கணவனின் அடிமுடி கிலிகோலத்தைக் கண்டவுடன்,கிலியில்‘ஐயோ பாட்டி’ என்று கத்திய மனைவியின் பார்வை கணவனின் பார்வையோடு கலந்த கணத்தில், அவனுடைய கண்களில் இருந்த காந்தச் சக்தி மனைவியின் உயிரணுக்களை முற்றுகையிட, நொடிக்கும் குறைவான நேரத்தில் அதன் ஆளுமையிலிருந்து விடுப்பட்டு, அவளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தாள் உமா பார்வதி.
மனைவியின் அவலநிலையைக் கண்டு இரங்காமால், இதயத்தில் ஈரம் வற்றிப் போன பசுபதி, அவனுடைய ஈரத் தலையைத் துவட்டிக் கொண்டே,”பாரூ..நீ கத்தினதுலே இப்போ பாட்டி மாடிக்கு வரப் போறாங்க..அவங்களைக் கூட சமாளிச்சிடலாம் பாரூ..எதிர் வீட்டு பார்ட்டி வந்தா என்ன செய்ய?” என்று கேட்க, அதில், வெகுண்டு, கணவனையே விழி அகற்றாமல் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்த மனைவியிடம் கண் சிமிட்டி,”பிடிச்சிருக்கா பாரூ?” என்று கேட்டான்.
அவனுடைய தாறு மாறான தோற்றம், கேள்வி இரண்டும் உமாவின் இதயத் துடிப்பைத் தாறு மாறாக்கி, ஏழு இடங்களைத் தாண்டி, தேகத்தில் ஏகப்பட்ட இடங்களில் அது துடித்துக் கொண்டிருந்தது.
அப்போது,“உமா? எதுக்குக் கத்தின?” என்று பார்வதியின் குரல் கேட்டது. உடனே, உமாவின் படபடப்பு மேலும் அதிகரித்தது.
“ஒண்ணுமில்லை பாட்டி.” என்ற அவளுடைய பதில் அருகிலிருந்த பசுபதிக்கே கேட்கவில்லை, அடித்தளத்தில் இருந்த பார்வதிக்கு எங்கே கேட்கப் போகிறது?!
“உமா..உமா..” என்ற பார்வதியின் அழைப்பும் மாடிப்படிகளில் அவர் ஏறி வரும் காலடி ஓசையும் கேட்டது.
இதுவரை மாடியறைக்குப் பார்வதி வந்ததில்லை.சுந்தரி பாட்டி போல் அவரும் கீழ் தளத்தைத் தான் புழங்கிக் கொண்டிருந்தார்.அவரால் மாடி ஏற முடியும் என்ற விஷயமே அவளுக்கு இப்போது தான் தெரிய வருகிறது.என்ன சொல்லி அவரைச் சமாளிப்பது என்று யோசனையானாள் உமா.
அவனுடைய கை அதன் வேலையை செய்து கொண்டிருந்தாலும், கண்ணும், கருத்தும் உமாவை விட்டு அகலவில்லை.அவளுடைய எண்ணப் போக்கைச் சரியாக கணித்து,“நீ பாட்டியைத் தப்பா எடை போட்டிட்ட பாரூ..அவங்க சுந்தரி பாட்டி போல இல்லை..மாடிப்படி என்ன, தேவைப்பட்டிச்சுன்னா மலையே ஏறுவாங்க பார்வதி பாட்டி.” என்றான் உமேஷ்.
அவன் சொன்னதைக் கருத்தில் பதிய வைத்துக் கொண்டவள், தலையைத் துவட்டும் தலையாய கடமையைத் தொடர்ந்து கவனமாகச் செய்து கொண்டிருந்த கணவனைக் கிடுகிடுவென்று தாண்டிப் போய், அலமாரி கதவைத் திறந்தாள்.அதன் உள்ளேயிருந்து, கையில் கிடைத்த துணியை எடுத்துக் கொண்டு, விறுவிறுவென்று கணவன் அருகில் வந்தவள், அவன் கண்களிலிருந்து பார்வையை அகற்றாமல்,”உங்களைத் தான் நான் சரியா எடை போடலை..இத்தனை நாள் நீங்க அமைதியா இருந்ததைப் பார்த்து நீங்க என்னைப் போலவோன்னு நினைச்சேன்.. அப்படி இல்லைன்னு இப்போ புரிஞ்சிடுச்சு…
காரக் குழம்பை ருசி பார்த்த அன்னைக்கே உங்களை என்னோட கட்டுப்பாட்டுக்குள்ளே கொண்டு வந்திருக்கணும்..தப்பு செய்திட்டேன்..இப்போ அனுபவிக்கறேன்..பாட்டி வந்து போகறவரை உங்ககிட்டேயிருந்து ஒரு சத்தம் வரக் கூடாது..வாயைத் திறந்தீங்க..அவ்வளவு தான்.” என்று எச்சரிக்கை செய்தபடி அவனுடைய இடுப்பில் அந்தத் துணியை இறுக்கினாள்.
அதுவரை அவளுடைய முகத்தில் கவனம் வைத்திருந்தவன், அந்த இறுக்கம் உண்டாக்கிய வலியில்,”ஆ.” என்று, குனிந்து, அவனுடைய இடுப்பைப் பார்த்து அதிர்ச்சியடைந்தான்.
உடனே,”பாரூ..இங்கே பார்.” என்று அவன் அழைக்க,
அவன் புறம் திரும்பாமல்,”பேசாதீங்கன்னு சொன்னேன்.” என்று அதட்டினாள் உமா.
அதே நேரம்,”உமா..என்ன ஆச்சு? கதவைத் திற.” என்று கதவைத் தட்டிக் கொண்டிருந்தார் பார்வதி.
கதவைத் திறக்கும் முன், “வாயை மூடிட்டு சும்மா இருங்க.” என்று மீண்டும் கணவனை எச்சரிக்கை செய்து விட்டு கதவைத் திறக்கச் சென்றாள் உமா.
அறைக்குள் நுழைந்த பார்வதி, பேரன் நின்றிருந்த கோலத்தைப் பார்த்து,”என்ன டா? இப்படி நிக்கற?” என்று கேட்டார்.
அதைக் கேட்டு, கணவனிடம் பார்வையைத் திருப்பிய மனைவியால் அவனுடைய இடுப்பிலிருந்து அவளுடைய பார்வையை அகற்ற முடியவில்லை.
உமாவின் சிகப்பு நிற துப்பட்டாவை இடையில் சுற்றிக் கொண்டிருந்த பேரனிடம், “எதுக்கு டா இவளோடதை சுத்திட்டு நிக்கற?” என்று கேட்டார் பார்வதி.
அந்தப் பதில், பார்வதி, உமேஷ் இருவருக்கும் புரியவில்லை. அது அவர்களுடைய முகத்தில் தெரிய,”பாட்டிக்கும் பேத்திக்கும் சுடிதார் வித்தாரில்லே..அதே போல இப்போ ஆண், பெண் இருபாலரும் உபயோகிக்கற மாதிரி துண்டு கொண்டு வரப் போறாங்க..எந்த நிறம், எவ்வளவு நீளம்னு ஆராய்ச்சி நடந்திட்டு இருக்கு..அதான் என்னோட துப்பட்டாவை இடுப்பிலே சுத்திட்டு திரியறாங்க..துண்டு, துப்பட்டா இரண்டும் தோள்லே போடறது தானே.. சரி போகட்டும்னு விட்டிட்டேன்.” என்ற விளக்கத்தில் இருந்தது பெருந்தன்மையா? தற்பெருமையா? என்று பெரிய குடும்பத்தினருக்குப் புரியவில்லை.
”இப்போயெல்லாம் உடையை வைச்சு கூட வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாம போய்கிட்டு இருக்கு..நீ வேற எதுக்கு டா புதுசாக் குழப்பம் கொண்டு வர்ற.” என்று உமேஷைக் கடிந்து கொண்டவர்,”இவ கத்தினதைக் கேட்டு, நீ இன்னும் ஆபிஸ்லேர்ந்து வரலைன்னு நினைச்சுக்கிட்டுப் பதறியடிச்சுக்கிட்டு வரேன்..நீ உள்ளே நின்னுட்டு இருக்க.” என்றார்.
உடனே,“இப்போ தான் வந்தாங்க பாட்டி.” என்றாள் உமா.
“பூச்சி பொட்டு ஏதாவது உள்ளே வந்திடிச்சா..அதைப் பார்த்துத் தான் கூச்சல் போட்டேயா..எனக்கு திக்குன்னு ஆகிடுச்சு..நீயும் இங்கே தானே டா இருக்க..என்ன ஏதுன்னு இவளை விசாரிக்க மாட்டேயா?எதுக்கு டா வயசான காலத்திலே என்னை இப்படிப் பயமுறுத்தறீங்க?” என்று குரலை உயர்த்தினார் பார்வதி.
அதுவரை அமைதியாக, மனைவி சொன்னபடி வாயை மூடிக் கொண்டிருந்த உமேஷை அது உசுப்பி விட,”நானா கத்தி உங்களைப் பயமுறித்தினேன்? கத்தினவளைக் காரணம் கேளுங்க.” என்று பார்வதியைத் தூண்டி விட்டான்.
“எதுக்கு நீ அப்படிக் கத்தினே?” என்று உமாவிடம் கேட்டார் பார்வதி.
‘சொல்லு..சொல்லு..காரணத்தைச் சொல்லு’ என்று கண்களால் மனைவிக்குச் சொல்லிக் கொண்டிருந்தான் கணவன்.
அவளோ,”நீங்க எதுக்கு இப்போ வாயைத் திறந்தீங்க? என்று கண்களில் கனலுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அதைக் கண்டு கொள்ளாமல்,
“நான் அப்போ தான் குளிச்சிட்டு வெளியே வரேன் பாட்டி..இவ பயங்கரமாக் கத்தினா..நானே பயந்திட்டேன் பாட்டி.” என்றான் உமேஷ்.
அவனுடைய அநந்த தரிசனித்தில் தான் அவள் பயந்து போனாள் என்று தெரிந்தும் அதை அவள் வெளியே சொல்ல மாட்டாள் என்ற தைரியத்தில் மனைவியைச் சீண்டினான் கணவன்.
அதில் கொதி நிலையை அடைந்த மனைவி, ”பூச்சி தான் பாட்டி..இவ்வளவு நாள் இதே அறைலே, என்னோடவே, என் பக்கத்திலே, என் படுக்கைலேஇருந்திருக்கு பாட்டி..நான் தான் கவனிக்கலை..இன்னைக்கு தான் என்னோட கண்ணுலே பட்டிச்சு.” என்று பூச்சாண்டி பசுபதியைப் பதிலிற்குச் சீண்டினாள்.
அந்த உரையாடல் கணவன், மனைவி இருவருக்கும் இடையே வேறு நிலையில், பசுமை நிறத்தில், பயணம் செய்து கொண்டிருக்க, அது புரியாமல், “உடனே கைலே கிடைச்சதை வைச்சுப் பட்டுன்னு ஒண்ணு போட வேண்டியது தானே..எதுக்கு சத்தம் போட்ட..இப்போ அது எங்கே ஓடிப் போச்சோ? பறந்து போச்சோ? எதுக்கு கீழே மறைஞ்சு கிடக்குதோ?” என்று கவலைப்பட்டார் பார்வதி.
அதை கேட்டு அவன் கையிலிருந்த ஈரத் துண்டு கீழே விழுந்தது கூட தெரியாமல் அதிர்ந்து நின்ற கணவனைக் கவனித்த மனைவி,
“இவங்களாலே தான் இந்தத் தொல்லையெல்லாம் வருது பாட்டி..ஒரு பொருளையும் எடுத்த இடத்திலே வைக்கறதில்லை..ஜுஸ் கிளாஸை இங்கேயே வைச்சிடறாங்க..ஸ்னாக்ஸ் சாப்பிட்ட தட்டை எடுத்திட்டுப் போய் கிட்சன்லே வைக்க மாட்டேங்கறாங்க..அழுக்குத் துணி எல்லாத்தையும் தரைலே விட்டெறியறாங்க..கைப்பேசி, கைக்குட்டையை நாற்காலி மேலே தூக்கிப் போடறாங்க..இப்படி ஒழுங்கில்லாம இருக்கறதுனாலே தான் பூச்சிக்கு சாப்பாடும், மறைஞ்சுக்க இடமும் கிடைக்குது.” என்று அவளுக்குக் கிடைத்த வாய்ப்பை அறிவாகப் பயன்படுத்திக் கொண்டாள் உமா பார்வதி.
“உன்னாலே தான் டா கண்ட கண்டதெல்லாம் வீட்டு உள்ளே வருது..இதே வீட்லே தான் இவ முதல்லேர்ந்து இருக்கா..அப்போ ஏதாச்சும் வந்திச்சா உமா? என்று உமேஷிடமிருந்து உமாவுக்குச் சென்றார் பார்வதி.
“இல்லை பாட்டி..இதுதான் முதல் முறை.” என்றாள் உமா.
“கேட்டியா டா..இது தான் முதல் முறையாம்.”
“அவங்ககிட்டே இந்த மாதிரி பழக்கம் ரொம்ப நாளா இருக்கு போல.” என்றாள் உமா.
“அவன் எங்கே வீட்லே வளர்ந்தான்..எல்லாம் ஹாஸ்டல் தான்..ஆனா சாப்பாடெல்லாம் அறைலே கொண்டு வந்து சாப்பிடற பழக்கம் எப்போலேர்ந்துன்னு தெரியலை..மதுரைலே இதெல்லாம் நடக்காது..அவங்க அம்மா விடமாட்டா.” என்றார் பார்வதி.
அவர்கள் இருவரின் உரையாடல் செல்லும் பாதையில் பயணம் செய்ய விரும்பாமல்,“இங்கேயும் தினமுமா அப்படிச் செய்யறேன்..என்னைக்கோ ஒரு நாள் ஜுஸும் ஸ்னாக்ஸும் இங்கே கொண்டு வந்து சாப்பிட்டேன்.” என்று விளக்கம் கொடுத்தான் உமேஷ்.
அதைக் காதில் போட்டுக் கொள்ளாமல்,”பார்க்க எப்படி இருந்திச்சு உமா?” என்று விசாரித்தார் பார்வதி.
அவர் எதைப் பற்றி கேட்கிறாரென்று தெரிந்தும், வேண்டுமென்றே,”எது பாட்டி?” என்று அப்பிராணியாக கேட்டாள் உமா பார்வதி.
“பூச்சி தான்.” என்றார் பார்வதி.
சில நொடிகளுக்கு, மேலும் கீழும் தலையை அசைத்து, யோசிப்பது போல் பாவனை செய்தவள், கடைசியாக அவளுடைய கண்களை கணவனின் இடுப்பிற்கு கொண்டு சென்றவுடன்,“பாட்டி..நீங்க கிளம்புங்க.” என்றான் பேரன்.
உடனே,”நீங்களும் அதைப் பார்த்திருப்பீங்க பாட்டி..உங்களோட சின்ன வயசுலே.” என்றாள் அப்பாவியாக.
“அதெல்லாம் இப்போ எங்கே நியாபகம் இருக்கப் போகுது? என்று அங்கலாய்த்தவர்,” திரும்ப கண்ணுலே பட்டா சொல்லு..அதைப் பார்த்தா எனக்கு நியாபகம் வரலாம்.” என்றார்.
“போதும் பாட்டி..நீங்க கிளம்புங்க.” என்று பார்வதியை அவர்கள் அறையிலிருந்து கிளப்புவதில் தீவிரமானான் உமேஷ்.
பேரனின் பேச்சைப் புறம் தள்ளி,“வீட்லே ஏதாவது பூச்சிக் கொல்லி இருக்கா உமா?” என்று பார்வதி கேட்க, உடனே, கணவனின் புறம் பார்வையைத் திருப்பினாள் மனைவி. அவனோ, அதிர்ச்சியில்,
“ஐயோ பாட்டி.” என்று கத்தினான்.
“நீயும் எதுக்கு டா இப்படிக் கத்தற? இப்போ உன் கண்ணுலே அது பட்டிச்சா?” என்று கேட்டு விட்டு, ஏதாவது தென்படுகிறதா என்று கண்களால் அறையின் மூலை முடுக்குகளை அலசினார்.
அதைப் பார்த்து, கஷ்டப்பட்டு அவளுடைய சிரிப்பை அடக்கிக் கொண்டு,
“அந்த மாதிரி வன்முறை எல்லாம் வேணாம் பாட்டி..நான் பார்த்துக்கறேன்..நீங்க கிளம்புங்க.” என்றாள் உமா.
“நீ வெளிநாட்டுக்கு வேற போகணும்..உன்னைக் கடிச்சு கிடிச்சு வைக்கப் போகுது…இன்னைக்கு நைட் கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோ..பேசாம இன்னைக்கு கீழே என்னோட படுத்துக்கோயேன்.” என்ற பார்வதியின் ஆலோசனையில்,
“ஐயோ பாட்டி” என்று அலறிய உமேஷ், அவருடைய கையைப் பிடித்து, அறையின் வெளியே இழுத்துச் சென்று,”நீங்க போய் தூங்குங்க..உங்களோட பேத்தியை நான் ஜாக்கிரதையாப் பார்த்துக்கறேன்.” என்று வலுக்கட்டாயமாக அனுப்பி வைத்தான்.
“அவளோட சேர்ந்துகிட்டு நீயும் ‘ஐயோ பாட்டின்னு’ கத்த ஆரம்பிச்சிட்ட..வயசான காலத்திலே என்னை பாடுபடுத்துறீங்க டா இரண்டு பேரும்.” என்று புலம்பியபடி அவரறைக்கு சென்ற பார்வதி, அறையின் கதவைச் சாத்திக் கொள்ளும் வரை மாடியிலே நின்று அதை உறுதிப்படுத்திக் கொண்டான் உமேஷ்.
அவர்களுடைய அறையின் கதவைச் சாத்தி விட்டு அவன் உள்ளே வந்த போது, அவனை முழுவதுமாகப் புறக்கணித்து விட்டு, படுக்கை மீதிருந்த அவளுடைய மடிக்கணினியை அதனுடைய உறையினுள் போட்டு, மேஜை மீது வைத்து விட்டு, தரையில் கிடந்த ஈரத் துவாலையில் கால் படாமல் கடந்து சென்று, கட்டிலில் படுத்துக் கொண்டாள் உமா. அவளை எப்படி அணுகுவது? என்று குழப்பத்துடன் பார்த்துக் கொண்டிருந்த கணவனைக் கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்த மனைவி, அவனுக்குப் வழி ஏற்படுத்திக் கொடுக்க முடிவு செய்தாள்.
“அந்த ஈரத் துண்டை நாற்காலி மேலே போடுங்க.” என்று கட்டளை பிறப்பித்தாள் மனைவி.
உடனே, கீழே கிடந்ததை எடுத்து, உதறி, அதை நாற்காலியின் பின்புறத்தில் காயப் போட்டான் கணவன். அடுத்துக் குளியலறைக்குச் சென்று, சில நொடிகளுக்குப் பின் திரும்பியவன்,”அங்கே இருந்த ஈரத்தையும் காயப் போட்டுட்டேன்.” என்றான் நல்ல பிள்ளையாக.
“எல்லாப் பொருளையும் எடுத்த இடத்திலேயே திரும்ப வைக்கணும்னு சொன்னேனில்லே?” என்று உமா கேட்க, அவசர, அவசரமாக அறையை நோட்டம் விட்டவனின் கண்களில் எல்லாம் அந்தந்த இடத்தில் இருப்பது போல் தான் தெரிந்தது.அதனால்,
“பாரூ..எல்லாம் அந்தந்த இடத்திலே தான் இருக்கு.” என்று சலித்துக் கொண்டான் உமேஷ்.
“நோ..முக்கியமான பொருள் திரும்ப அதோட இடத்துக்குப் போகலை.” என்றாள் உமா.
“எது? எது? சொல்லு” என்று அவன் கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அவளிடம் கேட்க, அமைதியாக இருந்தாள்.
“சொல்லு பாரூ..ப்ளீஸ்” என்று கெஞ்சினான் உமேஷ். மேலும் சில நொடிகள் அமைதியாக கடக்க, இது போதும் இதற்குமேல் அவனை அவளுடைய அமைதியால் வதைக்க வேண்டாமென்று முடிவு செய்து, அவனுடைய இடுப்பைச் சுட்டிக் காட்டினாள் உமா.
கீழே குனிந்து பார்க்க, சிவப்பு நிற துப்பட்டா.”பாரூ” என்று சந்தோஷ கூச்சலிட்டான் உமேஷ்.
அன்றைய இரவில், சாதுவிடம் ஆயுதத்துடன் சிங்கம் சரணடைந்தது. பசுவதி, பசுபதியின் தானம் இனிமையாக ஆரம்பமானது.
********
பார்வதியைப் போற்றும் சர்வங்க சுந்தரி கவசத்தின் முதல் வரிலே, ‘பசுவதி’ வார்த்தை வருது. கும்பகோணம் பக்கத்திலே, கருவிலி ஊர்லே சர்குணேஸ்வரரோடு எழுந்தருளியிருக்கும் அம்பாள், சர்வங்க சுந்தரி.