சாலையில் நிற்கும் அவன் வண்டியை ஆச்சர்யமாக பார்க்க,
“நம்ம வீட்டுக்கு போலாமா தங்கம்? தாத்தா, பாட்டி, பெரியப்பா, பெரியம்மா எல்லாரும் பாப்பா எப்போ வருவான்னு பாத்துட்டு இருக்காங்க.” பேச்சு கொடுத்தபடி வண்டியின் முன்னே அவளை அமரவைத்து வண்டியை உயிர்பித்தவன் அதனை உருமவிட, திடுக்கிட்டு அவன் பின் ஏறிக்கொண்டாள் சமுத்திரா. என்னவோ சரியில்லை என்று உள்மனம் கூற, பின்னிருந்து அவனை பார்க்க முயன்றாள். மகள்தான் தெரிந்தாள்.
“சொல்லவே இல்லை, சர்ப்ரைஸா வந்துட்டீங்க.” சமுத்திரா பேச்சு கொடுத்துப்பார்க்க பதிலில்லை.
“ஏங்க, காலையில போன் கூட பண்ணல.”
“…”
சமுத்திராவின் முகம் சுருங்கியது. இன்னும் இரு நாட்கள் இங்கு தங்கி வருகிறேன் என்று சொன்னது பிடிக்கவில்லையோ? மகள் நியாபகம் வரவும் பார்க்க வந்திருப்பானோ? எண்ணங்கள் பல விதமாய் ஓட, வீடு வந்ததும் இறங்கிக்கொண்டவள்,
“உள்ள வாங்க.” என்று அழைத்துவிட்டு வீட்டிற்குள் செல்ல முனைய,
“வீட்டுக்கு வர எண்ணம் இருந்தா எல்லாத்தையும் பேக் பண்ணு.” என்றான் மகிழ்நன்.
மெலிதாக அதிர்ந்தவள், ‘இப்போவேவா?’ என்பது போல் அவனைப் பார்க்க,
“ஏன் உன் அம்மா பேச்சை கேட்டுட்டு இங்கேயே இருக்கலாம்னு முடிவு பண்ணிட்டியா?” முகம் இறுக அவன் வீட்டிற்குள் நுழையாது கேட்கவும் அதிர்ந்து போனாள் சமுத்திரா.
“என்னங்க?” தவிப்பாய் கலவரமாய் அவனைப் பார்க்க, என்ன பேசியிருப்பானோ அய்யாவு வரவும் வாய் மூடிக்கொண்டான்.
“வாசல்லையே நிக்குறீங்களே. உள்ள வாங்க. சமு கூட்டிட்டு வா.”
“ரெண்டு பேரையும் அழைச்சிட்டு போகலாம்னு வந்தேன் மாமா. கிளம்புறோம்.” என்று அவன் நிற்க,
“கிளம்பலாம் மாப்பிள்ளை. மதியம் சாப்பிட்டுட்டு வெயில் தாழ சாயந்திரம் போகலாம். உள்ள வாங்க.” அவர் மனைவி பேசி வைத்ததில் மாப்பிள்ளை கோபித்துக்கொண்டது தெரியாமல் பேசினார் அய்யாவு.
“இல்லை இருக்கட்டும் மாமா. வேலை இருக்கு, இப்போவே கிளம்புறோம்.” பதில் மாமனாரிடமும் பார்வை மனைவியையும் துளைக்க, அப்பார்வையில் புதிதாக இறுக்கம் கூடி கங்குகளின் வெப்பம் போல் தகிப்பை காட்ட நெஞ்சில் குளிர் பிறக்க உள்ளே சென்றாள் சமுத்திரா.
அம்மா என்னவோ பேசிவிட்டார் என்று நன்றாக புரிந்துவிட, நேரே அவரிடம் சென்றவள், “அவங்ககிட்ட என்னமா பேசுன? கோவமா இருக்காங்க.”
“இருக்கறதைதான் சொன்னேன். உண்மை சுடத்தான் செய்யும். உன்னை அழைக்க வந்திருக்காராம். அவர் கூப்பிட்ட உடனே பொட்டியை கட்டாத. இன்னும் ரெண்டு மூணு முறை வரட்டும், அப்போதான் நீங்க மனசுல நிப்பீங்க.” என்று சொல்ல, ஆதங்கமாக வந்தது சமுத்திராவுக்கு. இனியும் இங்கிருப்பது சரிவராது, கணவனின் கோபத்தை அதிகப்படுத்த வேண்டாம் என அப்போதே உடைகளை பையில் அடுக்கினாள்.
உள்ளே வரமாட்டேன் என்பது போல் வாசலிலேயே நின்று பேசியவனை ஒருவாறு உள்ளே அழைத்து வந்துவிட்டார் அய்யாவு. அவருக்கோ அவன் இயல்பாக வெளியில் நின்று பேசுகிறான் என்ற நினைப்புதான். சில நிமிடங்களிலேயே மகள் கையில் பையுடன் அறையிலிருந்து வெளிவர, அதிருப்தியாக பார்த்த அய்யாவு,
“கலை மாப்பிள்ளை வந்து எவ்வளோ நேரம் ஆகுது. காபி தண்ணி கலந்தியா இல்லையா? சமு கிளம்பி நிக்குது பாரு.” என்று மனைவிக்கு குரல் கொடுக்க, காபியுடன் விரைந்து வந்தார் கலைவாணி.
அவர் பார்வையில் மகள் பையுடன் நிற்பதும் மருமகன் இறுக்கமாக அமர்ந்திருப்பதும் பட, காபியை மகிழ்நனிடம் கொடுத்தவர், “இருந்துட்டு சாயங்காலம் போகலாம். சமைக்க ஆரம்பிச்சிட்டேன் மாப்பிள்ளை.” என்றார் பவ்யமாய்.
கோவமாய் மகிழ்நன் அவரை நிமிர்ந்துப் பார்க்க, கலைவாணி முகத்தில் முன்பிருந்த அலட்சியம் இப்போதில்லை. மிகவும் அமைதியாக காணப்பட்டார். மனதில் இருந்த ஆதங்கத்தை சொல்லிவிட்டேன், புரிந்துகொண்டால் போதும். இனி என்ன என்பது அவர் எண்ணம்.
கலைவாணி மகளை மறுப்பாய் பார்க்க, மகிழ்நன் எழவும் அவனருகில் வந்துவிட்டாள் சமுத்திரா. மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் மகளை இறுக்கமாக பிடித்துக்கொண்டு வருகிறேன் என பொதுவாக சொல்லிக்கொண்டு கிளம்பிவிட்டான். அம்மாவை திரும்பிப் பார்த்துக்கொண்டே பதட்டத்துடன் பின்தொடர்ந்த சமுத்திராவின் முன் வண்டியை கிளப்பி நிறுத்த, தலையசைப்புடன் பின்னே ஏறிக்கொண்டாள். உமையாள் முன்னே ஜோராக அமர்ந்திருக்க, சமுத்திரா ஒரு கையில் பையையும் இன்னொரு கையால் கணவனின் தோல் பிடிக்கப்போய் பின் தயங்கி பக்கவாட்டில் இருந்த பைக்கின் கைப்பிடியில் பிடிமானம் தேடிக்கொண்டாள். அவள் நன்றாக அமர்ந்துவிட்டாள் எனத் தெரியவும் பயணம் துவங்கியது.
“என்னனு மாப்பிள்ளை இன்னைக்கு கால்ல வெண்ணீ ஊத்துனதாட்டம் கிளம்புறாருனு தெரியல.” புலம்பிக்கொண்டே அய்யாவு மீண்டும் வயலுக்கு சென்றுவிட, இனியாவது தன் பெண்ணின் முக்கியத்துவம் புரிந்து மாப்பிள்ளை நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் கலைவாணிக்கு.
ஒருமணி நேரப் பயணம் அத்தனை அமைதியை தத்தெடுக்க, கிலி பிறந்தது சமுத்திராவுக்கு. திருமணமான இத்தனை நாட்களில் மகிழ்நனின் கோப முகத்தை அவள் எதிர்கொண்ட நாட்களை எண்ணினால் ஒற்றைக் கையிலேயே முடிந்துவிடும். அதுவும் மகள் பிறந்த பிறகு எதற்கும் சச்சரவு வந்ததில்லை. இப்போது அம்மா எதையோ பேசிவைத்துவிட்டார் என கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள். இடையே எங்கும் நிறுத்தாமல் நேரே வீட்டிற்கு வந்து நிறுத்த, வாகனத்தின் சத்தம் கேட்டு பத்மா வேகமாக வெளியே வந்தார். சமுத்திரா இறங்கிக்கொண்டு கணவனைப் பார்க்க, உமையாளை தூக்கிக்கொண்டார் பத்மா. பதினைந்து நாள் பிரிவிற்கும் சேர்த்து அப்போதே பேத்தியை கொஞ்ச ஆரம்பித்துவிட்டார்.
அதனைக் கண்டு மெலிதாக புன்னகைத்த வண்ணம் மகிழ்நன் உள்ளே செல்ல, இதழ்கள் கடித்து பொங்கும் தவிப்பை மறைத்தபடி உள்ளே சென்றாள் சமுத்திரா.
“பையை நீ வாங்கிட்டு வந்தா என்னடா? சமுவை தூக்க விட்டுட்டு நீ கைவீசிட்டு வர.” சமுத்திரா உள் நுழையவும் தம்பியை கடிந்துகொண்டான் செழியன்.
மகிழ்நன் திரும்பி மனைவியை முறைக்க, பையில் தன் பிடியை இறுக்கியவள் வேகமாக தங்கள் அறைக்குச் சென்றாள்.
செழியன் இருவரையும் மாறி மாறி பார்த்துவிட்டு அமைதியாக குனிந்துகொள்ள, அருகில் இருந்த நன்மதியும் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்துகொண்டாள். அறைக்குச் செல்லாமல் மகிழ்நன் அங்கேயே டீவி போட்டு அமர்ந்துகொண்டான். உடை மாற்றி வந்த சமுத்திரா நேரே சமையலறை சென்று பார்க்க, சாதம் சாம்பார் ஒரு பொரியல் மட்டும் இருந்தது. சாதத்தில் தயிர் விட்டு மகளுக்கு பிசைந்து எடுத்து வந்தாள்.
“சாப்பிட்டு ரொம்ப நேரமாச்சு அத்தை.”
“சீக்கிரம் ஊட்டிவிடு.” என்று பேத்தியை மருமகளிடம் கைமாற்றியவர், “ஒரு வாரத்துல வரேன்னுட்டு பதினைஞ்சி நாள் ஆக்கிட்டியே. முன்னாடியே சொல்லவும் இல்லை. எப்போ வருவேன்னு ஆகிடுச்சு, நீங்க இல்லாம பொழுதே ஓடல எனக்கு.” அங்கலாய்ப்பாக சொல்லியவர் நிம்மதி மூச்சு விட்டுக்கொண்டார். இனி வீடு சச்சரவுகள் இன்றி இயங்கும், சமுத்திரா பார்த்துக்கொள்வாள் என்ற ஆசுவாசம்.
மனதில் உறுத்தலும் கலக்கமும் இருந்தாலும் சமுத்திரா வழக்கம் போல் வீட்டை தனதாக்கிக்கொண்டாள். மாலை சமையலறை சென்று பார்க்க, சிலது இடம் மாறி இருந்தது. பெருமூச்சோடு அதனை தனக்கு ஏற்றது போல் வைத்துக்கொண்டவள் எட்டி கணவனைப் பார்த்தாள். மகளுடன் விளையாடிக்கொண்டிருந்தான். வந்ததிலிருந்து இவளிடம் முகம் கொடுத்து பேசவில்லை. கேட்டால் கேட்டதற்கு மட்டும் பதில், அதுவும் மற்றவர்கள் இருக்கிறார்கள் என்பதினாலோ? எப்போது தனிமை கிட்டும் என்ற ஏக்கத்தோடும் தவிப்போடும் தடுமாற்றத்துடன் எளிமையாக இரவு உணவு செய்து முடித்தவள் நேரமே மகளுக்கு ஊட்டிவிட்டு அறைக்குச் செல்ல, இவளுக்கு பின் நன்மதி அனைத்தையும் ஒழுங்கு செய்தாள்.
சிறிது நேரம் சென்று வந்த மகிழ்நனோ சமுத்திராவை கண்டுகொள்ளவே இல்லை. நேரே மகளிடம் பேச்சுக்கள் விளையாட்டுக்கள் பின் மகள் உறங்கவும் படுக்க,
“ஏங்க?” அத்தனை தயக்கம். கோபத்தில் முகம் கொடுத்து பேசாததில் அவனை நெருங்கவே பயம். அதற்காக தள்ளி இருக்க முடியுமா? அதுவும் தன் அம்மா ஏதோ சொல்லப்போய் அது அவனை கோவம் கொள்ள செய்துவிட்டது என இவள் தணிந்து போனாள்.
மகிழ்நன் நெற்றியில் கை வைத்து முகத்தை மறைத்த வண்ணம் அவளுக்கு முதுகு காட்டிப் படுக்க, நெஞ்சம் தடதடத்தது இவளுக்கு.
“கோவமா இருக்கீங்களா?” வார்த்தைகளுக்கு வலித்து விடுமோ என்று கலங்கிப் போய் அவள் பேசுபவை அவன் செவி எட்டினாலும் எதிர்வினை இல்லை.
உதட்டை உள்ளிழுத்து, கைகள் பிசைந்து தவிப்புடன் அவனை பார்ப்பதும் பின் அங்குமிங்கும் பார்ப்பதும் என சில நிமிடங்களைக் கடத்தியவள் மகளைத் தாண்டி கைநீட்டி அவன் தோள் தொட்டாள்.
“ஏங்க…”
“உன்னை நம்புனேன் சமுத்திரா.” பட்டென்று திரும்பி அவளை உறுத்து விழித்தபடி அவன் சொல்லவும் திகைத்துப் பார்த்தாள் சமுத்திரா. எவ்வளவு எளிதாக சொல்லிவிட்டான் உன்மீதான நம்பிக்கையை இழந்துவிட்டேன் என்று.
“ஏங்க!” வார்த்தை வரவில்லை அவளுக்கு. நம்பினேன் என்று இறந்தகாலத்தில் அவன் சொன்னதே ஈட்டியாய் அவளுள் இறங்கியது.
“யார்கிட்டேயும் சொல்லாதேன்னு சொன்னதை மீறி உன் அம்மாகிட்ட சொல்லியிருக்க. அவங்க என்னன்னா எனக்கு என்னவோ உங்க மேல எல்லாம் அக்கறை இல்லாத மாதிரி பேசுறாங்க. என் பொண்டாட்டி புள்ளைக்கு தேவையானதை செய்ய முடியாத அளவுக்கு வக்கத்து போயிட்டேன்னு அவங்க நகை வாங்குறேங்குறாங்களா?”
“கொஞ்ச நாள்தான டைம் கேட்டேன், காத்திருக்க முடியாதா உன்னால. இப்போவே இவளுக்கு நகை வாங்கி என்ன செய்யப் போற?” அவன் எகிறிக்கொண்டே செல்ல, அவன் கோவத்தில் சமுத்திராவுக்கு கண்ணீர் வந்துவிட்டது.
“ஏன் நீயும் நான் செய்ய மாட்டேன்னு நினைச்சிட்டியா? அதான் உங்க அம்மாகிட்ட சொல்லி நகை வாங்கித் தரச் சொன்னியா?”
“ஐயோ இல்லைங்க…” கண்ணீருக்கு இடையே பதறித் துடித்தாள் சமுத்திரா.
“நீ உங்க வீட்ல சொன்னதுக்கும் அவங்க பதிலுக்கு வாங்கித்தந்துட்டு பொண்ணை அனுப்புறேன்னு சொல்றதுக்கும் என்ன அர்த்தம்?” நெற்றிக்கண் திறக்காத குறையாக அவன் காய, இவள் இதழ்கள் துடித்து பேச்சு வர மறுத்தது.
“ப்ச்… அழுறதை முதல்ல நிறுத்து.” அவள் அழுவதற்கும் கடுப்படித்தான்.
வேகவேகமாக இவள் கண்களை துடைத்துக்கொள்ள, நெற்றியை தேய்த்தவண்ணம் மீண்டும் திரும்பிப்படுத்தான் மகிழ்நன். அழுகையை கட்டுப்படுத்தியதன் விளைவாய் அவள் நாசி ஈரத்தை வெளியே தள்ள, மூக்குறிஞ்சி அதனை தடுத்தவள் பொங்கும் கண்ணீருடன் அவனைப் பார்த்தாள். அசையாது படுத்திருந்தான்.
“சாரி.” குரல் நடுங்க மன்னிப்பு யாசித்தாள்.
“…”
“வேணும்னு சொல்லல. தெரியாம சொல்லிட்டேன். அம்மா அப்படி பேசுவாங்கனு நினைக்கல.”
இப்போது இவள் திரும்பிக்கொண்டாள். கன்னக்கதுப்புகள் நடுங்க, உணர்ச்சிப் பிரவாகத்தில் இதற்கு மேல் பேச முடியும் என்று அவளுக்குத் தோன்றவில்லை. கண்களை இறுக மூடிக்கொண்டாள். விரல்கள் இடுக்கினில் சுடிதார் துப்பட்டா மாட்டிக்கொண்டு கசங்கியது. கோடாய் கன்னத்தில் இறங்கி ஈரம் செய்தது விழித்துளிகள்.