விரல்கள் நடுங்க உள்ளங்கைக்குள் அதனை மடக்கி, அடக்க முயன்றுகொண்டிருந்தாள் சமுத்திரா. உள்ளம் உதறல் எடுத்தது. என்ன பேசினோம் எப்படி பேசினோம் என்று மனதிற்குள் ஓட்டிப்பார்த்தவளுக்கு தானா இப்படி பேசியது என்றெண்ணம் அச்சமும் ஆச்சர்யமும் கொடுத்தது. அதோடு அத்தனை வருத்தம், இப்படி பேசும்படி ஆகிவிட்டதே. பேச வைத்துவிட்டார்களே. சச்சரவுகளின்றிய ஒரு வாழ்வை வேண்டியவளே சர்ச்சையாக மாற வேண்டிய நிலையை அறவே வெறுத்தாள்.
கலங்கித் துடிக்கும் கண்களை அழுந்த தேய்த்துவிட்டு முகம் மறைத்த முடியை செவிக்கு பின் நகர்த்தும் சமயம் எதிரே நிழலாட, நிமிர்ந்தாள் சமுத்திரா. அவளையே பார்த்தவண்ணம் நுழைந்த மகிழ்நன் எதுவும் பேசாமல் அவள் முன்னே அழுத்தமாக நிற்க, தானாக எழுந்து நின்றாள் மனைவி.
“பேசி முடிச்சிட்டியா சமு?” நிதானமாக அவன் கேட்க, உதடு துடிக்க பற்களால் அதனை இழுத்துப் பிடித்து வைத்திருந்தாள்.
“குடும்பமா சேர்ந்து கொடுமை பண்ணுன மாதிரி நீ நினைக்குற அளவுக்குதான் நாம வாழ்ந்திருக்கோம்ல? அன்னைக்கு என்னை சொன்னப்போ கூட என் மேலதான் உனக்கு கோவம்னு இருந்தேன், ஆனா இன்னைக்கு மொத்த பேரையும் நிக்க வச்சு பேசிட்டீல்ல.” என்றவனை நேர்கொண்டு பார்த்தவள்,
“அந்த மொத்த பேர் முன்னாடிதான் நீங்களும் பேசுனீங்க.” வெளியே பேசிய போது இருந்த வேகம் சற்று குறைந்திருந்தது. இருப்பினும் அவன் பேச்சு அவளை தூண்டுவதாய் இருக்க, பதில் கொடுக்காமல் இருக்க முடியவில்லை.
“தேவையில்லாம பாப்பாவை கைநீட்டுன்னா பாத்துட்டு இருக்கணுமா? அதுவும் என்ன பேச்சு? உனக்கு செய்ய இஷ்டம் இல்லைனா என்கிட்ட சொல்லியிருக்கணும் அதை விட்டுட்டு செஞ்சிட்டு சொல்லி காமிச்சிட்ட… எதா இருந்தாலும் என்கிட்ட சொல்லுன்னு ஆரம்பத்திலேயே சொல்லியிருக்கேன்ல உனக்கு.”
“சொல்லி… சொல்லி மட்டும் என்ன ஆகப்போகுதுங்க? இப்போ சொன்னேனே ஏதாச்சு புரிஞ்சுதா உங்களுக்கு.” சமுத்திராவின் ஆதங்கம் மீண்டும் வேகமெடுக்க, நெற்றியை பிடித்துவிட்ட மகிழ்நன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டினான்.
“உங்களுக்கு உங்களை தொந்தரவு பண்ணாம நான் குடும்பத்தை அனுசரிச்சு போயிடனும். வீட்ல எந்த பிரச்சனையும் வராம பாத்துக்கணும், நேரத்துக்கு எல்லாம் செஞ்சிடணும், வீட்டுக்கு வந்துட்டா எல்லாம் ஸ்மூத்தா இருக்கணும். அதுக்கு பின்னாடி நான் எவ்வளவு மெனெக்கெடுறேன்னு எல்லாம் உங்களுக்கு கவலையில்லை.”
“என்ன கவலையில்லை? உனக்கு மட்டும்தான் அக்கறைங்குற மாதிரி பேசாத.”
“என் மேல என்னங்க அக்கறை காட்டிட்டீங்க? எல்லாம் செய்யுறாளே இவளுக்கு ஒருநாள் ரெஸ்ட் கொடுப்போம், வீட்லையே இருக்கா வெளில கூட்டிட்டு போவோம், புடிச்சதை வாங்கிக்கொடுப்போம், சும்மா சிரிச்சு பேசி கை கோர்த்து போவோம்னு னு ஏதாச்சு செஞ்சிருக்கீங்களா? எதுக்கு எடுத்தாலும் எல்லாரோடையும் சேர்ந்து போகணும்னு சொல்லி சொல்லி எனக்குன்னு ஆசைப்படுறதையே மறந்துட்டேன். உங்களுக்காக உங்களுக்காகனு பார்த்து பார்த்து என்னையே நான் இழந்துட்டேனோன்னு பயமா இருக்குங்க…” எனும் போதே அவள் குரல் நடுங்க, அவன் மார்புச் சட்டையை பிடித்துவிட்டாள் சமுத்திரா.
“வெளில இருக்காங்களே அவங்க எல்லாம் யாருங்க? அவங்க என்ன வேணும் எனக்கு? ஹான்? நான் எதுக்கு அவங்களுக்கு செய்யணும்?” என கேட்டுக்கொண்டே அழுகையுடன் அவன் சட்டையைப் பிடித்து உலுக்கியவள்,
“உங்களால… உங்களால தான் அவங்க எனக்கு சொந்தம், உங்களுக்காக தான் எல்லாத்தையும் செஞ்சேன். என் புருஷனோட அப்பா அம்மா, என் புருஷனோட அண்ணன் அண்ணி, என் புருஷனுக்கு எல்லாரோடையும் இருக்கத்தான் புடிச்சிருக்குனு உங்க ஆசைக்காக உங்களுக்காகதான் எல்லாம் செஞ்சேன். உங்களை கொண்டுதான் அவங்க எனக்கு… நீங்கதான எனக்கு எல்லாமே…”
“ஆனா நீங்க என்ன பண்ணுனீங்க? சின்ன சின்ன விஷயம் கூட என்கிட்ட கலந்துக்கல. நீங்களா எனக்கும் சேர்த்து எல்லா முடிவும் எடுத்தீங்க. சந்தோஷமா ஏத்துக்குட்டேன். ஆனா என்னோட சின்ன ஆசை நிராசையா போனப்போ கூட என் பக்கத்துல உக்காந்து என்னை உங்க நெஞ்சுல சாய்ச்சிகிட்டு உங்க மனசை எனக்கு புரிய வைக்க முடியல, என் மனசையும் உங்களால புரிஞ்சிக்க முடியல. ஏங்க? இப்போ நானும் கேக்குறேன் என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கோம் நாம?”
“அன்னைக்கு செழியன் அத்தானையும் அக்காவையும் வெளில பாத்தேன்னு சொல்றேன், அப்போகூட என்கூட இதுமாதிரி தனியா போகணும்னு உங்களுக்கு தோணவே இல்லையாங்க? எனக்கு புடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர்றீங்க ஆனா அதை என் கையில கொடுக்க கூட உங்களுக்கு கஷ்டமா இருக்கு. மடச்சி நான் அதை கூட பொருட்படுத்தாம ஆசையா சாப்பிட்டேங்க. பதிலுக்கு உங்களுக்கு புடிச்சதை செஞ்சுக் கொடுத்தேன், அதுக்கு ஒரு சின்ன பாராட்டு இல்லை ஒரு முத்தம் அதுகூட கொடுக்க மாட்டீங்களாங்க? யாருக்காக நான் செய்யணும் அப்போ?”
“வீட்ல இருக்குற டேபிள், சேர் மாதிரி உங்களை சொகுசா வச்சிக்குற ஒரு உயிரில்லாத ஜீவன்னு என்னை நினைச்சிட்டீங்களா? யாரும் எப்படியும் போகட்டும் என்னோட சொகுசுக்கு பங்கம் வந்துடக்கூடாது, என்னால குடும்பத்துக்குள்ள பிரச்சனை வந்துடக்கூடாதுனு தான் இருக்கீங்க நீங்க.”
“சமு…” வாயடைத்து நின்றவன் தன் நெஞ்சில் இருக்கும் அவள் கைமேல் தன் கைவைத்து அழுத்த,
“இதோ இந்த சமையல்கட்டை கட்டிட்டு அழறேனே அதுலகூட என்னோட விருப்பம் பாத்து நான் சமைச்சிக்கல. எல்லாருக்கும் எது செட் ஆகும்னு பார்த்து என்னோடதை ஒதுக்கி வச்சிட்டுதான் எல்லாரையும் திருப்தியா பாத்துக்கணும்னு செய்யுறேன். கடைசியில எனக்குன்னு என்ன இருக்குனு நினைக்க வச்சிட்டீங்க.”
“சமு சமு… இங்க பாரு. என்ன இல்லை உனக்கு? என்னோடது எல்லாம் உனக்குதான்.” அவளின் தவிப்பு அவனை தாக்கியிருக்க வேண்டும் அவள் முகத்தை கையிலேந்திக் கொண்டு தவிப்பாக சொல்ல, ஆங்காரமாக அவனை உதறித் தள்ளினாள் மனைவி.
“இன்னைக்கு வரைக்கும் நீங்க எவ்வளவு சம்பளம் வாங்குறீங்க, அதுல எவ்வளவு செலவு பண்றீங்க, சேமிக்குறீங்க எதுவுமே எனக்குத் தெரியாதுங்க. இதுல எல்லாம் எனக்காம். வேடிக்கையா இல்லை.” என்று சொல்லி வாய் விட்டு சிரிக்க, அதிர்ந்து பார்த்தான் மகிழ்நன்.
“நகைக்கடையில் வேதாவுக்கு நீங்க நகை வாங்குனது கூட எனக்கு பிரச்சனை இல்லைங்க, அதை அங்கேயே என்கிட்ட ஒருவார்த்தை சொல்லிட்டு செஞ்சா என் மனசு கொஞ்சம் ஆறி இருக்கும்ல. யாருக்கோ சொல்ற மாதிரி நைட் தூங்கப் போறப்போ போனாப்போகுதுனு ஒரு சமாதானம் சொல்றீங்க.” கோடாக விழுந்த கண்ணீர் திடுமென வெள்ளமெடுத்து கீழிறங்கியது.
“சமு…”
“அன்னைக்கு உங்க அத்தைங்களுக்கு வரிசை வைக்க போகணும்னு மாமா சொல்றாங்க, உங்க அண்ணன் உடனே மதி அக்கா முகத்தை பாத்தாரு. அவங்க வேண்டாம்னு தலையாட்டவும் இவரும் உடனே முடியாதுனு சொல்லிட்டாரு. நான் உங்களை பாத்தேங்க, நீங்க என்னை பாக்கவே இல்லை என் பக்கம் திரும்பவே இல்லை நீங்க…” உடைந்து போனது அவள் குரல். அழுகைக்கு நடுவே கரகரப்பு வர தொண்டையை செருமிக் கொண்டவள்,
“எனக்கும் சேர்த்து முடிவெடுத்து போயிட்டு வரோம்னு சொன்ன நீங்க தனியா நம்ம ரூமுக்கு வந்ததுக்கு அப்புறம் கூட இப்படி அப்பாகிட்ட சொல்லிட்டேன் போயிட்டு வந்துரலாம் சமுன்னு ஒரு வார்த்தை சொல்லல. அன்னைக்கு புரிஞ்சிது நான் உங்க மனசுல எந்த இடத்துல இருக்கேன்னு. என்னை மனுஷியா கூட மதிக்க முடியல உங்களால அப்புறம் எப்படி பொண்டாட்டியை சமமா நடத்த வரும்?”
“சமு…” தவித்துப் போனவன் தலையிறக்கத்தை முதல் முறையாக உணர்ந்தான்.
“எனக்கு தேவையானது எல்லாம் நான் கேக்குறதுக்கு முன்னாடியே செஞ்சிடுறீங்கன்னு கர்வமா நினைச்சிட்டு இருந்தேங்க. ஆனா சாப்பாடு, உடுப்பு, தூக்கம், தங்க இடம் இந்த மாதிரியான அடிப்படை தேவையை தான் நிறைவேத்தி இருக்கீங்க. என்ன வேணுமோ வாங்கிக்கோன்னு பீரோவுல பணம் வச்ச நீங்க அந்த பணத்தை எடுத்துட்டு போய் ஆசையா ஒரு முழம் பூ எனக்குன்னு எப்போ வாங்கிக் கொடுத்தீங்க? எல்லாமே பொதுன்னு அத்தைகிட்ட கொடுத்து அதுல பங்கு போட்டு எடுத்துக்குறதுல என்ன உரிமை வந்துடும்?” என்று நிறுத்த, அவளை நெருங்க முடியாமல் எதுவோ தடுத்தது மகிழ்நனை.
“சும்மா இருக்கேன்னு சொல்றீங்க அன்னைக்கு… நான் எதுவும் செய்யாமதான் பசிக்குறதுக்கு முன்னாடியே உங்க தட்டுல சாப்பாடு வருதா, வேலைக்கு கிளம்புற நேரம் எல்லாம் கைக்கு எட்டுற தூரத்துல கிடைக்குதா இல்லை நினைச்ச நேரம் தூங்கி எழ முடியுதா? இதுவே நானும் உங்களை மாதிரி வேலைக்கு போயிருந்தா என்னை மதிச்சிருப்பீங்களோ? உங்க அண்ணியை அப்படித்தானா மதிக்குறீங்க?” என்று கேட்டு நிறுத்த,
“ஏய் சமு… என்ன நீ இப்படி பேசுற?”
“வேற எப்படி பேசணும்? நீங்க வேற எப்படி நடத்துனீங்க? நானும் மனுஷிதான. என்னால எவ்வளவு செய்ய முடியும் என்ன செய்ய முடியும்னு ஒருநாளாச்சும் யோசிச்சி பார்த்திருக்கீங்களா? அன்னைக்கு கொஞ்ச நேரம் கூட பாப்பாவை உங்களால சமாளிக்க முடியல, நான் அவளையும் சமாளிச்சு வீட்டையும் பாத்துக்குறேனே அனுசரணையா இருப்போம்னு இருந்திருக்கீங்களா? ஒருநாள் எனக்கு ஏத்த மாதிரி எனக்கு புடிச்சதை செஞ்சுக்கோனு சொல்லி இருக்கீங்களா? உங்களுக்கு சமமா நடத்திருக்கீங்களா? சர்வாதிகாரி மாதிரி முடிவெடுத்துட்டு அதுலதான் குடும்ப மானம் அடங்கி இருக்குற மாதிரி என்னை அதை ஒத்துக்க சொல்லுவீங்க. நானும் அதை யோசிக்காம தலையாட்டியிருக்கேன்.
என்னை சொல்லணும் முதல்ல. நானே எதையும் எதிர்பார்க்காம செஞ்சி செஞ்சிதான் இங்க வந்து நிக்குறேன். இவ என்ன சொல்லிடப்போறா? இவ எல்லாம் பாத்துப்பான்னு வீட்டு சமையல் பொறுப்பை கொடுத்த மாதிரி மத்த பொறுப்பை கொடுக்க உங்களுக்கு மனசு வரலைல.
புருஷன்னு நான் நினைச்சி அடிமையா கிடந்த மாதிரி பொண்டாட்டின்னு கொஞ்சம் நீங்க மதிச்சிருந்தா எல்லாருக்கும் என்னையும் புரிஞ்சிருக்குமோ என்னவோ… நீங்களே புரிஞ்சிக்கல நீங்களே உங்களுக்கு ஏத்த மாதிரி வளைச்சிக்கிட்டிங்க அப்புறம் மத்தவங்க எப்படி இருப்பாங்க. இன்னைக்கு நீங்க என்னை நடத்துறதை பாத்துதான உமையாள் வளருவா? அவ யோசிக்க மாட்டாளா பெரியம்மா எப்படி இருக்காங்க நம்ம அம்மா மட்டும் ஏன் இப்படி இருக்காங்கன்னு?”
ஓய்ந்து போனவளாய் மெத்தையில் பொத்தென்று அமர்ந்தவள் முகத்தை கைகளில் தாங்கிக்கொண்டு முட்டியில் புதைத்துக்கொள்ள, மெல்ல அவளிடம் வந்து அவள் தலையில் கைவைத்தான் மகிழ்நன்.
அவனிடம் பிடித்த அவன் வாசத்தையும் அவன் அருகாமையும் ஏற்க முடியாமல் போன தற்சமயத்தை எண்ணி தனக்குள்ளேயே அழுத்தம் கொண்டவளாய் வெடித்து பின் துவண்டுவிட்டாள்.
அத்தனை நேரம் திடமாக நின்ற மகிழ்நனுக்கு அது பேரிடியாக விழுந்தது. மூன்று வருடம் குடும்பம் நடத்திய மனைவியின் கையை பிடிக்கவே அத்தனை தயக்கம் வந்து ஒட்டிக்கொண்டது. அதற்காக இத்தனை பேசிய பின்னும் தான் விலகி நிற்பதா என்று அவள் கையை பிடித்து எழுப்ப முயல, அவளே எழுந்துகொண்டவள் முகத்தை அழுந்தத் துடைத்து,
“இதுக்கு மேல என்னால முடியாது. ரொம்ப டையர்டா இருக்கு. நான் அம்மாகிட்ட போகணும்.” என்றபடியே அவள் பையை எடுத்து உமையாள் துணியை அடுக்கப்போக, அதை தடுப்பது போல் பிடித்துக்கொண்டவன்,
“முதல்ல சாப்பிடு, கொஞ்சம் நேரம் தூங்கு. அப்புறம் எதுனாலும் பேசிக்கலாம் சமு.”
“என்னை விடுங்க. எனக்கு ஒரு மாதிரி இருக்கு.” என்றதையே ஒருமாதிரி தான் சொன்னாள்.
“சமு…”
“மூச்சு முட்டுது எனக்கு.” என்ற போது அவள் குரலே உள்ளே போயிருந்தது. சளி கட்டி தொண்டையெல்லாம் வறண்டது போல் எரிந்தது.
“சரி போகலாம். நானே கொண்டு வந்து விடுறேன்.” என்றதற்கு நிமிர்ந்து ஒருபார்வை பார்த்தவள்,
“இத்தனையும் பொறுத்துகிட்டு நான் இங்க இருக்கணும்னு இந்த நிமிஷம் வரைக்கும் நீங்க நினைக்குறீங்கல்ல? அதேமாதிரி என் அம்மா என்ன சொன்னாலும் எனக்காக அவங்களை சமாளிக்க முடியாதா? அதுக்கு பாய்ஞ்சிட்டு வந்தீங்க. அது சரின்னா, இன்னைக்கு நான் பேசுனதும் சரிதாங்க…”
“சமு…”
“தினம் தனியா பஸ்ல போயிதான் பி.ஜி. படிச்சேன். எனக்கும் போகத் தெரியுங்க. இனிமேலும் குடும்பத்துக்காகன்னு வீட்டை காட்டி காட்டி என்னையே தொலைய வச்சிடாதீங்க. என் அம்மா வீட்டுக்கு தனியா என்னால போயிக்க முடியும்.” என்று அழுத்தமாக சொன்னவள் பையில் பிள்ளைக்கு தேவையானதை எடுத்துத் திணிக்க,
“உன்னால முடியாதுனு சொல்லலை சமு.”
“வாய்ப்பு கிடைக்கலைனு சொல்லுங்க.”
நறுக்நறுக்கென்று பேசியவளுக்குள் ஆவி எதுவும் புகுந்துவிட்டதோ என்ற எண்ணம் கூட அவனுக்கு வந்து போனது. அத்தனை புதிதாய் தெரிந்தாள் மனைவி. அவளின் குற்றச்சாட்டுக்களை அசைபோட்டபடி அவளை தடுத்து நிறுத்தும் வழியறியாது மகிழ்நன் தோற்றுப்போனவனாய் நிற்க, யாரின் பேச்சையும் கேட்காமல் உமையாளை தூக்கிக்கொண்டு அம்மா வீட்டிற்கு கிளம்பிவிட்டாள் சமுத்திரா.
தனியாக செல்லக்கூடாது என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் கேட்கவில்லை. அண்ணனும் தம்பியும் அவள் பேருந்து ஏறும் வரை பின்னோடே வந்தனர். மகிழ்நன் பேருந்தில் ஏறி அவளுக்கு பின் இருக்கையில் அமரப்போக, திரும்பி அவள் பார்த்த ஒரு பார்வையில் பேருந்திலிருந்து இறங்கியேவிட்டான். அவள் தனியாக செல்கிறாள் என்று தவித்தவனுக்கு தெரியவில்லை அம்போவென்று தனித்து விடப்பட்டது அவன்தான் என.
வீடே புரட்டிப்போட்டது போல் மாறிவிட, மகிழ்நன் வருவான் என்று எதிர்பார்த்து தன் வீட்டில் காத்திருந்த கலைவாணியின் கணிப்புக்கு மாற்றாய் அவ்வாரத்தின் ஒருநாள் மாலையில் நன்மதி வந்து இறங்கினாள்.