“பாப்பாவுக்கு இந்த பாவாடை சட்டை நல்லாயிருக்கு சமு.” என்ற நன்மதியை பார்த்து சமுத்திரா புன்னகைக்க, கலைவாணி மகளிடம் வந்துவிட்டார்.

அவள் கையை பிடித்து சுரண்டி தனியே அழைத்து வந்தவர், “என்னடி நடக்குது இங்க?”

“என்ன ம்மா?” மேடையிலிருந்து கீழிறங்கி வந்து சுற்றும் முற்றும் பார்த்தபடி இருந்தாள் சமுத்திரா.

“எல்லாம் சரியாகிடுச்சுனு நான் கனவு கண்டுட்டு இருந்தா புள்ளையையும் தூக்கி அவ கையில கொடுத்துட்டு நீ தள்ளி நிக்குற.” 

“ம்மா, கொஞ்ச நேரம் வச்சிக்கட்டுமே என்ன இப்போ?”

“என்னவா? அவ புள்ளையை வச்சிருக்குற சாக்குல நகர்ந்து நின்னுக்குறா, நீதான் எல்லாம் எடுத்து கொடுத்துட்டு இருக்க.” மகளை முறைக்கவே செய்தார் கலைவாணி. வந்ததிலிருந்து பார்க்கிறார் வரிசை தட்டு அடுக்குவதிலிருந்து அதை எடுத்து வந்து சபையில் நிரப்பி யாரேனும் கேட்பதை எடுத்துக் கொடுப்பது என்று எல்லாமே இவள்தான் செய்கிறாள். புத்தி வந்துவிட்டது மகள் பிழைத்துக்கொள்வாள் என்ற எண்ணத்திற்கு மூடுவிழா நடத்துவது போல் செய்கைகள் இருக்க, தனியே பிடித்துவிட்டார்.

“இங்க வந்து செய்ய முடியாதுனு நிக்க முடியுமா அம்மா… அத்தாச்சியோட நாத்தனார், பங்காளி வீட்டுக்காரங்க எல்லாம் எப்படி செய்யுறாங்க பாரு. நானே நல்ல வேளை அஞ்சு பவுன்ல நகை எடுத்தோம்னு நினைச்சிட்டு இருக்கேன்.” அங்கிருந்த பகட்டான வரிசை தட்டுகளைப் பார்த்து அவள் உள்ளதை உள்ளபடி பகிர்ந்துகொள்ள,

“தள்ளி நில்லுன்னு சொல்லல. நீ கொஞ்ச நேரம் எடுத்துக்கட்டி செஞ்சா அவளும் கொஞ்சம் செய்யட்டும். புள்ளையை மாத்தி மாத்தி வச்சிக்கோங்க, இல்லையா பேத்தியை என்கிட்ட குடு நான் பாத்துக்குறேன். அப்புறம் ரெண்டு பேருமா என்னவும் செஞ்சிக்கோங்க, நான் ஏன் கேட்கப்  போறேன்.” நொடிக்காத குறையாக கலைவாணி மகளை அழுத்தினார். இவள் ஏதோ பதில் சொல்லும் முன் மேடையில் அழைத்துவிட்டனர்.

பெரியவர்கள் முறை செய்துவிட்டு அடுத்ததாக செழியன் நிற்க, வேட்டியை பிடித்தபடி மறுபுறமாக மேடையேறிய மகிழ்நன் இவளை அழைத்தான். அம்மாவிடம் தலையசைத்து கணவனிடம் விரைந்தாள்.

“நம்ம தட்டு எதுன்னு பாத்து எடுத்துக்க.” மனைவி அருகில் வந்ததும் அவளிடம் சொன்ன மகிழ்நன் கைச்சட்டையை மேலேற்றினான்.

“பாப்பாவை வாங்கிக்கோங்க.” தாங்கள் வாங்கிய உடை மற்றும் நகைத் தட்டு எங்கிருக்கிறது என்று கண்கள் தேடியது. மகளைத் தேடினான் மகிழ்நன்.

செழியன் முறை செய்ய நிற்க உடன் நின்றிருந்த நன்மதியிடம் இருந்தாள் உமையாள். இவன் சென்று வாங்கப்போக,

“என்கிட்ட இருக்கட்டுமே.” என்றாள் நன்மதி. இவன் திரும்பி மனைவியைப் பார்க்க, அதற்குள் செழியன் முன்னகர்ந்து வேதாவுக்கு அட்சதை தூவினான். நன்மதியும் அவனை ஒத்து முன்னேற, மகிழ்நன் பின்வாங்க வேண்டிய நிலை.

“பாப்பா?” என்று பார்த்த சமுத்திரா நன்மதி முறை செய்துவிட்டு நகரவும் வாங்கிக்கொள்ளலாம் என்று இருந்துகொண்டாள். ஆனால் நன்மதி தன்போக்கில் உமையாளுடன் பேசிக்கொண்டே மேடையின் இறக்கம் நோக்கி நகர்ந்துவிட, அக்கா என சத்தமாக அழைத்துவிட்டாள் சமுத்திரா. மேடையிலிருந்தவர்கள் கவனம் இவர்கள் புறம் திரும்பியது. ஒருநொடி நின்று பார்த்தவள் கணவனிடம் தட்டை கொடுத்துவிட்டு இவளே சென்று மகளை வாங்கிக்கொண்டாள். சங்கடமாய் சிரித்த நன்மதி நெற்றியில் தட்டிகொண்டு இறங்கிவிட்டாள்.

‘இப்போவாச்சும் புத்தி வந்துச்சே. விட்டுட்டு தேடாம உரிமையை புடிச்சிக்குறா.’ கீழிருந்து இதனை கவனித்தவண்ணம் இருந்த கலைவாணியின் எண்ணம் இதுதான். 

முறை செய்து குடும்பமாக புகைப்படம் எடுத்துக்கொண்டபின் இவர்களும் இறங்கிவிட்டனர். கலைவாணி சென்று பேத்தியை வாங்கிக்கொள்ள, அய்யாவு மருமகனை பேச்சில் இணைத்துக்கொண்டார். இவர்கள் ஒருபுறம் அமர்ந்துகொள்ள, நன்மதி அவள் வீட்டினருடன் மறுபுறம் அமர்ந்திருந்தாள். மெல்லிய குரலில் மகளுக்கு அறிவுரைகளை தெளித்தவண்ணம் இருந்தார் கலைவாணி. அதற்கெல்லாம் அவசியமே இல்லை என்பது போல் விழா முடிவில் சமுத்திரா மேடையேறும் முன் நன்மதியைப் பார்க்க புரிதலுடன் அவளும் சேர்ந்துகொண்டாள். மிச்ச வேலைகளை இருவரும் பங்கு போட்டு செய்தனர். எவ்வித சங்கடங்களும் இன்றி விழா நிறைவுற்றதில் மகிழ்ந்துபோன பத்மா மிதப்பாக சுற்றி வந்தார். மகளுக்கு வைக்க வேண்டிய தீபாவளிச்சீரும் ஊர்மெச்ச வைத்துவிட்டார்.

கல்யாணியும் தன் பிறந்த வீட்டினரை நன்றாக கவனித்து அனுப்ப, சச்சரவின்றி வீடு வந்து சேர்ந்தனர். மறுநாளிலிருந்து இயல்பு திரும்புகிறது. நான்கு நாட்களில் தீபாவளிப் பண்டிகையும் வரவிருக்க,

“பண்டிகை காலத்துல ஒரு இனிப்புகூட செய்யலைன்னா எப்படி?” என்று விழா முடிந்து வந்த இரவே ஆரம்பித்துவிட்டார் பத்மா.

இவர் இதை விடப்போவதில்லையா என்பதுபோல் எல்லாருமே பார்க்க, கந்தவேல் வெளியே வாங்கிக்கொள்ளலாம் என்றார்.

“வீட்ல பச்ச புள்ளை இருக்கு, வெளில வாங்கிக்கொடுத்தா வயித்துக்கு சேருதோ என்னவோ… மகிழ் கூட அன்னைக்கு அவன் மாமியார்கிட்ட சொன்னானே வீட்ல செய்யணும்னு.”

மகிழ் பார்வை தன்னால் மனைவியிடம் சென்றது. உள்ளுக்குள் எச்சரிக்கை மணியடிக்க,

“சிம்பிலா ஏதாச்சும் செஞ்சுக்கலாம்.” என்று கைக்கொடுத்தாள் நன்மதி.

“சிம்பிலானா? என்ன செய்யுறது யார் செய்யுறது? அவ செய்யட்டும்னு நீயும் நீ செய்யணும்னு அவளும் ஒதுங்கி நின்னுட்டா பலகாரம் தன்னால வந்துடுமா?” 

“சீட்டு குலுக்கி போட்டு என்ன செய்யுறதுனு முடிவு பண்ணுவோமா?” இடையே செழியன் நக்கலடிக்க, அவனை முறைத்துப் பார்த்தான் தம்பிக்காரன்.

“முறைச்சா? எங்க இந்த பிரச்சனையை தீர்த்து வையேன் பாப்போம்.” சவாலாக செழியன் தம்பியை சீண்ட, திருதிருவென விழித்தான் மகிழ்நன். அவனுக்கு இதனை சமாளிக்கும் வழி தெரியவில்லை. வேண்டாம் என்று சொல்லியும் அம்மா கேட்கவில்லை. எளிதாக செய்யலாம் என்று அண்ணி யோசனை கொடுத்தாலும் சேர்ந்து செய்யலாம் என்றும் சொல்லவில்லை. தானாவது உதவி செய்யலாம் என்றால் சமையலறைக்கும் தனக்கும் வெகு தூரம். எதுவும் தோன்றாமல் பேவென்று தான் பார்த்தான்.

“என்ன சமு ஒன்னும் சொல்லமாட்டேங்குற?” பத்மா சின்ன மருமகள் புறம் திரும்பிவிட்டார். 

“நான் சொல்ல என்ன இருக்கு அத்தை. எப்படியும் தீபாவளி அன்னைக்கு போடுற படையல்ல இனிப்பு செய்யப்போறோம். அது போதாதா?” எனறு பார்க்க,

“அதானே, அதுவே போதும் ம்மா. இப்போல்லாம் தடுக்கி விழுந்தா ஸ்வீட் கடை இருக்கு, தினம் ஆபீஸ்ல கூட யாராவது விசேஷம்னு ஸ்வீட் பாக்ஸ் நீட்டிடுறாங்க, சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடிக்குது.” மகிழ்நன் மனைவிக்கு ஒத்தூத, 

“பேங்க் ஆபீஸருக்கு ஸ்வீட் சாப்பிட்டு போர் அடிக்குறதால எங்களுக்கும் ஸ்வீட் கொடுக்காம இருக்கலாமா… சமு நீ செய்யுற பயறு உருண்டை வேணும் எனக்கு.” வேண்டுமென்றே அண்ணன்காரன் வம்பிழுக்க, ஏன்டா ஏன் என்று பார்த்து வைத்தான் மகிழ்நன்.

‘ஒரே நாள்ல எல்லாம் சரியாகிடுங்குற மாதிரி இந்த கும்பிடு போடுறியே எவ்ளோ நேரம் தாக்குப்புடிக்குறேனு பாத்தேன்.’ சீண்டலாய் தம்பியின் காதினுள் ஓதி அவன் தோளில் தட்டினான் செழியன். சமாளித்துவிட்டோம் என்று ஆசுவாசப்படும்முன் இதுதான் ஆரம்பம் என்று சொல்லாமல் சொன்னது போல் இருந்தது மகிழ்நனுக்கு. உடனே தன் மனைவியைப் பார்க்க,

“நீ மாவு ரெடி பண்ணி குடு சமு, நான் உருண்டை புடிக்கிறேன்.” விட்டுக்கொடுக்காமல் பேசினாள் நன்மதி. 

இதை இவர் முன்னரே செய்திருந்தால் பெரிய பிரச்சனையாகாமல் எப்பொழுதோ தடுத்திருக்கலாம் என்று தோன்றியது மகிழ்நனுக்கு. 

தனக்காக குடும்பத்தினர் பார்ப்பதை கண்கூடாக கண்டுவிட்ட சமுத்திரா இன்முகமாகவே தலையசைத்தாள். இதுதானே வேண்டும். ஒருவரிடமே அனைத்தையும் தள்ளாமல் சமமாக அனைவருக்கும் உண்டான மரியாதையை கொடுக்க வேண்டும், அதுதான் குடும்பத்தை பிணைத்து வைக்கும். என்ன, இது காலம்தோறும் தொடரும் மாற்றமா இல்லை கண்துடைப்பாக தற்காலிகமாக ஏற்பட்டிருக்கும் மாறுதலா என பொறுத்திருந்தது பார்க்க வேண்டும்.

“உனக்கு ஓகேதானே சமு?” அறைக்கு வந்ததும் மகிழ்நன் மனைவியைப் பார்க்க,

“என்ன ஓகே?” மகளை மெத்தையில் போட்டு தட்டிக்கொடுத்தபடி கேட்டாள்.

“இல்லை, இன்னைக்கு எல்லாம் ஓகேதான? பங்ஷன் போனோம் அப்புறம் வீட்டுக்கு வந்தும் அம்மா…” முழுதாக முடிக்காமல் அவன் பார்க்க, சன்னமாக சிரித்தாள் சமுத்திரா.

நெருங்கி வந்து அவள் கைப்பிடித்தவன், “இப்படி சிரிச்சா என்ன அர்த்தம்? நீ எதுவும் ஹர்ட் ஆகிடுவியோன்னு ஒவ்வொரு தடவையும் உன் முகம் பாக்குறேன். எல்லாத்துக்கும் இந்த ஒரு சிரிப்பை கொடுத்துடுற. என்னனு நினைக்க நானு?” 

“இன்னும் என்னை புரியலையா?” சட்டென வடிந்துவிட்ட மென்னகையுடன் அவள் பார்க்க,

“இன்னும் புரிஞ்சிக்காம இருக்கக்கூடாதுனு தான் கேக்குறேன்.” 

“நல்லா பேச கத்துக்குட்டிங்க.”

“இன்னைக்குதான் அம்மா ஆடுனு பேசுறேன் பாரு…” சீண்டலாய் சொல்லி அவள் கன்னத்தை செல்லமாக பிடித்து ஆட்டினான் மகிழ்நன்.

“ப்ச், விடுங்க.”

“விட்டுட்டுதானே இருந்தேன் இவ்ளோ நாளா…” பேச்சோடு பேச்சாக குனிந்து அவள் கன்னத்தில் இழைந்து முன்னேற, ஆசையாக நெருங்கிய கணவனின் நெருக்கத்தை ஏற்றுக்கொண்டாள் சமுத்திரா.

“நானே இதுவரைக்கும் இருந்தமாதிரி இனி இருக்கக்கூடாதுனு பார்த்து பார்த்து கவனமா பேசுனா நீங்க ஏன் வேணும்னு வம்புக்கு நின்னு உங்க தம்பியை சிக்கல்ல இழுத்துவிடப் பாத்தீங்க?” உறக்கத்தின் பிடிக்கு செல்லும் முன் கணவனை பிடித்துவைத்துக் கேட்டாள் நன்மதி.

“அம்மாவை மாத்தமுடியாதுனு தெரிஞ்சிடுச்சு, அவன் மாறிக்கனும்னல. சமு வருத்தப்பட்டு போயிட்டு இப்போதான் வீடு வந்திருக்கு, அந்த ஜோர்ல ஆடுறான் அவன். எப்போதும் இப்படிதான் சமாளிச்சாகணும்னு அவனுக்கும் புரியனும்ல.” 

“நல்லா புரிய வச்சீங்க… காலையில சமு உமையாளை தூக்கி கொடுப்பான்னு நினைக்கவே இல்லை. அப்படியே உடம்பெல்லாம் சிலிர்த்துடுச்சு ஒருநிமிஷம். இதுமாதிரியெல்லாம் ஒட்டுதலா இருந்ததே இல்லை இதுவரைக்கும்.” வேதாவின் சடங்கிற்கு முன் நடந்ததை செழியனிடம் பகிர்ந்தாள் நன்மதி.

“நாங்களும் பாத்தோம். நல்ல பொண்ணு சமு, நம்மதான் சரியா நடத்தல.”

“அப்படினு சொல்ல முடியாது, நம்ம நிலைமை அப்படி. இனியும் எந்த அளவுக்கு செய்ய முடியும்னு தெரியல. முடிஞ்ச அளவுக்கு பண்ணலாம்னு இருக்கேன், அதுக்கு மீறி சங்கடம் வந்தா ஒன்னும் பண்ண முடியாது, அப்புறம் என்னை கோச்சிக்ககூடாது சொல்லிட்டேன்.” முன்னெச்சரிக்கையாக நன்மதி தாக்கல் கொடுத்துவிட, அவள் சொன்ன நேரமோ என்னவோ அவள் வாய் முகூர்த்தம் பலித்தது.