*5*

சமைத்து முடித்துவிட்டு ஏதோவொரு சிந்தையில் கொல்லைப்புறத்திலே அமர்ந்துவிட்டவளை உசுப்பியது அவள் அலைபேசி அழைப்பு.

“உன் போன்தான் அடிக்குது சமு. என்ன யோசனையில இருக்க நீ? கூப்பிட்டுட்டே இருக்கேன்.” என்று அவள் அலைபேசியை வந்துக்கொடுத்தான் கணவன்.

“ப்ச்…” நெற்றியில் அடித்துக்கொண்டவள், “சாரிங்க கவனிக்கல.” பரபரப்பாக அலைபேசியை வாங்கிப் பார்த்தவள், “அம்மாதான் கூப்பிடுறாங்க. அப்புறம் பேசிக்குறேன்.” என்றபடியே அவனை கவனித்தவள், “கிளம்பிட்டீங்களா? மதி அக்கா, மாமா எல்லாரும் கிளம்பணுமே. அச்சோ… வாங்க தோசை ஊத்துறேன்.” உமையாளை தூக்கிக்கொண்டு அவள் முன்னே செல்ல, அவளின் படபடப்பில் யோசனையுடன் பின்தொடர்ந்தான் மகிழ்நன். 

உள்ளே சென்றபின்தான் நன்மதியும் செழியனும் கிளம்பிவிட்டது தெரிந்தது. கந்தவேலுக்கு பத்மா தோசை ஊற்றிக்கொண்டிருந்தார்.

“அத்தை.”

“கூப்பிட கூப்பிட என்ன யோசனையில இருந்த நீ? நானே உன் மாமாவுக்கு தோசை ஊத்திட்டேன்.” சலிப்பா, இயல்பா என பிரித்தறியா வகையில் ஒரு அங்கலாய்ப்பு.

“நீங்க உக்காருங்க, உங்களுக்கும் அவருக்கும் நான் ஊத்துறேன்.” என வேலையை தனதாக்கிக்கொண்டாள்.

அருகில் நின்ற உமையாளுக்கு இரண்டு வாய் கொடுத்து தானும் உண்டான் மகிழ்நன்.

“உனக்கு நேரமாகப் போவுது. நீ சாப்புடு. சமு ஊட்டிவிட்டுப்பா.” என்று பேத்தியை தன் பக்கம் இழுத்துக்கொண்டார் பத்மா.

“அவளுக்கு பசிக்குது போலமா, விடுங்க. தானா கேட்டு வாங்கி சாப்புடுறா.” வாயை திறந்துகொண்டு அப்பா என்று வந்த மகளை தூக்கி மடியில் அமர்த்திக்கொண்டான் மகிழ்நன்.

“நீ கிளம்புற நேரத்துல உன் சட்டை எல்லாம் அழுக்கு பண்ணிடுவா. நான் ஊட்டிவிடுறேன் நீ பாரு.” சமுத்திரா எடுத்து வந்த தோசையை தட்டில் மாற்றிக்கொண்டு, “நீ அவனைப் பாரு.” என பேத்தியை தூக்கிக்கொண்டு பின்புறம் சென்றுவிட்டார்.

‘புள்ளை சாப்பிடணும்னு இன்னைக்கு பேத்திக்கு ஊட்டவே ரெடி ஆகியாச்சு.’ சட்டென உமையாளுக்கு தோன்றியது. உமையாளுக்கு ஊட்டி விடமாட்டார் என்றில்லை, ஓடியாட முடியவில்லை என்றுவிடுவார். அதனால் எப்போதும் மகிழ்நன் காலை உண்ண வரும் நேரத்தில் இவள் இவள் மகளையும் அவர் அவர் மகனையும் பார்த்துக்கொள்வார்கள். 

“சமு சீக்கிரம்.” கணவன் யோசிக்கவிடவில்லை. அவனும் கந்தவேலும் கிளம்ப, இவர்கள் காலை உணவை முடித்துக்கொண்டு அமரவும் தன் தாய் காலையே அழைத்தது நினைவு வந்தது. மகளை தூக்கிக்கொண்டு அறைக்கு வந்து அழைத்தாள்.

‘என்ன ரகசியமோ.’ பத்மாவின் முணுமுணுப்பு சமுத்திராவை சென்று சேரவில்லை.

“காலையிலேயே கூப்பிட்டிருக்க, என்ன ம்மா?”

“நகை வாங்கப் போனீங்களே என்ன ஆச்சு? பேத்திக்கு எடுத்ததை ஒரு போட்டோ எடுத்து அனுப்பணும்னு தோணுச்சா உனக்கு? நேத்திலேந்து கூப்புடுவேன்னு காத்திருந்தேன். உனக்குதான் அங்க இருக்குறவங்களை பாத்துக்குறதுலேயே நேரம் போய்டுமே, என்னையெல்லாம் எங்க நியாபகம் இருக்கப்போவுது?”

“கம்முனு இரும்மா. எடுத்தா சொல்லியிருக்க மாட்டேனா?” அவளையும் அறியாமல் உள்ளே உருபோட்டிருந்த எரிச்சலை அந்த ஒற்றை வாக்கியத்தில் காட்டியிருந்தாள் சமுத்திரா.

அதிர்ந்துவிட்டார் கலைவாணி. என்றுமே குரல் உயர்த்தியோ, கோபத்தை வெளிப்படுத்தியோ, குறையாக எதையும் வெளிக்காட்டாமல் பேசும் மகள் இன்று எரிச்சலை அப்பட்டமாக காட்டவும் அவரின் வேகமும் அதிகமாகிவிட்டது.

“என்னடி சொல்ற? எதுவும் வாங்கலையா? உன் நாத்தனார் சும்மாவா வந்துட்டு போனா?” 

சமுத்திரா நடந்ததை தனக்குத் தெரிந்ததை சொல்லிவிட,

“உன் கொழுந்தனுக்கு சம்பளம் மட்டுமா கிம்பளமும் நிறையா வரும். அதோட ரெண்டு சம்பளக்காரங்க. அஞ்சு என்ன பத்து கூட செய்வாங்க. அதுக்காக நீங்களும் செய்யணுமா? மாப்பிள்ளை சொன்ன மூணு வாங்குனா தங்கத்தோட தரம் குறைஞ்சிடுமா என்ன?” 

“செழியன் அத்தானுமே மூணுதான் சொன்னாங்க. அப்புறம் என்ன ஆச்சுன்னு தெரியல, அண்ணன் தம்பி ரெண்டு பேரும் தனியா போய் பேசிட்டு வந்து அஞ்சு போடலாம்னு சொல்லி வாங்கிட்டாங்க.” நெற்றியை பிடித்தபடி சொன்னாள் சமுத்திரா. 

“உன்னை கேக்கவே இல்லையா மாப்பிள்ளை?” என்று கேட்கவும் சட்டென தொண்டை அடைத்தது சமுத்திராவுக்கு. 

“…”

“வாங்குன நகையை உன்கிட்ட காமிச்சாங்களா இல்லையா?”

“ம்ம்…” கலங்கும் மனதினை கட்டுப்படுத்தியபடி அதற்கு மட்டும் ம் கொட்டினாள்.

“நீ இப்படி இருக்கவும்தான் எல்லாம் சேர்ந்து உன்னை ஏய்க்குறாங்க. இந்த வாரம் கிளம்பி வரோம், ஒழுங்கு மரியாதையா எங்களோட வர்ற. பொட்டியை கட்டிட்டு ரெடியா இரு.” என மிரட்டல் போல் சொல்ல, பதறிவிட்டாள் சமுத்திரா.

யாரிடமும் பகிர்ந்துகொள்ளாதே என்றானே கணவன், கோவத்தில் அம்மா வார்த்தை விட்டால்? இத்தனை நேரம் பேசியது நினைவுக்கு வந்து பதட்டப்படுத்தியது.

“அம்மா அம்மா நீ… நீ அமைதியாகு முதல்ல.” 

“என்னத்துக்குடி இப்படி பதறுற? சின்னவளா போனாலும் நீதான் அந்த வீட்டுக்கு வாரிசு பெத்துக்கொடுத்திருக்க. நியாயமா எல்லாரும் உன் பொண்னை தூக்கி வச்சி கொண்டாடணும், ஆனா அவளுக்கே நகை இல்லையாமாம்?” 

“என்னம்மா இப்படி பேசுற? பாப்பாவை யாரும் அப்படி பிரிச்சி பாக்கல.” மென்குரலில் விளித்தாள். கலைவாணி குரல் உயர்த்த உயர்த்த பதிலுக்கு அவளும் உயர்த்தி விஷயம் மாமியார் காதுக்கு சென்றுவிடுமோ என்ற பதட்டம் சமுத்திராவை தணித்தது.

“அப்படி பாக்கலைனா பெத்தவங்க நீங்க முடிவு பண்ண மாதிரி நகை வாங்க விட்டிருக்கணும்ல?”

“பாப்பாக்கு வாங்கனும்னு நாங்கதான் பேசிட்டு இருந்தோம். வீட்ல யாருக்கும் தெரியாது.”

“நல்லதா போச்சுன்னு இருக்குற எல்லாத்தையும் அக்கா பொண்ணுக்கு தூக்கிக் கொடுத்துட்டாரு உன் வீட்டுக்காரர்.” 

“ஊமைகொட்டானா எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு நிக்காத. எதிர்த்துக் கேளு உன் புருஷனை. அக்கா பொண்ணுக்கு செய்ய வேண்டியதுதான் அதுக்காக பெத்த பொண்ணை விட்டுருவாராமாம்? நியாயமா உமையாளுக்குதான் முதல்ல செஞ்சிருக்கணும். பெத்த புள்ளைக்கு அப்புறம்தான் யாரானாலும்…” கலைவாணியின் பொருமல் தணியவே இல்லை. அம்மாவிடம் ஏன்தான் சொன்னோம் என நொந்துகொண்டாள் சமுத்திரா. இறுதியாக கிளம்பி இரு என்ற அறிவுறுத்தலுடன் அழைப்பை துண்டிக்க, எப்போது வீட்டிற்கு வந்து நிற்பாரோ என்றிருந்தது. 

அவள் பயந்தது போல் அன்று மாலையே அய்யாவுவை கூட்டிக்கொண்டு வந்து நின்றார் கலைவாணி. அவர்களின் வருகையை ஆச்சர்யமாக பார்த்த பத்மா மருமகளை ஒருபார்வை பார்த்துவிட்டு வரவேற்றார். அப்பொழுதுதான் முகம் கழுவி வந்த மகிழ்நனும் மனைவியிடம் புருவம் உயர்த்தினான். வரவேற்பு நலவிசாரிப்புகள் முடிந்து பேத்தியை தூக்கிக் கொஞ்ச,

“கண்ணை மூடுனா பேத்தி நினைப்பாவே இருக்கு. அதான் ஒருவாரம் கூட்டிட்டு போலாம்னு வந்தோம்.” என பேச்சை துவங்கினார் கலைவாணி. 

“என்ன திடீர்னு?” பத்மாவிற்கு சட்டென்று ஒன்றும் விளங்கவில்லை. ஒருவாரம் சமுத்திரா இல்லாமல் எப்படி? 

மகிழ்நன் மனைவியைப் பார்த்தான், அவளோ கைகளை பிசைந்துகொண்டு நின்றாள். என்னவோ பதட்டமாக இருப்பது போல் தோன்றியது. 

“என்ன அண்ணி இப்படி சொல்லிட்டீங்க, சமுவும் பேத்தியும் அங்க வந்து தங்கி ஆறு மாசம் இருக்கும். போன வாரமே வரலாம்னு இருந்தோம், கல்யாணி வர்றதா சமு சொன்னா அதுதான் இப்போ வந்தோம்.” என்றவருக்கு நகை விஷயத்தில் எப்படியாவது கொட்டு வைத்துவிட வேண்டும் என வாய் துறுதுறுத்தது. 

ஆனால் அய்யாவு வீட்டிலிருந்து கிளம்பும் போதே அவர்கள் வீட்டு விவகாரங்களில் தலையிடக்கூடாது என கண்டித்துதான் அழைத்து வந்தார்.

“அவங்க மக வயித்து பேத்திக்கு செய்யுறது அவங்க விருப்பம். அதுல மூக்கை நுழைக்க நமக்கு உரிமையில்லை.” என்றிருந்தார். 

“அதெப்படி? உமையாளுக்கு செய்யலைனு சமு அப்படி வருத்தப்படுறா.” 

“நம்ம பேத்திக்கு செய்யலைனுதான சமுத்திராவுக்கு வருத்தம், அவங்க வீட்டு பேத்திக்கு செஞ்சாங்கன்னு இல்லையே. நாம இதையெல்லாம் கேக்க முடியாது. மரியாதையா இருக்காது.” என்ற அய்யாவுவின் பேச்சு கலைவாணி வாயை கட்டிப்போட்டது. 

“நீங்க வர்றீங்கன்னு சமுவும் சொல்லல. அதுதான் திடீர்னு சொன்னதும் எங்களுக்குப் புரியல.” என்ற மகிழ்நன் தலையசைக்க, சமுத்திரா பதிலுக்காக கணவனை பார்த்து நின்றாள்.

“திடீர்னுதான் நாங்களும் கிளம்புனோம் மாப்பிள்ளை. போய் டிரெஸ் எல்லாம் எடுத்துக்கோ சமு.” கலைவாணி உந்த, சமுத்திரா கணவனைப் பார்த்தாள். 

முன்னரே சொல்லவில்லை என கேட்பானோ இல்லை இப்போது செல்ல வேண்டாம் என்பானோ என்பது போன்ற அவளின் பார்வைக்கு பதில் கிடைக்கவில்லை. இதற்கு முன்பெல்லாம் கலைவாணியே முறையாக அழைத்து மகளை கூட்டிச் செல்ல வருகிறேன் என சொல்லிவிடுவார். அதனால் தனித்து அனுமதி கேட்க வேண்டும் என்ற யோசனையெல்லாம் வந்தது இல்லை. இன்று திடுமென வந்து நிற்கவும் குழப்பமும் பரிதவிப்புமாய் நின்றாள். 

“என்ன சமு பாத்திட்டு நிக்குற? ஒருவாரம்தான போய் பேக் பண்ணு.” மகளுடன் மல்லுக்கட்டிய மாமனாரிடம் பேச்சு கொடுத்தபடி இருந்த மகிழ்நன் அவளின் தயக்கத்தை புரிந்து சொல்ல, முகம் தெளிவுற உள்ளே சென்றாள் சமுத்திரா.

கலைவாணிக்குதான் பொடுபொடுவென வந்தது. இன்னும் கணவன் முகம் பார்த்து நிற்கிறாளே, தானாக முடிவெடுக்க தயங்குக்குறாளே என்று இவர் ஒரு முடிவுடன் இருந்தார். 

கணவன் செல் என்று சொல்லிவிட்டாலும் ஏதோ யோசனையில்தான் கிளம்பினாள். அனைவரிடமும் சொல்லிக்கொண்டு கிளம்ப, வெளியே செல்கிறோம் என்ற குஷியில் உமையாள் பெரிதாக கையசைத்தாள். பத்மா முகமே சரியில்லை. ஆட்டோவில் பேருந்து நிறுத்தம் வந்து அங்கிருந்து ஊருக்குச் சென்றனர்.

“பாப்பா கிளம்புனதும் ‘ஓ’ன்னு இருக்கு.” என்றான் மகிழ்நன். வீட்டில் அம்மாவும் பிள்ளையும் மட்டுமே இருக்க, வெறிச்சென்றது வீடு.

“நீதான அனுப்புன.” தன் விருப்பமின்மையை பட்டென சொல்லிக்காட்டிவிட்டார் பத்மா.

“அவங்க வந்து நிக்குறாங்க அனுப்ப முடியாதுன்னா சொல்ல முடியும். போயிட்டு வரட்டும் என்ன இப்போ?” என எளிதாக எடுத்துக்கொண்டவன் அலைபேசியை நோண்டிக்கொண்டு அமர்ந்துவிட்டான்.

“இவளும் வராங்கனு முன்னாடியே சொல்லல. அம்மாவை பார்த்ததும் பட்டுனு கிளம்பிட்டா. உன்கிட்ட சொன்னாளா?” பத்மா விடாது துருவினார். 

“அவ ஒன்னும் சொல்லல ம்மா. திடீர்னு வந்தேன்னு அத்தை சொன்னாங்களே, அவளுக்கும் தெரியலையோ என்னவோ.”

“என்னடா இப்படி சொல்ற?” மனதே கேட்கவில்லை பத்மாவுக்கு. ஏனெனில் அவருக்குத்தான் இப்போது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இரவு உணவு தயாரிக்கும் நேரம் வந்துவிட்டது. சமுத்திரா வந்ததிலிருந்து அவளே முன்னெடுக்க, இப்போது இவருக்கு உதறியது. வளைப்பூட்டி குழந்தை பிறந்து மூன்று மாதம் வரையிலும் அம்மா வீட்டில் இருந்தாள். அதன்பின் எப்போதாவது ஒருவாரம் சென்று வருவாள். அப்போது எல்லாம் பத்மாதான் செய்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக அனைத்தும் சமுத்திரா வசமாகிவிட, அவர் வீட்டு சமையலறையே அவருக்கு தூரமாய் தெரிந்தது. மணியைப் பார்த்துவிட்டு சமையலறை செல்ல, சட்னிக்கு வெங்காயம் தக்காளி வதக்கி வைத்திருந்தாள். அதை அரைத்துவிட்டு தோசை ஊற்றி ஹாட்கேஸில் அடுக்கினார். ஒருவர் பின் ஒருவராக வேலை முடித்து வந்தனர்.

“பாப்பா எங்க? வீடு அமைதியா இருக்கு?” பார்வையால் வீட்டை துளாவியபடி நுழைந்தான் செழியன். 

மகிழ்நன் விஷயம் பகிர, நன்மதி கணவனை அர்த்தமாகப் பார்த்தாள். செழியன் மறுப்பாக தலையசைத்தான். நகை வாங்கியதில் கோபித்து சென்றுவிட்டாள் என்பது அவள் எண்ணம். அப்படியெல்லாம் இல்லை என்ற நம்பிக்கை செழியனிடம். வாய்விட்டு பேசிக்கொள்ளவில்லை என்றாலும் ஒருவருக்கு ஒருவர் பரிமாறிக்கொண்ட பார்வைகளிலே அர்த்தம் புரிந்துகொள்ளப்பட்டது.