அத்தியாயம் – 18

அந்த அறையில் இருந்த நால்வர் மீது உமாவின் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டு இருந்தது. திடீரென்று, அவர்களுடைய பெற்றோரும் அவளும் அவளுடைய அக்காவின் வாழ்க்கையிலிருந்து மறைந்தவுடன், அவள் எப்படி அந்த நாள்களைக் கடத்தியிருக்கக்கூடும் என்ற ப்ரீத்தியின் அன்றைய கேள்விக்கு, இன்று,  உமாவின் வாயிலாக, பயத்தில் கடத்தியிருக்கிறாளென்ற பதில் கிடைத்தது. 

அவளுக்கு எதுவுமே வேண்டாம், அவளுக்குத் தேவையானது அனைத்தும் அவளுடைய வீட்டில் இருக்கிறது என்று அவனுடைய அப்பாவிடம் உமா வலியுறுத்திய போது, அவளுக்கு இலவசமாக எதுவும் தேவையில்லை, அவளுடைய கல்யாணச் செலவை அவளே பார்த்துக் கொள்வாள், தாய், தந்தை இடத்தில் உன் குடும்பம் இருந்தால் போதுமென்று சுந்தரி பாட்டி அவனிடம் கெஞ்சியது உமேஷின் கண்முன் வந்து போனது. 

‘அவர்களுடைய வீட்டில் அவள் கஷ்டப்பட்டிருக்கிறாள்’ என்று உமாவைப் பற்றி சுந்தரி அம்மா சொன்னது இப்போது தான் எந்த அளவிற்கு என்று புரிந்தது பார்வதிக்கு.  

பசுபதி பரம்பரையின் கலங்கரை விளக்கம் அவருடைய தங்கை சிவரஞ்சனி என்று உமேஷ் சொன்னது, இப்போது, உமா சொன்னதைக் கேட்ட பின் தான் ஏன்யென்று புரிந்தது நாகேஸ்வரனுக்கு.  உமாவின் வார்த்தைகளில் மனம் நொறுங்கிப் போயிருந்தவருக்கு உமாவை எப்படிச் சமாதானம் செய்வதென்று தெரியவில்லை.  எத்தனை முயன்றும் வார்த்தைகள் வரவில்லை. ஒருவாறு மன வேதனையை மறைத்துக் கொண்டு,

“ஆமாம் டா..உன்னைப் போல மஹாலக்ஷ்மியைப் பார்த்துக்க இந்த மாமாக்கு அருகதை இல்லை டா..உனக்கு செய்த பாவத்த்தை எப்படிக் கழிக்கப் போறேன்னு தெரியலை..எப்படியாவது கஷ்டப்பட்டாவது உனக்கு செய்த தவறை சரி செய்யப் போறேன் …” என்று அவர் பேசி முடிக்குமுன்,”அக்கா” என்று ப்ரீத்தி கூச்சலிட, “உமா” என்று பார்வதி கத்த, மயங்கி விழுந்த மனைவியைத் தாங்கிக் கொண்டான் உமேஷ்.

அடுத்து உமா கண் விழித்த போது, கட்டிலில், அவளருகே அமர்ந்திருந்தான் உமேஷ். ‘இவங்க இங்கே என்ன செய்யறாங்க?” என்று அவள் யோசிக்க,

”கண்ணைத் திறக்காம எங்களைக் கலங்க வைச்சிட்ட.” என்றார் அவனருகே நின்றிருந்த பார்வதி.

அறையின் கதவருகில், கண்களில் கவலையுடன் நின்றிருந்தார் நாகேஸ்வரன். அப்போது, அவரைத் தள்ளிக் கொண்டு, கையில் ஜூஸுடன் உள்ளே நுழைந்தாள் ப்ரீத்தி.

“அக்கா, முதல்லே இதைக் குடிங்க.” என்று அவள் கையிலிருந்த கிளாஸை உமாவின் வாயருகே கொண்டு சென்றாள்.  அதை வாங்கி, அதிலிருந்ததை சில நிமிடங்களில் குடித்து முடித்தாள் உமா. அதுவரை காத்திருந்த நாகேஸ்வரன்,

“டாக்டர் வந்திட்டு இருக்கார்..நீ இங்கேயே இரு உமேஷ்..நான் போய் உமாவோட பெட்டியை எடுத்திட்டு வரேன்.” என்று சொல்லி விட்டுச் சென்றார். 

“என்ன நடந்திச்சு பாட்டி? எதுக்கு டாக்டர் வராங்க?” என்ற உமாவின் கேள்வி மூவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.  அவள் மயக்கம் போட்டது அவளுக்கே நினைவில் இல்லையா? அப்படியென்றால் அதற்கு முன் பேசியது? என்று யோசிக்க, கட்டிலின் நடுவில், இரண்டு புறமும் தலையணைகளோடு அவள் படுத்திருப்பதைப் பார்த்து, சில நொடிகளுக்கு முன், பார்வதி பாட்டி கேட்ட கேள்வியில் அவளுக்குத் தான் பிரச்சனை என்று புரிந்து கொண்டு, 

“எனக்கு என்ன ஆச்சு பாட்டி?” என்று அவரிடம் கேட்டாள்.

“ஒண்ணும் ஆகலை..நேத்திலேர்ந்து நீ சாப்பிடவே இல்லை..அதான் பேசிட்டு இருந்தப்ப அப்படியே மயங்கி விழுந்திட்ட.” என்றார் பார்வதி.

உடனே, லேசாக, சற்று முன் நடந்தது உமாவின் நினைவிற்கு வர,”இங்கே தான் படுத்திட்டு இருந்தேன்..இவங்க வந்தாங்க..என்னை வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகச் சொன்னேன்..” என்று உமா யோசிக்க ஆரம்பித்தவுடன், அதைத் தடை செய்யும் நோக்கத்துடன், அதுவரை, அவனுடைய முகத்திலிருந்த கவலையை களைந்து விட்டு, பெரிய புன்னகையுடன்,

”நிறைய நடந்திச்சு..எல்லாம் தெரிஞ்சுக்கணுமா?” என்று அவளிடம் கேட்டான்.

‘நிறையவா..நமக்கு நினைவுலே இல்லையே.’ என்று கலக்கத்துடன் பார்த்தவளின் கையிலிருந்த கிளாஸை ப்ரீத்தியிடம் கொடுத்து விட்டு,”நான் ரொம்ப நாளா ஒரு விஷயத்தை இந்த வீட்டிலே சொல்லிட்டு இருந்தேன் பாரூ..ஆனா இன்னைவரை யாரும் என்னோட பேச்சை காது கொடுத்துக் கேட்கலை..நீ இப்போ ஒரேயொருமுறை சொன்னே..உன்னோட மாமனாருக்கு அப்படியே நெத்திலே அடிச்ச மாதிரி ஆகிடுச்சு.” என்றான்.

திடீரென்று, அவளைப் பாரூ என்று அழைத்தவுடன், உமேஷின் பார்வையைத் தவிர்த்தவள், என்ன ஆகிற்று அவளுக்கு? என்று யோசிக்க எத்தனை முயன்றும் நடந்தது என்னயென்று நினைவுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. எனவே,

பார்வதியை நேராகப் பார்த்து,”ஸாரி பாட்டி…தப்பா சொல்லியிருந்தா மன்னிச்சிடுங்க.” என்று பார்வதியிடம் மன்னிப்பு கேட்டாள் உமா.

அதற்கு அவர் பதில் சொல்லுமுன்,”இதென்ன கெட்ட பழக்கம் பாரூ..நான் பேசிட்டு இருக்கும் போது என்னைப் பார்க்காம வேற எங்கேயோ பார்க்கற பாரூ….முதல்லே அதுக்கு என்கிட்டே மன்னிப்பு கேளு பாரூ.” என்று அவளைச் செல்லமாக அழைத்து, செல்லமாகக் கடிந்து கொள்ள, அவனுடைய மனைவியின் மனத்தை மாற்ற, பேரன் முயல்கிறான் என்று புரிந்து கொண்ட பார்வதி, அவன் முதுகில் செல்லமாக ஓர் அடி போட்டார். அதற்கு, ப்ரீத்தி சிரிக்க, உமா அமைதியாக இருந்தாள்.

உடனே, ப்ரீத்தியின் கையைப் பிடித்து இழுத்து, அவளை உமாவின் முன்னால் நிறுத்தி,”என்னோட பொண்டாட்டி உனக்கு என்ன உறவு?” என்று கேட்டான் உமேஷ்.  பதற்றத்தில் அவள் செய்த தவறை உணர்ந்த ப்ரீத்தி,”அண்ணி.” என்றாள்.

“இவ மயங்கி விழுந்த போது இவளை அக்கான்னு நீ கூப்பிட்ட.. அப்போ அது ஓகே. இப்போ எதுக்கு, அன்பா, அக்கா ஜூஸ் குடிங்கன்னு சொன்ன?” என்று கேட்டான்.

அதற்கு ப்ரீத்தியிடமிருந்து பதில் வரவில்லை. “அக்காவும் தங்கையும் என்னை வம்புலே மாட்டி விட்டிடுவீங்க போல.” என்றான் உமேஷ்.

“இல்லை ண்ணா..ஸாரி..டென்ஷலே.” என்ற ப்ரீத்தியின் விளக்கத்தைப் பாதியில் நிறுத்திய உமேஷ்,”ஒரு முக்கியமான விஷயத்தை இதுவரை உனக்குச் சொல்லலை பாரூ..நீ திடீர்னு அக்கா ஆகிட்டே..அதனாலே எனக்குத் திடீர்னு அட்டாக் வந்திடுச்சு.” என்றவுடன், பார்வதி, ப்ரீத்தி இருவரும் சேர்ந்து அவனுடைய முதுகில் ஓர் அடி போட்டார்கள்.  அதற்கும் அமைதியாக இருந்தாள் உமா.

“அப்புறம், அடுத்த முக்கியமான விஷயம், பசுபதி வீட்டுச் சாப்பாடு, பசுபதி வீட்டுத் துணி எதுவும் உன்னோட டேஸ்ட்டுக்கு இல்லைன்னு சொல்லிட்ட பாரூ..அதைக் கேட்டு உன்னோட மாமனார் மனசு உடைஞ்சு போயிட்டார்..அதனாலே, உடனே,  உன் விருப்பதற்கு ஏற்ற மாதிரி நிறம், தரம், சுவை எல்லாத்தையும் மாற்ற முயற்சி செய்யறேன்னு சொல்லிட்டார்..அவ்வளவு தான் நடந்திச்சு..

நேத்திலேர்ந்து நானும் சாப்பிடலை..உன்னை போல நானும் மயக்கம் போட்டு விழறத்துக்கு முன்னாடி நாம நாலு பேரும் முதல்லே சாப்பிடப் போறோம்..அப்புறம் பாட்டியை அழைச்சிட்டு, அப்படியே வழிலே ராம் அங்கிளைப் பிக் அப் செய்திட்டு சென்னைக்குப் போகறோம்..சாப்பாடு முடிச்சிட்டு நாம இங்கேயிருந்து கிளம்பறத்துக்கு முன்னாடி, நீ சின்னதா ஒரு..” என்று அவன் வாக்கியத்தை முடிக்காமல் நிறுத்த,

அதுவரை தலை குனிந்தபடி உமேஷ் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த உமா,’சின்னதா ஒண்ணு..என்னது?” என்று புரியாமல் அவனைப் பார்க்க,

ப்ரீத்தியும் அவர்களுடன் இருப்பதை மறந்து விட்டானா பேரன் என்று அஞ்சிய பார்வதி,”ப்ரீத்தி, போய் சாப்பாடு ரெடியான்னு பார்..நாங்க வரோம்.” என்று அவளை அங்கேயிருந்து அனுப்பி வைத்து விட்டு,

“அவளை வைச்சுக்கிட்டு என்ன டா பேச்சு இது?” என்று உமேஷைக் கடிந்து கொண்டார்.

“என்னென்னு இன்னும் நான் சொல்லவே இல்லை..அதுக்குள்ளே நீ என்னென்னவோ நினைச்சுக்கற பாட்டி..வெரி பேட்” என்றான் உமேஷ்.

“சின்ன தா? என்னது டா? சொல்லித் தொலை டா.” என்றார் பார்வதி.

அப்போது, கணவனுடன் பார்வையால் கலந்திருந்தாள் மனைவி. அவனுடன் கலந்த அவள் பார்வையைக் கைது செய்தவன், 

“சின்னதா ஒரு குளியல் போடு பாரூ…சென்னை வரை போகணும்..ஒரே வண்டிலே.” என்றவுடன் அவனை ஓர் அடி போட்டார் பார்வதி. அதில், உமாவின் கண்களில் சிரிப்பு தெரிந்ததோ என்று ஊர்ஜிதம் செய்து கொள்ள உமேஷிற்கு வாய்ப்பு கொடுக்கவில்லை உமா.

உமாவிற்கு அவள் பேசியது சரியாக நினைவில் இல்லாத போது, அதை அவளுக்கு நியாபகப்படுத்தி, அவளை வருத்த வேண்டாமென்று க்ஷணத்தில் முடிவு செய்து, நடந்ததை மறைக்காமல், அதே சமயம் கசப்பான உண்மையைச் சொல்லாமல், அவனுடைய பாணியில், இனிப்பு தடவி அதை அவளுக்குத் தெரிவித்து, அந்தக் கனமான சூழ் நிலையை இலகுவாக்கியிருந்தான் உமேஷ்.  அவனுடைய மனைவியின் மனவலிக்குக் காரணமாகியிருந்த அவனுடைய அம்மாவின் செய்கை, நடத்தையால் அவனுக்கு ஏற்பட்டிருந்த மனவலியை மறைத்துக் கொண்டு வெளியே சிரித்துக் கொண்டிருந்தான்.

உமாவின் பெட்டியோடு நாகேஸ்வரன் வீடு திரும்பிய போது, சாதாரணமாகப் பேசியபடி, மகன், அவருடைய அம்மா, ப்ரீத்தி மூவரும் உணவருந்தி கொண்டிருக்க, அதே மேஜையில், அமைதியாக, அவருடைய மருமகளும் உணவு அருந்திக் கொண்டிருந்ததை நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தார். 

அவர்களுடைய உணவை முடித்துக் கொண்டு பார்வதியும் உமாவும் சென்னைக்குப் புறப்படத் தயாராகச் சென்றனர்.  அப்போது, ப்ரீத்தியை அழைத்துக் கொண்டு நாகேஸ்வரனிடம் சென்ற உமேஷ்,”கொஞ்ச நாளைக்கு நான் இங்கே வர மாட்டேன்..என்னோட கோபம் குறையாம இங்கே வர்றது அம்மாக்கு நல்லதில்லை..அதுக்கு அப்புறம் வரும் போது அம்மாவோட எப்படி இருக்கப் போறேன்னு எனக்குத் தெரியலை…

நீங்க எதையாவது பேசி அவங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யாதீங்க..அவங்களா உணரனும்..அதுக்கு எத்தனை நாள் எடுக்கும்னு எனக்குத் தெரியலை..இப்போ பாட்டியை என்னோட சென்னைக்கு அழைச்சிட்டுப் போறேன்..இந்த நேரத்திலே உமாவோட அவங்க இருக்கறது ரொம்ப அவசியம்..சுந்தரி பாட்டியைக் கொஞ்ச நாளா தான் ப்ரீத்திக்குத் தெரியும்..அவளுக்கும் இந்த நேரத்திலே  ஆறுதல் தேவைப்படும்..அம்மாவாலே அதைப் புரிஞ்சுக்க முடியாது..சும்மா சும்மா ஜெயந்தியை நம்ம வீட்டுக்குக் கூப்பிட்டுக்கிட்டு இருக்க முடியாது..இவளை உங்களோட கடைக்கு அழைச்சிட்டுப் போங்க..வியாபாரத்தைக் கத்துக் கொடுங்க…

சுந்தரி பாட்டி இறந்து போனதுனாலே இவ கல்யாணத்தை உடனே நடத்த முடியாது..மாப்பிள்ளை வீட்லே என்ன சொல்றாங்கன்னு கேளுங்க..அப்புறம் ராம் அங்கிள்கிட்டே பேசறேன்..நாளைக்கு எங்களை அவளோட வீட்டுக்குக் கூப்பிட்டிருந்தா ஜெயந்தி.. அவளுக்கு ஃபோன் செய்து வர முடியாதுன்னு சொல்லிட்டு நான் கிளம்பறேன்.” என்று ராஜசேகரைக் கைப்பேசியில் அழைத்து, உமாவின் மன நிலையை விளக்கி, மன்னிப்பு கேட்டு விட்டு, வீட்டிற்கு வந்த டாக்டரிடம் உமாவின் செக் அப்பை முடித்துக் கொண்டு, சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றான் உமேஷ்.