அவளின் ஆரவாரம் கேட்டு அவர்கள் இருவரும் திரும்பிப் பார்க்க, அவர்களைப் பார்க்காமல், அவர்கள் புறம் திரும்பாமல், தலை குனிந்தபடி வீட்டினுள் சென்றாள் உமா. அவளறைக்குச் செல்லாமல், சமையலறைக்குச் செல்ல, அங்கே அவளுடைய சித்தி இந்துமதியும் பாட்டி சுந்தரியும் இருந்தனர்.

சமையலறையின் மூலையில் இருந்த உணவு மேஜையில் கண் மூடி அமர்ந்திருந்தார் சுந்தரி.  அடுப்பில் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தார் இந்துமதி.

மேஜையில் அவளுடைய கைப்பையை வைத்து விட்டு, தண்ணீர் பாட்டிலைத் திறந்து, அப்படியே வாயில் சரித்துக் கொண்டாள் உமா. அவளுடைய வருகையை உணர்ந்தாலும் சித்தி திரும்பிப் பார்க்கவில்லை, பாட்டி கண் திறக்கவில்லை. கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கேயிருந்து வெளியேறிவள், மாடியிலிருந்த அவளது அறைக்கு வேகமாகப் படியேறினாள். அப்போது,

“உமா.” என்று அழைத்தார் ராம நாதன்.

ஏன் அழைக்கிறாரென்று தெரியும், இவ்வளவு வருடங்களில் ஒருபோதும் செய்யாததை, இன்று, எதற்காக? இவர்களுக்காகவா? யார் இவர்கள்? என்ற கேள்விகளுடன் அவளது கைப்பையுடன் விருந்தினர்களைச் சந்திக்கச் சென்றாள் உமா.

அவர்களைப் பார்க்காமலேயே அவர்களின் பார்வை அவளை ஊடுருவியதை உணர்ந்தாள்.  ராம நாதன் அருகில் போய் அவள் நின்றவுடன்,

“மதுரை வீட்லே விசாரிச்சு என்னோட ஃபோன் நம்பர் வாங்கியிருக்காங்க..இன்னைக்கே சந்திக்கணும்னு சொன்னாங்க. அதான்,  இங்கே வரச் சொன்னேன்.” என்றார்.

வேலூரிலிருந்து சென்னைக்குச் சித்தப்பா வந்து சில வருடங்கள் ஆகிவிட்டது. அவரைப் பற்றி  மதுரையில் விசாரித்து இருக்கிறார்களென்றால், இவர்கள் சித்தப்பாவிற்குத் தெரிந்தவர்களா? இல்லை உறவினர்களா? என்று  அவளுள் எழுந்த கேள்விகளுக்கு விடையை விருந்தினர்களின் முகத்தில் தேட விரும்பவில்லை.  அதனால், குனிந்த தலை நிமிராமல், அவளுடைய சித்தப்பாவின் விளக்கத்திற்காகக் காத்திருந்தாள் உமா.

உமா என்று அழைத்தவுடனேயே, விருந்தினர்களில்,  திடுக்கிட்டு நிமிர்ந்த பெரியவருக்கு அவள் யாரென்று புரிந்து விட்டது. அவள் பெயரைக் கேட்டவுடன் ஆர்வத்துடன் நிமிர்ந்து பார்த்த இளைஞனை உமா நிமிர்ந்தும் பார்க்கவில்லை.  அவர்கள் எதிரே நின்றிருந்தவளை தலை முதல் கால் வரை அளவிட்டார் அந்தப் பெரியவர்.

அதற்குள், தேநீருடன் வந்த இந்துமதி, மௌனமாக, நடுவிலிருந்த மேஜையில் அதை வைத்துவிட்டு, ராம நாதன் அருகே அமர்ந்தார்.

“டீ எடுத்துக்கோங்க.” என்று உபசாரம் செய்தார் ராம நாதன்.

அவளுடைய பாதங்களைப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தாள் உமா. மதுரையில் விசாரித்து விட்டு இங்கே வந்திருக்கிறார்கள் என்ற விவரம் மூலம், இப்போது, அவர்கள் யாரென்று புரிந்து போனாலும், அங்கே நடப்பவைகளுக்கும் அவளுக்கும் சம்மந்தமில்லாதது போல் இருந்தாள் உமா.  அதுதான் உண்மை, அப்படி விட்டேத்தியாக இருக்க அவளுக்குச் சிரமமாக இல்லை.  பன்னிரெண்டு, பதிமூன்று வயதில், அறிவு என்ற ஒன்று அதன் இருப்பை தெரியப்படுத்தியவுடன், அவளுடைய வீடு, அவளுடைய உறவினர்கள், அவளுடையது என்று எதையும், யாரையும் உரிமை கொண்டாட முடியாத வாழ்க்கையை அவளுடையதாக ஏற்றுக் கொண்டு வாழ ஆரம்பித்திருந்தாள்.  அதனால், வந்திருப்பவர்கள் ப்ரீத்திக்குச் சொந்தமென்று அவள் சரியாகப் புரிந்து கொண்டதை, ராம நாதனின் வார்த்தைகள் உறுதி செய்தன.

அவர்கள் இருவரும் டீயை எடுத்துக் கொண்டவுடன்,”ப்ரீத்திக்குக் கல்யாணமாம்.” என்றார் ராம நாதன்.

யாருக்காக அந்தத் தகவலை உரக்கச் சொன்னார் என்று தெரியவில்லை.  பெண்கள் இருவருமே அதற்கு  எந்த விதமான பதிலும் கொடுக்கவில்லை. குனிந்த தலை நிமிராமல் நின்று கொண்டிருந்த உமாவையே ஆராய்ச்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அந்த முதியவர். அவனுடைய டீயையும் கைப்பேசியையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் அவருடன் வந்திருந்த இளைஞன்.

இனி என்ன பேசுவது? எப்படிப் பேசுவதென்று அந்தப் பெரியவர் யோசித்துக் கொண்டிருந்த போது,”உமா.” என்று சமையலறையிலிருந்து அழைத்தார் சுந்தரி.

“வரேன் பாட்டி.” என்று  சமையலறைக்குச் சென்றாள் உமா.

சமையல் அறையினுள் நுழைந்தவுடனேயே,“என்னை அறைலே விட்டிடு..அரைமணி நேரப் பயணம் கூட முடியலை..பலகீனமா இருக்கு..விழுந்திடுவேனோன்னு பயமா இருக்கு.” என்றார்.

“வாங்க.” என்று சுந்தரியை, கைதாங்கலாக அவருடைய அறைக்கு அழைத்துச் சென்றாள் உமா.

வரவேற்பறையின் கோடியில் இரண்டு படுக்கையறைகள் இருந்தன.  அதில், மாடிப்படிக்கு அருகே இருந்த அறை சுந்தரியினுடையது.  அதன் எதிர்ப்பக்கம், சமையலறையை அடுத்து, இன்னொரு படுக்கையறை இருந்தது.  அது விருந்தினர்கள் அறை.  மாடியில் உமாவின் அறை இருந்தது. அவளுடன் பாட்டி தங்கும் போது, சில நாள்கள், அவருடைய அறையில், கீழே, தரையில், பாய் விரித்துப் படுத்துக் கொள்வாள்.  இரவு நேரங்களில், அவளுக்கு அலுவலக வேலை இருந்தால், பாட்டியைத் தொந்தரவு செய்யாமல், மாடி அறையை உபயோகித்துக் கொள்வாள்.

அப்போது, அவனது கைப்பேசியிலிருந்து தலையை உயர்த்தி, சுந்தரியை அழைத்துச் சென்ற உமாவைப் பார்த்துக் கொண்டிருந்தான் அந்த இளைஞன்.  சாக்லெட் நிறத்தில் சேலை உடுத்தியிருந்தாள்., பார்டரில் மெலிதாக தங்கச் சரிகை . அவளுடைய கழுத்தைத் தாண்டி, முதுகின் ஆரம்பத்தைத் தொட்டுக் கொண்டிருந்த பொனிடெயில். அந்தச் சேலையின் விலை எப்படியும் ஆயிரம் ரூபாயைத் தாண்டாது என்று சரியாக கணித்தான், சில தலைமுறைகளாக, பசுபதி ஜவுளிக் கடைகளை நடத்தி வந்த பசுபதி பரம்பரையின் இந்தத் தலைமுறை பசுபதி.  அவனால் அவள் முகத்தைச் சரியாகப் பார்க்க முடியவில்லை.  அந்த வீட்டிக்குள் வந்ததிலிருந்து தலை குனிந்தபடி தான் இருக்கிறாள்.

சுந்தரியைக் கட்டிலில் படுக்க வைத்து, போர்வையை எடுத்தப் போது,”வேணாம்..வேர்க்கற மாதிரி இருக்கு..கொஞ்சம் ஃபேனை பெரிசு செய்.” என்றார்.

மின்விசிறியின் வேகத்தை அதிகரித்து விட்டு, கட்டிலின் நுனியில் கைப்பையை வைத்து விட்டு, பாத் ரூமிற்குச் சென்றாள் உமா.

வரவேற்பறையில், டீ குடித்து முடித்தவுடன்,”உங்களோட அண்ணன் இடத்திலே இருந்து நீங்க தான் கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுக்கணும்..அப்பாவே நேர்லே வந்து உங்ககிட்டே பேசியிருப்பார்..காலைலே ஒரு கல்யாணத்திற்குப் போயிருந்தோம்.. அவருக்குக் களைப்பா இருக்குன்னு இவனோட வீட்லே ஓய்வு எடுத்துக்கிட்டு இருக்கார்..அதான் என்னை அனுப்பி வைச்சார்.” என்று அவருக்குப் பக்கத்தில் இருந்த அந்த இளைஞனைப் பார்த்தபடி பேசினார் அந்த முதியவர்.

ராம நாதனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.  ப்ரீத்திக்குக் கல்யாணம் என்று சந்தோஷமடைவதா? இல்லை பதினைந்து வருடங்களுக்கு முன்பு நடந்ததை நினைத்து வேதனைப்படுவதா? எது சரியென்று இத்தனை வருடங்கள் கடந்த பின்னும் அவருக்குத் தெரியவில்லை.  பணத்திற்காக ப்ரீத்தியை விட்டுக் கொடுத்த ராம நாதன் இப்போது இல்லை.  கடந்த சில வருடங்களாக, அந்தச் செயலை நினைத்து, அவரும் அவருடைய தாயாரும் வருந்தாத நாளில்லை.

இப்போது, அவளுக்குக் கல்யாணம். கல்யாண விஷயமென்றாலும் அவர்களுக்குச் சம்மதம் தெரிவிக்க அவர் மனம் ஒப்புக் கொள்ளவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருந்தன. சில மாதங்களுக்கு முன்னால் நடந்த நிகழ்வொன்று அவருள் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தது.  அதை இவர்களிடம் வெளிப்படுத்த நினைத்து தான், உமாவை அழைத்து அவளை அறிமுகப்படுத்தி வைத்தார்.  அப்படிச் செய்த பின்னும், அவள் மீது  அந்தப் பெரியவர் ஆர்வம் காட்டவில்லை. அதனால், கடைசி நொடியில் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“இவ்வளவு வருஷமா நீங்க தான் அவளுக்கு எல்லாம் பார்த்திருக்கீங்க, செய்திருக்கீங்க..இதையும் அப்படியே செய்திடலாமே.” என்று  மென்மையாக மறுப்புத் தெரிவித்தார் ராம நாதன்.

அதற்கு அந்த முதியவர் பதில் சொல்லுமுன்,”மாப்பிள்ளை வீட்டுக்காரங்க விருப்பப்படறாங்க..ப்ரீத்தியோட அப்பா சைட் உறவிலேர்ந்து தான் கன்னிகாதானம் செய்யணும்னு சொல்றாங்க..உங்களோட உறவு இல்லைன்னு சொல்லிட்டோம். ஆனாலும், அவங்க ஒத்துக்கலை…அதான், உங்களோட மதுரை வீட்டுக்கு ஆள் அனுப்பி, விசாரிச்சு, உங்களோட நம்பர் கண்டு பிடிச்சோம்..நீங்க சென்னைலே தான் இருக்கீங்கன்னு தெரிஞ்சவுடனே தாமதம் செய்யாம உங்களைப் பார்க்கப் புறப்பட்டு வந்திட்டோம்.” என்றான் அந்த இளைஞன்.

ஆஹ இது மாப்பிள்ளை வீட்டாரின் விருப்பம்.  இவர்களின் விருப்பமில்லை என்று தெளிவாகப் புரிந்தது ராம நாதனிற்கு.  அதன் பின் அனைவரும் அமைதியாக இருந்தனர். அப்போது, அறையினுள்ளே, பாத் ரூமிலிருந்து வெளியே வந்த உமாவிடம்,

“ராமை இங்கே கூப்பிட்டுக்கிட்டு வா.” என்றார் சுந்தரி.

வரவேற்பறைக்கு வந்த உமா,”சித்தப்பா, உங்களைப் பாட்டி கூப்பிடறாங்க.” என்றாள்.  அவருடைய அம்மா தான் இந்தச் சங்கட நிலையிலிருந்து அவரை விடுவிக்க முடியும் என்றுணர்ந்த ராம நாதன்,”அம்மா கூப்பிடறாங்க..வரேன்.” என்று எழுந்து கொண்டார். கணவரைப் பின்பற்றி, எழுந்து கொண்ட இந்துமதியிடம்,

“எனக்குக்  கொஞ்சம் குடிக்க தண்ணீர் வேணும் ம்மா.” என்றார் அந்த முதியவர்.

”உமா, ஒரு கிளாஸ் தண்ணீர் கொண்டு வந்து கொடு.” என்று சொல்லி விட்டுச் சுந்தரியைச் சந்திக்க சென்றனர் இருவரும்.

டீப்பாய் மேல் இருந்த காலி தேநீர்க் குவளைகளை எடுத்துச் சென்ற உமா, சில நொடிகளில், ஒரு டிரேயில் இரண்டு தண்ணீர் கிளாஸ்களுடன் திரும்பினாள்.  அதை டீப்பாயின் மீது வைத்து விட்டு, டிரேயுடன் ஒதுங்கி நின்று கொண்டாள். கேட்காமலேயே அவனுக்கும் சேர்த்து தண்ணீர் கொண்டு வந்ததை மெச்சி,”தாங்க்ஸ்.” என்றான் அந்த இளைஞன்.  அந்த முதியவர்,”நன்றி ம்மா.” என்றார்.  இரண்டிற்கும் அவளிடம் எந்த எதிர்வினையும் இல்லை.

“உன்னை நான் கடைசியா பார்த்த போது உனக்குப் பத்து, பதினொரு வயசு இருக்கும்..நீ உள்ளே வந்த போது உன்னை ராம நாதன் பொண்ணு கவிதான்னு நினைச்சிட்டேன்.” என்றார் அந்த முதியவர்.

அவளுக்கும் கவிதாவிற்கும் ஒரு வயது தான் வித்தியாசம். பத்து, பதினொரு வயதில் அவளும் கவிதாவும் பார்க்க ஒரே போல் இருந்தனரோ? அதற்கு அடுத்த வருடம் தான் அவளுக்கு அசுர வளர்ச்சி ஏற்பட்டது.  அப்போது அவளைப் பார்த்திருந்தால் இன்று இந்த தவறு நேர்ந்திருக்காது.  இப்பொழுது அதை நினைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. அவளைக் கவிதா என்று அவர் எண்ணியதில் தவறில்லை என்று எண்ணிக் கொண்டாள் உமா.

“கவிதா..” என்று ஆரம்பித்து அந்த வாக்கியத்தை முடிக்காமல் விட்டார் அந்தப் பெரியவர்.

அவர் கேட்க வந்ததைப் புரிந்து கொண்டு,’அவங்க கே கே நகர்லே இருக்காங்க.” என்றாள் உமா.

அவர்கள் இருவரும் தண்ணீர் குடித்து முடிக்கும் வரை, டிரேயுடன் அங்கேயே அமைதியாக நின்றிருந்தவள், காலி கிளாஸ்களை எடுத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அதன் பின் சமையலறையிலிருந்து வெளியே வரவில்லை.  வீட்டில் சாமான்கள் இல்லாததால், படுக்கையறையில் நடந்து கொண்டிருந்த உரையாடல் அரைகுறையாக வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர்களின் காதுகளில் விழுந்தது.  ஏதோ வாக்குவாதம் என்று மட்டும் புரிந்தது. அடுத்த சில நிமிடங்கள் வீட்டை நோட்டம் விட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தனர் விருந்தினர்கள் இருவரும்.

பத்து நிமிடங்கள் கழித்து அவருடையை அம்மாவின் அறையிலிருந்து வெளியே வந்த ராம நாதன், சோஃபாவில் அமர்ந்தார்.  இரண்டு நிமிடங்களுக்கு மேல் எதுவும் பேசாமல் இருந்தவரிடம்,

“என்ன முடிவு செய்திருக்கீங்க?” என்று விசாரித்தார் அந்த முதியவர்.

அவருடைய அம்மாவின் எண்ணத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்த விரும்பவில்லை, தைரியமுமில்லை.  அதனால், “என்னோட முடிவுலே மாற்றமில்லை.” என்றார் ராம நாதன்.

எதிர்பார்த்தது தான்.  இத்தனை வருடங்களாக உறவு இல்லாமல், திடீரென்று கல்யாணத்தை நடத்திக் கொடுக்கும்படி கேட்டால், ஒத்துக் கொள்ள மாட்டார்களென்று மனத்தின் ஓரத்தில் இருந்த சந்தேகம் இப்போது நிரூபணமானது.

“ஏன்?” ப்ரீத்தி உங்களோட சொந்த அண்ணனோட பொண்ணு..எப்படி முடியாதுன்னு சொல்லுவீங்க? இவ்வளவு வருஷமா அவளை என்னோட அப்பாவும் தாத்தாவும் தானே பார்த்துக்கிட்டாங்க..ஒருமுறையாவது அவளைப் பார்க்க நீங்க யாராவது வந்தீங்களா? மொத்தமா தலைமுழுகினவங்க தானே நீங்க..இப்போ கல்யாணத்தை நாங்க பொறுப்பேற்று நடத்தற போது நீங்க இதைக் கூட செய்ய மாட்டீங்களா? காசு, பணம் வேணும்னு உங்ககிட்டே கேட்டோமா?…

நாங்க பசுபதி பரம்பரை..எத்தனையோ பேருக்கு இலவசமா கல்யாணம் செய்து வைக்கறோம்..இன்னைக்கு ப்ரீத்தியோட கல்யாணத்துக்கு உங்ககிட்டே கெஞ்சிட்டு இருக்கோம்..

ச்சே.. எப்படி இப்படி இரக்கமில்லாம நடந்துக்கறீங்க? உள்ளே இருக்கறவங்க ப்ரீத்திக்கும் பாட்டி தானே? கூப்பிடுங்க அவங்களை..நான் கேட்கறேன்..அவங்க சொந்தப் பேத்தியோட கல்யாணத்தைப் பார்க்க அவங்களுக்கு விருப்பமில்லையா?” என்று கோபப்பட்டான் உமேஷ் பசுபதி.

அதற்கு மேல் என்ன பேசியிருப்பானோ, அதற்குள், “உமேஷ்..வாயை மூடு.” என்று அவனை அதட்டினார் அவனுடைய அப்பா, நாகேஸ்வரன் பசுபதி.

********************************************

பரமேசுவரனுக்குப் பசுபதி என்று பெயர். இங்கு பசு என்று சொல்வது அவருடைய வாகனமான ரிஷபத்தையோ காவலாளான நந்தியையோ அல்ல. பசு என்பது நாம்தான். ஜீவர்களெல்லாம் பசுக்கள். அவர்களுக்கு யஜமானனாக இருக்கும் ஈசுவரனே பசுபதி.

ஆதாரம் : தெய்வத்தின் குரல்

********************************************

This story is but a relic of chance,

Of dots that connected,

Forward it cantered,

Around the name Pasupathi, it is centered.

“Pasupathi” is a relic from the Indus Valley civilisation which I have put to use in my imaginative contemplation.