கதவை லேசாக சாற்றிவிட்டு பின்னோடே வந்த பத்மா, “தனியா எப்படி போவ? சாயந்திரம் மகிழ் வந்ததும் சேர்ந்து போங்க.”

காதில் வாங்கினாலும் வாங்காதது போல் உள்நுழைந்துகொண்டவள் வேகமாக உடைமாற்றி உமையாளையும் தயார் செய்து அவளுக்கு மாற்றுடை ஒன்றை எடுத்துக்கொண்டு வெளியேறினாள்.

“இப்போவே போகணும்னு என்ன அவசரம் சமு? அவ அழுவுறா பாரு.” என்று பேத்தியை தூக்க வந்தவரிடம்,

“வெளில போனா அமைதியா இருப்பா அத்தை. கூட்டிட்டு போயிட்டு வரேன்.” வெளியே செல்ல எத்தனை கேள்விகளுக்கு பதில் கூற வேண்டியிருக்கிறது, ஆயாசமாக வந்தது.

“தனியா எப்படி போவ? இரு நானும் வரேன்.” பத்மா கிளம்பப்பார்க்க, சமுத்திரா கொடுத்த பதிலில் திகைத்து நின்றுவிட்டார்.

“நீங்களும் வந்துட்டா மதியத்துக்கு லஞ்ச் யார் செய்யுறது? உமையாளுக்கு நேரமே சாப்பாடு கொடுக்கணும். நான் போயிட்டு வந்துர்றேன்.” என்று நிற்காமல் காலில் செருப்பை மாட்டிக்கொண்டு கிளம்பிவிட்டாள். 

சாலையில் இறங்கி விறுவிறுவென நடக்கும் சமுத்திராவை அதிர்வாய் பார்த்து வாசலில் நின்றார் பத்மா. நின்று பேசக்கூட நேரமில்லாதது போல் இதென்ன பேச்செல்லாம் புதிதாய்? அதுவும் இதுவரை இல்லாதவண்ணம் தனியாக வேறு செல்கிறாள்? மருமகள் செயலில் யோசனையும் அதிருப்தியும். 

வெயில் கொஞ்சம் சுள்ளென்று அடித்தாலும் யாரைப் பற்றியும் யோசிக்க வேண்டியதின்றி சுதந்திரக் காற்றை சுவாசித்த திருப்தியில் தன் நடையின் வேகத்தை கூட்டினாள் சமுத்திரா. ஆர்வமாக வேடிக்கை பார்க்கும் மகளிடம் பேச்சுக்கொடுத்தபடி அவ்வப்போது சுற்றத்தை பார்த்துக்கொண்டாள்.   

நடந்து செல்லும் தூரத்தில்தான் இருக்கிறது முருகனின் நான்காம் படை வீடு. இரண்டு தெருவைக் கடந்தால் அவனை அடைந்துவிடலாம். அதற்கே இன்றுதான் முதல்முறை தனியாக வருகிறாள். எப்போதும் எல்லோரும் சேர்ந்து சேர்ந்து என குடும்பத்துடன் கும்மியடித்துதான் பழக்கம். இரண்டு மூன்று முறை தனியாக கணவனுடன் சென்று வந்த நியாபகம். சிறிது நேரம் என்றாலும் திருமணத்திற்கு பின் கிடைக்கும் இந்த தனிப்பயணம் அப்படியொரு ஆசுவாசம் கொடுத்தது. திருமணமான பின் சுதந்திரம் பறிபோய்விட்டதே இப்போதுதான் புரிந்தது.

தட்பவெட்பத்தின் பலனாய் தேகம் உணரமுடியாத வண்ணம் வீசும் காற்று கூட அவள் மனதின் வெட்கையை தணித்தது. வீடுகள் நிறைந்துக்கிடக்கும் தெருக்களும் வீடுகளுக்கு அடிக்கப்பட்டிருந்த வண்ணங்களும் கண்களுக்கு புத்துணர்வாய் அமைந்தது. இடையிடையே ஓரமாய் படுத்துக்கிடக்கும் நாய்களைக் காண்பித்து உமையாள் என்னவோ சொல்லிக்கொண்டே வந்தாள். 

கோவிலின் முதல் படியில் அடியெடுத்து வைத்த நொடி எதிலிருந்தோ தப்பித்து வந்துவிட்ட திருப்தி. அனைத்தும் முருகனே என சரணாகதி அடைய, சரியாக அந்நேரம் அலைபேசி அடித்தது. கலைவாணியாக இருக்கும் என்ற எண்ணத்தில் அதை எடுக்காமல் விட்டாள். இலகுவான மனதில் மீண்டும் கல்லெறிந்து விடுவார், இப்போதைக்கு அழைப்பை ஏற்க வேண்டாம் என்ற எண்ணம். பெயரைக் கூட பார்க்காது அமைதியாக்கிவிட்டாள்.

பிரசித்தி பெற்ற அத்திருத்தளத்தில் அப்பனுக்கே பாடம் எடுத்த முருகன் இவளுக்கும் வழிகாட்டாமலா இருந்துவிடுவான். மனம் நிறைய அவனை தரிசித்துவிட்டு பிரகாரத்தில் அமர்ந்தவள் உமையாளை விளையாடவிட்டு மேற்பார்வை பார்த்தாள். மனதை நிர்மலமாக வைத்துக்கொள்ள முயன்றாலும் சுற்றி இருக்கும் சஞ்சலங்கள் ஒன்றன் பின் ஒன்றாய் அவளை அலைக்கழித்தது. எதைப் பார்த்தாலும் பிடிக்கவில்லை யாரைப் பார்த்தாலும் ஒப்பீட்டுக்கள் சென்றுவிடுகிறது மனது. என் குடும்பம் என்ற எண்ணத்தில் விரிசல் விழுந்து எது என் குடும்பம் என்ற ஆராய்ச்சியில் இறங்க, மீண்டும் ஒரு அலைபேசி அழைப்பு. இடையே தரிசனத்தின் போதும் இருமுறை அடித்த நியாபகம், அதனால் அழைப்பது யாரென்று பார்த்தாள்.

மகிழ்நன் அழைத்துக்கொண்டிருந்தான். பெருமூச்சு எழுந்தது, தனியாக வந்தததை மகனிடம் சொல்லியிருப்பார் பத்மா. அதனால்தான் இந்த விடாத அழைப்பு. ஏற்க விழைந்தாலும் ஏன் உடனே ஏற்க வேண்டும் என்ற விரக்தியில் அலைபேசியை பைக்குள் போட்டுவிட்டாள். 

அடுத்து கலைவாணியின் அழைப்பு வந்தது. இம்முறை எரிச்சலில் மொத்தமாக அமைதியாக்கிவிட்டாள். அனைத்திலிருந்தும் விலகி தானும் தன் மகளும் என இருந்துகொள்ள ஆசைதான், ஆனால் அது நிறைவு தராது என்று அவளுக்கே தெரியும். வீட்டில் இருக்கும்போது தோன்றாத பல விஷயங்கள், புரியாத பல அரசியல்கள் அங்கிருந்து வெளி வந்ததும் புரிந்தது. யோசிக்க நேரம் கிடைத்தது. அனைத்தையும் அலசிப் பார்க்க முயன்றாள். 

அருகில் விளையாடிக்கொண்டிருந்த உமையாள் சற்று நகர்ந்து சென்றுவிட, யோசனைகளுக்கு விடை கொடுத்து அவளின் பின்னே சில நேரம் ஓடிக்களைத்து வீட்டிற்கு கிளம்பினாள்.

துப்பட்டா கொண்டு உமையாளை வெயிலின் தாக்கத்திலிருந்து காத்த வண்ணம் வீடு வந்து சேர, அதற்காகவே காத்திருந்தவர் போல் வேகமாக வந்து கதவை திறந்தார் பத்மா.

“இந்த வெயில்ல எதுக்கு புள்ளையை தூக்கிட்டு அலையுற? மகிழ்கிட்ட பேசுனேன், அவன்கிட்ட கூட சொல்லாம கிளம்பிட்ட நீ.” குற்றச்சாட்டாக அடுக்க, மின்விசிறியின் கீழ் ஆசுவாசமாக அமர்ந்தவள் மகளுக்கு தண்ணீர் கொடுத்துவிட்டு சமையலறை சென்றுப் பார்த்தாள்.

“நீ பாட்டுக்கு சமைச்சி வைங்கன்னு கிளம்பிட்ட. பாப்பாக்கு சாதமும் பருப்பும் வச்சி பொரியல் பண்ணி இருக்கேன்.” என்ற பத்மாவிடம் தலையாட்டியவள் பருப்பு பிசைந்து எடுத்துவந்து மகளுக்கு ஊட்டிவிட்டாள். 

“புள்ளையை வச்சிக்கிட்டு தனியா போகாத சமு. எங்க போனாலும் மகிழ்கிட்ட சொல்லிட்டு போ.” அவர் பங்குக்கு சொல்லிவிட்டு டீவியை போட்டுகொண்டு அமர்ந்துவிட்டார்.

மெல்ல நழுவி மகளுடன் அறைக்கு வந்துவிட்டாள் சமுத்திரா. உமையாளுக்கு ஊட்டி முடித்து உறங்க வைத்தவள் அவளும் உண்டுவிட்டு படுக்க சென்றுவிட்டாள்.

‘ஆளே ஒரு மார்க்கமா இருக்கா? தனியா வெளில போறா, பேச்சுக்கு கூட சாப்டீங்களான்னு கேக்காம, சாப்பிட கூப்பிடாம அவபாட்டுக்கு சாப்பிட்டு ரூமுக்குள்ள அடிஞ்சிகிட்டா. என்னாச்சு இவளுக்கு?’ பத்மாதான் தலையை பிய்த்துக்கொண்டார்.

மாலையும் இவள் எழுந்து வராமல் போக, பத்மாவே பால் காய்ச்சி வைத்துவிட்டு அவள் அறையைப் பார்த்த வண்ணம் அமர்ந்துகொண்டார். சிறிது நேரத்தில் உமையாள் சிணுங்கும் குரல் கேட்க பின்னோடே கதவை திறந்துகொண்டு வந்தாள் சமுத்திரா.

தனக்கும் மகளுக்கும் குடிக்க எடுத்து வந்தவள் சாவுகாசமாய் கூடத்தில் அமர, அவளையே ஆராய்ச்சிப் பார்வை பார்த்து வைத்த பத்மா,

“நைட்டுக்கு பாப்பாக்கு நமக்கு?” என்று துவங்க,

உச்சு கொட்டியவள், “தோசை மாவு இருக்கு. ஊத்திக்கலாம்.” 

“சரி சரி, என்னவோ ஆளே சரியில்லை. நல்லா ரெஸ்ட் எடு சமு. பாத்திரம் எல்லாம் நான் தேய்ச்சிட்டேன்.” 

வேலை முடித்து வந்த மகிழ்நனை இவளும் கண்டுகொள்ளவில்லை அவனும் கண்டுகொள்ளவில்லை. இரவு உணவுக்கும் உமையாளுக்கு ஊற்றும் போதே தனக்கும் சேர்த்து ஊற்றிக்கொண்டு அமர்ந்துவிட்டாள் சமுத்திரா. தேவையின்றி மற்றவர்களுடன் பேச்சு வைத்துக்கொள்ளவில்லை. இவளுக்கு முடியவில்லை என்று நினைத்துக்கொண்டு நன்மதியே அனைத்தும் செய்தாள். 

இரவு உறங்க வந்த மகிழ்நன் அம்மா மகளை பார்த்துவிட்டு ஒரு தலையணை எடுத்து தரையில் போட்டு படுத்துக்கொண்டான். கவனித்த உமையாள் அப்பா அப்பா என்று கீழிறங்கப் பார்க்க,

“இரு இரு நானே வரேன்.” என மீண்டும் மேலே வந்துவிட்டான். 

மகளை தூக்கிக்கொண்டு மெத்தையில் அமரும் அவனை ஒருபார்வை பார்த்தவள் முதுகு காட்டி படுத்துவிட, சில நிமிடம் மகளிடம் பேசிக்கொண்டிருந்தவன் ஒருகட்டத்தில் அவளை சமாளிக்க முடியாமல் திணற,

“சமு இவளை தூங்க வையேன்.” அவ்வளவுதான் அவன் திறன். மகளிடம் தன் பருப்பு வேகாததால் மனைவியிடம் காட்டிய ஒதுக்கத்தை நொடியில் ஒதுக்கி வைத்துவிட்டு சரணடைந்துவிட்டான். 

அவளையும் அறியாது ஏளனச் சிரிப்பு ஒன்று உதித்து மறைந்தது. 

அதை கண்டுகொண்டவன் முகம் இறுகியது. முகம் திருப்பிக் கொண்டான். 

மகளை தன்புறம் இழுத்துக்கொண்டவள் பேச்சு கொடுத்தபடியே தட்டிக்கொண்டு தூங்க வைத்தாள்.

“காலையில ஏன் போன் எடுக்கல?” நினைவு வந்தவனாய் திரும்பிக் கேட்க, பார்வையை உயர்த்தி தாழ்த்திக்கொண்டாள் சமுத்திரா.

“உன்னைதான் கேக்குறேன், பாப்பாவை கூட்டிட்டு தனியா கோவிலுக்கு போயிருக்க, அம்மா போன் போட்டு சொல்லவும் என்னவோன்னு கூப்பிட்டா எடுக்க மாட்டேங்குற. என்னதான் நினைச்சிட்டு இருக்க நீ? திரும்ப வீட்டுக்கு வந்தும் கூப்பிடல, அம்மாக்கு கூப்பிட்டு தெரிஞ்சிகிட்டேன்.” அவன் குரல் உயரவும், ரொம்பத்தான் அக்கறை என்று எண்ணிக்கொண்டவள் உதட்டில் கைவைத்து எச்சரிப்பது போல் செய்ய, இவனுக்கு இன்னும் ஏறியது. 

“சமு.”

“ஷ்… பாப்பா தூங்குறா பாத்தா தெரியல?” சீற்றத்துடன் அவனை ஏறிட்டவள் சிணுங்கிய மகளை மீண்டும் தட்டிக்கொடுத்தாள். 

தனக்குள்ளேயே சீறித் தணிந்தவன் அவளையும் மகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு அவர்களுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டான். உறக்கத்திற்கு சென்றுவிட்ட மகளையும் முதுகு காட்டி படுத்திருப்பவனையும் மாறி மாறிப் பார்த்தவள் மனம் ஏனோ கனத்துப் போனது. முன்பு போல் தெளிந்த ஓடையாய் வாழ்க்கை இருக்கப்போவதில்லை என்பதில் திண்ணம். கணவனின் கவனம் தன்புறம் திரும்புகையில் ஆசைக்கு மாறாக சோர்வு வருகிறது. அனைவரும் சுற்றி இருந்தும் யாருமில்லாதது போல் ஒரு வெறுமை. பெருமூச்சுடன் கண்களை மூடி உறங்க முயன்றாள். 

மறுநாளும் நடந்த பத்மாவின் பாத்திர கச்சேரியில் விழிப்பு தட்டிவிட்டது சமுத்திராவுக்கு. ஆனால் எழுந்துகொள்ளாமல் கண்களை வெறுமனே மூடி படுத்துக்கிடந்தாள். வேலை செய்து பழக்கப்பட்டவளுக்கு வெறுமென இருப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருந்தது. ஆனாலும் அமைதியாக இருந்துகொண்டாள். மாறாக விழித்துக்கொண்டான் மகிழ்நன். என்னவோ லேசான உறக்கம்தான் ஆட்கொள்கிறது, மனைவியின்பால் உண்டான சஞ்சலத்தில் ஆழ்ந்த உறக்கம் தள்ளிச் சென்றுவிட்டது போல. நேற்று போலவே கடுகடுவென எழுந்துச் சென்றான்.

“டெய்லி என்னம்மா பிரச்சனை?”

இன்றும் கடுப்பாக வந்த சின்ன மகனைப் பார்த்த பத்மா பாய்ந்து வந்தார், “என்ன இன்னைக்கும் வெளில சாப்புட்டுக்குறீங்களா?”

“ப்ச்… அமைதியா செய்யேன் அம்மா.” சோர்வு அவனிடம். இதுவரை உமையாளின் குரலில்தான் அவ்வப்போது விழித்து உறங்குவான். சில நேரம் அதையும் மீறி உறங்கிய நாட்களும் உண்டு. இப்போது சிறு சத்தத்திற்கே விழிப்பு வருகிறது.

“சமுவுக்கு என்ன ஆச்சு? தினம் கரெக்ட்டா எழுந்து வந்துடுவா. ரெண்டு நாளா அவளுக்கு பதில் நீ வர? ஹாஸ்பிடல் போவோம்னா வேண்டாங்குறா, தனியா பையை தூக்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வரா. நீ கவனிக்குறியா இல்லையா அவளை?” மகனை பிடித்துக்கொள்ள, நெற்றியை தேய்த்துக்கொண்டவன்,

“ப்ச், உடம்புக்கு எல்லாம் ஒண்ணுமில்லை. பாப்பா ரொம்ப தொல்லை பண்றா. நீ அண்ணியை ஹெல்ப்புக்கு கூப்பிட்டுக்கோ.” அவனுக்கே இன்னும் புரியாத ஒன்றை எப்படி சொல்ல, எதுவோ சரியில்லை என்றமட்டில் இருந்த அவன் புரிதலை வெளிக்காட்டிக்கொள்ள மனமின்றி ஒருவாராய் மழுப்பி அறைக்கு வந்துவிட்டவன் மனைவியைப் பார்க்க, அவள் உறங்குவது போலத்தான் தெரிந்தது. 

‘என்னதான் பிரச்சனை இவளுக்கு? ஏன் இப்படி நடந்துக்குறா?’ யோசனையுடன் படுத்தவனுக்கு அவள் நிலை புரிபடாத ஒன்றாகவே இருந்தது. பேசினால் புரிந்துகொள்ளலாம், இவன் வாயை திறந்தாலே பூசலாகிவிடுகிறதே.

முன்தினம் போலவே தாமதமாக எழுந்து சென்ற சமுத்திரா மகளுக்கு கஞ்சி போட்டு கொல்லைக்கு சென்றுவிட, யோசனையுடன் சமையலைத் தொடர்ந்தாள் நன்மதி.

சின்ன மகன் யோசனை போலவே நன்மதி அறைக்கதவை தட்டி எழுப்பிவிட்டார் பத்மா.

“என்னால எல்லாருக்கும் செய்ய முடியாது, சாப்பாடு வேணும்னா நீ வா.” என கைப்பிடிக்காத குறையாக இழுத்துச் சென்றுவிட்டார்.

பத்தானதும் முருகனைத் தேடி சென்றுவிட்டாள் சமுத்திரா. அவளுக்கான அந்தத் தனிமை மிகவும் அத்தியாவசிய ஒன்றாகிப்போனது. மதியத்திற்கும் சேர்த்து காலையே சமைத்துவிட்டதால் இரவுக்கு மகளுக்கு கொடுக்கும் உணவையே தனக்கும் செய்துகொண்டு ஒதுங்கிக்கொண்டாள். பத்மா இரவு உணவு என்றதற்கு கூட பிள்ளையை காரணம் காட்டி அவளை தெருவில் விளையாடவிட்டு பக்கத்து வீட்டு பெண்களுடன் பேசிக்கொண்டு நேரத்தை ஓட்டிக்கொண்டாள். 

நன்மதி பத்மாவிடம் மாட்டிக்கொண்டாரா இல்லை பத்மாவிடம் நன்மதி மாட்டிக்கொண்டாளா என்று புரியாத வண்ணம் இருவரும் மாறி மாறி சாடிக்கொண்டு வேறு வழியின்றி மூன்று வேலை உணவையும் செய்தனர். 

இதே வழக்கம் தொடர்கதையாக மாறிவிடுமோ என்ற ஐயப்பாட்டோடு அவ்வீட்டு பெண்களை சுற்றி வர, சட்டென மாறிய வீட்டின் வானிலையை கணிக்க முடியாமல் அதனை தங்கள் வாழ்வியலில் பொறுத்த முடியாமல் திண்டாடினார்கள். ஒருகட்டத்தில் மனதளவில் விலக ஆரம்பித்த சமுத்திரா வெடிக்க, பேச்சுவார்த்தை முற்றி பெட்டிப் படுக்கையை கட்டிவிட்டாள்.