அந்த வாரத்தில் தொடர்ந்து வந்த நாட்களும் சமுத்திரா நேரத்திற்கு எழாமல் போக மகனை பிடித்துவிட்டார் பத்மா.
“என்னடா பிரச்சனை சமுவுக்கு? உன் அண்ணிதான் குடும்பத்தோட ஒத்துப்போகாம அவ ஒருபக்கம் இருக்கான்னா ஒழுங்கா இருந்த சமுவும் இப்போ ஒன்னும் சரியில்லை. காலையில நீங்க கிளம்புனதும் சாப்பிட்டு கோவிலுக்குனு அவளும் கிளம்பிடுறா. கூட வரேன்னு சொல்ற என்னையும் ஏதாச்சு சொல்லி வீட்ல இருக்க வச்சிடுறா. தீபாவளி பலகாரம் செய்யணுங்குறேன் காதுலையே வாங்கிக்க மாட்டேங்குறா. என்ன நினைப்புல இருக்கா அவ?”
பிரச்சனைகளுக்கு யோசனை கொடுக்கும் இடத்தில்தான் இதுவரை இருந்திருக்கிறானே ஒழிய எங்கும் அவனாலோ அவனைச் சார்ந்த சமுத்திராவாளோ குடும்பத்திற்குள் சங்கடம் வந்ததில்லை. புதிதாக சமுத்திரா நடந்துகொள்ளும் விதத்தில் அம்மாவின் குற்றச்சாட்டுகள் அதிகரிக்கத் துவங்க, தலைவலி வந்தது.
“நான் சொல்லிட்டே இருக்கேன் நீ என்னடா தலையை தாங்கிகிட்டு நிக்குற?”
மூடியிருக்கும் தன் அறைக்கதவைப் பார்த்தவன், “நான் பாக்குறேன் ம்மா…” என்று நகர்ந்துவிட்டான்.
வங்கியில் நடக்கும் பிரச்சனைகளை எளிதாக கையாள்பவனுக்கு வீட்டுப் பிரச்சனை இடியாப்ப சிக்கலாய் தெரிந்தது. அமைதியாக அறைக்குச் சென்று பார்க்க, மகளை கட்டிக்கொண்டு படுத்திருந்த சமுத்திராவின் கருவிழிகளில் நகர்வு தெரிந்தது.
“முழிச்சிட்டியா சமு?”
அவன் குரல் கேட்கவும் அன்னிச்சையாக விழித்துப் பார்த்தாள் சமுத்திரா.
“அம்மா உன்னை தேடிட்டு இருக்காங்க.” என்றவனை கண்டுகொள்ளாமல் அவள் திரும்பி படுக்கப்பார்க்க விரைந்து சென்று அவளை திரும்பவிடாமல் பிடித்துக்கொண்டான் மகிழ்நன்.
“என் மேல தான உனக்கு கோவம். வீட்ல எப்போதும் போல இருக்கலாம்ல?” என்றவனை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தவள் அவன் கைகளை தட்டிவிட,
“சமுத்திரா.” இவன் குரல் உயர்ந்தது.
உச்சு கொட்டியபடி மகளைப் பார்த்த வண்ணம், “எனக்கு ரெஸ்ட் எடுக்கணும்.” என்க, அவனோ,
“நாங்க கிளம்புனதுக்கு அப்புறம் உங்களுக்கு ரெஸ்ட்தான? எல்லா வேலையும் காலையிலேயே முடிச்சிடுறீங்க.” என அவளது காலையை அழகாக எரிச்சல் படுத்திவிட்டான்.
அவனை ஒரு பார்வை பார்த்தவள் எதுவும் சொல்லாமல் திரும்பி படுத்துக்கொள்ள, “நீ செய்யுறது, நடந்துக்குறது, பேசுறது, பேசாதது எதுவும் சரியில்லை. என்ன வேணும் உனக்கு? ஏன் இப்படி பண்ற? இங்க என்ன குறை உனக்கு?”
உருண்டு புரண்டு பார்த்தவள் வேறு வழியின்றி எழுந்துகொள்ள, நிதானமாக குளித்துவிட்டு வந்தாள். நன்மதி சமையலறையில் இருக்க, இவள் தன்னைப்போல் உமையாளுக்கு செய்யப்போக, ஒரு பாத்திரத்தை அவள் புறம் நகர்த்தி வைத்த நன்மதி,
“உன்னையே அறியாம நிறைய முறை நீ எனக்கு ஆதரவா இருந்திருக்க சமு. இப்போ அது உனக்கு தேவைப்படுதுனு தோணுது. என்ன பிரச்சனைன்னு தெரியல, ஏதோ என்னால முடிஞ்சுது.” என்று அந்த பாத்திரத்தை கண்ணால் காண்பிக்க, சமுத்திரா திறந்து பார்த்தாள். உமையாளுக்கு கஞ்சி போட்டு பதமாக ஆற வைக்கப்பட்டிருந்தது. சமுத்திரா ஆச்சரியமாகப் பார்க்க, நன்மதி சமையலில் கவனமாக இருந்தாள்.
ஒன்றும் சொல்லாமல் அதனை எடுத்துக்கொண்டு அறைக்கு வர, உமையாளும் விழித்தாள். அவளை சுத்தப்படுத்தி கஞ்சி கொடுத்து என ஒதுங்கியே இருந்துகொண்டாள். அன்று வம்படியாக முன்னரே கிளம்பி அமர்ந்துவிட்ட பத்மா,
“நானும் உன்கூட கோவிலுக்கு வரேன் இன்னைக்கு.” என்று சமுத்திராவைப் பார்க்க,
“நான் இன்னைக்கு போகல.” என்றுவிட்டாள் அவள்.
“என்ன ஏன்? மூணு நாளா போயிட்டு இருக்கீல்ல?”
“இன்னைக்கு ரெஸ்ட் எடுக்க சொல்லி உமையாள் அப்பா சொல்லிட்டு போயிருக்காங்க அத்தை.”
“அப்போ சரி. நீயும் ஒருமாதிரி இருக்க, ஒழுங்கா உடம்பை தேத்து.” என்றவரே, “நாளை சரஸ்வதி பூஜைக்கு வீடை சுத்தம் பண்ணனும் சமு. சாமி அலமாரி எல்லாம் நான் பண்ணிடுறேன், வீடை மட்டும் துடைச்சு விட்டுறேன்.” என்றும் சொல்ல, ஆயாசமாக வந்தது சமுத்திராவுக்கு. பெருக்குவது கூட தினமும் பத்மா செய்துவிடுவார், துடைப்பது எப்போதும் இவள் வேலைதான்.
‘மூணு ரூமை துடைச்சு எடுக்குறதுக்குள்ள என் முதுகு போயிடுது.’ இவள் கருவுற்றிருந்த சமயங்களில் பத்மா வேலை செய்துவிட்டு இப்படி புலம்புவதுண்டு. மனம் இறங்கி பிரசவத்திற்கு பின் அவ்வேலையை இவள் தனதாக்கிக் கொண்டாள்.
“என்ன சமு யோசனை? பாப்பா தூங்கவும் துடைச்சு விட்டுரு என்ன. நைட் கூட உப்புமா மாதிரி பண்ணிக்கலாம். ரொம்ப வேலையை இழுத்துக்க வேண்டாம்.” எங்கே முடியாது என்றுவிடுவாளோ என்ற பயம் அவருக்கு. முன்பென்றால் சொல்லாமலேயே அனைத்தையும் செய்துவிடுவாள் என்று அசட்டையாக இருந்துவிட்டவரால் சமீபமாக விலகலை காட்டும் சமுத்திராவைக் கண்டு குழப்பமே.
“ரெஸ்ட் எடுக்கணும்னு சொன்னேன் அத்தை.” என்றாள் சமுத்திரா சற்று அழுத்தமாய்.
“ரெஸ்ட் எடு யார் வேண்டாம்னு சொன்னா. முடியுறப்போ கொஞ்சம் துடைச்சு விட்டுருன்னுதான் சொல்றேன்.”
“ப்ச்…” சமுத்திரா முகம் திருப்ப,
“அப்போ யார்தான் செய்யுறது? டாக்டரை பாக்கலான்னாலும் கேக்க மாட்டேங்குற. என்ன செய்யுதுனு சொல்ல மாட்டேங்குற. வீட்ல எல்லாத்தையும் நீயே செய்யுறவ திடீர்னு எனக்கென்னன்னு ஒதுங்கி இருக்க. என்ன நினைக்குறீங்கன்னு ஒன்னும் புரியல. நான் செஞ்சிட்டு முடியாம படுத்துக்கிட்டா யார் பாக்குறது?” பத்மா அவர்பாட்டிற்கு புலம்பினார்.
“அவ்வளவு கஷ்டப்பட்டு ஒன்னும் துடைக்க வேண்டாம் விடு. நான் பாத்துக்குறேன். நான் நாளைக்கு படுத்துக்கிட்டா என்னவோ பண்ணுங்க எல்லாரும்.” என்றவர் அப்போதே துடைக்க ஆரம்பிக்க, என்னவோ செய்யுங்கள் என்று அறைக்குள் செல்லப்போனவள் அவர் துடைப்பதை பார்த்து கொல்லைப்புறம் சென்றுவிட்டாள்.
என்னவோ முனகிக்கொண்டே துடைத்தவர் இறுதியில் இடுப்பை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். சமுத்திராவுக்கு பாவமாக இருந்திருக்க வேண்டும் உமையாளுக்கு காலை தின்பண்டம் கொடுக்கும் சமயம் அவருக்கு டீ போட்டுக் கொடுத்தாள். அதை குடித்த பின்தான் ஆசுவாசமாக உணர்ந்தார்.
உமையாள் அவரிடம் விளையாடப்போக பிடித்துவைத்துக்கொண்ட சமுத்திரா பாட்டிக்கு ஓய்வு தேவை என்று சொல்லி அறைக்கு அழைத்துச் சென்றுவிட்டாள்.
கலைவாணி அழைத்துப் பேசினார். அவரிடம் கூட இங்கு நடப்பதை சொல்லவில்லை. எப்போதும் விசாரிக்கும் தொனியில் அவர் கேட்கும் முன்னரே உண்டுவிட்டேன், பாப்பா விளையாடுகிறாள் என்று சமாளித்தாள்.
மாலை மகிழ்நன் வீடு வந்த சமயம் வேண்டுமென்றே உமையாளை தூக்கிக்கொண்டு வெளியேறிவிட்டாள். முன்பு எப்போதாவது வெளியே அக்கம்பக்கத்தினருடன் உமையாளை விளையாடவிடுவாள். இப்போது அதை வாடிக்கையாக்கிக்கொண்டாள். கண்ணாம்பூச்சி ஆட்டம் தொடர்ந்தது.
உமையாளுக்கு நேரமே உணவு கொடுக்க வேண்டுமென்பதால் முன்பொழுதிலே உப்புமாவை கிண்டி வைத்துவிட்டாள். இரவு படுக்கப்போகும் முன்,
“மதி வீட்டுக்கு விலக்காம், நாமதான் எல்லாம் செய்யணும். சுண்டலுக்கு கடலை ஊற போட்டுட்டேன்.” என்றுவிட்டே படுத்தார் பத்மா.
‘இதுவேறா?’ ஒன்றும் சொல்ல முடியாமல் காலை சற்று நேரமே எழுந்தவள் பரபரவென சமையலில் ஈடுபட, வெளி வேலைகளை முடித்துவிட்டு வந்து பார்த்த பத்மா,
“எதுக்கு இவ்ளோ காலையில எல்லாத்தையும் இழுத்துப் போட்டு செய்யுற? காலை டிபன் வேலை முடிச்சிட்டு சாமிக்கு படைக்குறதெல்லாம் செய்யலாம்ல?” என்றவருக்கு பதில் கொடுக்காமல் தன் வேலையை துரிதப்படுத்தினாள்.
“நீ செஞ்சாலும் யாரும் எழுந்திருக்காம எப்படி படைக்குறது? காலையிலேயே வடை பாயசமான்னு கேப்பாங்க.”
“எல்லாரையும் எழுப்பி விடுங்க.”
“இந்நேரமா?” என பத்மா மணியைப் பார்க்க, ஏழை நெருங்கியது. இன்று அனைவருக்கும் விடுமுறை என்று அவரே தாமதமாகத் தான் எழுந்தார். இன்னும் குளிக்கக்கூட இல்லை. இவள் என்னவென்றால் காலையே தலைக்கு ஊற்றிவிட்டு அனைவரையும் எழுப்பச் சொல்கிறாளே என்று பார்த்தார்.
“இப்போ எழுப்ப முடியாதுன்னா நான் சமைச்சி வச்சிடுறேன், எப்போ படைக்கணுமோ அப்போ படச்சிக்கோங்க.” பத்மா நிற்பதைப் பார்த்து சொல்ல, அவளை விசித்திரமாக பார்த்தார். என்னவோ மாற்றம் ஆனால் என்னவென்று புரியவில்லை. ஒருமாதிரியாக தலையை உருட்டி தன் கணவரை எழுப்பச் சென்றார் முதலில். அடுத்து செழியன் அறைக்கதவை தட்டிவிட்டு வந்தவர், “மகிழை எழுப்பி குளிக்க சொல்லு. இப்போவே படைச்சிடலாம், சாமிக்குனு செஞ்சிட்டு ஆற போடக்கூடாது.” என்று வேகமாக குளிக்கச் சென்றார்.
பெருமூச்சுடன் அடுப்பில் இருப்பவற்றை சிம்மில் போட்டவள் அறைக்குச் சென்று உமையாளை தூக்கி நிறுத்த விழித்துக்கொண்டாள் அவள்.
கண்களை கசக்கும் மகளின் உச்சி முகர்ந்து முத்தம் வைத்தவள், “அப்பாகிட்ட போங்க செல்லம். எழுப்பி விடுங்க.” என்று அவனருகில் விட, அப்பாவின் தோளை பிடித்துக்கொண்டு அவன் முகத்திலே ஒன்று வைத்தாள் உமையாள்.
சுள்ளென்று விழுந்த அடியில் பதறியடித்து எழுந்த மகிழ்நன் அன்னிச்சையாக திட்டப்போக, விழிகளை நிறைத்த மகள் கருத்தில் பதிந்து அவனை நிதானிக்க வைத்தாள்.
“என்ன பழக்கம் பாப்பா? இப்படியா அடிப்ப?” கொஞ்சம் கண்டிப்பு காட்ட, அம்மா என்று சமுத்திராவை கோர்த்துவிட்டாள்.
அம்மாவா என மகிழ்நன் விழி நகர்த்த, மனைவி அங்கிருந்தால்தானே. இவன் விழிக்கவுமே வெளியேறிவிட்டாள். தன் மேல் பொத்தென்று விழுந்த மகளை தூக்கிக்கொண்டு எழுந்தவன் கண்களை அழுந்தத் தேய்த்தான். தூக்கம் தூர சென்றுவிட்டாலும் அந்த அலுப்பு மிச்சமிருந்தது. உமையாள் வெளியே அழைத்துச் செல்ல சொல்லிக் கேட்க, அவளை தூக்கிக்கொண்டு வந்தவன் கடிகாரத்தில் நேரத்தை பார்த்துவிட்டு,
“இன்னைக்கு லீவ்தானே ஏன் சீக்கிரம் எழும்புன பாப்பா?” மகளிடம் கேட்பது போல் மனைவியைப் பார்த்தான்.
“காலையிலேயே சாமிக்கு படையல் போடுறாங்களாம். விருந்து சமையல் நடக்குது.” மகனுக்கு பதில் சொல்லியபடி கூடத்தில் கையை உயர்த்தி சுழற்றிக்கொண்டிருந்தார் கந்தவேல்.
“இந்நேரமேவா?” மகிழ்நன் பார்வை சமையலறை சென்றது.
“நானும் அதான் கேட்டேன், இன்னைக்குத்தான் லீவு நீங்க எல்லாம் தூங்குவீங்க, மதியம் செஞ்சிக்கலாம்னா ஏதேஏதோ காரணம் சொல்றா உன் அம்மா.”
என்னவோ முனகிக்கொண்டே அவரருகில் அமர்ந்தான் மகிழ்நன். உமையாள் அவனிடமிருந்து கீழிறங்கி அவள் விளையாட்டு பொருட்கள் இருக்கும் பையை இழுத்துப் போட்டுக் கொட்ட, சத்தம் கேட்டு வந்துவிட்ட சமுத்திரா கணவனை முறைத்தாள். கண்களை மூடி கால் நீட்டி அமர்ந்திருந்தவன் அதை எங்கே கவனிக்க?
“பல்லு கூட விலக்காம அப்படி என்ன விளையாட்டு பாப்பா உனக்கு? சாமி கும்புட வேணாமா?” சமுத்திரா குரல் உயர்த்தியதில் கண்விழித்துப் பார்த்த மகிழ்நன்,
“நீங்க நேரமே எழுந்து எல்லாம் பண்ணிட்டு எதுக்கு அவளை சத்தம் போடுற?”
அவனை கண்டுகொள்ளாமல் உமையாள் அழுக அழுக அவளை தூக்கிச் சென்ற சமுத்திரா குளிக்க வைத்து அழைத்து வந்தாள். பேத்தியின் சத்தத்தில் அவளுக்காக கஞ்சி காய்ச்சி வைத்துவிட்டார் பத்மா. உண்ட பின்னும் உமையாளின் சிணுங்கல் தொடர்ந்தது. என்னவோ சொல்லி சிணுங்குவதும் காரணமின்றி பிடிவாதம் பிடிப்பதும் என இருந்தாள். அவளை சமாளித்துக் கொண்டே சாமியறையை தயார் செய்த சமுத்திரா இறுதி கட்டத்தில் பத்மாவின் உதவியுடன் அனைத்தையும் படையல் போட எடுத்துவந்து வைத்தாள்.
ஒவ்வொருவராய் குளித்துவிட்டு வரவும் கந்தவேல் பூஜை செய்ய சிறிது நேரம் அமைதியாக மணி அடித்த உமையாள் பட்டென்று அதை கீழே போட்டுவிட்டு இலையில் படைக்க வைத்திருந்த வடையை எடுத்து கடித்துவிட்டாள். வேகமாக சமுத்திரா அதைத் தடுக்க, உமையாள் பிடிவாதமாக வடையை பிடித்துக்கொண்டு சமுத்திராவை அடிக்க சில நொடிகள் அரங்கேறிய அந்த கைகலப்பின் இறுதியில் உமையாள் வீலென்று அழ ஆரம்பித்து வடையை தூக்கிப்போட, எரிந்து கொண்டிருந்த விளக்கில் சென்று விழுந்தது அது. மற்றவர்கள் அவர்களை நெருங்கவோ உமையாளை கண்டிக்கவோ செய்யும் முன் முதுகிலே ஒன்று வைத்துவிட்டாள் சமுத்திரா. அதற்கும் ஓவென்று ஊரைக் கூட்ட, பாய்ந்து வந்து மகளை தூக்கிக்கொண்ட மகிழ்நன்,
“பைத்தியம்தான் புடிச்சிருக்கு உனக்கு. எதுக்கு இப்போ அவளை அடிக்குற? உன் வீம்புக்கு எல்லாரையும் நேரமே எழுப்பிவிட்டுட்டு வேற ஏதோ கோவத்தை வந்து குழந்தைகிட்ட காட்டுற.” பொதுவில் அவன் இப்படி பேசுவான் என்று எதிர்பாராத சமுத்திரா அதிர்ந்துப் பார்த்தாள்.