அவனுடைய கைப்பேசியைத் தீவிரமாகப் பார்த்துக் கொண்டிருந்தவனின் மனது தீவிரமாக உமா என்ற பெயரையும் அந்தப் பெயர் கொண்ட பெண்ணையும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தது.அவனுடைய பாட்டி அவனுக்கு வைக்க விரும்பிய பெயர் உமா மகேஸ்வரன்.அவன் அம்மாவிற்கு அது கொஞ்சமும் பிடிக்காததால் அதை மகேஷ் என்று மாற்றினார்.மகேஷ் என்ற பெயரில் மகேஸ்வரன் மட்டும் இருந்தததால், அதோடு உமாவையும் சேர்க்க,அதை உமேஷ் என்று மாற்றினார் பார்வதி. அவருடைய‘மகே’, மாமியாரினால் ‘உமே’ என்று மாறியதில், மருமகள் மீனாவிற்கு வருத்தமிருந்தாலும், அந்தப் பெயரில் எந்தக் குறையையும் இல்லை என்று ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
உமேஷ் பசுபதி அந்த வீட்டின் ஒரே ஆண் வாரிசு. அந்தக் குடும்பத்தின் மரபுகளை முடமாக்கி, மரபுணுக்களுக்குச் சவாலாக மாறி, பசுபதி பாரம்பரியத்தை மாற்றுப் பாதையில் எடுத்துச் செல்கிறான்.அவன் தலையெடுக்கும் வரை பசுபதி டிரஸ்ட்டின் தானம், தருமம், அறச் செயல் அனைத்தும் பல தலைமுறைகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டபாதையில், அதே வழியில், ஒரே போல் நிறைவேற்றப்பட்டு வந்தது.
உமேஷ் பசுபதி தலையெடுத்த பின், பசுபதி டிரஸ்ட்டின் அடிப்படைகளைத் தூர எறிந்து, அவர்களுடைய செலவில் நடந்த கல்யாணங்களில் மற்ற சமூகத்தினரைக் கொண்டு வந்து, தாலி, தங்க மோதிரம் என்று அனைத்துத் தரப்பினர் திருமணங்களையும் நடத்த ஆரம்பித்தான்.அதே போல், கல்வி, மருத்துவம் என்று உதவி கேட்பவகளை வேறுபடுத்தி பார்க்காமல், அவசரம், அவசியம் இரண்டின் அடிப்படையில் மட்டும்உதவி செய்தான். கோவிலில் மட்டுமில்லாமல் பிரார்த்தனை நடைபெறும் அனைத்து ஆலயங்களுக்கும் பசுபதி டிரஸ்டின் அன்னதானத் திட்டத்தை எடுத்துச் சென்றான்.
பல தலைமுறைகளாக மருவிப் போயிருந்த பசுபதி என்ற மரபுச் சொல்லின் உண்மையான அர்த்தத்தை புதுமுறையில் பயிற்றுவித்தான். அப்படிப்பட்டவனின் மனது இன்று நடந்த நிகழ்வில் தடம் புரண்டு இருந்தது.உறவை உயிர்ப்போடு வைப்பது ‘கடமை’ இல்லை. இரக்கம், கரிசனம், கருணை, அன்பு மட்டும் தான் என்பது அவனுடைய கருத்து.அந்த வழியில், அவனுடைய எண்ணத்தைப் புரிய வைக்க முயற்சி செய்யாமல், எதற்காக அந்த வீட்டில் அப்படிச் சத்தம் போட்டோமென்றுயோசனை செய்தபடி அமர்ந்திருந்தான் உமேஷ்.
அந்த அறையிலிருந்த மற்ற மூவரும் உமேஷ் சொன்னதைக் கேட்டு அவரவர் சிந்தனையில் ஊழன்று கொண்டிருக்க, கையில் கைப்பேசியுடன் பக்கத்து அறையிலிருந்து வந்தார் மீனா.
“ஜெயந்தி லைன்லே இருக்கா..உங்களோட பேசணும்னு சொல்றா.” என்று அவருடைய கணவர் நாகேஸ்வரன் கையில் அதைக் கொடுத்தார். அதை வாங்கிக் கொண்டு வெளியே சென்று,”சொல்லு ம்மா” என்று மகளிடம் பேச ஆரம்பித்தார் நாகேஸ்வரன்.
“ஏன் டா..சாப்பாடு ஆர்டர் செய்யாம உன் ஃபோனோட என்ன செய்திட்டு இருக்க?” என்று மகனைக் கடிந்து கொண்டார் மீனா.
உடனே,“ஓகே பாட்டி, சொல்லுங்க..என்ன வேணும் சாப்பிட?” என்று அவனுடைய ஃபோனிலிருந்து பதார்த்தத்தின் பெயர்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான் உமேஷ்.
“எனக்கு என்ன டா தெரியும்..உங்கம்மாகிட்டே கேட்டு ஆர்டர் போடு..” என்று மருமகளிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பார்வதி.
“அம்மா, நீங்க சொல்லுங்க.” என்று அவனுடைய அம்மாவிடமே கேட்க, அவர்கள் வீட்டில் செய்வது போல் மகனுடைய வீட்டிலும் அவருடைய பொறுப்பைத் திறம்பட செய்து, மாமானார், மாமியார், கணவர், மகன் என்று அனைவரின் விருப்பத்தை மனத்தில் கொண்டு, இரவு சாப்பாட்டை ஆர்டர் செய்த மீனா,
அதற்கு உமேஷ் பதில் சொல்லுமுன்,”அவன் இங்கே வேலை பார்த்தது போதும்..இனி நம்ம தொழிலைக் கவனிக்கட்டும்..அதைப் பார்த்து தான் இவனுக்குப் பொண்ணு கொடுப்பாங்க..இவன் செய்யற வேலைக்கும் கிடைக்கற சம்பளத்துக்கும் யார் அவங்களோட பொண்ணைக் கட்டிக் கொடுப்பாங்க? ஒரு முடிவு எடுக்காம இவன் குழப்பத்திலே இருக்கிறதுனாலே தான் இவன் கல்யாணமும் தள்ளிப் போயிட்டு இருக்கு.” என்றார் ஏகாம்பரம்.
“அதனாலே மட்டும்மா என் பேரன் கல்யாணம் தள்ளிப் போகுது?..உறவிலே வேணாம்னு நினைச்சதாலே தானே.” என்று மருமகளின் மனத்தில் புதைந்து இருந்ததை வெளிப்படுத்தினார் பார்வதி.
முதன்முதலில் ப்ரீத்தியை அவர்கள் வீட்டிற்கு அழைத்து வந்த போது அவளைப் பேத்தியாக பார்ப்பதை விட உமேஷின் மனைவியாகப் பார்க்க தான் பிரியப்பட்டார் பார்வதி.அதனால், அவருடைய சொல்லிலும் செயலிலும் அந்த எண்ணத்தை அவர் வெளிப்படுத்திய போது, நாத்தனார் சிவரஞ்சனி மீது மீனாவிற்கு இருந்த வெறுப்பு ஐந்து வயது ப்ரீத்தி மீது திசை திரும்பியது.
பெற்றவர்களை மதிக்காமல், வீட்டிலிருந்து வெளியேறி, மனதிற்குப் பிடித்தவனைத் திருமணம் செய்து கொண்ட நாத்தனாரால் ஏற்பட்ட அவமானத்திலிருந்து மீண்டு வர அவர்களுடைய குடும்பம் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாக தான் போய் கொண்டிருந்தது. பல வருடங்களுக்குப் பின்னும் அந்தச் செயலை நினைவுப்படுத்தி உற்றார்களும் உறவினர்களும் அவர்களை வதைத்துக் கொண்டிருந்தனர்.அந்தக் களங்கத்திலிருந்து இந்த ஜன்மத்தில் விடுபடவே முடியாது என்ற உண்மையை உணர்ந்ததால் தான், சமூகத்தின் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், தாய்தந்தையை இழந்து அனாதையாகியிருந்த அவர்களுடைய பேத்தி ப்ரீத்தியை, அவர்களுடைய உதிரமென்ற உரிமையை நிலை நாட்டி, அவளுடைய அப்பாவின் குடும்பத்தினரோடு சண்டை போட்டு, அவர்கள் கேட்ட பணத்தைக் கொடுத்து, அவளை அவர்கள் வீட்டு உறுப்பினர் ஆக்கினார்கள் ஏகாம்பரமும் பார்வதியும்.
அந்த உறவு அவர்களுடைய ஆயுட்காலத்திற்குப் பின்னும், நிரந்தரமாக நீடிக்க வேண்டுமென்று அவருடைய ஒரே பேரனிற்கு அவளை மணமுடிக்கும் திட்டத்தைப் பார்வதி தீட்ட,மழலை மாறாத குரலில், ஜெயந்தி அழைப்பது போல் ‘அண்ணா’ என்று உமேஷை அழைத்து, அதை முடிவிற்குக் கொண்டு வந்தாள் ப்ரீத்தி.
அதற்கு பின் தான் ப்ரீத்தியை தனது குழந்தையாக, இரண்டாவது மகளாக வளர்க்க ஆரம்பித்தார் மீனா.இன்று, ஜெயந்தியைப் போல் அவளுக்கும் திருமணம் செய்யவிருக்கிறார்கள்.இறந்து போன பெற்றோர்களின் இடத்தை நிரப்ப அவர்கள் தயாராக இருந்தாலும், அது முடியாதென்று மறுத்து விட்டனர் மாப்பிள்ளை வீட்டினர்.அதனால் தான் அவளுடைய அப்பா வழி உறவைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் கோரிக்கை வைக்க சென்றிருந்தார் நாகேஸ்வரன்.
அவனுடைய கல்யாணம், வேலையைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தவுடன்,
“எனக்கு எப்போ தோணுதோ அப்போ நானே என்னோட வேலையை விட்டிட்டு தொழிலுக்கு வந்திடுவேன்…முதல்லே ப்ரீத்தி கல்யாணம் முடியட்டும்..அப்புறம் என்னோட கல்யாணத்தை முடிவு செய்யலாம்….என்னை, என் வேலையைப் பார்த்து தான் கல்யாணம் செய்துக்கணும்…நம்ம தொழிலையோ சொத்தையோ பார்த்து இல்லை…அப்புறம், ஜெயந்தி, ப்ரீத்தி இரண்டு பேருக்கும் நான் ஒருத்தன் தான் அண்ணன்..எதையாவது பேசி நீ புதுப் பிரச்சனையைக் கிளப்பாத பாட்டி…ப்ரீத்தின்னு இல்லை, நம்ம உறவுக்குள்ளே கல்யாணம் செய்துக்க வேணாம்னு நான் எப்போவோ முடிவு செய்திட்டேன்.” என்றான் உமேஷ்.
அதுவும் உண்மை தான்.உறவில் திருமணம் செய்து கொள்ள முடியாதென்று முடிவு செய்தது உமேஷ் தான்.மனிதர்களை ஒரே போல் பார்க்க தெரியாத, நடத்த தெரியாத உறவுகளுடன் அவன் உறவு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.அந்த எண்ணத்தோடு இருப்பவர்களோடு தான் இத்தனை வருடங்களாக அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று உறவு கொண்டாடி கொண்டிருந்தான் என்று தெரிய வரும் போது என்ன செய்யப் போகிறானோ?
“இப்படித் தான் எதை எதையோ பேசி என்னைச் சம்மதிக்க வைச்சு, இங்கே வந்து, எவன் கீழேயோ வேலை செய்யற..வேலைங்கற பெயர்லே கல்யாணம், காது குத்தல், கருமாதி, காசு, பணம்னு சந்தோஷத்திலே, துக்கத்திலே தோள் கொடுத்துகிட்டு..சேமிப்பு வங்கி, இரத்த வங்கின்னு எல்லா இடத்திலேயும்எல்லார்க்கும் உதவி செய்திட்டு வளைய வந்திட்டு இருக்க..அங்கே நானும் உன் அப்பாவும் தனியாச் சமாளிக்க முடியாமத் திண்டாடிட்டு இருக்கோம்.” என்று பேரனைக் கோபித்துக் கொண்டார் ஏகாம்பரம்.
“நீங்க சொன்னது எல்லாம் என்னோட வேலைலே வருது தாத்தா..மனிதவளத்திலே வேலை பார்த்திட்டு மெஷினாட்டாம் இருக்க முடியாது..காலைலே ஒன்பது மணிலேர்ந்து மாலை அஞ்சு மணி வரை தான் வேலை செய்வேன்னு சட்டம் பேச முடியாது..யாருக்கு எப்போ என்னோட தேவை வரும்ன்னு அவங்களுக்கே தெரியாது..நள்ளிரவா இருந்தாலும் நான் போய் தான் ஆகணும்..என்னோட வேலைலே நான் மேம்போக்கா இருக்க முடியாது…
என்கூட வேலை செய்யறவங்களோட வாழ்க்கைலே முன்னேற்றத்தைக் கொண்டு வரணும்னா..ஊதியத்தை உயர்த்திக் கொடுத்தா மட்டும் அது நடக்காது…அவங்களோட கஷ்ட நஷ்டத்திலேயும் நான் உதவி செய்யணும், வேலையை மட்டுமில்லை வாழ்க்கையைச் சமாளிக்கவும் சொல்லிக் கொடுக்கணும்..அவங்களோட அனுபவத்திலேர்ந்து நானும் வாழ்க்கையைப் பற்றி கத்துக்கணும்..அதை எல்லார்க்கிட்டேயும் பகிர்ந்துக்கணும்.. அப்படித் தான் நம்ம மனசுலேயும் நாம சந்திக்கற மனுஷங்க மனசுலேயும் மாற்றத்தைக் கொண்டு வர முடியும்…
இதையெல்லாம் செய்துகிட்டு, வாரக் கடைசின்னா வீட்டுக்கு வரேன்..நீங்க கூப்பிடும் போதெல்லாம் ஆஜராகறேன்..சரக்கை கொள்முதல் செய்ய எல்லா இடத்துக்கும் நான் தான் போகறேன்..நீங்க இரண்டு பேரும் உட்கார்ந்த இடத்திலேர்ந்து நகர்றதில்லை.” என்று உமேஷ் சொன்னவுடன்,
அவருடைய கணவருடன் சண்டை பெரிதாகப் போகிறது என்று பயந்து,”டேய்..போதும் டாநீ பட்டியல் போட்டது.” என்று வாக்குவாதத்தை நிறுத்தப் பார்த்தார் பார்வதி.
“இன்னும் இருக்கு.. நேத்து மதுரைலேர்ந்து உங்களை எல்லாம் அழைச்சிட்டு வந்தது நான்..இன்னைக்குக் காலைலே கல்யாணத்துக்கு அழைச்சிட்டுப் போனது நான்..சாயங்காலம் உங்க மகனை பூந்தமல்லிக்கு அழைச்சிட்டுப் போனது யார்?..எல்லாத்துக்கும் நான் வேணும்..ஆனா நான் சொல்றதை மட்டும் கேட்டுக்க வேணாம்…
எல்லார்க்கும் ப்ளேன்லே டிக்கெட் போடறேன்..போய்ச் சேருங்க..என்னை இனி எதுக்கும் கூப்பிடக் கூடாது..கண்ணா, ராசா, தங்கம்னு என்கிட்டே வரக் கூடாது.” என்று அவனுடைய பாட்டியின் பயத்தைப் புரிந்து கொண்ட உமேஷ் மேலும் பேசுமுன்,
“கண்ணா” என்று அவன் அம்மாவும், “என் ராசா, என் தங்கம்” என்று அவன் பாட்டியும் அவனை இருபுறத்திலும் அணைத்தனர்.அப்போது, மகளுடன் ஃபோன் பேசி முடித்திருந்த நாகேஸ்வரன் உள்ளே வர,
”உங்களாலே தான்..நீங்க இரண்டு பேரும் தான் இவனைக் கெடுத்து வைச்சு இருக்கீங்க..பத்தாவது முடிச்சிட்டு படிக்கறத்துக்காக வீட்டை விட்டு வெளியே போனவன்..இன்னும் வீட்டுக்கு வரலை..இப்போ தொழிலைப் பார்க்க வரலைன்னா அப்புறம் எப்போ தான் இவன் வீட்டுக்கு வரப் போறான்?..எனக்கு ஒரு முடிவு தெரியணும்.’ என்று அவருக்கு கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஏகாம்பரம்.
மூன்று தலைமுறை பசுபதிகளும் ஒரே இடத்தில் இதுபோல் இருப்பது அரிது அதனால் அந்தச் சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்தார் மூத்த பசுபதி.ஆனால், அவருடைய எண்ணம் நிறைவேறவில்லை. ஒரே நேரத்தில் அழைப்பு மணியும் உமேஷின் கைப்பேசியும் ஒலி எழுப்பியது.
“அம்மா, சாப்பாடு வந்திருச்சு..போங்க.” என்று மீனாவை வரவேற்பறைக்கு அனுப்பினான் உமேஷ்.
அதன் பின், சிறிது நேரம் அவனுடைய கைப்பேசியில் உரையாடி விட்டு அனைவரோடும் சேர்ந்து இரவு உணவை உண்டான். அதன் பின்,
“எனக்கு வெளிலே கொஞ்சம் வேலை இருக்கு..இராத்திரி வர லேட்டாகிடும்..சாவி எடுத்திட்டுப் போறேன்..நாளைக்கு அவங்க வீட்டுக்கு யாரெல்லாம் போறோம்? எப்போ கிளம்பறோம்? எல்லாத்தைப் பற்றி நீங்கெல்லாம் ஒரு முடிவு வாங்க.” என்று சொல்லிவிட்டுச் சென்று விட்டான்.
உமேஷ் சென்ற பின், சில நிமிடங்கள் அமைதியாக கழிந்தது.அந்த அமைதியை உடைத்தார் மீனா.
“அவங்க ஏன் முடியாதுன்னு சொல்றாங்கண்ணு தெரியலையே..நாம எல்லாரும் போனா தான் சரியா இருக்கும்.” என்று அவருடைய எண்ணத்தை வெளியிட்டார்.
“நான் வரலை.” என்று மறுத்தார் ஏகாம்பரம்.
இன்று உமாவை சந்தித்ததிலிருந்து சற்றுமுன் உமாவைப் பற்றி உமேஷ் பேசியதிலிருந்து அதே யோசனையிலிருந்த நாகேஸ்வரன்,”அப்பா, உமேஷ்கிட்டே உமாவைப் பற்றி சொல்லிடலாம்..ராம நாதனுக்கு இரண்டு அண்ணன்னு நினைச்சிட்டு இருக்கான்..அவனுக்கு உண்மை தெரிய வந்தா என்ன செய்வான்னு பயமா இருக்கு..இன்னைக்கே அங்கே ரொம்ப கோவமாப் பேசிட்டான்..அவங்க தான் தப்புன்னு அவன் நினைச்சிட்டு இருக்கான்..நாமளும் தப்பு..” என்று நாகேஸ்வரன் பேசி முடிக்குமுன்,
“நாம எந்தத் தப்பும் செய்யலை.” என்று திட்டவட்டமாக அறிவித்தார் ஏகாம்பரம்.
“உமேஷ் அப்படி நினைக்க மாட்டான் ப்பா..எனக்கும் இப்போ..” என்று அவர் சொல்ல வந்ததை,
“நாம செய்தது உனக்குத் தப்பாத் தெரியுதா?” என்று சொல்லி முடித்தார் ஏகாம்பரம்.
‘ஆமாம்’ என்று தலையசைத்தார் நாகேஸ்வரன்.
“இப்போயெல்லாம் உன்னோட மகன் செய்யறது, சொல்றது எல்லாம் உனக்குச் சரியாப் படுது..உன்னோட அப்பா சொன்னது, செய்தது எல்லாம் தப்பாத் தெரியுது.” என்றார் ஏகாம்பரம்.
“அவன் சொல்றதிலே நியாயம் இருக்கு ப்பா.”
“தலைமுறை தலைமுறையா தாலி, பசும்பட்டு வாங்கிக் கொடுத்து, விருந்து போட்டு, பல பேருக்குக் கல்யாணம் செய்து வைச்சதுலே என்ன அநியாயம் நடந்திச்சு?” என்று எகிறினார் ஏகாம்பரம்.
“அது அநியாயம்னு அவன் சொல்லலை ப்பா..கல்யாணங்கறது எல்லார்க்கும் பொதுவான விஷயம்..எந்த முறைலே நடந்தாலும் அதுக்கு நாம உதவி செய்யணும்னு சொல்றான்..எல்லாரையும் ஒண்ணா பார்க்கணும்னு நினைக்கறான்.” என்றார் நாகேஸ்வரன்.
“அவன் பசுபதி பரம்பரை தானே.. அவன் ஏன் நம்மளைப் போல எந்த விஷயத்தையும் பார்க்க மாட்டேங்கறான்?” என்று கேட்டார் ஏகாம்பரம்.
“அதனால் தான் எனக்குப் பயமா இருக்குப் ப்பா..அவன் உமாவையும் நம்மளோட பார்வைலே பார்க்க மாட்டான்..என்ன நடந்திச்சுன்னு நாமளே அவனுக்குச் சொல்லிடலாம் ப்பா.” என்றார் நாகேஸ்வரன்.
அவருடைய மனைவி, அம்மா இருவரும் அமைதியாக அவருடைய அப்பா சொன்னதை ஆமோதிக்க,”சரிப்பா..நாம எந்தத் தப்பும் செய்யலைன்னு வைச்சுக்குவோம்..ஆனாலும் உமாவைப் பற்றிய உண்மையை உமேஷ்கிட்டே சொல்லிடணும்.” என்றார் நாகேஸ்வரன்.
“என்ன பெரிய உண்மை? அதை எதுக்கு இப்போ சொல்லணும்? இவ்வளவு வருஷமாத் தெரியாம இருந்தது அப்படியே இருக்கட்டும்..அவங்களுக்கும் அதே எண்ணம் இருந்ததாலே தான் நம்மளைத் தேடி வரலை..துக்கச் செய்தியை கூட நம்ம கடைக்கு ஆள் அனுப்பி தெரிவிச்சாங்கயில்லே.. இந்த விஷயத்தைப் பற்றி பேசணும்னா எப்போவோ வந்திருப்பாங்க.” என்று அவருடைய கணவர் பேசியதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் பொங்கினார் மீனா.
“அந்த விஷயம் அன்னைக்கே முடிஞ்சிடுச்சு..இனிப் பேச எதுவுமில்லை..பணம் வாங்கிட்டுத் தான் ப்ரீத்தியைப் பார்த்துக்க நமக்கு நியமனம் எழுதிக் கொடுத்தாங்க..அந்தப் பொண்ணைப் பார்த்துக்க ராம நாதனை தான் அவரோட அண்ணன் நியமிச்சிருந்தார்.” என்றார் ஏகாம்பரம்.
இன்னமும் சுந்தரேசனை மாப்பிள்ளை என்று அழைக்காமல், அவருடைய பெயரை உபயோகிக்காமல், இராம நாதனின் அண்ணன் என்று சொல்லும் அவருடைய அப்பாவிற்கு, அவருடைய மனத்தில் இருப்பதை எப்படிப் புரிய வைப்பதென்று தெரியாமல், இயலாமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் நாகேஸ்வரன்.
“தனக்குப் பிறகு தன்னுடைய தம்பி ராம நாதன் தான் பாதுகாவலர்ன்னு சட்டப்படி நியமனம் செய்த பிறகு தான் அந்தப் பொண்ணை இரண்டு மாசக் குழந்தையா வீட்டுக்கு எடுத்திட்டு வந்திருக்காங்க..அவளுக்குப் பாதுகாவலரா இருக்க இராம நாதனுக்கு இஷ்டமில்லைன்னா அதை அப்போவே அவங்க அண்ணன்கிட்டே சொல்லியிருக்கணும்.அவர் போன பிறகு அந்தப் பொண்ணையும் நம்ம தலைலே கட்டப் பார்த்திருக்கக் கூடாது..அந்தப் பொண்ணு யாருக்குப் பிறந்திச்சோ..என்ன பின்னணியோ..அவளைத் தத்து எடுத்துப் பத்து வருஷம் வளர்த்திருக்கலாம், அதுக்காக அவளையும் என்னோட பேத்தியா நான் என்னைக்கும் பார்க்க முடியாது…ப்ரீத்தி வேற, அவ வேற.” என்று தெளிவாகப் பேசிய ஏகாம்பரம் அறியவில்லை, அவர் சொல்லும் அந்தப் பெண், பின்னணி தெரியாதவள், அனாதை தான் அவருடைய பேரன் உமேஷ் பசுபதியின் மனைவியாகப் போகிறாளென்று.