாவளி சீர் செய்ய வந்திருந்தனர் கலைவாணியும் அய்யாவுவும். மாலை மகிழ்நன் வீட்டிற்கு வரும் நேரம் கணக்கிட்டு வந்துவிட, ஒரு மாதம் கழித்து பெற்றோரை பார்த்த மகிழ்வில் பம்பரமாய் சுழன்றாள் சமுத்திரா. காபி, தீனி கொடுத்து உபசரித்து மகளும் பெற்றோரும் விளையாடுவதை பார்த்துக்கொண்டிருந்தவளை,
“நேரமே நைட் சாப்பாடு ரெடி பண்ணிட்டா அப்பாவும் அம்மாவும் சாப்பிட்டு போவாங்க சமு. என்ன பண்ணலாம்னு பாரு.” பத்மா உசுப்ப, பட்டென்று திரும்பினார் கலைவாணி.
மகள் அம்மாவைப் பார்க்க அவர் கண்களை உருட்டி மிரட்டிய தினுசில் அவரருகே அமர்ந்துவிட்டவள் கிசுகிசுப்பாய், “உனக்குத்தானமா செய்றேன்.” எனக் கேட்க, கலைவாணியோ அனைவருக்கும் கேட்கும் விதமாய்,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். புள்ளையை வச்சிருக்குறப்போ தேவையில்லாத வேலை எல்லாம் இழுத்துக்ககூடாது. ஏற்கனவே இவ ஓடவிடுவா, இதுல இதையும் செஞ்சி உன் உடம்பை அலட்டிப்பியா? ஏற்கனவே இளைச்ச மாதிரி தெரியுற… ஏன் மாப்பிள்ளை வெய்ட் குறைஞ்சிருக்கால சமு?” என்று பேச்சை மருமகனிடம் கொண்டுசென்றார்.
திடுமென இப்படி சொல்லவும் மனைவியைப் பார்த்த மகிழ்நன், “எப்போவும் போலத்தான் இருக்கா. ரொம்ப நாள் கழிச்சி பாக்குறதால உங்களுக்கு அப்படி தெரியுது.” மருந்துக்கும் மகிழ்நன் முகத்தில் இளக்கம் இல்லை. நகை விஷயத்தில் மனைவியிடம் சமாதானம் ஆகிவிட்டாலும் மாமியாரின் வார்த்தைகள் அவனை விட்டு மறையவில்லை. அதன் தாக்கத்தை அவர்கள் வந்ததிலிருந்து கலைவாணிக்கு உணர்த்திக் கொண்டிருந்தான். அவருக்கு அதில்லெல்லாம் வருத்தமில்லை. மகள் சஞ்சலமின்றி மகிழ்வாக இருந்தால் போதுமே.
“தினம் பாக்குறதால உங்களுக்குதான் வித்தியாசம் தெரியல போல. அப்புறம் அண்ணி தீபாவளி பலகாரம் எல்லாம் என்ன பண்ணலாம்னு இருக்கீங்க?” பேச்சு அப்படியே பத்மாவிடம் சென்றது.
“இனிமேதான் பாக்கணும்ங்க.”
“இந்த ஸ்வீட் கடையில எல்லாம் இப்போ தீபாவளி பலகாரம்னு போடுறாங்க போல, வர்றப்போ அவ்வளவு விளம்பரம் பார்த்தேன். பேசாம இங்க வந்து வாங்கிட்டு போயிடலாம்னு இருக்கேன். என்ன சொல்லுங்க அடுப்படியில நின்னு வேலை பாக்க முடியல இப்போல்லாம். அவ்ளோ புழுக்கம். பேசாம நீங்களும் அதே பண்ணிடுங்க. இந்த சின்னதை வச்சிட்டு நீங்களும் எவ்ளோ செய்ய முடியும்?” கலைவாணி நைச்சியமாக மகளை காப்பாற்ற முயல, அப்பேச்சு மகிழ்நனுக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை.
“அங்க எல்லாம் அவ்வளவு சுத்தம் இருக்காது அத்தை. வீட்ல செய்யுற மாதிரியும் வராது. பாப்பா சாப்பிடணும், வீட்ல செஞ்சாதான் வயித்துக்கு ஒன்னும் பண்ணாது.” மாமியாரிடம் மகிழ்நன் நேரடியாக சொல்ல, பத்மா புரியாமல் பார்த்தார். இதென்ன நம் வீட்டு சமையல் விவகாரத்தை இப்படி பேசுகிறார்கள், மகன் வேறு மூக்கை நுழைக்கிறானே.
எங்கே பேச்சு மீண்டும் முற்றி சங்கடமாகிடுமோ என்று பயந்த சமுத்திரா, “நல்ல நேரத்துல சீர் கொடுக்கணும்னு சொன்னீங்களே அப்பா.” என்று அப்பாவை இழுத்தாள்.
எதர்ச்சையாக பேசுவது போல் பேசும் மனைவியை குறுக்கிட்டு இதனை பெரிதுபடுத்த வேண்டாம் என்று பேத்தியிடம் கவனம் வைத்திருந்த அய்யாவு சட்டென சுதாரித்து மனைவியைப் பார்க்க, தட்டுக்கள் வாங்கி பழங்கள், தேங்காய், பூ என அடுக்கி வைத்தார்.
“சம்மந்தி எப்போ வருவாங்க?” கந்தவேலை கேட்க,
“எட்டாகிடுது மாமா. கடையில இவங்க ஒரு ஆள்தான் பில் எழுதுறாங்க. இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் கம்ப்யூட்டருக்கு மாத்திடுவாங்க. அதுவரைக்கும் போயிட்டு வரட்டும் பொழுது போகும்னு நாங்களும் விட்டுட்டோம்.”
“அப்பா வந்தததும் கொடுக்கிறது தான் மரியாதையா இருக்கும். நேரம் சரிப்பட மாட்டேங்குதுங்க மாப்பிள்ளை. இதுவே பையன் வந்ததும் வைக்கலாம்னு இருந்தோம், அவன் கடைசி நேரத்துலதான் வருவேன்னு சொல்லிட்டான். அதுதான் நம்மளால முடியுறப்போ வந்துடலாம்னு வந்தாச்சு.”
மாமனாரும் மாப்பிள்ளையும் சிறிது நேரம் பேசி முடித்ததும் வரிசை தட்டுக்களை முறையாக கொடுத்துவிட்டு கிளம்பினர்.
“நாட்டாமை பண்றாங்களா உன் அம்மா? வரவர அவங்க பேச்சே சரியில்லை. கவனிச்சிக்கோ.” இரவு தனிமையில் மனைவியிடம் எகிறினான்.
சமுத்திரா தவிப்பாய் பார்க்க,
“இப்படி பாவமா முழிச்சி முழிச்சு அவங்ககிட்ட என்னவோ சொல்லியிருக்க நீ. அதுதான் இவ்ளோ நாள் இல்லாம இப்போ பேசுறாங்க உன் அம்மா.” என மேலும் காய்ந்தான். அதில் அடிபட்டு போனது பெண் மனது.
அம்மாவுக்கும் கணவனுக்கும் வாக்குவாதம் வந்துவிடுமோ என்று இவள் தவித்த தவிப்பென்ன அதற்கு இவன் கொடுக்கும் பெயரென்ன? வேண்டுமென்றே கோல்மூட்டியது போல் இவள் ஏதோ சொல்லிவிட்டதாக சொல்வதை ஏற்கமுடியவில்லை.
“அம்மா என் மேல இருக்குற அக்கறையில பேசிட்டாங்க. அதை எதுக்கு பெருசுப்படுத்தி என்னை பேசணும்?” மனதின் அழுத்தம் வார்த்தைகளாக வந்தது.
“அப்போ எங்களுக்கெல்லாம் உன் மேல அக்கறை இல்லைங்குறியா?” புரிதலில் விரிசல் வந்தது போல் அனைத்தும் தவறான கண்ணோட்டத்திலேயே அவனிடம் சென்று சேர்ந்தது.
“நான் எப்போ அப்படி சொன்னேன்ங்க?”
“அப்புறம் நீ சொல்றதுக்கான அர்த்தம் அதுதான். திடீர்னு உனக்கு என்ன ஆச்சுன்னு தெரியல எப்படி எப்படியோ பேசுற, நடந்துக்குற.”
“எப்படி பேசுறேன்?” அவன் புரிதலை புரிந்துகொள்ள முயன்றாள் பாவை.
“இதோ இப்படி பேசுறியே இதுதான். சமுத்திரா எல்லாம் புரிஞ்சி நடந்துப்பா, குடும்பத்தை அனுசரிச்சு அதுல இருக்குறவங்களை புரிஞ்சி அவங்களுக்கு ஏத்த மாதிரி பொருந்திப் போயிடுவா. இப்போ அப்படியா இருக்க? அன்னைக்கு தெரியாத்தனமா என் அண்ணன்னு அவனுக்குப் பணம் கொடுத்துட்டேன் அதுலேந்து உன் நடவடிக்கை சரியில்லை. என்ன நினைக்குற நீ? நான் என் அக்கா அண்ணனுக்காக செய்யக்கூடாதா இல்லை உதவக்கூடாதா? உங்க தேவைகளை மட்டுமே பாத்துட்டு இருந்துடணுமா?” வாய் இருக்கிறது என அவன் பேசிக்கொண்டே செல்ல, அவன் முன்வைத்த குற்றச்சாட்டுகளில் துடித்துப்போனாள் சமுத்திரா.
இல்லாத ஒன்றை, நடப்பை, மற்றவர்களின் குண நலன்களை அவளே புரிந்துகொள்ள முயலும் சமயங்களை அவன் குறையாய் பேச, கணவன் என்று ஒட்டிக்கொண்டிருந்த கண்மூடித்தனமான பாசம் அந்நிமிடம் ஆட்டம் கண்டது. இவருக்காக நான் அனைத்தையும் அனுசரித்து சென்றால் இவர் என்னவும் பேசுவாரா? இதே இவர் அண்ணன் மனைவி போல் நான் இருந்திருந்தால்?
அந்தக் கேள்வி மூளையில் தோன்ற, இருந்திருந்தால் என்ன இனிகூட இருக்கலாமே! இனி அப்படியே இரு என்றது ஒரு மனம்.
“உனக்கு இங்க என்ன குறைன்னு தெரியல. அந்த நகை தான் பிரச்சனைன்னா என் தலையை அடமானம் வச்சாவது இந்த மாசம் வாங்கிக் கொடுத்துடுறேன். பீரோவுல பூட்டி வச்சிக்கோ.” என்று கோவமாய் சொல்லிவிட்டு அவன் படுத்துவிட, அழுகையுடன் அவனைப் பார்த்தவள் கொட்ட கொட்ட விழித்திருந்தாள்.
திருமணம் ஆனதிலிருந்து நடந்தவற்றை அசைபோட்டு அதில் தான் வாழத் தவறி விட்டுக்கொடுத்த நிமிடங்களை மீண்டும் மீண்டும் திருப்பிப் பார்த்து நொந்துபோனாள்.
விட்டுக்கொடுத்தவர்கள் கெட்டுப்போவதில்லையாம்! இன்று இவள் எப்படி இருக்கிறாளாம்? அவளுக்கே தெரியவில்லை.
வீட்டு வேலைகளில் எழும் சிறு சிறு சங்கடங்கள் கடந்து பெரிதாக சச்சரவுகள் அழுத்தங்கள் இன்றி சென்றுகொண்டிருந்த வாழ்க்கையில் திடுமென பூகம்பம் எப்படி வந்ததாம்? யோசிக்க யோசிக்க தலை வலித்தது. இடையே உமையாள் வேறு சினுங்க, அவளை தட்டிக்கொடுத்தாள்.
இரு கையிருந்தால்தான் ஓசையெழுப்ப முடியுமா என்ன? ஒற்றை கையிலும் சொடுக்கிட்டு ஓசை கொண்டுவர முடியும் என்ற நினைப்பில்தான் வீட்டு வேலைகளை தன்மேல் போட்டுக்கொண்டு குடும்பம் உடையாமல் இருக்க தன்னால் முடிந்தவற்றை செய்தாள்.
எல்லாம் யாருக்காக? இவருக்காகதானே! குடும்பத்துடன் இருக்கத்தான் கணவன் விரும்புகிறான் என்று தெரிந்தபின் இவளும்தானே இங்கு ஒன்றிப் போனாள்.
இவன் அம்மா என்னை பேசியதே இல்லையா? நான் பொறுத்துப் போகிறேனே. அதுபோல் என் அம்மா பேசுவதை எனக்காக பொறுத்துக்கொள்ள மாட்டாரா என்று ஏதேதோ யோசனைகள்.
இறுதியில் உடல் ஓய்விற்கு கெஞ்சி உறக்கத்திற்கு இழுத்துச் சென்றுவிட்டது. காலையில் வழக்கம் போல் பத்மாவின் பாத்திரக் கச்சேரியில் அன்னிச்சையாக விழித்துக்கொண்டவள் இரவு நடந்ததை மறந்து தன்போல் குளித்து வேலை செய்ய சென்றுவிட்டாள். பாதி சமைத்துக் கொண்டிருந்த பொழுதுதான் நினைவு வர, நெற்றியில் தட்டிக்கொண்டு சோம்பலாய் வேலையைத் தொடர்ந்தாள்.
“உடம்புக்கு முடியலையா என்ன? சோகமா இருக்க? காபி குடிச்சியா?” அவளின் வேகத்தில் தொய்வு தெரிய பத்மா கேட்டுவிட்டார்.
அவரைப் பார்த்து சோர்வாகச் சிரித்தவள் ஒன்றுமில்லை என்று தலையாட்ட, எதர்ச்சையாக மூடி வைத்திருந்த பாலை பார்த்துவிட்டு, “இன்னும் காபி குடிக்கலையா நீ? அதுதான் சோர்வா இருக்க. நீ போய் குடிச்சிட்டு வா, நான் பாத்துக்குறேன்.” என மருமகளை அனுப்பி வைக்க, புருவம் உயர்த்தி நகர்ந்தாள் சமுத்திரா.
கடைசியாக எப்போது இதுபோன்று தன்னை கவனித்துக்கொள்ள சொல்லி ஓய்வு கொடுத்திருக்கிறார் என்று யோசித்துப் பார்த்தாள். அவ்வப்போது போகிற போக்கில் சொல்வார்தான், இவள் பெரிதுபடுத்தியதில்லை என்று தோன்றியது. அப்படியே யோசித்துக்கொண்டே அமர்ந்துவிட, சில நிமிடங்களில் அழைத்துவிட்டார்.
“இந்த சாம்பார் கொதிச்சது போதுமா பாரு. நான் பாதாம் உரிக்குறேன்.” சமுத்திராவுக்கு வழிவிட்டு இவர் நகர்ந்துகொண்டார்.
வேறு வழியின்றி சமைத்து முடித்தவள் உமையாள் எழவும் அவளை தூக்கிக்கொண்டு கொல்லைப்புறம் வந்துவிட்டாள். என்னவோ மனதுக்கு ஆசுவாசம் தேவைப்பட்டது. இயற்கை எழிலில் அதுகிட்டும் என்ற நம்பிக்கையில் மரங்களை அதில் பூத்துக்குலுங்கும் மலர்களை, கொழுந்தாக புதுத்துளிர் விடும் செடிகளை வெறித்தாள். இடையிடையே மகள் என்ன செய்கிறாள் என்று கவனிக்கவும் தவறவில்லை.
சிறிது நேரத்தில் அவள் பின் அரவம் கேட்க, அனிச்சையாக திரும்பிப் பார்க்க கணவன் நின்றிருந்தான். அவனை காண விருப்பமில்லாதவளாய் தலை குனிந்துகொள்ள, அவளையே ஆழ்ந்து பார்த்தவன் அவள் கைப்பிடித்து தன் புறம் திருப்பினான்.
இவள் பிடிகொடுக்காமல் கையை உறுவிக்கொள்ளப் பார்க்க, அவள் தாடையைப் பிடித்து சமுத்திராவை நிமிர்ந்து பார்க்கச் செய்தான்.
பார்வையை இப்படியும் அப்படியும் திருப்பினாள், மறந்தும் அவனை எதிர்கொள்ளவில்லை.
“நைட் தூங்குனியா இல்லையா? முகமே சரியில்லை. ப்ச், உங்கிட்ட இவ்ளோ கோவம் காட்டியிருக்கக்கூடாதுதான்.” என்றவன் கால்களை இப்படியும் அப்படியும் அகற்றி நகர்த்தி வைத்து ஏதோ சொல்ல முயன்று முடியாதது போல் தடுமாற்றத்துடன் நின்றான்.
அனைத்தையும் கவனித்தவள் தன் முகத்திலிருந்த அவன் கையை விலக்கிவிட்டு பின்னகர, “எங்க போற?” என்று தன்னை நோக்கி பிடித்திழுக்க, இவன் பெயரை அழைத்துக்கொண்டே வந்தார் பத்மா.
அதில் மகிழ்நனின் பிடி தளர, சமுத்திரா பட்டென்று இருவருக்கிடையில் இடைவெளி ஏற்படுத்தி நகர்ந்தாள்.
“நேரமே கிளம்பிட்டியே மகிழு. சாப்பிடலாம் வா.” என்று அழைக்க, கணவன் மனைவியைப் பார்த்தான்.
“அவ பாப்பாக்கு ஊட்டணும். நீ வா.” பத்மா மகனின் பார்வைக்கு பதில் சொல்ல, அவனோ,
“சமு வா சாப்பிடலாம். எடுத்து வைங்க மா, நாங்க மூணு பேரும் சேர்ந்தே சாப்பிடுறோம்.” சமுத்திரா கையை பிடித்துக்கொண்டு உள்ளே அழைத்துச் செல்ல, பத்மாவின் முன் அவன் கையை உதற முடியாமல் அதிர்ந்து பார்த்தாள். இப்படியெல்லாம் செய்பவன் இல்லை அவன்.
குனிந்து மகளை ஒருகையில் தூக்கிக்கொண்டு சமுத்திரா கைப் பிடித்து உள்ளே அழைத்து வந்து உணவு மேசையின் நாற்காலியில் அமர வைத்தான். உமையாள் கீழே இறங்கி ஓடப்பார்க்க, அவளை மேசையில் அமர வைத்து இருபக்கமும் அணைவாய் கைவைத்து பிடித்துக்கொள்ள, பெருமூச்சுடன் எழுந்து சென்று உணவு எடுத்து வந்து அவளுக்கு ஊட்ட ஆரம்பித்தாள் சமுத்திரா. பத்மாவும் அதற்குள் மகனுக்குப் பரிமாறிவிட,
“நீயும் சாப்பிடு சமு.”
“பாப்பாக்கு ஊட்டணும். உங்களுக்கு நேரமாகிடும். நீங்க சாப்பிட்டு கிளம்புங்க.” அவன் முகம் பாராமல் பதில் சொல்ல, அவள் பேசிவிட்டதே போதும் என்பது போல் லேசாக புன்னகைத்து அன்றைய நாளை துவக்கினான் மகிழ்நன்.