“உங்களுக்கு கல்யாணமாகி அஞ்சு வருஷமாகிடுச்சுடா. இன்னும் அண்ணிக்கு நீ வண்டி கூட ஓட்ட சொல்லித்தரல.” என அண்ணனின் வயிற்றி லேசாக குற்ற,
“நீ மட்டும் சமுத்திராவுக்கு சொல்லிக் கொடுத்தியாடா?” என கேட்டபடி தம்பியை தடுத்தான் செழியன்.
“அதான் டிரைவரா நான் இருக்கேனே. அப்புறம் அவ வேற தனியா கத்துக்கணுமா? அண்ணி மாதிரி அவ தினம் வெளில போயிட்டா இருக்கா.” மகிழ்நன் இயல்பாக சொல்ல, சுருக்கென்றது சமுத்திராவுக்கு. அவள் முகம் சுருங்கிவிட்டது.
“அதே டிரைவர் வேலையதான் நானும் பாக்குறேன்டா என் வென்று…” என தம்பியின் பின்னந்தலையை விளையாட்டாக தட்டிவிட்டு தன்னறைக்குச் செல்ல, அறையிலிருந்து வெளிவந்தாள் நன்மதி.
சமையலறை வந்து தனக்கும் கணவனுக்கும் தண்ணீர் பிடித்தவளை பார்த்த பத்மா, “சீக்கிரம் வந்து இந்த சப்பாத்தியை தேய்ச்சி கொடு மதி. சமு பாப்பாக்கு சாப்பாடு கொடுத்துட்டு இருக்கா, அவ வர லேட்டாகும்.”
“உன்னை கேட்டு செய்யணும்னா அதுக்கு வீட்ல இருக்கனும் நீ.” நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்று நின்றார் பத்மா.
“என்னை கேட்டுத்தான் செய்யணும்னு நான் சொல்லல. நீங்களா பெரிய வேலையை இழுத்து உங்க தலையில போட்டுக்கிட்டு அதை நானும் சுமக்கனும்னு சொன்னா எப்படி? என்னால முடியாதுன்னா முடியாதுனுதான் சொல்ல முடியும் அத்தை. இழுத்து போட்டு செஞ்சிட்டு நாளைக்கு க்ளாஸ்ல போய் முதுகு புடிச்சுகிட்டு பாடம் எடுக்க முடியாது என்னால.” என்று தன் நிலையை உரைத்துவிட்டு அவள் வெளியேறிவிட,
“பாப்பா முக்கால்வாசி சாப்பிட்டா, அவளுக்கு மிச்சத்தை மட்டும் ஊட்டி விட்டுருங்க அத்தை, இதை நான் பாத்துக்குறேன்.” தன் கணவனுக்கு என்று ஆரம்பித்துதானே இது என சமுத்ரா பொறுப்பேற்று வந்து நிற்க,
“அவ பின்னாடி ஓடி போய் எல்லாம் என்னால ஊட்ட முடியாது. நீ முழுசா ஊட்டிவிட்டுட்டு வா. முடிஞ்ச வரைக்கும் தேய்ச்சி வைக்குறேன், மிச்சத்தை நீ பாத்துக்கோ.” என்று சொன்னாலும் முக்கால்வாசி வேலையை சமுத்திராதான் பார்க்க வேண்டி இருந்தது.
வேகமாக குழந்தைக்கு உணவு கொடுத்துவிட்டு சமுத்திரா சப்பாத்தி போட்டு எடுக்க, நன்மதி அனைவருக்கும் பரிமாறி தானும் உண்டாள். கடைசியாக உண்ண வந்த சமுத்திராவுக்கு துணையாக அங்கு வந்து சேர்ந்தார் அவள் மாமனார். அவருக்கு பரிமாற எழுந்தவளை தடுத்து தானே வைத்துக்கொண்டு உண்டவர்,
“அம்மா சொன்னாளாடா மகிழு?” என இளைய மகனிடம் ஆரம்பிக்க, சமுத்திரா நிமிர்ந்து பார்த்தாள். உமையாள் ஓரமாக விளையாடிக்கொண்டிருந்தாள்.
“என்ன விஷயம்?” செழியன் கேட்க,
“வேதாக்கு பங்ஷன் பண்ணா தாய்மாமா நகை போடணும், இப்போவே வாங்கி வச்சிடலாம்னு சொல்றாங்க.” என மகிழ்நன் விஷயத்தை சொல்ல, மருமகள்களின் காதுகள் கூர்மையானது. சமையலறையில் பாத்திரங்கள் கழுவிக் கொண்டிருந்த நன்மதி மெல்ல நகர்ந்து வந்து கூடத்தில் அமர்ந்துகொண்டாள்.
நெற்றி சுருங்க பெற்றவர்களை பார்த்த செழியன், “வேதாவுக்கு இப்போதான பதினோரு வயசாகுது.”
“எல்லாம் பெரியவளாகுற வயசுதான். இப்போல்லாம் சீக்கிரம் பெரிய பொண்ணு ஆகிடுறாங்க. ஒண்ணுக்கு ரெண்டு தாய்மாமா இருக்கீங்க. நகை போடணுமே.” என்று பத்மாதான் பதில் சொன்னார்.
மனைவியைப் பார்த்த செழியன் அவள் கண்ணசைவில் என்ன புரிந்துக்கொண்டானோ, “ரெண்டு பேர் இருந்தாலும் நம்ம சார்பா ஒண்ணா செஞ்சிட்டா போதும்ல?” எனக் கேட்க, அனைவர் முகங்களும் வெவ்வேறான பாவனைகளை தத்தெடுத்துக்கொண்டது.
அப்போதுதான் அந்த யோசனையே வருவது போல் சில முகங்களும் இதில் இப்படியான சிக்கல் வேறு இருக்கிறதா என்று சில முகங்களும் ஐயோ என்று சில முகங்களும் வெளிற, சுருக்கம் கொள்ள, ஆளாளுக்கு யோசனைக்குள் சென்றுவிட்டனர். அவர் அவருக்கு அவர் கணக்கு.
கந்தவேல், பத்மாவதியின் மூத்த மகள் கல்யாணி. முப்பத்திஐந்தை தொட்டுவிட்டார். அருகில் இருக்கும் கிராமத்தில் கட்டி கொடுத்திருக்கிறார்கள். நாற்பதில் இருக்கும் சுந்தர், விவசாயக் குடும்பம். மூத்தவள் வேதா, இளையவன் எட்டு வயதை எட்டிவிட்ட வேந்தன் என அவர்களுக்கு இரு பிள்ளைகள்.
இரண்டாமானவன் செழியன். கல்யாணியை விட இருவயது இளையவன். அடுத்து மகிழ்நன் அவனைவிட மூன்று வயது இளையவன். நன்மதியும் கடைக்குட்டி மகிழ்நனும் சமவயது. மணமான புதிதில் அங்கு சமுத்திரா இளையவள், இப்போது உமையாள்.
“அதுவும் சரிதான். ரெண்டு பேரும் கலந்து பேசி எவ்வளவு செய்யலாம்னு சொல்லுங்க. ரொம்ப ஏத்த இறக்கம் இல்லாம பாத்துக்கோங்க, அப்புறம் நாளைக்கு அது பேச்சாகிடக்கூடாது.” என்று கந்தவேல் அந்த தீர்ப்புக்கு வலு சேர்க்க, மகன்களின் முகம் சிந்தனைக்கு தாவியது.
சகோதரர்களின் வருமானங்களில் பெரிய ஏற்ற இறக்கங்கள் இருக்கும்போது சபையில் எப்படி அதனை சரிக்கட்ட என்று இருவருக்கும் யோசனை. பெற்றவர்கள் அதோடு அந்த பேச்சை முடித்துக்கொள்ள, இளையவர்களுக்கு பாரம் ஏறியது.
“இங்க பாருங்க உங்க தம்பி சம்பாரிக்குறதுல பாதிதான் உங்க வருமானம். அவர் அளவுக்கு எல்லாம் நம்மளால செய்ய முடியாது. அவர் அஞ்சு சவரன் போடுறேன் ஆறு சவரன் போடுறேனு நின்னா அதுக்கு ஈடா செய்யணும்னு நிக்காதீங்க நீங்களும். அடிச்சி சொல்லிடுங்க இவ்வளவுதான் முடியும்னு.” நன்மதி தன் முடிவை கணவனிடம் இறக்கிவிட, அவன் யோசனையானான்.
“யோசிக்குறதை பார்த்தா பத்து சவரன்னு நீங்களே நிப்பீங்க போலயே.” என இடக்காக கேட்டவள், “நம்ம செலவும் அவங்க செலவும் ஒன்னில்லை. அதை நியாபகம் வச்சிட்டு முடிவு எடுங்க.” என கடினமாய் சொல்லிவிட்டு படுத்தாள்.
இங்கோ சமுத்திரா எதுவும் சொல்லமுடியாமல் கணவன் முகத்தை பார்த்தாள். ஏதோ தீவிர யோசனையில் இருப்பவன் போல் விட்டத்தை பார்த்து மல்லாக்க படுத்திருந்தான் மகிழ்நன்.
“ஏங்க, என்ன முடிவு பண்ணியிருக்கீங்க?” என்று சமுத்திரா மெல்ல கணவனின் கையை சுரண்ட,
“என்ன நினைச்சாலும் என்கிட்ட முதல்ல சொல்லு, வீட்ல சொல்லிடாத. நம்ம கூட்டு குடும்பத்துல இருக்கோம். ஒரு சொல் சேர்க்கும் ஒரு சொல் பிரிக்கும். கவனமா இருக்கணும்.” என மனைவிக்கு பாடமெடுத்தான் அந்த வங்கி மேலாளர்.
“இல்லை… நம்ம பாப்பாக்கு வெள்ளிக் கொலுசை தவிர நகைன்னு ஒன்னும் நாம வாங்கல.” என்று இழுக்க,
“முழுசா சொல்லு…” என்றவனின் கண்களில் அழுத்தம் கூடியது. என்ன சொல்ல வருகிறாள் என்று காதுகளும் கூர்மையானது.
“அதுதான் தோடு, மோதிரம், செயின் எல்லாம் இருக்கே.” என்றவனுக்கு அவள் சொல்ல வரும் உணர்வு புரியவில்லை.
பிடித்தத்தில் கட்டுண்டு, காதலில் கசிந்து, ஆசை மேகங்களின் பொழிவுகளில் தாங்கள் உருவாக்கி உலகுக்கு கொண்டுவந்த உயிரின் மதிப்பு தங்கத்தைவிட விலைமதிப்பற்றது எனினும் மதிப்புமிக்க தங்கத்தை தாங்கள் பெற்றெடுத்த தங்கத்திற்கு தங்களின் சம்பாத்தியத்தில் வாங்கிக்கொடுக்க வேண்டும் என்று பெற்றவளாய் அவளுக்கு இருப்பது நியாமான வேண்டுகோள். ஆனால் அதற்கு அவள் வார்த்தை கொடுத்துதான் கணவனுக்கு புரியவைக்க வேண்டியிருந்தது.
“அதெல்லாம் என் அண்ணன், அப்பா, அம்மா, அப்புறம் செழியன் அத்தான் வாங்கிக் கொடுத்தது. நாம எதுவும் வாங்கலையே.”
“ஓ…” என்றவன் பார்வை ஆதூரமாய் அருகில் விளையாடிக்கொண்டிருந்த மகள் மீது படிந்தது.
“என்னங்க! பாப்பாக்கு வாங்கிட்டு வேதாவுக்கு எவ்வளவு செய்யணும்னு நினைக்குறீங்களோ அதை வாங்கிடலாம்.” என்றாள் வேகமாய். எங்கே அவனது அக்கா மகளுக்கு செய்யக்கூடாது என தான் சொல்வதாய் நினைத்துக்கொள்வானோ என்ற அச்சத்தில் அவள் தெளிவுபடுத்தினாள். இந்த மூன்று வருடத்தில் இதுதான் அவள் வேண்டிக் கேட்டு பேசியது என்பது போன்ற எண்ணம் மகிழ்நனுக்கு. அதுவே அவனை தலையாட்ட வைத்தது.
“சரி.”
தன் எண்ணத்திற்கு கணவன் தலைசாய்த்ததும் வானத்தில் பறக்காத குறையாக அகமகழிந்து போனாள் சமுத்திரா. அது அவள் முகத்தினில் தெரிய அவளை இழுத்து தன்மேல் போட்டுக்கொண்ட மகிழ்நன், விரல்கொண்டு அவள் வதனத்தில் கோலமிட, கூசி சிலிர்த்த பெண் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக்கொண்டாள். உல்லாசமான சிரிப்புடன் அவளை தன்னுடன் நெறுக்கிக்கொண்டவன் உச்சியில் முத்தமிட, போட்டிக்கு மகள் வந்துவிட்டாள்.
அம்மாவின் தலையில் அடித்து, “அப்பா… என் அப்பா…” என உரிமை போராட்டத்திற்கு அடிக்கல் நாட்ட, சிரித்துக்கொண்டே புரண்டு தலையணைக்கு மாறினாள் சமுத்திரா. மகள் நடுநாயமாக அப்பனின் நெஞ்சை தன் மஞ்சமாக்கிக்கொண்டாள். மகளின் அன்பில் அவளை அணைத்துக்கொண்டு முத்தமிட்டான் மகிழ்நன். உமையாள் பதிலுக்கு செய்கிறேன் என அவன் முகத்தை ஈரம் செய்ய, சிரிப்புச் சத்தம் அவ்வறையை நிறைத்தது. கணவனும் மகளும் கொஞ்சி விளையாடுவதை ரசித்துப் பார்த்த பெண்ணின் அகம் அவன் முடிவில், அவன் அன்பில், அவன் உறவில் திருப்தியுற்றது.
ஆனால் அடுத்து வந்த நாட்களில் அவன் முடிவு மாறியது. சமுத்திரா மாறவும் அது காரணியாகிப்போனது.