அத்தியாயம் – 21 (இறுதி அத்தியாயம்)

உமாவும் மீராவும் தங்கியிருந்த வீட்டின் கீழ் தளத்தில் வரவேற்பறை, சமையலறை. மேல் தளத்தில் இரண்டு படுக்கையறைகள் இருந்தன. அவளைச் சந்திக்க விஜய் வந்த போது கிட்சனில் சமைத்துக் கொண்டிருந்தாள் உமா.  மாடியில், அவளுடைய அறையில், திவாகர், பிரஷாந்துடன் சேட் செய்து கொண்டிருந்தாள் மீரா.

விஜய்யை வாசலில் கண்டவுடன் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது உமாவிற்கு. ஒருவேளை ப்ரீத்தியுடன் வந்திருக்கிறானா? என்று அவனுடைய பின்புறம், ரோட்டை எட்டிப் பார்த்தாள் உமா.

அதைப் புரிந்து கொண்டு,”நீங்க கல்யாணத்தை நடத்தி வைக்காம அவளை எப்படி என்னோட இங்கேயெல்லாம் அழைச்சிட்டு வரமுடியும்?” என்று அவன் வருகையின் நோக்கத்தை வாசலிலேயே போட்டு உடைத்தான் விஜய்.

விஜய்யின் பேச்சு அதிர்ச்சியை அதிகப்படுத்த,’உள்ளே வாங்க.” என்று அவனை உடனடியாக சமையலறைக்கு அழைத்துச் சென்றாள் உமா.  மாடியிலிருந்து, யாரென்று கேட்ட மீராவிடம்,”என் தங்கையோட வருங்காலக் கணவர்.” என்றாள்.

அந்த பதிலில் மனம் குளிர்ந்து போன விஜய், சமையலறையில் இருந்த ஸ்ட்டூலில் அமர்ந்து,”நீங்க இந்தியா திரும்பினவுடனே கல்யாணத்தை வைச்சுக்கலாமா?” என்று கேட்டான்.

இதென்ன புதுசாகக் கிளம்பியிருக்கு? சித்தப்பாதானே ப்ரீத்தியின் கல்யாணத்தை நடத்தி வைக்கணும்? என்று யோசனை செய்து கொண்டிருந்தாள் உமா.

“என்னைக் கல்யாணம் செய்துகிட்டா அவளோட அக்காவை இழந்திடுவான்னு நினைச்சு என்னை வேணாம்னு சொல்லிட்டா ப்ரீத்தி..நானும் அந்தப் ப்ரீத்தியை வேணாம்னு சொல்லிட்டேன்.” என்றான் விஜய்.

“ஐயோ.” என்று அதிர்ச்சியை வெளியிட்ட உமாவிடம்,”விஷயம் அதோட முடியலை..இன்னும் இருக்கு..இதெல்லாம் என்கிட்டே கலந்து பேசாம அவளா எடுத்த முடிவு..அப்படி என்னைப் பற்றி நினைச்சது, கல்யாணம் வேணாம்னு முடிவு செய்தது எல்லாம் எந்த ஊர் நியாயம்? அதைக் கேட்க தான் உங்களைத் தேடி இந்த ஊருக்கு வந்திருக்கேன்..அண்ணன், தங்கை இரண்டு பேருக்கும் நான் இங்கே வந்திருக்கறது தெரியாது..நான் ஷேர் செய்துகிட்ட ஃபோட்டோஸ் வைச்சு இனித் தெரிய வரலாம்..அதைச் சமாளிக்க எனக்குத் தெரியும்..உங்க சம்மதத்தை நீங்க சொல்லுங்க.” என்றான் விஜய்.

“எதுக்கு திடீர்னு நான் தான் கல்யாணத்தை நடத்திக் கொடுக்கணும்னு சொல்றீங்க..சித்தப்பா, சித்தி தான் வீட்டுக்குப் பெரியவங்க..அவங்க தான் நடத்தி வைக்கணும்.” என்றாள் உமா.

“எங்க வாழ்க்கையை ஆரம்பிச்சு வைக்கப் போகறது நீங்களா இருந்தா..எங்க வாழ்க்கைலே நீங்க இருப்பீங்களா? மாட்டீங்களா? அந்தச் சந்தேகம் ப்ரீத்திக்கு வரவே வராது..அதான் உங்களை நேர்லே பார்த்துப் பேசிடலாம்னு இங்கேயே வந்திட்டேன்.”

அவன் சொன்னதைக் கேட்டு அமைதியானாள் உமா. “என்ன அக்கா அமைதியா இருக்கீங்க? உங்க தங்கையோட கல்யாணத்தை நடத்தி வைப்பீங்க தானே?” என்று மறுபடியும் கேட்டான் விஜய்.

“அவங்ககிட்டே கேட்கணுமே.” என்றாள் உமா.

“அதெல்லாம் தேவையில்லை..என் கல்யாண விஷயத்திலே என்னைத் தவிர யார் பேச்சையும் கேட்கறதா இல்லை நான்..நீங்க எப்போ சென்னைக்குத் திரும்பறீங்க?” என்று கேட்டான்

“இங்கே ஆறு மாசம் தான்..முன்னே பின்னே ஆகலாம்.” என்றாள் உமா.

“இன்னும் மூணு மாசம் கூடுதல் அவகாசம் தரேன்..அதுக்குள்ளே முடிஞ்சிடும் தானே?” என்று கேட்டான்.

“முடிஞ்சிடும்.” என்றாள் உமா.

உத்தரவாதம் கேட்டவனும் உத்தரவாதம் கொடுத்தவளும் அறியவில்லை அத்தகைய உத்தரவாதம் கொடுக்ககூடியவனிடம் அவர்கள் இதைத் தெரிவிக்காததால், ப்ரீத்தியின் கல்யாணம் மேலும் சில மாதங்கள் தள்ளிப் போனது.

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த உமேஷை எழுப்பியது அவனுடைய கைப்பேசி.  இந்த நேரத்தில் என்றால், அது உமா தான் என்று தெரியும்.  அதனால், அவசர, அவசரமாக வீடியோ அழைப்பை ஏற்றான் உமேஷ்.  

“எத்தனை முறை ஃபோன் செய்திருக்கேன்..ஏன் எடுக்கலை?” என்று எடுத்தவுடனேயே அதிகாரம் செய்தாள்.

“பாரூ..டயம் என்னென்னு பார் பாரூ..இந்த நேரத்திலே இங்கே எல்லோரும் தூங்குவாங்க.” என்றான்.

“இப்போவரை திவாகரும் மீராவும் பேசிட்டு இருந்தாங்க.”

“அவன் மெஷினோட வேலை செய்யறவன்..இரண்டு பேரும் எப்போ வேணும்னாலும் ஸ்லீப் மோடுக்கு போகலாம்…நான் அப்படியா..மனுஷனோட வேலை செய்யறவன்…ஊர் தூங்கும் போது நானும் தூங்கணும் பாரூ.” என்றான் உமேஷ்

“இப்படியே எல்லாத்துக்கும் ஒரு பதிலைச் சொல்லி என் வாயை அடைச்சிடுங்க.” என்று அவனை உரிமையுடன் கோபித்துக் கொண்டவளை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தான் உமேஷ்.

அதற்கும்,“எதுக்கு இப்போ இப்படிப் பார்த்திட்டு இருக்கீங்க?” என்று வெடுவெடுத்தாள்.

“என்னோட அமைதியான பொண்டாட்டி எங்கே போனான்னு தேடிட்டு இருந்தேன்.”

“நான் அந்த மாதிரி இருக்கறதுனாலே தான் நீங்க இந்த மாதிரி என்னை ஏமாத்திட்டு இருக்கீங்க.” 

“ஏமாத்தறேனா? என்ன பாரூ இப்படிப் பேசற?”

“பின்னே, வேற எப்படிப் பேசுவாங்க? இன்னும் கல்யாணமே ஆகலை..அதுக்குள்ளே வருங்காலப் பொண்டாட்டிகாக கடல் கடந்து வந்து, உங்களோட தங்கை கல்யாணத்தை நல்லபடியா நடத்திக் கொடுங்கன்னு என்கிட்டே கோரிக்கை வைக்கறார்.” என்றாள்.

அவள் சொன்னதை ஒரு நொடியில் கிரகித்துக் கொண்ட உமேஷ்,”ஐயோ..விஜய் உன்னைப் பார்க்க அங்கே வந்தானா? நிஜமாவா சொல்ற?” என்று கேட்க,

“வந்தாங்க..விஷயத்தை சொன்னாங்க..வாக்குறுதி வாங்கிட்டாங்க..ஒவ்வொருத்தரும் காதலுக்காக என்னவெல்லாம் செய்யறாங்க.” என்று காய்ந்தாள் உமா.

“பாரூ..அவனுக்கு பஸ் ஓடுதுன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்..இப்போ ப்ளேனும் ஓடுது போல.” என்றான்.

“கப்பலே ஓடட்டும்..அதைக் காதலுக்காக ஓட்டிட்டு வந்தாரில்லே..அது தான் முக்கியம்.” என்றாள்.

“அவன் விஷயம் நமக்கு எதுக்கு பாரூ?”

“நானா அவருக்கு என்ன ஓடுதுன்னு சொன்னேன் நீங்க தானே லிஸ்ட் போட்டீங்க.” என்று பழியை உமேஷ் மீது போட்டாள்.

“என்னோட தப்பு தான்..ப்ரீத்திக்காக அவன் பாதயாத்திரை போனா எனக்கென்ன?” என்றான் உமேஷ்.

“அவ மேலே அவருக்கு இருக்கற ப்ரியத்தை எப்படியெல்லாம் காட்டறாங்கன்னு நான் ஆச்சர்யப்பட்டுப் போயிருக்கேன்..நீங்களும் இருக்கீங்களே.” என்றாள்.

அட, இவளுக்கு நம்மைப் பற்றி இந்த மாதிரியெல்லாம் தோணுதா? என்று ஆச்சரியமடைந்த உமேஷ்,”சென்னைலே இருக்கற என்னோட வீட்டை ஒரே நாள்லே காலி செய்திட்டு உன்னோட வீட்டுக்கு வந்தேன்..நீ என்னை இங்கே தனியா விட்டிட்டு அங்கே போய் உட்கார்ந்திருக்க..நான் சொல்ல வேண்டியதை எல்லாம் நீ சொல்ற பாரூ.” என்று அவளைச் சீண்டினான்.

உடனே,”உங்களோட CTC (Cost to Company) எவ்வளவு?” என்று கேட்டாள் உமா.

சில நொடி மௌனத்திற்கு பின்,”ஹெச் ஆர் கிட்டேயே CTC கேட்கற அளவுக்கு உனக்கு தைரியம் வந்திடுச்சா? என்று மேலும் சீண்டினான்.

“ஹெச் ஆர் கிட்டே யார் கேட்டாங்க..என் ஹஸ்பண்ட் கிட்டே அவங்களோட சம்பளம் கேட்டேன்.” என்றாள் உமா.

இதற்காக தானே இவ்வளவு நாள்களாக பொறுமையாக காத்துக் கொண்டிருந்தான்.  சம்பளம் எவ்வளவு என்ற மனைவியின் கேள்வியில் பேரானந்தம் அடைந்த கணவன், இந்த அவணியில், அவன் ஒருவனாக தான் இருக்க முடியும்.

அவள் எதற்காக அந்த விவரத்தைக் கேட்கிறாளென்று என்று புரிந்து கொண்டவன்,”உன் கைலேர்ந்து காரக் குழம்பு சாப்பிட ஒரு வருஷத்தோட சம்பளத்தைச் செலவழிக்க தயாரா இருக்கேன் பாரூ.” என்றான் பசுபதி.

“ஒரு வருஷமெல்லாம் தேவைப்படாது..ஒரு மாசம் போதும்னு நினைக்கறேன்..ஆனா ஒரு கண்டிஷன் நீங்க அமைதியா வந்திட்டு அமைதியா போகணும்..மீராவும் இதே வீட்லே தான் இருக்கா.” என்றாள்.

அவனும் அந்தக் கண்டிஷனை மீறாமல், அமைதியாக அவளைச் சந்திக்கச் சென்றான்.  திரும்பி வந்த போது பிரஷாந்திற்காக மீரா கொடுத்து விட்ட பரிசுப் பொருள்களை வைத்து தான் அவன் போய் வந்ததே திவாகருக்குத் தெரிய வந்தது. ஆனால், அவன் வீட்டினருக்கு அவன் தெரிவிக்காமலேயே உமாவைச் சந்திக்க அவன் வெளிநாடு சென்றது தெரிய வந்தது.

ஆறு மாத ஒப்பந்தத்தில் சென்றவர்கள், சென்னைக்குத் திரும்பி வந்த போது ஒன்பது மாதங்கள் முடிந்திருந்தது.  அன்று விடியற்காலையில், விமான நிலையத்திலிருந்து உமாவை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் உமேஷ்.  அவனுடைய வீட்டினருக்கு அவள் நாளை வருவதாகச் சொல்லியிருந்தான்.  தேதி மாற்றி சொன்னதற்கு ஒரு முக்கியக் காரணம் இருந்தது.  அதை எப்படி? எப்போது? வீட்டினருக்குத் தெரியப்படுத்துவது என்று சிந்தித்து சிந்தித்து காலம் தான் கடந்து போனதே தவிர இன்னும் தீர்வு கிடைக்கவில்லை.  

கணவன், மனைவி இருவரும் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் உறங்கிக் கொண்டிருந்தனர்.  மாலை நான்கு மணி போல் அழைப்பு மணி ஒலிக்க, யாராக இருக்கக் கூடும்? என்று யோசித்தபடி, தூக்கக் கலக்கத்துடன் எழுந்து வந்த உமேஷ், வாசல் கதவைத் திறந்தவுடன், அதிர்ச்சியில் முழுவதுமாக விழித்துக் கொண்டான். ப்ரீத்தியைத் தவிர்த்து வீட்டினர் அனைவரும் அவன் வீட்டு வாசல்படியில் இருந்தனர்.

“என்ன திடீர்னு?” என்று கேட்ட பேரனை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த பார்வதி,

“என்ன டா திடீர்னு? நாளைக்கு என்னோட பேத்தி வெளிநாட்லேர்ந்து வரப் போறா..விமான நிலையத்திலேர்ந்து அவளை வீட்டுக்கு அழைச்சிட்டு வரப் போறோம்.” என்றார். 

அவரை அடுத்து உள்ளே வந்த மீனா,”பாத்ரூம் எங்கே டா இருக்கு?” என்று மகனிடம் கேட்டார்.

உடனே,’இரண்டு ரூம்லேயும் இருக்கு..மாடிப்படி பக்கத்திலே இருக்கறது என்னோட அறை..பின்னாடி இருக்கறது விருந்தாளிங்க அறை..அதை உபயோகப்படுத்திக்கோ.” என்றார்.

அந்த அறையை நோக்கிச் செல்லயிருந்த அவனுடைய அம்மாவின் கையைப் பிடித்து, தடுத்து,”பாட்டியோட அறையை யூஸ் செய்துக்கோங்க.” என்று அவரை அங்கே அனுப்பி வைத்தான்.

அவனுடைய செய்கையைப் புதிராகப் பார்த்துக் கொண்டிருந்த பார்வதியிடம்,”பார்வதி..குடிக்க தண்ணீர் வேணும்.” என்றார் வரவேற்பறை சோபாவில் அமர்ந்த ஏகாம்பரம்.  

காரிலிருந்து இறக்கிய இரண்டு பெட்டிகளை வீட்டிற்குள் வைத்து விட்டு விடைபெற்றுக் கொண்டான் டிரைவர். அவருடைய அப்பா சொன்னதைக் கேட்டபடி வீட்டிற்குள் நுழைந்த நாகேஸ்வரன்,”எனக்கும் ஒரு கிளாஸ் கொண்டு வாங்க ம்மா.” என்றார்.

அந்த வீட்டின் தலைவனோ வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் போல் அவனுடைய வீட்டினரைப் பயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன டா ஆச்சு உனக்கு? ஏன் டா இப்படி பேயடிச்ச மாதிரி நின்னுட்டு இருக்க?” என்று சத்தம் போட்டார் பார்வதி.

வேறு சிந்தனையில் இருந்தவன்,“எதுக்கு நீங்க எல்லாரும் இப்போ இங்கே வந்திருக்கீங்க?” என்று மறுபடியும்  கேட்டான்.

அதைக் கேட்டுக் கொண்டே, படுக்கையறையிலிருந்து வெளியே வந்த மீனா,”எதுக்கு டா வந்திருக்கோம்? உமாவைப் பார்க்க  தான்..நாளைக்கு காலைலே வரான்னு சொன்னேயில்லே அதான் இன்னைக்கே புறப்பட்டு வந்திட்டோம்..மாமாவையும் அத்தையையும் இங்கே வீட்லே விட்டிட்டு நாம மூணு பேரும் மட்டும் ஏர்போர்ட் போகலாம். நாளைக்கு முழுக்க நாங்க அவளோட இருந்திட்டு மறுநாள் கிளம்பிப் போயிடுவோம்..அப்புறம் அவளுக்கு எப்போ சௌகரியமோ அப்போ மதுரைக்கு, நம்ம வீட்டுக்கு வரட்டும்.” என்றார்.

“இதையெல்லாம் என்கிட்டே முன்னாடியே சொல்ல மாட்டீங்களா? இப்படித் தான் திடீர்னு வீட்டு வாசல்லே வந்து நிப்பீங்களா? அங்கே ப்ரீத்தியைத் தனியா விட்டிட்டு வந்திருக்கீங்களா? எதுக்கு இந்த அவசரம்?” என்று பொரிந்தான் உமேஷ்.

அவனின் பேச்சு அனைவரையும் சங்கடத்தில் ஆழ்த்தியது. இதுவரை ஒருமுறை கூட பேசியிராத மருமகளை நேரில் சந்தித்து, அவளிடம் மன்னிப்பு கேட்க வந்திருந்தார் மீனா.  ப்ரீத்தியைப் போல் நீயும் எனக்குப் பேத்தி தான் என்று உமாவிற்குத் தெரியப்படுத்த ஏகாம்பரமும் அவர்களுடன் வந்திருந்தார்.  அதையெல்லாம் சாதாரண விஷயம் போல் கடந்து சென்ற பேரனை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தார் பார்வதி.  

“ப்ரீத்தியைப் பார்த்துக்க ஜெயந்தியும் மாப்பிள்ளையும் வந்திருக்காங்க..கடையையும் மாப்பிளையே பார்த்துக்கறேன்னு சொல்லிட்டார்..அதான் நாங்க நாலும் பேரும் புறப்பட்டு வந்திட்டோம்..நீ ஏன் டா இப்படிக் குதிக்கற..இத்தனை மாசமா நீங்க இரண்டு பேரும் பிரிஞ்சு இருந்திருக்கீங்க..உனக்கு இடைஞ்சலா இருக்க மாட்டோம்..வேணும்னா உன் பொண்டாட்டியைப் பார்த்திட்டு உடனே புறப்பட்டுப் போயிடறோம்.” என்றார் பார்வதி.

அவர் பேசியதைக் கேட்டு,”ஐயோ பாட்டி..விஷயம் அது இல்லை..இது வேற.” என்றான் உமேஷ்.

“உமாகிட்டே பேசிட்டு தான் இருந்தேன்..உன்கிட்டேயும் பேசிட்டு தான் இருந்தேன்..வேற என்ன டா விஷயம் புதுசா இப்போ முளைச்சு இருக்கா?” என்று கேட்டார் பார்வதி. 

அப்போது, அதுவரை மூடியிருந்த விருந்தினர் அறையின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள் உமா பார்வதி.

அவளைப் பார்த்து, “தாயே மீனாக்ஷி’ என்றார் பார்வதி. 

“ஐயோ அத்தை” என்றார் மீனலோச்சனி. 

உமா பார்வதியோ, அமைதியாக, லேசாக மேடிட்டிருந்த வயிறோடு, மெதுவாக நடந்து வந்து,”வாங்க தாத்தா, வாங்க மாமா, வாங்க அத்தை.” என்று அவளைச் சந்திக்க அவளுடைய வீட்டிற்கு வந்திருந்தவர்களை வரவேற்றாள்.

அடுத்த பத்து நிமிடங்களுக்கு,”உன்னைப் பற்றி முழுசாத் தெரியும்னு நினைச்சேன்..இப்படி ஒரு விஷயத்தை எப்படி டா உன்னாலே மறைக்க முடிஞ்சது?..பாவம் உமா..தனியா இவ்வளவு நாள், தெரியாத ஊர்லே எப்படிச் சமாளிச்சாளோ? அவளைப் பார்க்கப் போனதைப் பற்றி நீ ஒரு வார்த்தை சொல்லலையே டா.” என்று உமேஷ் பசுபதியைப் போட்டு புரட்டி எடுத்து விட்டார்கள் பார்வதியும் மீனாவும்.  

அவனுக்குப் பிறக்கப் போகும் மகன், மகளுக்காக அவனுடைய மனைவியை அவனுடைய குடும்பத்தினர் ஏற்றுக் கொள்வது உமாவிற்கும் செய்யும் அநீதி என்று நினைத்ததால், சந்தோஷமான விஷயத்தை யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை உமேஷ்.

“பார்வதி..போதும்..அவங்க விஷயம்..நீ தலையிடாதே.” என்றார் ஏகாம்பரம்.

“அவங்க விஷயமா..என்னோட கொள்ளுப் பேரன், பேத்தி..ஒரு வார்த்தை இரண்டு பேரும் வாயைத் திறக்கலை.” என்று மறுபடியும் ஆரம்பிக்க,

”பிறப்பு, இறப்பு இரண்டு நிகழ்வுகளை வைச்சு உறவு நிலைகளைத் தீர்மானிக்கக் கூடாது..ப்ரீத்தியோட அந்தத் தப்பைத் தான் நாம செய்தோம்..அதான் நம்மகிட்டே இந்த விஷயத்தை சொல்லலை..இப்போ நாம எல்லாரும் இங்கே வந்திருக்கறது உமாகாக தான்னு புரிஞ்சிருக்கும்” என்றார் ஏகாம்பரம்.  

உடனே,“ஆமாம் தாத்தா..என்னைக்கும் அவளுக்கு அந்த மாதிரி எண்ணம் வரக் கூடாதுன்னு தான் யார்கிட்டேயும் இந்த விஷயத்தைச் சொல்லலை..என்ன செய்யலாம்னு அவளையும் கலந்து ஆலோசிக்க அவகாசம் தேவைப்படிச்சு அதான் இன்னைக்கு அவ இந்தியா திரும்பி வரப் போகறதை யாருக்கும் தெரிவிக்கலை..உங்ககிட்டேயும் நாளைக்கு வர்றதா சொன்னேன்.” என்றான்.

அது போன்ற எண்ணங்கள் எல்லாம், சற்று முன், அவளுடைய வீட்டில் அவர்களைப் பார்த்தவுடன் உமாவின் மனத்திலிருந்து காணாமல் போய் விட்டது.  அதனால் எந்தவிதமான மனக்குழப்பமும் இல்லாமல், மறுநாள் காலையில் அவர்களுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றாள்.  அடுத்து வந்த மாதங்களில், மதுரையில், மீனா,பார்வதி இருவரின் பராமரிப்பில் இருந்தாள் உமா பார்வதி. 

ஆறு மாதங்கள் கழித்து, ப்ரீத்தியின் திருமணத்தில், வீட்டின் புதிய வரவு தான் அனைவரையும் கவர்ந்து இழுத்துக் கொண்டிருந்தான்.  ஏகாம்பரமும் ராம நாதனும் அருகருகே அமர்ந்து திருமண வைபவத்தைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தாய், தந்தை ஸ்தானத்தில் உமா, உமேஷ் இருவரும் ப்ரீத்திக்குச் செய்ய வேண்டிய சடங்குகளைச் செய்து கொண்டிருந்தனர்.  

அப்போது, அழுது கொண்டிருந்த கொள்ளுப் பேரனைத் தோளில் தட்டிச் சமாதானம் செய்தபடி ஏகாம்பரத்தின் அருகே வந்து அமர்ந்தார் பார்வதி. அதைப் பார்த்து, ப்ரீத்தியிடம் சொல்லி விட்டு, அவள் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வந்தாள் உமா பார்வதி.

அதற்குள், பின் வரிசையில் அமர்ந்திருந்த பெண்மணி,”என்ன பார்வதியம்மா, கொள்ளுப் பேரனோட அழுகையை அனுபவிக்க கொடுத்து வைச்சிருக்கீங்க போல.” என்றார்.

அழுகைகூட ஆனந்தத்தை அளிக்கும் அழகியத் தருணமல்லவா அது.  மகள் வயிற்றுப் பேத்திகள் இருவரின் வாழ்க்கையில் விட்டுப் போனதை, இப்போது கொள்ளுப் பேரனோடு அனுபவித்துக் கொண்டிருந்தனர் ஏகாம்பரமும் பார்வதியும்.

உமாவிடம் குழந்தையைக் கொடுத்த போது,”குழந்தைக்கு என்ன பெயர் வைச்சிருக்கீங்க?” என்று விசாரித்தார் அந்தப் பெண்மணி.

“சிவசுந்தர்.” என்றார் பார்வதி.

“சிவசுந்தர் பசுபதி.” என்றாள் உமா பார்வதி.

வாழ்க்கை முறையும் வழிமுறையும் இணையும் புதிய தலைமுறையின் ஆரம்பம், சிவசுந்தர் பசுபதி.

***ஆரம்பம்***