பக்கத்து அறையில் உறக்கம் தொலைத்திருந்தான் மகிழ்நன். மனைவி இப்போது வருவாள் அப்போது வருவாள் என எதிர்பார்த்து காத்திருந்தவனை அதிகம் யோசிக்கவிடவில்லை உமையாள். அவனுடன் விளையாடுவதில் ஆர்வம் காட்டினாள்.
“அம்மா வர்றதுக்குள்ள தூங்கு செல்லம்.” என சொல்லிப் பார்த்தான். அவளுக்கு என்ன புரியப்போகிறது? எப்போதும் தாயின் அரவணைப்பில் உறங்குபவள் இன்றும் அவள் வரவிற்கு காத்திருந்தாள். உமையாளுக்கு என்னவோ அந்தக் காத்திருப்பு குதூகலமாகத்தான் இருந்தது. தந்தை விழித்திருந்து அவளுடன் விளையாடுகிறானே. அவனுக்குத்தான் மனைவி வரவில்லையே என்று யோசனையாக இருந்தது. எப்போதும் வேலை முடித்துவிட்டுதான் வருவாள் என்பதால் மகளை பார்த்துக்கொண்டு பொறுமையாக இருந்தான்.
மெத்தை சுற்றிக்கிடந்த விளையாட்டு பொம்மைகளை தூக்கி எறிந்துவிட்டு மகிழ்நனின் முதுகில் பாய்ந்து அவன் கழுத்தை கட்டிக்கொண்டு எதையோ ராகமாக பாடிக்கொண்டு குதித்தாள் உமையாள். கைகளை பின்புறம் கொண்டு சென்று மகளை வளைத்துப் பிடித்தவன் அப்படியே அவளை முன்னே கொண்டுவந்து முகத்தோடு முகம் உரசி கிச்சுகிச்சு மூட்டி விளையாட, கிளுக்கிச் சிரித்தாள் உமையாள். இரவின் நிசப்தத்தில் இவளின் சிரிப்புச்சத்தம் சமையலறையில் முடங்கியிருக்கும் அவள் அன்னையை எட்டிவிட, நிமிர்ந்து பார்த்தாள் சமுத்ரா.
மறுநாளுக்கான மூன்று வேலை சமையல், உமையாளுக்கான சிற்றுண்டிகள், அவளுக்கு கொடுக்க வேண்டிய கனிகள் என தேவையான காய்கறிகள் அனைத்தையும் எப்போதோ எடுத்து வைத்துவிட்டாள். கூடுதலாக அதற்கும் மறுநாளுக்கான சிற்றுண்டிக்கு கூட முன்னேற்பாடுகள் செய்துவிட்டு மாவு பாத்திரங்களை வழித்துப் போட்டு இட்லிக்கு ஊற வைத்து என தேவையற்ற வேலைகளை கூட இழுத்துப் போட்டு செய்துகொண்டிருந்தாள்.
என்னவோ மனதில் ஒரு அழுத்தம். ஆசை ஆசையாய் கிளம்பிச் சென்று ஏமாந்துவிட்ட ஏக்கம் பாரமாய் தங்கிவிட்டது. அகத்தின் பிரதிபலிப்பில் முகத்தின் தசைகள் கடினமாகி இறுக்கமாவதை உணர்ந்தாள். முதன்முறையாய் இப்படியான ஒரு உணர்வு. அதனை இலகுவாக்கும் வழியறியாது வேலைகளுள் தன்னை மூழ்கடித்துக்கொள்ள, என்னவோ அறைக்கு செல்ல பிடிக்கவில்லை.
கணவன் மீது கோபமா, வருத்தமா, ஆதங்கமா தெரியவில்லை. அவனது அக்கா மகளுக்கு வாங்கியதில் விருப்பமில்லையா என்றால் அதுவும் இல்லை. என் மகளுக்கு? என்று கொக்கியாய் நின்றது கேள்வி. அவனுக்கும் மகள்தானே அறிவு ஒருபக்கம் வலியுறுத்த, இதுபோன்ற யோசனைகள் எல்லாம் பிடிக்கவில்லை. இதென்ன பிரித்துப் பார்க்கும் எண்ணம் என்று சிந்தையை திசை திருப்ப, உடலை வாட்டும் வேலைகள் பக்கம் மனதை செலுத்தப் பார்க்க, மகளின் சிரிப்புச் சத்தம் அவளுக்கு அணையிட்டது.
அப்பாவும் மகளும் விளையாடுகிறார்கள், தன்னால் அவள் இதழ்கள் கொஞ்சம் இளக்கம் கொடுத்தது. கைகள் விளக்கை அணைக்க அவர்களை நோக்கி உந்திச் செலுத்தியது கால்கள். கைகளை சுடிதாரில் துடைத்துக்கொண்டே அறைக்குள் நுழைய, உமையாள் கவனித்து அம்மா என்று சத்தம் கூட்டினாள். அதில் மகிழ்நனின் பார்வை மனைவியிடம் பதிந்து புன்னகை உதிர்த்தது இதழ்கள்.
“சத்தம் போடாதடி. எல்லாரும் தூங்குறாங்க.” தன்னிடம் தாவ கைகள் உயர்த்தியபடி கட்டிலின் விளிம்புக்கு வந்த உமையாளை அதட்டியபடியே வேக எடுக்களில் மகளை ஏந்திக்கொண்டாள் சமுத்திரா.
அவனது பேச்சிற்கு வினையாற்றாது மகளிடம் என்னவோ சொல்லிவிட்டு கழிவறை சென்று வந்தாள் சமுத்திரா. அதற்குள் விளக்குகளை அணைத்து இரவு விளக்கை மட்டும் ஒளிரவிட்டு மகளை படுக்க வைத்து தட்டிக்கொடுத்துக் கொண்டிருந்தான் மகிழ்நன். கொட்ட கொட்ட விழித்து தந்தையை பார்த்தாள் உமையாள்.
“தூங்கேன்மா. அம்மா வந்துட்டால்ல.” சோர்ந்து போன குரலில் மகளிடம் கெஞ்சும் நிலைக்கு வந்துவிட்டான். கண்களை அடைக்க மாட்டேன் என்று இருக்கிறாளே மகள்.
“தூங்கு பாப்பா.” ஒளிர்ந்த அந்த சிறு விளக்கையும் அணைத்துவிட்டு சமுத்திரா கட்டிலில் ஏற,
“லைட் இருக்கட்டும் சமு.”
“பாப்பா தூங்கமாட்டா.” சமுத்திரா மகளை அணைத்தாற் போல் மறுபக்கம் படுத்துக்கொண்டு அவளிடம் முணுமுணுத்தபடி உறங்க வைக்க முயல, மகிழ்நன் நேராகப் படுத்தான்.
உமையாள் ஏதோ முணுமுணுத்தபடி இருந்தாள்.
“சம்பாரிக்குறது எல்லாம் பாப்பாக்குதான. சீக்கிரம் பாப்பாக்கு வாங்கிடலாம்.” சமாதானம் போல் சொன்னானா தகவலாய் பகிர்ந்தானா என பிரித்தறிய முடியாத வகையில் திடுமென ஒரு பேச்சு.
பட்டென சமுத்திரா கணவனைப் பார்க்க, அவனுக்கு இவள் பார்வை தெரியவில்லை.
“விட்டுக்கொடுக்க முடியாது.” மேல் பூச்சுகளின்றிய அவன் தரப்பு வாதங்களில் இருந்த தகவல்களை மட்டுமே எடுத்துக்கொண்டாள் சமுத்திரா.
மனம் மீண்டும் சோர்வாய் உணர்ந்தது. விரும்பிக் கேட்ட முதல் விஷயமே விவாதங்கள் இன்றி, அவள் கருத்துகளின்றி நிராகரிக்கப்பட்டது எங்கோ வலி கொடுத்தது. கொஞ்சம் ஆதரவாக அவன் பேசியிருந்தால் எளிதாக கடந்திருப்பாளோ என்னவோ இப்போது அடைப்புடைய தயாரானது விழிகள். அதனை அடக்க முயல்கையில் சிவப்பேறி தடித்தது இமைகளும் கன்னங்களும். இருவருக்குமே அவ்வுணர்வின் தீவிரம் புரியவில்லை.
என்றைக்கு இருந்தாலும் வெளியே தெரியத்தானே போகிறது என குழம்பிய சமுத்திராவுக்கு அவன் அண்ணனுக்கு கொடுத்த பணத்தினை பற்றி பேசுகிறான், அதை வெளியே சொல்ல வேண்டாமென்கிறான் என புரியவே இல்லை. அவன் சொன்னால்தானே அவளுக்குத் தெரியும். காதும் காதும் வைத்ததை போல் அண்ணனுக்கு பணம் கொடுத்துவிட்டாலும் மனைவிக்கு அனுமானம் இருக்கும் என்ற எண்ணம். மூன்று பவுன் செய்ய நினைத்து ஐந்துக்கு வாங்கியதை சொல்ல வேண்டாம் என்கிறான் போல என அவளாக யூகித்து நினைத்துக்கொண்டாள்.
சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டேன் என்பது போல் மனைவியை திரும்பி பார்த்துவிட்டு கையை கண்களுக்கு மறைவாக வைத்து உறங்க முயன்றான் மகிழ்நன். மகளின் குரல் அடங்கியதும் தலையை உயர்த்தி கணவனைப் பார்த்தாள் சமுத்திரா. இந்நேரம் கனவுலகிற்கு சென்றிருப்பான். பெருமூச்சு எழுந்து அடங்கியது.
இருந்தாலும், என்ன இருந்தாலும்? அதான் இவ்வளவு சொல்றாருள்ள முரண்டு பிடித்த மனதை அடக்க முயன்றாள். உறக்கம் வருவேனா என அதிலேயே உழன்றது. ஒருகட்டத்தில் அசதியில் அவளையும் அறியாமல் உறங்கிவிட்டாள்.
மறுநாள் காலை வழக்கம் போல் பாத்திரங்களின் இசைக்கச்சேரியில் விழிப்பு வர சோம்பலுடன் எழுந்து முகம் கழுவிச் சென்றாள்.
பொரியலுக்கு என இவள் வைத்திருந்த காயை சாம்பாருக்கும் சாம்பாருக்கு வைத்திருந்ததை பொரியலுக்கும் அரிந்து கொண்டிருந்தார் பத்மா. உள்ளிருந்து எழுந்த எரிச்சலை என்ன முயன்றும் அடக்க முடியவில்லை.
“அது பொரியலுக்கு அத்தை.” கொஞ்சம் சத்தமாக சொல்லிவிட்டாள்.
பத்மாவின் முகம் கடுகடுவென ஆகிவிட்டது, “எனக்கெப்படி தெரியும்? நீ எடுத்து வச்சிருந்ததைதான் நறுக்கிட்டு இருக்கேன். எப்போதும் இதை பொரியல்தான செய்வ? பேச்செல்லாம் தினுசாதான் இருக்கு. உனக்கு வேணுங்குற மாதிரி நீயே செஞ்சுக்க.” என எழுந்துவிட்டார்.
“ப்ச்…” மணியைப் பார்த்தாள் சமுத்திரா. நேரம் குறைவாக இருப்பது போலிருந்தது. மளமளவென வேலைகளில் இறங்கிவிட்டாள்.
“புருஷன் பையிலேந்து காசு எடுத்து அவன் குடும்பத்துக்கு செஞ்சிட்டா போதுமே பொத்துக்கிட்டு வந்துடும். இதுல மட்டும் பெருசும் சிறுசும் ஒன்னு.” என்ற முணுமுணுப்புடன் பத்மா வெளியேற, சமுத்திராவின் கை அந்தரத்தில் நின்றது.
என்றைக்கும் கணவனின் வரவு செலவுகளில் தலையிட்டதில்லை சமுத்திரா. இது வேண்டும் வேண்டாம், இதை இப்படி செய்திருக்கலாம், இது வாங்கியிருக்கலாம் என ஒன்றும் சொன்னதில்லை. அதற்கு கிடைத்த பரிசு இந்த பேச்சா? என்று சலித்துக்கொண்டவளுக்கு இவள் சொன்னதில்லை என்பதைவிட இவள் சொல்ல வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற நிதர்சனம் புரியவில்லை. புரிய வந்தால்?
நேரம் எட்டை எட்டவும் கிளம்பித் தயாராக வந்த நன்மதியும் அரக்கப் பறக்க முட்டையை வேக வைக்க, சமுத்திரா மெல்ல அங்கிருந்து நழுவினாள். தோல் உரித்து வைத்திருந்த பாதாமை சாப்பிட்ட நன்மதி கை போன போக்கில் அங்கிருந்த பாத்திரங்களை திறந்துப் பார்த்தாள். எப்போதும் சமைப்பதை போலன்றி அன்றைக்கு ஒரே ஒரு பொரியல் மட்டுமே இருந்தது. முகம் சுருங்கினாலும் ஒன்றும் சொல்லாமல் இன்னொரு முட்டையும் சேர்த்து மதியம் எடுத்து செல்ல வேக வைத்தாள். பின்னோடே பரபரப்பாக வந்த செழியன் காலை உணவிற்கு அமர, மற்றொரு அடுப்பில் இருந்த தோசைக்கல்லை பார்த்துவிட்டு தோசை மாவை தேடினாள். அருகிலேயே தயாராய் வைத்திருந்தாள் சமுத்திரா.
ஒரு தோசையை ஊற்றிவிட்டு கொல்லைப்புறம் எட்டிப்பார்த்த நன்மதி, “என் வேலை முடிஞ்சிடுச்சு சமு.” என குரல் கொடுக்க, நின்ற இடத்திலிருந்தே தலையை மட்டும் இவள் புறம் திருப்பி தலையாட்டினாள் சமுத்திரா. நன்மதி முகம் சுருங்கியது.
“மதி கருகுற வாசம் வருது? என்ன செய்யுற?” என்ற செழியனின் குரலில் பதட்டமாக உள்ளே வந்த நன்மதி வேகமாக தோசையை திருப்பிப்போட்டாள்.
அவ்வப்போது திரும்பி பார்த்துக்கொண்டாள் சமுத்திரா வருகிறாளா என. இரவு வேளைகளில் தோசை ஊற்றுவது நன்மதி பொறுப்பு அதுவும் அவள் வரும் நேரம் அவளுக்கும் அவள் கணவனுக்கும்தான் சில நேரம் இவர்களுக்கும் ஊற்றிக் கொடுப்பாள். அதுவே காலை என்றால் சமுத்திரா செய்வாள். இன்றும் அவள் வருவாள் வருவாள் என காத்திருந்து நன்மதியே வேக வேகமாக ஊற்றி கணவனுக்கு வைத்துவிட்டு அவளும் உண்டாள். அந்த அவசரத்திலும் என்னவோ நெருடல். அவள் கிளம்பும் வரையிலுமே சமுத்திரா வீட்டினுள்ளே வராதிருக்க, மதியத்திற்கும் தானே கட்டிக்கொண்டு கணவனுடன் கிளம்பினாள் நன்மதி. இடையே காலை உணவுக்கு வந்த மாமனாரிடம் மெல்லிய தலையசைப்பு. அவர் வந்து குரல் கொடுக்கவும் பத்மா பின்னிருந்து வந்தார்.
“உங்க தம்பி உங்களுக்கு பணம் கொடுத்தது சமுவுக்கு புடிக்கல. இதுக்குத்தான் வேண்டாம்னு சொன்னேன்.” வண்டி நகரவும் கணவனை பிடித்துக்கொண்டாள் நன்மதி.
“அவ முகத்தை பார்த்தா எனக்குத் தெரியாதா? உடம்பெல்லாம் நல்லாயிலாருக்கு. அவ முகம்தான் ஒருமாதிரி எரிச்சல்ல இருக்கற மாதிரி இருக்கு. இது அந்த நகையாலதான் இருக்கு. எனக்கு இதெல்லாம் புடிக்கவே இல்லை.”
“நீயா அதிகம் யோசிக்குற. எதாச்சு தலைவலியா இருக்கும் இல்லை மகிழ்கூட சண்டையோ என்னவோ. பணத்தை வச்சித்தான்னு சொல்லாத, அவங்களுக்குள்ள எதுக்கு வேணும்னாலும் சண்டை வந்திருக்கலாம். அதையும் இதையும் போட்டு குழப்பிக்காத.” என்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டான் செழியன்.
ஆனால் அங்கு முற்றுப்புள்ளி பெற்றது கலைவாணியிடம் காற்புள்ளியாக தொடர்ந்தது.
“உன் கொழுந்தனுக்கு என்ன? அவங்களுக்கு ரெண்டு சம்பாத்தியம். அஞ்சு என்ன பத்து பவுன் கூட வாங்குவாங்க, போடுவாங்க. நீங்க அப்படியா? எல்லாத்தையும் உங்க தலையில கட்டிடலாம்னு பாக்குறாங்களா? ஒருவாரமெல்லாம் இல்லை பதினைஞ்சி நாள் நீ இங்க வந்தாதான் உன் குடும்பத்துக்கு உன் அருமை புரியும்.” பேத்திக்கு நகை வாங்கவில்லை என்று கேள்விப்பட்டு மகளிடம் பொரிந்துவிட்டார் கலைவாணி.