அத்தியாயம் – 9

அன்று காலை பத்து மணி போல் சுந்தரி பாட்டிக்கு டிஸ்சார்ஜ் என்று தெரிந்தவுடன், எட்டு மணிக்கு அலுவலகம் சென்று, சிறிது நேரம் வேலை பார்த்து விட்டு, பத்து மணியாக சில நிமிடங்கள் இருக்கும் போது மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தான் உமேஷ். இந்த மருத்துவமனைக்குப் பலமுறை வந்திருக்கிறான்.  அதனால், அவர்கள் வேலை செய்யும் பாணியில், எப்படியும் பாட்டியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு அழைத்துச் செல்ல அரைமணியிலிருந்து முக்கால் மணி நேரமெடுக்கும் என்று கணக்கிட்டு தான் சரியாக பத்து மணிக்கு போனான்.  

நேரே சுந்தரி பாட்டியின் அறைக்குச் சென்றான். வராண்டாவில் யாருமில்லை. ராம நாதன், உமா இருவரும் அதுவரை எங்கேயும் கண்ணில் தென்படவில்லை.  அறையின் கதவை லேசாகத் தட்டி விட்டு உள்ளே சென்றான் உமேஷ்.  அறையினுள்ளும் யாருமில்லை.  படுக்கையில் சாயந்தபடி அமர்ந்திருந்தார் சுந்தரி பாட்டி.  உமேஷின் வருகையை எதிர்பாக்கவில்லை என்று அவருடைய கண்கள் காட்டிக் கொடுத்தன.  அதைக் கண்டு கொண்டவன்,

“உங்களைப் பற்றி விசாரிக்க ஆஸ்பத்திரிக்கு ஃபோன் செய்த போது இன்னைக்கு உங்களுக்கு டிஸ்சார்ஜ்னு சொன்னாங்க..அதான் உங்களைப் பார்க்க வந்தேன்..எப்படி இருக்கீங்க? இப்போ உடம்பு பரவாயில்லை தானே?” என்று விசாரித்தான்.

சில நொடிகள் மௌனத்திற்கு பின்,”நல்லா இருக்கேன் ப்பா..புதுசா மருந்து கொடுத்திருக்காங்க..அது வேலை செய்யுது போல.” என்றார்.

அப்போது, கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்த நர்ஸ்,”ஸர்..இவங்களுக்கு உறவா நீங்க? நேத்து சாயங்காலமே டாக்டர் பார்க்கணும்னு சொன்னாங்க..அந்தப் பொண்ணும் அப்போ இல்லை..இராத்திரி அந்தப் பெரியவரும் வரலை..பணம் கட்டிட்டு பேப்பரெல்லாம் வாங்கிட்டு ரிசெப்ஷன்லே கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..டாக்டர் ஃப்ரீயானவுடனே சொல்லுவாங்க..அவரைப் பார்த்திட்டு போங்க..இந்தாங்க ரிபோர்ட்ஸ்.” என்று சுந்தரி பாட்டியின் ஃபைலை உமேஷிடம் கொடுத்து விட்டு சென்று விட்டார்.  

“நேத்து நைட் தனியா தான் இருந்தீங்களா? துணைக்கு யாரும் வரலையா? என்று கேட்டான் உமேஷ்.

“உமா நைட் டியுட்டி செய்யறா..காலைலே இங்கே வந்திட்டு சாயங்காலம் போல வீட்டுக்குப் போயிடுவா..ராமுக்கு அலைய முடியலை..அதனாலே நேத்து அவனை வர வேணாம்னு நான் தான் சொன்னேன்..கொஞ்ச நேரத்திலே இரண்டு பேரும் வந்திடுவாங்க.” என்றார் சுந்தரி. 

ஆனால், கொஞ்சம் நேரம், அரைமணி நேரமாகியும் இருவரையும் காணவில்லை.

அதற்குள் இரண்டு முறை அறைக்கு வந்து விட்டார் நர்ஸ்.  முதல் முறை, சுந்தரி பாட்டி அவரை அழைத்து வரச் சொன்னதால், உமேஷ் போய் அவரை அழைத்து வந்தான். இரண்டாவது முறை, எப்போது பாட்டியை அழைத்துச் செல்லப் போகிறீர்கள்? என்று கேட்க அவரே அறைக்கு வந்தார்.  சிறிது நேரத்தில் என்று பதில் கொடுத்த உமேஷ், அவர் சென்றவுடன்,”பாட்டி, ராம் அங்கிள் ஃபோன் நம்பர் கொடுங்க.” என்றான்.

“அவனோடு ஃபோனை அணைச்சு வைச்சிருப்பான்..நீ உமாக்கு ஃபோன் செய்.” என்றார் சுந்தரி.

“அவளோட நம்பர் என்கிட்டே இல்லை..உங்ககிட்டே இருக்கா?..உங்க ஃபோனைக் கொடுங்க..நான் அதிலிருந்து அவளுக்கு ஃபோன் செய்யறேன்.” என்றான் உமேஷ்.

“என்கிட்டே ஃபோன் இல்லை ப்பா..அவ நம்பரும் தெரியாது..வீட்டிலே சுவர்லே எழுதி வைச்சிருப்பா..முன்னே அவளோடவே இருந்த போது அதைப் பார்த்து லேண்ட்லைலேர்ந்து அவளுக்கு ஃபோன் போடுவேன்..இப்போ ராமோட போறேன் வரேன்..அவன் இல்லைன்னா இந்து தான் அவளுக்கு ஃபோன் செய்வா.” என்றார் சுந்தரி.

ராம நாதனின் கைப்பேசி இலக்கு அவனுடைய அப்பாவிடம் தான் இருக்கிறது.  வீட்டுப் பெரியவர்களோடு  இதுவரை பேசவேயில்லை. இரண்டு முறை அவனுடைய அம்மா அவனுடன் பேச முயன்ற போது, பிஸியாக இருப்பதாகச் சொல்லித் தவிர்த்து விட்டான்.  பார்வதி பாட்டிக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதை ஜெயந்தியும் ப்ரீத்தியும் அவனுக்குத் தெரிவித்திருந்தனர்.  ஆனாலும் அவனுடைய பாட்டியை அழைத்து நலம் விசாரிக்கவில்லை.  

இரண்டு நாள்களாக, உமாவைப் பற்றி தெரிந்த பின், அவனுடைய குடும்பத்தினர் அவனுக்கு அந்நியமாகத் தெரிந்தனர்.  எப்படி அப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டு, இத்தனை வருடங்களாக, எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர்களால் வாழ முடிந்தது? என்ற கேள்வி அவனை வதைத்தது.  அவனுடைய வீட்டினர்க்கு ப்ரீத்தி ப்ரியமானவள்.  ஏகாம்பரம் அதை வெளிப்படையாக அவளிடம் காட்ட மாட்டார். ஆனால், அந்தப் ப்ரீயத்தின் காரணமாக தான், ‘இதுகூட உன்னோட பேத்திக்காக செய்ய முடியலையா?’ என்று அவருடைய மனைவியைக் கோபித்துக் கொண்டார். 

அவர்களோடு நிரந்தரமாக ப்ரீத்தி வந்த பின், ஜெயந்தியோடும் அவனோடும் கணக்கில்லாச் சந்தோஷங்களையும் மகிழ்ச்சியான தருணங்களையும் அனுபவத்திருக்கிறாள்.  சொந்த சகோதரன் போல், ஜெயந்திக்கும் அவளுக்கும் ஒரே மாதிரி எல்லாம் செய்வான். ஜெயந்தியின் கல்யாணத்தில், வீட்டின் கடைக்குட்டியாக, பட்டும், தங்கமும் உடுத்தி, பசுபதி வீட்டின் செல்லப் பெண்ணாக வளைய வந்தாள் ப்ரீத்தி.  அந்தப் ப்ரீத்தி அவன் கண்முன் வர, அவளருகில், சிம்பிலான காட்டன் புடவையில், வேலையிலிருந்து திரும்பியிருந்த, காட்டன் சுடிதாரில், ஆஸ்பத்திரியில், அலைந்து திரிந்த உமா தோன்றினாள். 

ப்ரீத்தியின் கல்யாணத்தை நடத்த விஜய் வீட்டினர் இது போல் ஒரு கண்டிஷன் போட்டிருக்கா விட்டால், அவனுடைய அத்தையைப் பற்றி அவனுக்குத் தெரிய வந்திருக்காது.  முக்கியமாக உமா பார்வதி என்ற அவருடை மகள் பற்றி அறியாமல், அறியாமையில் வாழ்ந்திருப்பான். அவர்கள் செய்த செயலை நினைத்து, அவனுடைய வீட்டுப் பெரியவர்கள் மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு, வளர்ந்து விருட்சமாகிக் கொண்டிருந்தது. அதை மனத்தின் ஓரத்திற்கு ஒதுக்கி வைத்து, நாகேஸ்வரனை அழைத்தான் உமேஷ்.

சென்னையிலிருந்து திரும்பியதிலிருந்து அவருடன் பேசாதிருந்த மகன், அவனாகவே அழைத்தவுடன், ஆவலுடன் அழைப்பை ஏற்றார் நாகேஸ்வரன்.

“ராம நாதன் அங்கிள் ஃபோன் நம்பர் அனுப்புங்க..சுந்தரி பாட்டிக்குப் பத்து மணிக்கு டிஸ்சார்ஜ் சொல்லியிருந்தாங்க..ஆனா இன்னும் அவரை, உமாவைக் காணலை.” என்றான்.

அந்தத் தகவலில் திகைப்படைந்த நாகேஸ்வரன்,”நீ எங்கே டா அங்கே போனே?” என்று கேட்க, அதற்கு உமேஷிடமிருந்து பதில் வரவில்லை.  அவர்கள் செய்த தவறைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கான் மகன் என்று புரிந்து கொண்ட நாகேஸ்வரன்,”அனுப்புறேன்…அவரோட ஃபோன் அவரோட மனைவிக்கிட்டே இருக்கும்..அவரோட இருந்தா அணைச்சு இருக்கும்…பேஸ்மேக்கர் போட்டிருக்காங்க அவருக்கு.” என்ற விவரத்தையும் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த பத்து நிமிடங்களில், நான்கு முறை ராம நாதனின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தான் உமேஷ்.  கைப்பேசி ஸிவ்ட்ச் ஆஃப் என்றது. அவனுடைய முயற்சியைப் பார்த்துக் கொண்டிருந்த சுந்தரி பாட்டியிடம்,

“ராம் ஆங்கிள் ஃபோனை அணைச்சு வைச்சிருக்கார்.” என்றான்.

“கிளம்பி வந்திட்டு இருப்பான்.” என்றார் சுந்தரி

அப்போது, அறையின் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தாள் உமா.  அவளுடைய கையில் பெரிய ஷாப்பிங் பேக் இருந்தது.  உமேஷைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவள், அவனோடு என்ன பேசுவது என்று தெரியாமல் விழிக்க,

“தம்பி தான் பத்து மணிலேர்ந்து எனக்குத் துணையா இருக்குது.” என்றார் சுந்தரி பாட்டி.

அவனை நேராக நோக்கி, ’தாங்க்ஸ்” என்றாள் உமா.

அதற்கு, அவளைப் பார்த்து லேசாகப் புன்னகை செய்தான் உமேஷ்.  அந்த லேசான புன்னகை அவளுள் லேசான படபடப்பை உண்டாக்க, உடனே அவளுடைய பார்வையைத் தாழ்த்திக் கொண்டு, அவளுடைய கவனத்தை சுந்தரி பாட்டியிடம் திருப்பினாள்.

“பாட்டி, வேற டிரெஸ் போட்டுக்கோங்க..பணமெல்லாம் கட்டிட்டேன்..டாக்டரையும் பார்த்திட்டேன்..லேட்டாயிடுச்சு..சித்தப்பாக்காகக் காத்திருக்க வேணாம்..நானே உங்களை அங்கே கொண்டு போய் விட்டிட்டு வீட்டுக்குப் போகறேன்.” என்றாள் உமா.

“நீ வர வேணாம்..ராம் வந்திடுவான்..அவனோடவே போயிடறேன்..உனக்கு நேரம் கிடைக்கும் போது வந்து பார்..இனி நீ பகல்லே தானே வேலைக்குப் போகணும்?” என்று கேட்டார்.

தொடர்ந்து மூன்று இரவுகள் விழித்திருந்து, இரண்டு இரவுகளாக வேலைக்குச் சென்று, பகல் வேளையில் ஆஸ்பத்திரியில் பாட்டிக்குத் துணையாக இருந்து, பரிசோதனைகளுக்கு அவருடன் அலைந்து, அவளும் ஓய்ந்து போயிருந்தாள்.  இதற்கிடையே, திடீரென்று, அலுவலகத்தில் ஏற்பட்ட மாற்றங்களில் அவளுக்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது. அதனால், இரண்டு நாள்கள் விடுமுறை எடுத்துக் கொண்டு விட்டாள்.

“இரண்டு நாள் லீவ் எடுத்திருக்கேன்..சித்தப்பாக்காக எத்தனை நேரம் காத்திருப்பீங்க..மாத்திரை சாப்பிடணும்..மத்தியான சாப்பாடு நேரம் வரப் போகுது.” என்றாள் உமா.

உடனே,“அங்கிளோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்ன்னு வருது..நாலு, அஞ்சு முறை முயற்சி செய்தேன்..வழிலே இருப்பார்னு பாட்டி சொன்னாங்க.” என்றான் உமேஷ்.

நேற்று இரவு அவரால் பாட்டிக்குத் துணையாக இருக்க முடியவில்லை.  அவளாலும் நேற்று விடுமுறை எடுக்க முடியவில்லை.  இன்று காலையிலிருந்து சித்தப்பாவுடன் அவள் பேசவேயில்லை. அவரும் அவளை இதுவரை அழைக்கவில்லை. அவருடைய வீடு இங்கேயிருந்து கால் மணி நேரம் தான். ஏன் இன்னும் வந்து சேரவில்லை என்று யோசனையானாள் உமா. 

“கீழே போய்க் காத்திருக்கலாம்..அவன் வந்திடுவான்.” என்றார் சுந்தரி.

அப்போது,“இதெல்லாம் பாட்டியோட பேப்பர்ஸ்ன்னு நர்ஸ் கொடுத்திட்டுப் போனாங்க.” என்று அவனிடம் கொடுத்திருந்த ஃபலை உமாவிடம் கொடுத்தான் உமேஷ். அவளுடைய பேகில் இருந்த மற்ற காகிதங்களோடு அதை வைத்துக் கொண்டாள் உமா. 

ஷாப்பிங் பேகிலிருந்த நைட்டியைக் கட்டில் மீது வைத்தவுடன் அறையிலிருந்து வெளியேறினான் உமேஷ்.  வராண்டாவில் நின்றபடி, ராம நாதனின் வீட்டில் சுந்தரி பாட்டியைக் கொண்டு விட்ட பின் அலுவலகத்திற்குச் செல்ல வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்து, அறை கதவைத் திறந்த உமா,

“பாட்டி கூப்பிடறாங்க.” என்றாள் உமேஷிடம்.  அவன் உள்ளே வந்தவுடன்,

“நீ கிளம்பு ப்பா..இனி உமா பார்த்துப்பா.” என்றார் சுந்தரி.

“பரவாயில்லை..உங்களை வீட்லே கொண்டு விட்டிட்டு கிளம்பறேன்.” என்றான் உமேஷ்.

“இங்கே பக்கத்திலே தான் ராம் வீடு இருக்கு..அவன் வந்திடுவான்..நாங்க போயிடுவோம்.” என்றார் சுந்தரி. அதைப் புறக்கணித்து விட்டு, நாற்காலி மீது தயாராக வைத்திருந்த பையைக் கையில் எடுத்துக் கொண்டு,”உங்களை நான் தான் வீட்டுக்குக் கொண்டு போய் விடுவேன்..கீழே ரிசெப்ஷன்லே வெயிட் பண்ணலாம்.” என்றான். அதற்கு மேல் பேச்சு கிடையாது என்ற அவனுடைய தோரணைக்கு அடிப்பணிந்து கிளம்பினர் பாட்டியும் பேத்தியும்.

ரிசெப்ஷனில், அவர்கள் மூவரும் பத்து நிமிடங்கள் போல் காத்திருந்த பின்னும் ராம நாதனைக் காணவில்லை.  வேறு வழியில்லாமல், அவளுடைய சித்தியின் கைப்பேசிக்கு அழைத்தாள் உமா.  அவளுடைய அழைப்பை ஏற்றவுடன்,”என்னாலே இங்கே பார்த்துக்க முடியாது..நான் கவிதா வீட்லே இருக்கேன்..இராத்திரி டியுட்டி தானே உனக்கு..அவங்களை உன் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயிடு..நைட் அவர் பார்த்துப்பார்…இப்போ ஆஸ்பத்திரிக்கு தான் வந்திட்டு இருக்கார்.” என்று சொல்லி விட்டு, உமாவிற்குப் பேச வாய்ப்பு அளிக்காமல், அழைப்பைத் துண்டித்தார் இந்துமதி.

சித்தப்பா வர ஏன் தாமதமானது என்று உமாவிற்குப் புரிந்து போனது.  

“என்ன சொல்றா இந்து?” என்று உமாவிடம் விசாரித்தார் சுந்தரி.

“சித்தப்பா வந்திட்டு இருக்கார்..கவிதாவோட இருக்காங்க சித்தி..பாட்டி, உங்களை நான் என்னோட அழைச்சிட்டுப் போறேன்.” என்றாள்.

“உன்கூட நான் எப்படி வர முடியும்? நீ இராத்திரி டியுட்டிக்கு போயிடுவேயே.” என்றார் சுந்தரி.

“இரண்டு நாள் லீவு போட்டிருக்கேன்..பிரச்சனையில்லை..இராத்திரி சித்தப்பா நம்மளோட தான் இருக்கப் போறாங்க.” என்றாள். 

அப்போது, அங்கே வந்து சேர்ந்த ராம நாதன், உமேஷைப் பார்த்து ஆச்சர்யமடைந்தார். அவர் கேட்கும் முன், 

“பாட்டி டிஸ்சார்ஜ் ஆகறத்துக்கு முன்னாடி அவங்களைப் பார்க்க வந்தேன்..அப்படியே நீங்களும் உமாவும் வர்ற வரை அவங்களோட பேசிட்டு இருந்தேன்.” என்றான்.

“ரொம்ப நன்றி தம்பி..எனக்கு வேற வேலைகள் வந்திடுச்சு..அதான் லேட்டாகிட்டேன்.” என்றார் ராம நாதன்.

‘ஏன் டா, உமா வீட்டுக்காப் போகப் போறோம்?” என்று மகனை விசாரித்தார் சுந்தரி.

“ம்ம்..இந்துவைக் கவிதா வீட்லே விட்டிட்டு வரேன்..மாப்பிள்ளை வீட்டு சைட்லே நாளைக்கு ஒரு விசேஷம்னு சொன்னேனே…அதிலே கலந்துக்க எப்படியும் நாம இன்னைக்கு நம்ம வீட்டுக்கு போயிருக்கணும்..நீங்க ஆஸ்பத்திரிலே அட்மிட் ஆன பிறகு அதையெல்லாம் மறந்திட்டீங்க..இன்னைக்கு நைட் உமாவோட வீட்லே இருந்திட்டு நாளைக்கு அங்கேயிருந்து நேரா ஃபங்ஷனுக்குப் போயிடுவேன்..நாளைக்கு நைட் உமா தான் உங்களைப் பார்த்துக்கணும்..என்னாலே வர முடியாது..ஒரு நாள் வீட்லேர்ந்து அவ வேலை செய்யட்டும்.” என்றார்.

“இந்து எப்போ டா வீட்டுக்கு வருவா?” என்று சந்தரி கேட்க, அதற்கு ராம நாதனிடமிருந்து பதில் வரவில்லை. அதற்கு மேல் அந்த உரையாடலை நீடிக்க விரும்பாமல்,

“சித்தி மெதுவா வரட்டும்..நான் வீட்லேர்ந்து வேலை செய்ய எழுதிக் கொடுத்திடறேன் பாட்டி..நீங்க என்னோடவே கொஞ்ச நாள் இருங்க..உங்களோட உடம்பு சரியான பிறகு சித்தப்பா வீட்டுக்குப் போகலாம்..ஏதாவது அவசரம்னா ஆபிஸ் கேப் நம்பர் இருக்கு..அவங்களுக்கு ஃபோன் செய்து வரவழைச்சுக்கலாம்.” என்று முடித்து வைத்தாள்.  

உடனே,”வீட்டுக்குப் போக கால் டாக்ஸி புக் செய்திடு.” என்றார் ராம நாதன். அதற்கு உமா பதில் சொல்லு முன்,

“கால் டாக்ஸி வேணாம்..நான் அழைச்சிட்டுப் போய் விடறேன்..ஒரு நிமிஷம் வெயிட் பண்ணுங்க..நான் வர லேட்டாகும்னு என்னோட ஆபிஸுக்குத் தகவல் கொடுத்திடறேன்.” என்று சொல்லி விட்டு, சற்று நகர்ந்து போய் ஃபோன் பேசிவிட்டு, சில நிமிடங்கள் கழித்து திரும்பினான் உமேஷ். 

ஷாப்பிங் பேக்கை டிக்கியில் வைத்து விட்டு, சுந்தரி பாட்டி, அவருடைய பேத்தி இருவரையும் பின்பக்க இருக்கையில் அமர வைத்து, அலுங்காமல் குலுங்காமல் இருபதே நிமிடத்தில் பேத்தியின் வீட்டிற்கு அழைத்து சென்றான். வண்டியை நிழலில் நிறுத்தி விட்டு அவன் வருவதற்குள், வீட்டுக் கதவைத் திறந்து உள்ளே சென்றிருந்தனர் மூவரும்.  எதிர் வீட்டிலிருந்து ஆர்வத்துடன் உமேஷைப் பார்த்துக் கொண்டிருந்தார் ஜானகி.  அதை அறியாமல், ஒரெயொரு முறை அந்த வீட்டிற்கு வந்திருந்தவன், பலமுறை வந்தவன் போல், நிதானமாக கேட்டைச் சாத்தி விட்டு, சாவகாசமாக காலணியை வாயிலில் கழட்டி விட்டு வீட்டிற்குள் நுழைந்தான் உமேஷ்.

வரவேற்பறையில் யாருமில்லை.  முதல்முறை வந்த போது அமர்ந்த அதே சோஃபாவில் தானாகவே அமர்ந்தான் உமேஷ். சில நிமிடங்கள் கழித்து, சமையலறையை அடுத்திருந்த படுக்கையறையிலிருந்து வந்த ராம நாதன்,

“அங்கே பாத்ரூம் இருக்கு..யூஸ் பண்ணிக்கோங்க.” என்றார்.  அவர் சுட்டிக் காட்டிய அறைக்குச் சென்றான் உமேஷ்.  அந்த அறையிலும் சாமானில்லை.  கட்டில், ஒரு சின்ன மேஜை.  அந்த மேஜையில் ஒரு கைப்பேசி சார்ஜ் ஆகிக் கொண்டிருந்தது.

வாஷ் ரூமை உபயோகித்து விட்டு, படுக்கையறைலிருந்து உமேஷ் வெளியே வந்த போது, ஒரு கிளாஸ் ஜூஸுடன் வந்த உமா, அதை வரவேற்பறையில் வைத்து விட்டு, சமையறைக்குச் சென்று விட்டாள்.

சோஃபாவில் அவன் அமர்ந்தவுடன்,“ஜூஸ் எடுத்துக்கோங்க தம்பி.” என்றார் ராம நாதன்.

“உங்களுக்கு?” என்று அவன் வினவ,”இல்லை..நான் வெறும் தண்ணீர் தான்..வந்தவுடனேயே குடிச்சிட்டேன்..ஒரே வெய்யில்..கீழே பரவாயில்லை..மாடிலே ரொம்ப தெரியும்..அந்தப் படுக்கையறைலே மட்டும் தான் ஏசி இருக்கு.. கீழே ஃபேன் தான்..அந்த ஏசி வீட்டோட வந்திச்சு..இப்போ இவ காலி செய்திட்டு போகும் போதும் அதை விட்டிட்டுப் போயிடுவா.” என்றார்.

வீட்டை காலி செய்து விட்டு எங்கே போகப் போகிறாள்? என்று அவன் மனதுள் கேட்ட கேள்வி ராம நாதனை சென்றடைந்ததால், உமாவைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

“முதல் முறை வெளிநாடு போக வாய்ப்பு கிடைச்ச போது எனக்கு உடம்பு சரியில்லை..அதனாலே தள்ளிப் போட்டா.. அப்புறம் அந்த மாதிரி வாய்ப்புக் கிடைக்கவேயில்லை..இப்போ தான் ஒரு வாய்ப்புக் கிடைச்சிருக்கு..இந்த முறை கண்டிப்பாப் போயிடுவா..அப்புறம் இங்கே திரும்பி வர மாட்டா..வேற ஊர் தான்..அவ இங்கே இருக்கற வரைக்கும் அவளோட இருக்கணும்னு அம்மா பிரியப்படறாங்க..அதான் இங்கே வந்து போயிட்டு இருக்கோம்.” என்றார் ராம நாதன்.

அதற்குள் ஜூஸைக் குடித்து முடித்திருந்த உமேஷ்,”நான் கிளம்பறேன் அங்கிள்..நான் வடபழனிலே தான் இருக்கேன்..ஏதாவது உதவி தேவைப்பட்டா எனக்கு ஃபோன் செய்யுங்க..இன்னைக்குக் காலைலே ஆஸ்பத்திரிலேர்ந்து நாலு, அஞ்சு முறை நான் உங்களுக்கு ஃபோன் செய்தேன்..ஸ்விட்ச் ஆஃப்ன்னு வந்தது..அது தான் என்னோட நம்பர் சேவ் செய்துக்கோங்க.” என்று சொல்லி விட்டு சோஃபாவிலிருந்து எழுந்து கொண்டான்.

ராம நாதனால் உமேஷோடு சகஜமாகப் பேச முடியவில்லை. எனவே,“நான் இப்போ தான் என்னோட ஃபோனை ஆன் செய்து சார்ஜிலே போட்டிட்டு வந்திருக்கேன்.” என்று முடித்தார்.

“பாட்டிகிட்டே சொல்லிட்டுப் போறேன்.” என்றான் உமேஷ்.

“ம்ம..தூங்கிட்டாங்களான்னு தெரியலை..பார்க்கறேன்.” என்று எழுந்து சென்றார் ராம நாதன்.

சுந்தரி பாட்டி விழித்திருந்தார். 

“என்ன ம்மா? தூங்கலையா?” என்று ராம நாதன் கேட்க,

“உமா சமைச்சிட்டு இருக்கா..சாப்பாடு சாப்டிட்டு மாத்திரை சாப்பிடணும்.” என்றார்.

“அந்தத் தம்பி உங்ககிட்டே சொல்லிட்டுப் போகணும்னு காத்திட்டு இருக்கார்..ஹாலுக்கு வரீங்களா?” என்று கேட்டார் ராம நாதன்.

அவருடைய மனத்தில் இருந்ததைப் பார்வதி அம்மாவிடம் கொட்டிய பின்னும் சுந்தரி பாட்டிக்கு அமைதி கிட்டவில்லை.  உமாவைப் பற்றிய மனக்கவலை கிஞ்சிதமும் குறையவில்லை.  அதனால், அவரிடம் விடைபெற்றுக் கொள்ள நினைக்கிறான் உமேஷ் என்றவுடன், கடைசி முறையாக அவனிடம் முறையிட விழைந்தது அவரது மனது. எனவே,

“அவனை இங்கே வரச் சொல்லு.” என்றார் சுந்தரி.

வரவேற்பறையில் காத்திருந்த உமேஷிடம்,”உள்ளே கூப்பிடறாங்க அம்மா.” என்றார் ராம நாதன்.

ராம நாதனைப் பின் தொடர்ந்து சென்றான் உமேஷ்.  மாடிப்படியை ஒட்டி இருந்தது அந்தப் படுக்கையறை.  அறையில் நுழைந்தவுடன், கதவருகிலேயே கட்டில்.  பக்கத்தில், சின்னதாக, ஒரு மேஜை.  அதன் மீது தண்ணீர் ஜக், ஒரு டம்பளர், ஒரு நோட்பேட், பென்சில். மேஜைக்கு மேலே, சுவரில், பென்சிலில், பெரிதாக, உமா என்று எழுதி, அதனருகே அவளுடைய கைப்பேசி இலக்கு எழுதப்பட்டிருந்தது.

அப்போது, இன்னொரு படுக்கையறையிலிருந்த ராம நாதனுடைய கைப்பேசி ஒலி எழுப்ப,”அம்மா, இந்துவா இருப்பா.” என்று சுந்தரியிடம் சொன்னவர், “நான் ஃபோன் பேசிட்டு வர தாமதமாகலாம்..அம்மாவோட பேசிட்டு நீங்க கிளம்பிடுங்க தம்பி.” என்று உமேஷிடம் சொல்லி விட்டு அங்கிருந்து அகன்றார்.  

ராம நாதன் சென்றவுடன், உமேஷின் கையைப் பற்றிக் கொண்டு,

“அன்னைக்கு நீ சொன்னேயில்லே..நீங்க பசுபதி பரம்பரை..நிறைய பேருக்கு இலவசமாக் கல்யாணம் செய்து வைக்கறீங்கன்னு..உமாக்கு இலவசமா எதுவுமே வேணாம் ப்பா..சொந்த சம்பாத்தியத்திலே தாலி, பட்டுப் புடவை எல்லாம் அவளே வாங்கிக்குவா..அடுத்த முறை நீங்க அந்த மாதிரி நடத்தும் போது அதிலே இவளுக்கும் ஒரு கல்யாணத்தைச் செய்து வைச்சிடு ப்பா..மாப்பிள்ளை எதிர் வீட்லே இருக்கார்..அந்த மாதிரி கல்யாணத்துக்கு அவர்கிட்டே பேசி நான் சம்மதம் வாங்கறேன்.” என்று அவர் சொன்னதைக் கேட்டு, உடைந்து போகாமல், உமாவின் கல்யாணத்தை நடத்த உறுதி எடுத்துக் கொண்டான் உமேஷ். 

அவரிடமிருந்து கையை விடுவித்துக் கொண்டு, மேஜை மேலிருந்த பென்சிலை எடுத்து, சுவரில், உமாவின் பெயருக்கு கீழே, அவனுடைய பெயரை எழுதி, கைப்பேசி இலக்கையும் எழுதி,”உங்களுக்கு எது தேவைன்னாலும் எனக்கு இந்த நம்பர்லே ஃபோன் செய்யுங்க..அப்படி நீங்க செய்யலைன்னாலும் நானே நேர்லே வந்து உங்களுக்குத் தேவையோ இல்லையோ என்னோட பாட்டிக்குச் செய்யற எல்லாம் உங்களுக்கும் செய்வேன்.” என்று சொல்லி விட்டு அறையை விட்டு வெளியேறியவன் வேகமாக வாசல் கதவைத் திறந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினான்.

அவன் செல்வதை சமையலறையின் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.  கேட்டை திறந்து வெளியே சென்ற உமேஷை நிறுத்தி பேசிக் கொண்டிருந்தான் ஈஷ்வர்.  ‘இவன் எதுக்கு இவங்களோட பேசறான்?’ என்று அன்று இரவு பத்து மணி வரை யோசித்து யோசித்து தலை வலி வந்தது உமாவிற்கு.  அந்தத் தலைவலிக்கு தைலமெல்லாம் வேலை செய்யாது என்று உணர்ந்தவள், வலி நிவாரணிக்கு ஃபோன் செய்ய முடிவு செய்தாள்.  

உமாவின் வீட்டிலிருந்து திரும்பியதிலிருந்து அவன் மண்டையை ஒரே ஒரு கேள்வி தான் குடைந்து கொண்டிருந்தது. அவளது விருப்பம் என்ன என்று எப்படிக் கண்டு பிடிப்பது? அதற்கு ஒரே ஒரு வழி தான் இருக்கிறது.  அவளிடம் கேட்பதைத் தவிர வேறு வழியில்லை என்ற முடிவிற்கு வந்தான்.  இரவு பத்து மணியாகியும், தூக்கம் வராமல், அந்த வழியை எப்படி சென்றடைவது என்று யோசித்துக் கொண்டிருந்தான் உமேஷ். 

அப்போது, அவனுடைய கைப்பேசி ஒலி எழுப்பியது.  இந்த நேரத்தில் யார்? என்று அதைக் கையில் எடுக்க, அன்று மதியம், சுவரில் இருந்ததை மனத்தில் நிறுத்தி வைத்திருந்தான். அது, இரவில், கைப்பேசி திரையில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

பாட்டியின் உபயோகித்திற்காக அவன் எழுதி வைத்திருந்ததை பேத்தி உபயோகப்படுத்தியிருந்தாள்.

ஏதாவது அவசரமோ என்ற கவலையில், அழைப்பை ஏற்று,”என்ன? சொல்லு” என்றான்.

“அவன் என்ன சொன்னான்? என்று கேட்டு, உமேஷ் பசுபதியைக் குடைந்து கொண்டிருந்த கேள்விக்கு விடை கொடுத்தாள் உமா பார்வதி.