மாலை கணவன் வரும் நேரம் கூடத்தில் அமர்ந்து மகளுக்கென பிரத்தியேகமாக வாங்கியிருந்த புத்தகங்களைப் பரப்பி வைத்து அதிலிருந்த படங்களை உமையாளுக்கு காட்டி கதை சொல்லிக்கொண்டிருந்தாள் சமுத்திரா. சுவாரசியமாக கேட்டுக்கொண்டிருந்த உமையாளும் ஈடுபாட்டுடன் பதில் சொல்லிக்கொண்டிருக்க, உள்ளே தந்தை நுழையவும் புத்தகத்தோடு அவனிடம் ஓடிச் சென்றாள்.
புத்தகத்தில் இருந்ததை சுட்டிக்காட்டி சமுத்திரா சொல்லிக்கொடுத்ததை அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.
“அவனை உக்காரவிடேன் பாப்பா. என்ன சமு பாத்துட்டு இருக்க, அவனே கலைச்சி போய் வந்திருக்கான் இவ நகரவிடாம புடிச்சிகிட்டா, போய் தூக்கு அவன் முகம் கழுவிட்டு வரட்டும்.” பேத்தியிடம் துவங்கி மருமகளிடம் முடித்தார் பத்மா.
குனிந்த தலை நிமிராமல் எழுந்து வந்து மகளை தூக்கிக்கொண்டு வாசலுக்கு சென்றுவிட்டாள் சமுத்திரா.
“நான் காபி போடுறேன் மகிழு. நீ முகம் கழுவிட்டு வா.” என்ற பத்மாவின் பேச்சு அவன் கருத்தில் பதியவில்லை. கவனமெல்லாம் நிமிர்ந்து தன் முகம் கூடப் பார்க்காது கடந்து செல்லும் மனைவியின் மீது இருந்தது. புருவச் சுருக்கத்துடன் நின்றவன் பத்மா உசுப்பவும் யோசனையோடு அறைக்குச் சென்று சுத்தப்படுத்தி வந்தான்.
இருட்டும் வரை உமையாளை வெளியேவே அருகிலிருக்கும் சிறுவர்களுடன் விளையாடவிட்டாள் சமுத்திரா. வெகு நேரமாக அவளைக் காணாமல் மகிழ்நன் வெளியே வந்து பார்க்கும் சமயம் பக்கத்து வீட்டு பெண்ணுடன் பேசிக்கொண்டிருக்க மீண்டும் உள்ளே சென்றுவிட்டான்.
உமையாளுக்கு உணவு கொடுக்கும் நேரம் அவளை தூக்கிக்கொண்டு வந்தவள் நேரே சமையலறை செல்ல, டீவியில் ஆழ்ந்திருந்த அம்மாவும் மகனும் கவனம் கலைந்து அவளைத் தான் பார்த்தனர்.
“உடம்பு சரியில்லைடா அவளுக்கு? காலையிலிருந்து சோர்வா இருக்கா? இல்லை நீ எதுவும் சத்தம் போட்டியா?” பத்மா மகனை நோண்ட, அப்படியெல்லாம் எதுவும் இல்லை என்று சமாளித்தான் மகிழ்நன்.
“இல்லைனா சரிதான். சுறுசுறுன்னு இருப்பா எப்போதும்.” என்று சொல்லிக்கொண்டே பத்மா டீவியில் கவனம் பதிக்க, யோசனையானான் கணவன்.
தன் போல் மகளை இடுப்பில் வைத்துக்கொண்டு அவளுக்கு ஏற்றது போல் தோசை ஊற்றி எடுத்து வந்தவள் தண்ணீரும் எடுத்துக்கொண்டு மீண்டும் வெளியில் சென்று ஊட்டப்போக,
“இருட்டுற நேரம் வெளில வச்சி ஊட்டாத. டீவியை ஆப் பண்றேன் இங்கேயே ஊட்டு.” என்றுமில்லாமல் இன்று இரவு உணவுக்கும் சமுத்திரா பேத்தியை வெளியே அழைத்துச் செல்ல, பத்மா தடுத்தார்.
“பசங்க எல்லாம் விளையாடுறாங்க அத்தை, அவங்களை பாத்துட்டே சாப்பிட்டுருவா.” நிற்காமல் சொல்லிக்கொண்டே வெளியே சென்றுவிட்டாள்.
புருவம் உயர்த்திப் பார்த்த பத்மாவோ, “நின்னு சொல்லிட்டு போகக் கூட வலிக்குது. என்னவோ எனக்கு வாய்ச்ச ரெண்டும் ஒவ்வொரு தினுசா இருக்கு.” என முனகிக்கொண்டே அமர்த்திய தொலைக்காட்சியை மீண்டும் உயிர்ப்பித்தார்.
வாசலில் விளையாடிக்கொண்டே உணவு உண்ணும் உமையாளை பார்த்த வண்ணம் வீட்டினுள் சென்றனர் செழியனும் நன்மதியும். தொடர்ந்து கந்தவேலும் வர, அரைமணி நேரம் கழித்தே உள்ளே சென்றாள் சமுத்திரா. உணவு மேசையில் மாநாடு கூடியிருந்தது. நன்மதி சமையலறையில் தோசை ஊற்ற ஊற்ற பத்மா எடுத்து வந்து கொடுத்தார். இவளைப் பார்த்ததும்,
“மதிக்கு ஒத்தாசையா இரு சமு. புள்ளையை நான் பாத்துக்குறேன், கால் வலிக்குது.” என அமர்ந்துவிட, பெருமூச்சுடன் சமுத்திரா சமையலறை செல்ல, நன்மதியோ,
“நான் கொண்டு போய் கொடுக்குறேன். நீ தோசை ஊத்துறியா சமு. நான் தடியா ஊத்துறேனாம், நீ ஊத்துற மாதிரி மெலிசா வேணுமாம்.” என்று முகம் பார்த்தாள் நன்மதி.
இதுவேறா என்று சோர்வாக நினைத்த சமுத்திரா, மறுக்க நினைத்து நன்மதி முகம் பார்க்க அவள் அதைவிட பாவமாக நின்றாள்.
நன்றியாக அவளைப் பார்த்தவள், “எல்லாரும் சாப்பிட்டாங்க, நமக்கு மட்டும் ஊத்தி எடுத்துட்டு வா. சேர்ந்து சாப்பிடலாம். கொஞ்ச நேரம் உக்காருறேன் நான். தோசை கனமா இருந்தாலும் எனக்கு ஓகேதான். மூணு போதும் எனக்கு.” என சொல்லிவிட்டு சென்றவளை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாமல் பார்த்த சமுத்திரா மளமளவென இருவருக்கும் தோசை வார்த்து வந்தாள். நன்மதியும் சமுத்திராவும் எவ்வித பேச்சுமின்றி உண்ண, கூடத்தில் பேச்சு கலைகட்டியது.
“அத்தைங்களுக்கு சீர் அனுப்பனுமே. தீபாவளி நெருங்குது நேர்ல போயிட்டு வந்துர்றீங்களா?” கந்தவேல்தான் ஆரம்பித்தார்.
“நீங்க போகல?” எப்போதும் கந்தவேலே மனைவியுடன் சென்று வருவார். அந்த நினைவில் செழியன் கேட்க,
“அலைச்சலை குறைச்சிக்கலாம்னு பாக்குறேன். பெரியவ வீட்டுக்கு நீயும் சின்னவ வீட்டுக்கு மகிழும் மருமகளை கூட்டிட்டு போயிட்டு வந்துர்றீங்களா?” என மகன்கள் முகம் பார்த்தார்.
“தீபாவளிப் பலகாரம் செஞ்சதும் கல்யாணிக்கு சீர் வச்சிக்கலாம். முறுக்குன்னா அவ புள்ளைங்களுக்கு ரொம்ப இஷ்டம்.” என்று இடைபுகுந்த பத்மாவின் அறிவிப்புக்கு அங்கு ஆதரவு பலமாய் இருந்தது.
செழியன் ஓரக்கண்ணால் மனைவியைப் பார்க்க, இங்கு நன்மதியின் தலை மறுப்பாக ஆடியது. பார்வையை திருப்பிக்கொண்டு தொண்டை செறுமிய செழியன்,
“வேலை டைட்டா போயிட்டு இருக்கு ப்பா, இப்போ அலைய முடியாது. இந்த டைம் மட்டும் லீவ் போட்டுட்டு நீங்களே போயிட்டு வந்துருங்களேன். பொங்கலுக்கு நான் போறேன்.” என்றான்.
பெரிய மகனின் பதிலில் முகம் சுருங்கியவர் சின்னவனைப் பார்க்க, “நாங்க சின்னத்தை வீட்டுக்கு போயிட்டு வரோம் அப்பா.” என்றுவிட்டான் மகிழ்நன்.
“அப்போ சரி, பழம் எல்லாம் வாங்கிட்டு வந்துடு. இந்த வாரம் சீர் வேலையை முடிச்சிடலாம்.” கந்தவேல் முடித்துக்கொள்ள, அமைதியாக இருந்த சமுத்திராவின் கவனத்தில் அனைத்தும் பதிந்தது.
செழியன் நன்மதியின் அனுமதி வேண்டுவதாகட்டும் நன்மதி மறுப்பை கண்டு அவனும் மறுப்பதாகட்டும்… கண்கள் தன்போக்கில் தன் கணவனிடம் செல்ல அவன் இவளை பார்க்கக்கூட இல்லை, செல்கிறோம் என இவளுக்கும் சேர்த்து வாக்கு கொடுத்துவிட்டான். அதிருப்தியும் எரிச்சலும் மேலெழும்பியது. பெயருக்கு கூட தன் விருப்பத்தை கேட்க மாட்டாரா? ஆதங்கப்பட்டவள் அப்பொழுது ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் செல்லக்கூடாது என்று தீர்மானித்துக்கொண்டாள். எப்பொழுது தன்னை புரிந்துகொள்ளாமல் தன் எண்ணங்களை தாழ்த்திப் பேசினானோ இனியும் தான் தழைந்து போவதில் அர்த்தமில்லையே. யாருக்காக விட்டுக்கொடுத்துப்போனாளோ அவனிடமே பலனில்லையே. வேதனையுடன் மீதி உணவை விழுங்கிவிட்டு மகளை தூக்கிக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டாள். நன்மதி அவளை யோசனையாக பார்த்து சமையலறையை ஒதுங்க வைத்தாள்.
மகிழ்நன் வரும்முன் உறங்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு போட்டதை போட்டபடி வந்தவளுக்கு சவாலாக இருந்தாள் மகள். உண்ட தெம்பில் உற்சாகமாக உறங்குவதற்கான எவ்வித அறிகுறியுமின்றி தலையணையை இழுத்துப்போட்டு அதில் ஏறி அமர்ந்து விளையாட, தலையில் கைவைத்த சமுத்திரா மகளை தன்னருகில் பிடித்திழுத்து அமுக்கினாள்.
“தூங்கு பாப்பா, நாளைக்கு விளையாடலாம்.”
சிணுங்கலுடன் அவள் பிடியிலிருந்து வெளி வந்த உமையாள் தலையணை கொண்டே தன்னை தடுக்கும் அன்னையை மொத்த,
சட்டென்று சமுத்திரா திரும்பி படுத்துக்கொண்டாள். அவளை ஒரு பார்வை பார்த்த மகிழ்நன் மகளிடமிருந்து தலையணையை பிடுங்கி வைக்க, அவன் கையிலேயே நச்சென்று ஒரு அடி விழுந்தது.
“அடிக்கக்கூடாது பாப்பா.” கண்களை உருட்டி அவன் மகளைக் கண்டிக்க, எழுந்துவிட்டாள் சமுத்திரா.
“அடிக்கிறியா நீ? என்ன பழக்கம் பாப்பா?” மகளை தன் மடிக்கு மாற்றி அவளுக்கு புரியும்படி சொல்ல, எம்பி அம்மாவின் கன்னத்தில் முத்தம் வைத்து அவள் தலைமுடியையும் இழுத்துவிட்டாள்.
விடிவிளக்கு எரிய, எழுந்து சென்று அணைத்தான் மகிழ்நன். பெருமூச்சுடன் மகளை அணைத்தவாறு படுத்துக்கொண்டு மெல்லிய குரலில் உமையாளுக்கு ஏற்றது போல் சமுத்திரா கதை சொல்ல, அழகாக ம் கொட்டினாள் சின்னவள். புன்சிரிப்புடன் அவர்களின் சம்பாஷைகளை ரசித்தபடி படுத்திருந்தான் மகிழ்நன். சில நிமிடங்களில் உமையாள் குரல் தேய்ந்துபோக, சமுத்திராவின் குரலும் நின்றது. அதற்காகவே காத்திருந்தவன் போல் அவர்கள் புறம் திரும்பியவன் இருவரையும் பார்க்க, கண்கள் மூடி நிர்மலமாக இருந்தனர்.
எம்பி சமுத்திராவின் நெற்றியில் ஒரு முத்தம் வைத்து நகர்ந்தவன், வாகாய் இருந்த அவள் வலக்கன்னத்தை பிடித்துக்கொள்ள பட்டென்று கண்விழித்தாள் சமுத்திரா.
“நேத்தி அதிகம் பேசிட்டேனா? நீ நீயாவே இல்லை.” என்றவன் குரல் பேதத்தில் இருந்த உணர்வை அவளால் உணரமுடியவில்லை. புருவம் நெறிபட அவனைப் பார்த்தாள்.
“ஏதோ பேச ஆரம்பிச்சி எங்கேயோ போயிடுச்சு. அதையே நினைச்சிட்டு இருக்காத. ஏதோ கோவத்துல பேசிட்டேன். நீதான் இங்க எல்லாரையும் பாத்துக்குற, உன் ஆசையை நான் கன்சிடர் பண்ணியிருக்கணும். ப்ச்… நகை விஷயத்துல என்னாலையும் வேற பண்ண முடியல சமு. பணம் இருந்திருந்தா அன்னைக்கே பாப்பாவுக்கும் வாங்கி இருப்பேன்…” என்றவன் மேலும் பேசும் முன் அவன் கையை தட்டிவிட்டாள் சமுத்திரா.
என்னவோ என்று அவன் பார்க்க, அவனுக்கு முதுகு காண்பித்து திரும்பிக்கொண்டாள். யோசனையுடன் மகிழ்நன் அவள் தோளில் கைவைக்க, உதறினாள். அலுங்காமல் மகளைத் தூக்கி மனைவியை தாண்டிக்கொண்டு மறுபுறம் கிடத்தியவன் மனைவியை பின்னிருந்து அணைத்துக்கொள்ள, அழகை வரும் போலானது சமுத்திராவுக்கு.
ஒருகை மனைவியின் இடை தீண்டி வயிறோடு சேர்த்துப் பிடித்திருக்க, மற்றொரு கை அவள் தலைக்கடியில் சென்று அவளுக்கு தலையணையாக மாறிக்கொண்டது. செவியோரம் கிசுகிசுப்பாய் அவன் பேச முயன்றாலும் அடர்த்தியாகவே வந்தது அவன் பேச்சு.
“கோவமா சமு? இதுவரைக்கும் இப்படி பேசியிருக்கேனா உன்னை? இந்த டைம் நீயும் கொஞ்சம் பிடிவாதமா இருந்துட்ட. நீ இப்படியிருக்குறது எனக்கு எப்படியோ இருக்கு. இதை இதோட விட்டுரலாம், மறந்துடலாம், நானும் இதைப்பத்தி இனி பேச மாட்டேன். நீயும் கன்சிடர் பண்ணு.” என்றபடியே பட்டும்படாமல் அவள் செவி தீண்டி நழுவியவன் அவள் கழுத்தில் இளைப்பாற, முயன்று அவனை விலக்கியவள் அதே வேகத்தில் திரும்பி,
“பொண்டாட்டின்னா பசிக்க, படுக்க மட்டும்தானா?”
அவளின் ஆவேசத்தை விட, அவள் முன்வைத்த கேள்வியில் அமிலம் பட்டது போல் விலகினான் மகிழ்நன். அதிர்ந்து கூட பேசாத மனைவியிடமிருந்து இப்படியொரு வார்த்தை கேட்ட அதிர்வு அவனை சில நொடிகள் செயலிழக்க வைத்தது.
கேட்டுவிட்டு அப்படியொரு அழுகை அழுதாள் சமுத்திரா. எப்படி அப்படிப்பட்ட வார்த்தைகள் அவளிடமிருந்து வந்தது என்று அவளுக்கே புரியவில்லை. பேசியபின்தான் விளங்க, அதன் அழுத்தத்தை தாங்கமுடியவில்லை அவளால். கைகளால் முகத்தை மறைத்துக்கொண்டு உடலைக் குறுக்கி உடல் குலுங்க விம்மினாள். இதயம் தடதடக்க உடல் இடையிடையே நடுங்கியது.