அவர் சொன்னது சரிதான்.மாலை நேர ஃபிளைட்டிற்குத் தான் டிக்கெட் போடயிருந்தான். அப்போது, அதற்கு முன்னால் மதிய நேரத்தில் டிக்கெட் இருப்பது போல் தகவல் வர, அதைச் சரி பார்த்து, டிக்கெட் புக் செய்து விட்டான்.“இன்னைக்கு இருக்கு..அதிலே நாலு டிக்கெட்டு கிடைச்சிடுச்சு..தயாராகுங்க.” என்றான் உமேஷ். அதன் பின் யாருடனும் அவன் பேச்சு வைத்துக் கொள்ளவில்லை.
அவனுடைய குடும்பத்தினரை விமானத் தளத்திற்கு கொண்டு விட்டவுடன் அவர்களிடமிருந்து அமைதியாக விடைபெற்றான் உமேஷ்.பேரனைப் போலவே வெகு அமைதியாக இருந்தார் பார்வதி பாட்டி. விமானத்தில் போகப் போகிறோமென்று சொன்ன போது, அவருடைய மகனுடன் சண்டைக்குப் போவாரென்று மீனா எதிர்பார்க்க, பார்வதியோ வீட்டிற்குள் நுழைந்தவுடன் பேசிய அந்த வாக்கியத்திற்குப் பிறகு வாயைத் திறக்கவில்லை.மாமியார் அவர் இயல்பில் இல்லை என்று புரிந்து கொண்ட மீனா, எப்படி இருந்தாலும், மதுரைக்குப் போன பின் தன்னுடைய கணவரிடமிருந்து என்ன நடந்ததென்று தெரியத்தான் போகிறது என்று அமைதியானார்.
அவருடைய மனைவியின் கோபம், மௌனம் இரண்டும் ஏகாம்பரத்தை பாதிக்கவில்லை.விமான நிலையத்திற்கு கிளம்பிப் போகும் வரை எப்போதும் போல், கடையின் தினசரி வேலைகளைக் கைப்பேசி மூலம் நடத்திக் கொண்டு, அவருடைய வியாபார விஷயங்களில் அவரை ஈடுபடுத்திக் கொண்டார். நாகேஸ்வரனின் மனம் ஒரு நிலையில் இல்லை.அவருடைய அம்மாவைப் போல் அவருடைய அப்பாவிடம் கோபத்தைக் கொட்ட முடியாமல், மௌனமாக அவரைப் புறக்கணிக்க முடியாமல், எப்போதும் போல், எதுவுமே நடக்காதது போல் நடந்து கொள்ள வேண்டியிருந்தது. ஆனால், உமேஷிடம் எப்போதும் போல், ஒன்றுமே நடவாதது போல் இருக்க முடியவில்லை.வீட்டை விட்டுக் கிளம்பும் முன் மகனுடன் பேச அப்பா முயற்சி செய்ய, மகன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.கொஞ்சம் நாள் போகட்டும், இதைப் பற்றி சிந்தித்து ஒரு முடிவிற்கு வந்த பின் மகனிடம் பேசிக் கொள்ளலாமென்று முடிவு செய்து மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றிருந்தார் நாகேஸ்வரன்.
விமானத்தளத்திலிருந்து நேரடியாக கிண்டியில் இருக்கும் அவனுடைய அலுவலகத்திற்குச் சென்றான் விட்டான் உமேஷ்.இன்னும் இரண்டு நாள்கள் கழித்து வேலைக்கு வர வேண்டியனை, யாரும், அன்று அலுவலகத்தில் எதிர்பார்க்கவில்லை. அவனுடைய விடுமுறையை ரத்து செய்து விட்டு வேலை செய்ய ஆரம்பித்தவனின் மனது, அன்று காலையில் நடந்த அனைத்தையும் அலசி, ஆராய்ந்து கொண்டிருந்தது.இதே சிந்தனையில் ஊழன்று கொண்டிருந்தவன், மதிய உணவை முடித்துக் கொண்ட போது மாலை நான்கு மணி ஆகியிருந்தது.வீட்டினர் எப்போது மதுரையைச் சென்றடைந்தார்கள், பயணம் எப்படி என்று எந்த விவரமும் விசாரிக்கவேயில்லை.
ஆனால், சுந்தரி பாட்டி பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டான். காலையில் உமா கொடுத்த மருந்துச் சீட்டைப் புகைப்படம் எடுத்து வைத்திருந்தான்,அந்தப் புகைப்படதிலிருந்த விவரங்களை மனத்தில் நிறுத்தி கொண்டு, மருத்துவமனைக்கு அழைத்து, சுந்தரியின் பாட்டியின் உடல் நிலையைப் பற்றி விசாரித்தான். எத்தனை நாள்கள் இருக்கப் போகிறார்? என்று கேட்டுத் தெரிந்து கொண்டான்.ரிசெப்ஷனிலிருந்து அக்கௌண்ட்ஸிற்கு அழைப்பை மாற்றச் சொல்லி,அவனை அறிமுகம் செய்து கொண்டு, அவனுக்குத் கிடைக்கக்கூடிய தள்ளுபடி அனைத்தும் சுந்தரி பாட்டிக்குக் கிடைக்கும்படிசெய்தான்.இன்று அவரைச் சந்திக்கவில்லை என்பதால், டிஸ்சார்ஜ் அன்று, நேரில் சந்தித்து, அவனுடைய வண்டியில் அவரை வீட்டிற்கு அழைத்து செல்ல முடிவு செய்தான்.
மதுரையை சென்றடைந்தவுடன், அவருடைய படுக்கையறைக்குச் சென்ற பார்வதி, அறையை விட்டு வெளியே வரவில்லை.சாப்பாடும் வேண்டாமென்று மறுத்து விட்டு, சிறிது நீர்மோர் அருந்தி விட்டு உறங்கப் போய் விட்டார். அடுத்த சில மணி நேரத்தில், பார்வதிக்கு பயங்கர காய்ச்சல். தூக்கத்தில், அவர் அனத்த ஆரம்பித்தவுடன் விழித்துக் கொண்ட ஏகாம்பரம், உடனே, பக்கத்து அறையில் உறங்கிக் கொண்டிருந்த மகனையும் மருமகளையும் அழைத்து வந்து விட்டார்.
அடுத்த பத்து நிமிடங்களில் வீட்டிற்கு வந்த மருத்துவர், ஊசி போட்டு, உடனடியாக காய்ச்சலைக் குறைக்க முயன்றார்.காய்ச்சல் குறைய இரண்டு மணி நேரமானது. சென்னையிலிருந்து திரும்பியதிலிருந்து நாகேஸ்வரனுக்கும் மனதும் உடலும் ஏதோ போல் தான் இருந்தது.அதனால் தான் மீனாவிடம் அதிகம் பேசாமல், மேலோட்டமாக, ஆஸ்பத்திரியில் நடந்ததைப் பகிர்ந்து கொண்டார்.ப்ரீத்தியின் சித்தப்பா உடல் நலம் சரியில்லாதவர், அதனால் தான் கல்யாணத்தை நடத்த மறுத்துவிட்டார் என்று நினைத்துக் கொண்டார் மீனா.அதுவும் ஒரு விதத்தில் நல்லது தான் என்று தோன்றியது மீனாவிற்கு.கல்யாணத்திற்குத் தேதி குறித்து விட்டு, அவருக்கு ஏதாவது ஆகிவிட்டால் மறுபடியும் ஆரம்பித்த இடத்திற்கே போக நேரிடும்.அதனால், அவருடைய கணவர் சொன்னபடி, வேறு ஏதாவது ஏற்பாடு தான் செய்ய வேண்டும்.என்ன செய்யலாமென்று யோசனை செய்து கொண்டிருந்த போது தான் அவர்களை அழைக்க வந்தார் ஏகாம்பரம்.
மறுநாள் மதியம் வரை படுக்கையைவிட்டு எழவில்லை பார்வதி.தகவல் கிடைத்தவுடனேயே அவருடைய பேத்திகள் இருவரும், அடுத்த நாள் காலையில், பார்வதியின் காலடியில் இருந்தனர்.அவளுடைய மகன் விக்ரமை உடன் அழைத்து வந்திருந்தாள் ஜெயந்தி. பேத்திகளே மாறி மாறி பார்வதியைப் பார்த்துக் கொள்ள, ஒரளவு மனதும் உடலும் தேறிய பார்வதிக்கு, சென்னையில் பார்த்த பேத்தி, அவளை மூத்த மகளாக வளர்த்து, அவள் மீது அன்பு பொழிந்த அவருடைய மகளின் நினைவில், கண்ணீர் வந்தது.
அவர் அழுவதைப் பார்த்து,”அம்மா, பிக் பாட்டி க்ரையிங்.” என்றான் விக்ரம்.
மனத்தில் இருப்பதை வெளியே சொல்ல முடியாமல், கண்ணீர் பெருகியது பார்வதிக்கு.
“எதுக்கு அழறீங்க?” என்று மீனாவும் கேட்க, பார்வதி மௌனமாக இருந்தார். பெற்ற தாய்க்கு, காலத்தால் ஆறாத, ஆழமான காயம், அவள் பெற்றக் குழந்தையின் மறைவு. அவர் பெற்ற மகளுக்காக அவருடைய மாமியார் அழுகிறார் என்று அந்த மருமகளுக்குப் புரியவில்லை.
“உன்னோட மாமாக்கு ஃபோன் போடு ப்ரீத்தி..இப்படி அழுதா காய்ச்சல் தான் திரும்ப வரும்..எங்கிட்டே காரணம் சொல்ல வேணாம்..உங்களோட புள்ளைகிட்டேயாவது சொல்லுங்க.” என்று கோபத்துடன் சொல்லி விட்டு சென்றார் மீனா. உடனே, அவளுடைய மாமாவின் கைப்பேசிக்கு அழைப்பு விடுத்தாள் ப்ரீத்தி.
அழைப்பை ஏற்று,”சொல்லு டா குட்டி.” என்றார் நாகேஸ்வரன்.
“பாட்டி அழுதிட்டு இருக்காங்க மாமா..ஏன்னு கேட்டா..பதில் சொல்ல மாட்டேங்கறாங்க..நீங்க வீட்டுக்கு வர்றீங்களா?” என்றாள்.
எப்போதும் போல் தொழிலைப் பார்க்க வந்து விட்டனர் அப்பாவும் மகனும்.அவர்களுக்கு இரண்டு கடைகள் இருந்தன. தெற்கு ஆவணி மூல வீதியில், வீட்டருகில் ஒன்று, மற்றொன்று மேற்கு மாசி வீதியில். முதல் கடை,பசுபதி பாரம்பர்யத்தை போற்றும் கடை. பசுபதி டெக்ஸ்டையில்ஸ். அளவில், வியாபாரத்தில் பெரியது. இரண்டாவது கடை, இன்றைய தலைமுறையைப் போற்றும் கடை. பசுபதி டிரெண்ட்ஸ். அளவில், வியாபாரத்தில் சிறியது.அதனால், பெரிய, சின்ன கடைகள் என்று இரண்டு கடைகளையும் தனித் தனியாக அடையாளப்படுத்தி இருந்தான் உமேஷ்.
ஆதியில், பசுபதி சத்திரங்கள் மூலம் அன்னதானம் செய்து வந்த பசுபதிகள், இடையில் பசுபதி உறைவிடம் என்று உணவுடன் உறைவிடத்தை சேர்த்துக் கொண்டனர்.முழு மூச்சாக அறப்பணியில் இருந்தவர்கள், காலப் போக்கில், காலத்தின் கட்டாயத்தில், அறச் செயல்களைச் தொடர, ஜவுளி வியாபரத்தில் இறங்கினார்கள். ஏகாம்பரம் பசுபதி தலையெடுத்த போது முழு நேர வியாபாரம், பகுதி நேர அறச் செயல் என்று பசுபதிகளின் வழக்கம் மாறியிருந்தது.ஆரம்பத்தில் இருந்த அளவிற்கு இப்போது சொத்துக்கள் இல்லையென்றாலும், பல ஆண்டுகளாக செய்து வந்ததை, கொடுத்து வந்ததை இன்றும், தொடர்ந்து வருகின்றனர், பழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர்.சில தலைமுறைகளாக, ஒரேயொரு ஆண் வாரிசு என்பதால், பங்காளிகள் பிரச்சனை இல்லாமல், பசுபதி டிரஸ்ட்டிற்கு சொந்தமான அனைத்துச் சொத்துக்களையும் நிர்வாகம் செய்வது இவர்கள் குடும்பம் தான்.
இன்று காலையில் அப்பாவும் மகனும் பெரிய கடைக்கு வந்திருந்தனர். மதியத்திற்கு மேல் சின்ன கடைக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார் நாகேஸ்வரன். ஒரு காலத்தில், அமைதியாக இருந்த தெற்கு ஆவணி மூல வீதி, இன்று, நகைக் கடை, துணிக் கடை, பல்பொருள் அங்காடிஎன்று பெரிய வியாபார ஸ்தலமாகியிருந்தது.பகல் வேளைகளில், வீட்டிற்கு அருகே வண்டியை நிறுத்த இடம் கிடைக்காது என்பதால், டிரவைருக்கு ஃபோன் செய்து தயாராக இருக்கும்படி சொன்னார் நாகேஸ்வரன்.
ஏகாம்பரம் எப்போதும் பெரிய கடையில் தான் இருப்பார்.சில நேரங்களில், இரவு வேளையில், சின்ன கடைக்குச் சென்று கணக்கு வழக்கைச் சரி பார்த்துவிட்டு வீடு திரும்புவார். இரண்டு கடைகளையும் ஒருங்கே ஆட்சி செய்வது உமேஷ் தான்.அதனால், ஏகாம்பரத்தை தெரிந்தவர்களுக்கு அவனைத் தெரியும். நாகேஸ்வரனைத் தெரிந்தவர்களுக்கும் அவனைத் தெரியும்.அடுத்த தலைமுறை பசுபதி என்று இரண்டு கடை வாடிக்கையாளர்களுக்கும் அவன் பரிச்சயம்.
நெற்றி நிறைய திருநீறுடன் பக்திமானாக கேஷ் கௌண்டரில் அமர்ந்திருந்த ஏகாம்பரத்திடம்,”அப்பா, வீட்டுக்குப் போயிட்டு அப்படியே சின்ன கடைக்கு போறேன்.” என்றார் நாகேஸ்வரன்.
“இப்போ எதுக்கு டா வீட்டுக்கு?”
“அம்மாவைப் பார்க்க தான்..இப்போ போகலைன்னா இராத்திரி வரை பார்க்க முடியாது.” என்றார்.
“மதியச் சாப்பாட்டுக்கு வர மாட்டேயா?”
“இன்னைக்குக் கொடுத்து விட சொல்லிட்டேன்.’ என்றார்.
மதிய சாப்பாட்டிற்கு வீட்டிற்குப் போவது அவர்களின் வழக்கம்.சாப்பிட்டு முடித்த பின், சில மணி நேரம் இளைப்பாறி விட்டு, மீண்டும் பெரிய கடைக்கு வந்திடுவார் ஏகாம்பரம்.ஒன்பது மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டில் இருப்பார்.நாகேஸ்வரன் வீடு வந்து சேர ஒன்பதரை மணி ஆகிவிடும்.மிகப் பெரிய அளவில் வியாபாரம் இல்லாவிட்டாலும், பசுபதி என்ற பெயருக்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு குறைவு இல்லை. அதனால் வியாபாரம் தொய்வில்லாமல் நடந்து கொண்டிருந்தது.
பகல் வேளைகளில், வீட்டில், எப்போதும் இரண்டு வேலையாள்கள் இருந்தனர். சமையல் வேலைக்குத் தனியாக ஆள் வைத்திருந்தார் மீனா. கணவரின் வருகையை எதிர்பார்த்து வரவேற்பறையில் காத்திருந்தார்.
பல தலைமுறைகளாக அந்த வீட்டில் தான் வசித்து வருகிறார்கள். தெற்கு ஆவணி மூல வீதியிலிருந்து பிரிந்து சென்ற சந்து ஒன்றில் இருந்தது அந்த வீடு.அந்தக் காலக் கட்டமைப்பு. நீளவாக்கில், ஒரு கோடியிலிருந்து மறுகோடிவரை இருந்தது வீடு. வாசல் கம்பிக் கதவதைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார் நாகேஸ்வரன்.அங்கே சின்னதாக வராண்டா.அதில், காலணிகள் வைக்க அமைக்கப்பட்டிருந்த இடத்தில் அவருடைய காலணியை வைத்து விட்டு வரவேற்பறைக்குள் நுழைந்தார்.வீட்டிலேயே பெரிய அறை அது தான். அங்கே இருந்த சோபாவில் அமர்ந்திருந்தார் மீனா.
அவரைத் தாண்டி உள்ளே சென்றால் இன்னொரு சின்ன அறை வரும். அதில், சாப்பாடு மேஜை போடப்பட்டிருந்தது. அந்தச் சாப்பாட்டு அறையையிலிருந்து இரண்டு படிகள் கீழே இறங்கினால் சிறிய முற்றம். அங்கே ஒரு கிணறு.அதை வலை போட்டு மூடியிருந்தார்கள். அதையொட்டி மாடிக்குச் செல்லும் படிக்கட்டுக்கள். அந்த இடத்தில் தண்ணீர் குழாய்கள் இருந்தாலும் வெய்யிலின் உபயத்தில் ஈரமில்லாமல் சுத்தமாக இருந்தது அந்த இடம்.அதைத் தாண்டி, நேரெதிரே இருந்த படிகளின் மீது ஏறிச் சென்றவுடன், இரண்டு புறமும் இரண்டு அறைகள். அதை அடுத்துச் சமையலறை. அதையும் தாண்டி, வீட்டின் கடைசியில் வெட்டவெளி.அங்கே பாத்திரம் கழுவுவது, துணி துவைப்பது என்று அன்றாட வேலைகள் நடந்து கொண்டிருந்தன.
கால்களை அலம்பிக் கொண்டு வலப் பக்கத்தில் இருந்த முதல் அறையின் உள்ளே சென்றார் நாகேஸ்வரன். அங்கே, கட்டிலில் படுத்திருந்த பார்வதியின் கன்னங்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவருடைய ஒருபுறத்தில் ஜெயந்தியும் மறுபுறத்தில் ப்ரீத்தியும் அமர்ந்திருந்தனர். நாகேஸ்வரன் உள்ளே நுழைந்தவுடன்,
அவனுடைய அம்மாவின் மடியில் அமர்ந்திருந்த விக்ரம் ஓடி வந்து அவரது கால்களைக் கட்டிக் கொண்டு, “தாத்தா..என்னோட விளையாட வாங்க” என்றான்.
“தாத்தா சாயங்காலமா உங்களோட விளையாடறேன்..இப்போ நீங்க அம்மாவோட, சித்தியோட வெளியே போய் விளையாடுங்க.” என்று மூவரையும் அறையிலிருந்து வெளியேற்றினார்.
பார்வதியின் அருகே அமர்ந்து, “என்ன ம்மா ஆச்சு?” என்று அவர் கேட்டது தான் தாமதம்.உரக்க அழ ஆரம்பித்தார் பார்வதி.
”எதுவாயிருந்தாலும் சரி செய்திடலாம்..அழாதீங்க..என்ன விஷயம்னு சொல்லுங்க.” என்று சமாதானம் செய்தார்.
சில நிமிடங்கள் அழுக்கைக்குப் பின் தன்னைச் சுதாரித்துக் கொண்ட பார்வதி,
“காய்கறி வாங்க போன புருஷன், பொண்டாட்டி இரண்டு பேரும் அப்படியே நிரந்தரமாப் போயிட்டாங்க நாகு..இந்த மாதிரி ஒரு முடிவு என் பொண்ணுக்கு வந்திருக்குன்னு தெரியாம, வேளா வேளைக்குச் சாப்பிட்டுக்கிட்டு, பசுபதி பட்டு உடுத்திக்கிட்டு இவ்வளவு வருஷமா சந்தோஷமா வளைய வந்திருக்கேன்..என்னோடமக கண்ணுக்கு கண்ணா வளர்த்த அவளோட மூத்த பொண்ணை என்னோட இரத்தமில்லைன்னு உதறிட்டு வந்திருக்கேன்..நேத்திலேர்ந்து என்னை எனக்கே பிடிக்கலை நாகு..இன்னும் நான் ஏன் உயிரோட இருக்கேன்னு தோணுது.” என்று மகனிடம் கதறினார்.
அவருடைய தங்கை சிவரஞ்சனி எப்படி இறந்து போனாள்? என்ற விவரம் இப்போது தான் அவருடைய அம்மாவின் மூலம் அவருக்குத் தெரிய வருகிறது.நேற்று ராம நாதன் பகிர்ந்து கொண்ட விஷயங்களைக் கேட்ட பின் அவரும் அவருடைய அம்மாவைப் போல் தான் உணர்ந்தார்.இப்போது அவருடைய அம்மா சொன்னதைக் கேட்டவுடன், என்ன சொல்லி அவருடைய அம்மாவைச் சமாதானம் செய்வது என்று நாகேஸ்வரனுக்கு தெரியவில்லை.அவர்கள் செய்த பாவத்தை எப்படிக் களைவது? என்று யோசித்த நாகேஸ்வரன், உடனடியாக ஒரு முடிவிற்கு வந்து, அதைப் பார்வதிக்குத் தெரியப்படுத்தினார்.
“ஆமாம் ம்மா..உமாக்குப் பெரிய தப்பு செய்திட்டோம்..அதைச் சரி செய்திடலாம்.” என்றார்.
“உங்கப்பா அவர் சாகறவரை இப்படித் தான் இருக்கப் போறார்..சரி செய்திடலாம்னு சொல்லாத..சரி செய்யறேன்னு சொல்லு..எனக்கு வாக்குறுதி கொடு..எப்படிச் சரி செய்யறதுன்னு இப்போவே நான் உனக்குச் சொல்றேன்.” என்று அவருடைய வலதுக் கையை நீட்டினார் பார்வதி.
அவருடைய அப்பாவைப் பற்றி சொன்னது உண்மை தான்.பெற்ற மகளின் இறப்பை கடந்து வந்தவரை வேறு எதுவும் மாற்ற முடியாது என்று உணர்ந்த நாகேஸ்வரன்,”சரி செய்யறேன் ம்மா.” என்று பார்வதியின் கையைப் பிடித்துக் கொண்டு உறுதி கொடுத்தார்.
“நீதான் உமாவோட கல்யாணத்தை நடத்தி வைக்கணும்..மாப்பிள்ளை தயாரா இருக்கார்..உமாவோட வீட்டிக்கு எதிர் வீட்லே தான் இருக்கார்..அவளோட ஆபிஸ்லே தான் வேலை பார்க்கறார்..வீடு தேடி வந்து பொண்ணு கேட்டிருக்காங்க..அனாதைன்னு தெரிஞ்ச பின்னும் அவளை வேணாம்னு சொல்லலை..முறைப்படி கல்யாணம் செய்து கொடுத்தா பண்ணிக்கறோம்னு சொல்லியிருக்காங்க..ராம நாதனோட பொண்டாட்டி முடியாதுன்னு சொல்லியிருக்கா…
அதான், ராம நாதன்கிட்டே ‘ப்ரீத்தி கல்யாணத்தை நடத்திக் கொடுக்கறேன்..உமா கல்யாணத்தை நீங்க நடத்திக் கொடுக்கணும்னு’ உன்கிட்டே சொல்லச் சொல்லியிருக்காங்க சுந்தரியம்மா..அப்படிச் சொல்லாம, முடியாதுன்னு சொல்லிட்டான் ராம நாதன்.” என்று ராம நாதனுக்கும் அவருடைய அம்மாவிற்கும் அன்று நடந்த வாக்குவாதத்தின் காரணத்தை வெளியிட்டார் பார்வதி.
அதைக் கேட்டு யோசனையில் ஆழ்ந்த நாகேஸ்வரன், முன் தினம், ராம நாதன் சொன்னதையும், இப்போது அவருடைய அம்மா பார்வதி சொன்னதையும் கோக்க ஆரம்பித்தார். அதன் முடிவில்,
“அந்தப் பையன் வேணாம் ம்மா..அவன் சரியில்லைன்னு நேத்து ராம நாதன் சொன்னார்..அந்தப் பையனோட அம்மாக்கும் பிடிக்கலை ம்மா..வேற நல்ல பையனா, குடும்பமாப் பார்த்து உமாவுக்கு கல்யாணம் செய்வோம்.” என்று வாக்குறுதி கொடுத்த நாகேஸ்வரன் அறியவில்லை, அந்த நல்ல குடும்பம் அவருடைய குடும்பம், அந்த நல்ல பையன் அவருடை மகன் உமேஷ் பசுபதியென்று.
“என்ன டா மறுபடியும் செய்வோம்னு சொல்ற?” என்று கோபப்பட்டார் பார்வதி.
“உமாவைப் பற்றி உமேஷுக்குத் தெரிஞ்சிடுச்சு ம்மா..நேத்து ராம நாதன் என்னோட பேசிட்டு இருந்த போது அவனும் இருந்தான்..அவன் சென்னைலே தானே வேலை பார்க்கறான்..நிறைய இடங்களுக்குப் போறான்..நிறைய பேரைச் சந்திக்கறான்..உமாக்கு ஏற்ற பையனா அவனைப்பார்க்கச் சொல்லலாம்னு நினைச்சேன்..அதான் அவனையும் சேர்த்து அப்படிச் சொன்னேன்.” என்றார் நாகேஸ்வரன்.