“டேய் அமைதியா இரு.” செழியன் தம்பியின் தோளை பிடித்து அழுத்த, அதை உதறித் தள்ளியவன், மனைவியை உறுத்து விழித்தான்.

“எதுக்கு இதெல்லாம் பண்ணிட்டு இருக்கேனு புரியல. எதுக்கா இருந்தாலும் இதோட நிறுத்திக்கோ.” எச்சரிப்பது போல் சொல்ல, மூக்கு விடைக்க கண்கள் கலங்க நின்றாள் சமுத்திரா.

“டேய் எதுக்கு இப்போ கத்திட்டு இருக்க? சின்னப் புள்ளைங்க காரணமே இல்லாம சிணுங்கத்தான் செய்யும்.” என்று கந்தவேலும் அமைதிப்படுத்தப் பார்த்தார்.

“உங்களுக்குத் தெரியாது அப்பா. இவளுக்கு என்னவோ ஆச்சு, அதுதான் படுத்திட்டு இருக்கா எல்லாரையும்.” அவன் குதிக்க, மகளும் சேர்ந்து அழுதாள்.

“இப்போ நீதான் பாப்பாவை பயமுறுத்திட்டு இருக்க.” என செழியன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே அவனிடமிருந்து உமையாளை பிடுங்கிக்கொண்ட சமுத்திரா அவளை சமாதானம் செய்யப்பார்க்க, அன்றைக்கு என்று என்ன ஆனதோ அவளிடம் இருக்க மாட்டேன் என முரடு பிடித்து மகிழ்நனிடம் செல்லத் தாவினாள்.

‘உனக்கும் நான் வேணாமாடி.’ மனதளவில் பலவீனமாக இருந்த சமுத்திராவின் எண்ணங்கள் இப்படித்தான் நினைத்து தனிமையை உணர்ந்தது. அதை இன்னும் அதிகப்படுத்தும் விதமாய் மகிழ்நன் மகளை தூக்கப்பார்க்க, தன்னிடமிருக்கும் பொக்கிஷத்தை மற்றவர்கள் பிடுங்க முயல்வது போல் மகளை தன் நெஞ்சோடு பொத்திக்கொண்டு நகர்ந்து சென்றாள் சமுத்திரா.

மனைவியின் செயலில் அதிருப்தி கொண்ட மகிழ்நனும் பின்தொடர்ந்தவாறு, “சமுத்திரா என்ன பண்ற நீ, அழுகுறா அவ. என்கிட்ட குடு.” 

மாட்டேன் என்பது போல் சமுத்திரா அங்குமிங்கும் நடக்க, மகிழ்நன் கோபத்துடன் அவளைத் தொடர என அக்காட்சியை பீதியுடன் பார்த்து நின்றனர் குடும்பத்தினர். சமுத்திராவின் நடவடிக்கை விசித்திரமாக இருக்க, யாருக்கும் என்ன சொல்வது என்று தெரியவில்லை. தள்ளி நின்று பார்த்துக்கொண்டிருந்த நன்மதி முன்வந்து, “அவளை ஃப்ரீயா விட்டாலே சரியாகிடுவா, இறக்கி விடு சமு.” என்றவளை தீப்பார்வை பார்த்த சமுத்திரா,

“என் பொண்ணு அவ, எனக்குத் தெரியும்.” என்றுவிட, குழப்பமும் அதிர்வுமாய் பின்வாங்கிவிட்டாள் நன்மதி.

“சமுத்திரா என்ன பேசுற நீ?” அவள் கையைப் பிடித்து நிறுத்திவிட்டான் மகிழ்நன்.

“ஏன் என்ன பேசணும்னு கூட உங்ககிட்ட கேட்டுதான் பேசணுமா?” வள்ளென்று வந்த பதிலில் மகிழ்நன் பல்லைக் கடித்தான்.

“மகிழ் அமைதியா இரு. புள்ளை சாப்பிடட்டும் முதல்ல.” பத்மா சூழ்நிலையை இலகுவாகப் பார்க்க, அவர் புறம் வேகமாக திரும்பிய சமுத்திரா,

“நல்லா போடுங்க. அது மட்டும்தான வேலை இங்குள்ளவங்களுக்கு.” 

அனல் பறந்த அவளது வார்த்தைகளால் சூழ்நிலையின் தகிப்பு கூடியது. என்னவோ உள்ளுக்குள் இறுகிக் கொண்டிருந்தது, நேரம் பார்த்து வெடிக்க காத்திருந்தது. 

“வார்த்தையை பார்த்து பேசு சமு.” மகிழ்நன் எச்சரிக்க, அழுகையிலிருந்து தேம்பலாய் மாறிவிட்ட மகளின் தலையை ஆதரவாக பிடித்துக்கொண்ட சமுத்திரா,

“நான் பார்த்து பார்த்துதான் எல்லாம் இப்படி இருக்கீங்க.” என்னவோ அடக்கவே முடியவில்லை சமுத்திரவால். இன்றே அழுத்தும் விஷயங்களை கொட்டிவிடத் துடித்தது மனது. வார்த்தைகளும் அதற்கு உதவி சேர்ப்பதாக வந்தது. 

“எப்படி இருக்கோமாம்? என்ன நினைச்சிட்டு இப்படியெல்லாம் பேசுற நீ? நானும் உன்னை பார்த்துட்டேதான் இருக்கேன் உன் போக்கு சரியில்லை.”

“இப்போதான் சரியா பாக்குறேன்.” நெஞ்சை நிமிர்த்திச் சொன்னாள் சமுத்திரா.

“மகிழு உள்ள போ.” கந்தவேலும் அடக்கப்பார்த்தார். என்னவோ உள்ளர்த்தம் வைத்து சின்ன மருமகள் பேசுவது போல் தெரிய, இப்படியே விட்டால் நன்றாக இருக்காது என்று புரிந்துவிட்டது. என்ன அதை காதில் வாங்கிக்கொள்ளும் நிலையில் இல்லை அவர்கள்.  

“எதை சரியா பாக்குற நீ? நகை வாங்குனலேந்து உன் பார்வையே சரியில்லை. என்னையே என்ன வார்த்தை சொன்ன நீ?” என்று அவன் ஆரம்பிக்க, பத்மா உள்ளே வரப்பார்த்தார். தடுத்துவிட்டார் கந்தவேல்.

“என்ன சொன்னேன் ஹான்? உண்மையை தானே சொன்னேன்? அலுங்காம குலுங்காம சட்டை மடிப்பு கலையாம நீங்க எல்லாரும் வேலைக்கு போயிட்டு வர்றதுக்கு இங்க நான் வேலைக்காரி மாதிரி வேகணும்.” ஒரு வேகத்தோடு கணவனிடம் பாய்ந்தாள் சமுத்திரா. உமையாள் மெல்ல அவளிலிருந்து இறங்கி விளையாட்டுப் பொருளை எடுத்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள். அவள் ஆரம்பித்துவைத்த விளையாட்டுதான் தீப்பற்றிக்கொண்டது. 

இம்முறை கணவரை மீறி வந்துவிட்டார் பத்மா.

“வேலைக்காரி அது இதுனு என்ன பேச்சு சமு இது?” 

“இல்லைங்குவீங்களா நீங்க?” அவரையும் விட்டுவைக்கவில்லை சமுத்திரா. அவள் இயல்பை மீறிக்கொண்டு மனக்குமுறலை கொட்டத் தயாராகிவிட்டாள். மனதின் அழுத்தம் அவளை மாற்றியிருந்தது.

“நீ ஏதோ சங்கடத்துல இருக்க, அப்புறம் பேசலாம் மா.” என்ற கந்தவேலை ஏறிட்டவள்,

“இப்போ இல்லைனா எப்போவும் என்னால பேச முடியாது மாமா. என்னால முடியல. நானும் என் குடும்பம், என் ஆளுங்கன்னு எல்லாத்தையும் முகம் சுழிக்காம செஞ்சேன். ஆனா பதிலுக்கு என்ன கிடைச்சுது? இளிச்சவாய் சிக்கிட்டான்னு மேல மேல எல்லா வேலையும் என் தலையில தான் விழுந்துச்சு. சமு என்ன சொல்லிடப் போறா அவ பாத்துப்பா, அவளுக்குதான் பக்குவமா செய்ய வரும்ன்னு சொல்லி சொல்லியே என்னை முழுநேரமும் வீட்டுக்குள்ள முடக்குன மாதிரி ஆகிடுச்சு.” 

“ரொம்ப பேசுற நீ.” மகிழ்நன் மிரட்டல் தொனியில் இரண்டடி முன்வைக்க, திகைத்து பின்னகர்ந்தாள்.

சமுத்திராவின் குற்றச்சாட்டு தன்னை நேரடியாக பதம் பார்ப்பதாக உணர்ந்த பத்மா, “உன்னை வேலைக்காரியா வச்சிருக்கோம்னு சொல்ல வரியா நீ?” என முறுக்கிக்கொண்டு வர,

“வேலைன்னு வந்துட்டா மட்டும் உரிமையை தூக்கி கொடுக்கிறதுக்கு பேர் என்ன அத்தை?” குரல் கலங்கினாலும் கேள்விகள் அழுத்தமாக வந்தது. 

“ம்மா, அவ ஏதோ லூசுத்தனமா பேசுறா. சமு நீ உள்ள போ.” அத்தனை நேரம் கோபமாக நின்ற மகிழ்நனுக்கு சூழ்நிலை அப்போதுதான் உரைத்தது. அம்மாவை சமாளித்து மனைவிக் கைப்பிடித்து உள்ளே அழைத்துச் செல்லப் பார்த்தான்.

“நில்லுடா… அவ என்னவோ வேலைக்காரிங்குறா நீ உள்ள கூட்டிட்டு போற. நம்ம குடும்பத்துக்கு செய்யுறோங்குற எண்ணம் இருந்தா இந்த வார்த்தை வருமா?”  

“எனக்கு மட்டும்தான் இது குடும்பமா அத்தை?” கணவனின் கையை உதறிவிட்டு வந்த சமுத்திரா, “எதை பத்தியும் யோசிக்காம என் சொகுசை விட்டுட்டு எல்லாம் நான் செஞ்சா இதுதான் சாக்குன்னு என்னை எல்லாம் செய்ய வச்சது நீங்கதான் அத்தை. அக்கா வரட்டும் தீபாவளி பலகாரம் சேர்ந்து செய்யலாம்னு சொல்றேன், நீ செய்யுற மாதிரி வருமான்னு என்னையே லாக் பண்றீங்க. அப்போ அவங்களுக்கு இது குடும்பம் இல்லையா? ஒருத்தி செய்யுறான்னு எல்லாத்தையும் அவகிட்டேயே கொடுத்துடுறீங்க. எதிர்த்து பேசமாட்டேன்னு அட்வான்டேஜ் எடுத்துக்குறது நியாயமா?

தினம் காலைலைக்கு மதியத்துக்கு லன்ச் கட்டுறதுனு எல்லாம் செய்யுறேன், ஒருநாளாச்சும் மதி அக்காவை செய்ய சொல்லி இருப்பீங்களா இல்லை நீங்க ரெண்டு பேரும்தான் கலந்து செய்யணும், ரெண்டு பேருக்கும்தான் இது குடும்பம்னு அவங்களுக்கு சொல்லி இருக்கீங்களா? அவங்களுக்கு வராது, அவங்க எடக்கா பேசுவாங்கனு சொல்லி சொல்லியே எல்லாத்தையும் என்னை செய்ய வச்சீங்க. 

அப்போ நான் மட்டும் குடும்பம் குடும்பம்னு இருக்கனும். 

மெஷின் மாதிரி எல்லாம் செய்யணும், நேரத்துக்கு செய்யணும், ருசியா செய்யணும், பதமா பக்குவமா செய்யணும், கெஸ்ட் வந்தாலும் செய்யணும், வரலைனாலும் செய்யணும், விஷேஷ நாள்னா நாலு வகை செய்யணும், மத்தவங்களுக்கு பொறந்தநாள்னாலும் அவங்களுக்கு புடிச்சதை செய்யணும் எனக்கு பொறந்தநாள்னாலும் எனக்கு நானே செஞ்சிக்கணும்… 

ஏன் இந்த வீட்ல எல்லாமே நாந்தான் செய்யணுமா இல்லை வேலை செய்யணும்னே என்னை கட்டி கூட்டிட்டு வந்தீங்களா?”

“என்ன சமு பேச்செல்லாம் அதிகமா இருக்கு. நாங்க கொடுமைப்படுத்துற மாதிரி பேசுற. வீட்ல இருக்குறவங்களுக்கு சாப்பாடு செய்யுறது அவ்வளவு பெரிய குத்தமா? ஏன் நான் செய்யல, உன் அம்மா, என் பொண்ணு எல்லாம் செய்யல? செஞ்சேன் செஞ்சேன்னு அதையே சொல்ற.” பத்மா விடாது வாதிட, மகிழ்நனுக்கு எல்லாம் கைமீறிப் போன உணர்வு. மனைவியை தான் நெருங்கினால் விலகிப் போவதோடு ஆக்ரோஷமாகிறாள், அம்மாவும் பதிலுக்கு பேசுகிறார் என நொந்துபோனவனாய் பார்த்துக் கொண்டிருந்தான்.  

“எல்லாரும் செய்யுறதால நானும் செய்யணும்னுதான் செஞ்சேன் அத்தை. ஆனா அதை நீங்க என்கிட்ட மட்டுமே எதிர்பாக்குறீங்க. பாரபட்சமா இருக்கீங்க. எங்க என்கிட்ட பேசுற மாதிரி அக்காகிட்ட பேசிடுங்க பாப்போம்.” என சவால் போலவே சொல்ல,

“நீ விரும்பி செய்யுறேன்னு நினைச்சேன் சமுத்திரா, உனக்கு கஷ்டமா இருந்தா நீ என்கிட்ட சொல்லியிருக்கலாம். எங்களுக்கு நான் செஞ்சிக்குறேனு சொல்ல சொல்ல கேக்காம நீதான் சேர்த்து செஞ்ச, இப்போ இப்படி பேசுறது சரியில்லை.” என்று பொறுமையாக நன்மதி உரையாடலுக்குள் வர,

“நான் சொன்னாதான் தெரியுமா அக்கா? அவ்வளவு கட் அன்ட் ரைட்டா பேசுறீங்களே உங்களுக்கு தெரியாதா வீட்ல எவ்வளவு வேலை இருக்கும், ஒத்தையா ஆறேழு பேருக்கு செய்யுறதுக்கு எனக்கு எப்படி இருக்கும்னு. மாசத்துல மூணு நாள் நீங்க ரெஸ்ட் எடுக்குறீங்களே, அதுகூட எனக்கு இல்லை. நீங்க வலிக்குதுன்னு ஒதுங்கிடுறீங்க, எனக்கு வலிக்கலைங்குறத்துக்காக நான் செஞ்சிட்டே இருக்கணுமா?”

“இப்போ பேசுற நீ அப்போவே பேசியிருக்கணும் சமு. என்னால முடியலைன்னு நான் சொல்றேன்ல, உனக்கு முடியுது முடியல, உனக்கு வேண்டியது வேண்டாதது எல்லாமே நீ சொல்லணும் சமு. நாங்க புரிஞ்சிக்கணும்னு நினைக்குறது சரிதான் ஆனா எதுக்குமே நீ முகம் சுழிச்சது இல்லை. உனக்கு செய்ய புடிக்கும்னு இருந்துட்டேன். இனிமே நீ எங்களுக்கு செய்ய வேண்டாம்.” 

“நீங்க சொன்னாலும் நான் செய்ய மாட்டேன் அக்கா. செய்யாம இருக்குற உங்களுக்கு இருக்குற மதிப்பு, செஞ்ச எனக்கு இல்லை. இனியும் அதை இழந்து நிக்க தயாரா இல்லை.” தீர்க்கமாக சொல்ல, 

“என்ன இழந்துட்ட இப்போ?” மகிழ்நனுக்கு சமுத்திராவின் கோவத்திற்கு பின் இருக்கும் ஆதங்கம் புரிவது போல் இருக்க, அதன் ஆதி புரியவில்லை. 

“எதை இழக்கலங்க நான்? என்ன ஆனாலும் சபைல பேசாத ரூம்ல வந்து என்கிட்ட தனியா சொல்லுன்னு சொன்ன நீங்களே இன்னைக்கு இங்க வச்சி என்னை அதட்டுறீங்க. ஏன் அப்போ தெரியலையா பொண்டாட்டியை குடும்பத்துக்கு முன்னாடி அதட்டகூடாதுனு? உங்களுக்கு ஒரு நியாயம் எனக்கொரு நியாயமா? நீங்க வேலைக்கு போறீங்க, சம்பாரிக்குறீங்க அந்த எண்ணம்தான் என்னவும் பேசலாம், என்னை அடக்கி வைக்கலாம்னு நினைக்க வைக்குது. இதே நானும் காலையில எட்டு மணிக்கு பையை தூக்கிட்டு போயிட்டு நைட் வந்தா இப்படி பேசுவீங்களா? ஒரு வார்த்தை விடுறதுக்கு முன்னாடி யோசிக்க மாட்டீங்க? ஒரு முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி என்னை கலந்துக்கணும்னு நினைக்க மாட்டீங்க? இப்போ அப்படி தோணலைனா அதுக்கு என்ன அர்த்தம்? நான் சம்பாரிக்கல வீட்ல இருக்கேன், அதுவும் வெட்டியா ஃபிரியா இருக்கேன்…” அவன் சொல்லியதையே சொல்லிக்காட்ட, 

“நீயா எதையோ நினைச்சி எதையோ பேசிட்டு இருக்க.” என்று ஏதோ சொல்ல வந்தவனை இடைமறித்து, 

“அப்புறம் பேசிக்குறேன் உங்களை…” என்றவள் நன்மதி புறம் திரும்பி,

“நீங்க உங்க வசதிக்கு இருக்குறது உங்க விருப்பம் அக்கா. அதுக்காக என் உழைப்பை, என் நேரத்தை சுரண்டுறதுல எந்த நியாயமும் இல்லை.” என்றவள் பொதுவாக,

“இப்படியெல்லாம் பேசணும்னு என்னைக்குமே நினைச்சது இல்லை, ஆனா என்னையும் பேச வச்சிட்டீங்க… ஒரு குழந்தையை வச்சிக்கிட்டு எவ்ளோ பார்க்க நானும்? பார்த்து பார்த்து நிறைய இழந்துட்டேனோன்னு தோணுது. என் குடும்பம்னு கோட்டுக்குள்ள இருந்த என்னை கோட்டை தாண்டி நின்னு பார்க்க வச்சிட்டீங்க. அப்படி தள்ளி நிக்க வேணாம்னு நினைச்சாலும் முடியல. நாலு நாளா நிறைய முயற்சி பண்றேன் இனி அதுக்குள்ள வரமுடியும்னு தோணல.” 

“இந்த கொஞ்ச நாள்ல நிறைய நிறைய யோசிச்சிட்டேன், ஏன் இவ்வளவு நாள் இதெல்லாம் புத்திக்கு உரைக்கலைனு தெரியல. இனியும் இப்படியே இருந்தேன்னா நாளைக்கு என் பொண்ணுக்கு அது நல்ல எடுத்துக்காட்டா இருக்காது. என் நிலைமை என் பொண்ணுக்கு வரக்கூடாதுன்னு தான் சொல்லுவேன்.” என்றவள் புறங்கையால் கண்களை துடைத்துக்கொண்டு அறைக்குள் செல்ல, அனைவருமே அவரவர் இடங்களில் அதிர்ந்து நின்றனர்.

தம்பியின் தோள் தொட்ட செழியன், “பாப்பாவை நான் பாத்துக்குறேன், நீ போய் சமுத்திராகிட்ட பேசு. தனியா விடாத…” என்று அனுப்பி வைக்க, அடுத்து என்னவோ என்ற யோசனையில் தயக்கத்துடன் சென்றான் மகிழ்நன்.