*11*

“உடம்பு முடியலையா சமு?” 

சமுத்திரா பழக்கி வைத்திருந்த பழக்கம் அப்படி கேட்க வைத்தது. உடல் உபாதை என்றால் மட்டுமே சமுத்திரா வேலை செய்ய இயலாது ஓய்வெடுப்பாள் என்பதால் அவள் உடல்நிலையை பற்றி கேட்டுக்கொண்டே பின்தொடர்ந்த பத்மாவிற்கு பதில் சொல்ல விழையாதவள் மகளுக்கு கஞ்சி காய்ச்சும் வேலையில் இறங்க, அவளை பார்த்துக்கொண்டே இன்னொரு அடுப்பில் இட்லி ஊற்ற ஏதுவாக பாத்திரத்தை எடுத்து வைத்தாள் நன்மதி.

ஓரக்கண்ணால் அவள் செய்வதை பார்த்துக்கொண்டாலும் தன் முன்னிருந்த வேலையில் கவனமாய் இருந்தாள் சமுத்திரா.

“அவளை தூக்கி வச்சிக்கிட்டே ஏன் அடுப்புகிட்ட நிக்குற? குடு நான் வெளில தூக்கிட்டு போறேன். நீங்க சாப்பாட்டை பாருங்க.” என்று அவளிடம் வந்து கைநீட்டிய பத்மாவிடம் பெருமூச்சுடன் பிள்ளையை கொடுத்தவள் அடுப்பை முழுதாக தூண்டிவிட்டு வேகமாக கஞ்சி காய்ச்சி எடுத்துச் சென்றாள். 

பத்மாவிடம் அமைதியாக விளையாடிய மகளை தூக்கிக்கொண்டு கொல்லைப்புறம் செல்லப் பார்க்க, “நான் கொடுக்குறேன். நீ சாப்பாட்டை கவனிச்சிக்குறியா?” தன் முகம் பார்த்த பத்மாவை அழுத்தமாக பார்த்தவள்,

“நான் பாப்பாவை கவனிச்சிக்குறேன் அத்தை. நீங்க அங்க பாருங்க.” என சமையலறையை கைகாண்பித்துவிட்டுச் செல்ல, பத்மாவின் முகம் சுருங்கியது. 

‘என்னாச்சு இவளுக்கு?’ என்ற எண்ணத்தோடு உள்ளே செல்ல, நன்மதி ஊற்றும் இட்லிகளைப் பார்த்துப் பதறியவர்,

“நீ சட்னி அரை, நான் இட்லியை பாத்துக்குறேன்.” அடைத்தது போல் இருக்கும் அவள் இட்லிகளை மேசையில் கொண்டு வைத்தால் மகன்களும் கணவரும் முகம் தூக்குவார்களே, அந்தப் பதட்டம். 

முகம் சுருக்கிய நன்மதி இட்லித் தட்டை அப்படியே வைத்துவிட்டு சட்னி அரைக்க, பதமாக இட்லி ஊற்றி வைத்து காலை உணவை கவனித்தார் பத்மா.

“மதியம் சமைக்கலையா?” கிளம்பும் சமயம் கந்தவேல் உணவுப்பை இல்லாததை கவனித்துக்கேட்க, காலை சின்ன மகன் காட்டிய முகத்தை நினைவு கூர்ந்து அதனை அப்படியே கடத்திவிட்டார்.

“உங்க புள்ளை வெளில வாங்கிக்கலாம்னு சொல்லிட்டான்.” 

பத்மா சொன்ன தொனி அவரை புருவம் சுருக்க வைத்தது, “ஏன் என்னாச்சு?”

பத்மா காலையில் யாரும் எழவில்லை என்று குறையாக பட்டியலிட, “நீதான் எழுந்துட்டியே சமைக்க வேண்டியதுதான?”

“ரெண்டு வேளைக்கும் சேர்த்து ஒத்தை ஆளா என்னால் எப்படி முடியும்?”

“ஏதோ செய்யாதவ மாதிரி பேசுற. ஒருநாள் தூங்கிட்டாங்க அதுக்கு இப்படி பேசணுமா. உடம்புக்கு முடியலையோ என்னவோ, என்னனு கேட்டு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போ.” என்றவர் சின்ன மகன் வரவும் அவனிடமும் அதையே சொன்னார்.

“சமுத்திராவுக்கு என்னனு பார்த்து ஹாஸ்பிடல் போகணும்னா கூட்டிட்டு போயிட்டு வா.” என்றுவிட்டு செல்ல, முகம் திருப்பிய மகிழ்நன் இறுகிய முகத்துடன் உணவு மேசையில் அமர்ந்தான். காலை அவன் காய்ந்துவிட்ட அதிருப்தியில் இருந்த பத்மாவும் எதுவும் சொல்லாமல் அவன் உண்ணும் எண்ணிக்கையை தட்டில் நிரப்பி வைத்துவிட்டு அமைதியாக அமர்ந்துகொண்டார். 

கண்ணெல்லாம் எரிய அதற்கு தோதாக மனமும் தகிக்க, தட்டில் என்ன இருக்கிறது என்றுகூட கவனியாமல் வேகவேகமாக உண்டு முடித்தவன் எழுந்து மகள் குரல் வரும் திசை நோக்கி எட்டிப்பார்த்தான். அம்மாவும் மகளும் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அம்மா துரத்துகிறாள் என சிரித்துக்கொண்டே உமையாள் ஓட, அவளின் அந்த கள்ளம்கபடமில்லாத சிரிப்பில் கொஞ்சம் இளகியவன் மனம் அதே பார்வையுடன் மனைவியைத் தொடர்ந்து இறுகியது.

‘என்ன வார்த்தை சொல்லிவிட்டாள்? இனி காலத்திற்கும் மறக்குமா?’ தொண்டையில் என்னவோ சிக்கியது போல் வலித்து உறுத்த, பட்டென்று வங்கிக்கு கிளம்பிவிட்டான். 

வேலைக்கு செல்லும் நால்வரும் கிளம்பும் வரை பின்புறமிருந்து தலை காட்டவில்லை சமுத்திரா. பரபரப்பாக அனைவரையும் அனுப்பிவிட்டு ஆசுவாசமாக அமர்ந்த பத்மாவின் பார்வை பின்புறம் சென்றது.

‘இன்னும் என்ன பண்றா? இவ்ளோ நேரமா கஞ்சி குடுக்குறா?’ எழுந்து சென்று பார்க்க நினைத்தாலும் உடல் அலுப்பு அவரை அப்படியே அமர வைத்தது. 

சிறிது நேரம் சென்று வந்தவள் தனக்கென்று சிற்றுண்டியை போட்டுக்கொண்டு மகளுடன் கூடத்தில் அமர்ந்தாள். உமையாள் கையில் பொம்மையை கொடுத்து பக்கத்திலேயே அமர்த்திக்கொள்ள, 

“மதியம் எல்லாரும் வெளில சாப்பிட்டுக்குறேனு சொல்லிட்டாங்க. நம்ம மூணு பேருக்கு மட்டும் செஞ்சுக்கிட்டா போதும்.” பத்மா தகவல் போல் சொல்ல, நிமிர்ந்து பார்க்காது தலையாட்டினாள் சமுத்திரா.

சமுத்திராவின் இந்த அமைதியில் ஏதோ நெருட அவளையே உற்றுப் பார்த்தார் பத்மா. முகம் சோர்ந்து இருந்தது, உடனே கணவர் சொன்னது நினைவு வர,

“உடம்பு எதுவும் முடியலையா சமு? டாக்டர்கிட்ட போயிட்டு வரலாமா?” அவருக்கு வேறு எண்ணங்கள். கொஞ்சம் எதிர்பார்ப்பும்தான். உமையாள் உண்டான சமயம் சில நாட்கள் இதுபோன்று சோர்ந்து இருந்தாள் சமுத்திரா. 

“கொஞ்சம் டையர்ட், வேற ஒண்ணுமில்லை.”

“நாள் எதுவும் தள்ளியிருக்கா? ஒருதடவை டாக்டரை பார்த்துட்டு வந்துடலாமா?” 

பட்டென்று நிமிர்ந்த சமுத்திராவின் முகத்தில் அதிருப்தியின் சாயல். 

“இவளுக்கு இன்னும் ரெண்டுகூட ஆவல அத்தை.” முன்னர் என்றால் இப்படி பேசியிருப்பாளோ என்னவோ… இன்று சமாளிக்கத் தோன்றவில்லை. தானாக கொஞ்சம் கடினம் கூட்டி பேச வந்தது. 

“அதெல்லாம் நம்ம கையிலையா இருக்கு. சில நேரம் டக்குனு தங்கிடும். பெருசுதான் ஒன்னும் சொல்லமாட்டேங்குது.” பெருமூச்சு அவரிடம். 

அடிக்கண்ணால் பார்த்த சமுத்திரா தன் தட்டில் கவனம் செலுத்த,

“கல்யாணம் ஆகி மாசம் ஓடுதேன்னு கேட்டா முதல்ல கண்ணை கசுக்குவா. பாவமா இருக்கேனு விட்டுட்டேன், வருஷம் ஓடிடுச்சு டாக்டர்கிட்ட காட்டணுமா இல்லையா? அதை சொன்னதுக்கு மூக்குக்கு மேல ரோஷம் வந்துடுச்சு. ஒரு ஆறு மாசம் போனா, அப்புறம் அப்படியே விட்டுட்டா. விவரம் இல்லாம இருக்காங்களேன்னு திரும்ப டாக்டர்கிட்ட போக சொன்னா அது என்னவோ கொலை குத்தம் மாதிரி என் புள்ளையே அப்படி ஒரு பேச்சு, அதுலேந்துதான் ஏத்தம் வந்துடுச்சு அவளுக்கு. நானே கூட்டிட்டு போறேங்குறேன் ஒழுங்கா இருந்தவ எதிர்த்து பேச ஆரம்பிச்சிட்டா… அவளை ஒன்னு கேட்டுடக் கூடாது… நான் சொன்ன டாக்டர்கிட்ட போயிருந்தா எப்போவோ பேரன் பேத்தி பாத்திருக்கலாம். அதான் சொல்றேன், பெரியவங்க சொன்னா கேக்கணும். அதுல ஒரு காரணம் இருக்கும்.” என்று வந்து நிறுத்த, இதெல்லாம் புது செய்தியாக இருந்தது சமுத்திராவுக்கு.     

தான் வருவதற்கு முன் வீடு எப்படி இருந்தது என்று பெரிதாக தெரியாது என்றாலும் நன்மதி ஆரம்பத்திலிருந்தே ஒதுக்கத்தோடு இருந்திருப்பாள் என்ற எண்ணம். இன்று மாமியார் பேச்சில் முன்கதையிருப்பதாக தோன்ற அது எதுக்கு நமக்கு என்று ஆராய்வதை நிறுத்திக்கொண்டாள்.

“சமு கிளம்பு போயிட்டு வந்துறளாம்.”

பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “நாள் தள்ளிப்போகல. அதோட உமையாள் இன்னும் சின்ன குழந்தைதான்.” 

இன்னும் உடைத்துப் பேசிவிட மனம் துறுதுறுத்தாலும் சட்டென்று வார்த்தை வரவில்லை. சில மாதங்களாகவே கணவன் மனைவிக்குள் எதுவும் சரியில்லை. ஒன்று இவளுக்கு சஞ்சலம் இல்லையா அவனுக்குக் கோபம். இதில் நேற்று பேசிவிட்டது வேறு அத்தனை எளிதில் சரியாகும் என்று தோன்றவில்லை. அவன் அருகாமையை முன்பு போல் இலகுவாக ஏற்கமுடியுமா என்பதில் சந்தேகமே. பிறகு எங்கிருந்து இன்னொரு பிள்ளை வருமாம்… அப்படியே வந்தாலும் அதை நல்லவிதமாக ஏற்கும் மனநிலை இப்போது சுத்தமாக இல்லை. சங்கடமும் சலிப்பும் போட்டி போட்டுக்கொண்டது. 

“என்னவோ சொல்ற… தள்ளிப்போடாத இதெல்லாம். காலாகாலத்துல நடந்துடனும். அப்போதான் நமக்கு வயசாகி கை கால் நோகுறதுக்கு முன்னாடி வளர்த்து விட்டுரலாம்.” என்றதை கேட்டும் கேட்காதது போல் எழுந்து சென்றுவிட்டாள். 

உமையாள் பின்னோடே செல்ல, உண்ட தட்டை அப்படியே போட்டுவிட்டு மகளை தூக்கிக்கொண்டு அலைபேசியுடன் அறைக்குள் நுழைந்துகொண்டாள்.

‘என்னதான் அந்த ரூம்ல இருக்கோ. போய் போய் அடஞ்சிக்குறா.’ தன் போக்கில் டீவி போட்டு அமர்ந்துவிட்டார் பத்மா.

உமையாளுக்கு விளையாட்டு சாமான்கள் எடுத்துக்கொடுத்துவிட்டு ஆசுவாசமாக அமர, சில நிமிடங்களிலேயே பொம்மையை தூக்கி எறிந்துவிட்டு இவள் மடியில் வந்து விழுந்து சிணுங்கினாள் உமையாள்.

“என்ன பாப்பா? விளையாடுடா செல்லம்…” சோர்வாக மகளை மடியில் அமர்த்தி மருத்துவ உபகரணங்கள் அடங்கிய செட்டை எட்டி இழுத்து, “பாப்பா டாக்டராம், அம்மாவுக்கு ஹார்ட்பீட் பாக்குறீங்களா?” பேச்சுக்கொடுத்துக்கொண்டே செத்தெஸ்கோப் போன்றிருந்ததை உமையாள் காதில் மாட்ட, அதை உதறித் தள்ளினாள் உமையாள்.

“என்னடா பாப்பா?”

“ம்மா…”

“ம்ம்ம்…”

“அம்மா…” அம்மா அம்மா என்று சிணுங்கினாளே ஒழிய என்னவென்று சொல்லத்தெரியவில்லை.

வேறு விளையாட்டு பொருட்களை எடுத்துப்போட்டு அவளை சமாதனப்படுத்த முயல, அன்றைக்கு என்ன ஆனதோ சில நிமிடங்களுக்கு ஒருமுறை சிணுங்கிக்கொண்டே அவளிடம் வந்து மோதி கட்டிக்கொண்டாள்.

வெளியே சென்றால் சமாதானம் ஆவாளோ என்றெண்ணி பின்புறம் அழைத்துச் செல்ல, அது கொஞ்சம் வேலை செய்தது. சிறிது நேரம் இலைகளை பிய்த்துப் போட்டு விளையாடினாள்.

இவர்களை பார்த்துவிட்டு பத்மாவும் வந்தவர் சில நிமிடங்கள் பேத்தியுடன் செலவழித்துவிட்டு மருமகளை ஏறிட்டார், “தீபாவளி பலகாரம் எப்போ செய்யலாம் சமு? கல்யாணிக்கு சீர் வைக்க நாள் பாத்துட்டேன், இன்னும் பதினைஞ்சு நாள் இருக்கு. என்னென்ன வாங்கணும்னு லிஸ்ட் போட்டு ரெடி பண்ணிட்டோம்னா வசதியா இருக்கும்.” என்றதை முதலில் காதில் வாங்காதது போல் காட்டிக்கொள்ள, பத்மா அவள் கவனிக்கவில்லையோ என்று நினைத்து மீண்டும் கேட்டார்.

பதில் சொல்லும் வரை ஓயமாட்டர் என பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “மதி அக்காவும் வந்துடட்டும். கலந்து பேசி செய்யலாம்.” என்று சொல்ல, பத்மாவின் முகம் போன போக்கில் இவள் புருவங்கள் நெறிப்பட்டது.

“அவ கைக்கு அதெல்லாம் நல்லா வராது சமு. அவ எப்போ வருவான்னு காத்துட்டு கிடக்கணும். அதோட அவளை முறுக்கு புழிய சொன்னா சுத்தியல் வச்சிதான் உடைச்சு சாப்பிடணும்.”

பத்மாவின் பேச்சில் இவளுக்கு ஆதங்கமும் கோபமும்.

“எனக்கு செஞ்சுக்கொடுக்குற மாதிரி பதமா நீங்க மாவு ரெடி பண்ணி கொடுங்க, அவங்க செய்வாங்க.” என்றாள் உள்ளத்தின் எரிமலையை அடக்கியபடி.

“என்னவோ சொல்ற, ஆனா உன் பக்குவம் அவளுக்கு வராது. உன்னை தனியாவா செய்ய விட்டுருவேன், ரெண்டு பேருமா சேர்ந்து செய்வோம்.” பத்மா விடுவது போல் தெரியவில்லை, சுற்றி சுற்றி வருகிறார் என்கவும் பேச்சை நிறுத்திக்கொண்டவளுக்குள் யோசனை ரேகைகள். 

கணவனே கசந்து போகையில் முன்பு போல் முன்னின்று எதையும் செய்ய மனம் ஒத்துழைக்கவில்லை. அதனை பட்டென்று முகத்தில் அடித்தது போல் கூறவும் வரவில்லை. பதமாக எப்படி சொல்வது எப்படி கழண்டு கொள்வது என்ற யோசனையில் இருந்தவளுக்கு உமையாள் சிணுங்கி கை கொடுத்தாள்.

மகளை தூக்கிக்கொண்டு எழுந்தவள் திடுமென முடிவெடுத்து அங்கிருந்து தப்பித்துக்கொள்ளும் எண்ணத்தில், “கோவிலுக்கு போயிட்டு வந்துர்றேன் அத்தை.”

“எது? இந்நேரமா?” திடுமென கோவிலுக்கு என்று சொல்லவும் பத்மாவுக்கு சில நொடிகள் விளங்கவில்லை. 

“பத்துதானே ஆகுது.” என்றபடியே உள்ளே சென்றுவிட்டாள்.