மனைவி மகளுடன் நேரம் செலவழித்துவிட்டு வீடு வந்தவனை வரவேற்பாக பார்த்தனர் நன்மதி வீட்டினர். அவர்கள் அருகில் இருந்த பைகளே தீபாவளிச் சீர் செய்ய வந்திருக்கின்றனர் என்று காட்டிக்கொடுத்தது. அறிமுகப் புன்னகை சிந்தி வரவேற்றவனிடம்,
“சமுத்திராவும் உமையாளும் ஊருக்கு போயிருக்காங்கனு அண்ணி சொன்னாங்க. எப்படி இருக்காங்க தம்பி?” என்று விசாரிக்க, ஒருநொடி தயக்கம் வந்துபோனது மகிழ்நனுக்கு. இங்கு நடந்ததைப் பற்றி அண்ணி அவர் வீட்டினருக்கு தெரிவித்திருப்பாரோ, தன் வீட்டு சச்சரவு கடைபரப்பப் பட்டிருக்குமோ, தன் மனைவியை கைகாட்டி இவர்கள் எதுவும் பேசிவிடுவார்களோ என்ற திக்கில் அவன் யோசனை பயணித்தது. நன்மதி வீட்டினர் அப்படியொன்றையும் வெளிப்படுத்தவில்லை.
“நீங்க அங்கதான் போயிருக்கீங்கன்னு சொன்னாங்க.” என்று அதனை தோண்டித்துருவாமல் இவன் தலையாட்டவும் அமைதியாகிவிட்டனர். சிறிது நேரம் மிக மிக மரியாதையாக, தேவைக்கு அதிகமாக ஒருவார்த்தை பேசாது வந்த வேலை முடிந்ததும் கிளம்பிவிட்டனர்.
அவர்கள் எப்போது கிளம்புவார்கள் என்று எதிர்பார்த்திருந்தது போல் இளையவனிடம் வந்தார் பத்மா.
“சமு என்ன சொல்றா? கையோட நீ கூட்டிட்டு வந்துடுவேன்னு நினைச்சேன்.”
“வருவா’மா.” சுரத்தையின்றி அவன் சொல்ல, இவர் முகம் கூம்பியது.
“இன்னும் என்னவாம்? ஏதோ மனவருத்தம், எல்லாரையும் பேசிட்டால்ல. அதோட விடவேண்டியதுதான. எதுக்கு அங்க போய் உக்காரனும்? நாம கொடுமை பண்ணிட்டதா நினைக்கமாட்டாங்க அவங்க வீட்ல?” அவருக்கு அவர் கவலை.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை. கொஞ்ச நாள் இருந்துட்டு வரட்டும், என்ன இப்போ?”
“தீபாவளி வருது. டிரஸ் எடுக்கணும், பலகாரம் பண்ணனும் எவ்ளோ வேலை இருக்கு.”
“அவ வரப்போ எங்களுக்கு டிரஸ் எடுத்துக்கலாம், நீங்க எல்லாம் போய் உங்களுக்கு எடுத்துடுங்க. பலகாரம் எல்லாம் ஒரு விஷயம்னு பேசாத’மா. ஒருவருஷம் செய்யலைன்னா என்ன ஆகிடப்போகுது?”
கடைசி வரை மனைவியை சமாதானம் செய்து உடன் அழைத்து வரமுடியவில்லையே என்ற சோர்வில் வீடு வந்தவனை பத்மா தோண்டித்துருவவும் எரிச்சல் வரும்போல் இருந்தது. அவன் முகம் போன போக்கிலேயே பத்மாவின் வாய் பூட்டிக்கொள்ள, அமைதியாக இருந்த கந்தவேல் மகனைப் பார்த்தார்.
“உன் மாமனார்கிட்ட பேசணுமாடா? இங்கிருந்து வருத்தப்பட்டு கிளம்பி போன பொண்ணை அப்படியே விட்டுட்டோம்னு நினைக்கப் போறாங்க.”
“ரொம்ப நாள் இதை நீடிச்சிறாத. சீக்கிரம் சமாதானம் பண்ணி கூட்டிட்டு வர வழியைப் பாரு. மேல் வேலைக்கு ஆள் பார்க்க சொல்லியிருக்கேன் அம்மாகிட்ட.” எனும்போதே மீண்டும் ஒருமுறை சுருங்கி சிணுங்கிப் போனது பத்மா முகம்.
நம் வீட்டு வேலைக்கு வெளியாட்களை உள்ளே விடுவதா என்று ஏற்கனவே கணவரிடம் முகம் தூக்கி வாக்குவாதம் செய்திருந்தார். ஆள் வேண்டாமென்றால் நீயே அனைத்தும் செய், மருமகள்களை எதிர்பார்க்க முடியாது, குடும்ப ஒற்றுமை முக்கியமில்லையென்றால் உன் எண்ணம் போல் செயல்படு என்று கந்தவேல் சொல்லவும் வேறு வழியின்றி ஒத்துக்கொண்டார்.
“நானே சொல்லணும்னு இருந்தேன்.” என்று மகிழ்நன் சொல்ல, அர்த்தத்துடன் கந்தவேலின் பார்வை பெரிய மகனைத் தழுவி அகன்றது.
அந்நேரம் பத்மாவிற்கு அழைப்பு வர, பேசிவிட்டு வந்தவர் முகத்தில் மகிழ்ச்சி. அலைபேசியை கந்தவேலிடம் கொடுக்க, அவர் பேசி முடித்ததும் செழியன். மதியிடமும் சொல்லிவிடு என்று அவன் நன்மதியிடம் கொடுக்க, என்னவென்று கேட்டான் மகிழ்நன்.
“கல்யாணிதான் போன்ல, எல்லாம் நல்ல விஷயம்தான்.” எனும்போதே அலைபேசி இவனிடம் வந்தது.
கல்யாணியின் மகள் பெரியவள் ஆகிவிட்டாளாம். உடனே மகிழ்வை பகிர்ந்துகொண்ட மகிழ்நனுக்கு சட்டென பொறி தட்ட எழுந்து தள்ளிச் சென்றவன்,
“சமுவுக்கு போன் போட்டு சொல்லிடு.”
“அம்மா வீட்ல இருக்காளே…”
“எங்க இருந்தா என்ன? சொல்ல வேண்டாமா நீ?” குரலில் கொஞ்சம் கடினம்.
“சொல்லாம எப்படி இருப்பேன், இப்போதான் விஷயம் தெரிஞ்சது உடனே உங்களுக்கு அடிச்சிட்டேன். தகவல்தானே நீ சொல்லிடுவேன்னு நினைச்சேன். சரி இப்போவே போன் போட்டுடுறேன்…” என்றவள், “நாள் குறிச்சதும் முறையாவும் சொல்லிடுவேன்.” என்றும் உறுதி கொடுக்க, இவன் நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டான்.
இதெல்லாம் கூட யோசிக்க வேண்டி இருக்கிறதே என்று மலைப்பாய் இருந்தது. இதுபோன்று தான் கவனம் குவிக்காமல் விட்ட விஷயங்கள் எல்லாம் மனைவியை வருந்தச் செய்திருக்கிறது என்று புரிந்துகொள்ளவே சுற்றத்தை கவனிக்க வேண்டியிருக்கிறது. முன்பு இயல்பாக கடந்துவிட்ட அனைத்தும் இப்போது கருத்தில் பதிகிறது.
அண்ணன்காரன் தன் மனைவியின் பின் சுற்றுவதாகட்டும், ஏந்துக்கொண்டு பேசுவதாகட்டும் இப்போதுகூட அண்ணன் சொல்லாமல் கல்யாணி நன்மதியிடம் பேசியிருப்பாளா என்பது சந்தேகமே. அதை பார்த்த பின்தான் அந்த யோசனையே இவனுக்கும் வந்தது.
மனதிற்குள் மனைவி எந்த இடத்தில் இருந்தாலும் வெளியிடத்தில் கணவன் மனைவிக்காக பேசவில்லை என்றால் அவள் புறக்கணிக்கப்படுவாள், இல்லையேல் இவன் சுலபமாக நினைத்துவிட்டது போல் அவர்களும் சுலபமாக நினைத்து கடந்துவிடக்கூடும் என்று புத்தி உரைக்க, இத்தனை நாள் இந்த நிதர்சனம் எல்லாம் எங்கு போய் தொலைந்ததோ என்று நொந்துகொண்டான்.
சிறிது நேரம் சென்று மனைவிக்கு அழைத்த சமயம் கல்யாணி பேசினாளா என்று கேட்டுக்கொண்டான். தகவல் வந்தது என்பதை மட்டும் அவள் உறுதி செய்ய, அடுத்த கவலை அவனை ஆட்கொண்டது.
அக்கா மகளுக்கு விழா எடுத்தால் மனைவியின் நிலைப்பாடு என்னவோ, முன்னே நின்று செய்வாளா என்ற கலக்கம் இருந்தாலும் அப்படியெல்லாம் சபையில் குடும்பத்தை விட்டுக்கொடுப்பவள் இல்லை அவள் என மனமே எடுத்துக்கொடுத்தது. இருப்பினும் அவளிடம் நேரடியாக கேட்டுவிடலாம் என்றாலும் அவளை சந்தேகம் கொள்வதாய் நினைத்துக்கொள்வாளோ, உங்கள் குடும்ப மரியாதைக்காக, தேவைக்காக நான் முன்வந்து நிற்க வேண்டுமா என்று கேட்டுவிட்டால்… என்னென்னவோ யோசனைகள் தறிகெட்டு ஓட,
“என்னாச்சு? ஏன் முகம் டல்லா இருக்கு?” காணொளி அழைப்பின் இடையே இவன் யோசனைக்குள் சென்றுவிட, கவனித்துக் கேட்டாள் மனைவி.
உடனே நிகழ்வுக்கு வந்தவனாய் மனைவியைப் பார்த்தான். விழிகள் இரண்டும் இவனிடம் நிலைக்குற்றியிருக்க, அலைபேசியின் கேமராவுக்கு அருகே நகர்ந்து வந்து இவனை ஆராயும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தாள் சமுத்திரா. மீண்டும் சுயலசலுக்குள் சென்றுவிட்டது இவன் அறிவு.
இன்று சிறிது நேரம் தன் முகம் மாறியதற்கே மனைவி கண்டுகொண்டு தன்னை கவனிக்கிறாள் இதுபோன்று தாம் மனைவியை கவனித்திருக்கிறோமோ? ஆம் என்றது மனது, அதுவும் இந்த நகை தொடர்பான சச்சரவுகளில் இவன் கடுமையாக பேசிவிட்ட பின் அதிகப்படியாய் நடந்துகொண்டோம் என உணர்ந்து அவளை சமாதானம் செய்ய விழைந்திருக்கிறான். வேறு என்றாவது ஊன்றி கவனித்திருக்கிறோமா என்று அவனுக்கு அவனே கேட்டுக்கொண்டான்.
“ஏங்க, எதுவும் முடியலையா உங்களுக்கு? ஏன் முகமெல்லாம் வேர்க்குது?” அதற்குள் பதட்டம் மீகிவிட்டது பெண்ணுக்கு.
“ஹேய், அதெல்லாம் ஒன்னும் இல்லடி. ஃபேன் போடல.” என சொல்லிக்கொண்டே அலைபேசியுடன் எழுந்து சென்று ஸ்விட்ச் போட்டான்.
அலைபேசியில் தெரிந்த இவன் முகத்தை பார்த்துவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தவள், “பாப்பா அம்மாகிட்ட விளையாடிட்டு இருக்கா.” மகளை பார்க்க விழைகிறானோ என்ற எண்ணம் அவளுக்கு.
“நான் பாப்பாவ கேக்கவே இல்லையே.” என்றவனுக்குமே என்னவோ அன்று அவளிடம் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் உண்டான இடைப்பட்ட நாட்களில் இதுபோன்று தோன்றியதாய் மங்கலாய் ஒரு நினைவு எழுந்து அடங்கியது.
“சரி, வேற என்னங்க?”
பெருமூச்சுடன் பார்த்த சமுத்திராவுக்கு அவன் எண்ணம் புரிபடவில்லை. எப்போதும் என்னவென்றால் என்ன என்பது போல் பேசுபவன் இன்று காரணமே இன்றி உரையாடலை நீட்டிக்க விரும்புவது அவள் துளியும் எதிர்பாரா ஒன்று, அவனைக் குறித்த அவளின் கணிப்பிற்கு அப்பாற்பட்டது.
“நீ ஏதாவது சொல்லேன்.” என்றான் இவன் ஒருவிதமான குரலில். விழிகள் மனைவியை ரசிப்பதற்கு பதில் ஆராய்ச்சி செய்தது. இவளை கவனிக்காமல் விட்டுவிட்டோமோ, இன்னும் சிரத்தை எடுத்து பார்த்திருக்க வேண்டுமோ? மனம் தான் தவறவிட்ட செயல்களை எண்ணி வருந்தியது.
“நான் சொல்லனுமா?” அப்போதுதான் சமுத்திராவுக்கு அவனின் மாற்றம் விளங்கியது. என்னவோ அவன் அவனாய் இல்லை போன்றதொரு பிரம்மை. வேறு யாரோ தன் கணவனுக்குள் புகுந்துவிட்டது போல் பார்த்து வைத்தாள்.
“என்ன சமு? வீடியோ க்ளியரா தெரியலையா?” இவன் அதற்கு மேல் மக்காக இருந்தால் காதல் எங்கனம் முளைக்குமாம்.
“ஹான், ஆமாங்க.” தெளிந்துவிட்ட பெண் நெற்றியில் புரண்ட கேசத்தை பின்னால் ஒதுக்குவது போல் செய்து தெளிவுக்கு வந்தவள்,
“முன்னாடியெல்லாம் நான் இங்க வந்தா தேவையில்லாம போன் கூட போடமாட்டீங்க.” என நொடிப்பாய் கேட்க, தலையை கோதிகொண்டவன் அசடு வழியப் பார்த்தான்.
“நீயே எப்போவாச்சும்தான் உன் அம்மா வீட்டுக்கு போவ, அதுலயும் நான் போன் போட்டு தொல்லை பண்ண வேணாம்னு தான் விட்ருவேன்.”
அவன் பதிலில் முகம் சுருக்கியவள், “இப்போ தொல்லை பண்ணலைங்குறீங்களா அப்போ? போன் வைக்குறேனு சொன்னவளை புடிச்சி வச்சிருக்கீங்க.”
மெத்தையில் படுத்துக்கொண்டே தன் அருகிலிருந்த இடத்தை சுட்டிக்காட்டியவன், “இங்க என் பக்கத்துலதான் புடிச்சி வச்சிக்க முடியல, போன்லயாவது புடிச்சி வச்சிக்குறேனே.” என்றதில் இவள் முகம் இனிய அதிர்வில் மலர்ந்து விரிந்தது.
பூரித்த முகமாய் ஒளிர்ந்த மனைவியின் முகம் ஒருவழியாய் அவன் கவனத்தில் பதிந்து நெஞ்சில் அச்சாரமாய் ஒட்டிக்கொள்ள,
“அழகா இருக்க சமு. இப்படியே இரு எப்போதும்.” என்றுவிட, அவள் கருமணிகள் அங்குமிங்குமாய் உருண்டது. தான் என்ன உணர்கிறோம் என்றே புரியாத நிலையில் அவள் முகத்தினில் கலவையான பாவனை வெளிப்பட்டது.
“சமு…” மனைவி அருகில் இல்லாத சமயம் முதல்முறை ஒருவித மோனநிலை உணர்ந்த மகிழ்நனுக்கு அவளை கட்டிக்கொள்ளும் ஆவல், தன்னுடன் கூட்டிக்கொள்ளும் ஆசை.
“இங்க எப்போ வர நீ?” அதனை அவன் கேட்டும்விட, முதல்முறை கணவன் தன்னை தேடுகிறான் என்ற நிதர்சனத்தில் அகமகிழ்ந்து போனாள் சமுத்திரா.
“நீ இருந்தா நல்லாயிருக்கும்.” அவள் பதில் எதிர்பாராமல் இவன் பேச, ஆசையாய் கேட்டுக்கொண்டாள்.
அவள் எதிர்பார்த்த அன்பு கிடைத்துவிட்ட திருப்தியில் அப்போதே கணவனிடம் சென்றுவிட மாட்டோமா, தன்னை தேடி அலையும் அவன் விழிகளை சிறை பிடித்து, அவன் கரங்களுக்குள் நுழைந்துகொண்டு அவன் சுவாசத்தை தன் செவிகளுக்கு கானமாக்கி, அவன் நெஞ்சை மஞ்சமாக்கி, அதன் துடிப்பில் துயில் கொள்ளமாட்டோமா என்ற ஆவல். அந்த நிமிடம் கணவன் தன்னை அலட்சியப்படுத்தியதெல்லாம் நினைவிற்கு வரவேயில்லை. அவனைப் போலவே ஒருவித மோனநிலையில் உச்சகட்ட பரவசத்தில் இருந்தாள் சமுத்திரா.
இதேபோலத்தான் காலையில் என்னுடன் வீட்டிற்கு வா என்று அழைத்தான். அப்போது தோன்றாத உணர்வு ஒன்று இப்போது தோன்றி அவளை கட்டிப்போட்டது போல் இருந்தது.
“உன்னை கட்டிக்கணும் போல இருக்குடி சமு.”
ஆசை இருந்தால் கூட அதனை வார்த்தையாலோ பார்வை பரிமாற்றங்கள் வழியாகவோ எல்லாம் வெளிப்படுத்தாமல் நேரடியாக கட்டிக்கொண்டு களத்தில் குதித்துவிடுபவன் இன்று அது முடியாத பட்சத்தில் மனதினை திறந்து அவளிடம் வெளிப்படையாக பேச, அவளுக்குள் சொல்லமுடியா மாற்றங்கள்.
அவனின் தேடலும் ஆசையும் அவளையும் சுழலுக்குள் இழுத்துச் சென்றது. அவள் இறுக்கங்களை மறக்க வைத்தது, ஆதங்கங்களை ஒதுக்கி வைத்தது, அவனை ரசிக்க வைத்தது.
“என்னமோ பண்ற என்னை.”
அவள் நினைத்தது போல் வேறெதுவும் அவனுள் புகுந்து ஆட்டி வைக்கிறதோ, அவள் பார்த்திராத, பார்க்க விரும்பிய மகிழ்நனாக அவள் எதிரே இருந்தான். இது தற்காலிகமா நிரந்தரமா என்று அவள் அறிவு விழுத்துக்கொண்டு ஆராய்ச்சி நிலைக்குச் செல்ல, அதனை நினைக்க விரும்பாதவளாய் அந்த எண்ணத்தை தட்டி அடக்கி வைத்தாள்.
இந்த இரவை அது தந்த அவன் மாற்றத்தின் முகிழ்வை சுகமாக அனுபவித்தாள். விடியா இரவாக அதனை நீட்டிக்க இருவருக்குமே ஆசை. பொக்கிஷமாக சேமிக்க நினைவுகள் இல்லை என்றவளின் நினைவடுக்குகளில் முதல் பாகமாய் இந்த இரவு பதிந்து போனது.
பெற்று வைத்திருந்த பிள்ளை சிறிது நேரத்தில் உறக்கம் என்று வந்து இவர்களை நிகழ்வுக்கு கொண்டுவந்தாள். மோகவலை அறுபட்டு இருவரும் தவிப்பாய் சங்கடமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள, இன்முகமாக இரவு வணக்கத்துடன் விடைபெற்றான் மகிழ்நன்.