அவரை ஏறிட்டு பார்த்தவளுக்கு என்ன சொல்வதென புரியவில்லை. இத்தனை நேரம் ஆக்கிரமித்திருந்த அழுத்தங்கள் பின்சென்றுவிட, கலக்கமாய் பார்த்த தந்தையிடம், “இங்க வரணும்னு தோணுச்சு வந்துட்டேன் ப்பா. உமையாள் அப்பா பஸ் ஏத்திவிட்டாங்க.” என்றவளை விட்டுவிட்டு தன் மனைவியிடம் பாய்ந்தார் மனிதர்.
“என்னமாச்சு அவளை ஏத்திவிட்டியா நீ? விஷேஷ நாள் அதுவுமா இந்த மாதிரி வர பொண்ணு இல்லை சமு, மாப்பிள்ளையும் தனியா அனுப்பியிருக்க மாட்டாரு.”
“இதென்ன எங்கேயோ போற மாரியாத்தா என் மேல ஏறாத்தாங்குற மாதிரி என்கிட்ட எகிறுறீங்க. நானும் உங்களோடதான இருக்கேன். எனக்கும் ஒன்னும் புரியல.” கணவரைக் கடிந்தவர் பேத்தியோடு சமையலறை சென்று அவளுக்கு கொறிக்க கொடுத்து மகளுக்கும் எடுத்து வந்தார்.
அய்யாவு மகளிடம் என்னவோ கேட்டுக்கொண்டிருக்க, “தள்ளுங்க. அவ செத்த மூச்சு விட்டுக்கட்டும். அவ வீட்டுக்குதான வந்திருக்கா உடனே விசாரணை போடணுமா?” அவரை அதட்டி மகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தார்.
ஆசுவாசமாக உணர்ந்த சமுத்திரா தண்ணீர் பருகிவிட்டு மகளைப் பார்க்க, அவள் தாத்தா தாத்தா என என்னவோ சொல்லிக்கொண்டிருந்தாள்.
“என்ன சாப்புடுறடி? இனிமேதான் வடைக்கு ஊற போட போறேன், என்ன வடை வேணும் உனக்கு?” எனக் கேட்க, கண்ணீர் வரும்போல் ஆனது சமுத்திராவுக்கு.
“அழுவாம என்ன வேணும்னு சொல்லு. காலையிலேயே கிளம்பி நானும் அப்போவோட வயலுக்கு போயிட்டு இப்போதான் வந்தோம். இனிமேதான் என்ன சமையல்னு முடிவு பண்ணனும். வந்து என்ன வேணும்னு பார்த்து சொல்லு.” என்று மகளை கையோடு உள்ளே அழைத்துச் சென்றவர், மகளிடம் பேச்சுக் கொடுத்து என்ன நடந்தது என்று விஷயத்தை கறந்துவிட்டார்.
“அம்மாடி சமு மாப்பிள்ளை கூப்பிடுறாரு பாரு.” அய்யாவுவின் குரலில் சமுத்திரா அம்மாவைப் பார்க்க, “வீட்டுக்கு வந்துட்டீங்கன்னு போய் சொல்லுடி. கவலை இருக்கும்ல அவருக்கும்.” என்று அனுப்பி வைத்தார்.
தயக்கத்துடன் ஹாலிற்கு வந்து அலைபேசி அழைப்பை ஏற்றவள் நகர்ந்து சென்று, “வீட்டுக்கு வந்துட்டோம்.” என்று அவளாகவே சொல்ல, செறுமும் சத்தமும் அதனைத் தொடர்ந்து வேக மூச்சுகளும் கேட்க இவள் தவிப்பாக உணர்ந்தாள். என்றுமே தயக்கம் என்று எங்கும் தயங்கி நின்றதில்லை அவள் கணவன். இன்று என்னவோ தான் அதிகம் பேசி அவனை தவிக்க வைத்துவிட்டோமோ என்றுகூட ஒருநொடி தோன்றிவிட்டது.
“என்னங்க?”
“ஹான்… சமு. இங்க அவ்வளவு சமைச்சி வச்சிட்டு சாப்பிடாம கூட கிளம்பிட்ட. சாப்பிட்டியா நீ?” மகளை முன்னிலைப்படுத்தாமல் முதல்முறையாய் மனைவியின் நலம் விசாரிக்கிறான். பெண்ணும் பட்டென்று புரிந்துகொண்டது. அழுகை வரும்போல் ஆனது.
“சமு…”
“…”
“சரி ரெஸ்ட் எடு. ரொம்ப யோசிச்சு கஷ்டப்படுத்திக்காத. உடம்பை பாத்துக்கோ. நான் வைக்கவா?” என்று அனுமதி வேறு வேண்ட, பட்டென்று அழைப்பை துண்டித்துவிட்டாள் சமுத்திரா. என்னவோ தொண்டையை அடைக்கிறது, பேச முடியவில்லை. கணவனின் குரல் காதிற்குள் ரீங்காரமாய் சுற்ற மனதிற்குள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடினான்.
‘என்ன இப்படி பேசிட்டா…’ என முனகிய பத்மா நிமிர்ந்து பார்க்க, ஆளுக்கு ஒரு மூலையில் அமர்ந்திருந்தனர்.
“யாரும் சாப்பிட வரலையா?”
“வாழ வந்த பொண்ணு மன வருத்தத்தோட பொறந்த வீடு போயிருக்கு, விருந்து சாப்பிட முடியுமா இப்போ?” கந்தவேல் கடிந்து கொள்ள,
“எனக்கும் விருந்து சாப்பிடணும்னு ஆசை இல்லை. கஷ்டப்பட்டு சமைச்சி வச்சிட்டு போயிருக்கா அதை வீணடிக்க முடியுமா? சாமிக்கு படையல் போட்டது வேற அப்படியே இருக்கு.” என்றார் பத்மா.
“இவ்ளோ சமைச்சிட்டு ஒருவாய் சாப்பிடாம கிளம்பிடுச்சு, நமக்கு மட்டும் எப்படி இறங்கும்.” என்றவருக்கு மனதில் சஞ்சலம்.
குடும்பம் சீராக செல்கிறது என்று எண்ணிக்கொண்டிருந்தவருக்கு அப்படியில்லை என்று புரிய வைத்துச் சென்றிருந்தாள் மருமகள்.
வாசலிலிருந்து வரும் இளைய மகனை உக்கிரமாகப் பார்த்தவர், “சமுத்திராவுக்கு இங்க எல்லாம் வசதிபடுதா, என்ன தேவைன்னு எல்லாம் நீதானடா பாத்திருக்கணும்? மனசுல எவ்ளோ இருந்தா இன்னைக்கு இப்படி பேசியிருக்கும். என்னவோ நகைன்னு சொல்லுச்சே என்ன அது?” என்று கந்தவேல் மகிழ்நனை நிறுத்த, அனைவரின் பார்வையும் அவனிடம் சென்றது.
என்ன சொல்வது என்று அவன் யோசிக்க, எழுந்துவந்த பத்மா,
“வேதாவுக்குதான் இப்போ நகை வாங்குனோம். அது புடிக்கலையா அவளுக்கு?”
“ப்ச்… ம்மா அதெல்லாம் இல்லை.”
“வேற என்ன அப்போ?” என்று நெருக்க, பார்வை தன்னால் செழியனிடம் சென்று இவர்களிடம் வந்தது.
“அது எனக்கும் அவளுக்கும் இருக்குற பிரச்சனை, அவ ஒன்னு கேட்டா நான் செய்யல. அதை நான் பாத்துக்குறேன். நீங்க எல்லாரும் சாப்பிடுங்க. அவ சேஃபா வீட்டுக்கு போயிட்டா.” என நகரப் பார்த்தான்.
“அவன்கிட்ட பேசு செழியா, எடுத்து சொல்லு… பத்மா நீயும் இனி கவனமா இரு. இப்போ ஏதோ மனசு சரியில்லைன்னு அங்க போயிருக்கு. திரும்பி வந்ததும் குத்துற மாதிரி பேசாத. அவங்கவங்க விருப்பத்துக்கு விட்டுரு.” என்றுவிட்டு அவர் அறைக்குச் செல்ல,
“அவங்கவங்க விருப்பத்துக்கு விடுறதுக்கு இதென்ன சத்திரமா? வீடு. இவ்வளவு பேசிட்டு போயிட்டா, எதுவும் கேக்காம எப்படி இருக்க?” என்றபடி பின்தொடர்ந்தார் பத்மா.
“வீடு அமைதியா இருக்கணுமா வேணாமா? இவ்வளவு நாள் சமுத்திரா பாத்துக்கவும் எல்லாம் அமைதியா தெரிஞ்சிச்சு. இப்போ அந்த பொண்ணுக்கே அமைதி இல்லைனு சொல்லிடுச்சு. ஒரு மருமகளை அவங்க விருப்பத்துக்கு விட்டுட்டு இன்னொரு பொண்ணை நம்ம வசதிக்கு வளைச்ச மாதிரி ஆகிட்டு. சம்மந்தி வீட்ல என்ன நினைப்பாங்க, இல்லை மகிழ்தான் என்ன நினைப்பான். தன்னோட பொண்டாட்டியை மட்டும் வேலை வாங்குறாங்கன்னு நினைக்க மாட்டான்.”
“இதுவரைக்கும் நினைக்கலைனாலும் இனிமே நினைக்கலாம்ல. பசங்க தலையெடுத்ததும் நான் கொஞ்சம் ஒதுங்கிட்டேன், எல்லாம் பாத்துப்பாங்கனு இருந்துட்டேன். அவனும் சரியா பாக்கல நீயும் விட்டுட்ட. சமுத்திரா கேக்குற மாதிரி நன்மதியை எதுவும் சொல்ல மாட்டேங்குற எல்லா வேலையும் சின்ன மருமககிட்டேயே வாங்கிக்குற.”
“வராதுன்னா அவங்களுக்கு மட்டுமாவது செஞ்சிக்க சொல்லு. சமுத்திராவே எல்லாம் செய்யணும்னு சொல்லாத.”
“குடும்பத்தை பிரிக்க சொல்றீங்களா? நானே என் ரெண்டு பசங்களும் என்கூடவே இருக்காங்கன்னு இருக்கேன்.”
“அது சரியா வரலையே.. ஒண்ணா இருக்கணும்னு நாம நினைச்சா மட்டும் போதுமா? வாழ வந்த பொண்ணுங்க நினைக்கணும். அதுதான் நன்மதிகிட்டேயே நேரா சொல்லிடுச்சே சமு, இனி மாறுதான்னு பாப்போம். இல்லைனா மகிழ்கிட்ட சொல்லி மேல் வேலைக்கு ஆள் போட வேண்டியதுதான்.” என்றவர் கண்களை மூடி அமர்ந்துவிட, பத்மாவும் சோர்வாய் அருகில் அமர்ந்தார்.
“எதிர்த்து பேசாத பொண்ணா இருக்குனு சின்ன மருமக மேல நாம கொஞ்சம் அலட்சியமா இருந்துட்டோம்ல பத்மா? இன்னும் கவனிச்சிருக்கணுமோ?”
“பெருசு பட்டுபட்டுனு சொல்லிடும், இவ ஒன்னும் சொல்லாம செய்யுறாங்கவும் நானும் அப்படியே பழகிட்டேன். இனிமே யாரா இருந்தாலும் பார்த்து இருந்துக்கணும். வயசு போன காலத்துல இப்படி மருமகளுங்ககிட்ட அரைபட வேண்டியதிருக்கு.” நிதர்சனத்தை ஒத்துக்கொண்ட பாவனை பத்மாவிடம்.
“பேசுறதை பார்த்தா வேலை செய்யுறதுல கஷ்டம் மாதிரி தெரியல. மதிக்கலைனு நினைக்குது. என்ன செய்யுறதா இருந்தாலும் இனிமே ரெண்டு மருமககிட்டேயும் கலந்துக்கிட்டு செய். தன்னிச்சையா முடிவு பண்ணாத, நீதான் அவங்களை சரியா நடத்தணும்.” என்றார் கந்தவேல். செழியனும் நன்மதியும் கூட இதே பேச்சில் இருந்தனர்.
அறையில் தனித்து நின்றிருந்த மகிழ்நனின் பார்வை அவர்கள் கட்டிலுக்கு நேரே மாட்டப்பட்டிருந்த அவர்களின் திருமணப் புகைப்படத்தில் நிலைத்திருந்தது. பெற்றவர்கள் பார்த்து முடித்து வைத்த திருமணம். இருவருமே முதல் சந்திப்பில் ஈர்க்கப்பட்டு ஆசை வளர்த்துக்கொண்டனர். ஆனால் அதனை மற்றவருக்கு தெரியப்படுத்தினார்களே? கேள்விக்குறியே? இயல்பாக சிறு சிறு தயக்கத்துடன் தாம்பத்யத்திற்குள் நுழைந்தவர்களுக்கு வரமாய் முதல் மாதத்திலேயே தங்கிவிட்டாள் உமையாள். அதன்பின் கவனம் குழந்தையின் வரவை எதிர்நோக்கியும் அதனை வளர்க்கும் பொறுப்பிலும் சென்றது. இயல்பாக கூட்டுக்குடும்பத்தில் அவர்கள் வாழ்வு ஒன்றிப்போய்விட்டதாக எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு இன்றைய மனைவியின் பரிமாணம் நெற்றிப்பொட்டில் அறைந்தது போலிருந்தது. எங்கேயோ பலமாக தவறிவிட்டோம் என்று புரிய அவள் அடுக்கிய குற்றச்சாட்டுகளை அசைபோட்டபடி அப்படியே அமர்ந்துவிட்டான்.
மதியம் போல உண்ண அழைக்க பசியின் தாக்கத்தில் சென்று அமர்ந்தான். சமுத்திரா சமைத்து வைத்திருந்ததை பத்மா தனக்கு போட்டுக்கொண்டு அவனுக்கும் பரிமாறினார். மற்றவர்கள் அமைதியாக சாப்பிட இவனுக்கு உணவு தொண்டையில் இறங்குவேனா என சண்டித்தனம் செய்தது. முள் குத்துவது போல் வலிக்க, அவளின் மனகிலேசம் தன்னை தொடர்வது போல் ஒரு பிரம்மை. ருசியறிந்து உண்பவன் இன்று என்ன இருக்கிறது என்றுகூட கவனியாமல் வயிறு நிறையும் வரை என்னவோ சாப்பிட்டு எழுந்தான்.
சிறிது நேரம் சென்று செழியன் அவனிடம் பேசப்போக, “நான் பாத்துக்குறேன் விடு.” என அவனை பேசவே விடவில்லை மகிழ்நன். என்னவோ தனக்கும் தன் மனைவிக்கும் இடையில் இருக்கும் பிணக்கில் மற்றவர் கருத்து சொல்ல வருவதே இடையூறாய் தெரிந்தது.
“இல்லை மகிழ்…”
“பொது விஷயத்துல பிரச்சனை வராம இருக்க என்ன பண்ணலாம்னு பாக்கலாம். இப்போ என்னால யோசிக்க முடியல, சமு இப்படி போனதை நம்பவும் முடியல. என்னை தனியா விடு.” என்றவனை மேலும் வற்பறுத்த விரும்பாமல் செழியன் விடைபெற,
“செழியா சமு கோவத்துல உமையாள் என் பொண்ணுன்னு சொல்லிட்டா… நீயும் அண்ணியும் எதுவும் நினைச்சுகாதீங்க, அவ அப்படி பிரிச்சிப்பாக்குற பொண்ணு இல்லை. உமையாள் உங்களுக்கும் பொண்ணுதான்…”
குழந்தையின்மையை குத்திக்காட்டியதாய் எண்ணி வருந்துகிறார்களோ என்ற மகிழ்நனின் தவிப்பினைப் பார்த்து இலகுவாக சிரித்தவன், “நான் பாத்துக்குறேன்டா… நீயும் சமுத்திராகிட்ட பேசு, சீக்கிரம் போய் கூட்டிட்டு வா.”
மகிழ்நன் சொன்னதை செழியன் தன் மனைவியிடம் வந்து சொல்ல, “எனக்கு சமுவை பாக்கணும்.” என்றாள் நன்மதி.
எதற்காக இருக்கும் என்ற கணிப்பில் செழியன் மறுக்க, “யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லைனாலும் நம்மளால அவ கஷ்டப்பட்டிருக்கான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அதுக்கு பதில் சொல்லறது நம்ம கடமை. என் மேலையும் தப்பு இருக்கு.” என்று சொல்லி அடுத்து வந்த பள்ளி வேலை நாட்களில் ஒருநாள் மதியம் விடுப்பு எடுத்துக்கொண்டு சமுத்திராவை பார்க்க சென்றுவிட்டாள்.