“உன் வீட்டுக்காரர் வந்து கூட்டிட்டு போற வரைக்கும் இங்கேயே இரு. கொஞ்சமாச்சும் அந்த மனுஷனுக்கு தன் குடும்பங்குற எண்ணம் வரட்டும். தூரமாவா இருக்கோம் பக்கம்தான, வரட்டும்.” மகளை அமர வைத்து காலையிலேயே வீட்டுப்பாடத்தை துவங்கிவிட்டார் கலைவாணி.
கணவனை அம்மா தவறாக சித்தரிப்பதில் சுத்தமாய் உடன்பாடில்லை சமுத்திராவுக்கு. பரிதவிப்பாக அம்மாவைப் பார்த்தாள்.
“நீ இப்படி பாக்குறதாலதான் சுலபமா நினைச்சுக்கிறாங்க உன்னை.”
“அப்படியெல்லாம் இல்லை’மா.”
“இப்படியா உன்னை வளத்து வச்சிருக்கேன்!” என ஆற்றாற்றுப்போனவர், “இங்க அமைதியா என் பேச்சை கேட்டுட்டு இருந்த மாதிரி அங்க எல்லார் பேச்சுக்கும் தலையாட்டிட்டு இருக்க. இது நல்லதுக்கே இல்லை பாத்துக்கோ.”
“அங்க யாரும் என்னை அப்படி பாக்கல’மா.”
“உன் கண்ணுக்கெதிர உன் ஓப்படி, உன் அண்ணி எல்லாம் எப்படி இருக்காங்க. நீயும் இருக்கியே?” என்று பேச, ரோஷம் வந்தது பெண்ணுக்கு.
“என்ன’ம்மா உனக்கு பிரச்சனை? அவங்க அப்படி இருக்காங்கன்னா நானும் அப்படியே இருக்கணுமா? எனக்கு குடும்பமா இருக்கத்தான் புடிச்சிருக்கு. எனக்கென்ன கஷ்டம் இப்போ? நான் கேக்குற முன்னாடியே எல்லாம் செஞ்சிடுறார் என் வீட்டுக்காரர். என்னை கண் கலங்காம வச்சிருக்காரு.” என்றவளை இடையிட்டார் கலைவாணி.
“ஓ! அதான் நீ கேட்டவுடனேயே உன் பொண்ணுக்கு நகை வாங்கி போட்டாரு.” என்றதும் சிறு தடுமாற்றம் சமுத்திராவிடம்.
“பொம்பளை முதல்ல சூதானமா இருக்கனும். மரியாதை கிடைக்க தேவுடான்னு காத்துக் கிடக்காம நாமளே அதை வாங்கிக்கணும். கல்யாணம் ஆகி வருஷம் மூணாச்சு இன்னும் உனக்கு புருஷனை கைக்குள்ள போட்டுக்க தெரியல.” அறிவுரைகளோடு சேர்த்து திட்டுக்களும் இடைஇடையே வந்து விழுந்தது.
பாவமாய் சமுத்திரா பார்க்க, அவளுக்கு அன்னை சொல்லும் போதனைகள் எல்லாம் மண்டையில் ஏறவில்லை மாறாக அறிவுரை கூறும் பெருசிடமிருந்து எப்படித் தப்பிக்கலாம் என்ற எண்ணம் மட்டுமே.
“பாப்பா விளையாடுற நேரம் இது. வயலுக்கு தூக்கிட்டு போலாமா?” என பேச்சை மாற்றத்தான் பார்த்தாள்.
“வெயில் வர நேரம் வயக்காட்டுக்கு புள்ளையை தூக்கிட்டு போறதா. கொல்லையில விட்டுட்டு பாத்துக்க, காத்தோட்டமா ஓடியாடி விளையாடட்டும்.” என்றவர் எழுந்துகொண்டு,
சமுத்திரா முகம் சுருங்கியது, “உமையாள் அப்பா பேசுனாங்க.”
“அவ்ளோதான் விஷயம். அதுதான் உனக்கான பிடிப்பு, உனக்காக உன்னை தேடி கடைசி வரைக்கும் உன்கூட வரப்போற சொந்தம். கெட்டியா புடிச்சிக்க. யாருக்காக இவ்வளவு உழைச்சி கொட்டுறியோ அதுக்கு மதிப்பானவங்களா அவங்களும் இருக்கனும். யார் முக்கியம்னு இதைவிட உனக்கு வேற எப்போ புரியப்போகுது?” மகளுக்கு புரியவைக்க முயன்றவர் போகிற போக்கில்,
“அந்த மனுஷன் புள்ளைக்காக கூப்பிட்டாரோ உனக்காக கூப்பிட்டாரோ முந்தானையில் கெட்டியா புடிச்சிக்க. நீ தழைய தழைய உன்னை குட்டிட்டேதான் இருப்பாங்க. என் பொண்ணா லட்சணமா எதிர்த்துப் பேசு.” என்று நகர, அது கொஞ்சம் அவள் மனதில் பதிந்தது.
‘இந்த பொண்ணை நான் ஒழுங்கா வளக்கல. விவரம் போதாம இருக்காளே.’ என்ற கலைவாணியின் முனகல் தேய்ந்து மறைந்தது.
கணவன் என்னைப் பற்றி விசாரிக்க அழைத்தானா இல்லை மகள் என்ன செய்கிறாள் என்று தெரிந்துகொள்ள அழைத்தானா? கலைவாணியின் போதனையில் அவள் அறிவு விழித்துக்கொண்டு கேள்வி எழுப்ப, பதிலாய் எண்ணம் நிறைந்தவன் அழைத்துவிட்டான்.
அழைப்பை ஏற்று இவள் ஹலோ என்கவும் இயல்பான விசாரிப்புகள். உமையாள் என்ன செய்கிறாள், உண்டாளா, விளையாடுகிறாளா என்று கேட்டுவிட்டு மகளைப் போலவே மனைவியையும் பொதுவாக விசாரித்தான். அவனின் கேள்விகளை இதுவரை எதிர்கொண்டது போலின்றி ஒருவித ஆராய்ச்சியுடன் பதில் கூறினாள்.
“அங்க நல்ல ரெஸ்ட்தான் மேடமுக்கு. சரி, நான் பேங்க் வந்துட்டேன். ஈவினிங் கூப்பிடுறேன் சமு.” என வைத்துவிட்டான்.
இங்கு யோசனையுடன் அமர்ந்திருந்தாள் சமுத்திரா. நேற்றைய இரவு வீடு சென்று சேர்ந்துவிட்டீர்களா என்று அழைத்துக் கேட்டான். அப்போதும் பொதுவான பேச்சுக்கள். இப்போதும் அப்படியே. யோசித்துப் பார்த்தால் எப்போதும் அப்படித்தான் இருந்திருக்கிறது.
இதுவரை அதுஒன்றும் அத்தனை பெரிதாக தெரியவில்லை. கணவன் அக்கறையாக விசாரிக்கிறான் என்பதிலேயே திருப்திப்பட்டுப் போனவளுக்கு இன்று என்னவோ ஒரு நெருடல். விதையாய் கலைவாணி விதைத்தது உயிர் பெற்று துளிர் விடத் தயாரானது.
எங்கும் தவறுகிறோமோ?
ஆடம்பரமான ஆர்ப்பாட்டமான ஆசைகளின்றி தெளிந்து ஓடும் நீரோடை போல், கிடைக்கும் பாதையில் தன்னை செலுத்தி சிறு சிறு சலசலப்புகளை கடந்து கடல் சேரும் நதி போல் குடைச்சல் இல்லாத ஒரு வாழ்க்கைதான் அவள் எதிர்பார்ப்பு. அப்படித்தான் தன் வாழ்வு சென்றுக்கொண்டிருக்கிறது என நம்பிக்கொண்டிருந்தவளின் எண்ணங்களில் விரிசல்.
“உக்காந்து விட்டத்தை வெறிக்காம போய் தூங்குடி சமு. பாப்பாவை நான் பாத்துக்குறேன். மதியத்துக்கு பொறுமையா எழுந்து சமைச்சிக்கலாம்.” என்றவர் ஒரு டம்ளரில் காபி போட்டு எடுத்துக்கொண்டு பேத்தியையும் தூக்கிக்கொண்டார்.
இது… இதுதானே அங்கு அவள் எதிர்பார்க்காதது, அவளுக்கு கிடைக்காதது. நான் பார்த்துக்கொள்கிறேன், நீ ஓய்வெடு. எதற்கும் அவசரமில்லை.
இதே போன்றதொரு சூழலை சந்தித்த மாமியார், தங்கை, நாத்தனார், ஓரகத்தி போன்ற பெண் உறவுகள் சூழந்திருந்தாலும் பெண்ணவளின் மென் உணர்வுகளை பெற்ற தாயைத் தவிர யாரும் புரிந்துகொள்வதில்லை. ஏன் சமுத்திரா போல் சிலருக்கு தங்களின் தேவைகள், உரிமைகள் கூட புரிவதில்லை. எடுத்துச் சொல்ல வேண்டியுள்ளது.
ஏதோ புரிவது போன்ற பிம்பத்தில் நடுவீட்டில் அப்படியே தரையில் உடலைச் சரித்துப்படுத்தாள் சமுத்திரா. நொடியில் உறங்கியும் போனாள். பிறந்தகத்தின் மகிமை அங்கு ஆளுமை பெற்றது!
“இந்த சின்னக்குட்டி இல்லாம வீடு வீடா இல்லை. எல்லாரும் வேலைக்கு போயிட்டீங்க. நான்மட்டும் இந்த நாலு சுவத்த பாத்துட்டு உக்காந்திருந்தேன்.” ஆறு மணி போல் வந்த இளைய மகனிடம் சோர்வாக பகிர்ந்தார் பத்மா.
வீட்டை சுற்றிப்பார்த்த மகிழ்நனுக்கும் அதே எண்ணம். வீட்டிற்குள் நுழைந்தவுடன் கால்களை கட்டிக்கொள்ளும் மகள் இன்று இல்லை என்ற நிதர்சனம் புத்துணர்ச்சியை குறைத்தது.
“போன் போட்டு பேச வேண்டியதுதானே?” என கேட்டுக்கொண்டே மனைவியின் எண்ணுக்கு அழைத்தான். அங்கு ஏற்கப்படவில்லை. புருவச் சுருக்கத்துடன் மீண்டும் அழைத்தான். அழைப்பு முழுதும் சென்று நின்றது.
“போன் எடுக்காம என்ன பண்றா இவ? அங்க ஃபிரீயாதான் இருப்பா?” என தனக்குள் சொல்லிக்கொண்டே மீண்டும் அழைப்பு விடுக்க, இம்முறையும் அவளால் தவறவிடப்பட்டது.
பேத்தியை திரையில் பார்க்கலாம் என்ற ஆவலில் மகனின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்த பத்மாவுக்கும் ஏமாற்றம்.
“இங்கன்னா கூட வேலை இருக்கும். அங்க சும்மாதான் இருப்பா, போன் எடுக்குறதுக்கு என்ன?” அவர் சடைத்துக்கொள்ள,
“விடு வேதா, வேந்தன்கிட்ட பேசலாம்.” என அக்காவுக்கு அழைப்பு விடுத்து அவர்களுடன் சில நிமிடங்கள் சென்றது.
“மருமகளுங்க இல்லாம வீட்ல தனிக்காட்டு ராணியா ஜாலிதான் பத்மாவுக்கு.” என அவள் வேறு கேலி பேச,
“அட போடி! எனக்கு ஒன்னுமே ஓடமாட்டேங்குது.” சலிப்பு பத்மாவிடம்.
எங்கனம் பெண்களுக்கான பேச்சுக்களாய் மாறியதோ அலைபேசியை மொத்தமாய் அம்மாவிடம் கொடுத்துவிட்டு டீவியை போட்டுக்கொண்டு அமர்ந்துவிட்டான் மகிழ்நன். இரவு உணவு செய்ய வேண்டும் என்று கல்யாணி அலைபேசி வைக்கும் வரை பேச்சு தொடர்ந்தது. அதனின் இறுதியை மட்டும் காதில் வாங்கிய மகிழ்நனோ, “இங்க என்ன டிபன்?”
“தோசை.” என்றார் பத்மா யோசியாமல்.
“நேத்திக்கும் அதேதான். ஹாட்பாக்ஸ்ல வேற வச்சிட்ட சுமாராதான் இருந்துச்சு.” சின்னவன் முகம் தூக்கினான்.
“எல்லாருக்கும் செய்யணுமேன்னு அதுல வச்சிட்டேன் மகிழு. இன்னைக்கு சூடா ஊத்தித்தரேன்.” சொன்னது போல் மகிழ்நனுக்கு மட்டும் சுடச்சுட தோசை போட்டுக்கொடுத்தவர் நன்மதி வரவும், “மீதியை நீ ஊத்திடு.” என அடுப்பை அணைத்துவிட்டார்.
இளைய மகனுக்கு ஊற்றுகையிலேயே தனக்கும் அவர் ஊற்றிக்கொண்டதால் மீதமிருந்த மூவருக்கு மட்டும் சரசரெனவேன ஊற்றிவிட்டாள் நன்மதி.
“இன்னைக்கு தோசை தடியா இருக்கே பத்மா. நாளைக்கு மெலிசா ஊத்து.” என்று நின்றார் கந்தவேல்.
“உங்க மருமககிட்ட சொல்லுங்க…” என்றவர் மருமகளிடமும் கண்காட்டினார். நன்மதியோ கண்டுகொண்டது போல் காட்டிக்கொள்ளவில்லை.
அனைவரும் உண்டு உறங்கும் நேரம் சமுத்திரா அழைத்தாள்.
“எங்க போயிட்ட நீ? மூணு முறை கூப்பிட்டேன்.” என்ற மகிழ்நனுக்கு அவள் பதிலில் புருவம் உயர்ந்தது.
“பக்கத்து ஊர்ல ஏதோ திருவிழான்னு கடை கண்காட்சி போட்டிருந்தாங்க போயிட்டு இப்போதான் வந்தோம்.” என்றவள் குரலின் வேறுபாடு துல்லியமாய் தெரிந்தது மகிழ்நனுக்கு.
“அம்மா வீட்டுக்கு போனதும் ஒரே சந்தோஷம்தான் போல. பாப்பா எங்க? வீட்ல எல்லாரும் பாப்பாகிட்ட பேசணும்னாங்க. வீடியோ கால் கூப்பிடுறேன் இரு.” என அழைப்பை துண்டித்துவிட்டு காணொளி அழைப்பு விடுத்துக்கொண்டே கூடத்தில் சென்று அமர்ந்து அம்மாவைக் கூப்பிட, செழியனும் என்னவோ என அருகில் வந்தான்.
திரையில் உமையாள் தெரியவும் இங்கிருந்தவர்கள் முகங்கள் விகசித்தது. மாறி மாறி அனைவரும் பேச, சமையலறையில் இருந்த நன்மதியின் முகத்தில் இன்னதென இனம்காண முடியாத புன்னகை.
புன்னகையுடன் இவள் பார்க்க, “பெரியம்மாகிட்ட சொல்லுங்கடா குட்டி. என்ன பண்ணீங்க இன்னைக்கு?” என உமையாளிடம் பேச்சு கொடுத்து அலைபேசியுடன் மனைவியை நெருங்கி நன்மதிக்கு உமையாள் தெரியும் வண்ணம் நின்றுகொண்டான்.
உமையாள் மழலையில் இடைவெளி எடுத்துக்கொண்டு அன்று நடந்ததை நினைவுப்படுத்தி கதை போல் சொல்ல, சிரிப்புடன் கவனித்த நன்மதியின் முகம் கண்டு செழியனுக்கு பெருத்த நிம்மதி. சிறிது நேரம் பேசிவிட்டு அவள் ஓடிவிட, அலைபேசியை தம்பியிடம் கொடுத்தான் செழியன். மற்றவர்கள் போலவே, “பாப்பாவை பாரு சமு. அப்புறம் பேசலாம்.” என உடனே வைத்துவிட்டான்.
“வெட்கப்படாம தனியா போய் பேசேன்டா…” என செழியன் தம்பியை கிண்டல் வேறு செய்ய, சிறிது நேரம் கலகலத்துவிட்டு கலைந்தனர்.
தொடர்ந்து வந்த நாட்களும் முதல் நாள் போலவே சென்றது. மதிய உணவு மூன்று வகைகள் செய்த நன்மதியோ மறுநாளிலிருந்து காலை சிற்றுண்டிக்கு மதிய சாம்பாரே சேர்த்து வைத்துவிட்டாள்.
“மதிய சாம்பாரை எப்படி காலைல பொங்கலுக்கு தொட்டுக்குறது?” என்ற பத்மாவின் கேள்விக்கு,
“இது செய்யதான் நேரம் இருக்கு அத்தை. உங்களுக்கு வேற வேணும்னா வச்சிக்கோங்க, நான் வேணும்னா காய் நறுக்கி கொடுத்துட்டுப் போறேன்.” என்று நாசுக்காக மறுக்க, பத்மா வாய் மூடிக்கொண்டார்.