இரண்டு மூன்று நாட்கள் சென்றதும் வீட்டு ஆண்களின் நாக்குக்கு ருசி தேவைப்பட்டது. 

“இன்னொரு சட்னியாச்சு அரைக்கலாம்ல? உப்புமாதான் வச்ச, சரின்னு சாப்பிட்டா அதுக்கு சட்னி கூட தனியா இல்லை.” கந்தவேல் மனைவியிடம் கேட்க,

“உப்புமா வேண்டாம் ம்மா, உப்பு கம்மியா இருக்கு.” என்றான் மகிழ்நன். இளையவனுக்கு தோசை ஊற்றுகிறேன் என்று சென்றார் பத்மா.

ஏதோ சொல்ல வாய் திறந்த செழியன் மனைவியின் முறைப்பில் அடங்கிவிட்டான்.

அவ்வப்போது உணவின் ருசி குறைபாடு குறித்து முணுமுணுப்புகள் வர ஆரம்பித்தது. நான்கு நாட்கள் வரை முயன்று இழுத்துப் பிடித்து கொண்டுவந்த இட்லி, தோசை மாவுகள் காலியாகிவிட இன்னும் திண்டாட்டம். சமுத்திரா இருந்த போது அரைத்து வைத்துச் சென்றிருந்தாள். அதன்பின் சிற்றுண்டி பிரச்சனை முளைத்துவிட்டது. 

பத்மா நன்மதியை அரைக்கச் சொல்ல, அவளோ வெளியிலிருந்து வாங்கி வந்தாள்.

“ஸ்கூலுக்கு போயிட்டு வந்து என்னால அரைக்க முடியாது.” என்றாள்.

“மாவு வீட்ல அரைக்கலையா? இந்த மாவுல மண்ணு அடிக்குது. அழுத்தமா இருக்கு. வரவரன்னு இருக்கு.” கடை மாவில் குற்றங்கள் அடுக்கப்பட்டது. 

“தேடி நல்ல கடையிலதான் வாங்கிட்டு வரேன். யாராச்சு வீட்ல அரைச்சு குடுக்குறாங்களான்னு கேட்டுப்பாருங்க அம்மா.” என்றான் செழியன் மனைவிக்கு ஒத்திசைப்பாய்.  

“மதிக்கு முடியலைன்னா நீ அரை பத்மா.” என்றார் கந்தவேல் மனைவியிடம்.

“கிரைண்டர் கல்லை தூக்கி மாவு அரைச்சு கழுவுற வயசா எனக்கு? கையெல்லாம் வலிக்குது.” என்றார் பத்மா. 

ஒருவாரத்திலேயே சமுத்திரா இன்றி அவ்வீடு வீடாய் இயங்காது என புரிந்துபோனது. வெளியே சொல்லவில்லையென்றாலும் சமுத்திரா எப்பொழுது வருவாள் என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாய் காத்திருக்க தொடங்கினர். 

“வீடே அமைதியா இருக்கு. லீவ் நாள்ல ரெஸ்ட் எடுக்க விடாம பாப்பா படுத்துறப்போ எரிச்சல் வரும் இப்போ பாப்பா எப்போ வருவான்னு இருக்கு.” அந்த வாரம் சனிக்கிழமை வங்கிகளுக்கு அலுவல் தினம். அதனால் சனி வேலை முடித்து வந்து ஓய்வெடுத்தவனுக்கு ஞாயிறு முன்மாலை பொழுதிற்கு மேல் முடியவில்லை. மனைவிக்கு அழைத்துவிட்டான்.   

“அச்சோ பாப்பாகிட்ட பேசுங்க.” என்று வருந்தி, மகளை அருகில் அழைத்து காணொளி அழைப்பு விடுத்து கணவனுக்குக் காண்பித்தாள். இருவரும் அவர்களுக்குள் என்னவோ பேச, சில நொடிகளில் விளையாடச் சென்றுவிட்டாள் உமையாள்.

“அவளுக்கு விளையாட்டு நியாபகம் வந்துடுச்சு. காபி ஆகிடுச்சாங்க?” சமுத்திரா பொதுவான பேச்சை எடுக்க,  

“ஹான் ஆச்சு சமு. வீட்ல ஒரே போர். இந்த செழியனும் கோவிலுக்கு போறேன்னு அண்ணியை கூட்டிட்டு கிளம்பிட்டான். உனக்கு எப்படி? பாப்பா இருக்கா நேரம் போறதே தெரியாது.” என முகம் சுருக்க, அவனை தன்னிடம் அழைத்துக்கொள்ளும் வேகம் அவளுள். 

தான் எப்படி அழைப்பது? அழைத்தாலும் வருவானா? தலையை உலுக்கிக்கொண்டாள். 

“சரி நீ பாப்பாவை பாரு.” என்று அழைப்பை அவன் துண்டிக்க, பாவமாய் அன்னையைப் பார்த்தாள் சமுத்திரா.

“எப்படி பாத்தாலும் இந்த முறை உன் வீட்டுக்காரர் வந்ததும் உன் வீட்டுக்கு போனா போதும். அதுவரைக்கும் சாப்பிட்டு ரெஸ்ட் எடு. இப்போதான் முகமே பூரிப்பா இருக்கு.” என வீட்டிலே நிற்க வைத்துவிட்டார் கலைவாணி. 

வேலைகளின்றி தேவைக்கேற்ப கிடைத்த ஓய்வு கொடுத்த புத்துணர்ச்சியும் அடுத்து இதை செய்ய வேண்டும் இந்த நேரத்திற்குள் முடிக்க வேண்டும் என்று வரிசை கட்டி நிற்கும் வேலைகளின் நெருக்கடிகளிலிருந்து விடுதலை பெற்றதால் உண்டான இலகுத்தன்மையிலும் சரியான உறக்கத்திலும் அவள் முகம் பொலிவு கூடிக் காணப்பட்டது போல் இருந்தது. அய்யாவுக்கு கூட மகளின் மாற்றம் என்னவோ செய்ய, அவரும் வாய் திறக்கவில்லை. 

மேலும் இரண்டு நாட்கள் கழிய, இளைய மகன் முகத்தை பார்த்தார் பத்மா.

“என்னம்மா?”

“சமு எப்போ வரா? அவ இல்லாம வீடு வீடாவே இல்லை.” என்று சொல்லிவிட, அவனுக்குமே அவர்கள் இல்லாமை அன்றாடங்களில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. 

விழி மூடும் முன்னும் விடியல் பிறந்த பின்னும் கண்களை நிறைக்கும் மனைவியும் பிள்ளையும் இன்றிய தனிமை உணர முடிந்தது. நேர்த்தியாய் அடுக்கப்பட்டிருக்கும் அவன் உடைகள் ஒரே வாரத்தில் அலங்கோலமாகிவிட்டது. தனித்து உறங்கிப் பழகிய அறையில் இப்போது வெறுமையின் சாயல் மெல்ல வீச ஆரம்பித்தது. அழுக்குத் துணிகள் குன்றாக குவிந்தது. அதையும் விட நாக்குக்கு வஞ்சனை செய்யாமல் அவள் செய்து கொடுக்கும் உணவுகளுக்கு ஏங்கியது அவன் நாக்கின் நரம்புகள். 

எப்போதும் அவள் வீட்டினர் அழைத்துச் சென்றால் அவர்களே திரும்ப அழைத்து வந்துவிடுவார்கள். இப்போதும் வந்துவிடுவாள் என மேலும் இருநாட்களை கடத்தினான். மூன்றாம் நாள் அலைபேசி அழைப்புகளில் எப்போது வருகிறாய் என கேட்கத் துடித்த மனதை அடக்கிக்கொண்டான்.

“உங்களுக்கு பணம் கொடுத்ததுலதான் பிரச்சனை. இல்லைனா சமு சொன்னா சொன்ன மாதிரி சொன்ன தேதில ஒரு வாரத்துல வந்திருப்பா. இப்படி அங்க தங்குற ஆள் இல்லை அவ.” ஒருவாரம் கடந்ததும் நன்மதி கணவனை நச்சரிக்க ஆரம்பிக்க, அப்படியும் இருக்குமோ என்ற எண்ணம் செழியனுக்கும். நேரே தம்பியிடம் வந்துவிட்டான்.

“ஏதாச்சு பிரச்சனையாடா?”  

மகிழ்நனுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன பிரச்சனை இருந்துவிடப் போகிறது? என்ன கேட்கிறான் இவன்?

“சமுத்திரா இன்னும் வரக்காணோமே. பேசுனியா?” என்று செழியன் கேட்டபோதும் இதில் என்ன இருக்கிறது என்ற பார்வையே மகிழ்நனிடம்.

“என்னடா?”

“வந்துருவாடா. கூட இரண்டு நாள் இருக்கணும்னு தோணுச்சு போல, சரி எப்போவாச்சும்தான போறா இருந்துட்டு வரட்டும்னு நானும் கேட்டுக்கல.”

“அவ்வளவுதான வேற எதுவும் இல்லையே?” செழியனின் மனம் உறுதிப்படுத்திக்கொள்ளப் பார்த்தது. 

“வேற என்ன? உடைச்சி பேசு செழியா.”

“இல்லை… நீ எனக்கு பணம் கொடுத்ததுல உங்களுக்குள்ள எதுவும் மனக்கசப்போன்னு…”

“அடச்சீ… சமு அப்படியெல்லாம் நினைப்பாளாடா…” என்றவன் முகம் லேசாக மாறியது. நினைவுவடுக்குகளுக்கு சென்று எதையோ தேடியது. 

கவனித்துவிட்ட செழியன், “என்னடா?”

“இல்லை ஒன்னுமில்லை…” உடனே மகிழ்நன் தெளிந்துவிட்டான்.

“இல்லை எதையோ மறைக்குற நீ. உன் பேச்சுக்கு நான் மதிப்பு கொடுத்தேன்ல, ஒழுங்கா என்னனு சொல்ற நீ.”

“இல்லை, சமுவுக்கு உனக்கு பணம் கொடுத்தது தெரியாது.”

“சொல்லலையா நீ?” பெருத்த அதிர்வு செழியனிடம். 

“யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்னு சொல்லித்தானே பணம் கொடுத்தேன்.” தன்னை நியாயவானாக காட்டிக்கொண்டான் மகிழ்நன்.

“அதுக்காக சமுத்திராகிட்ட கூட சொல்லலையா நீ? தப்புடா. நீ முதல்ல சொல்லு, சமுத்திராவுக்கு தெரியாம என்ன? நியாயமா நீ சமுவை கேட்டுட்டுதான் என்கிட்ட பணமே கொடுத்திருக்கணும்.” 

“அதெல்லாம் பாத்துக்கலாம்டா. அவ ஒன்னும் நினைச்சுக்க மாட்டா.” என்றவன் குரலில் அத்தனை உறுதி. மனைவி புரிந்துகொள்வாள் என முற்றும் முழுதுமாக நம்பினான்.

“ஒன்னும் நினைச்சிக்கலைனாலும் சொல்லணும் இதெல்லாம். சின்ன சின்ன விஷயம்கூட உன் அண்ணிகிட்ட சொல்லாம நான் செய்ய மாட்டேன். நீ என்னென்னா இவ்வளவு பெரிய விஷயத்தை சொல்லாம இருக்க இன்னும். அம்மா அப்பாக்கு சொல்லலைனாலும் விடு சமுத்திராவுக்கு நீ சொல்லணும்.” கண்டிப்பும் அதிருப்தியும் நிரம்பியிருந்தது செழியனின் வார்த்தைகளில். 

“உன் அண்ணிகூட சமுவுக்கு வருத்தம்னு நினைச்சி என்னை காய்ச்சிட்டு இருக்கா… நேர்ல போய் கூட்டிட்டு வந்து பேசு முதல்ல நீ. இதெல்லாம் மறைச்சி வைக்காத.” என அறிவுரை கூறிவிட்டு செல்ல, மகிழ்நன் அலட்டிக்கொள்ளவில்லை. 

அண்ணன் மனைவியின் நடவடிக்கை குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்துவது போலிருப்பதால் அண்ணன் அண்ணியிடம் தணிந்து போகிறான். சமுத்திராவோ குடும்பத்தை அனுசரித்து செல்பவள். என்றும் அவளால் ஒரு சொல் வீட்டில் வந்ததில்லை. அழகாக பொருந்திக்கொண்டாள். தவறாகவெல்லாம் எண்ணமாட்டாள். இதுவரை தன்னை கேள்வியும் கேட்டதில்லை. அசட்டையாக எண்ணிக்கொண்டவனுக்கு அதில் கொஞ்சம் பெருமையும் என் மனைவி என் குடும்பம் உடையாமல் பார்த்துக்கொள்கிறாள் என்ற கர்வமும் உண்டு மகிழ்நனுக்கு. அதற்கான அங்கீகாரமும் அனுசரணையும் பதிலுக்கு இவன் கொடுக்கிறானா என என்றும் அலசிப் பார்த்தது இல்லை. நன்றாக வைத்திருக்கிறோம் என்ற எண்ணம். 

இப்போது அண்ணன் அவளிடம் சொல் என்று சொல்லவும் நன்மதி போல் எல்லாம் என் மனைவி குடைய மாட்டாள் என்று அத்தனை திண்ணம். அந்த உறுதியோடே அறைக்குப் படுக்க வந்ததும் மனைவிக்கு அழைக்க, மகளை முன் நிறுத்தினாள் சமுத்திரா. 

சில நிமிடங்கள் அப்பா மகள் தங்கள் உலகத்திற்குள் இருக்க, உமையாள் விளையாட்டு நினைவில் நகர்ந்துவிட்டாள். 

“போன் வைக்கவாங்க?” அவனுக்கு ஒத்தே பேசினாள் சமுத்திராவும்.

காணொளியில் சமுத்திராவுக்கு பின் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்தவன், “அன்னைக்கு நகை வாங்க போனோம்ல…” எனத் துவங்கவுமே இவள் முகம் மாறியது. 

“செழியனால மூணு தான் முடியும்னான், நான் அஞ்சு செய்யலாம்னு இருந்தேன். அவனை விட்டுட்டு நாம மட்டும் எப்படி செய்யுறதுன்னு பாப்பாக்கு வச்சிருந்ததை அவனுக்கு கொடுத்துட்டேன். சீக்கிரம் திருப்பிக் கொடுத்துருவான் சமு. இன்னும் மூணு மாசம் கொஞ்சம் நெருக்கிப் புடிச்சா பாப்பாக்கு நகை வாங்க பணம் சேத்துடலாம்.” என இயல்பு போல் சொல்ல, இங்கு அதிர்ந்து போயிருந்தாள் சமுத்திரா.

மகளுக்கு என ஒதுக்கி வைத்திருந்ததை அண்ணனின் மரியாதைக்காக கொடுத்துவிட்டானே. செமிக்க சிரமமாய் இருந்தது.

“அக்கா சங்கடப்படவும் வேற என்ன பண்ண முடியும் சொல்லு. செய்யுறதுக்கு செஞ்சுதான ஆகணும். நாம செய்யுறதை விட அவன் குறைவா செஞ்சா தலைகுனிவா போயிடும். அதுதான் கொடுத்துட்டேன். உனக்கு புரியுதுல நான் சொல்றது.” மனைவி புரிந்துகொள்வாள் என்ற விதத்திலேயே இருந்தது அவன் பேச்சுக்கள். 

புரிதல் இருந்தாலும் ஏமாற்றத்தின் எதிரொலிப்பாய் வலிக்கும் என்று யார் அவனுக்குச் சொல்வது? அந்த வலியை போக்கும் நிவாரணியாக இல்லாமல் அதனை இன்னும் கூட்டினால் என்ன செய்வதாம்?

“யார்கிட்டேயும் இதை சொல்லிக்க வேணாம். கொடுக்கல் வாங்கல் எல்லாம் நான் பாத்துக்குறேன்.” 

சமுத்திரா பேசவே இல்லை. அவன் சொல்பவற்றை கிரகிக்க முயன்றுகொண்டிருந்தாள்.

“சரி நீ நேரமே தூங்கு. இங்க வந்துட்டா வேலை அதிகம் உனக்கு.” இயந்தரத்தனமாய் சொல்லிவிட்டு அவன் அழைப்பை துண்டிக்க, தலை பிடித்துவிட்டாள் சமுத்திரா.

மனதெல்லாம் ஏதோ ஒரு உறுத்தல், வலி. அக்கா மகளுக்கு அவன் அதிகம் செய்ததை விட மகளுக்கு செய்யவில்லை என்பதில் சுணக்கம் கொண்டிருந்தவளுக்கு அண்ணனின் மரியாதை உயர்த்த தங்களின் ஆசையை நொடியில் விட்டுக்கொடுத்துவிட்டானே என ஆற்றாமையாய் வந்தது. 

“ம்மா ப்பா.. அப்பா?” உமையாள் திடுமென அப்பா நினைவில் ஓடி வந்து சமுத்திராவின் அலைபேசியை காட்டியபடி பிதற்ற, தன் எண்ணங்களிலிருந்து வெளிவர வேண்டிய கட்டாயம் சமுத்திராவுக்கு.

“அப்பா தூங்கிட்டாங்கடா. நாளைக்கு பேசலாம்.” என்று சொல்ல, உமையாள் அழுகையை ஆயுதமாக்கினாள்.

“கம்முனு இரு பாப்பா…” குரல் உயர்த்தி மகளை அதட்ட, பயந்துபோய் அடித்துவிட்டது போல் அழுதாள் உமையாள்.

“என் தங்கமே ஏன் அழறீங்க. என்னாச்சுடி உனக்கு? பாப்பாவை இப்படியா சத்தம் போடுவ?” என சமுத்திராவின் உயர்ந்த குரல் கேட்டு வந்துவிட்டார் கலைவாணி.

பேத்தியை சமாதானம் செய்யும் பொறுப்பை தனதாக்கிக்கொண்டவர் பேத்தியை கணவனிடம் விட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து மகளிடம் வந்தார். 

நெற்றியில் கைவைத்து அமர்ந்திருந்த சமுத்திராவின் கன்னங்களில் ஈரத்தின் சாயல். எதற்குமே மகளை ஒரு அளவிற்கு மேல் கடிந்திராதவள் இன்று அவளது இயல்பை மீறியிருந்தாள். கணவன் மேல் இருந்த கடுப்பு மகளிடம் இறங்கியிருந்தது. 

அம்மாவிடம் சொல்லவேண்டாம் என்று ஏதேதோ சொல்லிப் பார்த்தவள் ஒருகட்டத்தில் முடியாமல் கணவன் பேசியதை சொல்லிவிட்டாள். மருமகனின் செயலில் அதிருப்தி கொண்ட கலைவாணி மகளை அங்கு அனுப்ப மாட்டேன் என முரண்டு செய்ய, மனைவி மகளை அழைத்துச் செல்ல நேரில் வந்து நின்றான் மகிழ்நன்.