*8*

உன்னை நம்பினேன் என்று இருவரும் மாறி மாறி சாடிக்கொண்ட பின் முகம் பார்க்கவே அத்தனை சங்கடம் சமுத்திராவுக்கு. தன்னை இப்படி சொல்லிவிட்டான் என்ற ஆதங்கம் பின்சென்று தான் அவனை பேசிவிட்டோமே என்று சஞ்சலம் கொண்டாள். 

காலை எழுந்து எப்போதும் போல் வேலையில் இறங்கிவிட்டவள் அவ்வப்போது தங்கள் அறையை பார்த்துக்கொண்டாள். மகிழ்நன் இன்னும் எழுந்து வரவில்லை. இரவு பேசியபின் ஆளுக்கு ஒருபுறம் முதுகு காட்டி உறங்கிவிட்டனர். 

வழமையாய் அவன் கிளம்பி வரும் நேரத்தை கணக்கிட்டு கூடத்திலேயே அமர்ந்துவிட்டாள். எப்போதும் அந்நேரம் சமையலறை நன்மதியின் வசம் என்பதால் பின்புறம் சென்றுவிடுவாள். இன்று கணவனுக்காக வீட்டினுள் அமர்ந்தபடியே உமையாளுக்கு ஊட்டிவிட, வேலைக்கு கிளம்பிய நன்மதி யோசனையாய் பார்த்துச் சென்றாள். 

“என்ன சமு ரூமையே பார்த்துட்டு இருக்க. மகிழுக்கு நேரமாச்சுன்னா போய் எழுப்ப வேண்டியதுதானே.” என்ற பத்மாவைப் பார்த்து இவள் ஒருவாராய் தலையசைக்க, அறைக்கதவு திறக்கும் அரவத்தில் பட்டென கவனத்தை திருப்பினாள்.

வங்கிக்கு தயாராகி வந்திருந்த மகிழ்நன் இவள் புறம் திரும்பவே இல்லை. உணவுக்காக மேசையில் அமர, அவசரமாக எழுந்து இவள் பரிமாறப் போனாள். வழமை போல் குறுக்கே பத்மா வந்துவிட, பின்தங்கிவிட்டவள் பாவமாய் தவிப்பாய் கணவன் முகம் பார்த்தாள். அவனோ அவளொருத்தி இருக்கிறாள் என்ற எண்ணமின்றி மகளிடம் பேச்சு கொடுத்தபடி உண்டு முடித்து கிளம்பிவிட்டான். சோர்வாக உணர்ந்தவள் மகளை தூக்கிக்கொண்டு அறைக்குள் செல்லப்பார்க்க, 

“பதினைஞ்சி நாள் கழிச்சி வந்துட்டு பாப்பாவோட இன்னைக்கும் ரூமுக்குள்ள அடைஞ்சிகிட்டா எப்படி?” முணுமுணுப்பது போல் பத்மா சத்தமாக சொல்லவும் ஆயாசமாய் வந்தது.

உமையாளை அவரிடம் விட்டவள், பேத்திதானே வேண்டும் என அறைக்கு நகரப்பார்க்க பத்மா அதற்கும் ஒத்துவரவில்லை.

“என்னால தனியா சமாளிக்க முடியாது.” என்றார்.

சோர்வுறும் மனதிற்கு ஓய்வு கொடுக்கும் விதமாய் நினைத்த மாத்திரம் வருத்தத்தை கூட தனிமையில் அனுசரிக்க முடியவில்லையென்றால் என்ன வீடு இது என்ற கேள்வி எழும்பி அவளை மேலும் அழுத்தியது. 

அவரிடம் பேச தெம்பில்லாதவளாய் கூடத்திலேயே ஓரமாய் அமர்ந்துகொண்டாள். பத்து நிமிடம் பேத்தியை சமாளித்துப் பார்த்தவர் அதற்கு மேல் முடியாமல் அம்மாவிடம் செல் என்று உமையாள் கையில் என்னவோ கொடுத்து சமுத்திராவை நோக்கி அனுப்பிவிட்டார். மழலைப் பிதற்றலில் அவளும் அம்மாவிடம் வர, தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள். விளையாட்டு சாமான்களோடு சீப்பு, வளையல், பவுடர் என எடுத்துக்கொடுக்க மேக்கப் செய்கிறேன் என்ற பேர்வழியில் அவளாக எதுவோ செய்ய, சமுத்திராவுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைத்தது. கட்டிலை ஒட்டி தரையில் அமர்ந்து மெத்தையில் தலைசாய்த்தபடி வெறுமென மகளை பார்த்துக்கொண்டு அமர்ந்தாள். 

மகளுக்கு நகை கேட்டது அத்தனை பெரிய குற்றமா? எங்கோ துவங்கி எங்கோ வந்து நிற்கிறதே. வேண்டும் என்று விரும்பிக் கேட்ட நாளிலிருந்து தன் நிம்மதி பறிபோய்விட்டதாய் உழன்றவளுக்கு கலைவாணி அழைப்பு விடுக்க அதனை எடுக்காமல் வெறுமென வெறித்தாள். அவர்வேறு அவர் பங்குக்கு இன்னும் நோகச் செய்வார் என இவள் தவிர்க்க, அவர் விடுவதாய் இல்லை. திரும்பத் திரும்ப அழைக்க ஒருகட்டத்தில் ஏற்றுவிட்டாள் சமுத்திரா.

“வேலையா இருந்தியா? போன் எடுக்கல?” என்று ஆரம்பிக்க, இவள் ம் கொட்டினாள்.

“என்னடி குரல்ல சுரைத்தையே இல்லை. அங்க யாரும் என்னமாச்சும் சொன்னாங்களா?” அப்போதே வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு தயாராகிவிட்டார். அதில் தூண்டப்பெற்றவளாய்,

“ப்ச்… எல்லாம் உன்னால தான்மா. அவர்கிட்ட ஏன் அப்படி பேசுன நீ?”  

“ஏன் என்ன சொல்றாரு உன் வீட்டுக்காரர்?” மகள் பதற, இவர் சாவுகாசமாய் கேட்டார். 

“கம்முனு இல்லாம ஏதேதோ பேசியிருக்க. பாப்பாக்கு அவர் வாங்கலைனு எனக்கு வருத்தம்தான், அதுக்காக அவரால வாங்கித்தர முடியாதுனு எப்படி சொல்லலாம் நீ?” 

“இப்போ பேசுறீல்ல இதே மாதிரி உன் புருஷன்கிட்ட பேசிட்டு வந்து என்னை கேள்வி கேளு.” துளியும் அசரவில்லை கலைவாணி.

“பேச்சை மாத்தாதமா நீ. கோச்சிக்கிட்டாரு அவரு.” சொல்லும்போதே சமுத்திராவின் குரல் கலங்கியது. 

“ரோஷக்காரருக்கு அப்படியாச்சு நீயும் பாப்பாவும்தான் முக்கியம்னு புரியட்டும். வீட்டுக்கு செய்ய வேண்டியதுதான் அதெல்லாம் உங்களுக்கு அப்புறம்தான்.”

அவர் பேச பேச கண்கள் கலங்குவது போல் இருக்க, அழுதால் கலைவாணியின் கோபம் அதிகரித்துவிடும் என அமைதி காத்தாள் சமுத்திரா.

“இந்த ரோஷத்தோடவே கொஞ்ச நாள் சுத்தட்டும். உனக்காக நாங்க கேப்போம்னு புரிஞ்சிக்கட்டும். நீ போய் மன்னிச்சிடுங்க எசமானு கால்ல விழாத.” கலைவாணி கறாராக சொல்ல,

“என் முகத்தையே பாக்கல அவங்க.” வேதனை கொண்டாள் சமுத்திரா.

இதெல்லாம் ஒரு விஷயமா என்றார் கலைவாணி, “எவ்வளவு நாளைக்குங்குறேன்? அதெல்லாம் தானா வருவாங்க. நீ இறுக்கிப்பிடி. ஏன் உன் புருஷனுக்கு வக்காலத்து வாங்குறியே இதே மாதிரி உங்ககிட்ட காசில்லாம உன் கொழுந்தனர்கிட்ட இருந்திருந்தா அவங்க வச்சிக்கோ தம்பின்னு கொடுத்திருப்பாங்களா என்ன? இல்லை கொடுக்கத்தான் விட்டிருப்பாளா உன் ஓப்படியா? என்ன இருக்கோ செய்யட்டும்னு உங்களை விட்டிருப்பாங்க. இது புரியாம உன் புருஷன்தான் காசை வாரி இறைச்சிட்டு காலர் தூக்கி விட்டுக்குறாருன்னா நீயும் அப்படியே இருக்க. இப்போவாச்சும் கண்ணைத் துறந்து பாரு. பரவாயில்லை பரவாயில்லைனு நீ குனிய குனியதான் குட்டுறாங்க. எதிர்த்து கேளு.” 

“எனக்கு அப்படியெல்லாம் சண்டை போடவேண்டாம்.”

“உன்னை சண்டையா போட சொல்றேன். பொறுமையா எடுத்து சொல்லு, கேக்கலைனா என்ன பண்ணலாம்னு பாக்கலாம். அதை விட்டுட்டு நான் கேக்கவே மாட்டேன்னு இருந்து தியாகி பட்டம் வாங்கப்போறியா?”

“…”

“இதுவரைக்கும் நீ இதுமாதிரி எதுவும் சொல்லல நானும் கண்டுக்காம இருந்துட்டேன். எப்போ பண விஷயத்துல சங்கடம் வந்துடுச்சோ இனி சுதாரிச்சிக்கணும். உன் குடும்பம் தழைக்கணும்னா நீ முதல்ல மாறு.”

“எல்லாரும் என் குடும்பம்தானே. பிரிக்குறதுக்கு யோசனை கொடுக்காத நீ.”

“அடிப்போடி… எந்த காலத்துல இருக்க. கடைசி காலம் வரைக்கும் இந்த குடும்பமா உன்கூட வரப்போகுது? உன் பொண்ணுகூட கல்யாணம் கட்டி போயிடுவா. காலத்துக்கும் நீயும் உன் புருஷனும்தான் வாழ்ந்தாகணும். இப்போவே எல்லாத்தையும் தூக்கி கொடுத்துட்டு நாளைக்கு ரோட்டுல நிப்பீங்களா?”

“…”

“நாம நல்லாயிருக்கணுங்குறதுக்காக சுயநலமா இன்னொரு குடும்பத்தை ஒதுக்கணும்னு இல்லை. எல்லை என்னவோ அதை வகுத்து தள்ளி நின்னுடனும். நீ அந்த குடும்பத்தை பிரிக்க வேணாம். உனக்கான எல்லையை வகுத்துக்கோ. உன் கண்ணுக்கு முன்ன உன் ஓப்படியா இல்லை, யார் என்ன நினைக்குறாங்கனு கவலை இல்லாம என் எல்லை இதுதான் நிக்குறால்ல. அதுக்காக அவளை ஒதுக்கியா வச்சிட்டாங்க. அவ வீட்டுக்காரன் எப்படி வச்சிக்காரு அவளை. அதுல பாதி இருப்பாரா உன் புருஷன்?” என்று கேட்க, கணவனை ஒப்பிட்டுப் பேசவும் சஞ்சலம் கொண்டாள் சமுத்திரா.

“இன்னொரு முறை நீ அவரை யார்கூடவும் கம்பேர் பண்ணி மரியாதை இல்லாம பேசாதமா. எனக்குப் பிடிக்கல.” என நேரடியாக சொல்ல, சலித்துக்கொண்டார் கலைவாணி, “உண்மையை சொன்னா மரியாதை குறைச்சலா. சரிதான், என்னனு சொல்லிக்கொடுத்து வளத்தேனோ உன்னை. நீ இப்படி இருந்தா உன் வீட்டுக்காரர் ஏன் உன் தலையில ஏறி ஆடமாட்டாரு.”

“திரும்ப ஆரம்பிக்காத, தலை வலிக்குது. நான் வைக்குறேன்.” என அழைப்பை துண்டித்துவிட்டாள் சமுத்திரா. என்னவோ அன்னை கணவனை குறையாய் பேசுவதை ஏற்கமுடியவில்லை. 

ஒரே கருவறை பகிர்ந்து பிறந்திருந்தாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதம். புத்திக்கூர்மை, பழக்க வழக்கங்கள், ஆக்கப்பூர்வ ஆற்றல்கள், சூழலை எதிர்கொள்ளும் விதம் என எல்லாம் மாறுபடும். இதில் அன்பை வெளிப்படுத்துவதில் மட்டும் எப்படி ஒற்றுமையை எதிர்பார்க்க முடியும். ஒருவர் வெளிப்படைத்தன்மையை கடைபிடிப்பதால் வெளிக்காட்டாமல் இருக்கும் மற்றொருவருள் அந்த உணர்வு இல்லையென்ற முடிவுக்கு வரமுடியதல்லவா. அப்படித்தான் செழியனின் அனுசரணையையும் மகிழ்நனின் அளவான பேச்சுக்களையும் பார்க்கிறாள் அவள். வேற்றுமையில் ஒற்றுமை என்ற மந்திரம்தான் குடும்பத்தை நேர்கொண்டு செலுத்துகிறது என்ற எண்ணம். அதுதான் சரியும்கூட என்று
இருப்பவளால் சட்டென்று கலைவாணியின் போதனையை ஏற்க முடியவில்லை. அதற்காக முன்பு போல் ஒதுக்கவும் இல்லை. 

இங்கு நடப்பதை தான் சொல்வதால் மரியாதைக் குறைவாக நினைக்கிறோரோ என்று எண்ணம் பிறக்க, இனி சொல்லில் கவனம் வேண்டும் என நினைத்துக்கொண்டாள்.

வழமை போல் நேரம் ஓட, மாலையும் கணவனைப் பின்தொடர்ந்தது அவள் விழிகள். முகம் கொடுக்காமல் அவனும் மகளுடன் விளையாடி பொழுதை ஓட்ட, இருநாட்கள் அப்படியே தொடர்ந்தது.  

“ரெண்டு நாளா சமுத்திரா முகமும் உங்க தம்பி முகமும் சரியேயில்லை.” என்று ஆரம்பித்த நன்மதியை முறைத்தான் செழியன்.

“முறைச்சா?” அசராது பார்த்தாள் நன்மதி.

“இதை விடவே மாட்டியா நீ? அவங்களுக்குள்ள என்னவோ அதெல்லாம் நமக்கு எதுக்கு?”

“நம்மளால அவங்களுக்குள்ள சண்டைன்னா கண்டுக்காம எப்படி இருக்க? ஊர்லேந்து உங்க தம்பி கூட்டிட்டு வந்தப்போவே அவங்க முகம் சரியில்லை.”

“ஓவரா யோசிக்குற நீ.”

“எனக்கு ஒருமாதிரி கில்ட்டா இருக்குங்க. கடன் வாங்கிட்டு நடமாடுற மாதிரி… ஏற்கனவே எல்லாம் அவங்கதான் செய்றாங்க, கேட்டா அதுக்கு ஒரு கதை சொல்றீங்க.” என்று சொல்ல, மனைவியை அழுத்தமாக பார்த்தான் செழியன்.

“என்ன?”

“அது எனக்கும் என் தம்பிக்கும் உள்ளதுனு அப்போவே சொல்லிட்டேன். தேவையில்லாம அதை பத்தி யோசிச்சு என்னையும் டென்சன் பண்ற நீ.”

“கல்யாணத்துக்கு முன்னாடி எப்படியோ ஆனா இப்போ நீங்க எடுக்குற முடிவுனால நாங்களும் அபெக்ட் ஆகுறோம். இதால வர்ற நல்லது கேட்டது எல்லாமே எங்களையும் சேரும். கேக்காம இருக்க முடியாது என்னால.” தன் எண்ணத்தில் தெளிவாக இருந்தாள் நன்மதி.

பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை அவளை திருப்திப்படுத்த முடியாது என புரிந்துபோனது செழியனுக்கு. அப்போதே பீரோவைத் திறந்து கொஞ்சம் பணத்தை எடுத்து எண்ணியவன் நன்மதியின் முன் காட்டி, “பத்தாயிரம் இருக்கு. மகிழ்கிட்ட கொடுத்துடுறேன். இப்போ நிம்மதியா?” 

தன் முன் அழுத்தமாக நின்றவனை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவள் அவன் கையிலிருந்த பணத்தையும் பார்த்தாள். 

“இந்த பணம் எதுக்குன்னு உனக்கே தெரியும். பேங்க்ல போடலாம்னு எடுத்துட்டு வந்தேன். இப்போ மகிழ்கிட்ட கொடுத்துடுறேன். சமாளிக்க ரெடியா இருந்துக்க.” என்று எச்சரிக்கை போல் சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற, நெற்றியை தேய்த்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள் நன்மதி.

அனைவரும் உறங்கச் சென்றிருக்க, தன்னறைக்கு பக்கத்தில் இருக்கும் தம்பியின் அறையை தட்டவே அத்தனை சங்கடமாக இருந்தது செழியனுக்கு. நாளை கூட கொடுக்கலாம்தான் ஆனால் இப்போதே கொடுத்தால் இந்த இரவு நன்மதி நிம்மதியாக உறங்குவாள். 

உமையாள் உறங்கியிருந்தால் தான் எழுப்பிவிட்டது போல் ஆகிவிடுமே, இந்த நேரத்தில் எப்படி தொந்தரவு செய்ய என்று தயங்கித் தயங்கி நின்றவன் அலைபேசி அழைப்பு விடுக்க, ஒரே அழைப்பில் வந்து கதவை திறந்துவிட்டான் தம்பிக்காரன்.