பார்வை சென்று சேரும் இடமெல்லாம் இளம்பச்சையும் அடர்பச்சையும் இடையிடையே மலர்ந்து குலுங்கும் மலர்களுமாய் விரிந்திருந்த அவ்விடம் கண்களுக்கு விருந்து பரிமாறப்பட்டது போலிருந்தது. பஞ்சென மேனி தீண்டிய பொடி மழைத்தூறல்கள் அவ்விடத்திற்கு இன்னும் குளுமை சேர்த்து மனதை குளிர வைத்தது. ஆரவாரமின்றி மென்மையாக வீசும் தென்றல் தேகம் உரசிச் செல்ல, கைகளை பரபரவெனத் தேய்த்து சூடேற்றி தன்னைத்தானே கட்டிக்கொண்டாள். உறைக்கும் குளிர் இல்லையென்றாலும் வெயிலுக்கு பழகிப்போன உடலுக்கு இந்த குளிரே ஊசியாய் துளைத்தது. கம்பளிக்குள் செல் என்று கட்டளையிட்ட அறிவினை புறந்தள்ளி மனதின் ஆசைக்கு வழிவிட்டு அந்நொடியை ஆழ்ந்து அனுபவித்தாள். பின்னிருந்து இருகைகள் அவளை வாரிச் சுருட்ட, தன் முதுகு உணர்ந்த நெஞ்சத்தில் சாய்ந்துகொண்டாள். பேச்சற்ற நெருக்கங்கள் கொடுத்த இனிமையை அனுபவித்தபடி கண்களை மூடியவள் ஆழ மூச்சிழுத்து திரும்பிப் பார்த்தாள். அவளை காதலுடன் எதிர்கொண்டது அவளை களவாண்ட இருவிழிகள்.
சட்டென வேகமெடுத்த காற்றின் வீரியத்தால் திசை மாறிய மழைத்தூறல்கள் பால்கனியில் நின்றுகொண்டிருந்தவள் மீது மலர்க்குவியலாய் விழ, அணைப்பிலிருந்து வெளிவந்து தலையை மட்டும் பால்கனியின் கூரையை விட்டு வெளியே நீட்டினாள். விடியலின் பிரதிபலிப்பாய் வெளுத்திருந்த வானம் கார்மேகத்தின் படையெடுப்பால் மீண்டும் இருள் போர்த்திக்கொள்ள, மழை வேகமெடுத்தது.
தலையை பட்டென உள்ளிழுத்துக்கொண்டவள் உடல் குளிரில் நடுங்க ஆரம்பிக்கவும் திரும்பிப்பார்த்து தலையசைத்தவள் பால்கனி விட்டு நகர மனமேயின்றி அறைக்குள் வர, கண்ணில்பட்டது காபி குடுவை. நாற்காலியை இழுத்துப்போட்டு தனக்கான காபியை கண்ணாடி கப்பில் ஊற்றிக்கொண்டு கண்ணாடி தடுப்பின் வழியே தெரிந்த இயற்கையில் மீண்டும் இலயித்தாள். அவளருகில் வந்தமர்ந்தவனும் தனக்கு வேண்டியளவுக்கு எடுத்துக்கொண்டான். மனம் நிர்மலமாக இருக்க, இயற்கையின் செழிப்பு மனதை புத்துணர்ச்சியாக்கியது.
அன்றாடத்தின் கவலைகள் இன்றி அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்ற யோசிக்கவேண்டிய அவசியமின்றி காலை உணவு என்ன வேண்டும் என்று இவளிடம் கேட்டுக்கொண்டு அறைக்கே அனுப்பப்பட்டது. ஆசுவாசமாய் ஆர்பரிப்பாய் தனக்காக கொண்டுவரப்பட்ட உணவுகளை பார்த்தவள் தனக்கென தட்டில் பரிமாறிக்கொள்ளப்பார்க்க, டொம்மென்ற சத்தம். பதறி திரும்பினால் இடி விழுவது போல் மீண்டும் அதே சத்தம். நெஞ்சம் அதிர, உடல் உதற விழித்தவள் பட்டென்று எழுந்தமர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள். ஒரு நொடி ஒன்றும் புரியவில்லை, மலங்க மலங்க விழித்துவிட்டு கண்ணை கசக்க, மீண்டும் சத்தம். இம்முறை எங்கிருக்கிறோம் என்று புரிந்துவிட, நெற்றியில் தட்டிக்கொண்டாள். கனவாம். பத்துக்கு பத்தைவிட சற்று பெரிய அறையில் சுவற்றின் ஓரம் போடப்பட்டிருந்த கட்டிலில் சுவற்றின் பக்கம் இருந்தாள் அவள். சமுத்திரா. பின்னிருபதின் துவக்கத்திலிருப்பவள்.
முகத்தை அழுந்த துடைத்துக்கொண்டு அவசரமாக தன்னருகில் பார்க்க, சத்தத்தில் சிணுங்கிப் புரண்டது அவள் குழந்தை. ஐயோ என மனதிற்குள் அலறி நெஞ்சில் கை வைக்காத குறையாக மகளை தட்டிக்கொடுத்து உறக்கத்தை தொடர வைக்க முயன்றாள். ஆனால் பிள்ளை விழித்துக்கொண்டு உறக்க கலக்கத்தில் அவளைப் பார்த்தது.
‘அவ்வளவு தானா தூக்கம் இன்னைக்கு. போச்சுடா.’ அலுப்பை மறைத்துக்கொண்டு மகளை தூக்கியவள் கட்டிலின் மறுபக்கம் உறங்கிக்கொண்டிருந்த கணவனைப் பார்த்தாள். வெளியே கேட்கும் அரவம் எதுவும் அவன் செவி தீண்டியதற்கான அடையாளமே இன்றி நிர்மலமாக உறங்கிக்கொண்டிருந்தான்.
‘இவரை மாதிரியே நமக்கும் எந்த சத்தமும் கேக்காம இருக்கலாம். எங்க?’ என சலித்துக்கொண்டே மகளைத் தூக்கியவள் மெல்ல கணவனைத் தாண்டி இறங்கினாள். கொஞ்சம் சிரமம்தான். தன் முழு உயரத்தையும் கட்டிலில் நீட்டி வழியை அடைத்துக்கொண்டு படுத்திருந்தான். கொஞ்சம் சுருக்கிக்கொண்டு படுத்தால் என்னவாம் மனதிற்குள் காட்டமான முனகல். கட்டிலின் உட்பக்கம் படுத்தால் அவனுக்கு காற்று போதவில்லையாம், அதனால் உள்புறம் இவளுக்கு என திருமணமானான நாளே ஒதுக்கப்பட்டுவிட்டது. இவளுக்கும் அதிக காற்று மேனியில் மோதாமல் இருந்தால் நலம் என்றதால் பெரிதாக கண்டுகொண்டது இல்லை. என்ன காலை முதலில் இவள் விழிப்பதால் சில சிரமங்களை சந்திக்க நேர்கிறது. அதுவும் உடலுக்கு தேவையான உறக்கத்தை பாதியில் துறக்க வேண்டிய கட்டாயம் வருகையில் கோபம் வருகிறது.
மீண்டும் ஏதோ பாத்திரம் உருளும் சத்தம். குழந்தை நன்றாக விழித்துக்கொண்டு சிணுங்க, எரிச்சலுடன்தான் வெளியே சென்றாள். இவள் மாமியார் பத்மாவதி சமையலறையில் எதையோ உருட்டிக்கொண்டிருந்தார். இவள் நிழல் தென்படவும் நிமிர்ந்தவர் பார்வை என்னவோ சமுத்திரா இடுப்பில் இருந்த பேத்தியிடம்தான் முதலில் சென்றது.
“அட உமையாள் எழுந்துட்டாளா?” என ஆச்சர்யம் போல் கேட்க, ‘இவங்க தெரிஞ்சு செய்றாங்களா இல்லை தெரியாம செய்யுறாங்களா?’ என்ற சந்தேகம் சமுத்திராவுக்கு.
‘எலி உருட்டுற மாதிரி உருட்டாம இடி இடிக்குற மாதிரி பாத்திரத்தை உருட்டுனா இந்த தெருவே முழிச்சிடும் இதுல இவ முழிக்கலைன்னாதான் ஆச்சரியம்.’ மனதிற்குள் கவுண்டர் கொடுத்தவள் மறந்தும் வாய் திறக்கவில்லை. வாய் தவறி எதையும் சொல்லி அதையே பிடித்துக்கொண்டு இன்னும் பத்து நாட்கள் ஓட்டுவார். எதற்கு வம்பு என்று அடக்கிக்கொண்டவள் மகளை அவரிடம் நீட்ட,
“ஏற்கனவே லேட் ஆகிடுச்சு. இவளையும் பாத்துகிட்டு எப்படி சமைக்க நான்?”
“வாசல் தெளிக்கல அதையும் பண்ணிடு.” என்றவர் பேத்தியை தன் இடுப்பிற்கு மாற்றிக்கொண்டார். அவளோ இடையிலிருந்து கீழ் நோக்கி வளைந்து கீழே இறங்குவதில் ஆர்வம் காண்பிக்க, “பாத்தி கீ…”
“செத்த நேரம் இருடி செல்லம்.” என்று அவர் பேத்தியிடம் சொல்லிக்கொண்டிருக்கும் போதே ஒரே ஓட்டமாய் வாசலுக்கு சென்று கூட்டிப்பெருக்கி கோலமிட்டு தன்னறைக்கு ஓடிவிட்டாள் சமுத்திரா. இல்லையென்றால் பல் விலக்க கூட நேரம் கிடைக்காதே.
அறைக்குச் சென்றவள் விடிவிளக்கை போட்டுக்கொண்டு அலமாரியில் உடை எடுக்க,
“லைட் ஆஃப் பண்ணுடி.” கைக்கொண்டு கண்களை மறைத்து முனகிக்கொண்டே திரும்பிப்படுத்தான் அவள் மணவாளன்.
“இதோங்க.” மின்னலென செயலில் இறங்கிவிட்டது பெண். போட வேண்டிய உடைகளை எடுத்துக்கொண்டு குளிக்கச் சென்றவள் வேகமாக குளித்துவிட்டு அங்கேயே நின்று ஒரு சுடிதாரை மாட்டிக்கொண்டு வந்தாள். இப்போது பொட்டு வைக்க வேண்டும் விளக்கை போட்டால் உறக்கம் கலைகிறது என்பானே என்ற தயக்கத்துடன் வேகமாக விளக்கை போட்டு பொட்டை தேடி எடுத்து ஏனாதானோவென ஒட்டிக்கொண்டு, குங்கமத்தையும் குத்துமதிப்பாக வகுட்டில் வைத்து விளக்கை அணைத்துவிட்டாள். அதற்கே என்னவோ முணுமுணுப்பு வந்தது அவனிடமிருந்து. கண்டுகொள்ளாமல் வெளியேறியவள் கால்களை கட்டிக்கொண்டாள் அவளது உமையாள்.
“ஹப்பா வந்துட்டியா? சுலபமா மூணு புள்ளையை பெத்து வளர்த்தேன் ஆனா இந்த ஒத்த குட்டியை செத்த நேரம் சமாளிக்க முடியலை என்னால. ஒரே ஓட்டம்தான்.” மூச்சு வாங்க அங்கலாய்த்துக்கொண்டே கூடத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்துவிட்டார் பத்மா.
எதிர்வினை புரியாமல் மகளை தூக்கிக்கொண்டவள் வேக எட்டுக்களுடன் சமையலறை சென்று பார்க்க, உமையாளுக்கு கஞ்சி போட கஞ்சி மாவை பாத்திரத்தில் கரைத்து வைத்திருந்தார் பத்மா. அதற்கு மேல் அதனை கஞ்சியாக காய்ச்ச மகள் விட்டிருக்கமாட்டாள் என்று புரிந்தது. வேகமாக அதனை அடுப்பில் ஏற்றிவிட்டு இன்னொரு அடுப்பில் பாலை வைத்தாள்.
“பாப்பாக்கு கஞ்சி, பாட்டிக்கு காபி, அம்மாக்கு பால். மூணு பேருக்கும் சூப்பர்ரா போடுவோமா? பால் பொங்குதான்னு பாப்பா பாத்து சொல்வாளாம் அம்மா பாப்பாக்கு கஞ்சி ரெடி பண்ணுவேனாம்.” இடுப்பில் இருந்த உமையாளிடம் பேச்சு கொடுத்துக்கொண்டே ஒற்றை கையால் பக்குவமாக கஞ்சியை கிண்டினாள் சமுத்திரா.
“ம்மா பா…பால்.” என ஆர்வமாய் பாலை காண்பித்தாள் சின்னவள். அவளுக்கு ஏற்றபடி பேசி, சமாளித்து கஞ்சியை தயார் செய்தவள் பொங்கிய பாலை இரு டம்ளர்களில் ஊற்றினாள். ஒன்றில் காபி கலந்தவள் மற்றொன்றை மூடி வைத்தாள். கஞ்சியை ஒருகையிலும் பிள்ளையை பிடித்திருந்த கையில் டம்ளரும் எடுத்துக்கொண்டு கூடத்தில் வந்தமர,
“புள்ளையை கையில வச்சிக்கிட்டு சூடா எதையும் எடுத்துட்டு வராதேன்னு எத்தனை முறை சொன்னாலும் கேக்குறதே இல்லை. நீ என்னவும் சொல்லுன்னு இருக்குறது.” என முனகிக்கொண்டே எழுந்தார் பத்மா.
கீழே விட்டதும் நாலு கால் பாய்ச்சலில் கூடத்தில் இருப்பவற்றை இழுத்துபோட்டு விளையாட ஓடிவிட்டாள் உமையாள்.
“உங்களுக்கு காபி கலந்து வச்சிருக்கேன் எடுத்துக்கோங்க அத்தை.”
“ஹான் ஹான்… நீ அவளைப் பாரு.” என்றபடி அவருக்கு போட்டிருந்த காபியை எடுத்துக்கொண்டு வந்தார் பத்மா.
கஞ்சி இருந்த பெரிய பாத்திரத்தை சுழற்றி ஆற வைத்த சமுத்திரா மறுமூலையில் விளையாடியவளை பிடித்துத் தூக்க, யாரோ அடித்தது போல் வீலென்றாள் அவள்.
“குடிச்சிட்டு விளையாடலாம் பாப்பா. எல்லாரும் தூங்குறாங்க சத்தம் கூட்டாத.” அழுகை இன்னும் கூடியது. எப்படியோ சமாளித்து அவளை மடியில் அமர வைத்து கஞ்சியை குடிக்க வைத்து நிமிருகையில் சமுத்திராவின் சக்தி எல்லாம் வற்றிவிட்டது.
இதுக்கே இப்படியா இன்னுமே இருக்கே, என அன்றாட வேலைகளை நினைக்கும் போதே தலைசுற்றும் போல் இருக்க, அவளை காப்பாற்றவென வந்தவன் போல் அறையிலிருந்து வந்தான் செழியன்.
“என்னடா பாப்பா சத்தம்?” என கேட்டுக்கொண்டே வந்து அவளை தூக்கப்பார்க்க, மீண்டும் வீறிட்டாள் அவள்.
“ஓ, இதுதான் விஷயமா?” என்பது போல் அங்கிருந்த பெண்களைப் பார்க்க, பாவமாய் பார்த்தாள் சமுத்திரா.
“ம்மா காபி?” என்று அன்னையை ஏவியவன், “நான் பாத்துக்குறேன். வேற வேலை இருந்தா பாருங்க.” என்றான் சமுத்திராவிடம்.
“பாப்பா பெரியப்பாவை தொல்லை பண்ணக்கூடாது. சொல் பேச்சு கேக்கணும்.” என மகளை எச்சரித்துவிட்டே சமையலறை சென்றாள். அதன்பின் நிற்கவோ அமரவோ நேரமின்றி சென்றது. இருந்த இரண்டு அடுப்பில் மதிய உணவுக்கு தேவையானதை ஏற்ற, பத்மா கீழே அமர்ந்து காய்கறி நறுக்கினார்.
காய்கறிக்கு வலித்துவிடுமோ அரிவாள்மனை கூர் மழுங்கிவிடுமோ என அத்தனை பொறுமையாய் அவர் வேலை செய்யும் அழகை ஒருநிமிடம் நின்று பார்த்தவள், “நான் கட் பண்ணிக்குறேன் அத்தை. நீங்க சட்னிக்கு தேங்காய் எடுங்க, பாதாம் ஊறுது அதை தோலுரிச்சிடுங்க.” என்று காய்கறியை தன்வசமாக்கிக்கொண்டாள்.
மளமளவென சாம்பார், பொரியல், காரக்கறி என அனைத்திற்கும் நிறுக்கியவள் இடையிடையே அடுப்பில் தேவையானவற்றை மாற்றி மாற்றி ஏற்றி இறக்கி சமையலை துரிதப்படுத்தினாள்.
இது தினமும் நடக்கும் கூத்து என்றாலும் இன்றாவது வேகமாய் காய் நறுக்குவதோ இல்லை பக்குவமாய் இறக்கி ஏற்றுவதோ செய்வாரா என்று நின்று பார்ப்பாள் சமுத்திரா. கூட்டை முதலில் வைத்து இறக்கி அதிலேயே சாம்பாருக்கு தாளித்துப் போட்டுவிட்டு மற்றொரு அடுப்பில் பொரியலையும் கறியையும் ஒரே கடாயில் செய்வது இல்லையா அனைத்தையும் இரு குக்கரில் பிரித்து வைத்து சமையலை எளிமையாக்கும் வேலைகள் எல்லாம் பத்மாவிற்கு வராது. எது எளிமையாக செய்யலாம் எது வேக நேரமெடுக்கும் என்றெல்லாம் யோசிக்கமாட்டார். அவர்பாடிற்கு எதையாவது செய்வார், அனைத்து பாத்திரத்திலும் சமைத்துவிட்டு விலக்கப்போடுவார். இவளுக்கு அதெல்லாம் ஒத்துவராது. மகளை பார்த்துக்கொள்வதே மொத்த சக்தியையும் வடியச்செய்யும் என்பதால் சமையலறையின் நிமிடங்களை குறைக்கப் பார்ப்பாள். ஆனால் அது எங்கே முடிய? அள்ள அள்ள குறையாத அட்சயப்பாத்திரம் போல் வேலை இருந்துகொண்ட இருக்குமே.
மதிய சமையல் வேலையை முதலில் முடித்துவிட்டு காலை உணவுக்கு தயார் செய்யும் நேரம் மூடி வைக்கப்பட்டிருந்த டம்ளர் கண்ணில்பட்டது. அவளுக்கென காய்ச்சி வைக்கப்பட்டிருந்த பால் ஆறிப்போய் ஏடாய் ஆடை விழுந்திருந்தது. பெருமூச்சோடு அதனை சூடு செய்யும் நோக்கில் அதனை மீண்டும் அடுப்பில் ஏற்றும் நேரம் புயலென உள்ளே வந்தாள் நன்மதி. சமுத்திரா அவளைப் பார்க்க, குளிர்சாதனப்பெட்டியிலிருந்து முட்டைகளை எடுத்தவள் காலியாக இருந்த ஒரு அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்தாள்.