அத்தியாயம் – 1

சென்னை மாநகரத்தின் வெளியே, பூந்தமல்லிக்கு அருகே, சென்னை-பெங்களூர் நெடுஞ்சாலையில் இருந்த அந்தக் குடியிருப்பு பகுதியில் மொத்தம் பத்து வீடுகள் இருந்தன.  எதிரும் புதிருமாக ஐந்து வீடுகள்.  மெயின் ரோட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர்த் தூரம் உள்ளே வந்த போது, ஆங்காங்கே தென்பட்ட வீடுகள் இப்போது காணவில்லை.  அந்தக் குடியிருப்பைச் சுற்றி காலி இடமாக இருந்தது.

குடியிருப்பு பகுதியினுள்ளே நுழைந்த அந்தக் கார், முதலில், இடதுப் புறத்தில், இரண்டாவது வீட்டிற்கு முன்பு நின்றது.  வண்டி நின்றவுடனேயே கேட்டருகில் நின்று கொண்டிருந்த  பிரஷாந்த்,”அம்மா” என்று கத்தியபடி, காரருகில் வந்து அதன் கதவைத் திறக்க முயற்சி செய்தான்.

“நகரு டா, எத்தனை தடவை சொல்லியிருக்கேன், கார் பக்கத்திலே வராதே, கேட்கிட்டேயே நில்லுன்னு.” என்று அவனைத் திட்டிக் கொண்டே, கதவை மெதுவாகத் திறந்து இறங்கிய மீரா, காரினுள்ளே அமர்ந்திருந்தவளிடம்,”இன்னைக்கு தான் கடைசி..நான் லீவுலே போறேன்..திரும்பி வரும் போது நீ இருக்க மாட்ட.” என்றாள்.

“ம்ம்..” என்றாள் உள்ளே அமர்ந்திருந்தவள்.

“கட்டில், மேஜை வேணும்னு சொல்லியிருந்தேனில்லே..இப்போ அதோட அந்த இரண்டு சோஃபாவையும் எனக்கே கொடுத்திடு..இனி அம்மாவாலே பிரஷாந்தைச் சமாளிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க…என் மாமியாரை ஊர்லேர்ந்து அழைச்சிட்டு வரப் போறேன்..அவங்களாலே நிறைய நேரம் நிற்க முடியாது..வீடு பூரா நாற்காலி போட்டு வைக்கணும்….வாசல் ரூம்லே இருக்கற சோஃபாவை மாடிலே போட்டிட்டு உன்னோடதை வாசல் ரூம்லே போட்டிடுவேன்..அவங்களுக்கு வேணுங்கற இடத்துக்கு இழுத்திட்டுப் போகட்டும்.” என்றாள் மீரா.

அதற்கும் உள்ளே இருந்தவளிடமிருந்து பதில் வரவில்லை. அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல்,“சமையலறை சாமானெல்லாம் சந்தோஷ்க்கு தானே?” என்று விசாரித்தாள் வெளியே நின்றிருந்தவள்.

“ம்ம்” என்று ஆமோதித்தவளின் மனது பின்னோக்கிச் சென்றது.

இந்த வீட்டிற்கு அவள் குடி வந்த போது, இரண்டு, மூன்று பேர் சமைத்து, சாப்பிடுவதற்குத் தேவையான சாமான்கள் இருந்தன.  அவளாக எதுவுமே வாங்கவில்லை.  வாசலில் இருக்கும் இரண்டு சோஃபாக்களைத் தவிர.  அது பாட்டிக்காக வாங்கியது.  இரண்டிலும் சக்கரம் இருக்கிறது.  எங்கு வேண்டுமோ அதை அங்கு இழுத்துக் கொண்டு போகலாம்.  அந்த சோஃபா வேண்டுமென்று சித்தப்பாவும் கேட்டு இருக்கிறார்.  ஒன்று சித்தப்பாவிற்குக் கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அதனால்,

“மீரா, இரண்டு சோஃபாவும் பாட்டிக்காக வாங்கினது.  அவங்களுக்கு வேணும்னு சித்தப்பா கேட்டிருக்காங்க.” என்றாள்.

“எனக்கு ஒண்ணு நீ கண்டிப்பாக் கொடுக்கணும்.” என்று கட்டளையிட்டாள் மீரா.

‘சரி, பெரிசு உனக்கு. சின்னது அவங்களுக்கு” என்று ஒப்புதல் அளித்தாள்.

மீராவும் அவளும் ஒரே பொறியியல் கல்லூரியில் ஒரே பிரிவில் படித்தார்கள். ஒரே கம்பெனியில், ஒரே நேரத்தில் வேலைக்குச் சேர்ந்தார்கள்.  ஆரம்பத்திலிருந்து மீரா சென்னையில் வேலை செய்ய, இவளோ ஹைதராபாத்தில் சில வருடங்கள் வேலை பார்த்த பின், இப்போது, சென்னையில்.  அதற்குள், மீராவிற்குத் திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு மகன், பிரஷாந்த்.  அவளைப் பெற்றவர்கள் அவர்களுடைய பொறுப்பை சரியாகச் செய்திருந்தனர்.

முதலில், மகளுக்கு, அவள் விரும்பிய படிப்பு, பின்பு, அவர்கள் விரும்பியபடி திருமணம். அதன் பின், பிள்ளைப்பேறு பார்த்து, இப்போதும் பிரஷாந்தைப் பார்த்துக் கொண்டு அவர்களுடைய கடமையை நிறைவேற்றி வருகிறார்கள். ஆனால், கல்வி, பொருள், மக்கள் என்று வாழ்க்கையை மேம்படுத்தக்கூடிய, மகிழ்ச்சி அளிக்கக்கூடிய முக்கியமான மூன்று செல்வங்களும் கிடைக்கப் பெற்றும் மீரா மகிழ்ச்சியாக இல்லை.

படிப்பு, அந்தஸ்து இரண்டிலும் கண்வன் திவாகரும் அவளும் சமமாக இருந்தாலும், இருவரும் வெவ்வேறு கம்பெனியில் பணி புரிவதால் அவர்கள் மண வாழ்க்கையில் சண்டையும் சச்சரவும் ஏற்பட்டுக் கொண்டிருந்தது.  இதுவரை ஒருமுறை கூட வெளிநாட்டிற்குப் போக கிடைத்த வாய்ப்பை மீராவினால் உபயோகப்படுத்திக் கொள்ள முடியவில்லை.  முதல் முறை திருமணம் காரணமானது. அதன் பின் தாய்மை என்று அவள் விட்டுக் கொடுக்க, திவாகரோ அவனுக்குக் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விடாமல், கல்யாணத்திற்கு பின் மூன்று முறை வெளிநாட்டிற்குச் சென்று விட்டான்.

அவர்களுடைய வாழ்க்கை சுமூகமாக, சந்தோஷமாக இருக்க ஒரே வழி, மற்ற ஜோடிகளைப் போல், அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை செய்வது தான் என்று மீராவிற்குத் தோன்ற ஆரம்பித்திருந்தது.  அதனால், சமீபக் காலமாக, திவாகரை அதற்காக நச்சரித்து வருகிறாள்.  திவாகரின் கம்பெனி மீராவின் கம்பெனியை விடச் சிறியது.  சலுகைகளும் வசதிகளும் குறைவு.  வெளிநாட்டில் சின்ன சின்ன பிராஜெக்ட்டுகள் செய்து வருகிறார்கள்.  அதனால் தான் அதிக நாள்களோ இல்லை அங்கேயே நிரந்தரமாக தங்கும் வாய்ப்போ அவனுக்குக் கிடைக்கவில்லை.  மீராவின் கம்பெனியில் வேலைக்குச் சேர அவன் விரும்பவில்லை. அதனால், மீராவின் ஆலோசனைகளை அவன் வேண்டாமென்று மறுக்க, பிரஷாந்தைக் காரணம் காட்டி வேலையை விடப் போவதாக அவனைப் பயமுறுத்திக் கொண்டிருந்தாள் மீரா.

“நான் வீட்டுச் சாவியை ஒப்படைக்கறத்துக்கு முன்னாடி சோஃபாவை நீ எடுத்திட்டுப் போயிடு..அதுவரைக்கும் எனக்கும் தேவைப்படும்..நான் ஊருக்குப் போகறவரை யாராவது வீட்டுக்கு வந்திட்டு போயிட்டு இருப்பாங்க..லோக்கல்னாலும் இராத்திரி இங்கேயே தங்கறாங்க..சில நேரம் பாட்டி அந்தப் பெரிய சோஃபாவிலே தான் படுத்துக்கறாங்க..அதான்.” என்றாள் காரினுள் இருந்தவள்.

“பிராப்ளமில்லை..திவாகருக்குத் தெரிஞ்சவங்க இருக்காங்க. அவங்கிட்டே சொல்லிட்டுப் போறோம்..நீ என்னைக்குன்னு சொன்னா அன்னைக்கு அதைத் தூக்கிட்டு வந்து எங்களோட வீட்லே வைச்சிடுவாங்க..உனக்கும் ஏதாவது உதவி தேவைப்படும்னா சொல்லு அவங்க செய்து கொடுப்பாங்க.”

“இல்லை..ஒண்ணும் தேவைப்படாது..வீட்டைக் காலி செய்தவுடனே கெஸ்ட் ஹவுஸ் போயிடுவேன்.”

“திரும்பி வந்த பிறகு என்ன ஆப்ஷன் கொடுக்கறாங்க?”

“பெங்களூர் இல்லை புனே” என்றாள்.

“அங்கேயே போயிடு..எல்லா ஊரும் உனக்கு ஒண்ணு தான்.” என்றாள் மீரா.

ஆமாம். அவளுக்கு எல்லா ஊருமே ஒரே போல் தான்.  ஆனால், பெங்களூரில் அவளுடைய முதல் பத்து வருடங்களைக் கழித்திருந்தாள்.  அதனால் திரும்ப அதே ஊருக்குப் போகலாமா? என்று யோசனை செய்து கொண்டிருந்தாள்.  புனே வரச் சொல்லி அவளுடன் ஹைதராபாத்தில் வேலை பார்த்த சாதனா கட்டாயப்படுத்துகிறாள். சாதனாவிற்கு அது சொந்த ஊர்.  பாட்டிக்காக தான் ஹைதராபாத்திலிருந்து இங்கே மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாள்.  ஆனால், முன்பு போல் பாட்டியால் இங்கே அடிக்கடி வர முடிவதில்லை.  இவள் தான் அவரைச் சந்திப்பதற்காக சித்தப்பாவின் வீட்டிற்கு இல்லை கவிதாவின் வீட்டிற்குச் செல்கிறாள்.  கவிதாவின் வீட்டிற்குப் போவதை முடிந்தவரை தவிர்த்து விடுவாள்.  அதே சமயம் எப்படியும் மாதமொருமுறை சித்தப்பாவின் வீட்டிற்குச் சென்று விடுவாள்.  அப்படியே அந்த வீட்டிற்குத் தேவையானதை வாங்கிப் போட்டு விடுவாள்.

இனி வெளியூருக்குச் சென்று விட்டால் பழையபடி சித்தப்பாவின் வங்கிக் கண்கிற்குப் பணத்தை அனுப்பி வைக்க வேண்0டும். அதே போல், அவர்களுக்குத் தேவையான பொருள்களை ஆன்லைனில் வாங்கிக் கொடுத்து விட வேண்டும்.  சித்தப்பாவினால் அவருடைய உடல் நிலையில் வெளியே அதிகம் அலைய முடியாது.  கவிதாவும் அவளுடைய கணவனும் அவ்வப்போது அவர்களைப் பார்த்துக் கொண்டால், அதுவே பெரிய உதவி தான்.

வேலூரிலிருந்து சென்னைக்கு அவர்கள் மூவரும் குடி வந்த போதே இதையெல்லாம் யோசனை செய்து தான் அவளும் சென்னைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்தாள். இங்கே வந்த புதிதில், சித்தப்பாவிற்கும் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்ததால், வெளிநாட்டிற்குப் போக அவளுக்குக் கிடைத்த வாய்ப்பை வேண்டாமென்று மறுத்து விட்டாள்.  அதற்கு பின் இப்பொழுது தான் அவளுக்கு மறுபடியும் வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. இந்தமுறை மறுக்க அவளுக்குக் காரணமில்லை. மீண்டும் சென்னைக்கு வர அவள் விரும்பவுமில்லை.

அவளுடைய சிந்தனையைக் கலைத்தான்,”அம்மா, வா அம்மா.” என்று மீராவின் கைகளைப் பிடித்து இழுத்த பிரஷாந்த்.

அதுவரை பக்த மீரா போல் பவ்யமாக பேசிக் கொண்டிருந்தவள்,“வரேன் டா.” என்று மகனிற்குப் பதில் சொல்லி விட்டு,”நீ தனிக்காட்டு ராணி..நினைச்ச ஊருக்குப் போகலாம்..நினைச்சபடி இருக்கலாம்..நினைச்சதை வாங்கிக்கலாம்..உடுத்திக்கலாம்..நினைச்ச போது சாப்பிடலாம்..தூங்கலாம்…என் மாமியார் வந்திட்டா, நினைச்ச போது நான் பாத் ரூம் கூட போக முடியாது..ஏன் இவ்வளவு நேரம்னு விசாரிப்பாங்க..என்னவோ வாஷ் ரூம்லே விருந்து சாப்டிட்டு வந்த மாதிரி.” என்று பொறாமையுடன் பேச, உள்ளே அமர்ந்திருந்தவள் அமைதியாக இருந்தாள்.  எப்போதையும் விட, இன்று, வேகமாக, அதிகமாக, அவளுடைய மனக்குமுறலை கொட்டி விட்டு, மகனின் கையைப் பிடித்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றவள், அவர்களின் தெருக் கோடியில் நின்றிருந்த காரைக் கவனிக்கத் தவறினாள்.

மீரா வீட்டிலிருந்து வலதுப் புறத்திற்கு வந்த கார், அங்கே கடைசி வீட்டின் முன்னால் நின்ற போது, சற்றுத் தள்ளி, சுற்றுச் சுவரின் அருகில் ஒரு பெரிய கார் நின்று கொண்டிருந்தது. மாலை ஏழு மணி போல் வேலையிலிருந்து திரும்பியிருந்த உமா, யோசனையோடு கேட்டினை திறந்து உள்ளே சென்றாள். சற்றுமுன் தான் வீடு வந்து சேர்ந்து விட்டதாக அவளுக்குத் தகவல் கொடுத்திருந்தார் சித்தப்பா.  பின் யாருடைய கார் இது? என்ற கேள்விக்கு விடை தேடியபடி, காரிலிருந்து இறங்கி, கேட்டைத் திறந்து, வீட்டிற்குச் சென்றாள்.  அங்கே, வீட்டு வாசலில், அவளுடைய செருப்பை அவிழ்த்துக் கொண்டிருந்தவளை எதிர் வீட்டு வாசலில் அமர்ந்தபடி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஜானகி. எல்லாம் அவர் மகன் விரும்பியபடி நடந்திருந்தால், இன்றைக்கு உமா அவர்களுடைய வீட்டு வாசலில் செருப்பை அவிழ்த்திருப்பாள்.  ‘ஆனால்’ என்று அவர் யோசனை செய்து கொண்டிருந்த போது, மீராவை இறக்கி விட்ட கார் அவர்களுடைய வீட்டு வாசலில் வந்து நின்றது.  வீட்டிலிருந்து வெளியே வந்த ஈஷ்வர்,

“வரேன் ம்மா..இராத்திரி ஜாக்கிரதையா இருங்க..வாட்ச்மேன் கிட்டே சொல்லிட்டுப் போறேன்..பதினொரு மணிக்கு வந்து பார்த்திட்டு போவான்..நீங்க நிம்மதியா தூங்குங்க.” என்றான்.

“சரி டா.” என்று பதில் சொன்ன ஜானகி, மகனின் முகத்தைக் கூர்ந்து பார்த்தார்.  கடந்த சில மாதங்களாக இது நடந்து வருவதால், அவருடைய பார்வையைப் பொருட்படுத்தாமல் காரை நோக்கிச் சென்றான் ஈஷ்வர். வண்டியினுள் அமர்வதற்கு முன், எதிர் வீட்டைப் பார்க்க, அங்கே அவளைக் காணவில்லை. அவளுடைய வீட்டிற்கு அருகில் நின்று கொண்டிருந்த காரைப் புதிராகப் பார்த்தபடி அவனுடைய அலுவலக வண்டியினுள்ளே அமர்ந்தான்.  அவளுடைய சித்தப்பாவிடம் வண்டி இல்லை என்று தெரியும். அதனால், காரில் யார் வந்திருக்கக் கூடும்? என்று சிறிது குறுகுறுப்பு உண்டானது அவனுக்கு.  அதைத் தணித்துக் கொள்ள இப்போது நேரமோ, வாய்ப்போ கிடைக்கப் போவதில்லை.  மீராவைக் கேட்டால் தகவல் கிடைத்துவிடும்.  மெதுவாக விசாரித்துக் கொள்ளலாமென்று முடிவு செய்தான்.

அவளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அவசரப்பட்டு, அம்மாவிடம் சொல்லி, அதனால் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்க்கும் வழி தெரியாமல், விழி பிதுங்கிக் கொண்டிருக்கிறான்.  இப்போது, அவளுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அவள் கிளம்புவதற்கு முன்னால்,, எப்படியாவது அவளைச் சந்தித்து அவர்களுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசிவிட வேண்டும்.   அவள் வெளிநாட்டிலிருந்து திரும்பி வருவதற்குள் அம்மாவின் மனத்தை கரைக்க வேண்டும், இங்கேயே தொடர்ந்து வேலை செய்யும்படி அவளுடைய மனத்தையும் மாற்ற வேண்டும்.  அப்போது தான், அவன் விரும்பும் வாழ்க்கையை அவன் அமைத்துக் கொள்ள முடியும்.

இங்கேயே, அவனுடன் அவள் வேலை பார்த்தால் தான் கொஞ்சம் கொஞ்சமாக நடந்ததை மறக்க வைத்து, அவன் தான் அவளுடைய போக்கிடமென்று அவளுக்குப் புரிய வைத்து, அவளை அவன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியும். அவனுடைய அம்மா சம்மதிக்கவில்லை என்றால், வெளிநாட்டிலிருந்து அவள் சம்பாதித்துக் கொண்டு வருவதை வைத்து அவருடைய வாயை அடைத்து, அவருடைய ஆசைகளை நிறைவேற்றினால் பிரச்சனை முடிந்தது என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தவன் அறியவில்லை, வீட்டினுள்ளே உமாவின் தலையெழுத்தை மாற்றப் போகிறவன்,  உமாவின் தலைவன்,  உமா மகேஸ்வரன், உமேஷ் அமர்ந்திருக்கிறானென்று.

அந்தக் குடியிருப்பில் இருக்கும் பத்து வீடுகளில், ஆறு வீடுகளில் ஒரே மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்கள் வசித்து வருகிறார்கள். மற்ற நான்கு வீடுகளில், வருடந்தோறும், வெவ்வேறு ஆள்கள் மாறிக் கொண்டிருந்தாலும், இந்த ஆறு வீடுகளில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், மற்றக் கிளைகளிலிருந்து மாற்றலாகி வருபவர்கள் தான் வசித்து வந்தார்கள்.  இப்போது அங்கே குடியிருக்கும் யாருக்கும் சென்னை சொந்த ஊரில்லை.  அதனால் அலுவலகத்திற்கு அருகே, சென்னைக்கு வெளியே இருந்த அந்தக் குடியிருப்பில் வசிப்பதைப் பிரச்சனையாக நினைக்கவில்லை.

அலுவலகத்திற்கு சென்று வருவதற்கு வண்டி, வீட்டிற்குத் தேவையான பொருள்களை வாங்க பக்கத்திலேயே பூந்தமல்லி பஜார், சிறிது தூரம் சென்றால் போரூர், வடபழனி என்று தென் சென்னையின் முக்கிய இடங்கள் என்று அனைத்து தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள வழி இருந்தது.  மக்கள் நடமாட்டம் இல்லாத அமைதியான பொழுதுகளை இரசிக்க, அனுபவிக்க தெரிந்தவர்களுக்கு அந்த இடம் சொர்க்கப் பூமி தான். ஆனால், ஜானகிக்கு, சமீபக் காலமாக, அந்த இடம் நரகமாக மாறியிருந்தது.  அதற்குக் காரணம் அவருடைய எதிர் வீட்டில் குடியிருப்பவள். அவருடைய மகனின் மனத்தை கவர்ந்தவள்.

ஈஷ்வரின் மனத்தை கவர்ந்தவளோ அவனையும் அவன் வீட்டையும் ஏறெடுத்துப் பார்க்காமல் அவளுடைய வீட்டிற்குச் சென்றாள்.  வீட்டு வாசல் கதவு திறந்தே இருந்தது.  அலங்கார பொருள்கள் இல்லாமல், காலியாக இருந்த வரவேற்பறையில், எதிரும் புதிருமாக இரண்டு சோஃபாக்கள் மட்டும்.  வாசலைப் பார்த்தபடி இருந்த சோஃபாவில் ராம நாதன் அமர்ந்திருந்தார். அவரெதிரே, வாசலுக்குப் பின்புறத்தைக் காட்டியபடி இருவர் அமர்ந்திருந்தனர்.