அத்தியாயம் – 2

யாருக்கு இரக்கமில்லாமல் போனது என்ற உண்மை தெரிய வந்துவிடுமோ என்ற பயத்தில் தான் உமேஷை அதட்டி, அவனைப் பேசவிடாமல் செய்தார் நாகேஸ்வரன்.

உமேஷ் கத்தியதைக் கேட்டு சமையலறையில் இருந்த உமாவினுள் நடுக்கம் ஏற்பட்டது. படுக்கையறையிலிருந்த இந்துமதிக்கு ஆத்திரம் வந்தது. கண்மூடி படுத்திருந்த அவருடைய மாமியாரின் முகத்திலிருந்து அவர் என்ன உணருகிறாரென்று இந்துமதியால் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதற்கு மேல் பேச்சை தொடர விரும்பாத நாகேஸ்வரன்,“நாளைக்கும் நான் இங்கே தான் இருப்பேன்..நீங்க யோசிச்சு பதில் சொல்லுங்க..நான் உங்களுக்கு ஃபோன் செய்யறேன்.” என்றார்.

அவருடைய அம்மாவின் மனம் ஓர் இரவில் மாறாது என்று தெரியும். எனவே, அதற்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்தார் ராம நாதன்.

அதற்கு மேல் அந்த வீட்டில் இருக்கப் பிடிக்காமல் வீட்டை விட்டு வெளியேறியே உமேஷைத்  தொடர்ந்தார்  நாகேஸ்வரன். காரில் அமர்ந்தவுடனேயே அதுவரை அவன் கட்டுப்படுத்தி வைத்திருந்த கோவத்தை வெளியேற்றினான் உமேஷ்.

“திடீர்னு ப்ரோகரமை மாத்திட்டீங்க..தாத்தாகிட்டே கேட்க வேணாமா? நாளைக்கு ஊருக்குக் கிளம்ப எல்லலோரும் ரெடியா இருக்காங்க..எப்போதும் கடை கடைன்னு உயிரை விடுவீங்க..இப்போ அந்தக் கவலை காணாமப் போயிடுச்சு..இத்தனை வருஷமா ப்ரீத்தியை உங்களோட சொந்தப் பொண்ணு போல வளர்த்திட்டு..இப்போ அவளோட கல்யாணத்திற்காக இந்த  வீட்டு வாசல்லே காத்திருந்து, நேரத்தை வீண்டிக்கத் தயாரா இருக்கீங்க..இவங்க உங்களை எத்தனை முறை அலைய வைக்கப் போறாங்களோ?..சொந்த அண்ணன் பொண்ணுக்குக் கடமையைச் செய்ய தம்பிக்குக் கசக்குது…இந்த மாதிரி குடும்பம் ப்ரீத்திக்கு வேணவே வேணாம்..இவங்க யாரும் அவளோட கல்யாணத்துக்கு வர வேணாம்..நீங்களும் அம்மாவும் சேர்ந்து கல்யாணத்தை நடத்தி வைங்க..நான் விஜய்கிட்டே பேசறேன்.” என்றான்.

உமேஷிற்குப் பதில் சொல்லாமல் வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் நாகேஸ்வரன்.  பதினைந்து வருடங்களுக்கு முன், அவருடைய தங்கை சிவரஞ்சனியும் அவளுடைய கணவர் சுந்தரேசனும் ஒரு விபத்தில் இறந்து போன பின் நடந்த அனைத்தும் அவர் கண்முன் வந்து போனது.  ஐந்து வயது ப்ரீத்தியை அவர்களோடு அழைத்துக் கொண்ட போது இதுபோன்றொரு சூழ் நிலை வருமென்று அவர்கள் யாரும் எண்ணவில்லை. 

அவருடைய மனைவி மீனாவிற்குப் ப்ரீத்தியை அழைத்து வந்தது பிடிக்கவில்லை. வீட்டுப் பெண்களின் அறிவுரை, ஆலோசனையை கேட்பது சிவரஞ்சனி வீட்டை விட்டுச் சென்ற பின் அடியோடு நின்று போனதால் மீனாவினால் அந்த முடிவை மாற்ற முடியவில்லை. அந்த வீட்டுப் பெண் சிவரஞ்சனியை அவர்களுடைய வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாக அகற்றிய பின், திடீரென்று, அவளுடைய ஐந்து வயது மகளை அவர்கள் வீட்டு உறுப்பினராக்கியதை மீனாவினால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.  ஆனால் மகள் சிவரஞ்சனியை வெறுத்த அவருடைய மாமியார் பார்வதி, அனாதையான சிவரஞ்சனியின் மகளை, அவருடைய மகள் வழி பேத்தியை தயக்கமில்லாமல் அரவணைத்துக் கொண்டார்.

அந்த மனமாற்றத்திற்கு ஒரு காரணம் இருந்தது. தோற்றத்தில் அவரின் ஸெராக்ஸ் காப்பியாக இருந்தாள் அவருடைய பேத்தி ப்ரீத்தி பார்வதி.  அவளுடைய முழுப் பெயரே அவளுடைய பாட்டி பார்வதியை அவள் பால் ஈர்க்கப் போதுமானதாக இருந்தது. பேத்தி ப்ரீத்தி பார்வதியைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்கினர் ஏகாம்பரமும் பார்வதியும். இன்றுவரை, எந்தக் குறையும் தெரியாமல், அவளுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றி வந்தவர்களுக்கு,  முதல்முறையாக, இதுபோன்ற தடை ஏற்பட்டிருந்தது. 

ப்ரீத்திக்கு பார்த்திருந்த மாப்பிள்ளை வீட்டினர் அருப்புக்கோட்டையைச் சேர்ந்தவர்கள்.  பெரிய, பாரம்பர்யமான குடும்பம் அவர்களுடையது. சொந்தமாக தனியார் பேருந்து நிறுவனத்தை நடத்தி வந்தனர்.  அந்த வீட்டுப் பெரியவர்கள் திருமணத்தை நல்லபடியாக, முறைப்படி நடத்த வேண்டுமென்றனர். அதற்கு ப்ரீத்தியின் அப்பா உறவிலிருந்து, அண்ணன், தம்பி யாராவது அவளைக் கன்னிகாதானம் செய்து கொடுக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்தனர்.  அதன் விளைவாக, பல வருடங்களாக தொடர்பில் இல்லாத, தேவையில்லாதது என்று அறுத்துக் கொண்ட உறவை, ப்ரீத்தியின் சித்தப்பாவைத் தேடிக் கண்டுபிடித்து,  நேரில் சந்தித்து, அவர்களுடைய கையறு நிலையை விளக்கி, உதவி கேட்க வந்திருந்தனர் நாகேஸ்வரனும் உமேஷும்.

இத்தனை வருடங்களாக உறவு வேண்டாமென்று இரு குடும்பங்களும் ஒதுங்கி இருக்க, இப்பொழுது சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விட்டது. என்ன செய்து அவர்களைச் சம்மதிக்க வைப்பதுயென்று யோசனையில் ஆழ்ந்தார் நாகேஸ்வரன். அவர்கள் இல்லாமல் கல்யாணத்தை எப்படி நடத்துவது என்ற யோசனையில் வழக்கத்தை விட தாமதமாக வடபழனியில் இருந்த அவனுடைய  ஃபிளாட்டை வந்தடைந்தான் உமேஷ்.

அழைப்பு மணி ஓசையில் கதவைத் திறந்த மீனலோச்சனி, வாசலிலேயே,”என்ன டா ஆச்சு? வீட்லே இருந்தாங்களா? பேசிட்டீங்களா? என்று விசாரித்தார்.

வீட்டிற்குள் நுழைந்து, காலணியைக் கழற்றியபடி,“முடியாதுன்னு சொல்லிட்டார் ம்மா.” என்றான் உமேஷ்.

“என்ன டா சொல்ற? நிஜமாவா?” என்று அதிர்ச்சியானார் மீனா.

“இதிலே யாராவது பொய் சொல்லுவாங்களா? உண்மை தான்ம்மா.”

“ஜெயந்தி ஃபோன் செய்து என்ன ஆச்சுன்னு கேட்டிட்டு இருக்கா..அவகிட்டே என்ன டா சொல்றது?”

அதுவரை அமைதியாக இருந்த நாகேஸ்வரன்,”நாளைக்குத் திரும்ப ஒருமுறை அவங்க வீட்டுக்குப் போகலாம்னு இருக்கேன்..நீயும் எங்களோட வா..இன்னைக்கே கொஞ்சம் நேரம் அங்கேயே இருந்து ராம நாதன்கிட்டே பேசிப் பார்த்துச் சம்மதிக்க வைச்சிருப்ப்பேன்..அதுக்குள்ளே அந்தப் பெரியம்மா ராம நாதனை உள்ளே கூப்பிட்டு பேசினாங்க..அதுக்கு அப்புறம்  முடியாதுன்னு சொல்லிட்டார்..அதைக் கேட்டுக் கோபப்பட்டு அவர்கிட்டே கத்திட்டான் உமேஷ்.” என்றார்.

“ப்ரீத்தியோட கல்யாணத்தை நல்லவிதமா நடத்த தானே நாம எல்லோரும் கஷ்டப்படறோம்..உன்னாலே பொறுமையா இருக்க முடியலையா?” என்று மகனைப் கோபித்துக் கொண்டார் மீனா.

“அவர் என்னவோ கல்யாணத்துக்கு அழைக்க வந்தவங்ககிட்டே ‘அன்னைக்கு வேற வேலை இருக்கு என்னாலே வரமுடியாதுன்னு’ சாதாரணமாக் காரணம் சொல்வாங்களே அந்த மாதிரி பேசினார்.  அவரை வைச்சு தான் கல்யாணத்தை நடத்தணும்னு சொல்றோம்..அதுக்கு அவர் எப்படி அப்படிச் சொல்லலாம்?..அவரோட இரத்தம் தானே ப்ரீத்தி? என்னாலே அதை ஒத்துக்கவே முடியலை. அதான் கத்திட்டேன்.” என்றான்.

இரத்தச் சம்மந்தம் இருந்ததால் தான் வீட்டை விட்டுச் சென்று, மனம் விரும்பியவனைத் திருமணம் செய்து கொண்ட மகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள், அவளுடைய மரணத்திற்குப் பின், பணம் கொடுத்து அவளுடைய மகளை, பேத்தியை அவர்களுடன் அழைத்துக் கொண்டார்கள். அந்த நினைவுகளில் மூழ்கிப் போயினர் மீனா, நாகேஸ்வரன் இருவரும். மூவரும் வரவேற்பறை சோபாவில் அமர்ந்து அடுத்து என்ன செய்வது என்று அவரவர் யோசனையில் ஆழ்ந்தனர். சில நிமிடங்கள் கழித்து,

“நாளைக்கு நான் உங்களோட அங்கே வந்தா, நாம எல்லோரும் எப்போ வீட்டுக்குப் புறப்பட்டுப் போகறது?..ஒண்ணு செய்யலாம்..எல்லோரும் அங்கே போயிட்டு, அப்படியே அங்கேயிருந்தே வீட்டுக்குக் கிளம்பிப் போயிடலாமா?” என்று கேட்டார் மீனா. அவருடைய மாமியாரையும் அவர்களுடன் அழைத்துச் செல்ல வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.  ப்ரீத்தியை அவர்களோடு நிரந்தரமாக அழைத்துக் கொண்டதிலிருந்து அவளைச் சார்ந்த அனைத்து முடிவுகளையும் அவருடைய மாமனார், மாமியார் தான் எடுக்கிறார்கள். எனவே, அவர்களையும் ப்ரீத்தியின் சித்தப்பா வீட்டிற்கு அழைத்துச் சென்றால் நல்ல முடிவு கிடைக்குமென்று அவருக்குத் தோன்றியது.

“ப்ரீத்தியோட கல்யாண விஷயமா இருந்தாலும் அப்பா, அம்மா அந்த வீட்டுக்கு வர மாட்டாங்க.. அந்தப் பெரியம்மாவும் அதை விரும்ப மாட்டாங்க..நீ மட்டும் வா..ராம நாதனோட மனைவிகிட்டே பேசி எப்படியாவது சம்மதிக்க வை.” என்றார் நாகேஸ்வரன்.

“இன்னைக்கு நீங்க ராம நாதன்கிட்டே பேசும் போது அவங்க மனைவியும் கூட இருந்தாங்களா?” என்று கேட்டார் மீனா.

“இருந்தாங்க..டீ போட்டுக் கொடுத்தாங்க..ஆனா வாயைத் திறக்கலை..ராம நாதன் மட்டும் தான் பேசினார்…வேற எந்தப் பேச்சும் நானும் வைச்சுக்கலை…கல்யாணத்தைப் பற்றி மட்டும் தான் பேசினேன்..” என்று சொல்லி விட்டு, மகனைத் தயக்கத்துடன் பார்த்தவர், இனி மறைத்து ஒன்றும் ஆகப் போவதில்லையென்ற முடிவிற்கு வந்து,”அந்தப் பொண்ணையும் பார்த்தேன் மீனா..வெளியே எங்கேயோ போயிட்டு நாங்க பேசிட்டு இருந்த போது வீட்டுக்கு வந்திச்சு.” என்றார் நாகேஸ்வரன்.

எந்தப் பெண்? என்று மீனா கேட்கவில்லை.  யாரென்று புரிந்து போனது. அவருடைய கணவரே மேலே பேசட்டுமென்று அமைதியாக இருந்தார் மீனா.

“முதல்லே ராம நாதன் பொண்ணுன்னு நினைச்சிட்டேன்..உமான்னு அவர் கூப்பிட்டவுடனேயே புரிஞ்சிடுச்சு..அவகிட்டேயும்  அவளைக் கவிதான்னு நினைச்சிட்டேன்னு சொன்னேன்.” என்றார் நாகேஸ்வரன்.

“அதுக்கு அவ என்ன சொன்னா?”

“கவிதா கே கே நகர்லே இருக்காளாம்.”

“நம்ம கே கே நகரா?”

“தெரியலை..இங்கே அசோக் நகர் பக்கத்திலே இருக்கறதுன்னு நினைக்கறேன்..ராம நாதனும் அங்கே தான் இருக்கணும்..நாங்க அங்கே போய்ச் சேர்ந்த பிறகு தான் அவரோட மனைவி, அம்மாவோட அந்த வீட்டிற்கு வந்தார்..கதவைத் திறந்து நாங்க எல்லோரும் ஒண்ணா தான் உள்ளே போனோம்..வீடு பெரிசா இருக்கு..சாமானெல்லாம் ஜாஸ்தி இல்லை.” என்று மனைவிக்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த நாகேஸ்வரனின் மனது,’அந்தப் பெண்ணின் வீடோ..தனியாக இருக்கிறாளா? அதான் சாமானில்லையா? ராம நாதன் ஏன் அவளுடன் இல்லை? அந்த நேரத்தில் வேலையிலிருந்து திரும்பி வந்தாளா?’என்று உமாவையே சுற்றி வந்தது.

“போன விஷயம் என்ன ஆச்சுன்னு அத்தை, மாமா கேட்டா, என்ன சொல்ல?” என்று கேட்டார் மீனா.

“யோசிக்க டயம் கேட்டிருக்காங்கன்னு சொல்லு.” என்றார் நாகேஸ்வரன்.

“டேய்..உன் பாட்டி எழுந்திட்டாங்களான்னு போய்ப் பார்..சாப்பாடு என்ன வேணும்னு கேளு.” என்று படுக்கை அறைக்கு மகனை அனுப்பி வைத்தார் மீனா.

“தூங்கிட்டு இருந்தா நீ எழுப்பி விடு டா..நானும் வரேன்..நேரமாயிடுச்சு.” என்றார் நாகேஸ்வரன்.