அத்தியாயம் – 2-1

அவர்கள் சொந்தத்தில் ஒரு திருமணம்.  அதில் பங்கேற்க மதுரையிலிருந்து சென்னை வந்திருந்தனர்.  ப்ரீத்தியை ஜெயந்தியின் வீட்டில் விட்டிருந்தனர்.  அவளையும் அழைத்துக் கொண்டு வந்திருக்கலாம்.  அவளுக்கு இந்த விஷயம் இப்போது தெரிய வேண்டாமென்று வீட்டுப் பெரியவர்கள் முடிவு செய்ததால், அவளை அழைத்து வரவில்லை. உமேஷிற்கும் இந்த விஷயமெல்லாம் தெரியாது. சம்மந்தி வீட்டில் இந்தப் பேச்சு ஆரம்பித்த பிறகுதான், ப்ரீத்தியின் சித்தப்பாவைப் பற்றி மேலோட்டமாக அவனுக்கு  தெரியப்படுத்தியிருந்தார் நாகேஸ்வரன்.  

சில நிமிடங்கள் காத்திருப்பிற்கு பின் உமேஷ் வராததால் படுக்கை அறை கதவைத் திறந்து கொண்டு நாகேஸ்வரன் உள்ளே நுழைந்த போது அந்த அறையின் தொலைக்காட்சியிலிருந்து எழுந்த ஒலி வீடு முழுவதும் கேட்டது.  நாகேஸ்வரன் உள்ளே நுழைந்தவுடன் டி வியை அணைத்தான் உமேஷ்.

கட்டிலில் படுத்திருந்த உமேஷிடம்,“ஏன் டா ஆஃப் செய்த? நாடகம் ரொம்ப சுவாரஸியமா போய்கிட்டு இருக்கு.” என்றார் பார்வதி.

அவனுடைய தாத்தா ஏகாம்பரம் அருகில் படுத்திருந்த உமேஷ்,”புருஷனுக்கு தான் சேவை செய்யறதில்லை..பொழுதன்னைக்கும் நீ டி வி பார்க்கற..அவர் கடையைப் பார்க்க போயிடறார்..இன்னைக்கு உன் பேரனுக்காவது சேவை செய்…..நேத்துலேர்ந்து கார் ஓட்டிட்டு வந்ததிலிருந்து என் உடம்பெல்லாம் வலிக்குது..கொஞ்சம் அமுக்கி விடு..வா” என்று அவன் பாட்டியிடம் வம்பு செய்தான்.

“எல்லாம் உன் பொண்டாட்டியைச் செய்யச் சொல்லு.” என்றார் பார்வதி.

“அவளுக்கு நான் இப்போ எங்கே போக?” என்று வருத்தப்பட்டான் உமேஷ்.

“அப்போ உன் அம்மாவைக் கூப்பிட்டுப் பிடிச்சு விடச் சொல்லு.” என்று வேலையைத்  தட்டிக் கழித்தார் பார்வதி.

“ஹெச் ஆர் (H R) ஆள் எனக்கே நீ ஆட்டம் காட்டற..நம்ம வீட்லே எல்லார்க்கும் தனி தனி ஜாப் ப்ரோஃபைல் (job profile) செய்து வைச்சிருக்கேன்..அம்மாக்கு வேற வேலை ஆலாட் செய்வேன்..இன்னும் வேலைலே சேராத என்னோட ஆள் மேலே உன்னோட வேலையைக் கட்டாத.” என்றான் குறும்பாக.

“என்ன டா வேணும் உனக்கு? என்னை இப்படிப் பாடுபடுத்தற?” என்று அலுத்துக் கொண்டே, டி வியின் ரிமோட்டை அவனிடமிருந்து பறிக்கப் பார்த்தார் பார்வதி.

அதை அவரிடம் கொடுக்காமல்,“உன்னோட பேரனுக்கு இப்போ அர்ஜெண்ட்டா ஒரு பொண்டாட்டி வேணும்.. உடனே ஓர் ஏற்பாடு செய்.” என்றான் உமேஷ்.

“ஒண்ணு போதுமா டா?” என்று கடுப்பாகப் பார்வதி கேட்க,

“இரண்டு கிடைக்குதான்னு பார்.” என்று அவரை வெறுப்பேற்றினான் உமேஷ்.

“ஐயோ இவனை எதை வைச்சு அடிக்க? இப்படிப் பேசறானே.” என்று அங்கலாய்த்தார் பார்வதி.

“சரி..ஒண்ணு போதும்..அட்ஜெஸ்ட் செய்துக்கறேன்..என் மனசு மாறும் முன்னே ஏற்பாடு செய்திடு.” என்று விட்டுக் கொடுத்தான் உமேஷ்.

“ஹாங்..ஆற அமர செய்ய வேண்டிய விஷயத்தை அர்ஜெண்ட்டா செய்ய சொல்ற.” என்று பதில் சொன்ன பார்வதி அறிந்திருக்கவிலை, அவருடைய ஒரே பேரனின் திருமணம் மகா அவசரத்தில் அரங்கேறப் போகிறதென்று.

“கரெக்ட்..இதெல்லாம் அர்ஜெண்ட்டா செய்ய முடியாது..எனக்கு அவளைப் பிடிக்கணும்..அவளுக்கு உன்னைப் பிடிக்கணும்…அப்புறம்..” என்றவனிடம்,

“என்ன டா புதுசாச் சொல்ற? உன் பொண்டாட்டிக்கு உன்னைத் தான் பிடிக்கணும்..என்னை எதுக்கு டா அவளுக்குப் பிடிக்கணும்?” என்று பார்வதி கேட்க,

“அந்தக் கண்டிஷன்லே என்னோட கல்யாணம் நடக்கணும்னா எப்போவோ நடந்திருக்குமே..உன்னோட பேரனைப் பிடிக்காதவங்க யாராவது இருப்பாங்களா?..நீதான் என்னோட கல்யாணத்திற்குத் தடையா இருக்க..உன்னைப் பிடிக்காதவளை நான் எப்படிக் கட்டிக்க முடியும்?” என்றான் உமேஷ்.

“அடப்பாவி.” என்று பார்வதி சொன்னவுடன், 

“அப்படி ஒரு பொண்டாட்டி எனக்கு கிடைச்சா தான் உங்க இரண்டுபேர்கிட்டேயும் நான் மாறி மாறி இந்த சேவையெல்லாம் செய்துக்க முடியும்…இரண்டு பேருக்கும் தனி தனி வேலை அலாட் செய்வேன்..அதையெல்லாம் அப்போ பார்த்துக்கலாம்..இப்போ உனக்கு அலாட் செய்ததை நீ செய்..இல்லைன்னா உன்னோட ஒரே பேரனுக்குச் சேவை செய்ய மாட்டேங்கறேன்னு உன்னோட ஒரே புருஷன்கிட்டே கம்ப்ளெண்ட் செய்திடுவேன்.” என்று மிரட்டினான் உமேஷ்.

”இதுக்கு தான், இவனோட வண்டிலே வேணாம், வானத்திலே பறந்து வந்திடலாம்னு சொன்னேன்..யார் என் பேச்சைக் கேட்டாங்க? மாட்டு வண்டியாட்டம் மெதுவா உருட்டிட்டு வந்திட்டு, இப்போ உடம்பு நோவு தாம்..பிடிச்சு விடணுமாம் ஐயாக்கு..இந்தக் கேவலத்தை எங்கே போய்ச் சொல்ல.” என்று பேரனிடம் பதிலுக்கு வம்பு செய்தார் பார்வதி பாட்டி.

“மாட்டு வண்டியா? அலுங்காம, குலுங்காமப் புதுப் பொண்ணாட்டம் உன்னைக் கொண்டு வந்து சேர்த்திருக்கேன்..காலைலே கல்யாணத்திலே பார்த்த கல்யாணப் பொண்ணு கூட களைப்பா இருந்திச்சு..நீ அப்படியே ஃப்ரேஷ்ஷா, களையா இருந்த.. எத்தனை ஸெல்ஃபி எடுத்துக்கிட்ட..இப்போ இப்படிப் பேசற ..திரும்பிப் போகும் போது உன்னை மட்டும் பிளேன்லே அனுப்பி விடறேன்..காற்றுக் கொந்தளிப்பு, பூவி ஈர்ப்புன்னு எல்லா விசையையும் அனுபவி..உனக்கு இப்போவே டிக்கெட் போடறேன்.” என்று அவனுடைய கைப்பேசியை எடுத்தான் உமேஷ்.

“ஐயோ..இந்த அநியாயத்தைக் கேட்க ஆளில்லையா..என்னை மட்டும் பறக்க விடுவானாமே…என்ன டா உன்னோட பையன் பேசறதைக் கேட்டுக்கிட்டு நீயும் பேசாம இருக்க.” என்று அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மகனிடம் பஞ்சாயத்திற்குப் போனார் பார்வதி.

அதுவரை அமைதியாக படுத்திருந்த ஏகாம்பரம், சற்றுத் திரும்பி,”பார்வதி.” என்று அழைத்தவுடன், கப்பென்று அவருடைய வாயை மூடிக் கொண்டார் பார்வதி.

அவருடைய அம்மாவிற்கும் மகனிற்கும் நடந்த செல்லச் சண்டையில் தலையிடாமல் அவருடைய அப்பாவிடம்,”அப்பா, சாப்பிட நேரமாயிடுச்சு…எழுந்திருங்க.” என்றார் நாகேஸ்வரன்.

படுக்கையிலேயே சாய்ந்து அமர்ந்து கொண்ட ஏகாம்பரம்,”போன விஷயம் என்ன ஆச்சு?” என்று விசாரித்தார்.

“அவகாசம் கேட்டு இருக்காங்க.” என்றார் நாகேஸ்வரன்.

“முடியும்.. முடியாது..ஏதாவது ஒரு பதில் சொல்லணும்..இதுக்கு எதுக்கு அவகாசம்?” என்று மகனிடம் கோபப்பட்டார்.

உடனே,”தாத்தா, அவங்க அவகாசம் கேட்கலை.. முடியாதுன்னு சொல்லிட்டாங்க..அப்பா தான் அவகாசம் கொடுத்திருக்காங்க..நாளைக்கு மறுபடியும் ஒருமுறை பேசி பார்க்கலாம்னு நினைக்கறாங்க…அதனாலே நீங்கெல்லாம் நாளைக்குப் புறப்பட முடியாது..அடுத்த நாள் தான் கிளம்ப முடியும்.” என்றான் உமேஷ்.

“இல்லை ப்பா..நாளைக்குக் காலைலே எட்டு மணி போல ஃபோன் செய்வேன்..ஒரு மணி நேரத்திலே அங்கே போயிட்டு திரும்பி வந்திடுவேன்..பத்து மணிக்கு நாம ஊருக்குக் கிளம்பிடலாம்.” என்றார் நாகேஸ்வரன்.

“எப்படி ப்பா முடியும்? அவங்க வீடு பெங்களூர் போகற வழிலே இருக்கு..இங்கேயிருந்து அங்கே போயிட்டு, அங்கேயிருந்து திரும்ப இங்கே வர்றத்துக்குப் பதிலா எல்லோரும் கிளம்பிப் போனோம்னா, அப்படியே ரிங் ரோட் வழியா ஊருக்குப் போயிடலாம்..அந்தப் பெரியம்மாவை நீங்களும் நாலு வார்த்தை கேளுங்க பாட்டி..ப்ரீத்தி போல ஒரு பேத்தியை எப்படித் தான் இத்தனை வருஷமா விட்டுக் கொடுத்தாங்களோ? இத்தனைக்கும் அவ அவங்க மகனோட இரத்தம். என்ன சொல்றீங்க தாத்தா? எல்லோரும் சேர்ந்து போகலாமா?” என்று உண்மையைப் போட்டு உடைத்து, அடுத்த நாளின் திட்டத்தைச் சுமூகமாகச் செயல்படுத்த அவனுடைய தாத்தாவிடமே ஆலோசனை கேட்டான் உமேஷ்.

“எனக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி தெரியும் டா..அவங்களோட உறவே வேணாம்னு தான் அவளை அழைச்சுக்கிட்டு வந்தேன்..அவங்ககிட்டே என்ன பேச்சு வேண்டி கிடக்கு..காசை அவங்க முகத்திலே விட்டெறி.. ராம நாதனும் வருவான் அவனோட அந்த அம்மாவும் வருவாங்க..அவனோட அண்ணன் இடத்திலே இருந்து ப்ரீத்தி கல்யாணத்தை ராம நாதன் தான் நடத்தணும்…என்னோட பேத்தியோட கல்யாணம் எந்தத் தடங்கலும் தடையுமில்லாம நல்லபடியா நடக்கணும்.” என்றார் ஏகாம்பரம் பசுபதி.

அவருடைய அப்பா பேசியதைக் கேட்டபடி அமைதியாக அமர்ந்திருந்தார் நாகேஸ்வரன்.  அவருடைய கணவரின் கோபத்திற்கு மகனிடமிருந்து மௌனமே பதிலாக வந்தவுடன்,”என்ன டா..எதுவும் பேசாம அமைதியா இருக்க?” என்று விசாரித்தார் பார்வதி.

“காரணம் காசு இல்லை ம்மா..வேற ஏதோ இருக்கு..ராம நாதனுக்கு இஷ்டமிருக்கலை..ஆனா அதை வெளிப்படையாச் சொல்லத் தயங்கினார்..அப்புறம் அவங்க அம்மா கூப்பிட்டாங்க..போய்ப் பேசிட்டு வந்து முடியாதுன்னு சொல்லிட்டார்.” என்றார் நாகேஸ்வரன்.

“அவங்கிட்டே நீயே நேர்லே பேச வேண்டியது தானே.” என்றார் பார்வதி.

“அவங்க வந்து இறங்கின போது நாங்க இரண்டு பேரும் அந்த வீட்டுக் கேட் பக்கத்திலே காத்திட்டு இருந்தோம்..டாக்ஸிலே வந்தாங்க..ராம நாதனும் பழைய மாதிரி இல்லை..அந்தம்மாவும் முடியாம தான் இருக்காங்க..அவங்க மருமக உதவியோடு வீட்டுக்குள்ளே போயிட்டாங்க..அப்புறம் நாங்க அங்கே இருந்தவரை வாசல் அறைக்கு வரவேயில்லை..அந்தப் பொண்ணு வந்த பிறகு, வேற அறைக்கு அழைச்சிட்டுப் போய் விட்டிச்சு..அங்கே உள்ளே போய் அவங்க அம்மாகிட்டே பேசிட்டு வந்தவர், முடிவிலே மாற்றமில்லைன்னு சொல்லிட்டார்.” என்றார் நாகேஸ்வரன்.

“எந்தப் பொண்ணுடா? என்று மகனிடம் கேட்டார் பார்வதி.

அதற்குப் பதில் சொல்ல பெரிதும் தயங்கினார் நாகேஸ்வரன்.  சொல்ல வேண்டாமென்று அவர் முடிவெடுத்த நொடி,

“ஏன்ப்பா இவர்தான் முடியாதுன்னு சொல்லிட்டாரே.. அந்தப் பொண்ணோட அப்பாகிட்டே கேட்டுப் பார்க்கலாமே.” என்றான் உமேஷ்.

“எந்தப் பொண்ணு டா?” என்று பேரனிடம் கேட்டார் பார்வதி.

“அந்தப் பெரியம்மாவைப் பாட்டின்னு சொன்னா..அவங்களோட மகன் ராம நாதனைச் சித்தப்பான்னு கூப்பிட்டா..அவளோட அப்பா, அந்தப் பெரியம்மாவோட இன்னொரு மகன்கிட்டே கல்யாணத்தை நடத்தி கொடுக்கச் சொல்லலாமே…அவளை உமான்னு கூப்பிட்டாங்க அந்தப் பாட்டி.” என்று  சொல்லிவிட்டு அவனுடைய கைப்பேசியைப் பார்த்துக் கொண்டிருந்தவனின் பதில் ஏற்படுத்திய அமானுஷ்ய அமைதியைக் கவனிக்கத் தவறினான் உமேஷ் பசுபதி.