அந்த வீட்டில் சிவரஞ்சனியைப் பற்றிய பேச்சு நின்று போய் பல வருடங்களாகி விட்டது.ப்ரீத்தியிடம் கூட அவளுடைய அம்மாவைப் பற்றி யாரும் பேசியதில்லை. அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பித்த பின், அவளுடைய அம்மா, அப்பா இருவரும் ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார்கள் என்ற தகவலை அவளுக்குத் தெரியப்படுத்தியது நாகேஸ்வரன் தான். ஐந்து வயதில் மாமாவின் குடும்பத்தோடு வந்து சேர்ந்தவளுக்கு அதற்கு முன்பு வாழ்ந்த வாழ்க்கை சரியாக நினைவில் இல்லை.
மாமா வீட்டிற்கு வந்த புதிதில், சில நேரங்களில், ஜெயந்தியை ‘உமா’ என்று அழைத்திருக்கிறாள். தானாகவே பார்வதியைப் ‘பாட்டி’ என்று அழைத்தாள். ஜெயந்தி அழைப்பது போல் உமேஷை ‘அண்ணா’ என்று அழைத்தாள்.மற்றக் குடும்ப உறுப்பினர்களை எப்படி அழைக்க வேண்டும், என்ன உறவு என்று புரிய வைத்தது பார்வதி தான்.
பத்து வயது வரை சின்ன குழந்தை போல் தான் நடந்து கொள்வாள். பகல் நேரங்களில் ஜெயந்தியோடு சுற்றுவாள். இரவு வேளைகளில் அவளை அணைத்துக் கொண்டு உறங்குவாள்.பார்வதி ஊட்டி விட்டால் தான் உணவு உண்பாள்.நாகேஸ்வரன் வீட்டிலிருந்தால் அவருடைய மடியில் ஏறி அமர்ந்து, அவருடைய கழுத்தைக் கட்டிக் கொள்வாள்.தாத்தா ஏகாம்பரத்தையும் மாமி மீனாவையும் நெருங்கவே மாட்டாள். அவளுடையை அக்கா உமாவின் இடத்தில் ஜெயந்தியை, சுந்தரி பாட்டியின் இடத்தில் பார்வதியை, அப்பாவின் இடத்தில் நாகேஸ்வரனை என்று புது இடத்தில் அவளை அவளாகவே சௌகரியப்படுத்திக் கொண்டாள்.
ஏனோ மீனாவை ‘அம்மா’ என்று அழைக்கவில்லை. அவளுடைய ‘அண்ணா’ என்ற அழைப்பி மனம் மாறி அவளிடம் அன்பு காட்டிய போதும் அவரிடமிருந்து விலகித் தான் இருந்தாள்.அவளுடைய பதின் பருவத்தில் தான் மீனாவுடன் நெருக்கமானாள்.இரத்தச் சம்மந்தம் என்று வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டாலும் அவருடைய மகள் சிவரஞ்சனியின் செய்கையின் நினைவுச் சின்னமாக தான் ஏகாம்பரத்தின் கண்களுக்குத் தெரிந்தாள் ப்ரீத்தி.அதனால், இன்றுவரை, தாத்தா, பேத்தி உறவும் ஆரம்பித்த இடத்தில் தான் இருந்தது.
உமேஷ் பிறந்த சில நாள்களில் தான் வீட்டை விட்டுச் சென்றிருந்தார் சிவரஞ்சனி.அந்த நேரத்தில், அவருடைய அம்மா வீட்டில் மீனா இருந்ததால் சிவரஞ்சனியின் காதல், திருமணம் பற்றிய விவரங்கள் இன்றுவரை மீனாவிற்குச் சரியாகத் தெரியாது. மீனாவிற்கு அவருடைய நாத்தனாருடன் சுமூகமான உறவு இருந்ததில்லை. அதற்குக் காரணம் அந்த வீட்டில் சிவரஞ்சனிக்குக் கிடைத்த சுதந்திரமும் சலுகைகளும் தான்.வீட்டின் ஒரே மகளென்று செல்வச் செழிப்போடு செல்லமாக வளர்ந்தவர் சிவரஞ்சனி.
அதுதான் அவருடைய வளர்ப்பில் ஏற்பட்ட தவறு என்று அவர் வீட்டைவிட்டு சென்ற பின் பார்வதியிடம் குத்திக் காட்ட தவறவில்லை மீனா.நாகேஸ்வரனுக்கும் சிவரஞ்சனிக்கும் இடையே ஒன்பது பத்து வருடங்கள் இடைவெளி இருந்தது.அதனால் சிவரஞ்சனி மீது நாகேஸ்வரனுக்கு ஏகப்பட்ட பிரியம்.ஒரே மகள் என்பதால் ஏகாம்பரமும் சிவரஞ்சனியின் எந்தக் கோரிக்கையையும் நிராகரித்ததில்லை. அந்த வீட்டின் ஒரே மகளுக்கு ‘இல்லை’ என்று யாரும் சொன்னதே இல்லை. பாராட்டி, சீராட்டி வளர்ந்த சிவரஞ்சனியும் பேராசை, சுயநலமாக இருந்ததில்லை. பிறரை புண்படுத்தும்படியாக நடந்து கொண்டதில்லை.பசுபதி பரம்பரையின் மரபிற்கு ஏற்ப, தன்னால் ஆன உதவியை பொருளாக, சேவையாக, பாரபட்சம் பார்க்காமல் செய்தார்.வேறுபாடு பார்க்காமல் அனைவரிடமும் அன்போடு பழகினார்.
‘இல்லை’ என்ற சொல்லை கேட்காமல் வளர்ந்த சிவரஞ்சனி, கல்லூரி படிப்பு முடிந்தவுடன், தன் மனதுக்குப் பிடித்த சுந்தரேசனை மணக்க வேண்டுமென்ற கோரிக்கையுடன் வந்த நொடி, அப்பா, அம்மா, அண்ணனின் உறவு அவருக்கு இல்லாமல் போனது.சுந்தரேசன் குடும்பத்திற்கும் சிவரஞ்சனியின் குடும்பத்திற்கும் இருந்த ஒரே வேறுபாடு, முன்னவர் தானம் பெறுபவர்கள், பின்னவர் தானம் செய்பவர்கள்.தங்களிடமிருந்து உதவி பெறும் குடும்பத்தில், தங்களுடைய தயவில் படித்து ஆளான ஒரு நபருக்குத் தங்களுடய மகளைத் திருமணம் செய்து கொடுக்க மனம் ஒப்பவில்லை ஏகாம்பரத்திற்கு.
அவருடைய அப்பாவின் நிலையைத் தன் நிலையாக நினைத்து, தங்கையுடன் உறவை முறித்துக் கொண்டார் நாகேஸ்வரன்.திருமணம் முடிந்து வீட்டிற்கு வந்த தங்கையை வீட்டு வாசப்படி வரை கூட வரவிடவில்லை.வீதியோடு சென்ற தங்கையை அதன்பின் சந்திக்கவேயில்லை.கடந்த பதினைந்து வருடங்களாக தங்கையின் மகள் தான் அவளுடையை அம்மாவை அவருக்கு நினைவுப்படுத்திக் கொண்டிருக்கிறாள். இன்று வேறொரு மகளும் அதே வேலையைச் செய்ய ஆரம்பித்திருந்தாள்.அதனால் தூக்கம் வராமல், எப்படி இந்தப் பிரச்சனையை சுமூகமாக முடிக்கலாமென்று யோசித்தபடி, விடியலிற்காகக் காத்திருந்தார் நாகேஸ்வரன்.
மகனைப் போலவே மகளைப் பற்றிய நினைவுகளோடு, மனப்பாரத்தோடு தூக்கம் வராமல் விழித்திருந்தார் பார்வதி. அது போன்ற எண்ணம் எதுவுமில்லாமல் அவரருகில், அமைதியாக உறங்கிக் கொண்டிருந்தார் ஏகாம்பரம்.மகள் மீது இருந்த பாசம், அன்பு எல்லாம் அவள் வீட்டை விட்டுப் போனவுடன் ஏகாம்பரத்திடமிருந்து வெளியேறி விட்டது.குடும்பத்தினரிடம் காட்டிய இளக்கம் மறைந்து இறுகிப் போயிருந்தார்.இத்தனை வருடங்களில் பேத்தியிடம் அன்பாக ஒரு வார்த்தை பேசியதில்லை. அவரைப் பொறுத்தவரை ப்ரீத்தி ஒரு கடமை. அதைச் சரியாக நிறைவேற்றுவது அவருடைய கடமை.
இத்தனை வருடங்களாக உமேஷை வீட்டிற்கு வரச் சொல்லி அவர்கள் யாருமே வற்புறுத்தவில்லை.ப்ரீத்திக்குக் கல்யாணம் நிச்சயம் செய்ததிலிருந்து அவருடைய முதுமையைக் காரணம் காட்டி உமேஷை வீட்டிற்கு வரவழைக்கப் பார்க்கிறார் ஏகாம்பரம். அதனால் சமீபக் காலமாக உமேஷிற்கும் அவருக்கும் ஏகப்பட்ட வாக்குவாதம் ஏற்படுகிறது.பேரனைத் தன்னுடைய கட்டுப்பாட்டில், கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தான் வேலையை விடச் சொல்லி அவனைக் கட்டாயப்படுத்துகிறார் என்று பார்வதிக்குத் தோன்றியது.அது தெரிந்து தான் உமேஷும் அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் வர மறுக்கிறான் என்றும் அவருக்குத் தோன்றியது.இருவரும் இப்படியே சண்டை போட்டுக் கொண்டிருந்தால் தன்னுடைய மகனின் நிலையை நினைத்து கவலையான பார்வதியை இது எங்கே போய் முடியப் போகிறதோ என்ற எண்ணமே உறங்க விடவில்லை.
அடுத்த நாள் காலை ஏழு மணி போல் ராம நாதனைத் தொடர்பு கொண்டார் நாகேஸ்வரன். பலமுறை அழைத்த பின்னும் அவருடைய அழைப்பை ராம நாதன் ஏற்றுக் கொள்ளவில்லை.ஏன்? என்று காரணம் தெரியாததனால் அனைவர்க்கும், கவலை, கோபம் இரண்டும் அதிகமாகிக் கொண்டிருந்தது.கடைசி முறையாக அழைத்த நாகேஸ்வரன், இந்த முறையும் அழைப்பு ஏற்கப் படாவிட்டால், நேரில் தான் போக வேண்டுமென்று முடிவு செய்தார். அந்த அழைப்பு ஏற்கப்பட்டது. கைப்பேசியில் ஒரு பெண்ணின் குரல் ஒலித்தது.
அந்தப் பெண் “ஹலோ” என்றவுடன்,”நான் நாகேஸ்வரன் பேசறேன்.” என்றார்.
“சொல்லுங்க ஸர்..நான் உமா.” என்றாள் உமா பார்வதி.
“நேத்து வீட்டுக்கு வந்திருந்தேனே..அதைப் பற்றி சித்தப்பாகிட்டே பேசணும்மா.” என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு நேரடியாக விஷயத்திற்கு வந்தார் நாகேஸ்வரன்.
“எந்த ஆஸ்பத்திரி ம்மா?” என்று விவரங்களைக் கேட்டுக் கொண்டு அழைப்பைத் துண்டித்த நாகேஸ்வரன்,
“சுந்தரி அம்மாக்கு நேத்து நைட் உடம்பு சரியில்லாமப் போயிடுச்சாம்..அவங்களை ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காங்க..ராம நாதன் அவங்க அம்மாவோட இருக்கறதுனாலே என்னோட அழைப்பை அட்டெண்ட் செய்ய முடியலை..உமா தான் இப்போ என்னோட பேசினா.” என்றார்.
இதென்ன இப்படியாகி விட்டது என்று மனச்சுமை கூடிப் போனது அனைவர்க்கும்.அந்தத் தகவல் உமேஷை யோசனையில் ஆழ்த்தியது.இனி இவர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்று அவன் பெற்றோரையும் தாத்தா பாட்டியையும் பார்த்துக் கொண்டிருந்தான். அதே யோசனையில் இருந்த நாகேஸ்வரனும்,
“இப்போ என்ன ப்பா செய்யறது? அவங்க உடம்பு குணமான பிறகு வந்து பேசிப் பார்க்கலாமா?” என்று ஏகாம்பரத்திடம் கேட்டார்.
இந்த விஷயத்தைத் தள்ளிப் போட விரும்பவில்லை ஏகாம்பரம்.இங்கேயிருந்து புறப்புடுமுன் ஒரு முடிவு தெரிய வேண்டுமென்று விரும்பினார்.எனவே,
“வேணாம்..எந்த ஆஸ்பத்திரின்னு தெரியுமில்லே அங்கே போய் அவனைப் பார்த்துப் பேசிடு..முடியாதுன்னு திட்டவட்டமா சொல்லிட்டா, வேற ஏதாவது யோசிக்க நமக்கும் அவகாசம் வேணும்.” என்றார்.
”தப்பு பண்ணிட்டேன் ப்பா..நேத்தே மீனாவை என்னோட அழைச்சிட்டுப் போயிருந்தா ராம நாதனோட மனைவிகிட்டே பேசி சம்மதிக்க வைச்சிருப்பா..இப்போ ஆஸ்பத்திரிக்கு நான் மட்டும் போய் அந்தப் பெரியம்மாவைப் பார்த்திட்டு வரேன்” என்றார்.
அதைக் கேட்டுப் பார்வதிக்குப் பாட்டிக்கு அந்த நொடி ஓர் எண்ணம் வர, உடனே,”என்னை உன்னோட அழைச்சிட்டுப் போடா.” என்றார்.
பேத்திக்காக பாட்டி களத்தில் இறங்குகிறார் என்பதால் யாரும் தடை சொல்லவில்லை.ப்ரீத்தி பார்வதியின் பாட்டியாக புறப்பட்டவர், திரும்பி வரும் போது உமா பார்வதியின் பாட்டியாகத் திரும்பி வரப் போகிறார் என்று பார்வதி பாட்டிக்கும் ஐடியா இருக்கவில்லை.
அவருடைய அம்மாவோடு ஆஸ்பத்திரிக்குச் சென்றார் நாகேஸ்வரன். எப்போதும் போல் வண்டியோட்டியானான் உமேஷ். போரூரில் இருந்தது அந்த மருத்துவமனை.அவனுடைய அலுவலகலத்திற்கு அந்த மருத்துவமனையுடன் ஒப்பந்தம் இருந்தது.அதனால் பலமுறை அந்த மருத்துவமனைக்கு வந்திருக்கிறான் உமேஷ்.வரவேற்பில் அவர்கள் விசாரித்துக் கொண்டிருந்த போது, அங்கே பக்கத்திலிருந்த ஃபார்மஸியில் நின்று கொண்டிருந்தாள் உமா. இவர்களை அவள் கவனிக்கவில்லை.அவள் கவனமெல்லாம் கடையினுள்ளே இருந்தது. அவளுடைய கையில் இருந்த காகிதத்தைக் காட்டி, விற்பனையாளரிடம் எதையோ விசாரித்துக் கொண்டிருந்தாள்.அவனோ மறுப்பாக தலையசைத்துக் கொண்டிருந்தான். அவளை முதலில் கவனித்தது உமேஷ் தான்.அவளின் பின்பக்கம் தான் அவனுக்குத் தெரிந்தது.அந்தப் பொனிடெயில் அவளை அடையாளம் காட்டியது.
“அப்பா, உமா.” என்றான் உமேஷ்.
எங்கே? என்று நாகேஸ்வரன் தேட,”மருந்துக் கடைலே நின்னுக்கிட்டு இருக்கா.” என்றான்.
பார்வதியும் அந்தப் புறம் பார்வையைத் திருப்ப,”அவளோடேயே போயிடலாம்.” என்றார் நாகேஸ்வரன்.
அவனுடையை பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு உமேஷ் வர அவனுக்கு முன்னே கடையை நோக்கி சென்றார் நாகேஸ்வரன்.
“உமா” என்ற அவருடைய அழைப்பில் திரும்பியவள், அங்கே நாகேஸ்வரனைக் கண்டவுடன்,”ஸர்..இங்கே எப்படி?” என்று அதிர்ச்சியானாள்.
“உன்னோட பாட்டியைப் பார்க்க வந்தேன்..என்னோட அம்மாவையும் அழைச்சிட்டு வந்திருக்கேன்..எந்த ரூம்?” என்று விசாரித்தார்.
உமேஷுடன் இருந்த வயதான பெண்மணியைத் தயக்கத்துடன் பார்த்த உமா,”மேலே..இரண்டாவது மாடி..வலதுப் புறம்..முதல் அறை..லிஃப்ட்டிலே போயிடுங்க.” என்று மின்தூக்கி இருந்த திசையை நோக்கி கையை நீட்டினாள்.
“நீ வரலையா ம்மா?” என்று நாகேஸ்வரன் கேட்க,
“இந்த மருந்து இங்கே இல்லையாம்..நீங்க போங்க..நான் வெளியே போய் வாங்கிட்டு வந்திடுறேன்.” என்று அவள் கையில் இருந்த மருந்துச் சீட்டைக் காட்டினாள் உமா.
ஒரு நொடி யோசித்த நாகேஸ்வரன்,”அதை என்கிட்டே கொடு.” என்று உமாவிடம் கையை நீட்டியவர், உமேஷிடம்,”நீ போய் வாங்கிட்டு வந்திடு..நாங்க மூணு பேரும் ரூமுக்குப் போகறோம்.” என்றார்.
“இல்லை..இல்லை..வேணாம்..நானே போய் வாங்கிட்டு வரேன்.” என்று அந்தச் சீட்டை இறுகப் பற்றிக் கொண்டாள் உமா. உடனே, அவளை உற்று நோக்கினான் உமேஷ். அவன் பார்வையைச் சந்திக்காமல், கையிலிருந்த சீட்டைப் பார்த்துக் கொண்டிருந்தாள் உமா.
அப்போதும் அந்தச் சீட்டை உமேஷிடம் கொடுக்காமல்,”இல்லை..வேணாம்..நானே போய் வாங்கிட்டு வரேன்..அவங்களுக்கு எப்படின்னு தெரியாது.” என்று மறுத்தாள்.
அவளுடைய விளக்கத்தைக் கேட்டவுடன், அந்தச் சீட்டை அவனிடம் கொடுக்க ஏன் தயங்குகிறாள் என்று உமேஷுக்குப் புரிய,
அவள் மறுக்கும் முன்,“கொடு.” என்று அவளுடைய கையிலிருந்து அதைப் பறித்துக் கொண்டவன்,”பாட்டியை அழைச்சிட்டுநீங்க மேலே போங்கப்பா..நான் வரேன்.” என்றான்.
நாகேஸ்வரனும் பார்வதியும் முன்னே செல்ல, அவர்களைப் பின் தொடர்ந்து செல்லயிருந்த உமாவை,”ஒரு நிமிஷம்.” என்று அழைத்தவன்,”உமா தானே?” என்று அவளிடம் கேட்டான் உமேஷ்.
நேற்றிலிருந்து அவளுடைய பெயர் உமா என்று தெரியும்.இப்போது தெரியாதது போல் கேட்டவனைப் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவளிடம்,”உமா பெயர்லே தானே பில் போடணும்?” என்று தெளிவாகக் கேட்டான் உமேஷ்.
அவளுடைய பெயரில் தான் பில் போட வேண்டும்.அப்போது தான் அலுவலகத்திலிருந்து அந்தப் பணத்தைத் திரும்ப பெற முடியும்.அதைச் சொல்ல தான் அவள் தயங்கினாளென்று அவள் சொல்லாமலேயே புரிந்து கொண்டவனை அவள் வியப்புடன் நோக்க, இருவர் பார்வையும் ஒரு நொடி சங்கமிக்க, அவளுடைய பார்வையைத் தாழ்த்திக் கொண்டு,”உமா பார்வதி..எஸ் உமா பார்வதி” என்றாள் உமா.
அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தான் உமேஷ் பசுபதி.
அவனுடைய அதிர்ச்சி உமாவின் மனத்தில் பதியவில்லை.அவளுடைய பெயரை அவனுக்குத் தெரியப்படுத்திய பின் வேக வேகமாக நாகேஸ்வரனருகில் சென்று, சற்று முன் வரை உமேஷ் பிடித்திருந்த பார்வதியின் கையை அவள் பிடித்துக் கொண்டாள்.
அவனுடைய பாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டிருந்த உமாவைப் பார்த்துக் கொண்டிருந்த உமேஷின் மனத்தில், உமா பார்வதிக்கும் ப்ரீத்தி பார்வதிக்கும் இடையே எதனால்? யாரால்? வித்தியாசம் வந்தது? என்ற கேள்வி எழுந்தது.